Tuesday, August 23, 2011

இன்றைய செய்திகள்.

அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.

இந்திய மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை விரைவில் நீக்குவதற்குத் திட்டமிட்டுள்ள அரசு பதிலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தியமைத்து அதன் மூலம் முப்படையினருக்கும் மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
அவசர காலச் சட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2005ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம், கடந்த ஆறு ஆண்டுகளாக மாதாமாதம் நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்காது விட்ட இரண்டு வாரங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவசரகாலச் சட்டத்தின் மூலம் முப்படைகள் மற்றும் பொலிஸருக்குக் கிடைத்து வந்த மேலதிக அதிகாரங்களில் சிலவற்றைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்தியதன் பின்னர் இந்த தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது தொடர்பான யோசனைத் திட்டமாக இந்த தீர்வுத் திட்ட பரிந்துரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஓர் கட்டமாக தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய அரசியல் தலைவர்கள் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்படும் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் உத்தேச தீர்வுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு கிழக்கிற்கான தீர்வுத் திட்டம் காலத்திற்கு காலம் ஒத்தி வைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் இந்த உத்தேச தீர்வுத் திட்ட பரிந்துரையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது.
மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.

அவரச நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இராணுவத்துக்கு அவசர பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கிழக்கில் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மோதல்களை அடுத்து இந்த விசேட பயிற்சிகள் இராணுவத்துக்கு வழங்கப்படுவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
திடீரென நடத்தப்படும் கல்லெறித் தாக்குதலில் இருந்து தப்பிப்பது, ஆத்திரமுற்ற மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியன தொடர்பில் இராணுவத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் நேற்று இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டபோதும் இராணுவத்தினருக்கு இத்தகைய விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் மண்வெட்டிப் பிடிகள் அளவு பெரிய கொட்டன்கள் இராணுவத்தினர் கைகளில் கொடுக்கப்பட்டு, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களைத் தாக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை, கிண்ணியாவில் கடற்படையினர் முகாமை கடந்த வாரம் பொதுமக்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு இராணுவத்தின் புதிய பிரிவு ஒன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதற்கான உத்தரவை வழங்கி இருந்தது.
பெண்ணைத் தாக்க முயன்ற மர்ம மனிதர்கள் சிலரை மக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் கடற்படை முகாமுக்குள் ஓடி ஒளித்துக் கொண்டனர். இதனை அடுத்தே அந்தக் கடற்படை முகாமைப் பொதுமக்கள் தாக்கியதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முகாமுக்குள் ஓடி ஒளித்துக் கொண்டவர்கள் கடற்படையினரே என்று அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்ததால் மக்கள் ஆத்திரம் கொண்டு எதிர்ப்பில் இறங்கினர்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் சங்கத்தின் (ஜாதிக சேவக சங்கமய) ஊடகப் பேச்சாளர் லால் பெரேராவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கட்சியை ரணில் அடகு வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியான 17ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டு, 18ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்த ரணில் விக்ரமசிங்க வழியமைத்துக் கொடுத்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக பாரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சூளுரைத்து, அதனை நடைமுறைப்படுத்தாமை. தனியார்துறை ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் திறமைசாலிகளை அரசாங்கத்தின் சார்பில் ரணில் வேட்டையாடி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணிலின் சர்வாதிகாரப் போக்கிற்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் அளித்து வரும் ஆதரவு அதிருப்தி அளிப்பதாக லால் பெரேரா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க விரோத ஊடகமொன்றைப் போன்று சில கருத்துக்களை வெளியிட்ட போதிலும், எம்.ரீ.வி. மற்றும் எம்.பி.சீ ஊடக வலையமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது.
ஜனாதிபதியின் நாட்குறிப்பு என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்து ஜனாதிபதியின் மனதை வென்றெடுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை ஏற்படுத்துவதற்கு மஹாராஜா ஊடக நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்களின் ஏதாவது xரு பகுதியை எடுத்து அதனைப் பயன்படுத்தி அவருக்கு சேறு பூசப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்தவின் அழைப்பிற்கு ஜெயலலிதாவிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை!- வெளிவிவகார அமைச்சு.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வன்னிப் பிரதேசத்தில் போருக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்கு கொழும்புக்கு வருமாறு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.
புதுடில்லியில் உள்ள இலங்கை தூதுவர் மூலம் இந்த அழைப்புக் கடிதம் நேரில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு முதல்வர் தீவிரப்படுத்தியதை அடுத்தே, இலங்கை அரசு ஒரு இராஜதந்திர நகர்வாக இந்த அழைப்பை அனுப்பியது.

ஆனால் மகிந்த ராஜபக்சவின் அழைப்புக்கு இதுவரை தமிழ்நாடு முதல்வரிடம் இருந்து எந்தப் பதிலும் அனுப்பி வைக்கப்படவில்லை. எனினும் இந்த அழைப்புக்கான பதிலை இலங்கை அரசாங்கம் உடனடியாக எதிர்பார்க்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஜெயலலிதா இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், அவர் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்பதால் அதற்கு காலம் தேவைப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை  ஜனாதிபதியின் அழைப்பை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு இன்னமும் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இராணுவ தளபதியின் பாரியாரின் நடவடிக்கைகள் குறித்து படையினர் அதிருப்தி.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பாரியாரது நடவடிக்கைகள் குறித்து படையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத் தளபதியின் பாரியார் மஞ்சுளிகா அருணா விஜேசூரிய இவ்வாறு படையினருக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இராணுவத் தளபதிக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தின் சேவா வனிதா என்னும் மகளிர் பிரிவின் தலைவியாக மஞ்சுளிகா செயற்பட்டு வருகின்றார்.
தன்னிச்சையான முறையில் படைவீரர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் இடமாற்ற உத்தரவுகளை மஞ்சுளிகா பிறப்பித்து வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
படைவீரர்கள் மற்றும் உயரதிகாரிகளை மிகவும் இழிவான சொற்களினால் இராணுவத் தளபதியின் பாரியார் விழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படைமுகாம் ஒன்றுக்கு விஜயம் செய்யும் போது உயரதிகாரிகள் தங்களது மனைவிமாரை அழைத்துச் செல்ல வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்யத் தவறும் படையதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் குறித்த சிங்கள இணைய ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.

புத்தளத்தில் நேற்று இரவு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து  புத்தளம் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள் இணைந்து இரவு எடுத்த தீர்மானத்துக்கமைய புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மணல் குண்று பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 8 மணியளவில் ஏற்பட்ட கிறீஸ் மனிதன் பதற்றத்தினை தொடர்ந்து, கிறீஸ் மனிதனை விரட்டிச்சென்ற பிரதேச மக்களுக்கும் அவ்விடத்தில் காணப்பட்ட பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குடும்பப் பெண் ஒருவர் உட்பட 5 போ் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள் புத்தளம் நகரை நோக்கி வந்ததுடன் பொலிஸார் ஒருவரை கடுமையாக தாக்கினர். இதனால் புத்தளம் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதல் உக்கிரமடைந்தது தொடர்ந்து பொலிசாரும் கடற்படையினரும் இணைந்து நகருக்குள் நுழைந்து வீதிகளில் நின்று கொண்டிருந்தவர்கள், தொழுகையை முடித்து விட்டு வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்துவதற்காக, புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அனைவரும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பள்ளிவாசலுக்கு வருகை தருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.
பள்ளிவாசலில் புத்தளம் பள்ளிவாசல் சபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர பிதா உட்பட அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்து கொண்டதுடன், ஆத்திரமுற்றிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தி ஆறுதல்கள் கூறியதுடன் மேலும் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர்.
இவ்வேளை பெரிய பள்ளிவாசலின் அழைப்பிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்த வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேட் கொமாண்டர் திரு கமகே அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன், நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதுடன் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவங்களினால் பொலிஸ் அலுவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமுற்ற பொது மக்கள்  ஐந்து பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர்
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர். நேற்று இரவு முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் நேற்று மர்ம மனிதளின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியானார்.
இதனையடுத்தே புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். நகரின் எந்த இடத்திலும் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை.
இலங்கையில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்மாதிரியான செயல் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காட்டில் பதுங்கியிருந்த கொள்ளையுடன் தொடர்புடைய படைச் சிப்பாயை மக்கள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

கிளிநொச்சி, ஜெயபுரம் பல்லவராயன் கட்டு மாதிரிக் கிராமத்தின் கலிங்குக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர்  அப் பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் வயலுக்குச் சென்றபோது கலிங்குக் காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் மறைந்திருந்ததை அவதானித்துள்ளனர்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே வயலுக்குச் சென்றவர்கள் அந்த இளைஞருக்கு அருகில் சென்றனர். அப்போது அவர் ஓடத் தொடங்கினார். ஆனால் மற்றவர்கள் அவரை வளைத்துப்பிடித்து விட்டனர். பின்னர் அந்த இளைஞரை விசாரித்தபோது "நான் ஆமியைச் சேர்ந்தவன், எனக்கு லீவு தாறாங்கள் இல்லை, குடும்பக் கஷ்டம்'' என்று ஏதோ கூறியுள்ளார்.
இவரை இனம் கண்ட மக்கள் ஊருக்குள் கூட்டி வந்ததுடன் முழங்காவில் பொலிஸாருக்கும், அந்தப் பகுதி இராணுவத்தினருக்கும் அறிவித்தனர்.
உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்த இராணுவத்தினர் மக்களுக்கு முன்னால் வைத்து அந்த நபரை அடித்துள்ளனர். அத்துடன் அவர் லீவு பெற்றுச் சென்றதாகவும் சொல்லியுள்ளனர்.
பின்னர் அவரைப் பொலிஸார் விசாரித்ததுடன் அவர் பதுங்கியிருந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கே ஆறு கையடக்கத் தொலைபேசிகள், 60 ஆயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன.
மேலும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஜெயபுரம் தும்புருவில் காட்டுப் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகில் அவரது பயணப் பையும் மீட்கப்பட்டது.
தற்போது இந்த நபர் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். அப் பகுதியில் பல திருட்டுச் சம்பவங்கள் குறித்து மக்கள் ஏற்கனவே முறைப்பாடு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

தெற்காசியாவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப் படைகள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியூசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. 
நியூசிலான்ட் ஹெரால்ட் என்ற ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் இராணுவத் தலைமைகள் விமானசேவைகள் தொடக்கம் சீனித் தொழிற்சாலைகள் வரைக்கும், வங்கிகள் தொடக்கம் வெதுப்பகங்கள் வரைக்கும், மின்ஆலைகள் தொடக்கம் துறைமுகங்கள் வரைக்கும் முதலீடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இராணுவ உயர்மட்டத்தின் கட்டுப்பாட்டில் பில்லியன் கணக்கிலான டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது, குடியியல் அதிகாரத்தை மறைப்பதாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையைக் குறிப்பிட்டுள்ள நியூசிலன்ட் ஹெரால்ட், அங்கு ஒரு மில்லியன் மக்களுக்கும் 8000ற்கும் அதிகமான ஆயுதப்படையினர் இருப்பதாகக் கூறியுள்ளது.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 300,000 ஆயுதப் படையினரை கொண்டுள்ள இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ நிர்வாகம், மரக்கறிகள் விற்பனை, பயண முகவரகங்கள், விடுதிகள், நெடுஞ்சாலை உணவகங்கள், குப்பை சேகரிப்பு போன்ற தொழில்களில் படையினரை ஈடுபத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் நியூசிலன்ட் ஹெரால்ட் குறிப்பிட்டுள்ளது.
வடக்கில் 22 அறைகளைக் கொண்ட விடுதி ஒன்றை இலங்கை இராணுவம் நிர்வகித்து வருவதாகவும், படகுச் சேவைகள் மற்றும் திமிங்கலக் காட்சிப் பயணங்களை கடற்படை ஒழுங்கு செய்வதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதையும் நியூசிலன்ட் ஹரால்ட் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரவு நேர தொழுகைகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கோ மக்களை அச்சுறுத்துவதற்கோ கிறிஸ் பூதங்களை அனுப்ப வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிறிஸ் பூதம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாட்டின் பல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.

இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் இன்னமும் மாறாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அல்ஜசீரா தொலைக்காட்சி அந்தக் காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளது. 
கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்ற அதன் செய்தியாளர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் படையினர் மற்றும் மக்கள் மனங்களில் கடும்காயங்களை ஏற்படுத்தியுள்ளது. கொடுரமான சம்பவங்களால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் அவர்கள் மனங்களில் இருக்கின்றன.
வன்னியில் புதிய வீதிகள் அமைக்கப்படுகின்றன. புதிய கட்டிடங்கள் உருவாகின்றன. கடந்த காலங்களை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களை அகற்ற எந்த நடவடிக்கைகளும் இல்லை. உளக்காயங்கள் அப்படியே இருக்கின்றன.
உளக்காயங்களை ஆற்றுவது குறித்து அரசு சிந்திக்கவில்லை. அப்பகுதியில் மிகக்குறைந்தளவு உளநல சிகிச்சையாளர்களேயுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றிற்க்கு அப்பால் உளவியல் ரீதியான ஆற்றுகைப்படுத்தல் முக்கியமானது. அரசு இதனைச் செய்யவில்லை. சில இடங்களில் செய்யவிடாமல் தடுக்கின்றது என அரசசார்பற்ற அமைப்புகள் குற்றம் சாட்டின.
தமிழ்ப்பெண்கள் தம்மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கதைப்பதற்கு தயங்குவது வழமை ஆனாலும் பெருமளவு வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.
கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைச் சந்திப்பதற்க்காக தன்னை இராணுவச் சிப்பாய் ஒருவர் விலைபேசியதாக தமிழ்ப்பெண்ணொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலம் சந்திப்பதற்காக தன்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு இராணுவச் சிப்பாய் கேட்டதாக அவர் குறிப்பிட்டார். அப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறையும் தாக்குதலும் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றது. மூன்றில் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆனால் இராணுவத்திற்கெதிராக ஒரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் நாம் சந்தித்த தமிழ்ப் பெண்கள் படையினராலேயே தாங்கள் அதிகம் இவ்வாறான துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக குறிப்பிட்டனர்.
குறிப்பாக விதவைகள் நிலைமை மிக ஆபத்தானதாகவுள்ளது. இரவில் தமது வீடுகளில் தங்குவதற்க்கு மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக அல்ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.
புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.

புத்தளம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். 
புத்தளம் மனகுண்டு பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையினால் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருந்தனர்.
புத்தளம் மோட்டார் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பொதுமக்களில் மூவர், மேலதிக சிசிக்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் இனந்தேரியாத மூன்று நபர்கள் நடமாடியதனைத் தொடர்ந்து பதற்ற நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை.
சிரியாவில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையால் எனது ஆட்சி கவிழாது என ஜனாதிபதி பஷார் அல் அசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிரியா அரசு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் பாதுகாப்பு படையினரால் ஒடுக்கப்படும். சிரியாவில் பல கட்சிகள் ஆட்சி முறைக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் அயல் நாட்டு படைகள் ஊடுருவினால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். முன்னதாக சிரியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழு வந்து அங்கு நிலவும் மனித உரிமை நிலை குறித்து ஆய்வு செய்தது.
சிரியா பாதுகாப்பு படையினர் போராட்டத்தை ஒடுக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டார்கள். அசாத் பதவி விலக வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் அசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதுவரை அங்கு 2 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடாபியின் மகன் செய்ப் அல்-இஸ்லாம் கைது: சர்வதேச கிரிமினல் கோர்ட் தகவல்.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்.
இதனை சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் விசாரணையாளர் அலுவலக பெண் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லிபியாவின் போராட்டக்காரர்கள் குழுவினர் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில்,"செய்ப் அல் இஸ்லாமையும் கடாபியின் மூத்த மகன் முகமது அல்- கடாபியையும் கைது செய்து காவலில் வைத்துள்ளோம்" என தெரிவித்தனர்.
செய்ப் மீது சர்வதேச கிரிமினல் கோர்ட் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. லிபியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போரட்டத்தை ஒடுக்க கர்னல் கடாபி ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறார். இதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.
பொது மக்களை பாதுகாக்க நேட்டோ படைகள் அங்கு மார்ச் மாதம் முதல் முகாமிட்டுள்ளன. அவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். தற்போது போராட்டக்காரர்கள் லிபியா தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இரட்டை கோபுர தாக்குதல்: அல்கொய்தாவுக்கு ஈரான், சவுதி அரேபியா உதவி.
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அல்கொய்தா தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 3 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்த 11வது நினைவு தினம் வருகிற செப்டம்பர் மாதம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக வர்த்தக மையக் கட்டிட தாக்குதல் நடத்திய அல்கொய்தா சவுதி அரேபியா, ஈரான் உதவி உள்ளன என்ற தகவலை "தி லெவன் த் டே" என்ற புத்தகம் வெளியிட்டுள்ளது.
இதனை அந்தோனி சம்மர்ஸ் மற்றும் ராபின் ஸ்வான் ஆகியோர் எழுதி உள்ளனர். இரட்டைக் கோபுரம் மீது நடந்த தாக்குதலுக்கு அயல் நாடுகளுக்கு உள்ள தொடர்பை அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் திட்டமிட்டே மறைத்தாரா என்ற கேள்வியையும் இந்தப் புத்தகம் எழுப்பியுள்ளது.
யு.எஸ் புலனாய்வு துறையினர் ஆய்வு செய்த போது இரட்டை கோபுரத் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தது. ஆனால் இந்த புத்தகம் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அல்கொய்தா நடத்தும் தாக்குதல் ஈரான் துணை நிலை ராணுவமான ஹிஜி புல்லா அமைப்புக்கு தெரியும் என்ற கோர்ட் ஆவணத்தை இந்த எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
ஓரின சேர்க்கை திருமணத்துக்கு போப் 16ம் பெனடிக்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 10 லட்சம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மத்தியில் போப்பாண்டவர் ஞாயிற்றுக்கிழமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் ஒருபாலர் திருமண முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கை. அதைத்தான் நாம் திருமணம் என்று அங்கீகரிக்கவும் முடியும். ஆனால் ஒரு ஆண் மற்றொரு ஆணையோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது.
இது இயற்கை நியதிக்கு மாறானது. திருமணம் என்பது புனிதமானது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் என்ற உறவின் மூலம் பிணைக்கப்படும் போது அவர்கள் தங்கள் இன்ப, துன்பங்களை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படி மாண்புமிக்க ஆண்-பெண் திருமண முறை நிரந்தரமானது. விவாகரத்தை ஏற்க முடியாது என்று போப்பாண்டவர் குறிப்பிட்டார்.
ஒருபாலர் திருமண முறை, கருக்கலைப்பு, துரிதமான விவாகரத்து போன்றவற்றை சமீபகாலமாக ஸ்பெயின் ஆதரித்து வருகிறது. இதை சட்டரீதியாகவும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் ஒருபாலர் திருமணத்துக்கும், விவாகரத்துக்கும் போப்பாண்டவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மெக்சிகோ நகர மேயர் கடத்தி கொலை.
மெக்சிகோ நாட்டில் நகர மேயரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ நகர மேயராக பதவியில் இருந்து வருபவர் நாவா அல்டாமிரானோ. போதைமருந்து கும்பலால் சிக்கி தவிக்கும் மெக்சிகோவை நல்வழிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வந்தார்.
இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஜாக்குவால் பான் என்னும் இடத்தில் விவசாயிகளை சந்தித்து பேச சென்றார். அப்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்ட அவர் குரேரோ என்னுமிடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அவரது பாதுகாவலர்களே அவரை சுட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அவரது இறப்பிற்கு எந்த வித தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இவருக்கு முன்னர் பதவி வகித்த மேயர்கள் அனைவரும் போதை மருந்து கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கடன் குறித்து சீனா கவலை கொள்ளத் தேவையில்லை: துணை அதிபர் ஜோ பிடன்.
அமெரிக்கா இன்று மட்டுமல்ல இனி எப்போதுமே கடன் நெருக்கடிக்கு ஆளாகாது. அதனால் சீனா தனது முதலீட்டைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் நேற்று தெரிவித்தார்.
சீனாவில் ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் நேற்று தன் பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன் சீனாவின் தொழில்நகரமான செங்டுவில் பேசிய போது கூறியதாவது: பொருளாதார ரீதியில் இப்போதும் அமெரிக்கா தான் மிகப் பெரிய நாடு.
சீனாவை விட இரண்டரை மடங்கு பெரிய நாடு. முதலீட்டாளர்களின் பாதுகாப்பான நாடாக இன்றும் அமெரிக்கா தான் உள்ளது. எனினும் சீனா அமெரிக்காவில் செய்துள்ள முதலீடு குறித்து கவலை கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் நிதிச் சொத்துகளில் 87 சதவீதமும், நிதியமைச்சக கடன் பத்திரங்களில் 69 சதவீதமும் அமெரிக்கர்களிடம் தான் இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த நிதி சொத்துக்களில் சீனாவிடம் இருப்பது வெறும் 1 சதவீதம் தான்.
கடன் பத்திரங்களில் சீனாவிடம் இருப்பது வெறும் 8 சதவீதம் தான் என்பதை நினைவூட்டுகிறேன். அதனால் உங்களை மட்டுமல்ல அமெரிக்க முதலீட்டாளர்களையும் பாதுகாப்பது தான் எங்கள் நோக்கம். அமெரிக்கா ஒரு போதும் கடன் நெருக்கடியில் சிக்கி மூழ்கி விடாது.
அவரது ஐந்து நாள் சுற்றுப் பயணத்தின் போது சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, துணை அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பிடனின் இந்தப் பயணத்தில் அமெரிக்கா - சீனா இடையே ஒரு பில்லியன் டொலர் அளவிற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சீனாவில் இருந்து இன்று காலை மங்கோலியாவுக்குச் செல்லும் பிடன் நாளை ஜப்பானுக்குச் செல்கிறார்.
லிபிய தலைநகரை சுற்றி வளைத்த எதிர்ப்பாளர்கள்: உடனடி போர் நிறுத்தத்திற்கு அரசு அழைப்பு.
லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று எதிர்ப்பாளர்கள் புகுந்து கடாபி ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.
இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி ராணுவம் தோல்வி அடையக் கூடும். அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரிபோலியில் இருந்து 160 கி.மீ கிழக்கில் உள்ள ஜ்லிடான் நகர் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட எதிர்ப்புப் படையினர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளை நேற்று எட்டினர்.
இதையடுத்து அங்கு நிலை கொண்டிருந்த கடாபி ராணுவத்துடன் கடும் மோதல் நடந்தது. சிறு பீரங்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் கடாபி ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்.
நான்கு முனை தாக்குதல்: அதேநேரம் திரிபோலியின் மேற்கில் உள்ள ஜாவியா நகரைக் கைப்பற்றிய எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து ஜடாயிம் என்ற கிராமத்தை நேற்று கைப்பற்றினர். தொடர்ந்து திரிபோலியை நோக்கி அவர்களும் முன்னேறி வருகின்றனர், தெற்கில் இருந்தும் எதிர்ப்பாளர்கள் திரிபோலியை நெருங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடற்பகுதி முழுவதையும் நேட்டோ கடற்படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. திரிபோலியின் மையப் பகுதியில் உள்ள மிட்டிகா விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அந்நிலையத்தைக் கைவிட்டுச் சென்றதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு தயார்: எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி வரும் இச்சூழலில் லிபிய அரசு அவர்களை ஒடுக்கிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று வானொலியில் பேசியபோது, "அரசு தனது போரைக் கைவிடாது. இறுதியில் நாங்கள் வெல்வோம், சரணடைய மாட்டோம். எதிர்ப்பாளர்கள் அமைதியை எதிர்பார்த்தால் அதற்கும் நாங்கள் தயார்" என்று தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்களுடன் இணைந்து போரில் ஈடுபடுவதற்காக நேட்டோவை லிபிய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. திரிபோலியின் பல மாவட்டங்களில் ஊடுருவியுள்ள எதிர்ப்பாளர்களுக்கும், கடாபி ராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இதில் எதிர்ப்பாளர்களைத் தோற்கடித்த ராணுவத்தைப் பாராட்டி நேற்று முன்தினம் வானொலி மூலம் பேசிய கடாபி, "அந்த எலிகளை(எதிர்ப்பாளர்கள்) நாம் தோற்கடித்து விட்டோம்" என்று கூறினார்.
உடனடி போர் நிறுத்தம்: லிபிய உள்துறை அமைச்சர் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பெங்காசியில் இயங்கி வரும் தேசிய இடைக்கால அரசின் துணைத் தலைவர் அப்துல் ஹபீஸ் கோகா கூறுகையில், "திரிபோலியின் மீதான தாக்குதல் துவங்கிவிட்டது. அங்குள்ள கடாபி எதிர்ப்பாளர்களுடன் இது நடத்தப்பட்டு வருகிறது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது" என்றார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தீவிரம்: சர்வதேச நாடுகள் கவலை.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனக்கும் மோதல் தீவிரமாகி உள்ளது. இந்த நிலையில் சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.
காசா திட்டுப்பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அதற்கு பதிலடி தரும் வகையில் பாலஸ்தீனகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசி வருகிறார்கள்.
இஸ்ரேலில் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 8 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் எல்லை பகுதியில் துப்பாக்கியால் சுட்ட போது 5 எகிப்து பொலிசார் மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என மத்திய கிழக்கு அமைதி மத்தியஸ்தர்களான ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை வலியுறுத்தி உள்ளன.
எகிப்து எல்லை பகுதியில் நேற்றும் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது என அந்த அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் காசா திட்டுப்பகுதியில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
பயிர்களை நாசம் செய்யும் எலிகளை ஒழிக்க பூனை படை.
எலி தொந்தரவு இல்லாத நாடுகளே இல்லை. பயிர்கள்களை அழிப்பதுடன் பல்வேறு நோய்களையும் பரப்பி வருவதால் எலிகளை ஒழிக்க எல்லா நாடுகளும் படாதபாடு படுகின்றன.
இந்நிலையில் சீனாவில் பயிர்களையும் கால்நடை தீவனங்களையும் தின்றே தீர்க்கும் எலிகளை ஒழிக்க பூனை படை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ளது போல் நகரம்.
இங்குள்ள விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான எலிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் பல வழிகளில் முயற்சி செய்து பார்த்தனர்.
விஷம் கலந்த உணவுகளை நிலங்களில் வைத்து பார்த்தனர். எலிகள் எண்ணிக்கை குறையவில்லை. எலி வலை வைத்து பார்த்தனர். அப்போதும் குறையவில்லை. கடைசியில் "பூனை படை" ஐடியா தோன்றியது.
உடனடியாக தெருக்களில் சுற்றித் திரியும் பூனைகளை பிடிக்க தொடங்கினர். மிகத் தொலைவில் உள்ள நகரங்களில் இருந்து முதல்கட்டமாக 150 பூனைகளை பிடித்து வந்து போல் நகர நிலங்களில் விட்டு விட்டனர்.
அவ்வளவுதான் எதிர்பார்த்தது போலவே எலிகளை பூனைகள் வேட்டையாட தொடங்கிவிட்டன. இதன்மூலம் எலிகளின் எண்ணிக்கையும் எலி பொந்துகளும் கணிசமாக குறைந்துவிட்டன என்று அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளி இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூனைகள் புது சூழ்நிலையில் பிரச்னை இல்லாமல் இருக்க விசேஷ இடங்களையும் உருவாக்கினர். தவிர விவசாயிகளின் வீடுகளில் பூனைகள் தஞ்சம் அடைந்தால் அவற்றை பராமரிக்க ஊக்கத் தொகையும் சீன அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திரிபோலியை கைப்பற்றிய புரட்சியாளர்கள்: மக்கள் வெற்றி கொண்டாட்டம்.
திரிபோலி நகர் புரட்சியாளர்களிடம் வீழ்ந்தது. லிபிய தலைவர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்தது. இதனையடுத்து கடாபி அதரவு படைக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
புரட்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் லிபியாவில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். கடாபி பல முறை தொலைக்காட்சியில் தோன்றி இறுதி வரை போராடுவேன் என கூறினார்.
இந்நிலையில் ஞாயிறு அன்று லிபிய தலைநகர் திரிபோலி புரட்சியாளர்களிடம் வீழ்ந்தது. இதனையடுத்து 42 ஆண்டுகால கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
கடாபி தற்போது எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கடாபியின் மகனை புரட்சியாளர்கள் கைது செய்தனர். இவர் மீதும், கடாபி மீதும் மனித உரிமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடாபியின் மற்றொரு மகன் சரணடைவது குறித்து புரட்சியாளர்களுடன் பேசி வருவதாக புரட்சியாளர்கள் தெரிவித்தனர். திரிபோலியை கைபற்றியது தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர்.



ஒசாமாவை கொன்றதற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்: அல்கொய்தா.
ஒசாமா பின்லேடனை கொன்றதற்கு பழிக்குப் பழி வாங்க 100 தாக்குதல் நடத்தும் திட்டத்தை தொடங்கி விட்டோம் என்று அல்கொய்தா கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் கடந்த மே மாதம் சுட்டுக் கொன்றன.
இதனால் ஆவேசம் அடைந்துள்ள அல்கொய்தா பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலை அதிகரிப்போம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஒசாமாவை கொன்றதற்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 15ம் திகதி பிரசாரத்தை தொடங்கி விட்டோம் என்று இணைய தளத்தில் அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவு தெரிவித்துள்ளது.
லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
லிபியா அதிபர் கர்னல் கடாபி இப்போது வெளியேற வேண்டும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது திரிபோலியை நெருங்கி உள்ள நிலையில் பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் துணை பிரதமர் நிக்கிளக் லிபியாவில் தற்போதைய நிலைமை குறித்து பிரிட்டிஷ் கவுன்சில் கருத்தரங்கில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் வெளியிட்ட அறிவிப்பில் லிபியாவில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் சென்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ படைகள் சென்றதால் பல ஆயிரம் லிபிய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு ஆயிரக்கணக்கான ஆயுதப்படையினர் ஆதரவு உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் போராட்டக்காரர்களிடம் சரண் அடைந்ததாக தகவல்கள் வருகின்றன.
போராட்டக்காரர்கள் அணி வகுத்து வரும் போது பொதுமக்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள். கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
ஹம்பர்க் வீதி விழாவில் வன்முறை: பலர் படுகாயம்.
ஜேர்மனியின் ஹம்பர்க்கில் புகழ்பெற்ற வீதி விழா நடைபெற்றது. தெருவில் நடைபெறும் இந்த விழாவில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்த இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த பொலிசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலின் போது சிலர் படுகாயம் அடைந்தனர். வன்முறையாளர்களுக்கு எதிராக பொலிசார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். வடக்கு ஜேர்மனியின் நகரமான ஹம்பர்க்கில் இந்த வன்முறையால் சனிக்கிழமை மாலை பதட்டம் காணப்பட்டது.
வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 10க்கும் குறைவான இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
ஒரு கும்பல் ஜேர்மன் வங்கியின் கிளை அலுவலகத்தை உடைக்க முயன்ற போது வன்முறை ஏற்பட்டது. சம்பவ இடத்தில் சனிக்கிழமை இரவு 2 ஆயிரம் பொலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
கடந்த ஆண்டு இந்த விழாவின் போது 14 பேர் வன்முறையில் காயம் அடைந்தனர். 40 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நிதிச் சரிவால் கனடா வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியால் அருகாமையில் உள்ள கனடாவின் வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே கால் இறுதி ஆண்டில் கனடா வங்கிகளுக்கு பலவீனமான வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் நடப்பு கால் இறுதி ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறலாம் என அவை திட்டமிட்டுள்ளன.
இருப்பினும் உலக அளவில் நிதிச்சந்தைகள் மற்றும் தொழில்கள் தள்ளாடுகின்றன. இதனால் கனடா வங்கிகள் திட்டமிட்ட வளர்ச்சியை பெற முடியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாங்க் ஆப் மான்ட்றீல் தனது 3வது கால் இறுதி ஆண்டு பணியை நாளை துவக்குகிறது. இதையடுத்து றொயல் பாங்க் வெள்ளிக்கிழமையும் தனது கால் இறுதி நிதிச்சேவையை துவக்குகிறது.
கனடாவின் 6 பெரும் வங்கிகளின் ஆண்டு வளர்ச்சி 13 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி சந்தைகள் கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் 15 சதவீதம் குறைந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் வங்கி துறைகளும் பொருளாதார தடுமாற்றமும் அமெரிக்காவின் நிதி தடுமாற்றமும் கனடா வங்கிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. கனடா பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகும் நாடு ஆக அமெரிக்கா உள்ளது. அங்கு பொருளாதார தேக்கம் கனடா வங்கி வளர்ச்சியை பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF