Tuesday, August 23, 2011

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கி- 1


ஸ்விட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிமலையும், சாக்லேட்டும். அதே போல ஸ்விஸ் வங்கிக் கணக்குகளுக்கென்றும் ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. கத்தைக் கத்தையாய்க் கரன்சிகள் சலவையாய் அடுக்கப்பட்டு, ஒரு பக்கம் தங்கக் கட்டிகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், மிகக்கடுமையான இரும்புப் பெட்டகத்திற்குள் திருட்டுப் பணம் பாதுகாப்பாக இருப்பதைப் போலவும் நமக்குத் தோன்றலாம். இதையெல்லாம் தாண்டி ஸ்விஸ் வங்கி என்றதுமே ஆழ்மனதில் முதலில் தோன்றும் விஷயம் "ரகசியம்" மற்றும் "அது பணக்காரர்களுக்கானது". இந்த இரண்டில் ரகசியம் மட்டுமே உண்மை, மற்றபடி ஸ்விஸ் வங்கிக் கணக்கென்பது நம்ம ஊர் வங்கிக் கணக்கு போலத்தான் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இத்தொடரில் ஸ்விஸ் வங்கிகள் குறித்தும், வங்கிகள் இணையச்சேவை வழங்குவது சாதரணமாகி விட்ட இக்காலக்கட்டத்தில் இணையத்தின் வீச்சுக்கேற்ப தங்கள் 'ரகசிய' முத்திரையைச் சேதப்படாமல் எவ்வாறு ஸ்விஸ் வங்கிகள் காத்துக் கொள்கின்றன என்பது குறித்தும் பார்க்கலாம்.

வரலாறு நமக்கு மிக முக்கியமாதலால், ஸ்விஸ் வங்கிகளின் ஆரம்ப நாட்களைச் சிறிது மேய்ந்து விட்டுத் தொடருவோம். நம்ம ஊர் போலவே பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் கடன், வட்டி,  'சீட்' பண்ட், சேமிப்பு வகையறாக்களைக் கையாளும் செல்வந்தர் குடும்பங்கள் பல ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தனர்.  அந்த காலத்தில் பிரான்ஸ் மன்னர்களே காசில்லாவிட்டால்,ஸ்விட்சர்லாந்து கிளம்பி கடன் வாங்கி வரும் அளவிற்கு பணக்காரக் குடும்பங்கள் ஸ்விஸ்லிருந்து தொழில் செய்து கொண்டிருந்தனர். பிரான்ஸ் மன்னர்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று குளிப்பது மற்றொன்று தங்களைப் பற்றிய பிரத்யேக தகவல்கள் வெளியே கசிவது. இவர்கள் வசதிக்காகத் தான் முதல் முறையாக ஸ்விஸ் வங்கிகள் சங்கேதக் குறியீடுகள் மூலம் வங்கிக் கணக்குகளைத் துவக்கினர். பின்னாளில் அதுவே அவர்கள் உலக அளவில் புகழ் பெறக் காரணமாகி விட்டது. சர்வதேச அளவில் எந்த குழுவிலும் சேராமல் நடுநிலை நாடாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட நாடு ஸ்விட்சர்லாந்து என்பதால் கூடுதல் பாதுகாப்புடன் வங்கிகள் செழித்தன.

இவ்வங்கிகள், 1713ஆம் ஆண்டிலேயே அப்போதைய சட்ட நிர்வாக அமைப்பான ஜெனிவா கவுன்சிலால், வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை, கவுன்சில் அனுமதியின்றி யாருக்கும் தெரிவிக்கத் தேவையில்லை என்று அறிவித்து உரம் போட்டு வளர்த்து விட்டது. அச்சட்டத்தின் படி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியே சொன்னால் அபராதம் கட்ட வேண்டும். ஒரு வேளை வாடிக்கையாளர் ஸ்விட்சர்லாந்து சட்டத்தின் படி கிரிமினல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் தகவல்களை வங்கிகள் வெளியிடலாம். ஸ்விஸ் வங்கிகளின் ரகசியச் சேவை, நேர்மையாகவோ அல்லது கருமையாகவோ கடும் பணம் சேர்த்த அன்பர்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்ததால் ஸ்விஸ் வங்கிகளில் பணம் குவிய ஆரம்பித்தன.

ரகசியக் கணக்கென்பதால் தங்கள் நெருங்கிய ரத்த உறவுகளிடம் கூட சொல்லாமல் வைத்திருந்து, எதிர்பாராமல் மரணிக்க நேர்ந்து விட்டால், வங்கிகள் அவர்களின் சட்ட ரீதியான வாரிசைத் தேடும். அவ்வாறு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வங்கி அறிவித்து விட்டால் மொத்த கணக்கும் கம்பெனிக்கே சொந்தம் :).  முதலாம் உலகப்போரின் போது ஏற்பட்ட பெருத்த உயிரிழப்பின் போது ஏகப்பட்ட கணக்குகள் அந்த அடிப்படையில் ஸ்வாகா செய்யப் பட்டன. ஆனாலும் ஜெர்மனியும், பிரான்ஸ் மேற்படி கணக்குகளை நல்லெண்ண அடிப்படையில் தங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஸ்விஸ் வங்கிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹிட்லர் தன் உளவாளிகளை அனுப்பி ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஜெர்மானியர்களின் விவரங்களை சேகரித்து கொலை செய்து அவர்களின் கணக்குகளைத் அரசாங்கத்தின் பெயரில் மாற்ற ஆரம்பிக்க, விஷயம் ரொம்ப விகாரமாவதைக் கண்ட ஸ்விஸ் அரசமைப்புப் புதிய சட்ட திருத்தம் ஒன்றை 1934 ஆம் ஆண்டில் கொண்டுவந்ததது. அதன்படி வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை தங்கள் அனுமதியின்றி வெளியில் சொல்லுவதைக் கிரிமினல் குற்றமாக வகைப்படுத்தி கடும் சிறை தண்டனை வழங்க ஆணையிட்டது. அன்று முதல் இன்று வரை எப்பேர்ப்பட்டத் தில்லாலங்கடியாக இருந்தாலும் ஸ்விஸ் அரசிடம் சென்று முறைப்படிக் கெஞ்சினால் தான் வங்கி விவரங்களை கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலிக்கப்படும்.

இப்படியாக நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக தழைத்தோங்கிய ஸ்விஸ் வங்கிகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஹிட்லருக்கே அசைந்து கொடுக்காதவர்கள் என்று உலகம் முழுவதிலிருந்தும் வாடிக்கையாளர்கள் கும்ம ஆரம்பித்தனர். வங்கிகள் தங்கள் தரத்திற்கேற்ப குறைந்த பட்ச வைப்பு நிதியாக ஐந்தாயிரம் டாலர்கள் முதல் பல மில்லியன் டாலர்கள் வரை கேட்க ஆரம்பித்தன. மிக மிக ரகசிய கணக்குகள் துவங்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் திடீரென மரணித்தால் தங்கள் பணம் பறிபோய் விடும் வாய்ப்பிருப்பதால், தங்களின் வாரிசு குறித்தானத் தகவல்களை வங்கியில் முன்கூட்டியே தெரிவிப்பது அல்லது உறையிலிடப்பட்டக் கடிதத்தில் சமர்ப்பித்து, தாங்கள் மரணித்தப் பின் வாரிசு குறித்து வங்கி தெரிந்து கொள்வது போன்ற வழிமுறைகள் வந்தன.

உங்கள் தாத்தாவோ அல்லது பெரியப்பாவோ ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருந்ததாகத் தெரியவந்து நீங்கள் ஆதாரத்துடன் சென்று ஸ்விட்சர்லாந்து இறங்கி நிரூபித்தாலும் பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதன் அடிப்படையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு காங்கோ நாட்டின் சர்வாதிகாரி மொபுட்டுவின் வாரிசுகளுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது உபரித் தகவல்.

இப்படியாகத் தங்களின் ரகசியத் தன்மை குறித்து பலப்பல பில்டப்களைக் கொடுத்து வந்த ஸ்விஸ் வங்க்கிகள் இது நாள் வரை வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்குகள் குறித்து விளம்பரப் படுத்தியதோ அல்லது வங்கி இருக்கும் வீதி வழியாக செல்வோரைக் கையைப் பிடித்து இழுத்து கணக்கு ஆரம்பிக்க சொன்னதோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். வாழ்க்கை ஒரு வட்டம், மேலே இருப்பது கீழே போகும், கீழே இருப்பது மேலே போகும் என்ற தமிழ்ப்பட வசனகர்த்தாக்களின் பொன்மொழிக்கேற்ப உச்சத்தில் இருந்த ஸ்விஸ் வங்கிகள் தங்கள் வரலாற்றில் ரகசியத்தன்மைக்காக சந்தித்த மிகப்பெரியச் சவால் தான் இணையம்.

காலத்தின் கட்டாயமாகிக் போன இணையத்தில் எதுவுமே ரகசியமில்லை என்பதும், வலைக்கட்டமைப்புக்களை உடைத்து, உடைத்து விளையாடும் வயசுப்பிள்ளைகள் அதிகமான இணைய உலகத்தில் பூட்டி, பூட்டி வைத்தாலும் பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதும் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. எங்கெங்கோ ஹேக்கிங் மூலமாக இணையத்தில் தகவல் திருட்டு நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இதுவரை இணையத்தில் தங்கள் ரகசியத் தகவல்களை எந்த ஸ்விஸ் வங்கியும் ஹேக்கிங் மூலமாக இழந்ததில்லை. எப்படி அது சாத்தியம்?. அடுத்த பகுதியில்.

(தொடரும்)
************************





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF