சீனாவில் ஷாங்ஸி பகுதியில் உள்ள லின்பென் நகரப் பகுதியில் புதையுண்ட ஒரு பகுதியை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இது(1046 - 771 கி.மு.) காலத்துக்கு முந்தைய சிஸ்வா மன்னர்கள் காலகட்டத்தில் இருந்த நகரம் என்ற விவரம் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி கழகம் மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனம் இணைந்து வேங்க்வெல் தலைமையில் அகழ்வாராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. ஷாங்ஸி பகுதியில் கிடைத்த பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வு குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் வேங்க் கூறியதாவது: தற்போதைய அரிய கண்டுபிடிப்பில் சரித்திரத்தில் இதுவரை இடம்பெறாத புதிய மற்றும் அரிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்குள்ள கல்லறைகளில் ஏராளமான கல்வெட்டுகள், பித்தளை பாண்டங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
இவை பாபோ அல்லது பா மன்னர்கள் காலத்தியதாக இருக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பா மன்னர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் பெரிய அளவில் இல்லை.தற்போது பா மன்னர்கள் குறித்த தகவல்கள் பெரும் ஆச்சரியமாக உள்ளது. ஆய்வில் கிடைத்த பொருட்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வெட்டுகளில் இருந்து பா மன்னர்களின் ஆட்சி முறை மட்டுமின்றி, வாழ்க்கை முறை, நாகரிகம், உணவு மற்றும் அவர்களது பண்டையகால தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இவர்கள் குறித்த வரலாற்று குறிப்புகள் அழிந்திருக்கக்கூடும் அல்லது காணாமல் போயிருக்கும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.