Tuesday, April 19, 2011

இன்றைய செய்திகள்.

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மேதினத்தில் ஆர்ப்பாட்டங்கள்: மஹிந்தவின் அழைப்புக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு.


இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச விடுத்துள்ள அழைப்புக்குத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதே சனிக்கிழமையன்று அவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.ஊடகங்களில் கசிந்த ஐநாவின் அந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், அதனை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.தமது
அரசாங்கத்துக்கும், செயலுக்கும் பொதுமக்களின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவே, இந்த மே தின கொண்டாட்டங்களை ஐநாவின் அறிக்கைக்கு எதிராக குவிப்பதற்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமரவும் தான் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.ஆனால், தொழிலாளர் தினமான மே தினத்தை ஐ நாவின் போர் குற்ற அறிக்கையை எதிர்ப்பதற்கான தினமாக பயன்படுத்துவதை தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்த்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிப்பவரும், செங்கொடிச் சங்கம் உட்பட பல மலையக தொழிற்சங்கங்களின் மூத்த தலைவருமான ஓ. இராமையா அவர்கள, தொழிற்சங்கவாதி என்ற ரீதியில் மே தினத்தை இதற்கு பயன்படுத்துவதை தான் ஆதரிக்கவில்லை என கூறினார்.
அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு இடதுசாரி அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமான லங்கா தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ரி. எம். ஆர் . ரசூல்டீனும் ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். தமது சங்கங்கள் எல்லாம் அரசாங்கத்தின் தனியார் துறைக்கான பென்சன் திட்டத்தை எதிர்த்து அதனையே மே தின கோசமாகக் கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.
ஐ.நாவின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது - ஹரீன் பெர்னாண்டோ
ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற ரீதியில் இலங்கை அரசாங்கம், நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும், கண்காணிப்புக்களையும் நிராகரிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் பொய்யான தகவல்கள் காணப்பட்டால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டை நேசிக்கும் கட்சி என்ற ரீதியில் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டுக்கு ஆதரவான தீர்மானங்களையே மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படுவதனை தடுக்க அனைவரையும் குரல் கொடுக்க வேண்டுகிறார் சஜித் பிரேமதாச!

இலங்கை இராணுவத்தினர் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படுவதனை தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இலங்கை படைவீரர்களுக்கு எதிராக காணப்படுகிறது. எனவே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் அணி திரள வேண்டும். சர்வதேச ரீதியாக அரசின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மீது அரசாங்கம் காட்டி வரும் ஆதரவினை இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படுத்த முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதற்கான தருணமல்ல இது. அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக இணைந்து செயற்பட வேண்டும். நிபுணர்குழு தொடர்பில் அரசாங்கம் குறுகிய கால அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றியதன் விளைவையே இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிபுணர்குழு தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கேள்விக் குறியாக அமைந்துள்ளது. நிபுணர்குழுவை அமைப்பதனை தடுத்து நிறுத்துவதற்கு அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளது.

நிபுணர்குழு அரசாங்கத்தரப்பினரை சந்திக்க இடமளிக்கப்படமாட்டாது என பகிரங்கமாக அறிவித்துவிட்டு இரகசியமான முறையில் நிபுணர் குழுவிற்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்பதையும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். அரசியல் நோக்கங்களுக்காக படைவீரர்களை எந்த சந்தர்ப்பத்திலும் தாம் காட்டிக் கொடுத்ததில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
லிபிய முற்றுகை: ஐ.நா உடனடி நடவடிக்கைக்கு பிரிட்டன் அவசரம்
லிபியாவில் போராட்டக்காரர்கள் வசம் உள்ள மிஸ்ரட்டா பகுதியில் பொது மக்களுக்கு எந்த வசதியும் கிடைக்காத வகையில் லிபிய அரசு முற்றுகையிட்டுள்ளது.மிஸ்ரட்டா மக்கள் சுத்தமற்ற தண்ணீர் குடிக்கிறார்கள். இதனால் தண்ணீர் சார்ந்த நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உரிய மருத்துவ நிவாரண பொருட்களும் கொண்டு செல்ல முடியவில்லை.
போராட்டப் பகுதியில் முற்றுகை நடவடிக்கை குறித்து ஐ.நா உடனடி தீர்வு காண வேண்டும் என பிரிட்டன் அவசரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆண்ட்ரூ மிட்செல் நியூயார்க்கிற்கு அவசரமாக செல்கிறார். அங்கு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக விவாதிக்கிறார்.
மிஸ்ரட்டா பகுதியிலும் இதர நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் மோதல் காரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கடாபியின் லிபிய ராணுவத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போர் உச்ச கட்டமாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ள மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூட வெளியேற முடியவில்லை.
மருத்துவமனைகளில் மின்வசதி இல்லை. அங்குள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே பல நாட்கள் இருக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கு சிறிய அளவு மட்டுமே உணவு உள்ளது. இன்னும் பலர் உணவுக்காக பரிதவித்து உள்ளனர்.லிபியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரிட்டன் ஏற்கனவே அவசர நிலை கூடாரங்கள் அமைப்பது, மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி உள்ளது. லிபியாவில் நேட்டோ படைகள் ராணுவ தாக்குதலை ஐ.நா கட்டுப்படுத்தி உள்ளது. இதனால் லிபியா ராணுவம் தொடர்ந்து தாக்குகிறது.
தனி நாடாக உருவெடுக்க ஜேர்மனியின் உதவியை நாடும் பாலஸ்தீனம்.
தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்க ஜேர்மனியின் உதவியை பாலஸ்தீனத் தலைவர் மகமூத் அப்பாஸ் எதிர்பார்த்துள்ளார்.வருகிற வாரத்தில் பிரான்சுக்கும், மே மாதம் ஜேர்மனிக்கும் பயணித்து அங்குள்ள தலைவர்களின் ஆலோசனைகளை பெறப்போவதாக மகமூத் அப்பாஸ் கூறியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியிடம் ஆலோசனை பெறுவதற்கு ஏப்ரல் 21ம் திகதியும், ஜேர்மனி அதிபரிடம் ஆலோசனை பெற மே மாதம் செல்ல விருப்பதாகவும் தெரிவித்தார்.
பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு அவர்களது ஆலோசனை எங்களுக்கு தேவை என மகமூத் அப்பாஸ் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். பாலஸ்தீனம் தனி நாடு என்பதற்கான அங்கீகாரத்தை இந்த ஆண்டு இறுதியில் பெறுவது தொடர்பாக ஐரோப்பியத் தலைவர்களின் ஆலோசனை பெறப்படுகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடப்பதற்கு உதவும் மத்திய கிழக்கு நாடு கூட்டம் ரத்து ஆன நிலையில் பாலஸ்தீன தலைவர் மகமூத் அப்பாஸ் இவ்வாறு தெரிவித்தார்.ஜேர்மனியின் பெர்லின் நகரில் வெள்ளிக்கிழமை நடத்த கூட்டத்தில் மத்திய கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் 4 நாடுகள் இருந்தன. ஆனால் இந்தப் பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டதாக ஐ.நாவில் ராஜிய தூதரக அதிகாரிகள் கூறினர்.
பெர்லினில் நடைபெறும் கூட்டத்தில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான வரையறையை மேற்கொள்ள ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நம்பிக்கை வைத்து இருந்தன. ஆனால் அமெரிக்க தடையால் இந்த பேச்சு வார்த்தை கூட்டம் நடக்கவில்லை.வருகிற செப்டம்பர் மாதம் உரிய முடிவு கிடைக்காத பட்சத்தில் பாலஸ்தீன தனி நாடு உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மகமூத் அப்பாஸ் கூறினார்.
துனிஷியர்களை ஏற்றிக் கொண்டு வந்த இத்தாலி ரயிலை பிரான்ஸ் தடுத்து நிறுத்தியது.
ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களை ஏற்றிக் கொண்டு வந்த இத்தாலி ரயிலை பிரான்ஸ் தடுத்த நிறுத்தியது.வடக்கு ஆப்பிரிக்காவான துனிஷியாவில் புரட்சிப் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறும் மக்களை கையாள்வது தொடர்பாக பிரான்ஸ்-இத்தாலி இடையே முரண்பாடு உள்ளது.
இந்த நிலையில் துனிஷிய மக்களை ஏற்றி வந்த இத்தாலி ரயிலை தனது எல்லையான மென்டனில் பிரான்ஸ் நிறுத்தியது. இதுகுறித்து பிரான்ஸ் கூறுகையில்,"மறிக்கப்பட்ட ரயிலில் விளக்கப் போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தனர். அவர்களின் பொது ஒழுங்கு முறை பிரச்சனையை ஏற்படுத்துவதாக இருந்தது. எனவே பொது ரயில் சேவை நிறுத்தப்பட்டது" என தெரிவித்தது.
அந்த ரயில் பாதையில் மாலையில் மீண்டும் போக்குவத்து இயக்கப்பட்டது. இத்தாலி ரயில் மறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தலா 5 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரான்ஸ் அளித்த விளக்கத்திற்கு இத்தாலி உடனடியாக பதில் அளிக்கவில்லை.துனிஷியாவில் கடந்த சில வாரங்களாக காணப்படும் மோதலைத் தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைக்க இத்தாலிக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். 26 ஆயிரம் துனிஷிய மக்களுக்கு தற்காலிக குடியிருப்பை இத்தாலி அளித்துள்ளது.
பெரும்பாலான துனிஷியர்களுக்கு பிரான்சில் நண்பர்கள் தொடர்பு அல்லது குடும்பத் தொடர்பு உள்ளது. துனிஷிய மக்கள் ஐரோப்பிய நாடுகளில் விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது. இதற்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது.துனிஷியாவில் இருந்து வரும் மக்கள் தங்களுக்கு உரிய நிதி ஆதாரத்துடன் வந்தால் தான் அவர்களை ஏற்க முடியும் என பிரான்ஸ் கூறுகிறது. ரயிலை நிறுத்தியதற்கு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எகிப்து மாஜி அதிபரின் சொத்துக்கள் பறிமுதல்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாகவும், கட்சியின் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து மக்கள் அமைதிப் புரட்சியை நடத்தினர். 18 நாள்கள் நடந்த இந்த அமைதிப் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து ஹோஸ்னி முபாரக் தூக்கியெறியப்பட்டார்.
இந்த நிலையில் அவரை சட்டத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருடைய இரு மகன்களான அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் முபாரக்கை சட்டத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த நிலையில் முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த எகிப்து மக்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்று அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கான உத்தரவை எகிப்திலுள்ள உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் கட்சிக்குச் சொந்தமான பணம், அதன் தலைமையகம், கட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அமைதிப் புரட்சி நடத்திய எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.இத்தகவலை அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரும் ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பி உள்ளது.
ஏமன் அதிபர் உடனே பதவி விலக வேண்டும்: தீவிரம் அடையும் மக்கள் போராட்டம்
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஏமனில் அதிபர் சலே பதவி விலகக் கோரி கடந்த இருமாதங்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சலே இன்னும் மூன்று மாதங்களுக்குள் பதவி விலக வேண்டும், பதவி விலகிய பின் அவர் மீது குற்ற விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாது என்பது உள்ளிட்ட சில ஆலோசனைகளை, அமெரிக்காவின் உந்துதலின் அடிப்படையில் வளைகுடா கூட்டுறவு கவுன்சில்(ஜி.சி.ஓ) முன்வைத்தது.
இக்கவுன்சிலில் சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆலோசனைகளை ஏமன் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. சலே உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் சவுதி தலைநகர் ரியாத்தில் நடக்கும் ஜி.சி.ஓ கூட்டத்தில் கலந்து கொண்டு அதிபர் சலே பதவி விலகுவது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மூன்று எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
சலேவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான "ஜாயின்ட் மீட்டிங் பார்ட்டிஸ்" அமைப்பின் தலைவர் மற்றும் மூன்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ரியாத்துக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இக்கருத்தை மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் மறுத்துள்ளார்.
கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை தவிர்க்க முதன் முறையாக 50 நாடுகள் கொண்ட மாநாடு.
உலகில் பெருகி வரும் கடற்கொள்ளையைத் தடுப்பது மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து விரிவாக விவாதிக்க 50 நாடுகள் பங்கேற்கும் மாநாடு முதன் முறையாக துபாயில் நடக்க இருக்கிறது.சர்வதேச கடல்சார் குழுவின் 2011 ஏப்ரல் 14ம் திகதியிட்ட அறிக்கைப்படி ஏடன் வளைகுடாவில் மட்டும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல் அல்லது தாக்குதல் முயற்சி மொத்தம் 107 முறை நடந்துள்ளது.
அரபிக் கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையோரப் பகுதியில் மட்டும் 17 கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. தற்போது 26 கப்பல்கள் கடற்கொள்ளையர் வசம் உள்ளன. 521 பேர் அவர்கள் பிடியில் சிக்கியுள்ளனர்.இந்நிலையில் உலகில் முதன் முறையாக கடற்கொள்ளை மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார பிரச்சனை குறித்த மாநாடு ஒன்று துபாயில் இன்றும் நாளையும் என இருநாட்கள் நடக்க உள்ளது.
இம்மாநாட்டை ஐக்கிய அரபு நாடுகள் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் 50 நாடுகளின் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள், 30 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், 25 நாடுகளின் மூத்த பிரதிநிதிகள், ஐ.நா மற்றும் சர்வதேச கடல்சார் கூட்டமைப்பின் அதிகாரிகள், கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.இம்மாநாட்டில் கடற்கொள்ளையைத் தடுக்கவும், அவர்கள் வசம் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் நிலவரம் குறித்தும் சர்வதேச நாடுகளின் அரசுகள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கதிர்வீச்சின் தீவிரத்தை அளவிட ரோபோக்கள்.
ஜப்பானில் கதிர்வீச்சை அளவிட ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் திகதி ஜப்பானிலுள்ள புகுஷிமா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாகத் தெரியவந்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவிலுள்ள அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் வெடித்தன. இதனால் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு பரவி வருகிறது. கதிர்வீச்சைத் தடுக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அணு உலைப் பகுதியில் கதிர்வீச்சை அளவிட ரோபோக்களை பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து புகுஷிமாவிலுள்ள டோக்கியோ மின் உற்பத்தி நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2 ரோபோக்களை இதற்கு பயன்படுத்தவுள்ளோம்.
இதன் மூலம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் பரவியிருக்கும் கதிரியக்க அளவு, வெப்ப நிலை, ஈரப்பதம், ஓக்ஸிஜன் அளவு ஆகியவை குறித்து இந்த ரோபோக்கள் அளவிடும். அதிக அளவு சூடாகியுள்ள அணு உலைகளில் இருந்து கதிர் வீச்சு வெளியாகி வருகிறது. இது காற்று, நிலம், கடல்நீர் ஆகியவற்றிலும் பரவி வருகிறது.
இதையடுத்தே இப்பகுதியைச் சுற்றிலும் 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு ஜப்பான் அரசு அதிக முன்னுரிமை கொடுத்துள்ளது என்றார் அவர்.கதிர்வீச்சு பரவிய தண்ணீரை கடலில் ஜப்பான் கலக்கவிட்டதால் அண்டை நாடுகள் அச்சம் தெரிவித்தன. மீனவர்கள் உள்ளிட்டோரும் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்து கதிர்வீச்சு பரவிய தண்ணீர் கடலில் கலப்பது நிறுத்தப்பட்டது.
ஆறு முதல் 9 மாதங்களில் அணுமின் நிலையத்தில் எழுந்துள்ள கதிர்வீச்சு பிரச்னை கட்டுப்படுத்தப்படும் என்று டெப்கோ அறிவித்துள்ளது. இத்தகவலை டெப்கோ தலைவர் சுனேஹிசா கட்சுமாட்டா தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பிரிட்டனில் முக்காடு அணியாத முஸ்லிம் பெண்களுக்கு கொலைமிரட்டல்!

பிரிட்டனில் முக்காடு அணியாத முஸ்லிம் பெண்கள் கொல்லப்படுவார்கள் என்று ஒரு இனம் தெரியாத முஸ்லிம் தீவிரவாதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரைகுறை பிகினி ஆடையுடன் காணப்படும் மொடல் அழகிகளின் சுவரொட்டிகளை சேதப்படுத்தியும், தன்னினச் சேர்க்கை வலயங்கள் பற்றிய எச்சரிக்கைகளை விடுத்தும் இவர்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர். 


கடும்போக்கு கொள்கையுடைய இந்த முஸ்லிம்கள் கிழக்கு லண்டனிலேயே தமது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 


ஆசியாவைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத ஒரு பெண் மருந்தாளர் தான் முக்காடு அணியுமாறு அச்சுறுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளார். தொடர்நது இப்படி நடந்து கொண்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று ஒருவர் தன்னை எச்சரித்ததாகவும் அவர் முறையிட்டுள்ளார். 


இந்த முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அச்சுறுத்தியமை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்படவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இது பற்றி பேர்மிங்ஹம் தொகுதியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் மஹ்மூத் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்துள்ளார். அத்தோடு இவர்கள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


நீங்கள் முக்காடு அணியவேண்டியது உங்கள் கடமை என்பதை சகோதர உணர்வோடு யாரும் யாருக்கும் ஞாபகமூட்டலாம். ஆனால் அதற்காக உங்களைக் கொல்லுவோம் என்று அச்சுறுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று பிரிட்டனில் உள்ள பிரபல முஸ்லிம் மதகுரு ஒருவரும் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF