Tuesday, August 16, 2011

இன்றைய செய்திகள்.

விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானம்?

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட நேரிடும் என ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது வேட்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உரிய சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால், தனித்து போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட உள்ள உத்தேச வேட்பாளர்கள் தொடர்பிலான விபரப் பட்டியல் ஒன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சகல தேர்தல்களிலும் தேசிய சுதந்திர முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் வங்கி அட்டை மோசடி! இலங்கையர் உட்பட ஐந்து பேர் கைது.

அவுஸ்திரேலியா முழுவதிலும் வங்கி அட்டை மோசடிகளில் பல மாதங்களாக ஈடுபட்டதாக  குற்றஞ்சாட்டப்பட்டு மலேசியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி கூட்டமைப்பின் நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் இணைப்பு செய்ததாக சந்தேகிக்கப்பட்ட இந்த நபர்களை பல மாதங்களாக கண்காணித்ததை தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக நியூசௌத் வேல்ஸ் மாநில மோசடிக் குழுவின் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி குழுவானது பண கொடுக்கல், வாங்கல் செய்ய இயந்திரங்களை மக்கள் பயன்படுத்தும்போது கடன் அல்லது முற்கொடுப்பனவும் அட்டைகளின் காந்தக் கீலத்திலிருந்து கணக்கின் விவரங்களை களவாக பிரதி செய்யும் அதிமுன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
வங்கிக் கொடுப்பனவுகளை செய்யும் இயந்திரங்கள், மடிக் கணினிகள், பணம், போலி பயண ஆவணங்கள் மற்றும் கனேடிய கடன் அட்டைகள் என்பவற்றை இவர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன் பிரதேச தோட்டப் பகுதிகளில் மர்மநபர் நடமாட்டம்! விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்.

ஹட்டன் பிரதேசத்துக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் மர்ம மனிதர்கள் நடமாடுகின்றார்கள் என்ற தகவல்களால் பீதி நிலைக்கு உள்ளாகியுள்ள மக்களின் பாதுப்பினைக் கருத்திற்கொண்டு தோட்டப் பகுதிகளில் இன்று 15 ம் திகதி முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேபீல்ட், விக்டன், டெம்பல்ஸ்டோ, வட்டவளை ஆகிய தோட்டப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குயின்ஸ்பெரி தோட்டப் பகுதியிலும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹட்டன் பிரதேசத்தின் பாதுகாப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் காமினி நவரத்னவின் தலைமையில் ஹட்டன் டைனின் ரெஸ்டில் நேற்று 14 ம் திகதி விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் ஹட்டன் பிரதேசத்துக்கு உட்பட்ட தோட்டங்களின் முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் சட்டத்தை கையில் எடுக்ககூடாது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
மக்களை அச்சுறுத்தும் வகையில் பல பிரதேசங்களிலும் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என சிரேஷ்ட பிரதிப் மாபொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.
அவ்வாறான சந்தர்ப்பங்கள் குறித்து நுவரெலியா மாவட்ட மக்களை தெளிவு படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சில சந்தர்ப்பங்களில் தோட்டங்களில் உள்ள இளைஞர்கள் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதால் மக்கள் பீதியடைகின்றனர் என்று தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவை அனைத்தும் மனப்பீதியின் காரணமாக இடம்பெறுவதாகவும் எந்தவெரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நேரத்திலும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வலியுறுதுதியுள்ளார்.
அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காமினி நவரத்ன குறிப்பிட்டார்.
கச்சதீவில் இந்திய கொடியேற்ற முனைந்த 43 பேர் கைது.

கச்சதீவில் இந்திய கொடியை ஏற்றுவதற்காக சென்ற 40 பேர் இந்தியாவில் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையளவில் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதன்போது இந்து மக்கள் கட்சியின் மாநில பிரிவு தலைவர் அண்ணாத்துரை உட்பட்ட 43 பேர் கச்சதீவில் கொடியேற்றுவதற்காக படகுகளில் புறப்பட தயாராகினர்.
கச்சதீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு தொழில்செய்ய அனுமதிவேண்டும் என்று கோரியே இந்த கொடியேற்றல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அவர்களை தடுத்த தமிழக பொலிஸார் 43 பேரையும் கைதுசெய்தனர்.
இதேவேளை இந்து மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 600 படகுகள் மண்டபம் பகுதியில் இருந்து இன்று கடலுக்கு தொழில் நிமித்தம் செல்லவில்லை.
81 கோடி ரூபா கடன் சுமையால் திணறுகிறது இலங்கைப் போக்குவரத்துச் சபை.

இலங்கைப் போக்குவரத்துச் சபை பெரும் நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல நிறுவனங்களிற்கு நிலுவைத் தொகை மற்றும் ஊழியர் சேமலாப நிதிக் கொடுப்பனவு போன்றவை அடங்கலாக 81 கோடி ரூபாவுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
இந்த நிலைப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையில் முகாமைத்துவ சிக்கல் தலைதூக்கியுள்ளது எனவும், அரசினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் இல்லாது அதனைக் கட்டியெழுப்ப இயலாது எனவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பொதுப் போக்குவரத்துச் சேவை படிப்படியாக நலிவடைந்து வருவதாகவும் சங்கம் அவசர கடிதம் மூலம் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபை முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதியை  நேரில்  சந்தித்து காரணிகளைத் தெளிவுபடுத்த முயற்சிக்கப்பட்ட போதிலும் அந்தப் பேச்சுக்களில் பயன் ஏதும் கிட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கைப் போக்குவரத்துச் சபையில் மிக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஊழியர்களுக்குச் சட்டப்படி செலுத்த வேண்டியுள்ள ஓய்வுக்கான பணிக் கொடுப்பனவை பெற முடியாத நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் ஏராளமாக உள்ளன.
அத்துடன் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளவர்களுக்கு பணிக் கொடுப்பனவை  கூட பெற முடியாத நிலை உள்ளதாகவும் தொழிற் சங்கங்களின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ரூ. 12 கோடி செலுத்தி லண்டன் சென்ற 80 மாணவ, மாணவியர் நடுத்தெருவில்!

பிரிட்டனிலுள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் 80 பேர் அங்கு கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்சென்ற இரு நிறுவனங்களும் மாணவர் ஒருவரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா என்ற ரீதியில் 12 கோடி ரூபா வரையிலான தொகையொன்றை மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் நீர்கொழும்பிலுள்ள இரு வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே இவர்கள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களின் பிரதிநிதிகள் சிலர் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாகத் தூதரக அமைச்சு ஆலோசகரான சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து அது பற்றிய விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கும் சமிந்த குலரத்ன, பிரிட்டிஷ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கும் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பணம் செலுத்திப் பிரவேசித்த அந்த உயர் கல்வி நிறுவனம் காரணங்கள் எதனையும் தெரிவிக்காது திடீரென மூடப்பட்டதால் நாங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாணவர் பிரதிநிதி ஒருவர் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேற்படி இரு நிறுவனங்களும் தற்போதும் பிரிட்டன் கல்வி வாய்ப்புகள் தொடர்பாக மாணவர்களை அனுப்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ் பூதங்களாக தோன்றுவோருக்கு ஏழாண்டு கால சிறைத்தண்டனை.

கிறிஸ் பூதங்களாக தோன்றுவோருக்கு ஏழு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பிரதிபா மகாநாம தெரிவித்துள்ளார்.
மக்களை பீதிக்கு உள்ளாக்கி குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
இதேவேளை, கிறிஸ் பூதங்களாக தோன்றுவோர் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுவோர் தொடர்பில் 118 மற்றும் 119 ஆகிய அவசர அழைப்பு இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் போர் விமான கப்பலின் சோதனை ஓட்டம் வெற்றி.
போர் விமானங்களை தாங்கி செல்லும் சீனாவின் முதல் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது என அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்து உள்ளது.
300 மீற்றர் நீளம் உள்ள இந்த கப்பல் நாட்டின் வடகிழக்கு துறைமுகமான தாலியன் பகுதியில் நிறுத்தப்பட்டது. 5 நாட்கள் இந்த கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கடல்பகுதியில் சீனா ராணுவம் பலத்தை அதிகரிப்பதாக ஜப்பான் போன்ற அருகாமை நாடுகள் கவலை அடைந்து உள்ளன. இந்த போர் விமானக் கப்பல் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனா தற்போது மறுவடிவமைத்து சோதனை நடத்தி உள்ளது. துறைமுகத்தை வந்தடைந்த கப்பலைக் கண்டதும் ஊழியர்கள் வெடிகளை வெடித்துக் கொண்டாடினர்.
உலகிலேயே அதிக படை வீரர்களை கொண்ட ராணுவமாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் உள்ளது. இதன் ராணுவ நடவடிக்கைகள் மிக ரகசியமாகவே உள்ளன.
2011ம் ஆண்டு ராணுவ செலவு 0.7 சதவீதம் அதிகரித்து 9100 கோடி டொலராக இருந்தது என சீனா தெரிவித்து உள்ளது.
வன்முறை தாக்குதலின் விளைவு: பிரிட்டன் பிரதமர் தவிப்பு.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் கடந்த வாரம் பிரிட்டனில் ஏற்பட்ட வன்முறைகளை ஒடுக்குவதில் குளறுபடிகளோ, சீர்குலைவோ ஏற்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறார்.
வன்முறை தாக்குதல் நடவடிக்கை குறித்து அவர் அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் ஆலோசனை கேட்டதை தொடர்ந்து பிரிட்டிஷ் பொலிசாரும் பிரதமரை விமர்சித்து உள்ளனர்.
இந்த நிலையில் தமது செயல்பாடுகள் சரியானவை என்பதை விளக்க கமரூன் ஓக்ஸ்போர்டு தொகுதியில் உரையாற்றுகிறார்.
வன்முறையை ஒடுக்குவதில் காணப்பட்ட தாமதத்திற்கு பொலிசார் மற்றும் அரசியல் தலைவர்கள் பொது மக்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளனர். பிரதமர் கமரூனின் சட்ட ஒழுங்கு நிகழ்ச்சியை நான்கு பொலிஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
பொலிசாரின் ஆதரவை கமரூன் இழந்துவிட்டார் என ஒரு அதிகாரி விமர்சித்தார். இதற்கிடையே வன்முறைத் தாக்குதல் தொடர்பாக மொத்தம் 2800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1300 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 1000 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர் என உள்துறை அலுவலகம் தெரிவித்தது.
ஹிட்லரின் வெறியை அடக்க பெண் ஹோர்மோனை செலுத்த உலக நாடுகள் ரகசிய திட்டம்.
நாஜி படைத் தலைவரான ஹிட்லர் பயங்கரமான கொலை வெறித்தாக்குதல் மனநிலையில் இருந்தார். ஒரே நேரத்தில் பல ஆயிரம் யூதர்களை விஷ வாயு கூடத்தில் பூட்டி நச்சு வாயுவை பரப்பி கொலை செய்தார்.
அவர் போர் வெறியை ஒடுக்குவதற்கு பிரிட்டன் உள்பட உலக நாடுகள் ரகசிய திட்டம் தீட்டின. பெண்களிடம் மென்மைதன்மை ஏற்படுத்தக்கூடிய ஹோர்மோனை ஹிட்லரின் உணவில் கலந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
இந்த ஹோர்மோன் பெறும் நபர் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கும் சூழல் ஏற்படும். ஹிட்லரின் சகோதரி பவுலா வோல்ப் அண்ணன் ஹிட்லர் போலவே வெறிக்குணம் கொண்டவர் அல்ல, அமைதியாக காணப்படுவார். அவரைப் போல ஹிட்லரை அமைதிப்படுத்த வேண்டும் என திட்டம் தீட்டினர்.
இந்த ஹோர்மோன் மணம் இல்லாதது. எனவே இதனை உணவில் கலந்தால் அதை சாப்பிடுபவருக்கு அதைப்பற்றி தெரியாது. எனவே இந்த திட்டம் தீட்டப்பட்டது.
ஹிட்லரின் தங்கை 1920ம் ஆண்டு வியன்னாவில் செயலாளராக பணியாற்றினார். அவருக்கு 1945ம் ஆண்டு வரை ஹிட்லர் நிதியுதவி செய்து வந்தார்.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் பவுலாவை அமெரிக்க ஏஜென்ட்டுகள் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விடுவிக்கப்பட்டார். 1960ம் ஆண்டு வரை அவர் தனிமையில் இருந்து மரணம் அடைந்தார்.
இத்திட்டம் குறித்து கார்டிப் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் போர்டு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் செப்டம்பர் 20ம் திகதி வெளியிடப்படுகிறது.
மக்கள் போராட்டத்தின் எதிரொலி: ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டது.
ரசாயன தொழிற்சாலை அமைக்க உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியதால் அதை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற சீன அரசு ஒப்புக் கொண்டது.
சீனாவின் வடகிழக்கில் உள்ளது டேலியன் நகரம். இங்கு புஜியா கெமிக்கல் பிளான்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இங்கு பேராக்சிலீன் என்ற ரசாயனம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.
பாலியஸ்டர் பிலிம், பேப்ரிக்ஸ் பொருட்கள் தயாரிக்க இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் நச்சு வாயு கசியும் அபாயம் உள்ளது.
அதனால் மக்கள் உயிருக்கு ஆபத்து. பயிர்களும் நாசம் அடையும் என்று உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
தகவல் அறிந்து அங்கு மேயர் தாங் ஜுன் விரைந்து சென்று மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். தொழிற்சாலையை மூடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மக்கள் உறுதியாக கூறினர்.
இதையடுத்து வேறு இடத்துக்கு விரைவில் மாற்றுவதாக அதிகாரிகள் கூறினர். அதை ஏற்காத மக்கள் உடனடியாக இதற்கு தீர்வு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது.
முபாரக்கிடம் இன்று விசாரணை: மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது முபாரக் ராணுவத்தை ஏவினர். ராணுவம் நடத்திய தாக்குதலில் 850 பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டம் தொடங்கிய 17 நாட்களுக்கு பிறகு அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகினார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடக்கிறது. இதை தொடர்ந்து முபாரக்கும், அவரது மகன்கள் அலா, காமா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கெய்ரோவில் உள்ள ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கொன்று குவிக்க உத்தரவிட்டது தவிர ஆட்சியில் இருந்த போது ஊழல் செய்ததாகவும், முபாரக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் விசாரணை தொடங்கும் முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் விசாரணை தொடங்கியது. அப்போது தான் எந்த குற்றமும் செய்யவில்லை என முபாரக் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது எகிப்தின் முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்-அட்லி கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். போராட்டத்தின் போது 850 பேர் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். பண மோசடி விவகாரத்தில் ஏற்கனவே இவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவர் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது. அதில் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், பாதிக்கப்பட்டவர்களும் சாட்சியம் அளிக்க உள்ளனர். இதன் மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முபாரக்குக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆப்கன் கவர்னர் வீட்டின் மீது தலிபான்கள் தாக்குதல்: 22 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண கவர்னர் வீட்டின் மீது தலிபான் தற்கொலை படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க, இங்கிலாந்து கூட்டுப் படைகள் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு ஆப்கன் வீரர்களும் உதவியாக உள்ளனர்.
இவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் சமீப காலமாக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆப்கன் அதிபர் கர்சாயின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதில் 38 பேர் பலியாயினர். இந்நிலையில் ஆப்கன் பர்வான் மாகாண கவர்னர் அப்துல் பஷீர் சலாங்கி வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடந்தது.
கவர்னர் சலாங்கியின் வீடு காபூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சரிகார் பகுதியில் உள்ளது. இங்கு அலுவலகம், மற்ற துறை நிர்வாகிகளின் வீடுகளும் அமைந்துள்ளன. பாதுகாப்பு நிறைந்த இந்த வளாகத்துக்குள் தலிபான் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேர் நேற்று காலை 11 மணிக்கு திடீரென புகுந்தனர்.
காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வேகமாக வந்து வளாகத்தில் வெடிக்கச் செய்தனர். அந்த சந்தர்ப்பத்தில் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பாதுகாவலர்கள் உட்பட 22 பேர் பரிதாபமாக பலியாயினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து சலாங்கி நிருபர்களிடம் கூறுகையில்,"தாக்குதல் நடந்த போது நான் வீட்டுக்குள்தான் இருந்தேன். வீட்டில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் தாக்குதல் நடந்தது" என்றார். உடனடியாக உயரதிகாரிகளை கூட்டி பாதுகாப்பு குறித்து சலாங்கி தீவிர ஆலோசனை நடத்தினார்.
லிபிய நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை: கிறீன்ஸ் கட்சி குற்றச்சாட்டு.
லிபியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஜேர்மனி ராணுவம் பாலைவனப் பகுதியில் தவித்த 132 பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த பொதுமக்களில் 22 ஜேர்மானியர்களும் இடம்பெற்று இருந்தனர். பொதுமக்களை வேறு இடத்தில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மிக ஆபத்தானதாக அமைந்து இருந்தது.
ஜேர்மனி ராணுவத்தின் இந்த நடவடிக்கை குறித்து ஜேர்மனி அரசு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை. அதிபர் ஏங்கலா மார்க்கெல் இந்த விடயத்தை மறைத்து விட்டார் என கிறீன்ஸ் கட்சியின் அணி தலைவர் வோல்கர் பெக் குற்றம் சாட்டினார்.
ஜேர்மனி அரசு மேற்கொண்ட சுய அதிகார நடவடிக்கையை கண்டித்து கிறீன்ஸ் கட்சி அரசியலமைப்பு புகாரை ஜேர்மனியின் கார்ஸ்ருஷே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதை தவிர வேறு வழி எங்களுக்கு தெரியவில்லை என கிறீன்ஸ் கட்சித் தலைவர் கூறினார்.
ராணுவ ஓபரேஷன் மேற்கொள்வதற்கு முன்னர் நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்பது ஜேர்மன் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
உடனடி அபாயநிலை என்கிற சூழலில் அந்த ஓபரேஷன் நடவடிக்கைக்கு பின்னர் உடனடியாக நாடாளுமன்ற அமைதியை பெற வேண்டும். லிபியா பாலைவனப் பகுதியில் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்தாத நிலையில் மக்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் ஜேர்மனி அனுமதி பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபராக இம்ரான்கானுக்கு அதிக ஆதரவு: கருத்துக் கணிப்பில் தகவல்.
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் இம்ரான்கான். 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலககோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
அதோடு ஓய்வு பெற்றார். கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான்கான் அரசியலில் குதித்தார்.
1996ம் ஆண்டு அவர் தெரீக் இ இன்ஷாப் என்ற கட்சியை தொடங்கினார். 1997 தேர்தலில் அவரது கட்சி தோல்வியை தழுவியது. அதன் பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் இம்ரான்கான் முன்னணியில் திகழ்கிறார். பேரணி, தர்ணா போராட்டங்களை நடத்தி மக்களை அவர் பெரிதும் கவர்ந்து வருகிறார். தலிபான்களை நேரடியாக தாக்கி பேசுவதால் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்ரான்கானுக்கு பாகிஸ்தானில் அதிக ஆதரவு இருக்கிறது.
பாகிஸ்தானில் 2013ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கிறது. அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பாக தனியாக அமைப்பு ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் இம்ரான்கானுக்கு அதிக ஆதரவு இருந்தது. பாகிஸ்தான் அதிபராக அவருக்கு 77 சதவீதம் ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்பை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 11 சதவீத ஆதரவே உள்ளது. கிலானிக்கு 13 சதவீத ஆதரவு காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் வீரர் சுட்டுக்கொலை.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டுப்படை பிரிவில் பிரான்ஸ் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு காபிசா மாகாணத்தில் கலவரக்காரர்கள் நடத்திய தாக்குதலில் நேற்று ஒரு பிரான்ஸ் வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் ராணுவம் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை அங்கு 74 பிரான்ஸ் வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். பிரான்ஸ் வீரர் இறந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர் மரணம் அடைந்த செய்தி கேட்டு ஜனாதிபதி சர்கோசி ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் மற்றும் ஆப்கன் துருப்பினர் காபிசா பிராந்தியத்தில் தேடுதல் பணியை மேற்கொண்டபோது இந்த துயர நிகழ்வு ஏற்பட்டது. பிரான்ஸ் படையினர் பாதுகாப்பு பணியை ஆப்கன் படையினரிடம் அளிப்பதன் ஒரு பகுதியாக சோதனை நடந்த போது வீரர் கொல்லப்பட்டார் என பிரான்ஸ் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியா கெலனோவா ஹொட்டலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலனோவாவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நேற்று சுட்டதில் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு ஹொட்டலுக்கு வெளியே இருந்த காரின் மீது நடந்தது. இந்த தாக்குதலில் மொத்தம் 6 பேர் காயம் அடைந்தனர் என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என துவக்க கட்ட தகவல்கள் தெரிவித்தன.
தாக்குதலில் ஒருவர் மரணம் அடைந்ததை ஆர்.சி.எம்.பி பொலிசாரும் உறுதிப்படுத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 38 வயது ஜோனதன் பாகன் மரணம் அடைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவலை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.
உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணி அளிவில் துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கி ஏந்திய 2 நபர்கள் டெல்டா கிராண்ட் ஹொட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது சரமாரியாக சுட்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
துப்பாக்கிகள் தானாக இயங்கும் ஆட்டோமெடிக் ரக துப்பாக்கிகள் என நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் கூறினர். துப்பாக்கி தாக்குதலை நடத்திய நபர்கள் பின்னர் காரில் ஏறி தப்பிச் சென்றார்கள்.
தாக்குதலில் இறந்த நபர் கெலனோவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா ஆம்புலன்ஸ் சேவையினர் தெரிவித்தனர்.
அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளருக்கான ஓட்டெடுப்பு: மிஷேல் முன்னிலை.
2012 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராகும் வாய்ப்புக்கான வாக்கெடுப்பில் மிஷேல் பாக்மன் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இப்போதைய அதிபர் பராக் ஒபாமா ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அவரது 4 ஆண்டு பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது.
நிதி நெருக்கடி, கடன் சுமை, உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக அவருக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் ஒபாமா மீண்டும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும்.
இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கு பணி தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு அயோவா மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 17,000 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
ஆரம்ப கட்ட வாக்குப் பதிவில் குடியரசுக் கட்சியினர் அளித்த வாக்குகளின்படி மின்னசோட்டாவின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் மிஷேல் பாக்மன் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 4,823 வாக்குகள் கிடைத்தன. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரான் பால் 4,671 வாக்குகளுடன் 2வது இடத்திலும், டிம் பாலென்டி 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட 10 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மாகாண வாரியாக கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்றவர் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.
அலாஸ்கா மாகாண முன்னாள் கவர்னர் சாரா பாலின் அதிபர் தேர்தலில் போட்டியிட இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் அவர் தம்மை வேட்பாளராக அறிவிக்கவில்லை.
டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அடுத்த சுற்றில் இவ்விருவரும் பங்கேற்கும் வாய்ப்புக்கள் உள்ளது.
சிரிய கடற்படை தளத்தில் ராணுவம் தாக்குதல்: 24 பேர் பலி.
சிரிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை குறிவைத்து ராணுவம் தாக்குல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு லடாகியா நகரை நோக்கி வந்த கடற்படை கப்பல்கள், கப்பலில் இருந்த படி ராக்கெட்டுகளையும், குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
இது தவிர ராணுவ பீரங்கிகளும் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் பொதுமக்களில் 24 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு கடற்கரை நகரமான பானியாஸ் நகரிலும் கடற்படையினர் இயந்திர துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இப்பகுதிகளில் தகவல்தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ள ராணுவத்தினர் அங்கு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தும் வருகின்றனர்.
ஒபாமா அரசை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: டிம் பாலென்டி.
அமெரிக்காவுக்கு இப்போது என்ன தேவை என்று அதிபர் பராக் ஒபாமாவுக்குத் தான் புரியவில்லை. அவர் தலைமையிலான அரசைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று டிம் பாலென்டி கூறியுள்ளார்.
அடுத்து நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகிப் போட்டியிட அவர் விரும்புகிறார். ஆனால் அயோவா மாநிலத்தில் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற வாக்களிப்பில் அவர் 3வது இடத்துக்குத் தான் வந்தார்.
டிம் பாலென்டியின் பேச்சு வருமாறு: மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா ஆழ்ந்து கிடக்கிறது. அமெரிக்க நாட்டின் பாரம்பரியத்துக்கு ஏற்ப இதை எப்படித் தீர்க்க வேண்டும் என்ற வழி தெரியாமல் திகைத்து நிற்கிறார் ஒபாமா.
அவர் தலைமையிலான அரசு இந்த 4 ஆண்டுகளோடு பதவியிலிருந்து அகற்றப்பட்டாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும். அவர் மீண்டும் அதிபராக வாய்ப்பு தரக்கூடாது.
அமெரிக்காவுக்கு இப்போது என்ன தேவை என்று எங்களுக்கு (குடியரசுக் கட்சியினருக்கு) தெரியும், பராக் ஒபாமாவுக்குத்தான் தெரியவில்லை. கடுமையான காற்று அடிக்கும்போது நிலத்துக்கு எருவைத் தூவ நினைக்கும் விவசாயியைப் போல நடந்துகொள்கிறார்.
இந்த நாள் குடியரசுக் கட்சிக்கான நாள். ஒபாமா தனது பதவிக்காலத்துடன் நடையைக் கட்ட வேண்டும் என்று கூறுவதற்கான நாள் இது. குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.
அமெரிக்கர்கள் கடுமையான உழைப்பாளிகள், ஆனால் ஒபாமா அரசின் தவறான முடிவால் இன்று மிகவும் சோதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர். எங்கள் முதுகில் ஏறி நின்று சவாரி செய்தது போதும், கீழே இறங்குங்கள் என்று அவரைப் பார்த்துக் கூறும் நேரம் வந்துவிட்டது.
அமெரிக்கா தன்னுடைய கடன் சுமையிலிருந்து மீண்டுவிடும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஒபாமா கூறுகிறார். அதற்கும் முன்னதாக தன் நாட்டு மக்கள் மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும். நாட்டை முன்னுக்குக் கொண்டு செல்லும் வழி சுலபமானதல்ல, அதே சமயம் அது சிக்கலானதும் அல்ல.
இந்த நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நெருக்கடிகள் ஏற்பட்ட சமயத்தில் எல்லாம் தன்னுடைய சுயமுயற்சியாலேயே அமெரிக்கா அவற்றிலிருந்து மீண்டிருப்பதை அறியலாம். முதலில் நாம் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
அடுத்தபடியாக நம்முடைய வருவாய் எவ்வளவோ அதற்கு ஏற்பதான் நாம் செலவு செய்தாக வேண்டும். அமெரிக்காவின் தனித்தன்மை எதுவென்று புரிந்து கொள்ளாமலே உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று மன்னிப்பு கேட்கும் தொனியில் அவர் பேசுகிறார்.
நான் அதிபராக இருக்கும் வரையில் இதைத்தான் செய்வேன் என்று உறுதியாக அறிவித்து அதன்படி நடக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய (ராணுவ) பலத்தைக் கொண்டு அமைதியை நிலைநாட்டுவோம் என்றார் டிம் பாலென்டி.
பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று குண்டுவெடிப்பு: 20 பேர் பலி.
பாகிஸ்தானின், பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஹொட்டலில் குண்டு வெடித்ததில் 13 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தேரா அல்லா யார் நகரில் உள்ள இரண்டடுக்கு ஹொட்டலின் கீழ் தளத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் உடல் சிதறி பலியாகினர்.
ஹொட்டல் மட்டுமல்லாது அருகே இருந்த கட்டடங்களும் தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பிரிட்டன் கலவரத்தில் ஈடுபட்டதால் ஒலிம்பிக் தூதுவராகும் வாய்ப்பை இழந்த சிறுமி.
இங்கிலாந்து நாட்டில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவிற்கு லண்டன் மாநகரம் உள்பட பல்வேறு இடங்களில் பயங்கரமான வன்முறை ஏற்பட்டது.
இதில் பல கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கரையாக்கப்பட்டன. மேலும் கலவரக்காரர்கள் தாங்கள் சூறையாடிய கடைகளிலிருந்து பொருட்களை அள்ளிச்சென்றனர்.
இது தொடர்பாக 500 பேரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர். இந்த கலவரத்தில் செல்சி ஐவ்ஸ்(வயது 18) என்ற சிறுமியும் ஈடுபட்டுள்ளார்.
கலகத்தில் ஈடுபடுதல், திருடுதல் மற்றும் பொலிசார் கார் மீது செங்கற்களை வீசுதல் ஆகிய செயல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த செயல்களனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. எனவே இவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிகிறது.
இதில் விஷயம் என்னவென்றால் அடுத்த வருடம் நடைபெறும் 2012 ஒலிம்பிக் போட்டி விளையாட்டுகளுக்கான தூதுவராக இந்த சிறுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மாதந்தோறும் சராசரியாக 8 வங்கிகள் மூடப்படுகிறது.
உலகளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் எதிரொலியாக அமெரிக்காவில் சராசரியாக மாதந்தோறும் 8 வங்கிகளுக்கு மேல் மூடப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை 64 அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாதம் மட்டும் இதுவரை 3 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
பெடரல் டிபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(எப்.டி.ஐ.சி) என்னும் நிறுவனம் சுமார் 8000 அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்ததை அடுத்த அமெரிக்காவின் பெரும்பாலான வங்கிகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு அதிகபட்சமாக 157 அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF