Saturday, April 30, 2011

இன்றைய செய்திகள்.

அமெரிக்காவின் அவசர செய்தியுடன் வருகின்றார் பிளேக்!
அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவரும் ஆன ரொபேட் ஓ பிளேக் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 03 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையால் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைமைகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. 

இந்நிலையில் பிளேக்கின் திடீர் விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அவதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரால் நோக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மிக முக்கிய செய்திகளுடன் பிளேக் வருகின்றார் என்றும் இவர் இலங்கை அரசின் உயர் மட்ட அமைச்சர்களை சந்தித்து உரையாடுவார் என்றும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திப்பார் என்றும் தெரிகின்றது. 

இவரை எதிர்கொள்கின்றமைக்கான தயார்ப்படுத்தல்களில் இலங்கை அரசும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.ஆனால் இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த விஜயம் என்றும் இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்தவை பிளேக் சந்திக்க மாட்டார் என்றும் சில தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை மே 10 முதல் ஆரம்பம்!

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக துறைமுக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இருநாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், தொழில்நுட்பக் கோளாறுகளினால் இந்தக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 


வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படவுள்ள இந்தச் சேவைக்கு இந்தியா மூன்று கப்பல்களையும், இலங்கை இரண்டு கப்பல்களையும் பயன்படுத்தவுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் சேவையில் ஈடுபடுத்தவுள்ள பயணிகள் கப்பலான ‘ஸ்கொட்டியா பிறின்சஸ்‘ வெள்ளோட்டம் விடப்பட்டது. 


ஒவ்வொரு கப்பலிலும் நீச்சல் தடாகம், நூலகம், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 44 பயணிகளையும், 300 வாகனங்களையும் இந்தக் கப்பல் ஒரே தடவையில் ஏற்றிச் செல்லும் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்தச் சேவைக்கு இருவழிப் பயணக் கட்டணமாக 10 ஆயிரம் ரூபாவை அறிவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கம் கொழும்புத் துறைமுகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்கத் திணைக்களம், காவல்துறை நிலையங்களை வேகமாக அமைத்து வருகிறது.

யுத்தத்திற்குப் பின்னரே இலங்கை அரசுக்கு எதிரிகள் அதிகரித்துள்ளனராம்!

யுத்தம் இடம்பெற்ற போது தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமே எதிரியாக இருந்தனர். ஆனால் போர் முடிவடைந்த பின்னர் பல எதிரிகள் இலங்கைக்கு எதிராக உருவாகி உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசதரப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், முன்னர் விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களும் தான் அரச தரப்பின் எதிரிகளாக காணப்பட்டனர். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் அரசு எதிர்கொள்ளும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இதற்கான காரணம் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் அனைத்துலக மட்டத்திற்கு வேகமாக பரவியுள்ளமையாகும். 


தற்போது அமெரிக்க, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், புலம்பெயர் தமிழ் சமூகம் ஆகியனவும் இலங்கையின் எதிரிகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. இவர்களை முறியடிப்பதற்கு அரசானது வெளிவிவகார அமைச்சினுள் இரு பிரிவுகளை உருவாக்கியுள்ளது. 


அவற்றில் ஒரு பிரிவு புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளையும், மற்றைய பிரிவு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளையும் கையாள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த அனுபவமும் ஆற்றலும் கொண்ட இராஜதந்திரிகளை கொண்டிராத வெளிவிவகார அமைச்சு தனித்து நின்று இவர்களை முறியடிக்க முடியாது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் இதுவரை நடவடிக்கையில்லை.

இலங்கை மீதான சர்வதேச விசாரணைகள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவிக்கின்றது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் பொதுச் சபை என்பவற்றின் இணக்கம் கிடைக்குமிடத்து மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் பிரமாணங்களின் பிரகாரம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் குறித்து விசாரிப்பதற்கென சர்வதேச விசாரணையொன்றுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயினும் ஐ.நா. செயலாளர் நாயகம் அது தொடர்பில் இதுவரை பாதுகாப்புக் கவுன்சிலிடமோ அல்லது பொதுச்சபையிடமோ எதுவித ஆலோசனைகளையும் கோரவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.ஆயினும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றின் அவசியம் குறித்து சுருக்கமான குறிப்பொன்று மட்டும் இடப்பட்டுள்ளதை பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் நெஸ்டோ ஒசோரியோ உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு.
தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை என்பது குறித்து கடும் தொனியில் இந்தியப் பிரதமர் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த பட்சம் எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று உறுதியாக வாக்களித்தால்  மட்டுமே நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.
வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான வாக்குறுதியை அளித்த பின்னரே நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இந்தியா ஓரளவுக்கு இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. ஆயினும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின்பே இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இனிதே முடிந்தது வில்லியம் : மிடில்டன் 'ராஜ திருமணம்'

இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் ஆகியோரின் திருமணம், வ்ஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் இன்று இனிதே நடந்தேறியது. சுமார் 30 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அரச குடும்பத்தில் இடம்பெற்ற கோலாகலமான திருமண நிகழ்வு இது ஆகும்.திருமண பந்தத்தில் கணவனாக தான் ஏற்கும் வில்லியமுக்கு 'என் அன்பையும், ஆதரவையும், கௌரவத்தையும் வழங்குவேன் என கேட் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார்.
ஆனால், வில்லியமின் தாயார் இளவரசி டயானா இளவரசர் சார்ல்ஸுடனான தனது திருமணத்தின் போது, 'கணவனக்கு கீழ் படிந்து நடப்பேன்' என்ற வரிகளை தனது திருமண உறுதிமொழியில் சொல்லாதது பொலவே, கேட் மிடில்டனும் அவ்வார்த்தைகளை சொல்லவில்லை.


இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஊடகங்களுக்கு இச்சம்பவம் நல்ல தீணியாக அமைந்துவிட்டது.இளவரசர் வில்லியம், வேல்ஸிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தை கொண்டு உருவாக்கப்பட்ட மோதிரத்தை, கேட் மிடில்டனுக்கு அணிவித்தார்.


திருமண வைபவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் முன்னணியில், வில்லியம், மிடில்டனை முத்தமிட்டுக்கொள்ள, அரச ஜெட் விமானங்கள் வான வேடிக்கை நிகழ்வு இடம்பெற்றது. அதற்கடுத்து மணமகன், மணமகள் ஆகியோரின் ஊர்வலம் இடம்பெற்றது.தொடர்ந்து விருந்துபசார நிகழ்வு இடம்பெறுகிறது. எனினும் மகாராணியார் எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப் கோமகன் ஆகியோர் அதில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


தமது பிரசன்னம் வில்லியம் மற்றும் கேட் மீதான கவனத்தை திசை திருப்பி விடுமென மகாராணியார் கருதுகிறார். மேலும்,  அவர்கள் தமது மகிழ்ச்சியை சுதந்திரமாக பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இவர்கள் இந்நிகழ்வில் பங்கு பெறாமைக்கான பிரதான காரணமென பகிங்ஹாக் பேச்சாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய ஹட்ப்-8 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது 350 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது.
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.இந்த ரக ஏவுகணை முதன் முதலில் கடந்த 2007ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பக்ரைனில் போராட்டத்திற்கு காரணமான 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை.
எகிப்து மற்றும் துனிஷிய போராட்டத்தைத் தொடர்ந்து வளைகுடா நாடான பக்ரைனில் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் வெடித்தது.அங்கு மன்னருக்கு எதிராக பொது மக்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். அதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சவுதி அரேபியா ராணுவத்தின் உதவியுடன் போராட்டம் ஒடுக்கப்பட்டது.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது எதிர்க்கட்சி பிரமுகர்கள் 7 பேர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை கொலை செய்ய அவர்கள் முன் கூட்டியே திட்டமிட்டதாக புகார் கூறப்பட்டது. போராட்டத்தின் போது 2 பொலிசார் கொல்லப்பட்டனர்.
அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று 4 பேருக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மற்ற 3 பேரின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பக்ரைனின் மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மீண்டும் கடுமையான போராட்டம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை 134 கோடியை எட்டியது.
சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 134 கோடி என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.சீனாவில் 2010ம் ஆண்டு இறுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. அதற்கு முன் 2000ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சீனாவில் இப்போதைய மக்கள்தொகை 134 கோடி. அவர்களில் சுமார் 50 சதவீத மக்கள் நாட்டின் நகரங்களில் வசிக்கின்றனர். 2000ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இது 36 சதவீதமாக இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எண்ணிக்கையை இப்போது 3 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த மக்கள்தொகையில் அவர்களது பங்கு 13.3 சதவீதம்.
எனினும் முந்தைய கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரிப்பு வேகம் குறைந்துள்ளது தெரியவந்தது. "ஒரு குடும்பம், ஒரு குழந்தை" என்ற அரசின் கொள்கையே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி வேகம் குறைந்ததால் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், குறிப்பாக கிராமங்களில் வேலைக்கு ஆளின்றி பொருளாதார வளர்ச்சி தடைபடலாம் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
14 அல்லது அதற்கு குறைந்த வயதினர் 16.6 சதவீதம். இது 2000ம் ஆண்டைவிட 6.29 சதவீதம் குறைவாகும். குழந்தைகளில் 6 ஆணுக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அதனால் பின்னாளில் திருமணம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மக்களிடம் ஆரோக்கியம் இல்லை: ஆய்வுத் தகவல்.
உலகிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள் மிகக் குறைவாக உள்ள நாடு பிரிட்டன் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.ஐரோப்பா கண்டத்திலேயே உடல் பருமனான ஆண்களை அதிகம் கொண்டுள்ள நாடும் பிரிட்டன் தான். இதனால் அந்த நாட்டில் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது தவிர சர்க்கரை நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும் அந்நாட்டு மக்களுக்கு அதிகரித்து வருகிறது. அந்நாட்டு மக்களில் சுமார் 63 சதவீதம் பேர் வாரத்துக்கு 30 நிமிடங்கள் கூட உடற்பயிற்சி மேற்கொள்வது இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் ஒப்பிடும் போது அவுஸ்திரேலியா மக்களில் பலர் பிரிட்டனைச் சேர்ந்தவர்களை விட உடல் எடை அதிகம் உள்ளவர்களாக உள்ளனர். செளதி அரேபியா, ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடையே உடல்ரீதியாக செய்யக்கூடிய பணிகள் பெருமளவில் குறைந்து விட்டன.
நடப்பது, சைக்கிளில் செல்வது, ஓடியாடி விளையாடுவது போன்றவை 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பெருமளவில் குறைந்து வருகிறது. இதுபோன்ற உடல்ரீதியான இயக்கங்கள் குறைவதால் நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 32 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நோயால் 2008ம் ஆண்டில் 3 கோடியே 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை 2030ல் 5 கோடியே 20 லட்சமாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சிரியாவில் வன்முறை: 700க்கும் மேற்பட்டோர் தப்பி ஓட்டம்.
சிரியாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.தற்போது லெபனான் எல்லையில் உள்ள தால் கலாக் நகரில் போராட்டம் கடுமையாகி உள்ளது. எனவே அங்கு போராட்டக்காரர்களை அடக்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக உள்ளது.
எனவே அங்கு வாழும் 25 ஆயிரம் மக்களை விரட்டியடித்து வெளியேற்றி வருகிறது. எனவே அந்நகர மக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர்.தால் அல்காக் நகரம் லெபனான் எல்லையில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. எனவே அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள் லெபனானில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
படுக்கைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் செல்கின்றனர். லெபனானின் அக்கர் மாவட்டத்தில் உள்ள வாடி காலெட் நகரில் குவிந்த வண்ணம் உள்ளனர். சிரியாவில் இருந்து சுமார் 700 பேர் லெபனானுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், அவர்கள் தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் அணு மின் உலை வெற்றிகரமாக குளிர்விப்பு! - ஜப்பான்

ஜப்பானில் கடந்த மாதம் 11 ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட புகுஷிமா மின் அணு உலைகளில் முதலாவது அணு உலையை மீண்டும் வெற்றிகரமாக குளிர்வித்துள்ளதாக ஜப்பானின் அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சுனாமியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கபப்ட்டிருந்த புகுஷிமா அணு மின் அலைகளிலிருந்து கசிந்த கதிர்வீச்சினால் பல்லாயிரக்கணக்கான மக்களு அதன் தாக்கம் பரவும் சந்தர்ப்பம் இருந்தது. இதையடுத்து குறித்த அணு மின் உலை பகுதிக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படது.
ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பு, கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், அதனை சரி செய்யவும் தீவிரமான பணிகளில் இறங்கியது. எனினும் தொடர்ந்து பல தடவைகள் குளிர்விக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், கதிர்வீச்சு தாக்கம் பன்மடங்கு அதிகரித்தது.
தாய்ப்பாலில் தாக்கம் செலுத்தும் வரை இதன் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மேலை நாடுகளின் உதவிடன், குளிர்விக்கும் குழாயை சரிசெய்து தற்பொது அதனூடாக டன் கணக்கில் தண்ணீரை குளிர்விக்கும் குழாய் மூலம் செலுத்தி வருகிறது ஜப்பான்.இதனால் புகுஷிமாவின் முதல் அணு உலை மீண்டும் வெற்றிகரமாக செயற்படுகிறது என அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மோசமான சூறாவளியால் உருக்குலைந்த அமெரிக்காவின் அலபாமா நகரம்! ஏராளமானோர் உயிரிழப்பு .

அமெரிக்காவின் தென்பகுதியைத் தாக்கிய கடும் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ எட்டலாம் என்று அஞ்சப்படுகின்றது. 24 மணிநேரமாக அமெரிக்காவின் தென் பகுதியில் ஆறு மாநிலங்களை வாட்டி வதைத்த சூறாவளியில் இறந்த 294 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப் பட்டுள்ளன. 

பத்து லட்சம் பேருக்கான மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அலபாமா மாநிலமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் உயிரிழப்புக்களும் அதிகம். இங்கு இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 207 பேர் சூறாவளிக்குப் பலியாகியுள்ளனர்.மாகாண ஆளுனரும் மற்றைய உயர் அதிகாரிகளும் இங்கு விரிவான மதிப்பீடு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூறாவளி, பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. மக்கள் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

1950க்குப் பின் அமெரிக்க வரலாற்றில் மோசமான பாதிப்புக்களையும், உயிர் இழப்புக்களையும் ஏற்படுத்திய கோரமான சூறாவளி இதுவென்று கூறப்படுகின்றது. பல வீடுகளும் வர்த்தகக் கட்டிடங்களும் உருக்குலைந்து போயுள்ளன. அழகிய கட்டமைப்புக் கொண்ட முக்கிய நகரங்கள் இப்போது குப்பை மேடுகளாகக் காடசியளிக்கின்றன.மேலும் சடலங்களைத் தேடி கண்டுபிடிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதிலும், இழப்புக்களை மதிப்பீடு செய்வதிலும் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



ஆப்கன் போரில் சிறிய அளவே அக்கறை காட்டும் ஒபாமா.

ஆப்கானிஸ்தானில் நடத்தி வரும் போர் நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் தேசிய பாதுகாப்பு அணியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மாற்றம் கொண்டு வந்தார்.
சி.ஐ.ஏ தலைவரான லியோன் பனேட்டாவை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்தார். மூத்த தூதரக அதிகாரியான ரயான் குரோக்கரை காபூல் தூதராக நியமித்தார். லெப்டின்ட் ஜெனரல் ஜான் ஆலனை ஆப்கானிஸ்தான் போரின் தளபதியாக ஒபாமா நியமித்துள்ளார்.ஈராக் போரின் போது அமெரிக்க நிலைப்பாட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நேட்டோ கொமாண்டராக செயல்படுபவருமான ஜெனரல் டேவிட் பெட்ராசை உளவுத் துறை செயல்பாடுகளை கவனிக்க சி.ஐ.ஏ தலைவராகவும் ஒபாமா நியமித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் புதிய போர் நிலையை மேற்கொண்டுள்ளோம். அங்கு பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்தவும், ஆப்கன் மக்கள் மேம்பாட்டுக்காகவும் நீண்ட பங்களிப்பை மேற்கொண்டு வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கத் துருப்புகள் கோடைக் காலத்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்படுகிறது. தலிபான்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்களிப்பு சிறிய அளவில் இருந்தால் போதும் என்ற நிலைக்கு அமெரிக்கா வந்துள்ளதை ஒபாமா அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.
பாலஸ்தீன ஒற்றுமை ஒப்பந்தத்தில் சந்தேகம் உள்ளது: ஜேர்மனி.
பாலஸ்தீனத்தில் பதா மற்றும் ஹமாஸ் என இரு அணிகள் உள்ளன. இந்த இரு பிரிவுகளின் ஒற்றுமை ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலும், அமெரிக்காவும் ஐயம் கொண்டுள்ளன.இந்த நாடுகளின் வரிசையில் ஜேர்மனியும் இணைந்துள்ளது. ஹமாஸ் பிரிவினர் காசா திட்டுப் பகுதியை நிர்வகித்து வரும் பிரிவினம் ஆவார்கள். இவர்கள் தீவிரவாத மற்றும் வன்முறை நடவடிக்கைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள்.
ஹமாஸ் அணுகு முறை குறித்து ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர் வெலே கூறுகையில்,"ஹமாஸ் அமைப்பினர் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எங்களுக்கு ஏற்ற கூட்டாளியாக இல்லை. இஸ்ரேலுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அமைப்பாக உள்ள ஹமாஸ் பிரிவுடன் இணைந்து செயல்பட முடியாது" என தெரிவித்துள்ளார்.
யூதர்கள் நாடு விடயத்தில் ஹமாஸ் தீவிரவாதி நிலையை கடைபிடிக்கும் வரை ஜேர்மனியின் நிலையில் மாற்றம் இருக்காது. பாலஸ்தீனத்தின் பதா மற்றும் ஹமாஸ் பிரிவுகள் இடையே ஏற்படும் ஸ்திரமான உடன்பாடு குறித்து ஜேர்மனி நுணுக்கமாக ஆய்வு செய்யும் என்றும் குய்லே தெரிவித்தார்.
எகிப்தில் ஹமாஸ் மற்றும் பதா பிரிவினர் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பல ஆண்டுகள் நீடித்து கசப்புணர்வை மறந்து இடைக்கால ஒன்றுபட்ட அரசை உருவாக்க விரும்புகிறோம். ஒரு ஆண்டிற்குள் தேர்தல் நடத்தவும் விரும்புகிறோம் என தெரிவித்தனர்.தற்போது பதா அமைப்பினர் மேற்கு கரைப் பகுதியையும், ஹமாஸ் அமைப்பினர் காசா திட்டுப் பகுதியையும் நிர்வகித்து வருகிறார்கள்.
தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.
தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஒரு வார காலமாக போர் நடந்து வந்தது. இப்போது தற்காலிகமாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கம்போடிய அரசு செய்தி தொடர்பாளர் பெய்ஷிப்ஹான் கூறியதாவது: தாய்லாந்து-கம்போடிய எல்லையில் உள்ள போனோபெம் டான்கிராக் பகுதியில் பழ‌மையான கோயில் உள்ளது. இதை ஆக்கிரமிப்பதில் கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை ஏற்பட்டு வந்தது.
உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக இந்த சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பிலும் சுமார் 40 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் படி போர் நிறுத்தம் செய்வது என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இதன்படி போரின் போது மூடப்பட்டிருந்த எல்லைப்புறம் மீண்டும் திறப்பது எனவும், தாய்லாந்தில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் அண்டை நாடுகளில் நல்லுறவு வேண்டியும் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து தரப்பில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த போரினால் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எல்லைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பயங்கர சூறைக்காற்று: ஒருவர் பலி.
தெற்கு மற்றும் கிழக்கு ஒண்டோரியா பகுதிகளில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. வியாழக்கிழமை கியூபெக்கிலும் பலத்த காற்று பாதிப்பை ஏற்படுத்தியது.புயல்காற்றுக்கு ஒருவர் பலியானார். ஏராளமான படகுகள் தண்ணீரில் மூழ்கின. 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு முன்னதாக பயங்கர காற்று தொடர்பான எச்சரிக்கையை கனடா சுற்றுச் சூழல் வெளியிட்டது. தீவிர வேகம் நயாகராவை தாக்கிய ஹாமில்டன் வழியாக இந்த இயற்கை பேரிடர் தாக்குதல் நடந்தது. வடக்கு கடற்கரைப் பகுதியான லேக் ஒண்டோரியாவிலும் பிரின்ஸ் எட்வர்டு கவுண்டியிலும் தாக்குதல் ஏற்பட்டது.
ஒண்டோரியாவின் கிரிம்சி பகுதியில் காற்றில் வேகத்தில் பறந்த காரேஜ் கதவு 70 வயது முதியவரைத் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். புயல் காற்றுக்கு ஒண்டோரியா மற்றும் கியூபெக் பகுதியில் ஏராளமானவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.பர்லிங்டன் ஸ்கைவே பாலம் மற்றும் கார்டன் சிட்டி பாலம் பலத்த காற்று காரணமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டன. ஹாமில்டன் துறைமுகத்தில் 5 படகில் பயணித்த மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
புயல்காற்று எச்சரிக்கை மதியம் 1 மணிக்கு முடிந்தது. ஒண்டோரியாவில் 1 லட்சம் வீடுகளில் மின் இணைப்பை சரி செய்ய ஹைட்ரோ குழுவினர் தீவிரமாக செயலாற்றினர். ஒட்டாவாவில் 20 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.செயிண்ட் காதரின்ஸ் பகுதியில் 30 ஆயிரம் வீடுகளிலும், ஹாமில்டனில் 6 ஆயிரத்து 500 வீடுகளிலும் மின் இணைப்பு காற்றால் துண்டிக்கப்பட்டது. கியூபெக்கில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வியாழக்கிழமை எச்சரிக்கப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF