இசை, விளையாட்டு, தியேட்டர் வழியே சுற்றித்திரிவது இவை எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்.
பாடசாலைக்கு வெளியே டீன் ஏஜ் வயதினருக்கு சிறந்த பிரயோசனத்தை வழங்கக் கூடிய ஒரே தெரிவு வாசிப்பு மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 16 வயதில் குறைந்த பட்சம் மாதத்துக்கு ஒரு தடவையாவது புத்தகங்களை வாசிப்பவர் 33 வயதாகின்றபோது முகாமைத்துவ துறையில் அல்லது வேறு தொழிற்சார் துறையில் ஒரு நல்ல பதவியில் இருக்கின்றார்.
எந்தவிதமான வாசிப்பையும் செய்யாமல், விளையாட்டிலும், நண்பர்களுடன் சுற்றித்திரிவதிலும் மற்றும் சமூக ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றவர்கள் தங்களது எதிர்காலத் தொழில் வாய்ப்புக்களை இழந்து விடுகின்றனர்.
கம்பியூட்டரில் அதிக நேரத்தைக் கடத்தும் இள வயதினருள் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பையே இழந்து நிற்கின்றனர். ஆனால் இது அவர்களுக்கு ஒரு வகையில் தொழில் ரீதியான வாய்ப்புக்களைக் கொடுக்கின்றது.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்கள் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி நிற்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாசிப்பானது சிறுவர்களின் மூளையின் கட்டமைப்பை ஆக்கபூர்வமாக மாற்றிவிடுகின்றது என்று சிறுவர் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
33 வயதை அடைந்த 17200 ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவிலேயே அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 16 வயதாக இருந்தபோது பாடசாலைக்கு வெளியில் இவர்களின் செயற்பாடுகள் எந்த அடிப்படையில் அமைந்திருந்தன என்பதுதான் ஆராயப்பட்ட முக்கிய விடயமாகும்.
16 வயதில் வாசிக்கும் பழக்கமிருந்த பெண்களுள் 33 வீதத்துக்கு மேற்பட்டவர்களும், ஆண்களில் 48 முதல் 58 வீதமானவர்களும் 33 வயதாகும் பொழுது நல்ல முகாமைத்துவ நிலைப் பதவிகளில் இருக்கினறமை தெரியவந்துள்ளது.