Tuesday, April 19, 2011

தெளிவு பெற சில உண்மைகள்.



ஒரு குறிப்பிட்ட அமைப்பில் என்ட்ரபியின் மொத்த அளவு குறையவே குறையாது. அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு எல்லையை அடைந்த பின் அந்த அமைப்பு அப்படியே நின்று போகும் ! யோசித்து பாருங்கள். வென்னீரையும் – தண்ணீரையும் கலக்கிறீர்கள். என்ன ஆகிறது ? உஷ்ணம் மெல்ல மெல்ல வெதுவெதுப்புக்கு வந்துவிடுகிறது. இரண்டாவது விதியின்படி உஷ்ணம் வெந்நீரிலிருந்து தண்ணீருக்குத்தான் மாறமுடியுமே தவிர தண்ணீரிலிருந்து வெந்நீருக்கு அல்ல . இயற்கையின் இந்த விதி உயிரின் உற்பத்திக்கு முரண்படுவதுபோல் தோன்றும். உயிர் என்பது ஒழுங்கு… சுற்றிலும் உள்ள அணு மூலக்கூறுகள் ஒழுங்கு பெறும் போது தோன்றுவதுதான் உயிர். ஒரு டி. என் .ஏ மூலக்கூறு அமைவது, ஒரு கரு உருவாவது எல்லாமே ஒழுங்கின் அதிகரிப்பினால் விளைவதுதான். தெர்மோ டைனமிக்ஸ்ஸின் இரண்டாவது விதிப்படி ஒழுங்கு அதிகரிக்கவே முடியாது.
இதனால் உயிர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று யோசித்தார்கள்.
உண்மையில் இது முரண்பாடா ? இல்லை. இதை புரிந்து கொள்ள உங்கள் வீட்டு ஃப்ரிஜ்ஜை யோசித்துப் பாருங்கள். கோடையில் அதிலிருந்து ஐஸ் கட்டிகள் எடுக்கும்போது குறைந்த உஷ்ணத்தை ( ஐஸ் ) அதிக உஷ்ணமுள்ள உங்கள் சமையலறைக்கு அனுப்புகிறீர்கள். இது உஷ்ணத்தின் எதிர் போக்கு. இது சாத்தியமாவதற்கு ரெஃப்ரிஜிரேட்டர் கொஞ்சம் மின்சாரம் பயன்படுத்தி கம்ப்ரெசரை இயக்கி சமயலறையின் ஒழுங்க்கின்மையை அதிகரித்து சரிக்கட்டியிருக்கிறது ! ரிஃப்ரிஜிரேட்டர் என்ட்ரபியை குறைத்தாலும் சுற்றுப்புரத்தில் மின்சார மோட்டார் சூடாகி என்ட்ரபி அதைவிட அதிகரிக்கிறது.
அதுபோல்தான் உயிரின் ஒழுங்கு அதிகரிக்கும்போது வேறு எங்கோ ஒழுங்கின்மை அதிகரித்து சரிக்கட்டிவிடுகிறது என்பதே இதன் விளக்கம். நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறும்போது ஏற்படும் விரயம்தான் பயன்படுத்தப்பட்டு உயிரின் ஒழுங்காக மாறியிருக்கிறது. உயிர் என்பது ஒருவிதமான ‘ உள்ளூர் ஒழுங்கு ‘ பிரபஞ்சத்தின் ஒழுங்கின்மை அதிகரிப்பதை தவிர்க்கவே முடியாது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF