Friday, April 22, 2011

இன்றைய செய்திகள்.

அல்ஜசீரா, சனல் 4 தொலைக்காட்சிச் சேவை மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதி நேர யுத்தத்தின்போது யுத்தப் பிரதேசத்தில் இருந்த ஒரு லட்சம் பொதுமக்களுக்குக் கணக்கு காட்டப்படவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐநா செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்படவுள்ள இந்த வேளையில், வெளியுலகத் தொடர்பின்றி மறைக்கப்பட்டுள்ள இலங்கையின் வடபகுதியில் பொதுமக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை, அடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்கள், அந்த மக்கள் மீதான பல்வேறு துஸ்பிரயோகங்கள் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற ஆதாரங்கள் அல்ஜசீரா, சனல் 4 தொலைக்காட்சிச் சேவைக்குக் கிடைத்துள்ளது.



ஐ.பி.ல் விவகாரம்; இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் நிறுத்தம்! இந்திய கிரிக்கெட் சபை அதிரடி.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தமளித்தபடி மே மாதம் 22 ஆம் திகதி வரை விளையாடாமல் அதற்கு முன்னதாக வெளியேறினால் அவர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டாமென ஐ.பி.எல் அணிகளை இந்திய கிரிக்கட் சபை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வீரர்கள் ஏற்கனவே இணங்கியபடி மே மாதம் 22 ஆம் திகதி வரை விளையாடாமல் மே 5ஆம் திகதி வெளியேறுவார்களானால் இலங்கை வீரர்களுக்கான சம்பளத்தையும், இலங்கை கிரிக்கட் சபைக்கான 10 சதவீத கொடுப்பனவையும் நிறுத்தி வைக்குமாறு இந்திய கிரிக்கட் சபை கோரியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்போட்டியை முன்னிட்டு மே 5 ஆம் திகதி வீரர்களை நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் சபை உத்தரவிட்டுள்ளது. இலங்கை வீரர்களை மே 15ஆம் திகதி வரையாவது ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கட் சபை விடுத்த வேண்டுகோளை இலங்கை கிரிக்கட் சபை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன ரணதுங்கவுக்கு கிரிக்கட் சபை தலைவர் பதவியைக் கொடுத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி.

அர்ஜுன ரணதுங்கவுக்கு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவியைக் கொடுத்து சமாதானப்படுத்த ஜனாதிபதி மஹிந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.தற்போதைக்கு இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவுடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதியின் விருப்பத்தை தெரிவித்து உத்தியோகப் பற்றற்ற ரீதியில் கலந்துரையாடியுள்ளார்.உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று அர்ஜுன பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். மற்றும் ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
அவ்வாறான நிலையில் அவரை மௌனமாக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்தப் பதவியை அவருக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலையீடுகள் இருக்காது என்ற உத்தரவாதம் தந்தால் மட்டுமே அந்தப் பதவியை தான் ஏற்றுக் கொள்வதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள-தமிழ் நல்லிணக்கத்தை வெளிக்காட்டும் வகையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்.
சிங்கள-தமிழ் நல்லிணக்கத்தை வெளிக்காட்டும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.தன்னுடைய யாழ்ப்பாண விஜயத்தின் போது சில நாட்கள் அங்கு தங்கியிருப்பதன் மூலம் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உலகுக்கு வெளிக்காட்ட  முடியுமென அவர் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல ஜனாதிபதியால் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன்,  யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல கலாசார நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
நிபுணர்குழுவுக்கு ஐ.நா.சபையில் எந்தவொரு அதிகாரமும் இல்லை: அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிடும் நோக்கில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் குறித்த அறிக்கை, முற்றிலும் பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நிபுணர் குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே அவசியமானது எனவும், சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் முனைப்பாக இந்த அறிக்கையை அரசாங்கம் நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்hளர்.எனினும் சில சர்வதேச நாடுகளின் அழுத்தத்துடன் இவ்வாறான நடவடிக்கைகள் முன் எடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான அறிக்கைகளின் மூலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் பின்னடைவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளார்.

நிபுணர்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு அவசியமற்றதாம்!

ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு அவசியமற்றது என்று ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கொஹன்ன தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுடனும், பாலித கொஹன்னவுடனும் இன்னர்சிற்றி பிரஸ் கடந்த 19ஆம் திகதி சந்திப்பொன்றை மேற்கொண்டது. 


ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்று பாலித கொஹன்னவிடம் கேட்டபோது இது பொதுமக்களுக்கு தேவையற்றது. இந்த அறிக்கை ஐ.நா பொதுச் செயலாளருக்கானது என தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை மார்ச் 31ஆம் திகதியே தயாரிக்கப்பட்டுவிட்டபோதும் இலங்கைக்காகவே அந்த அறிக்கை பான் கீ மூனிடம் கையளிப்பதில் தாமதமாகியது என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. 


நிபுணர்கள் குழு மார்ச் 31 ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கை ஏப்ரல் 12 ஆம் திகதியே திகதியே பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதி ஏப்ரல் 13 ஆம் திகதி ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது. நிபுணர்குழுவின் அறிக்கை பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படக் கூடாது என்று பாலித கொஹன்ன பொதுச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார். 


ஐ.நாவுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை 36 மணி நேரம் காலஅவகாசம் கோரிய போதும் இதுவரை பதிலளிக்காதது ஏன் என்று பாலித கொஹன்னவிடம் கேட்டபோது, 195 பக்கங்கள் கொண்ட அறிக்கைக்கு 36 மணி நேரத்தில் எவ்வாறு பதிலளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்தவாரம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது. புதன்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் விடுமுறை நாட்கள். அதன் பின்னர் கடந்த திங்களன்று பூரணை நாள் விடுமுறை என்றும் பாலித கொஹன்ன கூறியுள்ளார். 


இன்னர் சிற்றி பிரஸ் பாலித கொஹன்னவை அவரது வதிவிடத்தில் சந்திக்க முன்னர், எகிப்தின் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மஜெட் அப்டிலாசிஸ் அங்கு சென்று கொஹன்னவுடனும், சவேந்திர சில்வாவுடனும் கலந்துரையாடியுள்ளார். எகிப்து பொதுநலவாய நாடுகளுக்கு தலைமை வகிக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் பண மோசடி செய்த இலங்கை விஹாராதிபதி கைது!

அவுஸ்திரேலியாவில் உள்ள பர்க்விக் பகுதியிலுள்ள பௌத்த விஹாரை ஒன்றின் விஹாராதிபதியான இலங்கையைச் சேர்ந்த திகாமடுல்ல விமலாநந்த தேரர் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விஹாராதிபதியிடமிருந்து 34 ஆயிரத்து 855 அமெரிக்க டொலர்களை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் விஹாராதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 


விஹாரையின் தேவைக்காக பெறுமதிமிக்க பொருட்களை கொள்வனவு செய்ததாகக்கூறி அதற்கு ஆதாரமாகப் போலி பற்றுச்சீட்டுக்களை காண்பித்து பணம் பெற்றுள்ளார். அத்துடன் உத்தியோகபூர்வ பற்றுச் சீட்டுக்கள் எதனையும் வழங்காமல் நன்கொடைகளை பெற்றுள்ளமை மற்றும் இவை தொடர்பான கணக்குகளை பேணாமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
உல்லாசக் கப்பலிலிருந்து தவறி கடலில் விழுந்த மூதாட்டியின் பரபர நிமிடங்கள்!
நோர்வேயின் ஆக்டிக் கடல் பிரதேசத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்று ஆபத்தில் மாட்டிக்கொண்ட மூதாட்டி தக்க சமயத்தில் மீட்பாளர்களால் காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.பிரிட் ஜெனட் றிச்சர்ட்ஸன் என்ற 73 வயதுப் பெண்ணே ஆபத்தில் மாட்டிக்கொண்டார். இவர் தனது கணவனோடு பயணம் செய்த ஆடம்பரக் கப்பலில் இருந்து தவறி 3 பாகை செல்சியஸ் மட்டுமே உஷ்ண அளவு கொண்ட உறை நிலை கடலில் விழுந்தார். 

தக்க சமயத்தில் மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட இவர் தற்போது பிரிட்டிஷ் ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். 78 வயதான கணவர் ஜோர்ஜ் கடும் அதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார். இந்தக் கடல் பயணத்தின்போது பிரிட் ஜெனட்டுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டது. உடனடியாக துணை மருத்துவப் பிரிவினர் கப்பலுக்கு வரவழைக்கப்பட்டனர். 

இவரை ஒரு ஸ்டெச்சரில் கிடத்தி மருத்துவப் படகுக்கு மாற்றும் போது ஏற்பட்ட பதற்றத்தில் ஸ்டெச்சரில் இருந்து தவறி கீழே கடலில் விழுந்துவிட்டார். உடனடியாக மீட்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது. 
அவர்கள் விரைந்து ஸ்தலத்துக்கு வந்து இவரைக் கடலில் இருந்து மீட்டெடுத்தனர். கடும் அலைகளுக்கு மத்தியில் எட்டு நிமிடங்களுக்குள் இவரை கடலில் இருந்து மீட்பாளர்கள் மீட்டெடுத்தனர். அங்கிருந்து விமானம் மூலம் இவர் பிரிட்டனின் கம்பர்லென் மருத்து மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

நீண்ட காலமாக அரசாங்கமே இல்லாத நாடு! கின்னஸ் ஏட்டில் பதிவு.

உலகில் நீண்டகாலமாக அரசாங்கம் ஒன்று இல்லாத நாடு என்ற பெருமை பெல்ஜியத்துக்குக் கிடைத்துள்ளது. இது கின்னஸ் சாதனை ஏட்டிலும் பதிவாகியுள்ளது. பெல்ஜியத்தின் பிளமிஷ் மற்றும் பிரஞ்சு மொழிபேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக கடந்த வசந்த காலத்தின்போது அரசாங்கம் கவிழ்ந்தது. 


கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் நடத்தப்பட்ட தேர்தல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பெல்ஜியத்தின் வடபகுதியைச் சேர்ந்த டச்மொழி பேசும் செல்வந்தர்கள் பெல்ஜியத்தில் பிரிவினை கோரும் பிளமிஷ் பிரிவை ஆதரித்தனர்.அதனையடுத்து ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதால் இன்னமும் உத்தியோகப் பூர்வமாக அரசொன்று அங்கு நிறுவப்படவில்லை. 


இதற்கு முன் ஈராக்கில் தான் இவ்வாறாதோர் நிலை காணப்பட்டது. அது 289 தினங்கள் நீடித்தது. ஆனால் பெல்ஜியம் தற்போது அதைத் தாண்டிவிட்டது. அடுத்ததாக கம்போடியாவில் இவ்வாறான நிலை இதற்கு முன் 353 தினங்கள் நீடித்தது.பெல்ஜியம் அதையும் தாண்டி சாதனைப் படைக்குமா என்று அந்த நாட்டின் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
போராட்டக்காரர்களுக்கு நேட்டோ அதிகாரிகள் பயிற்சி.
மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்திய லிபியா மீது நேட்டோ படை கடந்த மாதம் முதல் குண்டு வீசி வருகிறது.கடந்த 5 வாரங்களாக நடந்த வான் தாக்குதலில் கடாபி ராணுவத்தினரை முற்றிலுமாக முடக்க முடியவில்லை. மிஸ்ரட்டா, அஜ்தபியா போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், கடாபி ராணுவத்தினருக்கும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.இதில் போராட்டக்காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து போராட்டக்குழு தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலில், பிரான்ஸ் அதிபர் சர்கோசியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து பிரான்ஸ் விமானப்படை தாக்குதலை தீவிரப்படுத்தவும், போராட்டக்காரர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் சர்கோசி உறுதியளித்தார்.போராட்டக்காரர்களை வழி நடத்தி செல்ல பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் அதிகாரி குழுக்களை லிபியா அனுப்ப முடிவு செய்துள்ளது. இவர்கள் போராட்டக் குழுவினருக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் உதவிகளை செய்வர்.
கடாபி ராணுவத்தினர் மீதான வான் தாக்குதலை நேட்டோ படை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடாபி ராணுவத்தினர் மற்றும் ராணுவ டாங்குகள் இருக்கும் இடங்களை பொதுமக்கள் நெருங்க வேண்டாம் என நேட்டோ படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இழுபறி நிலையில் இருக்கும் ஏமன் விவகாரம்.
ஏமன் விவகாரம் குறித்து நேற்று கூடிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் எவ்வித முடிவும் எடுக்காமல் முடிவடைந்தது.அதே நேரம் வளைகுடா கூட்டுறவு கவுன்சிலுடன் ஏமன் அரசுப் பிரதிநிதிகள் குழு நேற்று பேச்சு நடத்தியது. ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி கடந்த மூன்று மாதங்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வளைகுடா கூட்டுறவு கவுன்சில்(ஜி.சி.சி) அதிபர் தனது அதிகாரத்தை துணை அதிபர் அப்துரபூ மன்சூர் ஹாதியிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடத்தும் வரை எதிர்க்கட்சிகள் தலைமையில் ஓர் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறியது.ஏமன் விவகாரம் அப்பிராந்திய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிகரித்து வருவதால் நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசித்தது.
பாதுகாப்பு கவுன்சிலில் ஏமன் விவகாரம் பற்றி பேசப்படுவது இதுவே முதன் முறை என்பதாலும், இது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்பதாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட 15 நாடுகளின் பிரதிநிதிகள் இவ்விவகாரம் குறித்து தங்கள் நாட்டு உயர் அதிகாரிகளோடு கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியதால் எவ்வித இறுதி முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது.
இதுகுறித்து பேசிய ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ்,"அனைத்து பிரதிநிதிகளும், ஏமனில் மக்கள் மீதான வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்" என்றார்.ரஷ்யாவும், சீனாவும் ஏமன் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்று வாதிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனா மற்றும் டாயிஸ் நகரில் நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 5 வயது மாணவன்: தவறுதலாக வெடித்ததில் 3 பேர் காயம்
அமெரிக்காவின் ஹிஸ்டன் நகரில் ரோஸ் தொடக்கக்கல்வி என்ற மழலையர் பள்ளி உள்ளது.இங்கு எல்.கே.ஜி படித்து வந்த மாணவன் ஒருவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வந்தான். துப்பாக்கியை தனது கால் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்து இருந்தான்.
மதியம் அனைத்து மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட சென்றான். அவன் கீழே உட்கார்ந்த போது பாக்கெட்டுக்குள் இருந்த துப்பாக்கி தவறி கீழே விழுந்தது. அப்போது தானாக துப்பாக்கி விசையில் அழுத்தம் ஏற்பட்டு வெடித்தது. துப்பாக்கியில் இருந்த குண்டுகள் வெளியேறின. அது மாணவர்கள் மீது பாய்ந்தது. அதில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.வீட்டில் இருக்கும் துப்பாக்கிகளை மாணவர்கள் விளையாட்டாக பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வருவது அமெரிக்காவில் அடிக்கடி நடக்கின்ற செயலாகும். அவர்கள் சக மாணவர்களுடன் சண்டை போட்டு சுட்டுக் கொல்லும் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன.
கடல் மீன்கள் உடலில் கதிர்வீச்சு பரவியது: மீன் பிடிக்கத் தடை
Jumping Fish, Red Sea, Eilat, Israel Wallpaper
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுஷிமாவில் உள்ள அணு உலை பாதிக்கப்பட்டது. இந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவியது.இதனால் அந்த பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அணு கதிர்வீச்சு கடலிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இப்போது கதிர்வீச்சு கடலில் உள்ள மீன்களிடமும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மீன்களை சாப்பிட்டால் மனிதனுக்கும் கதிர்வீச்சு பாயும் அபாயம் உள்ளது. இதனால் புகுஷிமா கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடலில் வாழும் மீன்கள் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. ஒவ்வொரு பருவ நிலைக்கும் தகுந்த மாதிரி மீன்கள் மற்ற கடல் பகுதிகளுக்கும் செல்லும்.புகுஷிமா கடல் பகுதிகளில் வசிக்கும் மீன்கள் மற்ற பகுதிகளுக்கு செல்லும் போது பிடிக்கப்பட்டால் அதனால் கதிர்வீச்சு அபாயம் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
தலிபான்களின் திட்டத்தை தகர்க்கும் பணியில் ஈடுபட்ட பெண் உயிரிழப்பு.
தலிபான் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்ட பிரிட்டிஷ் பகுதியில், வெடிகுண்டு அகற்றும் பிரிவைச் சேர்ந்த பெண் நிபுணர் கப்டன் வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார்.ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. இங்கு தலிபான் தீவிரவாதிகள் மண்ணில் புதைத்து வைத்து இருக்கும் பயங்கர வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் பிரிட்டன் பெண் நிபுணரான கப்டன் லிசா ஈடுபட்டிருந்தார்.இந்த பிரிட்டிஷ் வீராங்கனை லிசாவை கொல்வதற்கு தலிபான்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் கப்டன் லிசா மண்ணில் புதைத்திருந்த வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அவர் முதல் வெடிகுண்டை வெற்றிகரமாக செயல் இழக்கச் செய்தார். இரண்டாவது வெடிகுண்டை மண்ணில் இருந்து அகற்றும் போது பயங்கரமாக வெடித்தது. இந்த தாக்குதலில் லிசா மரணம் அடைந்தார்.வீர மரணம் அடைந்த லிசா ஹொயல், லாஜிஸ்டிக் கார்ப்ஸ் படையில் வெடிகுண்டுகளை அகற்றும் பிரிவில் இருந்தார். ஆபத்தான வெடி பொருட்களை அகற்றும் குழுவில் உள்ள 5 பெண்களில் ஒருவர் லிசா ஆவார்.
அவரது மரணம் ஒட்டு மொத்த குழுவினரையே கலங்கச் செய்துள்ளது. லிசா ஆப்கானிஸ்தானில் இறந்த இரண்டாவது வீராங்கனை ஆவார். ஆப்கானிஸ்தான் முகாமில் லிசா மரணத்தை தொடர்ந்து இதுவரை 364 பிரிட்டிஷ் துருப்பினர் இறந்துள்ளனர்.
சிரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் கைது.
சிரியாவில் கடந்த 63 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அவசரநிலைச் சட்டத்தை நீக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கிடையில் சிரிய எதிர்க்கட்சித் தலைவர் நேற்று அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உடனே கைது செய்யப்பட்டார். சிரியாவில் அதிபர் அசாத் உடனடியாக பதவி விலகக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளில் 63 ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் அவசரநிலைச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதும் ஒன்று. நேற்று முன்தினம் கூடிய சிரிய அமைச்சரவை அச்சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.இம்மசோதா சட்டமாவதற்கு பாராளுமன்றம் ஒப்புதல் தேவை. மே 2ம் திகதி அன்று தான் பாராளுமன்றம் கூடும். அதே நேரம் இச்சட்டத்திற்கு மாற்றாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மற்றொரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது பழைய சட்டத்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது.
எனினும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் தொடர இச்சட்டம் வழிவகுக்கிறது. அதேநேரம்,"அவசரநிலைச் சட்ட ரத்து மட்டுமே மக்களை அமைதிப்படுத்தி விடாது. கடந்த பல நாட்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பல அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அலெப்போ நகரில் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹ்மூத் இஸ்ஸா, அப்பேட்டி முடிந்த உடனே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று அலெப்போ பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பொலிசார் தடியடி பிரயோகம் மூலம் கலைத்தனர். எனினும் மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
ஆல்கஹால் அருந்தியிருந்தால் வண்டி நகராது.
வண்டியை ஓட்டுபவர் குடிபோதையில் இருந்தால் தானாக என்ஜின் மூடிக்கொள்ளும் பூட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.அதிபர் ஏங்கலா மார்க்கெல் மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் இது தொடர்பான கருத்துருவை போக்குவரத்து அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளனர். இந்தப் பரிந்துரைப்படி ஓட்டுநரின் மூச்சுக்காற்றில் ஆல்கஹால் வாடை ஏற்படும் போது என்ஜின் தானாக மூடிக்கொள்ளும். இதனால் வண்டி ஸ்டார்ட் ஆகாது.
இது குறித்து புதன்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சர் பீட்டர் ராம்சரின் ஒரு பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"தானாக முன் வந்து ஆல்கஹால் பூட்டு முறையை பயன்படுத்துவதில் நாங்கள் வெளிப்படையாக உள்ளோம். இந்தப் புதிய முறை குடிபோதையாளர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கக் கூடியதாக இருக்கும்" என்றார்.ஆல்கஹால் பூட்டுகளை வண்டிகளில் பொருத்த கட்டாயப்படுத்துவதை அமைச்சகம் எதிர்க்கிறது. விருப்பம் உள்ளவர்கள் தானாக முன்வந்து தங்கள் வாகனங்களில் பொருத்தி கொள்வதை வரவேற்கிறோம் என்றார்.
ஆல்கஹால் பூட்டு பொருத்தப்படுவது குறித்த சட்டம் ஏற்கனவே அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ளன. ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன் நாடுகள் இது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.அடுத்த ஆண்டு முதல் ஸ்வீடனில் ஆல்கஹால் பூட்டுகள் வண்டிகளில் பொருத்த வேண்டிவரும். ஸ்டாக்ஹோம் இந்த முறையை 2008ம் ஆண்டு பரிசோதிக்க துவங்கியது. இதில் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளதால் ஆல்கஹால் பூட்டுகள் அமல்படுத்தப்படுகின்றன.
எகிப்து போராட்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு.
எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியின் போது அவர்களைச் சுட்டுக் கொல்லும்படி அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக் தான் உத்தரவிட்டார் என்று உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எகிப்தில், ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் 18 நாட்கள் அப்போதைய அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி நடந்தது. அப்புரட்சியை அடக்க துப்பாக்கிச் சூடு, தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் எனப் பல்வேறு வழிகளைக் கையாண்டும் இறுதியில் பதவியை விட்டு விலக வேண்டியவரானார் முபாரக். இந்தப் புரட்சியில் 846 பேர் பலியாயினர்.அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ராணுவ அரசு ஜனவரி 25 புரட்சிக் காலத்தில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மையைக் கண்டறிய நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு 17 ஆயிரத்து 58 அதிகாரிகள் மற்றும் சாட்சிகள், 800 வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மீதான தாக்குதல் பின்னணியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது. நேற்று அக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து வெளியிட்டது.குழுத் தலைவர் நீதிபதி ஒமர் மார்வான் இதுபற்றிக் கூறியதாவது:
1. மக்கள் புரட்சியை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முபாரக் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
2. தாரிர் சதுக்கத்தில் குவிந்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி அவர் உத்தரவிட்டார். பொலிசார் மக்களின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினர்.
3. குண்டடி பட்டும் சாகாதவர்களின் முகத்தை சிதைத்து கண்களைத் தோண்டி எடுத்துள்ளனர் பொலிசார். குண்டடியில் தப்பிப் பிழைத்தோரில் பெரும்பான்மையோர் கண்களை இழந்திருப்பது இதற்குச் சாட்சி.
4. பொலிஸ் துறையின் ஒரு பகுதியான பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
5. மக்களைக் கொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பொலிசார் தங்கள் வாகனங்களை அவர்கள் மீது ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.
6. பொலிசார் மற்றும் அதிகாரிகள் ஒட்டகம் மற்றும் குதிரைகளில் ஏறி திடீரென தாரிர் சதுக்கத்திற்குள் புகுந்து மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
7. நாட்டின் 41 சிறைகளில் 11 சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியதில் பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் இயக்கம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா இயக்கம் இரண்டுக்கும் தொடர்புள்ளது. தப்பிய கைதிகள் எரிகிற தீயில் எண்ணை விட்டது போல தாக்குதலில் இறங்கியுள்ளனர்.
8. இந்தக் கைதிகள் கடைகளுக்குத் தீ வைத்துக் கொள்ளையிட்ட போது முபாரக்கின் ஆலோசனைப்படி பொலிசார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அதன் மூலம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி புரட்சியை நசுக்கிவிடலாம் என்று அவர் எண்ணியிருக்கிறார்.
9. ஊழல், விலைவாசி உயர்வு போன்ற காரணங்கள் தவிர முபாரக் தனது இளையமகன் கமாலை அடுத்த அதிபராக்க முயன்றதும் மக்கள் புரட்சிக்கு முக்கிய காரணம். இவ்வாறு மார்வான் தெரிவித்தார்.எகிப்து புரட்சியில் 846 பேர் பலியானதன் பின்னணியில் முபாரக் இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக மற்றொரு நீதிபதி ஜக்கரியா ஷலஷா தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF