Sunday, April 3, 2011

இன்றைய செய்திகள்.


இந்திய வீரர்களின் இணைப்பாட்டத்தை பிரிக்க முடியவில்லை! கட்டுநாயக்காவில் சங்ககார பேட்டி.

நேற்றைய தினம் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணியினர் சற்று முன்னர் நாடு திரும்பினர். இவர்களின் நலன் கருதி விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இலங்கை அணியின் தலைவர் குமார் சங்ககார ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
அங்கு அவர் தெரிவித்த முக்கியமான விடயங்கள் வருமாறு, 
எங்கள் அணி மிகச்சிறப்பாக விளையாடி 274 என்ற ஓட்ட இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இந்த ஓட்ட இலக்கு இறுதிப்போட்டியில் ஒரு அணி பெறக்கூடிய அதிகபட்ச இலக்கு என்று கூறினார். தாங்கள் அப்போது எங்களுக்கு தான் உலகக் கிண்ணம் என்று நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் இந்திய வீரர்களின் இணைப்பாட்டத்தை பிரிக்க எங்களால் முடியவில்லை. ஆனால் எங்கள் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினார்கள்.

இராணுவத் தலைமையகத்தை பத்தரமுல்லைக்கு மாற்ற 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ள அரசு!

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சையும் இராணுவத் தலைமையத்தையும் பத்தரமுல்லைக்கு இடமாற்றுவதற்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சும், இராணுவத் தலைமையகமும் ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட முன்னணி ஹோட்டல் அமைக்கும் ஷங்ரிலா நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டும் பாதுகாப்புப் பிரிவை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் 10 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் ஷங்ரிலா நிறுவனம் 7 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்க 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது. 

இந்த ஹோட்டல் 500 அறைகளைக் கொண்டதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புப் பிரிவை பத்தரமுல்லைக்கு இடமாற்றுவதற்கான நிர்மாணப்பணிகள் இவ்வருடமும் அடுத்த வருடமும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பை வர்த்தக நகரமாக மாற்றும் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் பிரதான அரச திணைக்களம் புறநகரில் அமைக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு விவகாரங்களிலேயே ஒபாமாவுக்கு மிக கவனம்: மக்கள் கருத்து
உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதை விட வெளிநாட்டு விவகாரங்களிலேயே அதிபர் ஒபாமா அதிக கவனம் செலுத்துகிறார் என்று அமெரிக்க மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒபாமாவின் ஆட்சி முறை குறித்து அமெரிக்காவில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது. மார்ச் 25 முதல் 27 ம் திகதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.முக்கியமாக இப்போது லிபியா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகம் தலையிடுவதைச் சுட்டிக்காட்டி அமெரிக்க மக்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒபாமாவின் நிர்வாகம் குறித்து கருத்துத் தெரிவித்தவர்களில் 46 சதவீதம் பேர் அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று கருத்துக் கூறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உள்நாட்டு சுகாதார கொள்கையில் அவர் அதிக கவனம் செலுத்துவதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
முதலில் வெளிநாட்டு விவகாரம், லிபியா பிரச்னை, அடுத்ததாக உள்நாட்டு சுகாதாரம், பொருளாதாரம், பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒபாமா முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.இதற்கு முன் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒபாமா நடவடிக்கை எடுப்பதாக 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இப்போது இது 39 சதவீதமாகக் குறைந்து விட்டது.
முன்னதாக சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில் 2008 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வேன் என்பதே அவரது முக்கியமான வாக்குறுதியாக இருந்தது.ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையை போக்குவதில் ஒபாமா அதிக கவனம் செலுத்தவில்லை என பெரும்பாலானோர் கருத்துக் கூறியுள்ளனர்.
ஜப்பானில் தொடரும் சிக்கல்கள்.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து மிக அதிகளவு கதிர்வீச்சு கொண்ட நீர் கடலில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நிலநடுக்கத்திற்குப் பின் கதிர்வீச்சு பாதித்த நீர் கடலில் கலப்பது இதுவே முதன் முறை. ஜப்பானின் புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளிலும் தற்போது மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு உலைகளை குளிரூட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் 2 ம் உலைக்கும், கடலுக்கும் இடைப்பட்ட இடத்தில் தரையில் 8 அங்குலம் அளவிற்கு ஒரு கீறல் விழுந்தது. இக்கீறலைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சிறிய குழியில் நீர் தேங்கிக் கிடந்தது. இதைக் கண்டறிந்த அணுமின் நிலைய பணியாளர்கள் அந்த நீரை ஆய்வு செய்த போது அதில் வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு அதிகமாக கதிர்வீச்சு இருப்பது தெரியவந்தது.
குழி இருந்த இடத்திற்கு அடியில் கடல் நீரை உலைக்குக் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. நீர் எவ்விதம் கசிந்தது என்பது தெரியவில்லை. கடலில் அதிகளவு கதிர்வீச்சு கொண்ட நீர் கலந்திருக்கக் கூடும் என்று டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி(டெப்கோ) அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த மார்ச் 11 ம் திகதி நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின் கதிர்வீச்சு கலந்த நீர் கடலில் கலப்பது இதுவே முதன் முறை. அக்குழியையும், கீறலையும் கான்கிரீட் கலவை கொண்டு நேற்று மூடினர்.
எனினும் அப்பகுதியில் பல இடங்களில் இதுபோன்ற சிறிய கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்கரையைச் சுற்றியுள்ள 15 கி.மீ சுற்றளவில் காற்றில் கதிர்வீச்சின் அளவைக் கணிக்கும் முயற்சியில் டெப்கோ ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நவோட்டோ கான் நேற்று முதன் முறையாக சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். கதிர்வீச்சு அபாயகரமான அளவில் வெளிப்பட்ட நிலையிலும், தளராது பணியாற்றிய டெப்கோ ஊழியர்களுக்கு கான் நன்றி தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF