
சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கம் ஒரு ஹெலிகாப்டரைக் காணோம் என்று ஊடகங்களில் அலறியதை மறந்திருக்க மாட்டீர்கள். விமானப்படையும் தரைப்படையும் சேர்ந்து தேடுகிறார்கள், விரைவில் படம் பிடித்து போட்டு விடலாம் என்று காத்திருந்து காத்திருந்து காய்ந்து போன செய்தி ஊடகங்கள் அவர்களே படம் வரைந்து பாகம் குறித்து விளையாடிய சம்பவங்கள் யாவும் கண்டிருப்பீர்கள். கடைசியில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் எப்படி விபத்து நடந்திருக்கும் என்பது மர்மமாகவே இருந்தது, யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. காரணம் பயணிகள், விமானிகள் யாரும் உயிர்தப்பவில்லை. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நொடியும் அந்த ஹெலிகாப்டரில் என்ன நடந்தது, எந்தெந்த வரிசைப்படி பாகங்கள் செயலிழந்தன, விபத்து நடக்கும் அந்த நொடி வரை ஹெலிகாப்டருக்குள் என்னென்ன பேசினார்கள் என்பது வரைக்கும் தகவல்கள் வெளிவந்தது. எப்படி இது சாத்தியம் என்று கேள்வி எழுகிறதா, அக்கேள்விக்கு பதில் தான் 'கருப்புப்பெட்டி'.
கருப்புப்பெட்டி (Blackbox) என்பது விமானங்களின் தொழில்நுட்ப நிலைகளைப் பதிவு செய்ய விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு தகவல் சேமிப்பு கருவி. விமானத்தில் கருப்புப்பெட்டி பொருத்துவதென்பது ஓவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக முயற்சிக்கப் பட்டு மேம்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 70 வருடங்களுக்கு முன்னால் பிரான்ஸில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதே இதன் ஆரம்பம்.

![[recorder-locations.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLH3fmApDD-EM0QEfseS4QCOgheJd7k4wxaPI2RQxLZ3yJGy-yYhCSavaRKKVtWRXjReRmM3ugm0hPoWX-zf0kWpYCYAZ0CI5wtwASvqfhUs6F7SL3Fed7rIU92skCYKRdl3CJfSVctKg/s640/recorder-locations.jpg)
கருப்புபெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும், சில சமயங்களின் மேற்கூரையிலும் பொருத்தப்படுவதுண்டு. காரணம் அந்த பகுதிகளில் தான் விபத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் குறைந்து இருக்கும், மேலும் அனேகமாக கடைசியாக விபத்தினால் பாதிக்கப்பட போகும் இடமாகவும் இருக்கும். கருப்புப்பெட்டியில் இரண்டு பகுதிகள் உண்டு, விமானிகளின் கட்டுப்பாட்டு அறையில் எழும் அனைத்து ஒலிகளையும் பதிவு செய்ய cockpit voice recorder (CVR) மற்றும் விமானத்தின் பறக்கும் உயரம் உட்பட இயந்திர பாகங்களின் செயல்பாட்டு நிலைமை அனைத்தையும் பதிவு செய்ய flight data recorder (FDR). பெருவாரியான விபத்துகள் அத்துவானக் காடுகளிலோ அல்லது கடல்பகுதியிலேயோ தான் நடைபெறுகின்றன. விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன் மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்தாலும் அதைவிட பரபரப்பாக விசாரணை அதிகாரிகளின் கருப்புப்பெட்டித் தேடல் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.

FDR மற்றும் CVR தவிர beacon எனப்படும் ultrasonic ஒலிக்கருவியும் கருப்புப்பெட்டியில் இருக்கும். ஒருவேளை விபத்துகள் கடல்பகுதியில் நடந்தால், தண்ணீரில் மூழ்கிய மறுகணம் ஒவ்வொரு நொடியும் beacon கருவி ultrasonic ஒலியலைகளை சுமார் 14000 அடி வரை பரப்பும். தேடல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் sonar கருவிகள் மூலம் ஒலியலைகளை இனம் கண்டு கடலுக்கடியில் இருக்கும் கருப்புப்பெட்டியைக் கண்டுபிடிப்பார்கள். இந்த beacon கருவி கருப்புப்பெட்டியை மட்டுமின்றி விமான விபத்து நடந்த கடல்பகுதியையும் கண்டுபிடிக்க உதவி செய்து, அதன் மூலம் யாரேனும் தப்பிப்பிழைத்திருந்தால் அவர்களையும் கூடுமானவரை விரைவில் மீட்டெடுக்க உதவி புரிகிறது.
விபத்துக்கான சரியான காரணங்கள் பற்றியும், அதனைத் தவிர்ப்பதற்கான விமானிகளின் கடைசி நிமிட போராட்டங்கள், அவர்கள் கையாண்ட உத்திகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமின்றி எதிர்காலத்தில் அது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க விமானிகளுக்கு சிறப்புப் பயிற்சி அல்லது விமான வடிவமைப்பில் அதிக நவீனப்படுத்தப்பட்ட மாற்றம் ஆகியவற்றின் தேவை குறித்து முடிவெடுக்கவும் கருப்புப்பெட்டியே மூலாதாரம்.


ஒரு கருப்புப்பெட்டி எந்த ஒரு நிலையிலும் கடந்த 25 மணி நேர விமானத் தகவலும், 30 நிமிட விமானி அறையின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். கருப்புப்பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்றுகளும், பூஜ்யங்களுமாகவே இருக்கும் (Binary Format). கருப்புப்பெட்டியில் இருக்கும் மெமரி, data frame எனப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த data frame பகுதிகளில் தகவல் சேமிப்பதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஒரு data frame என்பது 48 bits கொண்ட ஒரு binary word ஆக இருக்கும். இதற்கும் மேலாக இந்த data frame தன்னிடத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒன்றுகளும், பூஜ்யங்களும் விமானத்தகவல்களில் எதைக் குறிக்கின்றன, எந்த வரிசையில் குறிக்கின்றன (உயரம், நேரம், இயந்திரங்களின் நிலைகள்) இவையெல்லாம் பற்றிய தகவல் கோர்வையே data frame layout என்று அழைக்கப்படுகிறது. கருப்புப்பெட்டி மெமரியின் data frame layout பற்றித் தெரியாமல் ஒருவர் அதிலுள்ள தகவல்களைப் பார்த்தால் வெறும் ஒன்றுகளும் பூஜ்யங்களுமாகத் தான் தெரியும்.

கருப்புப்பெட்டி உலகில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனங்கள் சர்வதேச வரைமுறைகளின் படி தயாரித்தாலும். data frame layout என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எனவே எந்த ஒரு விமான சேவை நிறுவனமும் தாங்கள் இயக்கும் அனைத்து விமானங்களிலும் இருக்கும் கருப்புப்பெட்டி குறித்தான தகவல்கள் மற்றும் அவற்றின் data frame layout ஆகியவ்ற்றை உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். விபத்து நடந்த பின் கருப்புப்பெட்டித் தகவல்களின்றி தலை சொரியும் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் உரிமத்தைக் கூட இழக்க நேரிடும்.


எப்பொழுதுமே இந்த கருப்புப்பெட்டி செய்திகளில் அடிபடும் போதெல்லாம் கூர்ந்து கவனித்தால் விபத்து குறித்த தகவல்கள் தெரிவிக்க பத்து நாட்களாகும், ஒரு மாதமாகும் என்று சொல்லுவார்கள். ஏன்?. உண்மையில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்கள் கணினிகளில் சில நிமிடங்களில் மேலே படத்தில் உள்ள கருவி (Blackbox readout interface module) மூலம் சேமிக்கப்படும். மற்ற ஒன்பது நாட்களும் சேமித்த தகவல்கள் அனைத்தையும் மீள்கட்டமைப்பு (decoding) செய்வதிலே தான் செலவாகும். இந்த தகவல்களை மீள்கட்டமைப்பு செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. அதைச் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். விபத்துக்குள்ளான விமானத் தயாரிப்பு நிறுவனம், விசாரணைக் குழு, விமானத்தின் உரிமையாளர்/நிறுவனம் இவர்கள் அனைவரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தான் தகவல்களை மீள்கட்டமைப்பார்கள். தொழில்நுட்ப ஆலோசனைகளை உடனுக்குடனே பெறவும், தகவல் பறிமாற்றம் எளிதாக நடக்கவுமே இந்த ஏற்பாடு.

இவை அனைத்துக்கும் மேலே கருப்புப்பெட்டி விபத்துக்குப்பின் கண்டுப்பிடிக்கப்படும் போது உள்ள நிலையும் தாமதத்திற்குக் காரணமாக அமையும். பெரும்பாலும் அடிவாங்கிய சொம்பு போல தான் கருப்புப்பெட்டி கிடைக்கும். சில சமயங்களில் மெமரி போர்டுகளும் பாதிப்படைவதுண்டு. தண்ணீருக்குள் இருந்து கண்டெடுக்கப்படும் கருப்புப்பெட்டிகள் ஆய்வு மையங்களுக்கு அனுப்பப்படும் போது beacon கருவியை நீக்கிவிட்டு ஒரு தண்ணீர் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்தே அனுப்புவது வழக்கம். ஈரம் உலர்வதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஆய்வு மையத்தை அடைந்ததும் கருப்புப்பெட்டித் திறக்கப்பட்டு மெமரி போர்டுகளுக்கு முதலுதவி அளித்து, பாதிக்கப்பட்ட உதிரி பாகங்களை மாற்றி தகவல்களை மீட்டெடுப்பார்கள்.
இந்த கருப்புப்பெட்டி ஆய்வகம் அமைப்பதென்பது எளிதானது தான் என்றாலும் அதற்குரிய நிபுணர்கள் உலகளவில் மிகக்குறைவு. மேலும் அனுபவமிக்க நிபுணர்கள் மிகமிகக் குறைவு. மேலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் நிபுணர்கள் அவ்வப்போது கருப்புப்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுக்கவேன்டும். இந்த ஆய்வக வசதிகள் உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ளன?
நைஜீரியா,தென்னாப்பிரிக்கா,ரஷ்யா, இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, தென் கொரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, சால்வடர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா என அனைத்து நாடுகளிலும் கருப்புப்பெட்டி ஆய்வகங்களும் இருப்பது தனிச்சிறப்பு.

