Sunday, August 28, 2011

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - (முற்றும்)


ருடால்ப் எல்மர்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்விஸ் வங்கிகளில் ஒரு கணக்குப்பிள்ளையாக, அதிகாரியாக பின்னர் மேலாளராக முட்டை வடிவக் கண்ணாடியை மூக்கு நுனியில் ஊஞ்சலாட விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த ருடால்ப் எல்மர் பின்னாளில் இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு பிரபலமடைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல நூற்றாண்டுகளாக ஸ்விஸ் வங்கிகள், 'ரகசியம்' என்ற ஒற்றைச் செங்கலில் கட்டியெழுப்பியிருந்த உலகின் மிகப்பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை மிக அமைதியாக, நிதானமாக, அழகாக, அற்புதமாக, சிறுகச் சிறுகச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார் எல்மர்.


கடைசியாக ஜூலியஸ் பேர் (julius baer) வங்கியின் கேமன்ஸ் தீவுகள் கிளையில் உயரதிகாரியாக (Chief Operating Officer) பணியாற்றிக் கொண்டிருந்தார் எல்மர். அவர் நினைத்திருந்தால் அழகிய வளைவுகள் நிறைந்த கடற்கரையில் வார இறுதியில் காற்று வாங்கி, ரம்மியாக வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பதவிகளுக்கு முன்னேறிய எல்மருக்கு ஓரளவுக்கு மேல் பதவி உயர்வு பெற்ற பிறகு தான்,  'ரகசியம்' என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தினை பாதுகாக்கும் பூதங்களிடம் தான் பணிபுரிவது உறைத்தது. அப்பாவியான எல்மர்.ஸ்விஸில் இருக்கும் தலைமையகத்துக்கு ஓடினார், நம் வங்கியின் ரகசியத்தன்மையை இவ்வாறு வரி ஏய்ப்பு செய்யும் கறுப்புப் பண முதலைகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆவேசத்துடன் புகார் செய்த எல்மரைப் பார்த்து,சிரித்தார்கள். 

விளைவு எல்மர் வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்டார், வங்கியின் விதிமுறைகளை மீறியதாகவும், ரகசியத் தகவல்களைத் தரக்கோரி மற்ற ஊழியர்களை மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த எல்மர், ஜூலியஸ் பேர் எனும் ஆக்டோபசிடம் தனியாகப் போராடினால் சில்லுத் தெரித்துவிடும் என்றுணர்ந்து நேரே மொரிஷியஸ் சென்று என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு சில வருடங்கள் யோசித்தார். பின்னர் திடீரென லண்டன் மாநகரில் ஒரு அதிகாலை, சுபவேளையில் கால்பதித்தார். அவர் நேரே சென்று சந்தித்தது நமக்கும் மிகவும் பழக்கமான விக்கிலீக்ஸ் ஜூலியன் அசான்ஞ்.
ஜூலியனுடன், எல்மர் - பத்திரிக்கையாளர் சந்திப்பில்



விக்கிலீக்ஸின் கடந்த கால நடவடிக்கைகளைப் பார்த்த எல்மருக்குமிகப்பெரிய வில்லன்களிடம் மோதிக் கொண்டிருக்கும் ஜூலியனுக்கு ஜூலியஸ் பேர் வங்கி ஒரு கொசு என்று தோன்றியதில் ஆச்சர்யமில்லை. ஏற்கனவே ஸ்வீடனில் அல்வா கொடுத்த விஷயத்தில் தன்னை அலைக்கழிக்கும் ஐரோப்பிய யூனியனின் மேல் உஷ்ணப் புகை விட்டுக் கொண்டிருந்த ஜூலியனுக்கு, எல்மர் தேடி வந்த தேவதையாகத் தெரிந்தார். எவ்வளவோ பார்த்து விட்ட ஜூலியனுக்கு இதைப் பார்க்கத் தெரியாதா?. எலமருக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து அமைதியின் மறு உருவமான எல்மரை உலகை ஏய்த்து கருப்புப் பணம் குவிக்கும் பணக்காரர்களை எதிர்த்து வைத்து, 1997 முதல் 2002 காலகட்டத்தில் முறைகேடாக ஜூலியஸ் பேர் வங்கியில் முதலீடுகள் செய்த சுமார் 2000 வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளை எல்மரிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜூலியன். அடுத்த சில நாட்களில் ஸ்விஸ் வந்திறங்கிய எல்மர் கைது செய்யப்பட்டுப் பின் பிணையில் வெளிவந்து தன் மீதான வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

தான் எப்படியும் ஸ்விஸ் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட போகிறோம் என்று தெரிந்ததும் தன்னிடமிருக்கும் தகவல்கள் மூலம் உலக மக்களுக்கு ஸ்விஸ் வங்கிகளின் மர்மக்குகைகளுக்குள் என்ன நடக்கிறதென்பதை எப்படியாவது தெரிவித்து விட வேண்டுமென்பதுதான் எல்மரின் குறிக்கோள். எந்த பின்விளைவுகள் குறித்தும் ஒரு நொடி கூட அலட்டிக் கொள்ளாமல் எங்களிடம் இதுவரை கிடைத்த ரகசியங்கள் எப்படிக் கையாளப்பட்டதோ அதன்படி எல்மரின் தகவல்களும் சரிபார்க்கப்பட்டு அடுத்த சில வாரங்களில் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்று ஜூலியன் சூளுரைத்து முழுசாக மூன்று மாதங்களாகி விட்டன. இந்நேரம் ஜூலியனுக்குத் தெரிந்திருக்கும் எப்பேர்ப்பட்ட இடியாப்பத் தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம், அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது. எனினும் ஜூலியனும், எல்மரும் அடுத்தடுத்து அளித்த பேட்டிகளில் எந்த நேரமும் விக்கிலீக்ஸ் விளக்கிலிருந்து பூதம் கிளம்பலாம் என்றே தெரிகிறது. எப்படியும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக வந்து விடும் என்று உலகமே விக்கிலீக்ஸ் தளத்தின் முதல்பக்கத்தினை அழுத்தி, அழுத்தி விரலைத் தேய்த்துக் கொண்டிருக்கிறது. 
உலக வரலாற்றில் தனிச்சிறப்பும், பாரம்பரியமுமிக்க ஸ்விஸ் வங்கிகளின் பெருமைகள் இரண்டு குறுந்தகடுகளில் ஜூலியனின் மடிக்கணினியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவை வெளியில் உலவ வரும் நேரத்திற்காக கோரப்பசியுடன் ஊடகங்கள் காத்திருக்கின்றன. நாமும் காத்திருப்போம். 
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF