ஆப்கனைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெருமையோடு அணியும் டர்பன் எனப்படும் தலைக் குல்லாய்களுக்கு உரிய கண்ணியத்தைக் குலைத்துவிடாதீர்கள் என தலிபான்களுக்கு அதிபர் ஹமீத் கர்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆள்களை சோதனையிடும் பாதுகாப்புப் படையினர் இதுவரை ஆடவர்களின் தலைக் குல்லாய்களையும் மகளிரின் பர்கா என்று அழைக்கப்படும் பர்தாவையும் அகற்றுமாறு கோருவதில்லை.
ஆனால் கடந்த மாதத்தில் நடந்த இரண்டு பெரிய தாக்குதல்களை நடத்திய மனித வெடிகுண்டுகள் "டர்பன்" என்று அழைக்கப்படும் தலைக் குல்லாய்க்குள் தான் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை மறைத்துக் கொண்டுவந்து வெடிக்க வைத்து பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சமீபகாலமாக ஏராளமான பெண்களைப் பெண் காவலர்களை விட்டு சோதனை செய்த போது தான் அவர்கள் பெண்கள் அல்ல என்பதும் பர்தாவுக்குள் மறைந்துவந்த தலிபான்கள் என்பதும் அவர்கள் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.
தலிபான்களின் கட்டளைகளுக்கு மதப் பூச்சு பூசப்படுவதால் ஆப்கானிஸ்தான் ராணுவம், பொலிஸ் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்கூட அவற்றுக்குக் கட்டுப்படுகின்றனர்.
பொது இடங்களில் முஸ்லிம் மகளிர் பர்தா அணியாமல் வரக்கூடாது, அவர்களுடைய முகத்திரையை மற்றொரு ஆண் விலக்கிப் பார்க்கக்கூடாது என்பதால் முஸ்லிம் பெண்களைப் போல பர்தா அணியும் தலிபான்களைப் பிடிப்பதும் பிறகு சோதிப்பதும் இடராக இருக்கிறது.
அதற்காக போகிற எல்லா பெண்களையும் சோதனை போடுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்று கர்சாய் உணர்ந்திருக்கிறார். தலிபான் தீவிரவாதிகள் புனிதமான இந்த முஸ்லிம் மாதத்தில்கூட ஆப்கானிஸ்தானத்து ராணுவத்தையும் நேட்டோ படைகளையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
எனவே ஹமீத் கர்சாய் தன்னுடைய உதவியாளர் ஹமீத் எல்மி மூலம் உலேமா ஷூரா என்கிற உலேமாக்களின் பேரவைக்கு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
ஹமீத் கர்சாயின் சகோதரர் அகமது வாலி கர்சாய் அவருடைய உதவியாளராலேயே படுகொலை செய்யப்பட்டார். இதற்காக துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் தலிபான் தீவிரவாதி ஒருவரும் வந்துவிட்டார். அவர் குல்லாயில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தார். அதில் ஏராளமானோர் இறந்தனர், படுகாயம் அடைந்தனர்.
அதே போன்ற சம்பவம் காந்தஹார் நகர மேயர் இறந்தபோதும் நடந்தது. அப்போதும் துக்கம் கேட்க வந்தவர்கள் தலையிலிருந்த குல்லாயில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துதான் கொன்றுள்ளனர்.
பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது, பொது இடங்களில் புர்கா அணியாமல் வரக்கூடாது, ஆடவர்களுடன் பேசக்கூடாது, ஆடவர்கள் சொல்லை மீறக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கும் தலிபான்கள் அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தத் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.