அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர்.இந்த ஆக்கமானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்கதொரு சாதனை ஆகும். இதன் உருவம் ஆனது உண்மையான இலை போன்று இருக்காது. ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை துள்ளியமாக இது செய்யவல்லது.
இந்த செயற்கை இலை தண்ணீரின் மீது மிதக்க விடப்படும் எனவும், இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன், ஓக்சிஜனை இது பிரித்து அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது.இயற்கை அன்னையின் செயல்பாடுகள் எப்போதுமே மனிதனுக்கு பல ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்துள்ளது. அந்த வகையில் மெய் இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர்.
இதன்படி இந்த இலைகளை நீர்நிலைகளில் மிதக்க விடப்படும். அந்த இலைகளானது நீரில் இருக்கும் ஹைட்ரஜனையும், ஓக்சிஜனையும் சூரிய ஒளியினைக் கொண்டுப் பிரித்து அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் Fuel Batteryகளில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பற்றரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் ஊடாக சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும் இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும்.
ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கிவிட்ட போதிலும் அவரது ஆக்கம் வெகுவாக பயன்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த பற்றரியானது நிலையற்ற தன்மை வாய்ந்ததாக இருந்ததாலும், அவற்றை பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.
ஆனால் தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான பற்றரி என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.
தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இலை ஒன்று தொடர்ந்து 45 மணிநேரம் இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதாகவும், இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் தானியேல் நோசேரா.