Tuesday, August 23, 2011

அழிந்து விடும் நிலையில் பெர்சனல் கணணிகள்.


சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கணணிகள் வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கியுள்ளனர்.
1981 ஆம் ஆண்டில் ஐ.பி.எம். பெர்சனல் கணணியை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில்நுட்பம் பெர்சனல் கணணியின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளார்.
ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கணணிகள் இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவையாக இருந்தாலும் புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார்.
கணணியில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் இனி பெர்சனல் கணணி போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்போது பெர்சனல் கணணி என்ற ஒரு தனி சாதனம் இருக்காது என்கிறார் இவர்.
இன்றைய பெர்சனல் கணணி மறைவதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம் சரியாகவே உள்ளது. இப்போது கணிப்பொறியில் மேற்கொள்ளப்படும் வேலைகளெல்லாம் இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
வேகமாகப் பரவி வரும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. கோப்புகள் உருவாக்கப்படுவதும், சேமிக்கப்படுவதும், பகிர்ந்தளிக்கப்படுவதும், தகவல்கள் சேமிக்கப்பட்டு தேடப்பட்டு பயன்படுத்தப்படுவதும் இப்போது இணையத்திலேதான் நடக்கிறது.
பெர்சனல் கணணி இதனை மேற்கொள்ள வழி தரும் ஒரு சாதனமாகத்தான் உள்ளது. நம் பெர்சனல் கணணியின் கணிக்கும் பணியினைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோம். எனவே நாம் இதுவரை மேற்கொண்ட வேலைகள், பயன்பாடுகளைக் கொண்ட பெர்சனல் கணணி இனி காணாமல் போய் விடும் என்கிறார் மார்க் டீன். இந்தக் கருத்து சரியானதாகவே தோன்றுகிறது.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து உயர்நிலை நிர்வாக வல்லுநர் கருத்து தெரிவிக்கையில் இந்த ஆண்டு 40 கோடி பெர்சனல் கணணிகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
எனவே பெர்சனல் கணணிக்கு பிந்தைய காலம் என்று குறிப்பிடுவது தவறு. பெர்சனல் கணணியுடன் இணைந்த காலம் என்று தான் புதிய சாதனங்களைச் சொல்ல வேண்டும். இனி வரும் காலங்களில், பெர்சனல் கணணி(அல்லது மேக் கணணி) இல்லாத ஒரு வீடு இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார்.
இதுவும் சரியென்றே படுகிறது. இருப்பினும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF