Monday, April 25, 2011

இன்றைய செய்திகள்.


ஆலோசனையைப் பெற ஐநா நிபுணர்குழு அறிக்கை இந்தியாவிடம் கையளிப்பு!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்காக ஐ. நா.  அறிக்கையை இலங்கை இந்தியாவிடம் இன்று கையளித்துள்ளது. நிபுணர் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக  இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது .

இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் தொலைபேசி மூலம் பேச்சு வார்த்தை ஒன்றும் விளக்கமளிப்பும் இடம்பெற்றுள்ளது.

அறிக்கையை உன்னிப்பதாக ஆராயப்பட்டதன் பின்னர் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.கடந்த 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இந்த நிபுணர் குழு அறிக்கை உத்தியோகபூர்வமாக இலங்கையி்டம் கையளிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது பகிரங்கப்படுத்தவில்லை.

எனினும் அறிக்கையின் தகவல்கள் ஊடகங்களுக்கு கசியப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கை எதிர்வரும் வாரத்தில் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகவும், இதனை வெளியிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரி வருவதும் இங்கு குறிப்பிடதக்கது.

சவூதி அரேபியாவில் சம்பளக் கொடுப்பனவு உரிய முறையில் கிடைக்காததால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள்!

தமக்கான சம்பளத் தொகை உரியவாறு கிடைக்காத காரணத்தினால், சவூதி அரேபியாவின் தமாமில் பணியாற்றும் 15 இலங்கையர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். சவூதி அரேபியாவில் உள்ள கட்டட நிர்மாண நிறுவனம் ஒன்றில் சாரதிகளாகக் கடமையாற்றுபவர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக கடந்த வருடம் தொழில் வாய்ப்புக்காக தாங்கள் சவூதி அரேபியா சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை மீது நேட்டோ உணவு, எரிபொருள் உள்ளிட்ட பொருளாதாரத் தடையொன்றை விதிக்கும் சாத்தியம்?

இலங்கை மீது நேட்டோ நேச நாடுகளின் கூட்டமைப்பின் மூலமாக உணவு, எரிபொருள் உள்ளிட்ட பொருளாதாரத் தடையொன்று விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை அடித்தளமாகக் கொண்டு அவ்வாறானதொரு நடவடிக்கைக்கு நேச நாடுகளின் கூட்டமைப்பு தயாராகி வருவதாக பெரும்பாலான சிங்கள இணையத்தளங்களில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன் நிபுணர் குழு அறிக்கையை மையமாகக் கொண்டு இலங்கையை ஜனநாயக விரோத நாடாக பிரகடனப்படுத்தவும் நேட்டோ கூட்டமைப்பு கவனம் செலுத்தி  வருகின்றது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் தடைப்படலாம்.
மேலும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ஆடைகள் என்பனவும் பெரும்பாலும் நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக அவற்றின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியொன்றும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்வு  கூறப்படுகின்றது.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்: பிரதம நீதியரசர் அசோக டி சில்வா.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.இன்னும் இரண்டு மாத காலத்தின் பின் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள அவர் பீ.பீ.சி. சந்தேசய சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் தோல்வியுற்றமைக்கு எதிர்க்கட்சியே பொறுப்பேற்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் தவறினால் தான் அதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டன.
17வது அரசியல் திருத்தச் சட்டம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச் சட்டம் அதற்கான அவகாசங்களை இல்லாதொழித்து விட்டது.
18வது திருத்தச் சட்டம் மூலம் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பில் காணப்படுவது போன்று நீதிச்சேவையின் பிரதான பதவிகளுக்குப் பொருத்தமானவர்களை நியமித்தல் போன்ற அதிகாரங்கள் மீண்டும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.அதற்குப் பதிலாக 17வது திருத்தச்சட்டத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கருத்துத்  தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தங்கத்தின் விலை 49,000 ரூபா.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை 1500 அமெரிக்க டொலராக (ஒரு இலட்சத்து 71 ஆயிரம் ரூபா) அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 8 கிராம். தங்கத்தின் (ஒரு பவுண்) விலை 428 அமெரிக்க டொலராக (49 ஆயிரம் ரூபா) அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மீட்சியானது தங்கம் சொர்க்கமாகக் கருதப்பட்ட நிலைப்பாட்டினை மாற்றியுள்ளமை குறித்து அக்கறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே முதற்தடவையாக தங்கத்தின் விலை வரலாறு காணாதளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதேவேளை, வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் 44.34 அமெரிக்க டொலராக (5055 ரூபா) அதிகரித்துள்ளது. கடந்த 31 வருடங்களில் வெள்ளியின் விலை முதற்தடவையாக உச்சநிலையை அடைந்துள்ளது. செல்வந்த நாடுகளில் அரசாங்க கடன்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளமையே தங்கத்தின் விலையின் அதிகரிப்புக்கு காரணமெனக் கூறப்படுகிறது.
இலங்கையில் குறுந்தகவல் மூலம் பொலிஸில் முறைப்பாடு செய்ய ஏற்பாடு.
இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கைத்தொலைபேசியில் குறுந்தகவல் மூலம் விரைவாக முறைப்பாடு செய்வதற்கான வசதியை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட்டலின் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடுகளை மிக விரைவாக மேற்கொள்ள இதனை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதனை பொதுமக்கள் யாரும் தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

நான் குழாய்க்குள் வாழ்கிறேன்! சீன பிரமச்சாரியால் பரபரப்பு.

கடந்த ஓராண்டு காலமாக இந்த கொன்கிரீட் குழாய்க்குள் வாழ்ந்து வருகின்றார் மாஓ லீ என்ற இந்த நபர். ஆறு அடி நீளமான இந்தக் குழாய்க்குள் பலகையால் ஆன தரை, கதவுகள், ஜமக்காளம், குஷன் என பல வசதிகளை இவர் ஏற்படுத்தி உள்ளார். இவர் ஒரு 30 வயது பிரம்மச்சாரி. சீனாவின் தென் பகுதி நகரான ஹைக்கூவைச் சேர்ந்தவர். இவருடைய இந்த வீட்டு விவகாரம் இப்போது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

குழாய்களுக்குள் மக்கள் வாழ அனுமதிக்க முடியாது. இவருக்கு ஒரு வீடு வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 6 பெண்களை மனித கழிவு சாப்பிட வைத்து தண்டனை: 2 நாட்களாக நிற்க வைத்து சித்ரவதை.
ஒரிசா மாநிலத்தில் உள்ள குக்கிராமமான சுனா முண்டாவில் உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பரீட்சை நடந்தபோது சுனா முண்டா மற்றும் பல்சா குதார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 13 மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. அந்த மாணவிகளுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் போல் அவர்கள் நடந்து கொண்டனர். 

இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர் டாக்டர்களிடம் அழைத்துச்சென்று மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். என்றாலும் அவர்கள் குணமடையாததால் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். அவர் மாணவிகளுக்கு சிலர் பில்லி சூனியம் வைத்து இருப்பதால் பேய் பிடித்து இருப்பதாகவும் மந்திர கட்டில் மூலம் யார் சூனியம் வைத்தார்கள் என்பதை கண்டுபிடித்து விடுவதாகவும் கூறினார். இதையடுத்து கட்டாக் நகரில் இருந்து அந்த மந்திரவாதி ஒரு கட்டில் வாங்கி வந்து இதுதான் மந்திரகட்டில் என்று கூறி மாணவிகளின் பெற்றோரை நம்ப வைத்தார். 13 மாணவிகளையும் வரவழைத்து மந்திரவாதி பூஜை செய்தார். டாக்டர்களால் முடியாததை மந்திரவாதி செய்து விடுவார் என்று நம்பிய பெற்றோருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

மாணவிகளுக்கு உடல்நலம் குணமாகவில்லை. மேலும் அதே ஊரைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் மீது பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள்தான் பில்லி சூனியம் வைத்து இருக்கலாம் என்று கருதி கிராமமக்கள் திரண்டு சென்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த மதுசூதன் ரானா, அவரது மனைவி நிர்மலா, மகள் சந்தியா, ஈஸ்வர் அவரது மனைவி தலிம்பா, மகள்கள் கமலா, ஹேமலதா, துகி ஆகிய 8 பேரை பிடித்து வந்து ஊருக்கு நடுவில் நிற்க வைத்தனர். அவர்களை பன்றி மற்றும் மனித கழிவுகளை சாப்பிட வைத்து சித்ரவதை செய்தனர்.

2 நாட்களாக அங்கேயே நிற்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள். இதன்மூலம் அவர்கள் வைத்த பில்லிசூனியத்தின் சக்தி குறைந்து விடும் என்று நம்பினார்கள். கிராம மக்களிடம் இருந்து தப்பிய ரானா இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கிராமமக்களிடம் இருந்து 2 குடும்பத்தினரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போர்நிறுத்தம் வேண்டும்: தாய்லாந்து, கம்போடியாவிடம் பான் கி மூன் வலியுறுத்தல்.
தாய்லாந்து, கம்போடியா படைகளுக்கிடையில் கடும் மோதல் நிலவி வருகின்றது. இதனால் தொடர்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.உயிரிழப்பின் காரணமாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என அந்நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இந்நாடுகள் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
செயல்திறன் உள்ள மற்றும் நம்புவதற்கு ஏற்ற போர் நிறுத்தம் ஏற்பட உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இருதரப்பையும் பான் கி மூன் வலியுறுத்தியதாக ஐ.நா செய்தித்தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி நேற்று கூறினார்.ராணுவத்தால் இந்த சர்ச்சையை தீர்க்க முடியாது என நம்பும் பான் கி மூன், இந்தப் பிரச்னைக்கு இறுதித் தீர்வு காண கம்போடியாவும், தாய்லாந்தும் தீவிர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாக அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தாய்லாந்து ராணுவத்துக்கும், கம்போடிய ராணுவத்துக்கும் இடையிலான சண்டை இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் தொடங்கியுள்ளது. எல்லையை ஒட்டி கம்போடிய பகுதியில் உள்ள ஆலயத்தை தனதாக்கிக் கொள்ள தாய்லாந்து ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது.
ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனை காரணமாக இரு நாட்டு ராணுவத்தினரிடையே 2008ம் ஆண்டிலிருந்து மோதல் அதிகரித்துள்ளது. கடந்த பெப்பிரவரி மாதம் 4 நாள்கள் தொடர்ந்து மோதல் நீடித்தது. இதற்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கம்போடியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்று 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை உலக புராதன சின்னமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனால் இதைக் கைப்பற்ற தாய்லாந்து முயற்சிக்கிறது. இதனால் அடிக்கடி எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிராக பேரணி நடத்தும் முன்னாள் கிரிக்கட் வீரர்.
பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக முன்னாள் கிரிக்கட் வீரர் பேரணி நடத்துகிறார்.பாகிஸ்தான் டெஹ்ரிக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் தலைமையில் பேரணி நடைபெற்றது.பெஷாவர் அருகே நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான நெடுஞ்சாலையை பேரணியில் கலந்து கொண்டவர்கள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ஆப்கனில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எரிபொருள் கொண்டுச் செல்லும் பணி பாதிக்கப்பட்டது.ஆப்கன் எல்லையோரப் பகுதிகளில் தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிராக இம்ரான்கான் தலைமையில் பேரணி நடைபெற்றதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 வருடங்களாக மூளையில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றம்.
சீனாவை சேர்ந்தவர் வாங்தியாங்கிங்(40). இவர் ஒரு விவசாயி. கடந்த 1988ம் ஆண்டு வடக்கு சீனாவில் ஹெபி மாகாணத்தில் உள்ள ஷான்ஜியா கோயின் நகரில் தங்கியிருந்தார்.ஒருநாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது தலையில் ஏதோ ஒன்று தாக்கியது போல் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி தலைசுற்றலும், மயக்கமும் ஏற்பட்டது. அது போன்று 23 வருடங்கள் ஓடிவிட்டது. இந்நிலையில் அவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார். எனவே அவர் நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரது தலைப்பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது மூளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த துப்பாக்கி குண்டு ஓபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அந்த குண்டு சுமார் 2 செ.மீ நீளம் இருந்தது. தற்போது வாங்தியாங்கிங் நலமுடன் உள்ளார். அவரது தலையில் இந்த குண்டு எப்படி பாய்ந்தது? யார் துப்பாக்கியால் சுட்டார்கள்? என அவருக்கு தெரியவில்லை.
ஆனால் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது கல் தன்னை தாக்கியது போன்று இருந்ததாக அவர் தெரிவித்தார். அந்த இடத்தின் அருகேயுள்ள ஒரு மலையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவன் தான் தன்னை துப்பாக்கியால் சுட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சீனாவின் நிலை குறித்து கவலை கொள்ளும் அமெரிக்கா.
சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்காவும், சீனாவும் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளன.சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக யார் போர்க்கொடி தூக்கினாலும் அவர்களின் கதி அதோ கதி தான். அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் பலர் காணாமல் போய்விட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தண்டனை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச நாடுகள் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் சீனா அதை கண்டு கொள்ளாமல் தனது மனித உரிமை மீறல்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சீனாவின் பிரபல ஓவியக் கலைஞரான அய் வெய்(53) தற்போது சிறையில் உள்ளார். இதனால் சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இதுகுறித்து இம்மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளது.
பிலிப்பைன்சில் நிலச்சரிவு: தேடுதல் வேட்டையில் மீட்புப்படையினர்
பிலிப்பைன்சில் பின்தங்கிய மலைப்பகுதி மாவட்டமான கிங்கிங் பகுதியில் வெள்ளிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.கனமழை காரணமாக இங்குள்ள வீடுகள், முறைகேடாக நடைபெறும் தங்க சுரங்கப் பணிகள், தூய்மைப்படுத்தப்படாத கச்சா தங்கம் மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் ஆகியவை நிலச்சரிவில் புதைந்தன.
நிலச்சரிவில் 3 பேர் இறந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என பாண்ட்டுகான் நகர மேயர் செல்சோ சரேனஸ் தெரிவித்தார்.நிலச்சரிவு ஏற்பட்ட பதுங்கு குழி வீடுகளில் மக்கள் அதிக அளவில் இருந்தனர். இதுவரை 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரது உடல் பிணமாக எடுக்கப்பட்டுள்ளது.
கற்பாறையிலும், சேறு சகதியிலும் 19 பேர் புதைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவர்களை மீட்க மீட்புக் குழுவினர் தோண்டும் கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். மண்ணில் புதைந்துள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கு வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படுகிறது.
மின்டானோ தீவில் கனிம வளம் அதிகம் உள்ளது. ஆனால் அங்கு வறுமை வாட்டுகிறது. அங்கு தான் முறைகேடான சுரங்கப் பணிகள் பாதுகாப்பின்றி நடக்கின்றன. தற்போதைய நிலச்சரிவிலும் முறைகேடான சுரங்கப் பணியில் ஈடுபட்டவர்களே சிக்கி உள்ளனர்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளும் பயங்கரவாதிகள்.
பயங்கரவாதிகள் இன்றும் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி தான். அது மட்டும் இல்லை என்றால், அவர்கள் 1980களிலேயே அழிந்திருப்பர் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.ஜேர்மனியைச் சேர்ந்த நிக்கோ ப்ரூச்சா என்பவரும், பாதுகாப்பு ஆலோசகர் நிகல் ஸ்டேன்லி என்பவரும் இணைந்து பயங்கரவாத வளர்ச்சியில் நவீன தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து ஏழு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக ஒரு கைத்தொலைபேசியில் தெளிவான ஓடியோ, வீடியோ, இணையம், ப்ளூடூத் தொழில்நுட்பம் எனப் பல்வேறு வசதிகள் கிடைத்துள்ளன. இதுவே பயங்கரவாதிகளுக்குப் பெரியளவில் உதவிகரமாக இருக்கிறது.
தங்கள் தகவலை வெகு எளிதில் அவர்களால் பரப்ப முடிகிறது. அத்தகவலானது செய்தி, திரைப்படம், புகைப்படம், பாடல், பேச்சு எனப் பல்வேறு வடிவங்களில் இருந்தாலும் அதை விரைவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்ப முடியும்.
ப்ரூச்சா தனது ஆய்வில் இதுபோன்று பல்வேறு கைத்தொலைபேசியில் அல் குவைதா இயக்கத்தின் பிரச்சாரத்தையும், ஒசாமா பின்லேடனின் பேச்சுக்களையும் பார்த்துள்ளார்.
இதுகுறித்து ப்ரூச்சா கூறியதாவது: இந்தத் தொழில்நுட்பங்கள் தான் இப்போதும் பயங்கரவாதிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இவை மட்டும் இல்லை என்றால் அவர்கள் 1980களிலேயே அழிந்திருப்பர். இந்தத் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் அல் குவைதா அல்லது அதைப் போன்ற பயங்கரவாத இயக்கங்களில் ஆர்வம் உடையவர்கள் மிக மிகச் சிலராகத் தான் இருந்தனர்.
ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பலரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடிவதால் அல் குவைதா போன்ற இயக்கங்களின் பிரசாரம் பரவலாகிறது. தகவல்கள் சங்கிலித் தொடர்களாகப் பரப்பப்படுகின்றன. இப்போது ஒரு பதிவை கால காலத்திற்கும் எவ்வித கெடுதியும் இல்லாமல் பலருக்கு அனுப்பிக் கொண்டே இருக்க முடியும். இவ்வாறு ப்ரூச்சா தெரிவித்தார்.
பல பயங்கரவாத இயக்கங்கள் சில குறிப்பிட்ட கைத்தொலைபேசிகளில் மட்டும் தங்கள் பிரசாரம் கிடைக்கும்படி தனியாக தொழில்நுட்பங்களையே தயாரிக்கின்றன. இதற்காகவே தனியான பிரசார தகவல்களை உருவாக்குகின்றனர்.
பல தகவல்கள் தொழில்முறை உத்திகளின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாக ப்ரூச்சா தெரிவிக்கிறார். தகவல்கள் யாருடையவை என்பதை வாடிக்கையாளர் தெரிந்து கொள்வதற்காக இந்த இயக்கங்கள் தனிப்பட்ட சின்னங்களைப் பயன்படுத்துகின்றன என்று மேலும் தெரிவித்தார்.
மாற்று வாக்கெடுப்பு: காமரோன் மீது துணைப்பிரதமர் கடும் தாக்கு
வெஸ்ட் மினிஸ்டர் எம்.பிக்கள் தெரிவு விவகாரத்தில் மாற்று வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமர் டேவிட் காமரோன் மீது துணைப்பிரதமர் நிக்கிளக் கடுமையாக விமர்சித்தார்.இண்டிபென்ட் இதழுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்தப் பேட்டியில்,"பிரதமர் காமரோன் நியாயமற்ற நடவடிக்கைகளை சார்ந்து இருக்க விரும்புகிறார்" என குற்றம் சாட்டினார்.
கிளக் தரப்பு தகவல் கூறுகையில்,"பிரதமரை கிளக் மட்டும் குற்றம் சாட்டவில்லை. எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் ஹனேவும் ஜார்ஜ் ஓஸ்போர்னுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமரின் உண்மையற்ற நிலை குறித்து விமர்சித்துள்ளார்" என தெரிவித்தது.ஹனே அதிபரை சந்தித்து பேசுகையில் கூறியதாவது: வாக்கெடுப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவது தேர்தலை கூடுதல் செலவீனம் ஆக்கக் கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மாற்று வாக்கெடுப்பு முறை அமல்படுத்த வேண்டுமா என நாடு முழுவதும் உள்ள பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்து அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மே 5ம் திகதி பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்து அறியப்படுகிறது. வேட்பாளர்களை வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி தரவரிசைப்படுத்த கேட்கப்பட்டுள்ளனர்.
பேரழிவிற்குப் பின் பள்ளி திரும்பினர் ஜப்பான் மாணவர்கள்.
ஜப்பானில் கடந்த மாதம் 11ம் திகதி ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியில் புகுஷிமா, மியாகி, செண்டாய், கெசனுமா உள்பட பல பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டது.இதில் 28 ஆயிரம் பேர் பலியாயினர். இவர்களில் ஆயிரம் பேர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.வீடுகளை இழந்த மக்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கினர்.
கடந்த மாதம் 11ம் திகதி முதல் பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவர்கள், புது கல்வியாண்டு தொடங்கியதையொட்டி நேற்று பள்ளிக்கு திரும்பினர்.சுனாமியில் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களை இழந்த மாணவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சையளிக்க மனோதத்துவ நிபுணர்களை வரவழைத்துள்ளது ஜப்பான் அரசு.
தாக்குதலுக்கு பயந்து மிஸ்ரட்டா நகரில் இருந்து வெளியேறும் ராணுவம்.
கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றிய மிஸ்ரட்டா நகரில் இருந்து வெளியேறுவது என லிபிய ராணுவம் முடிவு செய்துள்ளது.மிஸ்ரட்டா நகர மக்கள் மற்றும் அருகில் உள்ள பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டில் அந்த நகரை விடுவது எனவும் ராணுவம் முடிவெடுத்துள்ளது. அதிபர் கடாபிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் லிபியாவின் பல பகுதிகளை கைப்பற்றினர்.
அவர்களிடம் இருந்து மீண்டும் அப்பகுதிகளை கைப்பற்ற லிபிய ராணுவம் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த மிஸ்ரட்டா நகரை ராணுவம் கைப்பற்றியது. எனினும் கிளர்ச்சியாளர்கள் அங்கு மறைந்துள்ளனர். அவர்கள் ராணுவத்தினரிடம் சரண் அடையவில்லை.
அவர்கள் மீது லிபிய ராணுவம் வான் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது. இதையடுத்து அங்கு லிபிய ராணுவத்துக்கு எதிராக பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகள் மிஸ்ரட்டா நகரில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்நிலையில் நேட்டோ படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக மிஸ்ரட்டாவில் இருந்து வெளியேறுவது என லிபிய படைகள் முடிவு செய்துள்ளன.
லிபிய வெளியுறவு இணையமைச்சர் கலேத் கைம் வெள்ளிக்கிழமை இரவு இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: நாங்கள் மிஸ்ரட்டாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். அந்த நகர மக்களிடமும் அந்நகருக்கு அருகே உள்ள ஸிலெதென், தர்ஹுனா, பாணி வாலித், தவர்கா ஆகிய சிறு நகரங்களில் உள்ள மக்களிடமும் சுற்று வட்டாரங்களில் உள்ள பழங்குடி மக்களிடமும் மிஸ்ரட்டா நகரை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் மிஸ்ரட்டா நகருக்குள் சென்று கிளர்ச்சியாளர்களிடம் பேச்சு நடத்துவார்கள்.
கிளர்ச்சியாளர்களை சரண் அடையச் செய்யும் பொறுப்பை அவர்களிடம் விடுகிறோம். கிளர்ச்சியாளர்கள் சரண் அடையவில்லை என்றால் சண்டை மூலம் அவர்களை மக்கள் வீழ்த்துவார்கள் என்றார் அவர்.
மிஸ்ரட்டாவில் இருந்து லிபிய படைகள் வெளியேற உள்ளதாக அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் மத்திய திரிபோலியில் உள்ள லிபிய அதிபர் கடாபியின் வீடு அருகே உள்ள பதுங்கு குழி மீது நேட்டோ படைகள் குண்டு வீசின. இது மிகவும் சக்தி வாய்ந்த வெடி குண்டு தாக்குதல் என்றும் இதில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் முஸா இப்ராகிம் தெரிவித்தார்.
சிரியாவில் படுகொலை: கண்டனம் தெரிவித்தார் பான் கி மூன்.
சிரியாவில் வெள்ளிக்கிழமை அரசுப்படைகளால் 70க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிரியா அமைதியான முறையில் போராடும் தனது மக்கள் மீது வன்முறையை பிரயோகிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தினார்.
நடைபெற்ற படுகொலைகள் குறித்து வெளிப்படையான, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.சிரியா அரசு சர்வதேச மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பான் கி மூன் கூறியதாக பர்ஹான் தெரிவித்தார். பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் சிரியா அரசு மதித்து நடக்க வேண்டும் என்று பான் கி மூன் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்தப் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இத்தகைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மக்களின் போராட்டங்களை ஈரானின் உதவியுடன் சிரியா நசுக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரான்சும் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளது.
விசா இல்லாத பயணத்தை ரத்து செய்ய பிரான்ஸ் தீவிரம்.
விசா இல்லாமல் சுதந்திரமாக செனகன் பகுதியில் பயணிக்கும் முறையை தற்காலிகமாக ரத்து செய்ய பிரான்ஸ் தீவிரமாக முயற்சிக்கிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பிரான்ஸ் விரும்புகிறது. துனிஷியா மற்றும் லிபியா உள்நாட்டுப் போராட்டங்களால் அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரான்சுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
ஆப்பிரிக்க தேச மக்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதைத் தடுக்க பிரான்ஸ் விரும்புகிறது. இந்த ஆண்டில் இதுவரை துனிஷியா, லிபியா, எகிப்து பகுதியில் இருந்து 26 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து வந்துள்ளதாக இத்தாலி கூறுகிறது.பிரான்ஸ் சமீபத்தில் இத்தாலி ரயிலில் வந்த துனிஷியர்களை வரவிடாமல் எல்லையை மூடியது. இதனால் இத்தாலி ரயில் பிரான்சில் நுழைய முடியவில்லை. இதனால் இத்தாலி-பிரான்ஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செனகன் விசா இல்லாத பயண ஒப்பந்தத்தை பிரான்ஸ் மீறுகிறது என இத்தாலி குற்றம் சாட்டியது. போராட்டக்காரர்கள் ரயிலில் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரான்ஸ் மூடியது. அது தவறு இல்லை என ஐரோப்பிய ஒன்றியமும் கூறியது.செனகன் பகுதி 25 நாடுகளை உள்ளடக்கியது. இதில் 22 நாடுகள் ஐரோப்பிய உறுப்பினர் நாடுகள் ஆகும். இந்த எல்லைப் புகுதி நுழைவு மற்றும் வெளியேற்றக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். அது போன்ற தருணத்தில் தற்காலிக எல்லைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.2005ம் ஆண்டில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் சர்கோசி எல்லைக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். ஜீலை 7ம் திகதி லண்டன் போக்குவரத்து அமைப்பில் தற்கொலை படைகுண்டு தாக்குதலில் 52 பேர் இறந்தனர். அதனை தொடர்ந்து சர்கோசியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
சாலமோன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்.
அவுஸ்திரேலியா அருகில் உள்ள சாலமோன் தீவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.அவுஸ்திரேலியாவுக்கு வடபகுதியில் உள்ள சாலமோன் தீவுகளின் கடற்கரைப் பகுதிகளில் நேற்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் ஹோனியாராவில் இருந்து 171 கி.மீ தொலைவு தென்கிழக்கில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவரவில்லை. இத்தீவுக் கூட்டம் பசிபிக் கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக் கூடிய பகுதியில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்லின் குண்டு வெடிப்பு: கடாபி பணத்தை நஷ்டஈடாக கேட்கும் மக்கள்.
மேற்கு பெர்லினில் உள்ள டிஸ்கோ நிகழ்ச்சியில் 1986ம் ஆண்டு தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது.இந்தக் குண்டு வெடிப்பில் 21 வயது அமெரிக்க வீரர் மற்றும் 28 வயது துருக்கிப் பெண் உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றொரு வீரர் சில வாரங்கள் கழித்து இறந்தார்.
தீவிரவாத குண்டு வெடிப்பில் 3 பேர் இறந்த போதும் 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பில் பலருக்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன. தீக்காயமும் ஏற்பட்டது.டிஸ்கோ நிகழ்ச்சி குண்டு வெடிப்புக்கு லிபியா சர்வாதிகாரி கர்னல் கடாபியே காரணம் என்ற குற்றச்சாட்டு உண்டு. 2 லிபிய ரோந்துப் படைகளை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு சிறிய தீவிரவாதக் கும்பல் மேற்கு பெர்லின் லாபெல்லே டிஸ்கோ நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பை நடத்தியது. ஜேர்மனியில் தற்போது சர்வாதிகாரி கடாபியின் 600 கோடி யூரோக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சொத்துக்களை பெர்லின் டிஸ்கோ குண்டு வெடிப்பு பாதிப்பு நபர்களுக்கு நஷ்டஈடாக தர வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். முடக்கப்பட்ட கடாபியின் சொத்துக்களை ஐக்கிய நாடுகள் சபை லிபிய மக்களுக்கு அளிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
மனிதநேய திட்டப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடாபியின் சொத்துக்களில் இருந்து குறிப்பிட்ட நிதி பெர்லின் டிஸ்கோ குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தரலாம் என வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF