Thursday, August 11, 2011

மர்ம மனிதர்களின் பீதியினால் மலையகத்தில் தொடர்ந்தும் பதற்றம்.


மர்ம மனிதர்கள் நடமாடுவதாக நேற்றைய தினம் மலையகத்தில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, பெரும்பாலான தோட்டங்களில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் அல்லோலகல்லோலப்பட்டு வீடுகளுக்கு திரும்பினர்.மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், பொகவந்தலாவ, டிக்கோயா பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வேலைக்குச் சென்றிருந்த போது திடீரென மர்ம மனிதர்கள் வந்துள்ளதாக வதந்திகள் பரவியதால் ஆண், பெண் தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேலைத்தளத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார்கள்.

இவ்வாறு திரும்பி வந்த தொழிலாளர்கள் குழந்தை காப்பகத்திலிருந்தும், முன்பள்ளிகளிலிருந்தும் தமது பிள்ளைகளை தூக்கிக்கொண்டு பயந்த நிலையில் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள்.தோட்டப்பகுதிக்கு வந்த மர்ம மனிதர்கள் காட்டுப்பகுதிகளுக்குச் சென்று விட்டதாக மீண்டும் செய்தி பரவியதைத் தொடர்ந்து ஆண்கள் அருகிலுள்ள காடுகளுக்குச் சென்று தேடுதல் நடத்தினர். மஸ்கெலியா பகுதியில் மீஹே, லக்ஸபான, மவுசாக்கொல்லை, பிரவுண்லோ, பிரன்ஸ்விக், ஸ்ரெஸ்பி முதலான தோட்டங்களிலும் நோர்வூட் பகுதிகளிலுள்ள தோட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

மர்ம மனிதர்களின் பீதியினால் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாத அதே நேரத்தில் நேற்று முன் தினம் 9 ஆம் திகதி பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருந்தும், பயம் காரணமாக நகர்ப்புறங்களுக்கு தொழிலாளர்கள் வருகை தராத காரணத்தால் மலையக நகரங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF