Thursday, August 25, 2011

இன்றைய செய்திகள்.

அமெரிக்க விமானங்களில் இருந்து அம்பாறையில் பொதிகள் வீச்சு.
இருபது நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கும் பசுபிக் வான் மீட்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் வான்வழியாகப் விநியோகப் பொதிகளை போடும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இன்று காலை 10 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் சி-130 இராட்சத விமானங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மேலாக பொதிகளை போடும் பயிற்சிகள மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகைப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசிய விமானப்படைகளின் தலா ஒரு விமானமும், அமெரிக்க விமானப்படையின் மூன்று விமானங்களும் பங்கேற்கவுள்ளன. அதேவேளை நாளை சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானங்களில் இருந்து பரா படையினரை தரையிறக்கும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இரத்மலானைப் பகுதியில் இந்த ஒத்திகை நாளை பிற்பகல் 2 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான்படைத் தளத்தை மையப்படுத்தி கடந்த திங்களன்று ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் வான் மீட்பு ஒத்திகையில் சிறிலங்கா விமானப்படையின் 150 அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளினதும் 300 வெளிநாட்டு விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.





லிபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது.

லிபியா தலைநகர்  திரிப்போலியில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டு விட்டதாக அரச தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யுத்த சூழல் உக்கிரமடைந்துள்ள லிபியாவில் இலங்கைப் பணியாளர்கள் எவரும் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
லிபியாவில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டபோதே அங்கிருந்த இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பியதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
லிபியாவிலிருந்து இறுதிக்கட்டமாக உள்ள இலங்கையர்கள் தூதரகம் மூடப்பட்டதை அடுத்து அதிகாரிகளுடன் கொழும்பை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பு மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்ணனுக்காக தன் இரத்தத்தை தானம் செய்ய தயாராம் : கோத்தபாய ராஜபக்ச.
பன்றியிறைச்சி உண்ணாதவர்களின் இரத்தத்தினால் ஜனாதிபதிக்குப் பூஜை செய்ய வேண்டுமென்றால் அதற்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. என்னிடமே அதைப் பெற்றுக் கொள்ள முடியும். நான் மாமிச உணவு சாப்பிடாத ஒருவன் என்ற வகையிலேயே இதனைத் தெரிவிக்கிறேன் என பாதுகாப்பு அமைச்சின் செயலா் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
கிறீஸ் மனிதர் தொடர்பில் இன்று நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்களுடன் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
மன்னன் துட்டகைமுனுவின் வாளை எடுத்துக் கொள்வதற்காகவே இவ்வாறெல்லாம் நடைபெறுகிறது என்றும், அதற்காக ஜனாதிபதிக்குப் பூஜை செய்ய கிறீஸ் மனிதன் மூலம் பன்றி இறைச்சி உண்ணாதவர்களின் இரத்தத்தைப் பெறும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கட்டுக்கதைகள் உலாவுகின்றன.
அவ்வாறு தேவைப்பட்டால் எனது இரத்தத்தையே வழங்க முடியும். நான் மாமிசம் சாப்பிடாதவன்.
புலிகள் இயக்கத்தையே முற்றாகத் தோற்கடித்த இராணுவத்தால் எதனையும் சாதிக்க முடியும். ஆனால், இராணுவம் இந்த விடயத்தில் பொறுமை காக்கிறது. இதனைப் பொதுமக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது.
கிறீஸ் மனிதன் என்ற சாட்டில் இரு தடவைகள் இராணுவ முகாமகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் உள்ளனர்.
சகல மக்களும் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அமைதியைக் குழப்ப சில நாசகார சக்திகள் செயற்படுகின்றன.
இராணுவத்துக்கோ அல்லது அரச படைகளுக்கோ இந்த விடயங்களில் எவ்வித தொடர்பும் கிடையாது. கிறீஸ் மனிதன் என்பது வெறும் கற்பனையில் உருவான உருவம் மாத்திரமே. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஆகவே, மக்கள் இந்த விடயங்களில் மிகவும் புத்திசாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். வதந்திகளை நம்பி சட்டத்தை கையிலெடுத்து செயற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ரமழான் மாதமாகையால் பள்ளிவாசல்களுக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் சமயக் கடமைகளை எந்தத் தடையுமின்றி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாரக் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – சரத் பொன்சேகா.
அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையில்லை. இதனால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த 90 லட்சம் வாக்காளர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பலவீனத்தை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றது. ஊழல் மோசடி பேர் வழிகள் நாட்டை ஆட்சி நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு எப்போதாவது முற்றுப் புள்ளி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலியான பொலிஸாரின் இறுதிக்கிரியைகள் இன்று! அனுதாபம் தெரிவித்து புத்தளத்தில் கடையடைப்பு!
புத்தளம் நகரப் பகுதியில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும், நகரம் முழுவதிலும் இராணுவமும் பொலிஸாரும்  குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புத்தளம் நகரிலுள்ள அனைத்து கடைகள், வர்த்தக நிலையங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
புத்தளத்தில் மணல் குன்று பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் - இராணுவம் முறுகல் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான புத்தளம் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிளின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது சொந்த இடமான நொச்சியாகமவில் நடைபெறுவதால் புத்தளம் நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு மக்களின் அனுதாபத்தை தெரிவிக்கும் முகமாகவும் சகோதர சமூகத்தின் மன உணர்வுகளை மதித்தும் இந்த முழு நாளும் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம் என புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட உலமா சபை மற்றும் புத்தளம் வர்த்தக சங்கம் ஆகியன கூட்டாக விடுக்கப்பட்ட வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகரின் பல இடங்களிலும், கடைகள், வீடுகள், வாகனங்கள், முச்சக்கர வண்டிகளிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை எரித்த சிலரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் பொலிஸ் உத்தியோகத்தரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது.
புத்தளம்  பொலிஸ் உத்தியோகத்தரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடத்திய தாக்குதல்களில் நவரட்ன பண்டார என்னும் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 20 பேரை கைது செய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரும், புத்தளம் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கல்கடாஸ் ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள துப்பாக்கி பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சகோதரருக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அப்பாவி ஒருவரை கிறீஸ் பூதம் எனக் கருதி சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், அதனை தடுக்க முற்பட்ட  பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
தம்மைக் கொலை செய்ய வேண்டாம் என பொலிஸ் உத்தியோகத்தர் மன்றாடிய போதிலும், குறித்த அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த கும்பல் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கிறிஸ் பூதப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் என்ன? : ரணில் கேள்வி.
கிறிஸ் பூதப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ் பூதப் பிரச்சினையுடன் தொடர்புடைய எவரையும் பொலிஸார் இதுவரையில் கைது செய்யவில்லை.
அண்மையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கிறிஸ் பூதப் பிரச்சினையினால் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களை கைது செய்துள்ள பொலிஸார், கிறிஸ் பூத அச்சுறுத்தல்களை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்யவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றில் விவாதங்களை நடாத்துவதற்கு தேவையான அளவு உறுப்பினர்கள் பிரசன்னமாகியிராத காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகள் இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே நடைபெற்றது.
துறைமுக அதிகாரசபை தொடர்பான சட்ட மூலமொன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதிலும், போதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
குறித்த சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை அமைச்சர் சரத் அமுனுகம ஆரம்பித்து வைத்தார்.
எதிர்க்கட்சியின் சார்பில் ஜோன் அமரதுங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் உரையாற்றியனர்.
அதன்பின்னர் விவாதத்தில் கலந்து கொள்ளப் பெயரிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
கராச்சியில் தொடரும் வன்முறை: 200 பேர் பலி.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான முத்தாஜிதா குவாமி இயக்கம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் கலவரமாக மாறியது. இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
தொடர்ந்து இரு தரப்பினரும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கராச்சி நகரில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு நேற்று முழு அடைப்புக்கு முத்தாஜிதா குவாமி இயக்கம் அழைப்பு விடுத்து இருந்தது. அதற்கு ஆதரவு தெரிவித்து பெட்ரோல் பங்குகள் உள்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அங்கு வன்முறை சம்பவங்கள் மீண்டும் அரங்கேறின. இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அதில் 5 பேர் பலியானார்கள். அங்கு நடைபெறும் கலவரத்தில் இதுவரை 200 பேர் பலியாகி உள்ளனர்.
கலவரத்தை அடக்கும் பணியில் பொலிசாரும், காட்டிலாகா அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனவே கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப தேவையில்லை என பிரதமர் யூசுப் ரசாகிலானி தெரிவித்துள்ளார்.
நோர்வே பயங்கரவாதி குறித்து பொலிசார் விசாரணை.
நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 22ம் திகதி ஆண்டர்ஸ் பெரிங் ப்ரிவீக் என்ற 32 வயது நபர் கொடூரத் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொலையாளி ஆண்டர்சை நோர்வே பொலிசார் விசாரணை செய்த போது தமது வழிகாட்டியாக இங்கிலீஷ் டிபென்ஸ்லீக் நபர் உள்ளார் என மறைமுகமாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆண்டர்ஸ் குறிப்பிட்ட பால்ரே என்ற தீவிரவாத வலது சாரி அமைப்பு உறுப்பினரிடம் நோர்வே பொலிசார்கள் விசாரணை செய்கின்றனர். இதற்காக பால்ரே இன்று நோர்வே பயணம் மேற்கொண்டார்.
அவர் தானாக பொலிசிடம் விளக்கம் அளிக்க இருப்பதாக ஓஸ்லோ செய்தித் தொடர்பாளர் துரிட் தெரிவித்தார். நோர்வேயில் இரட்டை தாக்குதலை நடத்திய ஆண்டர்ஸ் தனது வெறிச்செயலுக்கு முன்னர் 1500 பக்க அறிக்கையை ஓன்லைனில் வெளியிட்டார்.
அதில் பெயர் குறிப்பிடாத பிரிட்டன் வழிகாட்டியை குறிப்பிட்டு இருந்தார். ரிச்சர்டு என போலி பெயரை அவர் குறிப்பிட்டு இருந்தார். பால்ரே அவருக்கு உதவி இருக்கலாம் என நோர்வே பொலிஸ் விசாரணை செய்கிறது.
சுனாமி பாதித்த பகுதிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி பிடேன் பயணம்.
ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி சுனாமியும் நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்த பகுதிக்கு அமெரிக்கா பெருமளவில் நிவாரண உதவிகளை அளித்துள்ளது.
ஆசிய பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடேன் நேற்று புகுஷிமா பகுதிக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார். இயற்கை பேரிடர் ஏற்பட்ட பகுதிக்கு செல்லும் முதல் உயர் அமெரிக்க தலைவர் பிடேன் ஆவார்.
புகுஷிமாவில் சுனாமி பாதிப்பால் 20ஆயிரம் மக்கள் கடலோரப்பகுதியில் பாதிக்கப்பட்டனர். சுனாமி பாதிப்பு பகுதிக்கு செல்வதற்கு முன்னர் ஜப்பான் பிரதமர் நடோ கானிடம் பிடேன் பேசுகையில் ஜப்பான் மக்களின் உறுதியை வெகுவாக பாராட்டினார்.
இந்த இயற்கை பேரிடர் உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது என்றும் இது தொடர்பாக உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி உள்ளது என்றார்.
பிடேன் சீனா மற்றும் மங்கோலியா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு வந்தார்.
லிபிய கலவரம்: 400க்கும் மேற்பட்டோர் பலி.
லிபிய தலைவர் கடாபியிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக திரிபோலியில் புதன்கிழமை நடந்த கடுமையான சண்டையில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2000த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். லிபியாவில் 42 ஆண்டு காலமாக அதிகாரத்தில் உள்ள கடாபியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக அவரது பாப் அல் அஸிஸியா வீட்டை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே வெற்றி அல்லது சாவு என கடாபி உறுதிபூண்டுள்ளார். நேட்டோ படைகளின் தாக்குதலுக்குப் பின்னர் திரிபோலியில் உள்ள பாப் அல் அஸிஸியா வீட்டை ஏற்கனவே கைவிட்டுவிட்டதாக கடாபி தெரிவித்தார் என திரிபோலி வானொலி நிலையம் ஒன்று கூறியுள்ளது.
நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கடாபியின் வீட்டை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். கடாபி தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றும் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நின்று கொண்டிருப்பதை வீடியோ காட்சிகளில் காணமுடிகிறது. அங்கிருந்த கடாபியின் சிலையையும் கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தினர்.
லிபியாவை கடாபி மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்: சாவேஸ்
லிபியாவில் கர்னல் கடாபியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ் உள்பட மேற்கத்திய நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கடாபி ராணுவத்தை முடக்குவதற்கு நேட்டோ படைகளும் அங்கு மார்ச் மாதம் முதல் உள்ளன. கடாபியை பெரும்பாலான நாடுகள் வெறுத்த போதும் வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் மேற்கத்திய நாடுகளின் போக்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் முற்றுகையிடப்பட்டுள்ள கடாபி ஆட்சியை மட்டுமே தான் ஆதரிப்பதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். லிபியாவில் ஒரே ஆட்சிதான் இருக்கிறது. அந்த ஆட்சி கடாபி தலைமையிலான ஆட்சியாகும் என்று சாவேஸ் தெரிவித்தார்.
கடாபிக்கு எதிரான மேற்கத்திய படைகளின் தாக்குதல் பெரும் படுகொலை என்றும் சாவேஸ் கடுமையாக குற்றம் சாட்டினார். எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதற்காக மேற்கத்திய நாடுகள் நடத்தும் சதி என்றும் அவர் கூறினார்.
உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளில் ஒரு உறுப்பினர் நாடாக ஆப்பிரிக்க தேசமான லிபியா உள்ளது. லத்தீன் அமெரிக்காவில் கடாபியை ஆதரிக்கும் முக்கிய கூட்டாளியாக சாவேஸ் உள்ளார்.
புகலிடம் தேடி பிரிட்டனுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
பிரிட்டனில் புகலிடம் தேடி வருவோர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இதுவரை ஆயிரம் கோடி பவுண்ட் செலவாகி உள்ளதாக பிரிட்டனின் இடம் பெயர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பிரிட்டனில் புகலிடம் தேடி வர 6 லட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் நான்கில் ஒரு விண்ணப்பம் புகலிட நிலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு புகலிடம் தேடி வருவோரை முறைப்படுத்துவதற்கான செயல்பாட்டுக்கு சட்ட உதவி மற்றும் நீதிமன்ற கட்டணங்கள் உள்பட இதர செலவினங்கள் ஆயிரம் கோடி பவுண்ட் ஆகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பவுண்ட் செலவு ஆகி இருக்கிறது.
1999ஆம் ஆண்டு முதல் இந்த செலவினம் ஆகியுள்ளது. கடந்த 13 ஆண்டு காலகட்டத்தில் இருந்து 5 லட்சத்து 9 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் பிரிட்டனில் உள்ளனர். இதில் 2 லட்சத்து 43 ஆயிரம் பேர் சட்டபூர்வமாகவும் 2 லட்சத்து 66 ஆயிரம் பேர் சட்டவிரோதமாகவும் இருந்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிட கண்காணிப்பு அமைப்பின் தலைவர் சர் ஆண்ட்ரூ கிறின் கூறுகையில்,"முறையாக புகலிடம் தேடி வந்துள்ளவர்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை" என்று அவர் தெரிவித்தார்.
ஆப்கனில் மாயமான மலை ஏறும் வீரர்கள்: பொலிஸ் விசாரணை.
போரால் உருக்குலைந்துள்ள ஆப்கன் பகுதியில் உள்ள பனிசூழ்ந்த மலைப்பகுதியில் 2 ஜேர்மனி மலை ஏறும் வீரர்கள் மாயமானார்கள்.
அந்த நபர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவர்கள் மாயமான தகவலை ஜேர்மனி அயல்துறை அமைச்சர் குய்டொ வெஸ்டர்வெலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலை ஏறும் ஜேர்மனி வீரர்கள் மாயமான தகவலை தெரிவிப்பது குறித்து வருத்தம் அடைவதாக குறிப்பிட்டதுடன் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கடத்தப்பட்ட நபர்கள் சலாங்க் பாஸ் என்ற இடத்தில் செல்லும் போது அவர்கள் மாயமானார்கள். இந்த பகுதி இந்துஷ் மலைப்பகுதியாகும். இது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுலை தொடர்புபடுத்தும் மலைப்பாதை பகுதியாகும்.
தலிபான்கள் அவர்களை கடத்தி இருக்க முடியாது. அந்த நபர்களை இடம் விட்டு இடம் பெயரும் நாடோடிகள் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பர்வான் பொலிசார் கூறுகையில்,"மாயமானவர்கள் இருவரும் ஆண்கள் ஆவார்கள்" என தெரிவித்தனர். மாயமான வீரர்கள் தாங்கள் மலை ஏறும் தகவலை உள்ளூர் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லை. அவர்கள் கார் டிரைவரை விட்டுவிட்டு மலை ஏறச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
லிபியாவில் கடாபி ஆட்சி முடிவு: பிரான்சில் மக்கள் கொண்டாட்டம்.
லிபியாவில் கர்னல் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதையடுத்து பிரான்சில் வசிக்கும் லிபிய மக்கள் கொண்டாடினர்.
தலைநகர் பாரிசில் தங்கள் லிபியா நாட்டின் தேசியக்கொடியை கைகளில் ஏந்தி வீதிகளில் ஆடிப்பாடினாக்கள். பெரிய திருவிழவை கொண்டாடுவது போல அவர்களது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
பாரிசில் உள்ள லிபிய தூதரகத்தின் முன்பாக திரண்ட லிபிய மக்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். நேற்று மாலை லிபியா நிலவரம் குறித்த தகவல் வந்ததும் அவர்கள் தூதரகம் முன்பாக கூடினார்கள். அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் லிபிய தலைநகர் திரிபோலியில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. அப்போது நகரம் முழுவதும் பல மணிநேரம் துப்பாக்கிச்சூடுகளும், குண்டுவெடிப்புகளும் ஏற்பட்டன.
கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட கடாபியன் மகன் செய்ப் லிபியா ஹொட்டலில் அயல் நாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து தாங்கள் உறுதியாக உள்ளோம் என சவால் எழுப்பினர்.
கனடா மற்றும் அமெரிக்கா கிழக்கு கடலோர பகுதியில் நிலநடுக்கம்.
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியான விர்ஜினியா கிராமப்பகுதியை மையமாக கொண்டு 5.9 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று மதியம் இந்த இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது வெள்ளை மாளிகை மற்றும் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கமாக இது உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் தேசிய கதிட்ரலில் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த கட்டிடத்தில் விரிசல்கள் மத்திய கோபுர பகுதியில் காணப்பட்டன.
நியூயோர்க் பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். நிலநடுக்கம் ஏற்பட்ட மைய பகுதிக்கு அருகாமையில் உள்ள 2 அமெரிக்க அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன.
நிலநடுக்கம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலநடுக்கம் கனடா எல்லை பகுதியிலும் ஏற்பட்டது.
இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் வரவில்லை. இந்த நிலநடுக்கத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்ட போதும் உயிரிழப்பு அபாயம் நிகழவில்லை.
இலக்கை குறிபார்த்து தாக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி.
கடலுக்குள் நீ்ர்முழ்கி கப்பலில் இருந்து கொண்டு ஒரு இலக்கிலிருந்து மற்றொரு இலக்கை தாக்கும் நவீன ஏவுகணையினை ஈரான் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
ஈரான் தனது அணு ஆயத திட்டத்தினை ரகசியமாக செய்து வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது. மேலும் ஈரான் யுரேனியம் செறிவூட்டும் மையத்தினை மேலும் மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் கூறிவருகிறது.
இந்த நிலையில் ஈரான் தனது காதிர்(QADER) எனப்படும் நவீன ஏவுகணையினை ராணுவ அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் பாரசிக வளைகுடா பகுதியில் வைத்து வெற்றிகரமாக சோதனையிட்டது. இதனை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியது.
இந்த சோதனையின் போது அதிபர் முகமது அகமது நிஜாத் உடனிருந்தார். கடலிலிருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக இந்த காதிர் ஏவுகணை இருக்கும் என அந்நாட்டு ஏவுகணையை தயாரித்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆப்கனில் இரு தலிபான் தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொலை.
ஆப்கனில் உள்ளூர் கிராமவாசி ஒருவரைக் கொன்ற தலிபான் பயங்கரவாதிகள் இருவரை பொதுமக்களே கல்லால் அடித்துக் கொன்றனர். இதில் ஒருவர் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி என தெரியவந்தது.
தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மாட் மாகாணத்தில் உள்ளது "டிரக் சபிர்" என்ற கிராமம். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமவாசிகள் புனித இப்தார் விருந்தை முடித்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு தலிபான் பயங்கரவாதிகள் யாஹ் முகமது(60) என்ற முதியவரை அரசின் உளவாளி எனக் கூறி சுட்டுக் கொன்றனர். இதனால் ஆத்திரமுற்ற கிராமத்தினர் ஒன்று சேர்ந்து பயங்கரவாதிகளை கல்லால் அடித்துக் கொன்றனர்.
ஆப்கன் மக்கள் இனிமேலும் தலிபான் இயக்கத்தின் அராஜகத்தை வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என உள்ளூர் ஆளுநர் இதுபற்றி பேசும் போது கருத்து கூறினார்.
பிரம்மபுத்திரா, சிந்து நதிகளின் நீளங்களை அளவிடும் சீனா.
பல்வேறு தடுப்பணைகளைக் கட்டி திபெத் பகுதியில் நீர்வள ஆதாரத்தைப் பெருக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. 
இதற்காக பிரம்மபுத்திரா, சிந்து உள்ளிட்ட பல நதிகளின் பிறப்பிடம் மற்றும் செல்லும் பாதைகள் குறித்து செயற்கைக் கோள் மூலம் புதிய வரைபடங்களையும், ஆய்வுகளையும் தயாரித்து முடித்துள்ளது.
சீன அறிவியல் அகடமி(சி.ஏ.எஸ்) நிறுவனத்தின் ஆய்வாளர்கள் பிரம்மபுத்திரா, சிந்து ஆகிய முக்கியமான நதிகள் மட்டுமல்லாமல் இதுவரை கண்டறியப்படாத மேலும் சில நதிகளின் பிறப்பிடங்களையும் செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
திபெத் பகுதியில் "யாலுங்ஷாங்போ" என்றழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதி இமயமலையின் வடபகுதியில் திபெத்தின் புராங் பகுதியைச் சேர்ந்த ஆங்ஸி என்ற இடத்தில் துவங்குவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1930களில் சுவாமி பிரணவானந்தா என்பவர் செய்த ஆய்வின்படி செமா-யுங்டுங் என்ற இடத்தில் துவங்குவதாகக் கண்டறியப்பட்டது. இதுவரையிலும் செமா தான் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் சரியான நீளம் 3,848 கி.மீ தூரம்.
முந்தைய ஆய்வுகளில் 2,900 கி.மீற்றரில் இருந்து 3,350 கி.மீ தூரம் வரை கணிக்கப்பட்டது. அதேபோல் சிந்து நதி, திபெத்தின் கெஜி பகுதியின் கயிலாச மலையின் வடகிழக்குப் பள்ளத்தாக்கில் பிறக்கிறது.
அதன் பிறப்பிடம் "பேங்கோகோங்" என திபெத்தியர்களால் அழைக்கப்படுகிறது. முந்தைய ஆய்வுகளில் சிந்து நதியின் பிறப்பிடமாகக் கூறப்பட்ட ஸ்வென் ஹெடின் பகுதி தற்போதைய பிறப்பிடத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. சிந்து நதியின் நீளம் மொத்தம் 3,600 கி.மீ தூரம்.
பழைய ஆய்வுகளில் 2,900 கி.மீ.ல் இருந்து 3,200 கி.மீ தூரம் வரை கணிக்கப்பட்டது. அதேபோல் கிங்ஹாய்-திபெத் பீடபூமியில் இருந்து யாங்த்ஸி, மஞ்சள், மெகோங் மற்றும் கங்கை நதிகள் உற்பத்தியாவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை சல்வீன் மற்றும் இர்ராவாடி ஆறுகளின் பிறப்பிடங்களும் அறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் அனைத்தும் இந்தியா, சீனா இடையேயான நீர்ப் பகிர்வின் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிக அளவில் பயன்படும்.
அமெரிக்காவின் கடன் குறியீட்டை குறைத்த எஸ் அண்டு பி நிறுவனத்தின் தலைவர் பதவி ராஜினாமா.
அமெரிக்காவின் உயர்தரக் கடன் குறியீட்டைக் குறைத்த ஸ்டாண்டர்டு அண்டு புவர்(எஸ்அண்டுபி) நிறுவனத்தின் தலைவர் தேவன் சர்மா(55) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எஸ் அண்டு பியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவன் சர்மா 2007 ஆகஸ்ட் முதல் பதவி வகித்து வந்தார். கடந்த மாதம் அமெரிக்காவில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் அந்நாட்டின் உயர்தரக் கடன் குறியீடான "ஏஏஏ"வை "ஏஏ+" ஆக எஸ் அண்டு பி குறைத்தது.
இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் நேற்று சர்மா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்க குறியீட்டைக் குறைப்பதற்கு முன்பே அவரது ராஜினாமா திட்டமிடப்பட்டது தான். இந்தாண்டு இறுதி வரையிலும் அவர் இந்நிறுவனத்தில் ஆலோசகராக நீடிப்பார்.
சிட்டி வங்கியின் தலைமை செயல் அலுவலரான டக்ளஸ் பீட்டர்சன்(53) தலைவர் பதவியை விரைவில் ஏற்பார் என எஸ் அண்டு பி விளக்கம் அளித்துள்ளது.
சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க சர்வதேச குழுவை அனுப்ப முடிவு.
சிரியாவில் தொடர்ந்து மக்கள் மீது அரசு நிகழ்த்தும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சிரியாவுக்கு சர்வதேச குழு ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் அந்த அமைப்பின் ஐகமிஷனர் நவநீதம் பிள்ளை தலைமையில் நேற்று உறுப்பு நாடுகள் அவசரமாகக் கூடி சிரியா நிலவரம் குறித்து விவாதித்தன.
அதன்பின் சிரியா மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 33 ஓட்டுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் சீனா, ரஷ்யா, ஈக்வடார் மற்றும் கியூபா நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன.
ஒன்பது நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. அரபுலகின் முக்கிய நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், குவைத் நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: திட்டமிட்ட மனித உரிமை மீறல்களான விசாரணை செய்யாமல் தண்டனை அளிப்பது, அதிகளவில் ராணுவத்தைப் பயன்படுத்துதல், மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் கொல்லுதல், பலரைக் காணாமல் போகச் செய்தல், கைதானவர்களைக் கடுமையான முறையில் நடத்துதல், குழந்தைகள் உட்பட அனைவரையும் சித்திரவதை செய்தல் ஆகியவற்றை கண்டிக்கிறோம். உடனடியாக மக்களுக்கு எதிரான வன்முறைகளை சிரியா கைவிட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிரியா விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என சீனாவும் ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்ததால்  தீர்மானத்தின் கடுமையான பகுதிகள் மாற்றத்துக்குள்ளாயின.
சிரியாவில் நடந்து வரும் போராட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க உடனடியாக ஒரு சர்வதேச குழுவை சிரியாவுக்கு அனுப்புவதாக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ள மக்கள் லிபியா எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF