Friday, April 15, 2011

இன்றைய செய்திகள்.


டுபாயில் விரல்கள் வெட்டப்பட்டார் இலங்கைத் தொழிலதிபர்!

டுபாயில் இலங்கையரான தொழில் அதிபர் ஒருவரின் கை விரல்கள் மூன்றை தொழில் போட்டியால் இலங்கையர்கள் நால்வர் வெட்டி எறிந்து உள்ளனர். 

பசிந்து லங்கா என்கிற பெயரில் உணவகம் ஒன்றையும், கொழும்பு சுப்பர் சலூன் என்கிற பெயரில் சிகை அலங்கார நிலையம் ஒன்றையும் அண்மைய நாட்களில் இத்தொழில் அதிபர் Bur Dubai நகரத்தில் திறந்து இருந்தார். ஆயினும் இவரின் ஸ்தாபனங்களுக்கு இலங்கையர்கள் மத்தியில் குறுகிய நாட்களுக்கு இடையிலேயே மிகுந்த அங்கிகாரம் கிடைத்து விட்டது. கடந்த 15 வருடங்களாக உணவகம் ஒன்றை Bur Dubai இல் lநடத்தி வருகின்ற இன்னொரு இலங்கையருக்கு இது மிகுந்த மனப் புழுக்கத்தையும், பொறாமையையும் ஏற்படுத்தி விட்டது. 

அச்சுறுத்தியும், மிரட்டியும் பார்த்தார். பல்ன் இல்லை. தொழில் எதிரி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். இவரின் ஆட்கள் நால்வர் ஆயுதங்களுடன் சென்று தாக்குதலை நடத்தினர். தலையில் நன்றாக நையப் புடைத்தனர். கை விரல்கள் மூன்றை வெட்டி எறிந்தனர். பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார். தலையில் எட்டு இழைகள் போடும் அளவுக்கு காயம். விரல்களை பொருத்தி தைக்கின்றமைக்காக நான்கு மணித்தியால சத்திர சிகிச்சை. ஆயினும் இரு விரல்கள் இனி மேல் இயங்க மாட்டா என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். 

தாக்குதல்தாரிகள் நால்வரும் குற்றங்களை இடம்பெற்று ஒரு மணித்தியாலத்துக்கு இடையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இவர்கள் குற்றம் செய்தபோது மதுபோதையில் இருந்து உள்ளனர். குற்றங்களை பொலிஸாருக்கு ஒப்புக் கொண்டு உள்ளார்கள்.

புத்தாண்டு விபத்துக்களில் சிக்கிய 200 பேர் மருத்துவமணையில் அனுமதி!

புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே விடுமுறை கால விபத்துக்களால் 200 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி விபத்து, பட்டாசு விபத்து, மற்றும் சச்சரவுகள் காரணமாக காயமடைந்த 200 பேர் இன்று காலை வரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2010ஐ விட இப்போதைக்கு இது 20 வீத அதிகரிப்பு என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 212 பேரில் 53 பேர் வீதி விபத்துக்களில் சிக்கியவர்கள்

உலகின் சக்திவாய்ந்த தலைவர்களின் பட்டியலில் ஒபாமாவையும் பின்னுக்குத் தள்ளி முந்திய மஹிந்தர்! டைம்ஸ்

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் மஹிந்தரும் இடம்பெற்றுள்ளமை பலரது புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது. டைம்ஸ் பத்திரிகையின் குறித்த பட்டியலில் மஹிந்தர் ஒபாமாவைப் பின்தள்ளி 28ம் இடத்தைப் பிடித்திருக்கும் அதே வேளை, ஒபாமா 41ம் இடத்தில் இருக்கின்றார்.

2011ம் வருடத்தின் உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இராணுவ ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடித்த உலகின் ஒரே தலைவர் என்று டைம்ஸ் சஞ்சிகையால் புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.

65 வயதான அவர், மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான ஒரு தலைவர் என்றும் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட மேற்கத்தேய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதில் வெற்றி கண்ட ஒரு தலைவர் என்றும் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் குவியும் இந்திய சுற்றுலாப்பயணிகள்!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011 ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, இக் காலப்பகுதியினுள் 37 ஆயிரத்து 476 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலாண்டில் 43.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கு அடுத்ததாக பிரித்தானியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதேவேளை இந்த வருடத்தில் சர்வதேச ரீதியாக 7 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு மக்களிடம் புதிய நம்பிக்கைகளை தோற்றுவிக்கட்டும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ.

சிங்கள, தமிழ் புத்தாண்டு இலங்கைவாழ் மக்களில் பெரும்பாலானோரின் முக்கிய  கலாசாரப் பண்டிகையாகும். நீண்டகாலப் பாரம்பரியம் மிக்க இப் பண்டிகையின் போது,  பூவுலகிற்கும் மக்களுக்கும் சக்தியை வழங்கும் சூரியனை வழிபடுவது மரபு.
மேலும்,  கிராமிய மக்களின் விவசாயப் பொருளாதார அடைவுகளுக்கு மேலும் வளம் சேர்க்கும் ஒரு வருடாந்த பெருவிழா.  விவசாயத்துறை உட்பட , அனைத்துத்  துறைகளிலும்  துரித வளர்ச்சி கண்டுவரும் ஒரு காலகட்டத்தில்,  நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம்.  எல்லா மக்களும் எமது தாய்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் நன்மைகளை அனுபவிக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம். எனவே, இப்புத்தாண்டு எமது மக்களிடம் எதிர்கால முன்னேற்றம் குறித்த புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுவர உதவும் என சிறிலிங்கா ஜனாதி பதி மஹிந்த ராஜபகஷ இன்று விடுத்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடுகையில்; நீண்ட காலப் பாரம்பரியத்துடன் இருந்து வரும்  இக் கொண்டாட்டத்தின்  முக்கியத் துவத்தை எமது பிள்ளைகளுக்கும் உணர்த்துவதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினரான அவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை வழங்க முடியும். இப்புத்தாண்டோடு தொடர்புடைய பல்வேறு சமயச் சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களில் எமது பிள்ளைகள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  இப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எமது  இளைய சந்ததியினரின் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் பண்டிகைக் காலங்களில் சகல வகையான மதுபானங்களிலிருந்தும் தூரவிலக்கி, இன்றைய  தினத்தின் மகிழ்ச்சியை இந்த  நாட்டின் இளையவர்களும்,  பெண்களும் முழுமையாகப் பெற்றுக் கொள்ள உதவ வேண்டும்.  அனைவருக்கும் எனது மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக இப் புத்தாண்டு  அமைய  வாழ்த்துக்கள் என, அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை தெரிந்துகொள்ள இலங்கையர்களுக்கு உரிமையுண்டு, பகிரங்கப்படுத்துங்கள்! : HRW

யுத்தக்குற்றம் தொடரில் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர்,தமது விசாரணை அறிக்கையை இன்று சமர்ப்பித்திருந்தனர். எனினும் இது பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும், சிறிலங்கா அரசுக்கு ஒரே ஒரு பிரதி அனுப்பிவைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.நா செயற்குழு அறிக்கையினை பகிரங்கப்படுத்துமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. இறுதி யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்த விசாரணை அறிக்கையின் முழுமையான விபரங்களையும் தெரிந்துகொள்ள இலங்கை மக்களுக்கு உரிமை இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ஷேம் சரிஃபி தெரிவித்துள்ளார்.


போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு இந்த அறிக்கை ஆரம்பமாக இருக்க வேண்டுமே தவிர இறுதியான ஒன்றாக இருக்க கூடாது. மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, எந்தவொரு தரப்பும், பொறுப்பு கூறும் கடப்பாட்டை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை அடிப்படையற்றது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இந்த நிபுணர் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இல்லை. ஒரு பக்க சார்பாக காணப்படுவதுடன், இதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகிறது.


இதில் உள்ள விடயங்கள் தொடர்பாக உன்னிப்பாக ஆராய்ந்து அதன் பின்னரே உரிய பதில் அளிக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.இதன் மூல, ஐ.நா நிபுணர் குழு, பான் கீ மூனுக்கு சமர்ப்பித்த அறிக்கையின் பிரதி ஒன்று இலங்கை அரசிடம் சென்றடைந்துள்ளது உறுதியாகியுள்ளது.


கடந்த மார்ச் மாதம், சமர்ப்பிக்கப்படவிருந்த இந்நிபுணர் குழு அறிக்கை, நீண்ட காலத்தாமதமாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறித்தும், பான் கீ மூனை, இலங்கை இராணுவத்தளபதி சர்வேந்திர சில்வா சந்தித்தது குறித்தும் இன்னர் சிற்றிபிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் - வொய்ஸ் ஒப் அமெரிக்கா
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்று வொய்ஸ் ஒப் அமெரிக்கா ஊடகம் தெரிவித்துள்ளது. வொய்ஸ் ஒப் அமெரிக்கா இந்த கருத்தை சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு மற்றும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றை கோடிட்டு, வெளியிட்டுள்ளது.
சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர் அலன் கீனன், தமது கருத்தில், பான் கீ மூனின் நிபுணர் குழுவுக்கு சர்வதேசம் கொடுக்கும் அழுத்தம் மூலம் உரிய பதிலை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.இலங்கையின் போர்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அவசியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பில் இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்காக குழு ஒன்றை அமைக்கமுடியும்.எனினும் இலங்கைக்கு சார்பான வீட்டோ அதிகாரததை கொண்டுள்ள சீனாவும், ரஸ்யாவும் இதனை உள்நாட்டு பிரச்சினை என்றுகூறி நிராகரிக்க முயலக்கூடும் என்றும் கீனன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி, இலங்கை அரசாங்கம் இறுதி யுத்தத்தின் போது குண்டுகளால் பொதுமக்களை கொன்றமையை மறைக்க முயலுமானால் அது அந்த அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினையையே கொண்டு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை பான் கீ மூனின் நிபுணர் குழுவுக்கு ஈடாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, உரிய விசாரணை அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை எனறும் மீனாக்ஷி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கை அரசு இந்த அறிக்கையை நிராகரித்திருக்கிறது. இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஐ.நா மன்ற ஆணையின் பேரில் வல்லுநர் குழு ஒன்று தயாரித்தளித்த இந்த அறிக்கை, அடிப்படையிலேயே பல விஷயங்களில் குறைபாடுகள் உள்ளது என்று வர்ணித்திருக்கிறது.மேலும், இந்த அறிக்கை தெளிவாகவே பாரபட்சமான மற்றும், சரிபார்க்கப்படாத விஷயங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் அது கூறியது.
இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு பான் கி மூன் இந்த வல்லுநர் குழுவை நியமித்ததிலிருந்தே இந்த நியமனத்துக்கு அடிப்படையான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறது.அந்தக் குழு உறுப்பினர்களை இலங்கைக்குள் வந்து ஆய்வு செய்ய அனுமதி தரவும் இலங்கை அரசு மறுத்தது.
இந்தோனிஷிய முன்னாள் தலைமை அரசு வழக்குரைஞர், மார்சுக்கி டாருஸ்மன் தலைமையிலான இந்த மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழு, இலங்கையில் நடந்த போரில் நடந்த சம்பவங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் பொறுப்பு சுமத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தது.
இந்த பொறுப்பு சுமத்தும் பணி என்பது, போரில் அரசும், விடுதலைப்புலிகளும் செய்திருந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளைக் குறிக்கிறது என்று ஐ.நாமன்ற அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: கிலானி கடும் கண்டனம்
பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்ப்பதையும், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தது.அதோடு பாகிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் கான்ட்ராக்டர்கள் 335 பேர் வெளியேற வேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவர் சுஜா பாஷா அமெரிக்கா சென்று சி.ஐ.ஏ அதிகாரிகளிடம் கடந்த திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். உளவுத் தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா, ட்ரோன் தாக்குதலை நிறுத்தும் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் பலியாயினர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, தீவிரவாத்துக்கு எதிராக பாகிஸ்தான் போராடி வருகிறது. பழங்குடியின பகுதியில் தீவிரவாதிகளையும், அப்பாவி மக்களையும் நாங்கள் பிரித்து வைத்துள்ளோம். ஆனால் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் இவர்களை மீண்டும் இணைத்து விடுகிறது.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த போரும் வெற்றி பெற முடியாது. அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் உள்நாட்டில் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தீவிரவாதம், சட்ட ஒழுங்கு, பொருளாதாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஒரு மனித குண்டு வெடித்தால் கூட அது அன்னிய முதலீட்டாளர்களை பீதியடையச் செய்யும். எனவே ட்ரோன் தாக்குதலை அமெரிக்க நிறுத்த வேண்டும். இவ்வாறு கிலானி கூறினார்.
சோவியத் விண்கலம் ரூ.13 கோடிக்கு ஏலம் போனது.
விண்வெளிக்கு கடந்த 1961ம் ஆண்டு வோஸ்டாக் 3 கேஏ2 என்ற சோவியத் விண்கலம் அனுப்பப்பட்டது.
அதில் விண்வெளி வீரர் மேனேகுவின் மற்றும் ஒரு நாய் அனுப்பப்பட்டது. அதன் பின்பு தான் வோஸ்டாக் 3 கேஏ3 என்ற விண்கலத்தில் யூரி காகரின் என்ற விண்வெளி வீரர் விண்ணுக்கு சென்றார்.மனிதனை விண்ணுக்கு அனுப்பி 50வது ஆண்டு ஆவதையொட்டி, வோஸ்டாக் 2 கேஏ2 விண்கல கேப்சூலை சோத்தேபி என்ற ஏல நிறுவனம் மூலம் ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்க விண்வெளித்துறையிடம் உள்ள வோஸ்டாக் 2 கேஏ2 விண்கல கேப்சூலை, ரஷ்ய தொழில் அதிபர் எவ்ஜெனி யுர்சென்கோ என்பவர் ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்தார்.இதை மீண்டும் ரஷ்யா கொண்டு சென்று மியூசியத்தில் வைக்க யுர்சென்கோ முடிவு செய்துள்ளார்.
லிபிய விவகாரம்: பெர்லினில் நேட்டோ அமைச்சர்கள் பேச்சு வார்த்தை.
லிபியா விவகாரம் தொடர்பாக ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நேட்டோ அயல்துறை அமைச்சர்கள் இன்று கூடுகிறார்கள்.லிபியாவில் கடந்த 2 மாதமாக கடாபிக்கு எதிராக புரட்சி போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடாபி பதவியில் இருந்து விலக வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன.
கத்தாரில் கூடிய லிபிய தீர்வு குழுவும் கடாபி பதவி விலக வலியுறுத்தி தீர்மானம் வெளியிட்டது. லிபியாவில் கடாபி ராணுவத்திற்கு எதிராக கடந்த மாதம் அமெரிக்கா, பிரான்ஸ் வான்வழித் தாக்குதலை துவக்கின.
லிபியாவில் ஆயுதத்தடை, வான் எல்லையில் விமானம் பறக்கத்தடை ஆகியவை குறித்து பெர்லினில் கூடும் நேட்டோ அயல்துறை அமைச்சர்கள் விவாதிக்கிறார்கள். லிபியா தாக்குதலில் கூடுதல் நாடுகள் இணைய வேண்டும் என பிரிட்டனும், பிரான்சும் விரும்புகின்றன.லிபிய விவகாரம் குறித்து ஆப்பிரிக்க கூட்டமைப்பிலும், கெய்ரோவிலும் நடைபெறும் இஸ்லாமிய அமைப்பு மாநாட்டிலும் விவாதிக்கப்படுகிறது.
லிபியாவில் தங்களது தாக்குதல் குறைந்துள்ளது என அமெரிக்கா கூறியது. ஆனால் நேற்று லிபிய விமானப்படை பிரிவுகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசின.பெர்லின் கூட்டத்தில் அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்கிறார். லிபிய ராணுவம் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
ஜப்பானில் உள்ளூர் விமான சேவை தொடக்கம்.
சுனாமி பாதிக்கப்பட்ட ஜப்பான் சென்டாய் விமான நிலையத்தில் முதல் பயணிகள் விமானம் தரை இறங்கியது.ஜப்பானின் வடகிழக்குப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இந்த இயற்கைப்பேரிடரில் 12 ஆயிரம் மக்கள் பலியாயினர்.
ஜப்பானின் வடகிழக்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமாவில் உள்ள முதன்மை அணு மின் நிலையம் கடுமையாக சேதம் அடைந்தது. இதன் பாதிப்பை இன்னும் சரி செய்ய முடியவில்லை. அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு தொடர்ந்து கசிந்துக் கொண்டிருக்கிறது.இந்த கசிவு அளவு அதிகபட்ச நிலையான 7ம் நிலையை எட்டியுள்ளது. கடந்த 1986ம் ஆண்டு உக்ரைன் நாட்டு செர்னோபிள் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின் போது கதிர் வீச்சு 7ஆம் நிலையை எட்டியது.
அப்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கதிர்வீச்சால் உயிரிழந்தனர். அதே போன்ற ஆபத்து தற்போது ஜப்பானை சூழ்ந்துள்ளது என எச்சரிக்கப்பட்டது. இதற்கிடையே ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் சுனாமி பாதிக்கப்பட்ட சென்டாய் பகுதியில் உள்நாட்டு விமான சேவையை துவக்கியது.
புதன்கிழமை காலை தலைநகர் டோக்யோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் இருந்து சுனாமி பாதிக்கப்பட்ட சென்டாய் விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானநிலையத்தை ஜப்பானின் அனைத்து தன்னார்வ அமைப்பினரும் பயன்படுத்தி சுனாமி பகுதிகளில் பார்வையிட்டு உதவி மேற்கொள்வார்கள்.
ஜப்பான் தற்பாதுகாப்பு படைபிரிவினர் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் நிவாரணப் பொருட்களை கொண்டு வருவதற்கு இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். சுனாமி ஏற்பட்டதால் விமான ஓடுபாதை தண்ணீரில் மூழ்கியது.இதனால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த விமான நிலையத்தில் வருகிற செப்டம்பர் மாதம் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என ஜப்பான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஏமனில் தொடரும் போராட்டம்: மக்களை தாக்க ராணுவம் மறுப்பு.
துனுசியா, எகிப்து நாடுகளில் நடந்த பொதுமக்கள் போராட்டத்தால் அந்த நாட்டு அதிபர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து அரபு நாடான ஏமன் நாட்டிலும் அதிபருக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 32 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருக்கும் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் மீது அதிபர் ராணுவம் மற்றும் பொலிசாரை ஏவி விட்டு அடக்க முயன்றார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பின்னர் போராட்டம் கட்டுக்குள் வந்தது. இப்போது கடந்த ஒரு வாரமாக மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏமன் நகரில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அவர்களை கலைந்து செல்லும்படி ராணுவம் எச்சரித்தது. ஆனால் பொது மக்கள் மறுத்தனர். அப்போது ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராணுவம் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது.
இதில் 5 பேர் உயிர் இழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி இருப்பதை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் கலவரம் பரவி உள்ளது. இதற்கிடையே ராணுவ படையிலேயே பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் பொதுமக்களுக்கு ஆதரவாக மாறி உள்ளனர்.
மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைக்குழிகள்.
வடகிழக்கு மெக்ஸிகோவில் 16 சடலங்களைக் கொண்ட பாரிய புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் கடந்த ஒரு வாரத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க எல்லைக்கு அண்மையிலுள்ள சான் பெர்னான்டோ பிரதேசத்திலேயே இப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இப் பிரதேசத்தினூடாக பேருந்துகளில் பயணம் செய்த வேலையில் கடத்தப்பட்டவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ராணுவ நடவடிக்கை லிபியாவிற்கு தீர்வை தராது: ஜேர்மனி
லிபியாவில் ராணுவ நடவடிக்கை தீர்வு தராது என ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர் வெலே கூறினார்.லிபியாவில் கடாபி சர்வாதிகார ஆட்சியை அகற்ற பிரான்ஸ், பிரிட்டன், கனடா, அமெரிக்க படைகள் முகாமிட்டு உள்ளன. லிபியாவில் படைகள் களம் இறங்குவதை ஜேர்மனி விரும்பவில்லை. லிபியாவில் புரட்சி போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய படைகள் வான் வழித் தாக்குதலை நடத்துகின்றன.
மோமர் கடாபி பதவியில் தொடர்ந்து நீடிக்கும் உரிமையை இழந்து விட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜேர்மனி அமைச்சர் வெஸ்டர் வெலே கூறினார். இருப்பினும் லிபியாவில் நல்ல தீர்வு காண ராணுவ நடவடிக்கை உதவாது என்றார்.வெஸ்டர் வெலேவின் கருத்துக்கள் பிரிட்டிஷ் பிரெஞ்சு கூட்டாளிகளை கவரவில்லை. இருப்பினும் லிபியாவுக்கு தீர்வு காண கூடிய சர்வதேச பிரதிநிதிகளின் ஆதரவு வெஸ்டர் வெலேவுக்கு கிடைத்தது.
ஐரோப்பிய ஒன்றிய அயல் கொள்கை தலைவர் காதரின் அஸ்தான் கூறுகையில்,"லிபியாவில் விரைவான அரசியல் மாற்றம் வர வேண்டும்" என வலியுறுத்தினார். லிபிய மோதலுக்கு ராஜிய ரீதியில் தீர்வு காண வேண்டும் என நேட்டோ பொதுச் செயலாளர் கூறினார்.
பாகிஸ்தானிற்கு அமெரிக்காவின் அறிவுரை.
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் நீதிக்கு முன்பு உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.அதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. இக்கருத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அதிகாரி மார்க் டோனர் கூறியது: மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதிக்கு முன்பு கொண்டு வருவதில் பாகிஸ்தானுக்குப் பிரத்யேகமான பொறுப்பு உள்ளது. இந்த பயங்கரவாத செயலுக்குப் பின்னால் உள்ளவர்கள் நீதிக்கு முன் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டு வருவது சர்வதேசக் கடமையாகும். அந்தக் கடமையை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ துணை புரிந்தது என இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தஹவூர் ராணா அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்தப் பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியின் கருத்து வெளியிடப்பட்டது.
கூடுதல் குடியேற்றத்தை தடுக்க கடுமையாக்கப்படும் விதிமுறைகள்.
பிரிட்டனில் கூடுதல் குடியேற்ற நிகழ்வுகள் ஏற்படுவதால் அதிக சிரமங்களும், சமூகத்தில் பிணைப்பு இல்லாத நிலையும் ஏற்படுகிறது என பிரதமர் டேவிட் காமரூன் கடுமையாக சாடினார்.
பிரிட்டனின் கலாசார நலன் கருதி குடியேற்ற நடவடிக்கைகளை குறைக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு உள்ளது. மாணவர்கள் விசா எண்ணிக்கையையும், தொழிலாளர்கள் விசா எண்ணிக்கையையும் குறைக்க காமரூன் திட்டமிட்டு உள்ளார்.பிரிட்டன் தொழிலாளர்கள் நலவாழ்வு நடவடிக்கையை உரிய முறையில் எதிர்கொள்ளாத வரை, குடியேற்ற நிகழ்வை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என காமரூன் கூறினார்.
பிரிட்டனில் தற்காலிகமாக தங்குவதற்கான விசாக்கள் பெறவும், நிரந்தர விசாக்கள் பெறவும் விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன. கடந்த 1997ம் ஆண்டு முதல் 25 லட்சம் புதிய பிரிட்டன் வேலை வாய்ப்புகளில் 75 சதவீதத்தை அயல்நாட்டு தொழிலாளர்களே பெற்றுள்ளனர்.
குடியேற்ற நிகழ்வால் ஏற்படும் பிரச்சனையாக இது இல்லை. நமது வேலைகளில் நாம் காட்டும் சுணக்கமே இதற்கு காரணம் என பிரதமர் கருதுகிறார்.பிரிட்டனின் வேலை சந்தை அயல் நாட்டு தொழிலாளர்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 22 லட்சம் அயல்நாட்டு மக்கள் பிரிட்டனில் குடியேறி உள்ளனர் என பிரதமர் காமரூன் கூறினார்.
ஐவரிகோஸ்டின் முன்னாள் அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்: அரசின் திடீர் நடவடிக்கை
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டின் முன்னாள் அதிபர் லாரென் பாகுபோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையை புதிய அரசு மேற்கொண்டது. 
ஏறத்தாழ பத்து வருட காலம் ஐவரிகோஸ்ட்டின் அதிபராக லாரென் பாகுபோ ஆட்சி புரிந்தார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வியுற்றார். ஆனால் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் பதவியில் தொடர முயன்றார்.இதனால் அந்நாட்டில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கினர். இதில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
எதிர்ப்பு வலுப்பெற்றதும் லாரென் பாகுபோ ரகசிய இடத்தில் பதுங்கினார். தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அலசானே குவாட்டாரா ஆட்சிப் பொறுப்பேற்று புதிய அதிபரானார்.
இந்நிலையில் மறைவிடத்திலிருந்த பாகுபோ கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இப்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
தெருக்களில் லாரென் பாகுபோ ஆதரவாளர்கள் ஆயுதங்களைத் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பலர் துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கனரக ஆயுதங்களும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த பாகுபோவின் உள்துறை அமைச்சர் டெஸிரே டாக்ரோ இறந்து விட்டார் என்ற செய்தி வெளியானது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
நாடுகளில் ஏற்படும் கலவரங்களினால் ஆண்டுக்கு 100 மனிதநேய பணியாளர்கள் உயிரிழக்கின்றனர்.
கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சேவையாற்றி வரும் மீட்பு மற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் ஆண்டுக்கு சுமார் 100 பேர் உயிரிழக்கின்றனர் என ஐ.நாவின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனிதநேய உதவி மையத்தின் தலைவராக இருந்த ஜான் எகலண்ட் அளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பது: உலகில் பல நாடுகளில் உள்நாட்டுக் கலவரம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, அந்த இடங்களுக்கு ஐ.நாவின் நிதியுதவியுடன் பல தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சேவை புரியச் செல்கின்றனர்.
இது போன்ற அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் நடுநிலை குறித்து உள்ளூர் மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பொழுது அவர்கள் வன்முறைக்கு ஆளாகிறார்கள். சில சமயம் அவர்கள் தங்கள் உயிரை இழக்கவும் நேரிடுகிறது. இது போல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பேராவது உலகெங்கும் உயிரிழக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் தான் அதிக அளவு மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்படுகின்றனர். எங்கு அதிக அளவு தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகின்றனரோ அங்கு தான் அதிக உயிரிழப்பும் நேரிடுகிறது என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானில் 280 தொண்டு நிறுவனங்கள் ஐ. நா நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF