Friday, August 12, 2011

இன்றைய செய்திகள்.

சீனாவில் மகிந்த ராஜபக்சவிற்கு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவம்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பீஜிங் நகரில் அமைந்துள்ள வெளிநாட்டு மொழிக்கற்கை பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் சென் யுலூவினால் இந்த கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் சென் யுலூவினிற்கு தங்கத்திலான புத்தர் சிலையை வழங்கியிருந்தார். 
அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ஜனாதிபதியினால் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு சஜித் பிரேமதாச தரப்பினர் எதிர்ப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, கட்சியின் சஜித் பிரேமதாச தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு இந்த வருட இறுதியில் தீர்வு காண முடியும் என ரணில் யோசனை முன்வைத்துள்ளார். எனினும், இதனை சஜித் தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக விலக வேண்டும் என்பதே சஜித் பிரேமதாச உள்ளிட்டோரின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டமாவடியில் பொலிஸாருக்கும் - பொதுமக்களும் மோதல்.

ஓட்டமாவடியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பொதுமக்களும் இரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மர்ம மனிதர்கள், கிறீஸ் பூதங்கள் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் வாழைச்சேனைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த 31வயதான பெண்ணொருவரை ஒருவர், தாக்கியதாக கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்துதாக்கினர். காயமடைந்த நிலையில் அந்நபரை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துவிட்டனர் என்று பரவிய வதந்தியை அடுத்து ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
பொதுமக்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இம்மோதல்களில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் நான்கு பொதுமக்களும் மீராவோடை, வாழைச்சேனை வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு. போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தினை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் படையினர் வரவழைக்கப்பட்டு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் கமராவும் அப்பகுதியில் இருந்தவர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி ஊடகவியலாளரான முர்ஸித்  என்பவரது கமராவே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரை தொடர்புகொண்டபோது சம்பவத்தினை உறுதிப்படுத்தினார்.
ஹட்டன் பிரதேசத்தில் ‘கிறிஸ் மனிதன்’ கைதுசெய்வதற்காக விசேட அதிரடிப்படையினர்.

பதுளை, மொனராகலை, கண்டி பொலநறுவை போன்ற இடங்களில் இந்த கிறீஸ் மனிதர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மலையகம் ஹட்டன் பிரதேசத்தில் அதிரடிப்படையின் மூன்று பிரிவுகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களை பீதிக்கும் உள்ளாக்கும் சில மனிதர்கள் பெண்களை துன்புறுத்துவதாகவும், அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பதாகவும் முறைப்பாடுகள் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டு வந்தன.
உடம்பில் கிறீஸை பூசிய மனிதர்களே இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகின.
பதுளை, மொனராகலை, கண்டி பொலநறுவை போன்ற இடங்களில் இந்த கிறீஸ் மனிதர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இரத்தினபுரி காவத்தை பிரதேசத்தில் சில வயோதிபப் பெண்கள் கொல்லப்பட்டமையை அடுத்தே இந்த கிறீஸ் மனிதன் கதை வெளியானது.
இது தொடர்பில் மூன்று பேர் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் அதற்கு பின்னர் கிறீஸ் மனிதர்களைப் பற்றி செய்திகள் வெளியாகின்ற போதும் யாரும் கைதுசெய்யப்படவில்லை.
எனவே இந்த கிறீஸ் மனிதன் என்ற செய்தி வதந்தி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பயம் காரணமாக தமது பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வரும் புதியவர்களை குறிப்பாக சிங்களவர்களை கிறிஸ் மனிதர்கள் என்றுகூறி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் பிடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதன் பின்னர் ஹட்டன் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் மனக் கிலேசம்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடக் கூடாது எனவும், தனித்து போட்டியிட வேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் அடிமட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
முஸ்லிம் பிரதேசங்களில் தனித்து போட்டியிட்டிருந்தால் அதிகளவான உறுப்பினர்களை வென்றிருக்க முடியும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்த போதிலும் இதுவரையில் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். 
கிறீஸ் மனிதர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் அப்புத்தளையில் பொதுமக்களால் அடித்துக் கொலை!

பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்கிய கிறீஸ் மனிதர் என்ற சந்தேகிக்கப்பட்ட இருவரை ஊவா மாகாணம் அப்புத்தளை தொட்டலாகல தோட்ட மக்கள் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் மேலும் இருவருடன் சேர்ந்து மோட்டார் சைக்களில் குறித்த தோட்டத்துக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நால்வரையும் பிடித்த தோட்ட மக்கள் அவர்களை மரங்களில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இதன்போது இருவர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை தடுக்க முனைந்த பொலிஸார் மீதும் தோட்டபொது மக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சில பொலிஸ்காரர்களும் காயமடைந்து தியத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கொலை செய்யப்பட்டவர்கள், தம்பேதன்ன என்ற இடத்தில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்றவர்களாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதேவேளை அப்புத்தளை தோட்டத்தில் பெண் ஒருவரை சீண்டினர் என்ற குற்றச்சாட்டின் பேரி;ல் உள்ளுர்வாசிகள் நான்கு பேர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போதும் தலையீடு செய்த இரண்டு பொலிஸ்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
உடம்பில் கிறீஸ் எண்ணெய்யை பூசிக்கொண்டு செல்வோர் பெண்களுடன் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவர்களின் உடமைகளை கொள்ளையிடுவதாகவும் நாடு முழுவதிலும் இருந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இதனையடுத்து குறிப்பாக பெருந்தோட்டங்களை சேர்ந்த தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் விழிப்பாக செயற்பட்டு வருகின்றனர்.
தமது தோட்டங்களுக்கு வெளியாட்கள் வருவதற்கு கூட அவர்கள் அனுமதி மறுப்பதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 
கோத்தபாய ராஜபக்ச மீது சீறிப் பாய்கிறார் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,  அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபாய ராஜபக்ஷ தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய  கருத்தை கண்டிப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களவர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை. எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும் தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விமர்சனத்தால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிலளிக்கையில்:-
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் யுத்தத்தின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப்படுகொலையை நடத்தியவர்களை யுத்த குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், அது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபாய ராஜபக்ஷ தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவிப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சிங்களவர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும் மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு,
இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்தது,
மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது,
மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது,
இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட யுத்தப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது,
என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை இராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை இராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.
அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ.
கச்சதீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசைவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சதீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம், மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
மேலும், கோத்தபாய ராஜபக்ஷ, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும், யுத்தகுற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.
இலங்கையில் நிலவும் உண்மை நிலைவரம் என்னவென்றால், யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான்.
இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை இராணுவம் யுத்த குற்றம் புரிந்து இருக்கிறது! இலங்கை அரசு யுத்த குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இலங்கை இராணுவம் யுத்த குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் யுத்தக்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில்,“யுத்த குற்றங்கள் நிகழ்த்தியவர்களை யுத்த குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்,
தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களவர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்,
தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்ட,  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பாலி குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளி: இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பு.
2002 பாலி குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவரை இந்தோனேசியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நகரில் கைது செய்யப்பட்ட உமர் பதேக் என்பவர் இந்தோனேசியா வந்து சேர்ந்ததை அந்த நாட்டின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரி அன்ஸ்யாத் எம்பய் உறுதி செய்தார்.
பாலி தீவில் மதுபான விடுதிகளிலும், இரவுநேர கேளிக்கை விடுதிகளிலும் 2002ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 202 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள். இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதில் பதேக்குக்கு முக்கிய பங்கு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மண்ணில் புதையுண்ட சிறுமி உயிர் பிழைத்த அதிசயம்.
இங்கிலாந்தின் உள்ள கிரேட் யார்மவுத் கடற்கரையில் பெக் ஆண்டர்சன்(15) என்ற சிறுமி தனது அக்கா, தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
மணலை சுவர் போல அமைத்து அதன் கீழே பிரமாண்ட குழி பறித்தனர். இன்னும் அதிக தூரத்துக்கு குகை அமைப்பதற்காக பெக் உள்ளே சென்றாள். அப்போது எதிர்பாராவிதமாக மணல் சுவர் சரிந்தது. வெளிப் பக்கம் விளையாடிய சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பெக் மட்டும் உள்ளே சிக்கினாள். தகவல் கிடைத்து பொலிசார், கடலோர பாதுகாப்பு வீரர்கள் விரைந்தனர். கால் மணி நேர போராட்டத்துக்கு பிறகு பெக் மீட்கப்பட்டாள்.
பேச்சு, மூச்சின்றி இருந்த பெக் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருக்கிறாள்.
"மண்ணில் புதைந்ததால் கால் மணி நேரம் மூச்சு விட முடியாமல் இருந்திருக்கிறாள். அவள் பிழைத்தது அதிர்ஷ்டவசம்" என்கின்றனர் மருத்துவர்கள்.
அமெரிக்க போர் விமான தாக்குதலில் 21 தீவிரவாதிகள் பலி.
மேற்கு பாகிஸ்தான் பகுதியில் சத்தம் எழுப்பாத அமெரிக்காவின் போர் விமானத் தாக்குதலில் 21 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டமான மிரான்ஷாபில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தப் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் உள்ளது.
அமெரிக்க விமான தாக்குதலில் இறந்த தீவிரவாதிகளில் சில அயல்நாட்டு தீவிரவாதிகளும் இறந்தனர். அவர்கள் ஹக்கானி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. வடக்கு மற்றும் வசிரிஸ்தான் பகுதியில் தொடர்ந்து போர் விமான ஏவுகணை தாக்குதல் நடந்து வருகிறது.
இந்தப் பகுதி அல்கொய்தா மற்றும் தலிபான்களுக்கு புகலிடமாக உள்ளது என அமெரிக்கா கூறுகிறது. இந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினரை தாக்கி வருகின்றன.
இந்த தாக்குதலில் இறந்தவர்களில் சிலர் உள்ளூர் தலிபான்கள், அரபு மற்றும் உஸ்பெக் நாடுகளின் தீவிரவாதிகள் ஆவார்கள் என உளவுத்துறை நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அதன் பின்னர் வசிரிஸ்தான் பகுதியில் போர் விமான ஏவுகணை தாக்குதல் அதிகரித்து உள்ளது.
அமெரிக்காவின் 125ஆண்டு பழமையான சுதந்திர தேவி சிலை மூடப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை புதுப்பிப்பு பணிக்காக ஒரு ஆண்டு மூடப்படுகிறது. 
அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிலையை புதுப்பிக்க 2 கோடியே 75 லட்சம் டொலர் செலவு ஆகும் என அமெரிக்க உள்துறை அமைச்சர் கென் சலாசர் தெரிவித்தார்.
சுதந்திர தேவி சிலை 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சிலையை புதுப்பிக்க மிகப்பெரும் ஏணிகள் மற்றும் எலிவெட்டர்கள் நிறுவப்படுகின்றன. சிலை மூடப்பட்டிருந்தாலும் சுதந்திர தீவு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.
கடந்த 1886ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அர்ப்பணித்தது. இந்த புகழ்மிக்க சிலையை ஆண்டு தோறும் 35 லட்சம் மக்கள் பார்த்து செல்கின்றனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் இந்த சிலையின் உள் பகுதியில் ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சரித்திரம் மிக்க சிலை 21ஆம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கிறது.
சீனா மற்றும் ஜேர்மனியின் கைகளில் அமெரிக்காவின் வளர்ச்சி.
அமெரிக்கா கடன் பிரச்சனையில் தள்ளாடுகிறது. அந்த நாட்டினுடைய வளர்ச்சி சீனா மற்றும் ஜேர்மனி நாடுகளின் வசமே உள்ளது என பாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் தெரிவித்தார்.
பாங்க் ஆப் இங்கிலாந்து வேகமாக அதிகரித்து வரும் பண வீக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இங்கிலாந்து என்ன செய்ய முடியுமோ அதனை செய்துள்ளது என வங்கி கவர்னர் மெர்வின் கிங் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது. கட்டுப்பாடு நிலை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக பொருளாதார சரிவு மீண்டு வர சீனா போன்ற நாடுகள் முன்வர வேண்டும்.
அந்த நாடு தானாக முன்வந்து உதவினால் மீட்சி பெற முடியும் என்றும் மெர்வின் கிங் தெரிவித்துள்ளார். சீனாவும், ஜேர்மனியும் அதிக அளவில் தங்கள் உற்பத்தி பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
அவர்களுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. மிக மலிவான அளிப்பின் மூலம் அவர்கள் அதிகம் பணம் பெறுகிறார்கள். அந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையில் ஒரு பள்ளம் ஏற்படுகிறது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மக்கள் தங்கள் பழக்க வழக்கங்களுக்காக அதிகம் செலவழிக்கிறார்கள். அதற்காக  அவர்கள் அதிகம் கடன் வாங்கவும் செய்கிறார்கள் என்றும் பாங்க் ஆப் இங்கிலாந்து அறிக்கை எச்சரித்துள்ளது.
அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை சுட்டுவீழ்த்திய தலிபான்கள் பலி: அமெரிக்க அதிகாரி தகவல்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இந்தத் தாக்குதலில் 30 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
ராணுவ ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் கொல்லப்பட்டனர் என யு.எஸ் கமாண்டர் ஜான் ஆலன் நேற்று தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 7 ஆப்கன் கமாண்டோக்களும், மொழி பெயர்ப்பாளரும் உயிரிழந்தனர்.
எப்-16 போர் ஜெட்டை வீழ்த்துவதற்கு காரணமாக இருந்த தலிபான்கள் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நள்ளிரவு கொல்லப்பட்டனர் என ஆலன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் பின்தங்கியப் பகுதியான தான்கி பள்ளத்தாக்கில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த துயர நிகழ்வு ஏற்பட்டது.
அமெரிக்கப் படைகள் படிப்படியாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நிலையில் தலிபான்களின் இந்தத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் உள்ளன. ராக்கெட் மூலம் எறியப்பட்ட குண்டு மூலம் ராணுவ ஹெலிகாப்டர் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து அந்த தலிபான்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் வான்வழித் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர். சினுக் ஹெலிகாப்டர்கள் இலக்கம் தற்போது திருப்திகரமாக உள்ளது என யு.எஸ் கமாண்டர் ஆலன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஹெலிகாப்டரை தாக்கிய நபர் முல்லா மொகி புல்லா என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இறந்ததாக கூறப்பட்ட கடாபியின் மகன் தொலைக்காட்சியில் தோன்றினார்.
லிபியா கர்னல் கடாபியின் இளைய மகன் நேட்டோ படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என கருதப்பட்டது.அவர் உயிருடன் தான் இருக்கிறார் என லிபிய அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது. அவர் பாதுகாப்பாக இருக்கும் வீடியோ விவரங்களையும் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
கடாபிக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைசி 7வது மகன் கமீம் கடாபி. இவர் கடந்த வாரம் நேட்டோ படைகள் ஜிதான் பகுதியில் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார் என நம்பப்பட்டது.கடாபியின் இளைய மகன் கொல்லப்பட்டார் என்ற தகவல் கூட்டுப்படையினருக்கு புதிய உற்சாகத்தை அளித்து இருந்தது. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடாபிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் அரபு எழுச்சி ஏற்பட்ட நிலையில் லிபியாவிலும் போராட்டம் வெடித்தது.கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி நேட்டோ படை வான்வழி தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் முதன்முறையாக கடாபியின் 28 வயது இளைய மகன் தற்போது பொது மக்களிடம் தோன்றி உள்ளார்.அவர் நேட்டோ தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்தார். அந்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

ஆர்டிக் பகுதியின் கூட்டு ராணுவ பயிற்சியால் சந்தேகம் நீங்கியது: கனடா.
ஆர்டிக் துருவ பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி நடவடிக்கையால் கனடா, ரஷ்யா, அமெரிக்கா இடையே இருந்த சந்தேகம் நீங்கியது என கனடா படைகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடுமையான மொழிப் பிரச்சனை இருந்த போதும் கடந்த கோடைக் காலத்தில் கூட்டு நடவடிக்கை முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டு நடவடிக்கைக்கு கண்காணிப்பு கழகம் என்ற பெயர் ஆகும். இந்த கூட்டு நடவடிக்கை கடந்த 2008ஆம் ஆண்டிலேயே நடைபெற்று இருக்க வேண்டும்.
அப்போது ரஷ்யா தனது அருகாமை நாடான ஜார்ஜியாவில் படையெடுத்ததை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. இதனால் 2 ஆண்டுகள் கழித்து ஆர்டிக் பகுதியில் கூட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ராணுவ செயல்பாட்டில் நோயர்டு படை பிரிவும் இடம் பெற்று இருந்தது. இந்த பிரிவு கனடா யு.எஸ் படை வீரர்களை கொண்டதாகும். நோயர்டு கூட்டு படைப்பிரிவு கனடா – அமெரிக்க தங்க நகை பாதுகாப்புத்துறை உறவாக வருணிக்கப்படுகிறது.
இந்த அமைப்பு வடக்கு அமெரிக்க வான்வெளிப்பகுதி அச்சுறுத்தலை கண்காணித்து வருகிறது. கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்னர் நோயர்டு அமைக்கப்பட்டது. ரஷ்ய ஏவுகணை அல்லது குண்டு வீச்சு தாக்குதல் அபாயத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டது.
பிரிட்டனில் ஏற்பட்ட வன்முறையை போன்று ஜேர்மனியிலும் ஏற்படலாம்: பொலிஸ் அமைப்பு எச்சரிக்கை.
பிரிட்டனில் கடந்த 5 நாட்களாக நடந்த வன்முறையை போல ஜேர்மனியிலும் வன்முறை தாக்குதல் ஏற்படலாம் என பொலிஸ் அமைப்பு எச்சரித்து உள்ளது.
இருப்பினும் இந்த அபாயம் ஜேர்மனிக்கு இல்லை என மூத்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஜேர்மனி பொலிஸ் யூனியன் தலைவரான ரெய்னர் வென்ட் லண்டனில் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
வன்முறைத் தாக்குதல் என்பது கிரிமினல் சக்தியாகும். தேசத்தை அவமதிப்பதுடன் சில குழுக்களால் சமூக வேறுபாட்டை ஏற்படுத்துகிறது என அவர் குற்றம் சாட்டினார்.
பிரிட்டனில் இன மோதல் ஏற்படுவதை போன்று ஜேர்மனியிலும் இந்த பிரச்சனை வரலாம் என  அவர் குற்றம்சாட்டினார். ஹம்பர்க், பெர்லின் போன்ற நகரங்களில் பல்வேறு இனத்தவர்கள் உள்ளனர்.
அங்கு காரணம் இல்லாமலேயே வன்முறை ஏற்படக் கூடிய அபாயமும் உள்ளது என அவர் எச்சரித்தார். கடந்த மே மாதம் 1ம் திகதி நடந்த தொழிலாளர் தின பேரணியின் போது ஹம்பர்க், பெர்லின் நகரில் நடந்த பெரும் வன்முறை நிகழ்வுகளை பொலிஸ் தலைவர் வென்ட் சுட்டிக் காட்டினார்.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்று ஜேர்மனியில் சமூக விரிசல் இல்லை. ஜேர்மனியின் பெரும் நகரங்களில் இளைஞர்கள் வன்முறையை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களை சந்திக்க பேருந்து வழி பயணம்: ஒபாமா அதிரடி.
அமெரிக்காவின் கடனை திருப்பி செலுத்தும் திறன் குறைந்து போனதாக தரச்சான்று நிறுவனம் மதிப்பீடு வெளியிட்டது.
இதையடுத்து சர்வதேச மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவடைந்தன. இதுபற்றி அதிபர் ஒபாமா கூறுகையில்,"தர நிறுவனங்கள் சொல்வது பற்றி கவலையில்லை. நம் நாட்டு பிரச்னைகளை உடனடியாக தீர்க்க முடியும். அந்த வழிகளும் நமக்கு தெரியும்" என்றார்.
இந்நிலையில் பொருளாதாரம் பற்றிய நிலையை தெளிவுபடுத்துவதற்காக 3 மாநிலங்களுக்கு ஒபாமா பஸ்சில் பயணம் செய்ய இருக்கிறார். பொருளாதாரத்தை வளர்க்கும் வழிமுறைகளை ஆராய்வதற்காகவும், நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காகவும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு சென்று குடும்பங்களையும், சிறு வியாபாரிகளையும் அதிபர் ஒபாமா சந்திக்க இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக தெற்கு மின்னசோட்டா, வடகிழக்கு லோவா, மேற்கு இல்லினோஸ் ஆகிய மாநிலங்களில் வரும் 15 முதல் 17ம் திகதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் கடும் நிலநடுக்கம்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான்: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று 5.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்று காலை 5.53 மணியளவில் குவெட்டாவுக்கு தென்மேற்கே 330 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜனவரியில் பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
2005 அக்டோபரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா: சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனானில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 10,474 வீடுகள் சேதமடைந்துள்ளன.
எதிர்ப்புகளுக்கு பணிய மாட்டேன்: சிரிய அதிபர்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவ வன்முறைகளை சிரியா மேற்கொண்டு வருகிறது.
இந்த ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த நிர்பந்தம் தீவிரமான போதும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பணிய மாட்டேன் என அசாத் எச்சரிக்கை விடுத்தார்.
சிரியா தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி அந்த நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் துருக்கி அமைச்சர் அகமது தாவூதோகுளு நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அசாத் பேசுகையில்,"எதிர்ப்புகளுக்கு பணிய மாட்டேன்" என திட்டவட்டமாக தெரிவித்தார். நேற்றைய ராணுவ தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து சிரியாவில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 5 மாதத்தில் இதுவரை 1700 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
பல ஆயிரம் பேரை சிரியா அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதற்கிடையே அசாத் அரசு மீது புதிய தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நிதி மற்றும் வர்த்தக கட்டமைப்பு துறைகளில் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
படகு கவிழ்ந்து விபத்து: 50 பேர் பலி.
கம்ரோஸ் நாட்டில் 100 பேருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு பாறையி்ல் மோதி கவிழந்து விபத்திற்குள்ளானதில் 50 பேர் பலியாயினர்.
ஆப்ரிக்க நாடான கம்ரோஸ் நாட்டின் தலைநகரான மொரானியின் அஞ்ஜோவான் தீவிற்கு 100 பேருடன் பயணிகள் படகு ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.
அப்போது 3 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் பாறை இருப்பதை அறியாமல் படகு சென்று கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாறையில் மோதி கவிழ்ந்தது.
இதில் பயணித்த குழந்தைகள் உள்பட 50 பேர் பலியானதாக அம்மாகாண அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மோதிய வேகத்தில் படகு உருக்குலைந்து பல துண்டுகளாக நொறுங்கியதால் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் தாக்கம்: அண்டார்டிகாவில் உருவாகும் புதிய பனிமலை.
சுனாமி மற்றும் நிலநடுக்க அதிர்வுகளால் துருவப்பகுதிகளில் ராட்சத பனிகட்டி கல் உடைந்து புதிய பனி மலை உருவாகிறது என நாசா விஞ்ஞானிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் கண்டுபிடித்துள்ளனர்.
கிரையே ஸ்பியர் எனப்படும் குறைந்த அழுத்த பகுதியில் ஏற்படும் உருவாக்கத்தை ஆராயும் நிபுணரான கெல்வி ப்ரண்ட் அந்த உண்மையை கண்டறிந்துள்ளார்.
இவர் கோடர்டு விண்வெளி பயண மையத்தின் விஞ்ஞானி ஆவார். ஜப்பானில் சுனாமி ஏற்பட்டதால் அண்டார்டிகா துருவப் பகுதியில் ஒரு ராட்சத பனி உடைந்து புதிய பனி மலை உருவாகி உள்ளது என இவரது ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி ஜப்பான் பசிபிக் கடல் பகுதியில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டதன் விளைவாக இந்த மலைக்கட்டி உருவாகி உள்ளது.
துருவ கடல் பகுதியில் பெரிய கட்டிகள் உடைவதாலும் பனிப்பொழிவு குவிவதாலும் புதிய பனிமலைகள் உருவாகின்றன. செயற்கை கோளின் பல்வேறு பிம்ப வடிவங்களை ஆய்வு செய்து நாசா விஞ்ஞானிகள் குழு இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளது.
25 மில்லியன் டொலருக்காக ஒசாமாவின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த ஐ.எஸ்.ஐ அதிகாரி.
கடந்த மே மாதம் அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்கவின் நேவி சீல் படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
அப்பொழுது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு பிரிவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியோருக்கு தெரியாமல் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.
தற்போது ஆர்.ஜே. ஹில்ஹவுஸ் என்ற பெண்மணி "தி ஸ்பை ஹூ பில்டு மீ" என்ற தனது பிளாக்கில், பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் டொலர் வெகுமானத்திற்கு ஆசைப்பட்டு பின்லேடனை அமெரிக்க படையினருக்கு காட்டி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த அதிகாரி தன்னுடைய குடும்பத்திற்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும்படி அமெரிக்க படையினரிடம் கேட்டு கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள கோரி சிலி நாட்டில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
கல்வித்துறையை சீர்திருத்தம் செய்யக்கோரி சிலி நாட்டில் அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையில் 23 பொலிசார் காயமடைந்தனர். 270 பேர் கைது செய்யப்பட்டனர். லத்தீன் அமெரிக்கா நாடான சிலி நாட்டின் அதிபராக செபஸ்டியான் பெனிரா உள்ளார்.
சிலி நாட்டில் கடந்த ஒருவருடங்களில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் முன்‌னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் இனங்கள் வேறு வழியில் செலவழிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
மேலும் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பட்‌ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கி சீர்திருத்தம் மேற்‌கொள்ள அதிபர் செபஸ்டியான்பெனிரா தவறிவிட்டதாக புகார் எழுந்தது.
இதனை கண்டித்து தலைநகர் சான்டியாகோவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டமாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
இதில் ஏற்பட்ட வன்முறையில் 23 பொலிசார் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீதி கலைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 270 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே இந்தாண்டு உயர்கல்வித்துறைக்கு 4 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் ‌சீலி நாட்டில் அனைவரும் அரசியலைப்பு உரிமை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் இது போதாது என மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வடகொரியா - தென்கொரியா இடையே மோதல்.
வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் நேற்று பதிலுக்குப் பதில் குண்டு வீசியதால் அப்பிராந்தியத்தில் பதட்டம் நிலவியது.
சீனாவுக்கும் கொரிய தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதி "மஞ்சள் கடல்" எனப்படும். இப்பகுதியில் தென்கொரிய எல்லைக்குள் நேற்று வடகொரியா மூன்று குண்டுகளை வீசியது.
உடன் தென்கொரியாவும் மூன்று குண்டுகளை வடகொரிய கடற்பகுதிக்குள் வீசியது. இச்சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவியது.
வடகொரியா எதற்காக குண்டுகளை வீசி பரபரப்பைக் கிளப்பியது எனத் தெரியவில்லை. கடந்தாண்டு நவம்பரில் இதேபோல் வடகொரியா வீசிய குண்டுகளால் தான் இருநாடுகளுக்கும் இடையில் பதட்டம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி எல்லையை ஒட்டிய நகரங்களில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரம்.
சிரியாவில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் துருக்கி எல்லையை ஒட்டிய நகரங்களில் பீரங்கி தாக்குதல் தொடர்கிறது.
இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சர், சிரிய அதிபரைச் சந்தித்து மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தினார். சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் அரசு மூலம் அடக்கப்பட்டு வருகின்றன.
தற்போது துருக்கி எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி நகரங்களான டைர் அல் ஜோர், டப்டனாஸ், செர்மின் மற்றும் பின்னிஷ் ஆகியவற்றில் புகுந்துள்ள ராணுவ பீரங்கிப் படை தொடர்ந்து மக்கள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சர் அகமது டவுடொவுலு நேற்று முன்தினம் சிரிய அதிபர் அசாத்தை நேரில் சந்தித்து மக்கள் மீதான பீரங்கி தாக்குதலை உடனடியாகக் கைவிடும்படி வலியுறுத்தினார். சிரியாவின் முக்கிய நட்பு நாடும், வர்த்தக கூட்டாளியுமான துருக்கியின் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதோடு உலக நாடுகளும் சிரியா மீதான தங்கள் நெருக்குதலை அதிகரித்து வருகின்றன. சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் சிரியாவுக்கான தங்கள் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டன.
இந்நிலையில் இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று அதிபர் அசாத்தைச் சந்தித்து வன்முறையைக் கைவிடும்படி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தானுக்காக சீனாவின் புதிய செயற்கைகோள்.
பாகிஸ்தானுக்காக சீனா முதன்முறையாக தொலைதொடர்பு செயற்கை கோளினை தயாரித்து விண்ணில் செலுத்தவுள்ளது.
பாகிஸ்தான்- சீனா இடையே இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ‌வகையில் விண்வெளித்துறையில் உதவ சீனா முன்வந்துள்ளது.
இதன்படி பாக்சாட்- 1 ஆர் என்ற தொலை தொடர்பு செயற்கை கோளினை சீனா பாகிஸ்தானுக்காக வடிவமைத்துள்ளது. 3-பி டிரான்ஸ்பான்டர்கள் கொண்ட இந்த செயற்கை கோள் காலநிலை மாற்றம் அறிந்து கொள்ளுதல், உயர் அழுத்த தொலை தொடர்புகள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள் சீனாவின் தென்‌மேற்கு பகுதியில் ஜிசாங் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு சீனா- பாகிஸ்தான் இடையே விண்வெளி திட்டம் குறித்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத்கான் பீய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பாக்சாட்-1பிஆர் சாட்டிலைட் மூலம் சீனா-பாகிஸ்தான் விண்வெளி மற்றும் அறிவியல் துறையிலான உறவு மேன்மேலும் வலுப்பெற்றுள்ளது" என்றார்.
பிரிட்டனில் வன்முறையை ஒடுக்க பிரதமர் அதிரடி நடவடிக்கை.
பிரிட்டனில் கடந்த வியாழக்கிழமை ஆப்ரோ கரிபீயன் இளைஞர் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டனில் தலைநகர் லண்டன் மற்றும் இதர நகரங்களில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
வன்முறையை ஒடுக்குவதற்கு இன்று நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை பிரதமர் கமரூன் கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் வன்முறையாளர்களை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளை பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் நேற்று இரவு பல ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கன மழையும் கொட்டியது. இதனால் ஐந்தாவது நாளாக வன்முறை மோதல் நிகழவில்லை.
பிர்மிங்காமில் தங்களது சொத்துக்களை பாதுகாக்க நின்ற மூன்று இளைஞர்கள் ஹரூன் ஜகன், ஷாசத் அலி, அப்துல் முகாவிர் ஆகியோர் மீது ஒரு கார் பயங்கரமாக மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இது வன்முறையாளர்களின் தாக்குதல் என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிதி உதவி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்குள் எம்.பி.க்கள் அவரசக் கூட்டம் இரண்டாவது முறையாக இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னர் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை நடத்திய தொலைபேசித் தகவல் தொடர்பாக எம்.பி.க்கள் அவரசக் கூட்டம் நடத்தினர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF