Wednesday, April 20, 2011

இன்றைய செய்திகள்.


இலங்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புப் போரவையில் விவாதிக்ககூடாது என்கிறது ரஸ்யா.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் போரவையில் விவாதிக்கப்படவுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் இலங்ரக தொடர்பாக விவாதிக்கக் கூடாது என பாதுகாப்புப் பேரவையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ரஸ்யா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இதோபோல் 2009ஆம் ஆண்டும் இலங்கை தொடர்பாக ஐநா பாதுகாப்புப் பேரவையில் விவாதத்திற்குக் எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் ரஸ்யா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்ன செய்யப்போகிறார் பான் கீ மூன்? கேள்வி எழுப்புகிறது இன்னர் சிற்றி பிரஸ்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதை ரஷ்யா தடுத்துள்ள இந்நிலையில், பான் கீ மூன் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தில் எது குறித்து பேசப் போகிறார்? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 


ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் கடந்த 12ஆம் திகதி நிபுணர்குழு 196 பக்க அறிக்கையை கையளித்திருந்தது. அதன் வன்பிரதி ஒன்று ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியும், இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவருமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது. ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் வெளியிடவுள்ளதாக அப்போது ஐ.நா தெரிவித்திருந்தது. இதற்கு சவேந்திர சில்வா அரசுக்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக கூறியிருந்தார்.

இதற்கு ஐ.நா. 36 மணி நேரம் காலஅவகாசம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. எனினும் 36 மணிநேர கால அவகாசத்தின் பின்னரும் இலங்கை அரசிடம் இருந்து ஐ.நா.விற்கு பதில் கிடைக்கவில்லை. 


ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வழங்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் வன்பிரதியே கொழும்பு நாளிதழுக்கு வழங்கப்பட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த 36 மணிநேரத்துக்குள், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கையின் வன்பிரதி ‘ஸ்கான்‘ செய்யப்பட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணங்கிப் போகும் ஐலன்ட் நாளிதழுக்கு வழங்கப்பட்டது என இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. 


ஐலன்ட் நாளிதழ் இந்த அறிக்கையை வெளியிட்டு 5 நாட்களாகியும், பான் கீ மூன் இந்த அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்த அறிக்கைக்கு எதிராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மே 1ஆம் திகதி பாரிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் இதற்கு என்ன செய்யப் போகிறார்? போரை நிறுத்துமாறு அவர் ஏன் கோரவில்லை? நம்பியாரை ஏன் தனது தூதுவராக அனுப்பி வைத்தார்? எனக் கேள்வி எழுப்புகிறது.


மேலும், வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய விஜய் நம்பியாரை பான் கீ மூன் ஏன் தன்னுடன் தொடர்ந்து வைத்திருக்கிறார் என இன்னர் சிற்றி பிரஸ் நேற்று வெளியிட்ட அதன் செய்தியில் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்து!

அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் சிலர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவேண்டும் என்று தமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளனர். 


ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி கிறிஸ் ஹொலன், ரொபர்ட் அடேர்ஹோல்ட் ஆகிய இந்நாடாளுமன்ற உறுப்பினர்களே தமது நாடாளுமன்ற சகாக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இலங்கை விவகாரக்குழுவின் இணைத் தலைவர்களாவர்.தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அடைந்த முன்னேற்றத்தை கருத்திற் கொள்ளுமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். 


இலங்கை பல்கட்சி மற்றும் பல்லின ஜனநாயகம் கொண்ட ஒரு கட்சியாகும். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது. 30 வருட உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்ட உணவுர்பூர்வமான காயங்களைக் குணப்படுத்துவதில் தனது சக்தியைக் குவித்து வருகிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் நான்காவது மொழி!
பல்லின மக்கள் வாழும் இலங்கையில் மூன்று மொழிகளும் அரச கரும மொழிகளாக பயன்படுத்தப்படுகின்றமை நாம் அறிந்ததே. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீதிப் பலகைகள், பஸ் பலகைகள் போன்றவற்றில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்துடன் அரபு மொழியும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

முஸ்லிம் மக்கள் செறிந்து வாழக்கூடிய மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் மாத்திரம் அரபு மொழியையும் உபயோகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏழ்மையை ஒழிக்க இந்தியா சிறந்த முயற்சி : உலக வங்கி

உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் வறுமை, பட்டினியை எதிர்த்து போரிட்டு,வளர்ச்சி இலக்கை அடைந்துவருவதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.
இதில் குறிப்பாக சீனாவும் இந்தியாவும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளனவாம். தரமான பொருளாதார கொள்கைகள் காரணமாக, 2015ற்குள் இந்த நாடுகள் இன்னமும் நல்ல வளர்ச்சியை எட்டும் எனவும் உலகவங்கி தெரிவித்துள்ளது.எனினும் இந்நாடுகளில் 45% வீதம் சுகாதார பிரச்சினைகளும், 39% இறப்பு வீதமும் இருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இக்பால் சிங்கை விசாரிக்க பூரண அனுமதியளித்தது பிரதமர் அலுவலகம்.

ஹசன் அலிக்கு கடவுச்சீட்டு பெற பரிந்துரை கடிதம் அளித்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் இக்பால் சிங்கிடம், தாராளமாக விசாரணை நடத்தலாம் என பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டி, பலகோடி ரூபாய் கறுப்பு பண விவகாரத்தில், ஹசன் அலி கான் கைதானார். அவர் மீதான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, 1997ம் ஆண்டு ஹசன் அலிக்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்க, அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இக்பால் சிங் பரிந்துரை கடிதம் அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விசாரிக்க அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.

எனினும், இக்பால் சிங் தற்போது துணை ஆளுனராக இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் சட்ட சிக்கல் எழுந்ததுடன், பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதனை கவனத்தில் எடுத்த பிரதமர் அலுவலகம்,  இக்பால் சிங்கை அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும், இக்பால் சிங்கிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் போது, அந்த விசாரணை விவரங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென அறிவித்தது.இதையடுத்து இந்த வார இறுதியில் புதுச்சேரி சென்று இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த அமலாக்க பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

மனிதக் குரங்கு போல ஒபாமாவைச் சித்தரித்து ஈ.மெயில்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்கர் அல்ல. வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தான் அமெரிக்காவில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை ஒபாமா வெளியிட்டார். தற்போது, அவரை இழிவுபடுத்தும் வகையில் இனவெறி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அவரது தாய், தந்தையை பெரிய மனித குரங்கு போன்றும், அவர்களுடன் குட்டி மனித குரங்காக ஒபாமா இருப்பது போன்றும் படம் வரைந்து இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளது.


இதை கலிபோர்னியாவில் உள்ள “டீ பார்ட்டி” அமைப்பைச்சேர்ந்த மரில்யன் தேவன் போர்ட் என்ற பெண் அனுப்பியுள்ளார். இவர் ஆரிஞ்ச் மாகாண குடியரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். படத்துடன் அனுப்பியுள்ள இ-மெயிலில், அவர் யார்? என்று தெரியவில்லை ஏனெனில் அவரிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இ-மெயிலுக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.


ஒபாமா குறித்து அவர் அனுப்பிய இந்த இ-மெயில் இனவெறியை தூண்டுகிறது. அவரது இந்த மட்டமான ரசனை வெறுக்க தக்க வகையில் உள்ளது என அவரது கட்சியின் ஆரிஞ்ச் மாகாண தலைவர் ஸ்காட்பாக் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும் என கூறி உள்ளார். இது போன்று அவரது கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


ஆனால் பதவி விலக தேவன் போர்ட் மறுத்துள்ளார். நான் இனவெறியை தூண்டுவதற்காக இது போன்று இ-மெயில் அனுப்பவில்லை. ஒபாமாவை கேலி (ஜோக்) செய்யவே இது போன்று செய்தேன். எனது நடவடிக்கையில் யாருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

ஆர்ப்பாட்டங்களுக்காக சிரியாவின் எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்கா இரகசிய நிதி உதவி - விக்கிலீக்ஸ்.

சிரியா மற்றும் ஏமன் நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.சிரிய நாட்டில் "பஸார் அல் ஆஸாட் மற்றும் ஏமன் நாட்டில் "அலி அப்துல்லா சலா" ஆகிய இருவரின் சர்வாதிகாராங்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் மத்திய கிழக்கில் தற்போது திவிரமடைந்துள்ளது.
இவ்வேளையில் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு, சிரியாவின் எதிர்கட்சிகளுக்கும், சிரிய தொலைக்காட்சியான பராடா உட்பட சிரிய எதிர்பாளர்களுக்கும் இரகசியமாக நிதி உதவி செய்து வருவதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவின் அரசுக்கெதிரான போராட்ட செய்திகளை அதிகமாக வெளியிடுமாறு சாட்டலைட் டிவி சேனலுக்கு நிதி வழங்கியதாகவும், மேலும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்க்கட்சியினருக்கு பெரும் தொகையான பணத்தை இரகசியமாக அமெரிக்கா வழங்கியது எனவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக அமெரிக்கா 6 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்பிருந்தே நிதி உதவி வழங்கி வருகின்ற போதிலும் 2010 செப்டம்பரிலும் இரகசிய பணப்பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் விக்கிலீக்ஸை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்.

ஜப்பானில் கடந்த மாதம் 11ந் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 28 ஆயிரம் பேர் பலியானார்கள்.மேலும் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது. எனவே அவற்றை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது.வெடித்து சிதறிய 4 அணு உலைகளில் 2 மற்றும் 4வது உலைகளில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டது. எனவே பாதுகாப்பு கவச உடை அணிந்து கதிர்வீச்சை தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 1 மற்றும் 3வது அணு உலைகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அந்த அணு உலைகளின் கட்டிட மேற்கூரை முழுவதும் தகர்ந்தது. எனவே அதில் இருந்து தான் அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறி வருகிறது.எனவே கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஊழியர்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அணு உலை வெடித்த ஒரு மாதத்துக்கு பிறகு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவை கண்டறிய அமெரிக்கா அதி நவீன ரோபோவை அனுப்பியது.
அது 1 மற்றும் 4வது அணு உலைக்குள் சென்று அங்குள்ள தட்பவெட்பநிலை, அழுத்தம் மற்றும் கதிர்வீச்சு அளவை கணக்கிட்டு ஆய்வு செய்தது. அதன் படி இந்த அணு உலைகளில் கதிர் வீச்சு அளவு மிகவும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.எனவே அங்கு அதிநவீன முறையில் கதிர்வீச்சு பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கதிர்வீச்சு பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் நேட்டோகான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியின் எம்.பி மசாஷிவாகி பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பினார். அப்போது இந்த விவகாரத்தில் பிரதமர் நேட்டோகான் மற்றும் டோக்கியோ மின்வாரியம்(டெப்கோ) நடவடிக்கை திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.இதற்கு பதில் அளித்த பிரதமர் நேட்டோகான் நடந்த தவறுக்கு நாட்டு மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். மேலும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அமெரிக்க தென்கிழக்கு பகுதிகளை மாறிமாறி தாக்கும் டொர்னாடோ புயல் காற்று : இதுவரை 26 பேர் பலி.

நோர்த் கரோலினா, அலபாமா உட்பட அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில், ஏற்கட்ட கடும் 'டோர்னாடோ' புயல் காற்றினால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மூன்று நாட்களாக வீசிவரும் இப்புயல் காற்றினால் கரோலினா பகுதியில் அமைந்திருக்கும் வீடுகள் கடுமையான தேசத்திற்கு உள்ளாகியுள்ளன. கரோலினாவில் 9 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஓக்லாஹாமாவில் இருவரும், அர்கன்ஸாஸின் ஏழுபேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மிஸிஸிப்பியில்  ஒருவர் பலியாகியிருப்பதுடன் 6 பேர் படுகாயமடந்துள்ளனர். எனினும் புயல் காற்று நெருங்கிவருவதை பல்லாயிரக்கணக்கானோர் டுவிட்டர் வாயிலாக தகவல் பரிமாறிக்கொண்டதை அடுத்து, அனர்த்தம் நிகழ்ந்த இடங்களில் இருந்து பலர் தப்பியுள்ளனர்.இப்புயல்காற்று வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.




சீனாவில் மழையுடன் கூடிய சூறாவளிக்கு 17 பேர் பலியாகினர்.

நேற்று சீனாவில் குவாங் டாங் மாகாணத்தில் உள்ள போஸ்கான் நகரத்தில் கடுமையான சூறாவளி தாக்கியுள்ளது.சூறாவளியுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்ததனால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. அந் நகரத்தை சுற்றியுள்ள இடங்களான ஹாங்ஷி, ஷாலோகிங், டொங்கன் ஆகிய இடங்களிலும் இச் சூறாவளியும் மழையும் தாக்கியுள்ளது.இச் சூறாவளி மழையில் சிக்கி17 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 118 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பல பொருட் தேசமும் ஏற்பட்டுள்ளது.
அடக்குமுறையை ஒழிக்க உதவிய பேஸ்புக் நிறுவனருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் எகிப்து வரவேண்டும் என "ஜனவரி 25 புரட்சி" அமைப்பின் சார்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த அடக்குமுறை ஆட்சிக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு மக்களின் எதிர்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும் அனைத்து போராட்டக் குழுக்களையும் ஒருங்கிணைப்பதில் பேஸ்புக் இணையதளம் முக்கிய பங்கு வகித்தது.
தற்போதைய நிலையில் அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் போராட்டக் குழுக்கள் அனைத்திற்கும் தலைமையேற்று செயல்பட்ட "ஜனவரி 25 புரட்சி" அமைப்பினர் சார்பாக எகிப்துக்கு வருகை தரவேண்டும் என பேஸ்புக் நிறுவனர் மார்க் அழைக்கப்பட்டுள்ளார்.
எகிப்து கலாசாரத் துறை அமைச்சர் இமாத் அபு காஷி வழியாக இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மார்க் ஜூகர்பெர்க்,"சமூக வலைதளமாக நான் உருவாக்கிய பேஸ்புக் அடக்குமுறையை எதிர்த்த மக்களுக்கு உறுதுணையாக நின்று அவர்கள் சுதந்திரம் பெற உதவியது என நினைக்கும் போது மிகவும் பெருமையடைகிறேன்" என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல்
பார்வை இழப்பை தடுக்க இனி ஒரே ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதுபற்றி லண்டனில் கண் சிகிச்சை நிபுணரும், விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவருமான ஆலிவர் பேக்ஹவுஸ் கூறியதாவது: ஒரே ஒரு ஊசி மூலம் பார்வையிழப்பை தடுக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம்.அந்த ஊசி மூலம் ஸ்டீராய்டை கண்களுக்கு பின்னால் இடம்பெறச் செய்யலாம். பார்வையிழப்பை ஏற்படுத்தக்கூடிய கண் நரம்புகள் அடைப்பை அது தடுக்கும். அதனால் திடீர் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் விழித்திரை அருகே எரிச்சலுக்கு எதிரான மருந்தை அந்த ஊசி வெளியிடும். எனவே கண் எரிச்சலால் ஏற்படும் பார்வைக் குறைவு தடுக்கப்படும். இந்த ஊசியை எதிர்கால பார்வையிழப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். ஏற்கனவே பார்வைக் குறைபாடு ஏற்பட்டவர்களும் பார்வையை மீட்க பயன்படுத்த முடியும்.இது தவிர பலவிதமான கண் நோய்களை குணப்படுத்தவும் இந்த ஊசி உதவும். நீரிழிவு நோய் மற்றும் வயது காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடுகளையும் தவிர்க்க முடியும். இந்த சிகிச்சைக்கு ரூ.1.44 லட்சம் செலவாகும் என ஆலிவர் தெரிவித்தார்.
பிராட்போர்டில் உள்ள யாக்ஷயர் கண் மருத்துவமனையின் சிகிச்சை நிபுணர் ஷபீக் ரகுமான் கூறுகையில்,"இந்த ஆராய்ச்சி முடிவு பிரமிக்க வைக்கிறது. பல்வேறு பார்வைக் கோளாறுகளை தவிர்க்க இந்த ஊசி சிகிச்சையை பயன்படுத்தலாம். அதன் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன" என்றார்.
உணவுப்பொருட்களை பெற்றுக் கொண்டிருந்த அப்பாவி மக்களின் மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சு.
லிபியாவில் அதன் தலைவர் கடாபிக்கு எதிராக கடந்த பெப்பிரவரியில் துவங்கிய போராட்டத்தில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்று எதிர்த்தரப்பு தெரிவித்துள்ளது.அதே நேரம் மிஸ்ரட்டா நகரில் ஐ.நா மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிப்பதாக லிபிய அரசு அறிவித்துள்ளது. லிபியாவின் மிஸ்ரட்டா நகர் மீது கடாபி படைகள் தொடர்ந்து கொத்து வெடிகுண்டுகளை வீசி வருவதால் அங்கு பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை.
பெரும்பாலான மக்கள் மசூதிகளிலும், பள்ளிகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். அண்டை நாடுகளில் இருந்து அந்நகரில் வேலை பார்த்து வருபவர்கள் மிஸ்ரட்டா துறைமுகம் அருகே சாலையில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ளனர்.விரைவில் மிஸ்ரட்டாவில் இருந்து தாங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக இப்படி தங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நகரில் தற்போது உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு பெரும் பஞ்சம் நிலவுகிறது. நேற்று ஒரு பகுதியில் ஐ.நா உணவு அமைப்பின் சார்பில் மக்களுக்கு ரொட்டி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அதைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்தன. இச்சம்பவத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மிஸ்ரட்டா நகரில் தற்போது வெளிநாடுகளில் இருந்து வேலை பார்க்க வந்தவர்கள் 5000 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
நேற்று இவர்களில் 970 பேர் ஒரு படகின் மூலம் மீட்கப்பட்டு பெங்காசிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் துறைமுகத்தில் காத்துக் கிடப்பதாக சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பு கூறியது.இதற்கிடையில் மிஸ்ரட்டா நகரில் ஐ.நா மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளுக்கு ஏற்பாடு செய்வதாக லிபிய அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் டிரிபோலி, சிர்ட், அல் அஜீசியா நகரங்களின் மீது நேட்டோ விமானப் படைகள் நேற்று கடும் தாக்குதல் நடத்தின.
இந்நகரங்களில் உள்ள கடாபி ராணுவ மையங்கள், தொடர்பகங்கள் ஆகியவற்றின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக நேட்டோ இணையதளம் கூறியுள்ளது. அதே நேரம் மிஸ்ரட்டா மீது கடாபி படைகள் நேற்றும் குண்டு மழை பொழிந்தன.
புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்: ஜப்பான் மக்களின் வேண்டுகோள்
ஜப்பானில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நேட்டோ கானுக்கு பதில் வேறொருவர் பிரதமராக வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி மற்றும் கதிர்வீச்சுப் பேரிடர்களின் போது பிரதமர் நேட்டோகான் விரைவாகவும், சரியாகவும் செயல்படவில்லை என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்ப பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜப்பானின் நிக்கி பத்திரிகை இயற்கைப் பேரிடர்களை பிரதமர் கையாண்ட விதம் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.அதில் 70 சதவீதம் பேர் பிரதமரின் தலைமை பற்றி அவநம்பிக்கை தெரிவித்தனர். வேறொருவர் பிரதமராக வர வேண்டும். அவர் தலைமையில் நாடு மீண்டும் புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.
அதே போல் கதிர்வீச்சுப் பேரிடருக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தனர். நிலநடுக்கத்திற்கு முன் நாட்டின் சில பகுதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பிரதமர் நேட்டோகானின் ஜப்பான் ஜனநாயகக் கட்சி படுதோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஒருவர் கைது.
லிபியாவில் பணியாற்றி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் போஸ்ட் பத்திரிக்கையின் செய்தியாளர் ஒருவர் கடாபி ஆதரவு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    இவரது பெயர் ஜேம்ஸ் போலே. லிபியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெறுகிறது. கடாபியின் ஆதரவுப் படைகள் கடந்த நான்கு  நாட்களாக பொது மக்களின் மீது கொத்துக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.போராட்டம் தொடங்கிய பின்னர் அந்நாட்டில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவாரங்களுக்கு முன்னர் சிகாகோவில் உள்ள தனது நண்பர்களிடம் ஜேம்ஸ் பேசியுள்ளார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.இந்நிலையில் அவரை கடாபி படையினர் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கைதானதைத் தொடர்ந்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜேம்ஸின் நண்பர்களும், பத்திரிகையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி.
புதிதாக வடிவமைக்கப்பட்ட குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை இன்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இந்த ஹட்ப் 9 ரக ஏவுகணை ரகசிய இடம் ஒன்றில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடிய இந்த ஏவுகணை அதிக துல்லியத்துடன் அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியவை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.பாகிஸ்தான் இதுபோன்று குறுகிய தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும், நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும் அடிக்கடி பரிசோதித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது.
ரயிலை மறிக்க பிரான்சுக்கு உரிமை உள்ளது: ஐரோப்பிய ஒன்றியம்
துனிஷியாவில் இருந்து புலம் பெயர்ந்த நபர்களை ஏற்றி வந்த இத்தாலி ரயிலை பிரான்ஸ் நிறுத்துவதற்கு உரிமை உள்ளது என ஐரோப்பிய கொமிஷன் திங்கட்கிழமை தெரிவித்தது.பிரான்ஸ் நிர்வாகத்தினர் ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துனிஷியாவில் உள்நாட்டுப் போர் நிலவுவதால் உயிர் பிழைக்க புலம் பெயர்ந்த துனிஷிய மக்கள் இத்தாலி ரயிலில் வந்தனர்.அந்த ரயில் பிரான்ஸ் எல்லைப் பகுதிக்கு வந்த போது பிரான்ஸ் நிர்வாகம் ரயிலை பல மணி நேரம் நிறுத்தி வைத்தது. இதற்கு இத்தாலி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் ஐரோப்பிய உள் விவகார ஆணையர் செசிலியா மெய்ம் ஸ்டிரோம் கூறுகையில்,"பொது ஒழுங்கு காரணங்களுக்காக ரயில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் தற்காலிகமாகவே நிறுத்தி வைத்த விவரத்தையும் பிரான்ஸ் விளக்கி உள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்களது இந்த நடவடிக்கை சரியானது" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை எல்லைப் பகுதி நகரமான வென்டி மிகிலியாவில் இருந்து இத்தாலி ரயில் வந்த போது பிரான்ஸ் அதிகாரிகள் நிறுத்தினர். பிரான்சின் கடுமையான குடியேற்ற விதிகளை கண்டித்து போராட்டக்காரர்களும் துனிஷியர்கள் ரயிலில் வந்ததால் அதனை நிறுத்தினோம். பிரான்சின் அமைதி நிலை பாதிக்கக்கூடாது என இவ்வாறு செய்தோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிளர்ச்சியாளர்களை நிச்சயம் ஒடுக்குவோம்: சிரியா அரசு
சிரியாவில் ஜனநாயக சீர்திருந்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரி அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோரை ஒதுக்குவோம் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
சிரியாவில் ஜனநாயகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை தலைநகர் டமாஸ்கஸ்ஸில் உள்ள ஹோம்ஸ் சதுக்கத்தில் இருந்து அகல மாட்டோம் என்று கூறி பல்லாயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஹோம்சை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாவது: அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஹோம்ஸ், பானியாஸ் நகரங்களில் இந்த ஆயுத கிளர்ச்சி உருவாகியுள்ளது.
ஆயுதமேந்திய சலாபிஸ்ட் குழுவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் காவல் துறையினரையும், இராணுவத்தினரையும் கொல்கின்றனர். இப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை சகித்துக் கொள்ள மாட்டோம்.எகிப்து, லிபியாவைத் தொடர்ந்து சிரியாவிலும் ஜனநாயக கிளர்ச்சி வெடித்துள்ளது. இங்கேயும் பெருமளவிற்கு இரத்தம் சிந்தப்படும் என்பதற்கான அறிகுறியே அரசின் எச்சரிக்கை என்று கருதப்படுகிறது.
இரண்டு சுற்றுலா பயணிகளை கொன்ற 16 வயது சிறுவன் கைது.
'
ப்ளோரிடாவில் இரண்டு பிரிட்டன் சுற்றுலா பயணிகளை கொலை செய்த 16 வயது சிறுவன் ஷான் டைசன் பெயரை சரசோட்டா நகர பொலிசார் அறிவித்தனர்.சரசோட்டா நகரில் சனிக்கிழமை அதிகாலை ஷெப்பீல்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆன நார்தம்டனை சேர்ந்த ஜேம்ஸ் கோசரிஸ் மற்றும் வார்வீக்கை சேர்ந்த ஜேம்ஸ் சூப்பர் துப்பாக்கியால் சுடப்பட்டு வீதியில் இறந்து கிடந்தனர்.
இந்த இரு இளைஞர்களுக்கும் அவர்களை கொலை செய்த 16 வயது சிறுவனுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை என பொலிசார் கூறினர். இளைஞர்கள் குண்டடிப்பட்டு வீதியில் கிடந்த நிகழ்வு குறித்து அதிகாலை 3 மணி அளவில் பொலிசாருக்கு அழைப்பு வந்தது.
கொலை வெறியில் ஈடுபட்ட சிறுவன் ஏற்கனவே ஏப்ரல் 7ம் திகதி கைத்துப்பாக்கியுடன் தீவிரமான தாக்குதல் மேற்கொண்டதற்கு கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் பயணிகள் இறந்து கிடந்த இடத்திற்கு அருகாமையிலேயே 16 வயது சிறுவனின் வீடும் உள்ளது.
இளைஞர்கள் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டான். உள்ளூர் பொலிசார் கூறுகையில்,"ஷெப்பீல்டு பல்கலைகழக முன்னாள் மாணவர்களான இந்த இளைஞர்கள் ப்ளோரிடாவில் 3 வார சுற்றுலாப் பயணத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட இடம் சுற்றுலா பகுதி அல்ல என உள்ளூர் பொலிசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட இரு நண்பர்களும் லாங்போட் கீ தீவு சுற்றுலாபகுதியில் தங்கி இருந்தனர்" என்று கூறினார்.
அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்ட பிறகு அந்நாட்டின் மீது பாகிஸ்தான் அதிக ஈடுபாடு காட்டும் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் அந்நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அல்லது அந்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கனில் மிகவும் வலுவான படை அமைந்து அந்நாட்டை நிர்வகிக்கும் திறன் கொண்டதாக உருவாக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ திறமை குறைந்த நிர்வாகம் ஆப்கனில் ஏற்பட்டால் அங்கு தனது செல்வாக்கை செலுத்த முடியும் என்று கருதுகிறது. தலிபான் பயங்கரவாதிகள் மூலம் அங்கு தனது செல்வாக்கை நிலைநாட்ட அது முயலும் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கனை வலுவான நாடாக உருவாக்க அங்கு வலிமையான ராணுவம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால் பாகிஸ்தானோ அங்கு சிறிய அளவில் ராணுவம் உருவாக்கப்பட்டால் போதுமானது என்று கருதுகிறது.
இதன் மூலம் அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறிய பிறகு அங்கு தனது செல்வாக்கை நிலைநாட்டலாம் என்று கருதுகிறது. இதற்காக சி.ஐ.ஏ செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டு தலிபான் தலைவர்களுடன் தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் அதே சமயத்தில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயுடன் நெருங்கிய உறவை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தலைவர் அஷ்பக் பர்வேஸ் கியானி சமீபத்தில் அதிக முறை ஆப்கனுக்குப் பயணம் செய்துள்ளார். இதே போல பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸீல் கிலானியும் ஆப்கனிஸ்தானுடன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்கா இரு நாடுகளுடனும் அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் பேச்சு நடத்துகிறது. இதற்கு அமெரிக்காவுக்கு ஆப்கனை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியக் காரணமாகும். இதை அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
தலிபான் பயங்கரவாத குழுக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவை ஈடுபடுத்தலாம் என்றால் அது பாகிஸ்தானுக்கு எதிரி நாடாக உள்ளது. அதே சமயம் பெரிய அளவிலான ராணுவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
ஆனால் பாகிஸ்தான் அதை விரும்பவில்லை. இருப்பினும் இப்போது ஆப்கனில் உள்ள பன்னாட்டுப் படைகளின் ராணுவ தளபதி ஜெனரல் டேவிட் ஹெச் பேட்ரியாஸ் முடிந்த வரைக்கும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழித்து விடும் முடிவில் தீவிரமாக உள்ளார்.ஆனால் இதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. சிராஜுதீன் ஹக்கானி என்ற அமைப்புடனான ஒருங்கிணைப்பு அனைத்தையும் அழித்து விட அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. ஆனால் பாகிஸ்தானோ ஆளில்லா விமானம் மூலமான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இந்த விடயத்தில் இரு நாடுகளிடையிலான உறவு நசிந்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளின் அரசியல்வாதிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். கோடிக்கணக்கில் செலவிட்டும் பாகிஸ்தானுக்கு சாதகமான பலன் ஏதும் கிடைக்கவில்லை என்பதே அதிருப்திக்குக் காரணம் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF