Sunday, August 21, 2011

இன்றைய செய்திகள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு அரசாங்கமே காரணம் : கபீர் ஹஷிம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலைக்கு அரசாங்கமே காதரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறும் நிலைமை நாட்டில் தோன்றியுள்ளது.
உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியவில்லை, புனித ரமழான் மாதமாகையால் முஸ்லீம் கிராமங்களில் மக்கள் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக அரசாங்கம் இவ்வாறான பீதியை ஏற்படுத்தி வருவதாக பலரும் கருதுகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து வெளியிட்டுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் இராணுவ முகாம்களை அமைக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இத்தகைய அச்சகரமான சூழ்நிலையை உருவாக்கி நாட்டினுள் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்படடுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகிந்தலை விகாராதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

மிகிந்தலை ரஜமகா விகாரையின் பீடாதிபதி நாமல்ஓய ரதசார தேரரை புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு திரும்பிய போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்ததாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவம் ஒன்றுடன் குறித்த விகாராதிபதிக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் அண்மையில் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த விகாராதிபதியை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள விகாராதிபதியிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் மிகவும் முக்கியமான பௌத்த விகாரைகளின் ஒன்றான மிகிந்தலை ரஜமகா விகாரையின் பீடாதிபதிக்கு எதிராக சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்க சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க முடியாது!- நல்லிணக்க ஆணைக்குழு.

அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பில் எந்தத் தரப்பினரும் காலக்கெடு விதிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது அரசோ அறிக்கையைச் சமர்ப்பிப்பது தொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக இணைப்பாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு முன்ன தாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சில சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாகவே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எந்தவொரு தரப்பினரும் நல்லிணக்க ஆணைக்குழு என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என வலியுறுத்த முடியாது என்றார்.
மட்டு.காத்தான்குடி சம்பவங்கள் குறித்து இன்று பொலிஸார் வருத்தம் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிகளுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போது கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  1. நேற்றைய சம்பவத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  2. பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும்.
  3. சேதமடைந்த வாகனங்கள் மற்றும் உடமைகளுக்கான காப்புறுதி இழப்பீட்டை பெற விரும்புபவர்களுக்கு தேவையான பொலிஸ் முறைப்பாட்டு பிரதியினை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தால் வழங்க வேண்டும்.
  4. காத்தான்குடி நகரத்தில் பொலிஸார் மாத்திரமே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
  5. புனித ரமழான் கால இரவு நேர வணக்கங்களை சுமூகமாக மேற்கொள்ள பொhலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
 ஆகிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜே குணவர்த்தன, மட்டு. மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்டகே மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, காத்தான்குடியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.மூபீன், எம்.பரீட், காத்தான்குடி நகர முதல்வர் எம்.அஸ்பர், சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் காத்தான்குடியிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்பட்டது.
இரவுவேளைகளில் தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி களுவாஞ்சிகுடியில் மூவர் கைது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மூன்று இளைஞர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் வாகனங்களை தாக்க முயற்சித்தமை, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை, கைகளில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தமை, கலவரங்களை உருவாக்க முயற்சித்ததமை போன்ற குற்றச்செயல்களின் அடிப்படையிலேயே மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிபாளையம், மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த கோ.புவிகரன், சு.பெருமாள், தேற்றாத்தீவு 02ஆம் வட்டாரத்தை சேர்ந்த  வேல்நாயகம் சிறிதரன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தனர்.
மர்ம மனிதன் பீதியின் காரணமாக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரோசி, புத்திக்க, சுஜீவ மற்றும் துனேஸ் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோசி சேனாநாயக்க, புத்திக்க பத்திரண, சுஜீவ சேனசிங்க மற்றும் துனேஸ் கன்கந்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பிலான எழுத்து மூலமான அறிவிப்பு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கட்சியின் செயற்குழு அறிவித்துள்ளது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒழுக்காற்று விசாரணை நடாத்துவதற்கு விசேட ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தவுள்ளது.
கட்சி நடவடிக்கைகளை பகிரங்கமான முறையில் விமர்சனம் செய்தமை மற்றும் கட்சிக்கு பாதகமான கருத்துக்கைள வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட மாட்டாது என கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எழுத்து மூல அறிவிப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸுக்கான தூதுவர் நாட்டின் பிரிவினைக்கு ஆதரவு!- ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு.
பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவதாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர் மலிந்த செனிவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
 இது தொடர்பாக சிறிலங்கா கார்டியனில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் தூதுவர் ஜயதிலக இந்தியாவுக்கு சார்பாக இயங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புக்கான 13 வது திருத்தச் சட்டமானது தமிழீழத்திற்கான எல்லைகளை வரைகின்ற ஒன்றாகவே இருக்கிறது. தூதுவர் ஜயதிலக இந்த எல்லைக் கோடுகளை வரைபவராகவே காணப்படுகின்றார்.
தயான் ஜயதிலகவின் புத்திஜீவி துரோகத்தனத்தை ஏற்றுக்கொள்வதற்கு நாடு தயாராக இருக்கவில்லை எனவும் மலிந்த செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் தயான் ஜயதிலகற்கு எதிராக கையயழுத்து வேட்டையிலும் இறங்கியுள்ளனர்.
தயான் ஜயதிலக ஆரம்பத்தில் ஒரு இடதுசாரி சிந்தனையில் இருந்தவர் என்ற போதும் பின்னர் ஒரு பேரினவாத சிந்தனை சார்ந்தே தன்னை மாற்றிக் கொண்டவர்.
எனினும் அவ்வப் போது 13 வது திருத்தச்சட்டத்தை ஆதரித்தும் பிராந்திய வல்லரசான இந்தியாவை பகைத்துக் கொள்வதால் சிறிலங்காவிற்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள் குறித்தும் எழுதி வருவதாலே ஜாதிக ஹெல உறுமய அவரை எதிர்த்து வருவதாக நம்பப்படுகிறது.
இலங்கையில் அமெரிக்காவின் தலைமையில் இந்தியா உட்பட்ட 20 நாடுகள் விமானப் பயிற்சி.
அமெரிக்காவின் தலைமையில் இந்தியா உட்பட்ட 20 நாடுகள் இலங்கையில் விமானப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளின் ஊடாக அனர்த்தங்களின் போதும் அவசரத் தேவைகளின் போதும் ஏனைய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தெரிவித்தார்.
விமானப்படை தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே விமானப்படைத் தளபதி மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:
ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பாதுகாப்பு கட்டனை தலைமையகத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நாடுகளின் விமானப் படைகள் இலங்கையில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. இந்த பயிற்சிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சிகளில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கம்போடியா, கனடா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மாலைதீவு, மொங்கோலியா, நேபாளம், நியூசிலாந்து, பெபுவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, கொங்கோ, அமெரிக்கா மற்றும் வியட்னாம் போன்ற நாடுகள் கலந்து கொள்கின்றன.
இதேவேளை இந்த கூட்டு விமானப் பயிற்சி குறித்து அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க மற்றும் இலங்கை விமானப் படைகள் இணைந்து நடாத்தும் (Pacific Airlift Rally)  2011 பசுபிக் எயார்லிவ்ட் ரலி 2011 கூட்டுப் பயிற்சி நடவடிக்கை இரத் மலானை விமான நிலையத்தில் இடம் பெறவுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கான அமெரிக்க பசுபிக் விமான படையினரால் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இந் நடவடிக்கையானது இவ்வருட த்துடன் எட்டாவது தடவையாக இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல் தரப்பு மனிதாபிமான உதவிகள் அனர்த்த நிவாரண பணிகளுக்கு ஒத்துழைக்கும் முகமாக ஆசிய பசுபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த 21 நாடுகளுக்கிடையிலான வான் மார்க்க நிவாரணப் பணியாற்று திறனை மேம்படுத்துவதே இவ்வாண்டிற்கான கூட்டுறவுப் பயிற்சி நடவடிக்கையின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.
ஜப்பானின் யொகோடா விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ள 374ஆவது அமெரிக்க விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த மூன்று C130 ஹேர்குலிஸ் விமானங்களும் அவுஸ்திரேலியா மலேசியா மற்றும் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த தலா ஒரு C130 விமானமும் இந்த கூட்டுப் பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்கவுள்ளன. 
பொலிஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த மர்ம மனிதர்களின் விபரங்கள் வெளியிடப்படாதது ஏன்?- அமைச்சர் வாசுதேவ கேள்வி.
பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மர்ம மனிதர்களின் விவரங்கள் இதுவரை ஏன் வெளியிடப்படவில்லை என்று தேசிய நல்லிணக்க மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், சிலர் துரத்தி வருகையில் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சாதாரண ஒருவரும் பொலிஸ் நிலையத்திலேயே தஞ்சமடைவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் மனதில் பீதியைக் கிளப்பிவிட்டுள்ள  மர்ம மனிதர்கள் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மர்ம மனிதர்களின் தாக்குதலுக்கு உள்ளான பலர் உயிரிழந்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில் மர்ம மனிதர்கள் பொதுமக்களின் கைகளில் சிக்கியுள்ளனர்.
மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட மர்ம மனிதர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவங்களும் அண்மையில் இடம்பெற்றன.
இந்நிலையில் அவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட  மர்ம மனிதர்களின் விவரங்கள் ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை?
அத்துடன் கொல்லப்பட்ட  மர்ம மனிதர்களின் விவரங்கள் எங்கே? ஏன் இவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படாதுள்ளன?
மக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மர்ம மனிதர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களை ஏவி விட்டவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகும்.
ஆனால் ஏன் விவரங்கள் வெளியிடப்படாதுள்ளன? எனவே மக்கள் மனதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றார்.
தெரிவுக்குழுவில் பஸில், ஹக்கீம், டக்ளஸ் உட்பட 31 பேர் அங்கம் வகிப்பர்.
தமிழர்களின பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 31 பேரே அங்கம் வகிப்பர்.
இவர்களில் அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவர் என்று இந்திய செய்தி முகவர் நிலையமான பி.ரி.ஐ. தெரிவித்தது.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
6 மாத காலத்திற்குள் தெரிவுக் குழு தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே 6 மாத காலத்துக்குள் தனது பணியை முடிக்கும் என்று அறிவிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக் காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அதன் விசாரணைகள் நீடித்துச் செல்வதை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோன்று தெரிவுக் குழு 6 மாதங்களிற்குள் தனது பரிந்துரைகளைக் காணும் என்ற காலக்கெடு நிறைவேறும் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே அமையும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதற்படியாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லி வந்த ஜனாதிபதி, தற்போது தெரிவுக் குழுவை அமைப்பதானது தனது முன்னைய திட்டத்தை அவர் கைவிட்டுவிட்டார் என்பதும், தீர்வு தொடர்பாக காலத்தை இழுத்தடித்து சர்வதேச நாடுகளை ஏமாற்றும்  அறிகுறியே என்றும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இங்கிலாந்து கலாசார மையத்தின் மீது தாக்குதல்: அமெரிக்கா கடும் கண்டனம்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இங்கிலாந்து கலாசார மையம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் பலியானார்கள்.
அதற்கு அமெரிக்க வெளிவிவகாரதுறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் எங்களது நடவடிக்கை பாதிக்காது.
ஆப்கானிஸ்தானின் மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்ட இங்கிலாந்து கலாசார கவுன்சில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது கோழைத்தனமானது.
ஆப்கானிஸ்தான் மக்களுக்காகவும் அரசுக்கும் எப்போது நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார். இதே போல் பாகிஸ்தான் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்து 4 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்.
தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரை அயல் வீட்டிலிருந்து தப்பி வந்த நாயொன்று கடித்துக் குதறி கொன்ற கொடூர சம்பவம் அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சூடானிய அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த அயன் கொல் என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்நாயானது அயன் கொலின் மைத்துனியான 5 வயது சிறுமியொருவரையும் 30 வயது பெண்ணொருவரையும் கடித்துக் காயப்படுத்தியுள்ளது. நாயிடமிருந்து 5 வயது சிறுமியை காப்பாற்ற அயன் கொலின் தாயாரான ஜக்லின் அன்சிடோ முயன்றவேளை நாயின் கவனம் அயன்கொலின் பக்கம் திரும்பியுள்ளது.
அச்சத்தில் தாயாரின் காலைப் பற்றித் தொங்கிய அயன்கொல்லை நாய் பலவந்தமாக இழுத்து கடித்துக் குதறியுள்ளது.
அயன் கொல்லின் குடும்பமானது தென்சூடானிலிருந்து சுபீட்சமான வாழ்க்கை தேடி அவுஸ்திரேலியாவில் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நிலநடுக்கம்: 350 கோடி பணத்தை மீட்டு ஒப்படைத்த பொதுமக்கள்.
ஜப்பானில் புகுஷிமா பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11ந் திகதி நிலநடுக்கமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் 20 ஆயிரம் பேர் பலியானார்கள்.
பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். புகுஷிமா அனு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியானது. நிலநடுக்கம் பாதித்த பகுதியில் கடந்த 5 மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக ஜப்பான் மக்கள் நல்ல உழைப்பாளிகள், திறமையானவர்கள், நேர்மையானவர்கள் என பெயரெடுத்துள்ளனர். அவர்களின் நேர்மை சமீபத்தில் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதித்த புகுஷிமா கடற்கரை பகுதியில் நடைபயிற்சி செல்லும் மக்கள் இடிபாடு பகுதிகளையும் கவனிக்க தவறுவதில்லை.
அவ்வாறு நடை பயிற்சி செல்பவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நிலநடுக்கத்தில் இடிந்து கிடக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் கிடந்த பணத்தை மீட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதன்படி நேற்றுவரை ரூ.350 கோடி பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை தவிர தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களையும் கண்டெடுத்து கொடுத்துள்ளனர். அவர்களின் நேர்மை பாராட்டுக்குரியது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது பர்தாவை அகற்ற மறுத்தால் சிறைத்தண்டனை: புதிய சட்டம் அறிமுகம்.
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சமீபத்தில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளது.
அதன்படி பொலிசாரின் சோதனையின் போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.
இவை தவிர பொலிசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும்.
சோதனையின் போது அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சோதனையின் போது மட்டுமின்றி கோர்ட்டு விசாரணை மற்றும் சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க செல்பவர்களும் பர்தா மற்றும் முகத்தில் மறைத்து இருப்பவைகளை அகற்ற வேண்டும். அகற்ற மறுத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த தகவலை நியூசவுத் வேல்ஸ் மாகாண தலைவர் பார்ரி ஓ பாரெல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதங்களையும் அவற்றை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறேன். அதேவேளையில் ஒருவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு பொலிசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறி உள்ளார்.
இச்சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
தெற்காசிய நாடுகளே அதிகளவு தீவிரவாத தாக்குதல்களை சந்திக்க வேண்டியுள்ளது: அமெரிக்கா.
அல்கொய்தா மற்றும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களின் தாக்குதல்களை தெற்கு ஆசிய நாடுகள் தொடர்ந்து சந்திக்கும் சூழ்நிலையே காணப்படுகிறது.
மேலும் அல்கொய்தா தீவிரவாதிகள் தான் 2010ம் வரை அமெரிக்காவிற்கு மிக்க அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருந்து வந்துள்ளது.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீவிரவாதத்தை முனைப்புடன் வேரறுத்துவிட்ட போதிலும் அல்கொய்தா பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெஹ்ரி-இ-தலீபான் மற்றும் சில தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்குள் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளை இணையம் மூலம் படப்பதிவு காட்சிகளையும் சமிக்ஞைகளையும் தொடர்ந்து பரிமாறிக் கொண்டு தான் இருந்து வருகிறது.
உதாரணமாக சமீபத்தில் ஒரு வளைத்தளம் மூலமாக ஆங்கிலத்தில் நன்றாக பேசத்தெரிந்த கைதேர்ந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரை தேர்வு செய்து நியூயோர்க் நகரில் கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது.
2010ம் ஆண்டில் 72 நாடுகளில் 11,500 தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் சுமார் 13,200 பேர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் தெற்காசியப் பகுதிகளில் மேலும் பல தீவிரவாதத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் கல்லறை கண்டுபிடிப்பு.
லிபியாவில் கர்னல் கடாபி படை நடத்தியத் தாக்குதலில் இறந்த 150 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட கல்லறையை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்தனர்.
மிஸ்ரட்டாவில் இருந்து 60 மைல் தொலைவில் இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. தவார்கா என்ற இடத்தில் இந்த கல்லறை உள்ளது.
மிஸ்ரட்டாவில் இருந்து கடாபி படையினரால் கடத்தப்பட்ட பொது மக்கள் ஆவார்கள். அவர்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிர் இறந்துள்ளனர். இந்த வீடியோ காட்சி ஆதார விவரங்களும் உள்ளன என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் தற்போது ஹிஷா நகருக்கு வெளியே உள்ள கடற்சாலையை நோக்கி முன்னேறி உள்ளனர்.
தலைநகர் திரிபோலியில் இருந்து 100 கி.மீ மேற்கே இந்த இடம் அமைந்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க ஜவல்யா சுத்திகரிப்பு வளாகம் தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
திரிபோலிக்கு மேற்கே 30 மைல் தொலைவில் இந்த ஆலை உள்ளது. இங்கிருந்து திரிபோலிக்கு செல்லும் எண்ணெய் குழாய் பாதை செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டது என போராட்டக்குழு தளபதி ஒருவர் தெரிவித்தார்.
உலகின் முதன் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட எருமை இறப்பு.
உலகின் முதல் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட எருமை திடீர் என இறந்துள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டிகரில் நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் வெண்மைப்புரட்சி என்றழைக்கப்படும் பால் உற்பத்தி பெருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ‌
மேலும் உலகில் முதன் முதலாக குளோனிங் முறையில் செம்மறி ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் இம்மையத்தில் குளோனிங் முறையில் எருமை கன்று ஒன்று மையத்தின் விஞ்ஞானிகள் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது என்ற உலகப்பெருமை இந்த எருமைக்கு கிடைத்தது. அதற்கு கரிமா என்றும் பெயர் சூட்டி விஞ்ஞானிகள் மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து நவீன அறவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி மேலும் இரண்டு குளோனிங் கன்றுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு மையத்தை சேர்ந்த அதிகாரி கூறியதாவது. 200 கிலோ வரை எடை கொண்ட கரிமா கடந்த சில தினங்களாக உணவு உண்பதை தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் அதற்கு சிகிச்சை அளிப்பதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் கரிமா இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக இறந்தது.
பிரிட்டனில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு.
பிரித்தானியப் பொருளாதாரம் 2009 மே மாதத்தில் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் வேலையற்றோர் தொகை பெருமளவில் அதிகரிக்கும் நிலையுள்ளது.
இலாப விதிகளில் மாற்றம் ஏற்படுத்தியதால் தான் இது அதிகரித்துள்ளதெனச் சிலர் கூறினாலும் தேசிய அலுவலகம் இதை முக்கிய காரணமெனக் கொள்ளமுடியாதென மறுத்துள்ளது.
ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் 38,000 வேலையற்றோர் தொகை அதிகரித்ததையிட்டு இத்தொகை 2.49 மில்லியனாக அல்லது 7.9 வீதமாக அதிகரித்துள்ளதெனக் கூறப்படுகின்றது.
இதில் 23 வருடங்களில் இல்லாதவாறு வேலையற்ற பெண்களின் தொகையும் அதிகரித்துள்ளது.
மனைவிக்கு பாறாங்கல்லை பிறந்தநாள் பரிசாக அளித்த மேயர்.
கனடாவின் ஒரு நகரத்தின் மேயர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு ஒரு பெரிய பாறாங்கல்லை பரிசாக அளித்துள்ளார்.
மொன்ரியலிற்கு அருகேயுள்ள Saint-Theodore-d’Acton எனும் பகுதியின் மேயரே தன்னைத் தனது மனைவி தொந்தரவு செய்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு செய்திருந்தார்.
ஓர் கல்லுடைக்கும் நிறுவனத்திற்கும் சொந்தக்காரராக உள்ள இவர் அந்தப் பாறைக்கு மினுங்கும் செம்மஞ்சள்நிற பிறந்தநாள் வாசகங்களுடனான கடதாசியால் சுற்றி அதற்கு இளஞ்சிவப்புநிற நாடாவும் கட்டியிருந்தார்.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள், இசா" என்று அக்கல்லில் மனைவியின் பெயரையும் வர்ணந்தீட்டியிருந்தார். "என்னைத் தனியே விட்டுவைக்க நான் எதையாவது செய்யவிரும்பினேன். இதன்பின்னர் அவள் எதையும் கேட்கவேமாட்டாள்" என்றார் அந்த மேயர். இவர்கள் இருவருமே ஒருவரை மற்றவர் தொந்தரவு செய்வதாகக் குறைகூறி வந்துள்ளனர்.
3 வருடமாகப் பிரிந்தே வாழும் இந்தத் தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு பையனும் 9 வயதில் ஒரு பெண்ணும் இருக்கின்றனர்.
விடியற்காலை 3 மணியளவில் மேயர் இந்தக் கல்லை வாகனத்தில் கொண்டுவந்தபோது அவர் எதற்காக அக்கல்லை கொண்டுவருகின்றாரென வீதிப்பாதுகாப்புப் பிரிவினரால் இருமுறை மறித்துக் கேட்கப்பட்டார்.
எனினும் அவரிடம் வாகன அனுமதிப்பத்திரமும் காப்பீட்டுப் பத்திரங்களும் இருந்ததால் தொடர்ந்தும் போக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொந்தரவிற்கும் அதியுச்ச குழறுபடிக்காகவும் இந்த மேயர் பெருஞ்சாலை விதிக்கமையத் தண்டனை விதிக்கப்படுவாரென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வங்கதேசத்தில் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் கைது.
பாகிஸ்தானில் ஹர்கதுல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.
சுருக்கமாக ஹீஜ் என்றழைக்கப்படும் இந்த தீவிரவாத இயக்கத்துக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் போல பெரிய நெட்வொர்க்கும், தற்கொலைப் படைகளும் உள்ளன.
வங்கதேசத்தில் வலுவாக காலூன்றி ஆயுதப் பயிற்சி பெற்று வரும் இந்த தீவிரவாதிகள் அங்கிருந்து தான் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள். இந்த இயக்கத்தின் வங்கதேச தலைவராக மவுலானா முகம்மது யாகியா உள்ளார்.
இவர் மத்திய கிஷோர் கஞ்ச் மாவட்டத்தில் பஸ்சில் சென்று கொண்டிருப்பதாக வங்கதேச பொலிசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஷைல்கெட்-கிஷோர்கஞ்ச் வழித்தடத்தில் அதிரடிப் படையினர் ஒரு பஸ்சை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.
பஸ்சில் பயணிகளிடையே உட்கார்ந்திருந்த முகம்மது யாகியாவை அதிரடி படையினர் கைது செய்தனர். அவருக்கு உதவியாக வந்த முகமது பகியூதீன், யர்முகம்மது ஆகியோரும் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள், புத்தகங்கள், சீ.டி.க்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்ற புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. தலைவராக செயல்பட்ட முகம்மது யாகியா, கடந்த 2000ம் ஆண்டு ஷேக் ஹசீனா கட்சி நடத்திய ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு நடத்திய குற்றத்துக்காக தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
கராச்சியில் தொடரும் வன்முறை: 60 பேர் பலி.
கராச்சியில் வியாழக்கிழமை நடந்த கலவரத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் அங்கு நடைபெற்று வரும் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. 
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகராக கருதப்படும் கராச்சி நகரில் கடந்த சில மாதங்களாகவே கலவரம் நடைபெற்று வருகிறது.
அரசியல் மற்றும் இன அடிப்படையிலான வேறுபாடுகளால் கலவரம் மூண்டு வருகிறது. வியாழக்கிழமை நடந்த கலவரத்தில் 11 பேர் பலியாயினர். இதுவரை 18 பேரை காணவில்லை என புகார்கள் வந்துள்ளன.
இதனால் கோபமடைந்த முத்தாகிதா குவாமி இயக்கத்தினர் சிந்து மாகாண முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டனர். கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கலவரக்காரர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இஸ்லாமாபாத்தில் அதிகாரிகளின் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த வருடம் மட்டும் கராச்சியில் நடைபெற்றக் கலவரங்களில் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
பாகிஸ்தான் மனித வெடிகுண்டு தாக்குதல்: 33 பேர் பலி.
பாகிஸ்தான் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பொது மக்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது கைபர் பழங்குடியினப் பகுதி. இங்குள்ள ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை வழிபாட்டில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
காயமடைந்த 100க்கும் மேற்பட்டோரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
குண்டு வெடிப்பில் மசூதி கட்டடம் கடுமையாக சேதமடைந்தது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF