
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய "அயர்ன் ஏஜ்" எனப்படும் இரும்பு காலத்திய மிகவும் நீளமான அரிய மரச்சாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை மிகவும் புராதனமானதாக இருந்தாலும் இதில் உள்ள வேலைப்பாடுகள் நவீன காலத்திய கலை வேலைப்பாடுகளுடன் உள்ளது. க்ளெட்ஸ்டென் அருகே வெவ்னே நதிப் படுகையில் ஈர நிலத்தில் இந்த மரசாலை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சாலை 13 அடி அகலமும், 1600 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இதன் மீது அடர்ந்த பாசிகள் படிந்திருந்தது. அதுவே அதற்கு பாதுகாப்பாக இருந்துள்ளது. மொத்த சாலையையும் ஆராய்ச்சியாளர்கள் சிறிதும் சேதமின்றி பத்திரமாக தோண்டியுள்ளனர்.
இந்த மரச்சாலை ஐஸ்னி பழங்குடியினர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நார்ஃபோல்க் பகுதிக்குச் செல்ல வியாபாரிகள் இந்தப் பாதையை பயன்படுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
டென்ட்ரோக்ரோனாலஜி எனப்படும் ட்ரீ ரிங் டேட்டிங் அடிப்படையில் இதுகுறித்த இதர தகவல்களை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் அங்குள்ள பெரிய பெரிய மரங்களின் வயது கணக்கிடப்பட்டு அதன் மூலம் இதர தகவல்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.