Friday, August 19, 2011

இன்றைய செய்திகள்.

வவுனியாவில் மர்ம மனிதர்கள் மூவர் சிக்கினர்! மூவரும் ஊர்காவல் படையினர்?!

வவுனியா சூடுவெந்த பிலவில் பொதுமக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மூன்றுபேரும், இராணுவத்தினரே என்று ஊர் மக்களும், அவர்கள் உலுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர் என்று பொலிசாரும் தெரிவித்திருக்கின்றனர்.பதட்டமான ஒரு சூழ்நிலையில் நேற்றிரவு பொதுமக்களின் பிடியில் இருந்து பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்ட இவர்கள் மூவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.நேற்றைய இந்தச் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜன்ற் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும், அவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிப்பதற்காக இரவு வேளையில் சென்றதாகக் கூறப்படுகின்ற இந்த மூவரின் நடவடிக்கைகள் குறித்து ஊர்மக்கள் சந்தேகம் கொண்டதையடுத்தே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் மூவரும் வேறு சிலரும் எட்டு மோட்டார் சைக்கிள்களில் (அவற்றில் ஒன்று இலக்கத்தகடு இல்லாதது) என்ன நோக்கத்திற்காக ஊருக்குள் இரவு வேளையில் வந்தார்கள் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.இவர்கள் மீன்பிடிப்பதற்காகவே சென்றார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும், இவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டதையடுத்தே, ஊர் மக்கள் அவர்கள் மூவரையும் பொலிசாரிடம் நேற்றிரவு கையளித்துள்ளார்கள்.இந்தச் சம்பவம் குறித்து எவரும் உடனடியாகக் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிசார் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு ரணில் விக்ரமசிங்கவை செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக வெளியான தகவல்களிலும் உண்மையில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென செயற்குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும்! வலியுறுத்துகிறார் முன்னாள் நீதியரசர்.
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊழல் லஞ்ச ஒழிப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். சந்தேகத்துக்குரிய சம்பவங்களை ஆராய்வதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். எனவே சட்டத் திருத்தம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஊழலுக்கெதிரான குரல் என்ற நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் பிரதம நீதியரசர்  மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டார்.

முன்னால் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தமதுரையில் மேலும்  கூறியதாவது:
கேள்வி அறிவித்தல் எதுவுமின்றி அபிவிருத்திப் பணிகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இது தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு மாறான செயலாகும்
இதனால் எதிர்கால சந்ததியினரின் தலையில் கடன் சுமை சுமத்தப்படப் போகின்றது.
லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு ஐ.நா.வின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டாவது நாடு இலங்கை ஆகும்.எனவே அதனை முனைப்பாக செயல்படுத்த வேண்டிய சர்வதேச கடப்பாடு நமக்கு இருக்கிறது. தற்போது அமுலில் உள்ள ஊழல் லஞ்ச ஒழிப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். சந்தேகத்துக்குரிய சம்பவங்களை ஆராய்வதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இப்போதைய நிலையில் முறைப்பாடு வந்தால் மட்டுமே ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவால் விசாரணை மேற்கொள்ள முடியும். இது சட்டத்தில் காணப்படும் ஒரு குறைபாடாகும்.
மேலும் தற்போதைய சட்டத்தின் பிரகாரம், ஒருவர் உண்மைக்கு மாறாக முறைப்பாடு செய்கிறார் என்றால், அவருக்கு பத்து வருட கால தண்டனை விதிக்கப்பட முடியும். இவ்வாறான விதிகளின் காரணங்களால் முறைபாடு செய்வதற்கு எவரும் தயக்கம் காட்டும் நிலை இருக்கிறது.இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா.
சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்! கோத்தபாய.
சர்வதேசத்தில் தஞ்சமடைந்துள்ள புலிகள் மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கான அச்சுறுத்தலுள்ளது. இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கட்டமைப்பை உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டும். இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது படைத் தரப்புக்களின் கடமையாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
உள்நாட்டில் பயங்கரவாதப் பேராட்டத்தினால் இலங்கை இழந்தது ஏராளமானவையாகும். இனி புதிய சாவால்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த முப்பதாண்டு காலமாக இலங்கை பயங்கரவாதப் போரினால் பீடிக்கப்பட்டிருந்தது. இராணுவம் பாரியளவிலான பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுத்தது. இருந்தும் பயங்கரவாதப் போரினால் நாம் இழந்தது அதிகமாகும். இந்த இழப்புக்களை நிவர்த்தி செய்து கொண்டு நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது.
இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு எதிராக புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ற வகையில் படையினர் செயற்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். யுத்த காலப் பகுதியில் புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களை மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுக்க வேண்டியது படையினரின் பொறுப்பும் கடமையாகும். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அதற்கு முன்னரும் புலிகள் கடல் மார்க்கமாக தமக்குத் தேவையான ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் உள்நாட்டில் தாக்குதல் ஆயுதங்களை தயாரிக்கவில்லை. கடற்படையினர் விஷேட நடவடிக்கைகளின் ஊடாக புலிகளின் கடல்மார்க்கமான ஆயுதக் கொள்வனவை இல்லாதொழித்தனர். இதனை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தில் பயங்கரவாதிகளினால் நாட்டிற்குள் ஆயுதங்களை கொண்டு வருவதை தடுக்க வேண்டும்.
பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு நிலப்பரப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இப்பணிகளில் இராணுவம் பங்களிப்புக்களை செய்து வருகின்றது. அது மட்டுமன்றி ஐ.நா. உட்பட பல நாடுகளுக்கு இராணுவம் சார் பிரதிநிதிகள் தூதுவர்களாக சென்றுள்ளனர்.
அது மட்டுமன்றி அவசர சவால்களைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்குள் 95 வீதமான மீள்குடியேற்றத்தை படையினர் நிறைவு செய்திருந்தனர். 75 சத வீதமான மிதி வெடிகள் அகற்றப்பட்டன. 11 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைந்துள்ளனர். இவ்வாறு தேசிய வேலைத்திட்டங்களில் படையினர் பங்களிப்புக்களை செய்தனர் என்றார்.
யாழ்.- கொழும்பு பஸ்களில் கப்பம் கேட்கும் பொலிஸார்! பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு.
யாழ். கொழும்புக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்களில் தமிழ் சாரதிகளிடம் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் கப்பம் பெறுகின்றனர் என பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். கொழும்புக்கு இடையில் இரவு நேர சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளிடம் 100 ரூபா முதல் 200 ரூபா வரையில் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் கப்பம் பெறுவதை நேரில் கண்ட ஊடகவியலாளர் ஒருவர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
சிலாபம், குருநாகல், மதவாச்சி, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபடும் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இவ்வாறு கப்பம் பெறுகின்றனர் என இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
பஸ் சாரதிகளுக்குத் தண்டப் பணம் விதிப்பதாக எச்சரிக்கும் பொலிஸார், தண்டப்பணம் விதிப்பதற்குப் பதிலாக சாரதிகளிடம் பணம் பெறுகின்றனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபா வரை சாரதிகளிடம் இருந்து பொலிஸார் பெற்று வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களே உள்ளனர்: வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற அறிக்கை தயாரித்தமை, அதனை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளித்துள்ளமை ஆகிய நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகும். இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களேயுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை சீர்குலைக்கும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் உலக நாடுகளில் தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:
இலங்கை தற்போது புதிய சவால்களை எதிர்கொள்கின்றது. இதற்கும் படைகளின் பங்களிப்புகள் அவசியமாகும். சிறந்த பயிற்சி, ஒழுக்கம், அனுபவம் மற்றும் உத்வேகத்துடனேயே புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஆயுதப் போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வரும்போது காணப்பட்ட பொறுப்புணர்வுகள், தியாகபூர்வமான செயற்பாடுகள், அரசியல் தலைமைத்துவம் என்பனவும் சவால்களை எதிர்கொள்ள அவசியமாகும்.
இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சிறந்த முறையில் கையாண்டு கடந்த கால போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது போல் நிகழ்கால சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். இராணுவ வரலாறுகளில் இலங்கையைப்போன்று பெரும் தொகையான மக்களை களத்திலேயே எந்த நாடும் நிர்வகித்ததில்லை.
பயங்கரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களை மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாக மீட்டெடுத்து பாதுகாப்பான இடங்களில் படையினர் தங்க வைத்தனர். அரசாங்கம் அம்மக்களுக்கு தேவையான உணவு, மருந்து என அனைத்தையும் அனுப்பி வைத்தது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தப்பி வந்த பொதுமக்கள் மீது புலி உறுப்பினர்கள் துப்பாக்கி பிரயோகங்களை செய்தனர்.
ஏ 9 வீதி மீது தாக்குதல்களை மேற்கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல விடாது பயங்கரவாதிகள் தடுத்தனர். இராணுவம் கடல் உள்ளிட்ட மாற்று வழிகளை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்றது. இதற்கும் கூட கடல் புலிகளால் அச்சுறுத்தல் காணப்பட்டது.
இவ்வாறு உயிர் தியாகம் செய்து பொது மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த இராணுவத்தினரை ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் போர் குற்றவாளிகள் என்கிறது. அது மட்டுமின்றி சட்ட பூர்வ மற்றதும் அடிப்படை தன்மையற்றதுமான வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்திய இலங்கைக்கு எதிரான அறிக்கையினையும் நிபுணர் குழுவினர் தயாரித்தனர்.
இந்த அறிக்கையானது ஐ.நா. வின் உத்தியோகபூர்வ அறிக்கை இல்லை. ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட வேண்டியதை சர்வதேச மனித உரிமைகள் பேரவையிடம் கையளித்ததன் மூலம் இந்த விவகாரங்களில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதன் பின்னணியிலும் இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் செயற்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். இவர்களின் பிரதான இலக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதாகும். அதனூடாக இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதாகும்.
எனவே சர்வதேச சமூகம் உண்மையான நிலவரங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். நாளுக்கு நாள் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களை நம்பாது அரசாங்கத்தின் வடக்கு கிழக்கிற்கான பணிகளை அவதானிக்க வேண்டும். தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றனர். தற்போது நாட்டில் 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி வேகம் காணப்படுகின்றது.
இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் முழு அளவில் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்கள் இல்லை. 95 வீதமான பாடசாலைகள் இயங்குகின்றன. 90 வீதமான மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா அரசுகளின் பங்களிப்புகளுடன் வடக்கு கிழக்கில் பாரிய கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதைத்தவிர அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் வடக்கில் அரசு முன்னெடுத்துள்ளது.
இதுதான் உண்மையான விடயமே தவிர இராணுவ மயமாக்கலோ, தேர்தல் மோசடிகளோ நடைபெறுவதில்லை. சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன.
வாகனத்தை செலுத்தியவருக்குத்தான் பயணம் தொடர்பான முழு விபரமும் தெரியும். வேடிக்கை பார்த்தவர்களுக்கு அல்ல என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச போர் விதிமுறைகளும் சட்டமும் காஸாவிற்கும் இலங்கைக்கும் ஒரே விதத்தில் பொருந்தாது என்றார்.
சீனப் பிரஜைகள் ஐந்து பேருக்கு இலங்கையில் மரண தண்டனை.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள மேல்நீதிமன்றம் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சீனப் பிரஜைகளுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் 2003 ம் ஆண்டில் சக சீனப் பிரஜை ஒருவரை கடத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் சீனப் பிரஜைகளான ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கொலையுண்ட நபரின் உடலை நாட்டின் மத்திய பிராந்தியமான கண்டியில் உள்ள மலைப் பகுதியொன்றில் மறைத்துவிட்டு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்ட இருவர் வழங்கிய தகவலை அடுத்தே மற்றைய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளவத்தையில் சீன உணவகமொன்றை நடத்திவந்த சீனப் பெண் ஒருவரும், அங்கு பணி புரிந்த மேலும் நான்கு ஊழியர்களும் சக ஊழியரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
பிணை வழங்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் தலை மறைவாகி விட்டனர்.
இந்தப் பின்னணியில், இரண்டு சந்தேக நபர்களின் சமுகமின்றி நடந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஐந்து பேருக்குமே கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தலை மறைவாகியுள்ள நபர்கள் இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் பிடியாணை வழங்கியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக அவர்களின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது!– புத்திக்க பத்திரன.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன தெரிவித்துள்ளார். தற்போதைய செயற்குழு சட்ட ரீதியானதா என அவர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
இதேவேளை, கட்சி விவகாரங்களில் தொடர்பில் விமர்சனம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதனிடையே, எனது பிணத்தையே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்ற முடியும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எந்தக் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகிச் செல்லப் போவதில்லை.
கட்சியின் சிலர் என்னை விரட்டியடிக்க முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்காது.
கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்காக வியர்வை சிந்தி உழைக்கப் போவதாக ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாற்றுக் கருத்துக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற செயற்குழுக் கூட்டத் தீர்மானத்திற்கு சஜித் பிரேமதாச எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன்மூலம் மாற்றுக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சஜித் பிரேமதாசவும் ஆதரவளித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!-சந்திரிக்கா.
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட  இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தங்களது பைகளை நிரப்பிக்கொள்ளும் அரசியல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும்.
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் வலுவான ஓர் எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்சி ஆட்சி நடத்துவதனால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. வலுவான ஓர் எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தக் காலத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகிச் செல்லும் உத்தேசம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமண அழைப்பிதழ்களின் ஊடாக இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப் பொருள் கடத்தல்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்த திருமண அழைப்பிதழ்களில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 14 திருமண அழைப்பிதழ்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படவிருந்ததாகக் குறிப்பிபடப்படுகிறது.
இதன் காரணமாக திருமண அழைப்பிதழ்களின் ஊடாக அமெரிக்காவிற்கு போதைப் பொருள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பிதழ்களில் பதினொரு லட்ச ரூபா பெறுமதியான கொக்கேய்ன் எனப்படும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அமெரிக்கர் ஒருவரும் அவரது மனைவியான சிங்களப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்ல தலவத்துகொட பொலிஸாரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர், இலங்கையின் முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொக்கேய்ன் போதைப் பொருள் எங்கிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல்களை அமெரிக்கர் வெளியிடவில்லை எனவும், தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மோசடி நிறைந்த குடும்ப அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் - சரத் பொன்சேகா.
ஊழல் மோசடிகள் நிறைந்த குடும்ப அரசியலுக்கு எதிராக குரல்கொடுக்க அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
குடும்ப அரசியலுக்கு எதிராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதுகெலும்பு இருந்தால் ஏனைய அமைச்சர்களும் 18ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும்.
அரசாங்கம் சட்டத்தை மீறிச் செயற்படுவதனால் மக்களும் சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றனர்.
தரம் குறைந்த தேங்காய், தரம் குறைந்த பெற்றோல் தற்போது தரம் குறைந்த சிமெந்து என ஊழல் மோசடிகள் நீண்டு செல்கின்றன.
அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதனால் பொதுமக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உடற்கூற்றியல் சிசிச்சைக்காக வைத்தியசாலை சென்றிருந்த போது அவர் இந்தக் கருத்துக்கைள வெளியிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் எனவும், அல்லது எதியோப்பியா போன்று நாடு மாற்றமடையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
லிபிய அதிபர் கடாபி தலைமறைவு: புரட்சிப்படைகள் முன்னேற்றம்.
லிபியாவில் புரட்சிப்படை திரிபோலிக்கு கிழக்கேயும், மேற்கேயும் கடாபி ஆதரவு படைகளுடன் மோதி வருகின்றன.
எண்ணெய் கிணறுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக புரட்சிப்படைகள் ராணுவத்துடன் சண்டை செய்து வருகின்றன.
லிபியாவை கண்காணிப்பதற்காக ஆள் இல்லாத கண்காணிப்பு விமானங்களை அமெரிக்கா புரட்சிப்படைக்கு அனுப்பி உள்ளது. அந்த விமானங்கள் நேற்று லிபியாவுக்கு வந்து சேர்ந்தன.
பிரேகா நகரில் புரட்சி படை நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர்.
69 வயதான அதிபர் கடாபி எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார்.
மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய 3 திசைகளில் இருந்தும் திரிபோலியை நோக்கி புரட்சி படை முன்னேறி வருகிறது. விரைவில் திரிபோலி புரட்சிப்படைகளிடம் வீழ்ந்து விடும் என்று தெரிகிறது.
காபூலில் இங்கிலாந்து கலாசார மையத்தின் மீது தாக்குதல்: 8 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இங்கிலாந்து கலாசார மையத்தின் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாயினர்.
ஆப்கனில் தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
பதிலுக்கு கூட்டுப் படைகள் அவர்களுக்கு உதவும் ஆப்கன் அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகளை தலிபான்கள் கொன்று வருகின்றனர். இந்நிலையில் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒபே மாவட்ட வழியாக நேற்று மினி பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் சிக்கி மினி பஸ் சிதறியது. பேருந்து பயணிகள் 21 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாயினர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதற்கிடையில் இன்று அதிகாலை காபூலில் 2 தற்கொலை படை தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தது.
ஆப்கன் துணை அதிபர் முகமது காசிம் பாகிம் வீடு மற்றும் வெளிநாட்டினர் தங்கியுள்ள புகழ்பெற்ற இன்டர்கான்டினென்டல் ஹொட்டல் மற்றும் இங்கிலாந்து கலாசார மையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதிகாலை 5.45 மணிக்கு 10 நிமிடங்களில் 2 முறை தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் 8 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் நோய் தாக்கியதில் 81 குழந்தைகள் பலி.
வியட்நாமில் குழந்தைகளிடையே புது வித வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோய் குழந்தைகளின் கை, கால் மற்றும் வாய்ப்பகுதியில் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் வைரஸ் நோய் தாக்கி 32,588 குழுந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 81 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படுகிறது. பின்னர் வாய் மற்றும் கை, கால்களில் எரிச்சலுடன் கூடிய புண் உண்டாகிறது.
ஆனால் நோயை குணப்படுத்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லை. இருந்தும் பலர் சிகிச்சை இன்றி குணமாகி வருகின்றனர்.
சில இடங்களில் குழந்தைகளின் மூளையில் வீக்கம் ஏற்பட்டு அதன் மூலம் வலிப்பு நோயினால் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றனர்.
இந்த தகவலை வியட்நாம் பிரதமர் குயன் தன் சங் தெரிவித்துள்ளார். நோய் மேலும் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சுகாதார சீர்கேட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ஜப்பானின் வட கிழக்கில் 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
ஜப்பான் நேரப்படி 19ம் திகதி மாலை 2.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் கிழக்கில் உள்ள சுன்டாய் என்ற நகரில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்தநகரம் மியாகி மாகாணத்தின் தலைநகராகும்.
கடலுக்குக் கீழ் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11ம் திகதியன்று ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக 0.5 மீற்றர் உயரத்திலான அலைகள் கடற்கரைப் பகுதியைத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களை கொன்று குவிக்கும் சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதற்கு மறுத்து வரும் அவர் ராணுவத்தை ஏவி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகிறார்.
ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகளும், ஐ.நா.சபையும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அதிபர் பஷார் அல் ஆசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: அரசியல் மாற்றம் செய்வதாகவும், மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் சிரியா அதிபர் ஆசாத் வாக்குறுதி அளித்து இருந்தார். அதை அவர் நிறைவேற்ற தவறி விட்டார். மாறாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளார்.
மேலும் தனது மக்களை சிறையில் அடைத்தும் சித்ரவதை செய்து வருகிறார். எனவே அவர் தனது ஆட்சியில் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது மக்களின் விருப்பப்படி அவர் பதவி விலக வேண்டும்.
இவை தவிர அமெரிக்காவில் உள்ள சிரியாவின் எண்ணை நிறுவனங்களை முடக்கவும், சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கான பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என ஐ.நா.சபையும், அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. மேலும் சிரியாவில் இருந்து தங்களது தூதரை வாபஸ் பெற்று உறவை முறித்து கொண்டுள்ளன.
தற்போது தான் அமெரிக்க அதிபர் ஒபாமா முதன் முறையாக ஆசாத் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆயுத தட்டுப்பாடு: ஆப்கனில் பிரிட்டன் துருப்புகளுக்கு அபாயம்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பிரிட்டன் துருப்புகளுக்கு உரிய ஆயுதங்கள் அனுப்புவதில் தாமதம் உள்ளது. இதனால் அவர்கள் ஆபத்தான நிலையில் சிக்கிக் கொள்வார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பொதுச் சபை கணக்கு கொமிட்டி இந்த அபாய நிலை குறித்து எச்சரித்தது. பாதுகாப்புத்துறை அமைச்சகம் தாங்கள் அனுப்பும் ஆயுதங்கள் போதுமானதாக இல்லை என ஒப்புக்கொண்டது.
ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களை அனுப்புவதற்கும், விநியோக சங்கிலி திட்டத்தை மேம்படுத்தவும் 80 கோடி பவுண்ட் ஒதுக்கீடு செய்வதாக அரசு தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் வீரர்களுக்கு ஆயுதங்கள், மருந்துப் பொருட்கள், ஆடைகள் தேவைப்படுகின்றன என கணக்கு கொமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
விநியோக சங்கிலியை மேம்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் 7.50 கோடி யூரோ செலவழித்து உள்ளது. இந்தப் பொருட்கள் மிகச் சிறந்த முறையில் அதிக செலவினம் பிடிக்காத வகையில் அனுப்பப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் லப் தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆயுத கிடங்கு முறை அபாய நிலையில் இருப்பதாக பொதுச்சபை கணக்கு கொமிட்டி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மாஜி விண்வெளி வீரர்.
நிலவில் முதன் முதலாக காலடி வைத்த மாஜி விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்க் ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்க போர் வீரர்களை சந்தித்து பேசினார்.
கடந்த 1970ம் ஆண்டு விண்வெளியில் அப்போலோ விண்கலம் மூலம் முதன் முதலாக நிலவில் காலடி வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்(82). இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் வந்திருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் தலைநகர் காபூலிருந்து போர் விமானம் மூலம் ஈகர் ராணுவ பயிற்சி முகாமிற்கு வருகை தந்தார்.
அங்கு பயிற்சி பெற்று வரும் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களை நேட்டோபடைகள் எதிர்கொண்டு வருகின்றன.
நேட்டோ படைப்பிரிவில் சேருவதற்கான பயிற்சியில் நீங்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதை காணமுடிகிறது. கடந்த சில மாதங்களாக நேட்டோப்படைகளில் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 2014ம் ஆண்டிற்குள் ஆப்கானில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.
விண்வெளி வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசியது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. முன்னதாக காபூலில் அமெரிக்க ராணுவ உயரதிகாரி ஒருவர் நீல் ஆம்ஸ்ட்ராங்கை வரவேற்றார்.
பிரிட்டனில் பகல் நேர வெளிச்சத்தில் வானத்தில் பறந்த மர்ம வட்டத்தட்டு.
பிரிட்டனில் பகல் வெளிச்சத்தில் பளிச் என ஒளி விடும் மர்ம வட்டு தட்டு பறந்து சென்றது. இந்த வித்தியாசமான காட்சியை பார்த்த பி.பி.சி.யின் நிருபர் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த மர்ம தட்டு மேக கூட்டம் நிறைந்த பகுதியில் சீறி பாய்ந்து சென்றது. அதிவேகத்துடன் சீறிச்சென்ற அந்த பொருள் சில வினாடியில் கண்ணை விட்டு மறைந்தது.
அந்த பொருள் நிச்சயம் விமானம் இல்லை என படம் பிடித்த 36 வயது கமெரா மேன் அல்வினால் தெரிவித்தார். விளையாட்டு செய்தியாளர் மைக் செவல் 5 நாட்களுக்கு முன்னர் தான் அது போன்ற மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதை பார்த்தார்.
அந்த காட்சி ஹெர்ட்ஸ் பகுதியில் உள்ள கோடர்டு கிராமத்தில் காணப்பட்டது. சில மைல் தொலைவு தூரத்தில் அந்த மர்ம பொருள் சத்தத்துடன் பறந்து சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மைக் ஸ்வெல் ரேடியோ 5 நிறுவனத்திற்காக பணியாற்றுகிறார். அவரும் வானில் பறந்த மர்ம தட்டு ஒளிவெள்ளத்துடன் வட்ட வடிவத்தில் இருந்தது என உறுதிப்படுத்தினார்.
தற்போது வானில் பறந்த சென்ற மர்ம வட்ட தட்டு எசக்சின் தெற்கு பகுதியான ஸ்டான்ஸ் டெட் விமான நிலையம் அருகே காணப்பட்டது. அது வானத்தில் இருந்து தரையை நோக்கி சீறி வருவதை போல இருந்தது என செய்தியாளர் அல்வினால் தெரிவித்தார்.

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள கிறிஸ்டியானே லாகர்டே.
பிரான்சை சேர்ந்த கிறிஸ்டியானே லாகர்டே தற்போது சர்வதேச நிதியத்தின் தலைவராக உள்ளார்.
அவர் 2008ஆம் ஆண்டு பிரான்ஸ் நிதி அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் நண்பரான தொழிலதிபர் பெர்னார்டு தபேவுக்கு 40 கோடியே 30 லட்சம் யூரோவை அரசு நிதியில் இருந்து அளித்தார்.
முன்னாள் அரசு வங்கியான கிரடிட் லயோனய்சுக்கும், தபேவுக்கும் ஏற்பட்ட நிதி பிரச்சனையின் போது லாகர்டே இவ்வாறு பொது நிதியை அளித்தார். அவர் யாருடைய முடிவையும் கேட்காமல் தன்னிச்சையாக நிதியை அளித்துள்ளார் என தோன்றுகிறது என பிரெஞ்ச் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து லாகர்டேவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குடியரசு கோர்ட்டிற்கான பிரான்ஸ் நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் 9 பக்க அறிக்கையை தயாரித்துள்ளனர். அவர்களது அறிக்கையில் லாகர்டேவை கட்டாயம் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
லாகர்டே மீதான முறைகேடு குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்கப்படும். 55 வயது லாகர்டே சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவர் என்று பெருமைப்படும் நிலையில் தற்போது இந்த விசாரணை அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அறிவியல் துறையில் திறம்பட செயல்படும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள்: ஒபாமா.
அமெரிக்காவில் தெற்கிலுள்ள மாகாணங்களின் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு சூழல் உள்ளிட்டவை குறித்து நேரடியாக அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார் ஒபாமா. 
பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்புச் சூழலை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து உள்ளுர் மக்கள், வர்த்தகர்கள், தொழில் அதிபர்களையும் சந்தித்து உரையாடினார்.
இந்நிலையில் அட்கின்சன் என்ற இடத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் அவர் புதன்கிழமை பேசிய போது,"கணிதம், அறிவியல், இயந்திரவியல் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், சீனாவும் முன்னிலையில் உள்ளன" என்றார்.
ஸ்பெயினில் போப் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபை சார்பில் உலக இளைஞர் திருவிழா 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
21ந் திகதி நடக்கும் நிறைவு விழாவில் போப் ஆண்டவர் பெனடிக்ட் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் உள்ள மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போப் ஆண்டவரின் வருகைக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பெயினில் கோடிக்கணக்கில் செலவு செய்து ஆடம்பர திருவிழா நடத்துவது தேவையா? என்றும் திருச்சபைகளின் செயல்பாடுகளை கண்டித்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று எதிர்ப்பாளர்கள் ஊர்வலம் சென்ற பாதையில் போப் ஆதரவு யாத்திரிகர்கள் சிலர் ரோட்டோரமாக அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது போராட்டக்காரர் ஒருவர் பாட்டில்களை வீசினார். பதிலுக்கு யாத்திரிகளும் கையில் கிடைத்த பொருட்களை போராட்டக்காரர்கள் மீது வீசி எறிந்தனர்.
பாதுகாப்புக்கு வந்த பொலிசார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக போராட்டக்குழுவை சேர்ந்த 6 பேரை பொலிசார் கைது செய்தனர்.
ஆப்கனில் குண்டுவெடிப்பு: 14 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பேருந்து ஒன்றில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு பெண் மற்றும் குழந்தை உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் ஓபே மாவட்டத்திலிருந்து ஹீரத் நகருக்கு பேருந்து ஒன்றில் மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் பொது மக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
தலிபான் ஆதரவு பயங்கரவாதக் கும்பலே இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பெற்ற அரசை தூக்கியெறிவதற்காக இவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதனால் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள். புதுவகையான சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவது அமெரிக்க கூட்டு படையினருக்கு பெறும் தலைவலியாக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட கார் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்பு இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் இருந்து 26 ஊழியர்களை திரும்ப பெறுகிறது ஐ.நா.
சிரியாவில் பொதுமக்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்நாட்டிலுள்ள ஊழியர்கள் 26 பேரை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. இதற்கிடையே அப்பாவி மக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக சிரியா அதிபர் அசாத் கூறியுள்ளார்.
சிரியாவில் அதிபர் அசாத்தின் அடக்குமுறையை எதிர்த்து பலதரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் எதிர்ப்பாளர்களை அடக்கும் பொருட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் அந்நாட்டு அரசு ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியா அரசின் அடக்குமுறைக்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தாலும் அதிபர் அசாத் ராணுவ தாக்குதலை நிறுத்த தயாராக இல்லை. இதையடுத்து அந்நாட்டில் தங்கி அமைதி மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ள தங்கள் அமைப்பின் ஊழியர்கள் 26 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை திரும்பப் பெறுவதாக ஐ.நா அறிவித்துள்ளது.
இவர்களை லெபனான் நாட்டில் மறுகுடியமர்த்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரியா அதிபர் அசாத்தை ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது சிரியாவின் நிலவரம் கவலை தருகிறது என்றும், உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தினார். அவரின் குற்றச்சாட்டை மறுத்த அசாத் சிரியாவில் ராணுவம் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே சிரியா நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக ஐ.நா பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் சிரியா மக்களின் நிலை, அசாத் அரசின் அடக்குமுறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை விவாதிக்கிறார்.
அப்போது போராட்டக்காரர்கள் மீது சிரியா ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் கோர்ட் விசாரணைக்கு அவர் பரிந்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF