Tuesday, August 30, 2011

இன்றைய செய்திகள்.

மர்ம மனிதனின் எதிரொலி : கிறிஸ் விற்பனையின் போது நிபந்தனை?

இலங்கையில் கிறிஸ் விற்பனை செய்யும் போது நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தேவையானளவு கிறிஸை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித தடையும் காணப்படவில்லை.
எனினும், தற்போது கிறிஸ் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கொள்வனவு செய்வோரின் அடையாள அட்டைகளை பார்வையிடுவதாகவும், அதில் பிரதிகளை எடுத்து வைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ் பூத சர்ச்சை காரணமாக இவ்வறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் அநேகமான பகுதியில் கிறிஸ் கொள்வனவின் போது சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேசத்தின் ஆதரவை திரட்டும் நோக்கில் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாடுகளுக்கு விஜயம்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவினை திரட்டும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக அமைச்சர் பீரிஸ் நேற்று வட கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
போர்க்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களிலிருந்து விடுபடும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக எதிர்வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு வலுவான ஆதரவினை திரட்டும் வகையில் அமைச்சர் பீரிஸ் பல நாடுகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த விஜயம் பற்றி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரிட்டன், ஜோர்தான், கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமைச்சர் பீரிஸ் விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா, அமெரிக்கா ஆதரவாக செயற்படும் அபாயம்.

செப்ரம்பர் மாதம் நடுப்பகுதியில் ஜெனிவாவில் இடம்பெறவிருக்கின்ற சர்வதேச மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்கப்படுவதான அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஆதரவாக இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் செயற்பட காத்திருப்பதாக ஜே.வி.பி. எச்சரித்துள்ளது. 
உள்நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையால் இலங்கை சர்வதேச தீர்ப்புகளுக்கு உட்படுத்தப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இலங்கை மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் கூறுகையில்,
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மனித உரிமைகள் போர் குற்றச்சாட்டுக்கள் முக்கியமானவை. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளும் அணுகுமுறைகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக விரல்களை நீட்டி குற்றச்சாட்டுக்களை சுமத்தும்போது அதற்கு முறையாக இராஜதந்திர ரீதியில் பதிலடி கொடுக்காது உள்நாட்டில் மேடைகளில் வீர வசனங்களையே அரசாங்கம் பேசி வந்தது. அண்மைக் காலமாக இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் அழுத்தங்களை கொடுத்து வந்தன.
இதனை பொருட்படுத்தாமல் அரசாங்கம் இருந்தமையால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் அழுத்தம் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவோ அமெரிக்காவோ எந்தவொரு சூழலிலும் இலங்கைக்கு உதவி செய்யாது மாறாக அழுத்தங்களையும் பிரேரணைகளுக்கு ஆதரவையுமே வழங்கும்.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற முற்பட்ட போது அதற்கு எதிரான நாடுகள் இன்று இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் நிலையே காணப்படுகின்றது. உலக நாடுகளுடன் நட்புறவை பாதுகாத்துக் கொள்ளாது அரசாங்கம் வீண் பகைகளையே தேடிக் கொண்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீடிப்பு என்பன மனித உரிமைகளுடன் நேரடியாக தொடர்புபட்ட சட்டங்களாகும். சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள், இடம்பெயர்ந்த மக்களின் யுவதிகள், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகள் உட்பட உள்நாட்டில் இடம்பெறும் ஊடக அடக்குமுறை என்பன இலங்கையின் சூழலை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சர்வதேசம் பல சந்தர்ப்பங்களை இலங்கைக்கு கொடுத்திருந்தது. மனித உரிமைகளை பாதுகாப்பது ஜனநாயக அரசின் கடமை என்றாலும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தவில்லை.
எவ்வாறாயினும் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இலங்கைக்கு மேலும் அழுத்தங்களையும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள நேரிடும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் அமர்வு இலங்கைக்கு சாதகமாக அமையாது எனக் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா புதிய கட்சி அமைத்து அரசியலில் பிரவேசிக்க திட்டம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார‌நாயக்க குமாரதுங்கவுடன் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் புதிய கட்சி ஒன்று அமைப்பது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் அரசியலில் ஈடுபட நாட்டம் கொண்டுள்ளமை காரணமாக அவர் ஒரு புதிய கட்சியின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் அவரது தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்று புதிய கட்சி தொடர்பில் ஆராய்ந்தனர் என மேலும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கு கொழும்பு சட்டக்கல்லூரி கலாநிதி பட்டம் வழங்கி கௌரவம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, கொழும்பு சட்டக்கல்லூரி கௌரவ கலாநிதி பட்டமொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு 137 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்வுகளின் போது இந்த விசேட கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் தொடர்பில் பரிபூரண அறிவுடையவர் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் சட்ட முதுமாணிப் பட்டமொன்றை கொழும்பு சட்டக் கல்லூரி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு சட்டக் கல்லூரியின் நூறாவது மாணவர் குழுவில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியினால் நாட்டின் சட்டத்துறைக்கு ஆற்றப்பட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது ஜனாதிபதிக்கு இந்த விசேட கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களின் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்ட உயர் பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க ஆபரணம் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த சொத்துக்களை கொள்ளையிட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு எதிராகவே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெறுமதி வாய்ந்த சொத்துக்களை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மோசடியான முறையில் அபகரித்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த குறித்த உயர்  பொலிஸ் அதிகாரி இன்று, சட்டத்தரணி ஒருவரின் ஊடாக நீதிமன்றில் ஆஜரானார்.
குறித்த  பொலிஸ் அதிகாரியை நாளை வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னேஸ்வரம் பத்திரகாளி கோயில் மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

இலங்கையில் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வரும் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டது. 
இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த பௌத்த பதனம என்ற அமைப்பு உட்பட 14  பெளத்த அமைப்புகள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலிய ரத்ன தேரர், அரசிடமிருந்து தகுந்த அனுமதி பெறப்படாமல் செய்யப்படும் இந்த மிருக பலி மூலம் மற்றைய மதத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்.
தடை விதிக்க மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ரத்ன தேரர் கூறினார்.
அக்டோபர் 14ம் திகதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யும் அதிகாரம் எனக்கில்லை! 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரையே அணுக வேண்டும் ஜெயலலிதா!

03 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்யலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி அவர் மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். ஒருவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால், அதில் மாநில முதல்வரால் தலையிட முடியாது.
தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ள அந்த மூவரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அரபு நாடுகள் கூட்டமைப்பு முயற்சி.
சிரியாவில் அதிபர் அல் பஷாருக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் ஆத்திரமுற்ற அதிபர் ராணுவத்தைக் கொண்டு மக்களை அடக்குவதில் தீவிரம் காட்டுகிறார்.
இந்த நிலையில் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர சமரசத் திட்டம் ஒன்றை அரபு லீக் அமைப்பு தயாரித்திருக்கிறது. இது தொடர்பாக அதிபர் பஷாரிடம் பேச சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸக்கு குழுவொன்று செல்கிறது.
அரபு லீக் அமைப்பின் தலைவர் நபில் அல்-அராபி இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். அரபு லீக் குழுவை அனுப்புவது என்ற முடிவை எகிப்து தலைநகர் கெய்ரோவில் சனிக்கிழமை சந்தித்த அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டாக எடுத்தனர். இந்தக் குழு எந்த நாளில் டமாஸ்கஸ் செல்லும் என்று அறிவிக்கப்படவில்லை.
சிரிய அரசு எச்சரிக்கை: அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டாம், முக்கிய நகரங்களின் பிரதான வீதிகளிலும் நாற்சதுக்கங்களிலும் கூடி நிற்க வேண்டாம், ராணுவ வாகனங்கள் செல்லும் வழியில் வழிமறிக்க வேண்டாம், அரசு கட்டடங்களையும் சொத்துகளையும் சேதப்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை சிரிய அரசு எச்சரித்திருக்கிறது.
இந்த எச்சரிக்கையைப் பொருள்படுத்தாமல் நாட்டின் எதிரிகளோடு கைகோத்துச் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கையை ராணுவம் எடுக்கும், பிறகு வருந்திப் பயன் இல்லை என்று சிரிய அரசு அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. சானா என்கிற செய்தி நிறுவனத்தின் வாயிலாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து அரசு இன்னமும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கிவரவில்லை என்று தெரிகிறது. அரசை எதிர்ப்போரும் தங்களுடைய முயற்சிகள் வெற்றிபெறும்வரை போராடுவது என்ற முடிவோடு இருக்கின்றனர்.
வலைதளங்களில் விடுக்கப்படும் அழைப்பை நம்பி வீதிக்கு வந்து போராடாதீர்கள், அதன் பிறகு ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்றும் அரசின் எச்சரிக்கை நீள்கிறது.
மக்களுக்கு அழைப்பு: இதற்கிடையே "சிரியப் புரட்சி 2011'' என்ற அமைப்பு அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தேவாலயங்களிலும் மசூதிகளிலும் பிரார்த்தனை செய்யுமாறு தங்களுடைய ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
"முழுச் சுதந்திரம் அடைந்தே தீருவோம், ஆட்சிக் கட்டிலிலிருந்து இறங்கி மக்களுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள், இரவைப் பகலாக்குவேன் என்று இனி நீ சொன்னாலும் உன்னுடைய ஆட்சி எங்களுக்குத் தேவையே இல்லை" என்று அதிபர் பஷாருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்து கிளர்ச்சியாளர்கள் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்.
லிபிய தலைநகரை கைப்பற்ற போராட்டக்காரர்கள் தீவிரம்.
லிபியத் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்ற அரசு எதிர்ப்புப் படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக ஓய்திருந்த அவர்கள் சனிக்கிழமை இரவில் இருந்து மீண்டும் சண்டையைத் தொடங்கியுள்ளனர்.
திரிபோலியில் சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து துப்பாக்கிச் சுடும் சப்தமும், கையெறி குண்டு வெடிக்கும் சப்தமும் கேட்கிறது. கடாபி படையினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிபோலியில் கடாபியின் முக்கிய ராணுவத் தளத்தைக் கைப்பற்றிவிட்டதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், இதற்கு மேலும் கடாபியால் தப்ப முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கடாபி தரப்பினர் இதை மறுத்துள்ளனர். தங்களது படையினர் எதிர்ப்பாளர்களை வீழ்த்தத் தொடர்ந்து போராடுவதாகவும், இந்த நிமிடம் வரை திரிபோலி தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
கடாபியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இதனால் அவரும், அவரது கூட்டாளிகளும் முன்வந்து சரணடைந்துவிட வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு உடனடியாக எவ்விதத் தண்டனையும் வழங்கப்படாது. அவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்று அரசு எதிர்ப்புப் படையின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீல் கூறியுள்ளார்.
மேலும் திரிபோலியில் நடைபெற்று வரும் கடும் சண்டையால் கடாபி கோபம் அடைந்துள்ளார். மக்களுக்கு குடிநீர், மின்சாரம் வழங்குவதில் தடை ஏற்படுத்தி வருகிறார். இதனால் திரிபோலி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோலியில் மருந்துப் பொருள்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. திரிபோலி மக்களுக்கு உடனே மருந்துகள் கிடைக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரிபோலி மக்கள் பெட்ரோல் கிடைக்காமல் கடந்த சில தினங்களாகக் கஷ்டப்பட்டு வந்தனர். அவர்களுக்கு உடனடியாக 3,0000 டன் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அரசு எதிர்ப்புப் படையின் மற்றொரு தலைவரான மஹ்மூத் ஷமாம் தெரிவித்துள்ளார்.
திரிபோலியில் நிலைமை மோசமடைந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பிற நகரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர். அங்கு வசிக்கும் எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது நாடுகளுக்கு திரும்புகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே லிபியாவில் பொதுமக்கள் மீது கடாபி படையினர் குறிவைத்து தாக்குதல் தொடுத்து வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு ஒன்று குற்றம்சுமத்தியுள்ளது. சமீபத்தில் 17 சிவிலியனை கடாபி படையினர் கைது செய்து சுட்டுக்கொன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளது.

வெனிசுலா அதிபருக்கு மூன்றாவது முறையாக புற்றுநோய் சிகிச்சை.
வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் புற்றுநோய் காரணமாக அவதிப்படுகிறார். கடந்த ஜூன் மாதம் புற்றுநோய் கட்டி கியூபாவில் அகற்றப்பட்டது.
அதையடுத்து இரண்டு கீமோதெரபி சிகிச்சை அங்கு மேற்கொள்ளப்பட்டது. சாவேசுக்கு மூன்றாவது முறை கீமோதெரபி சிகிச்சை வெனிசுலா தலைநகர் காரகாசில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை திருப்தியாக உள்ளது என சாவேஸ் தெரிவித்தார்.
புற்றுநோய் செல்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாவேஸ் புற்றுநோயால் பாதித்து இருப்பது வெனிசுலா அரசியலில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கி உள்ளது.
சனிக்கிழமை அரசு தொலைக்காட்சியில் சாவேஸ் ஆற்றிய உரையில்,"கியூபா மற்றும் வெனிசுலா மருத்துவர்கள் எனக்கு மேலும் ஒரு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்" என்றார்.
இறப்பதற்கு இது நேரமல்ல. இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது என மேலும் கூறினார்.
அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம்.
பின்லேடன் மரணத்திற்கு பின்னர் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் இரண்டாவது புதிய தலைவராக இருந்த அதியா அப்துல் ரகுமான் பாகிஸ்தானில் நேற்று கொல்லப்பட்டார்.
43 வயதான அதியா லிபியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். பின்லேடன் மே மாதம் கொல்லப்பட்ட பின்னர் அல்கொய்தாவின் இரண்டாவது பெரிய தலைவராக அப்துல் ரகுமான் உருவெடுத்தார்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு தற்போதைய தலைவராக எகிப்தைச் சேர்ந்த அய்மன் அல் ஜவாஹிரி உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ரகுமான் கொல்லப்பட்ட தகவல் அல்கொய்தா அமைப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்ட இடத்தில் அமெரிக்க பொலிசார் கைப்பற்றிய ஆவணங்களை பார்த்த போது சமீப ஆண்டுகளாக அப்துல் ரகுமான் அல்கொய்தாவின் முக்கிய துணைத் தலைவராக இருந்தது தெரியவந்துள்ளது.
அப்துல் ரகுமான் வழியாக உலகம் முழுவதும் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பின்லேடன் தகவல் அனுப்பி வந்தார்.
அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்பட்ட 10வது நினைவு தினம் செப்டம்பர் மாதம் 11ம் திகதி வருகிறது. அந்த நாளில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்துள்ளது.
ஆப்கனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி.
ஆப்கனில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மற்றும் ஆப்கன் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆப்கனில் இருந்து அமெரிக்கா தனது படைகளை படிப்படியாக குறைத்து வருகிறது. இதனால் தீவிரவாதிகளின் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள உம் அல் குரா மசூதியில் நேற்று மாலை தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் திடீரென உள்ளே புகுந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதில் மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த எம்.பி.காலித் அல் பதாவி உட்பட 28 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாயினர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தகவலை ஆப்கன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடாபியின் சொந்த ஊர் சுற்றி வளைப்பு: புரட்சிப் படைகள் தீவிரம்.
லிபியா அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ள மக்களின் புரட்சி படை சில நாட்களுக்கு முன்பு தலைநகர் திரிபோலியை கைப்பற்றியது.
அதன் முலம் கடாபியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் இன்னும் சில நகரங்கள் கடாபியின் ஆதரவு பெற்ற ராணுவம் வசம் உள்ளது.
எனவே அவற்றையும் கைப்பற்றும் முயற்சியில் புரட்சி படை தீவிரமாக உள்ளது. திரிபோலியை தொடர்ந்து பாப்கல்- அஷிசியா மற்றும் பின் ஜவா என்ற நகரையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரையும் தங்கள் வசமாக்க தீவிரமாக உள்ளனர். இதற்காக சிர்த் நகரை புரட்சி படை சுற்றி வளைத்துள்ளது.
ஆனால் அதை தக்க வைத்து கொள்ள கடாபி ராணுவமும் எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இருந்தும், அந்த நகரமும் விரைவில் தங்கள் வசமாகும் என புரட்சிப்படையின் கமாண்டர் மொகமத் அல் போர்சியா தெரிவித்துள்ளார்.
திரிபோலியில் உள்ள கடாபியின் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை புரட்சி படையினர் விடுத்துள்ளனர்.
இருந்தும் இன்னும் 50 ஆயிரம் பேரை காணவில்லை என கூறப்பட்டுள்ளது. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. தனது அதிகாரம் பறிபோய் புரட்சி படையினரிடம் சிக்கி விடுவோம் என்ற பயம் கடாபிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தனது அதிகாரம் பரவலாக்கல் குறித்து பேச்சு நடத்த போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக புரட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையை கடாபியின் மூத்த மகன் ஷாதி நடத்துவார் என்று அவர் கூறினார். இதை கடாபியின் மகன் ஷாதி ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் இதற்கு புரட்சியாளர்கள் மறுத்துவிட்டனர். கடாபி சரண் அடையும் வரை போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் புயல் அபாயம் நீடிப்பு: ஒபாமா எச்சரிக்கை.
அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் சூறாவளி புயல் உருவானது. அதற்கு ஐரின் என பெயரிட்டுள்ளனர். அந்த புயல் நேற்று காலை நியூயார்க் நகரை தாக்கியது.
அப்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் பலத்த மழை பெய்தது. புயல் மழை காரணமாக நியூயார்க், நியூஜெர்சி, வடக்கு கரோலினா, விர்ஜீனியா, மேரி லேண்ட் உள்ளிட்ட 8 மாகாணங்களில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
எனவே அந்த மாகாணங்களில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புயல் மழை காரணமாக வாகனங்கள் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி மற்றும் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியானார்கள். விர்ஜீனியா, வடக்கு கரோலினா பகுதியில் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். புயல் மழையினால் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சேதமதிப்பு தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு கணக்கிடப்படுகிறது.
நியூயார்க்கை தாக்கிய புயல் வடக்கில் நகர்ந்து கனடாவை நோக்கி செல்கிறது. இருந்தும் இன்னும் புயல் அபாயம் நீங்கவில்லை. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு இன்னும் குறைந்தபாடில்லை.
இதனால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து கரை புரண்டு ஓடுகிறது. இவற்றை அடைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. புயல் தாக்கியதில் முறிந்து ரோடுகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படுகின்றன. மேலும் மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிபர் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: புயல் கரையை கடந்து விட்டாலும் அமெரிக்கர்களுக்கான ஆபத்து இன்னும் முழு மையாக நீங்கவில்லை புயல் தாக்குதலில் மிக அதிக அளவில் சேதம் ஏற்படும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் குறைந்த அளவில் தான் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீட்பு பணி நடந்து வருகிறது. அது முழுமையாக முடிவடைய இன்னும் பல வாரங்கள் ஆகலாம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அங்கு மின் சப்ளை வழங்கப்படும். அதற்கான பணியில் மாகாணம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து சமூக பணி ஆற்றி வருகிறார்கள். தாழ்வான பகுதிகளில் இருந்து வெளி யேற்றப்பட்டவர்கள் அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிகோ நோடா தெரிவு.
ஜப்பானின் புதிய பிரதமராக நிதித்துறை அமைச்சர் யோஷிகோ நோடா ஓட்டெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இந்த பெரும் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முன்னாள் ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய பிரதமரை ஆளும் ஜப்பான் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் இன்று தேர்வு செய்தனர். இதில் தற்போதைய பிரதமர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர்.
பிரதமரை தேர்வு செய்ய நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் யாருக்கும் அதிக பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த வாக்குப்பதிவில் பொது மக்களின் ஆதரவு பெற்ற செய்ஜி மெகரா அதிக வாக்குகள் பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.
புதிய பிரமரை 396 எம்.பி.க்களை கொண்ட ஜனநாயக கட்சி தேர்வு செய்தது. இதில் நிதித்துறை அமைச்சர் யோஷிகோ நோடா 215 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். புதிய பிரதமருக்கு நாளை நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது.
மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் குற்றவாளி.
பான் ஆம் விமானத்தில் குண்டை வெடிக்க செய்து 270 பேரை கொன்ற லாக்கர் பீ நகர குண்டு வெடிப்பு குற்றவாளி மெக்ரகி உயிருக்கு போராடுகிறார். 
கடந்த 1988ஆம் ஆண்டு பான் ஆம் விமானத்தை மெக்ரகி குண்டு வைத்து தகர்த்தார். இந்த தாக்குதலில் 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளி மெக்ரகி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததும் 2009ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும் அவர் எந்த இடத்திற்கு மாறிச்சென்றாலும் தனது புதிய முகவரி குறித்து ஸ்காட்லாந்து ரென்பிறிஷயர் கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர் தனது மருத்துவ பரிசோதனைகளை ரென்பிறிஷயரில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அல் மெக்ரகி உடல்நிலை மிக மோசம் அடைந்துள்ளது. அவர் அடிக்கடி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். லிபியாவில் புரட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் அங்கிருந்து அல்மெக்ரகி இடம்பெயர்ந்துள்ளதாக மெக்ரகி மகன் காலித் திரிபோலியில் தெரிவித்துள்ளார்.
தந்தையின் புற்று நோய் மருந்துகளை திருடிச்சென்று விட்டனர். வீட்டு தொலைபேசிகளும் துண்டிக்கப்பட்டு விட்டன என்று அவரது மகன் மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒபாமா- மார்கெல் உறுதி.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி தலை தூக்கி உள்ளது. பல நாடுகள் கடன் பிரச்சனையில் தவிக்கின்றன. இதனால் உலக பொருளாதாரம் தள்ளாடி உள்ளது.
இந்த நிலையில் உலக பொருளாதாரத்தை வலுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெலும் உறுதி கொண்டு உள்ளனர்.
இரு தலைவர்களும் சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடினர். அப்போது உலக பொருளாதார மேம்பாடு குறித்து முடிவு செய்யப்பட்டது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்த இரு தலைவர்களும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனை தீர்வு குழுவின் அறிக்கையையும் ஏற்றுக் கொண்டனர். இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறும் சூழல் உருவாகி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் தீர்வு குழுவில் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை உள்ளன. ஒபாமாவும் மார்கெலும் ஒரு மாத கால இடைவெளிக்குள் மத்திய கிழக்கு பிரச்சனை குறித்து மீண்டும் விவாதித்து உள்ளனர்.
பொருளாதார சவால்களுக்கு ஜி20 நாடுகளின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்க மற்றும் ஜேர்மனி தலைவர்கள் முடிவு செய்தனர்.
கனடாவில் ஐரின் புயல் தாக்கியது: லட்சகணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.
கனடாவில் ஐரின் புயல் வேகம் குறைந்து காணப்பட்டது. இருப்பினும் அதன் தாக்கம் கியூபெக்கில் பாதிப்பை ஏற்படுத்தியது.
அங்கு 2 லட்சத்து 48 ஆயிரத்து 500 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு மக்கள் தவித்தனர். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் இருந்து வீசிய புயல் கனடா எல்லை பகுதியை தாக்கியது.
அமெரிக்காவில் ஐரின் புயல் தாக்கியதில் 21 பேர் உயிரிழந்தனர். பெரிய அளவில் வெள்ள சேதமும் ஏற்பட்டது, கட்டிடங்களும் இடிந்தன. கனடாவை தாக்கிய புயலால் கனமழையும் பெய்தது.
புயல் சீற்றத்தில் மரங்கள் உடைந்து விழுந்தன. தெரு விளக்கு கம்பங்கள் சரிந்து விழுந்தன என மொன்றியல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த புயல் சீற்றம் குறித்து கனடா சுற்றுச்சூழல்துறை கூறுகையில்,"மணிக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் புயல் தாக்கம் உள்ளது. சூறாவளி நிலையில் இருந்து சாதராண புயலாக ஐரின் வலுவிழந்த போதும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது" என தெரிவித்தது.
நியூபிரன்ஸ்விக் பொது பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட் டிரவர்ஸ் கூறுகையில்,"இந்த புயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
சிங்கப்பூர் அதிபராக டோனி டென் தெரிவு.
சிங்கப்பூர் அதிபராக டோனி டேன்(71) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் முதல்முறையாக வாக்குரிமையின் மூலம் அதிபரை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதிபர் பதவிக்கான தேர்தல் சனிக்கிழமை(ஆகஸ்ட் 27) நடைபெற்றது. இத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டது. இதில் முன்னாள் துணைப் பிரதமரும், மக்கள் செயல்பாட்டுக் கட்சியின் உறுப்பினருமான டோனி டேன் போட்டியிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி டோனி டேன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டான் செங் போக் நூலிழையில் வெற்றியை தவறவிட்டார். ஏனைய இருவரும் இவர்களை விட மிகக் குறைவான வாக்குகளே பெற்றனர்.
இப்போதைய அதிபர் எஸ்.ஆர். நாதன் ஆகஸ்ட் மாத இறுதியில் ஓய்வு பெறுவதையொட்டி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிவு வெளியான பின் செய்தியாளர்களைச் சந்தித்த டோனி, சிங்கப்பூர் மக்களின் அரசியல் ஒற்றுமைக்காக தன்னால் இயன்றவரை உழைக்கப் போவதாக தெரிவித்தார்.
அதிபர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாது, வாக்களிக்காதவர்கள் உள்ளிட்ட அனைத்து சிங்கப்பூர் மக்களுக்கும் தான் அதிபர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடுமையான போட்டியில் வென்றுவிட்டாலும் உண்மையான பணி இனிமேல்தான் ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டோனி அரசின் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றி அனுபவம் நிறைந்தவர்.
டோனியின் வெற்றியைப் பாராட்டிய சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியான் லூங் 18 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை சிங்கப்பூர் மக்கள் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
டோனியை அதிபராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிங்கப்பூர் மக்களின் பிரதிநிதியாக செயல்படுவார் என்றும் லீ தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய தூதர் சிரியாவுக்கு பயணம்.
சிரியாவில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் பேசித் தீர்ப்பதற்காக ரஷ்யா தனது சிறப்புத் தூதர் ஒருவரை இன்று அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது.
அரபு லீக்கின் பொதுச் செயலரும் பேச்சுவார்த்தைக்காக விரைவில் சிரியா செல்ல உள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
தலைநகர் டமாஸ்கசின் தென்பகுதியில் உள்ள கபார்சூசே மாவட்டத்தில் ஒரு மசூதியை ராணுவம் முற்றுகையிட்டதை எதிர்த்து நேற்று முன்தினம் அந்த மசூதியிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது ராணுவம் நடத்திய தடியடியில் ஒருவர் பலியானார், பலர் காயம் அடைந்தனர். டமாஸ்கசின் மையப் பகுதி வழக்கம் போல் அமைதியாக இருக்கிறது.
அதேநேரம் நாட்டின் வடபகுதியில் உள்ள டைர் அல் ஜோர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் ராணுவம் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகிறது. வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று அரபு லீக் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் அவசரமாகக் கூடி லிபியா மற்றும் சிரியா விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனை முடிவில் சிரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த அரபு லீக் பொதுச் செயலர் நபில் அல் அரபியை சிரியா அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
சிரியாவின் அண்டை நாடும், நட்பு நாடுமான துருக்கி, சிரியா மீதான தனது நம்பிக்கையை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. அதே போல் ஈரானும் சிரியா தனது மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.நா.வில் சிரியா மீதான மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க முட்டுக்கட்டை போட்டுவரும் ரஷ்யா இன்று தனது சிறப்புத் தூதர் ஒருவரை சிரியாவுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
ஐரின் சூறாவளியால் அமெரிக்காவில் கடும் பாதிப்பு: 9000 விமானங்கள் ரத்து.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை நேற்று ஐரின் சூறாவளி தாக்கியது. நகரை நெருங்கி வரும் போது அதன் வேகம் குறைந்து காணப்பட்டது.
இதனால் பெருமளவு இல்லை என்றாலும் கனத்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இச்சூறாவளிக்கு இதுவரை அந்நாட்டில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
ஐரின் சூறாவளி வடக்கு கரோலினாவை நேற்று முன்தினம் தாக்கியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா, மேரிலேண்ட், டெலாவேர் மற்றும் நியூஜெர்சியை நேற்று தாக்கியது. வடக்கு கரோலினாவைத் தாக்கும் போதே அதன் நிலை 3ல் இருந்து 1 ஆக குறைந்திருந்தது.
இந்நிலையில் நியூஜெர்சியில் இருந்து நியூயார்க்கை நோக்கி இச்சூறாவளி நகர்ந்தபோது தனது வலுவை பெருமளவில் இழந்துவிட்டிருந்தது. நியூயார்க் நகரை ஐரின் எட்டிய போது அதன் வேகம் மணிக்கு 106 கி.மீ ஆக குறைந்திருந்தது. இதனால் ஐரின் எச்சரிக்கை சூறாவளியில் இருந்து புயலாக குறைக்கப்பட்டது.
வேகம் குறைந்த போதும் அதனால் ஏற்பட்ட மழை அளவு குறையவில்லை. நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. இரு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதால், கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் வசித்த மூன்று லட்சம் பேர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டனர்.
இதனால் நியூயார்க் நகரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம் வெளியேற இயலாதவர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்கியிருக்கும்படி நகர மேயர் மிக்கேல் ப்ளூம்பெர்க் கேட்டுக் கொண்டார்.
நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து நிலையங்கள், பாதாள ரயில் போக்குவரத்து ஆகியவை நேற்று முன்தினமே நிறுத்தப்பட்டன. வடக்கு கரோலினா முதல் பாஸ்டன் நகர் வரையிலான 9,000 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹட்சன் ஆறு மற்றும் துறைமுகப் பகுதியில் கடல் ஆகியவற்றின் நீர்மட்டம் நேற்று எதிர்பார்த்ததை விட மளமளவென அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் நகரின் பல தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஐரின் சூறாவளியால் நியூஜெர்சி மாகாணம் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளது. நாட்டின் ஏழு மாகாணங்களிலும் சேர்த்து மொத்தம் 40 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், தொழிலகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. தலைநகர் வாஷிங்டனில் மட்டும் 36 ஆயிரம் வீடுகள் மின் துண்டிப்பால் இருளில் மூழ்கியுள்ளன.
பல நகரங்களில் மரங்கள் அடியோடு சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. மொத்தம், 7,500 தேசியப் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாகாணங்களில் மரங்கள் விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். ஏழு மாகாணங்களிலும் மொத்தம் 150 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF