இறுதிப்போட்டியில் விளையாடுவேன்! முரளிதரன் அதிரடி அறிவிப்பு
முத்தையா முரளிதரனின் உடல் திடநிலை குறித்து கவலைகள் நிலவிய போதிலும் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவார் என இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் ட்ரவோர் பெய்லீஸ் தெரிவித்துள்ளார். தற்போது மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முரளிதரனும் இக்கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
39 வயதான முத்தையா முரளிதரன் உலகக்கிண்ண சுற்றுப்போட்டியின்போது கணுக்கால், முழங்கால், கவட்டுப் பகுதி என உடலின் பல பகுதிகளில் உபாதைகளுக்குள்ளானார். அரையிறுதிப் போட்டியின் போது முரளிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை பலரால் முன்வைக்கப்பட்டது. எனினும் அவர் அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார்.
39 வயதான முத்தையா முரளிதரன் உலகக்கிண்ண சுற்றுப்போட்டியின்போது கணுக்கால், முழங்கால், கவட்டுப் பகுதி என உடலின் பல பகுதிகளில் உபாதைகளுக்குள்ளானார். அரையிறுதிப் போட்டியின் போது முரளிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை பலரால் முன்வைக்கப்பட்டது. எனினும் அவர் அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை மும்பை வாங்கெட் அரங்கில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஏஞ்சலோ மத்தியூஸும் காயமடைந்துள்ளார். அதனால் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்திய அணியுடனான உலகக் கிண் இறுதிப்போட்டியில் முரளி விளையாடுவார் என அணியின் பயிற்றுநர் பெய்லீஸ் கூறியுள்ளார். முரளி விளையாடுவதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. அவர் அரையிறுதிப்போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசினார். அவர் அப்படியான குணவியல்பு கொண்ட அவர் அசௌகரியமான நிலையிலும் விளையாடுவார்' என அவர் கூறினார்.
இப்போட்டியுடன் முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முரளிதரன் விளையாடுவதாக அறிவித்துள்ளமையானது இலங்கை இரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்போட்டியுடன் முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முரளிதரன் விளையாடுவதாக அறிவித்துள்ளமையானது இலங்கை இரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமிந்த வாஸ், சுராஜ் ரண்டீவ் உலக கிண்ண இலங்கை அணியில் இணைவு.
;
இலங்கை அணியில் எவருக்கேனும் காய மேற்படும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தை நிரப்புவதற்காக சமிந்த வாஸ் மற்றும் சுராஜ் ரண்டீவ் ஆகியோர் இன்று மாலை மும்பாயிற்கு செல்லவுள்ளதாக இலங்கையணியின் ஊடக முகாமையாளர் பிரைன் தோமஸ் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2 ஆம் திகதி மும்பாய் வெங்கடே விளையாட்டு அரங்கில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.இதேவேளை உலகக்கிண்ண வரலாற்றில் இரண்டு ஆசிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
முரளியை கௌரவிக்க இலங்கை அணிக்கு ஆதரவாக ஒன்று திரளுங்கள்! - ஜனாதிபதி
நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் கௌரவிக்கும் முகமாக, உலகக் கிண்ணத்தை வென்றெடுக்கும் கனவுடன் களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அனைத்து இலங்கையர்களும் அணிதிரளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.முரளி ஊக்கம்மிக்க ஓர் உண்மையான இலங்கையின் புதல்வர் என்றும் ஜனாதிபதி கூறினார்.இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியே சுழல் மன்னன் முரளிதரன் இலங்கை மண்ணில் விளையாடும் இறுதிப் போட்டியாகவும் அமைந்தது.
போட்டி முடிந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முரளிதரனுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் உலகில் பந்து வீச்சு ஜாம்பவானாகக் கருதப்படும் முரளிதரன் இதுவரை 349 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 133 டெஸ்ட் மற்றும் 12 இருபது 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
முரளிதரன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளமை அறிந்ததே.ஒருநாள், டெஸ்ட் போட்டி களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ள முரளி மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முரளிக்காக உலக கிண்ணம்! ஆனால் முரளி அணியில் இல்லை! ஜனாதிபதி இந்தியா செல்கிறார்
இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கு வழங்கும் கௌரவமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரியவருகிறது.
முத்தையா முரளிதரனும் அஞ்சலோ மெத்தியூஸம் காயம் அடைந்துள்ளமையால் அவர்களுக்கு பதிலாக உலக கிண்ண கிரிக்கட் குழாமில் சேர்க்கப்படாத சமிந்த வாஸ் மற்றும் சுராஜ் ரண்டீவ் ஆகியோரை அணியில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முரளிதரனின் பந்துவீச்சு இந்திய கிரிக்கட் அணிக்கு சவாலாக அமையாது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இந்திய அணியுடன் ரண்டீவ் மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடுவர் என்ற எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலேயே முரளிதரன் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
எனினும் முரளிதரன் தரப்பில் இருந்து இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.இதற்கிடையில் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள உலக கிண்ண இறுதிப் போட்டியில் பங்கு கொள்வதற்கான இலங்கை அணி நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்தது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி மும்பையில் உள்ள வன்கடே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக இந்தியா செல்லவுள்ளார்.
உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம்.
மிகப் பிரம்மாண்டமான உருளைக்கிழங்கு போல இருக்கும் பூமியின் தோற்றத்தை ஐரோப்பாவின் கோஸ் செயற்கை கோள் வெளியிட்டுள்ளது.செயற்கை கோள் வெளியிட்டுள்ள பூமிப்பந்து வரைபடத்தில் மஞ்சள், நீலம், சிவப்பு வண்ணப் பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ள பூமிப்பகுதி மிக அதிக ஈர்ப்புச் சக்தியை குறிப்பிடுவதாக உள்ளது. நீல நிறப் பகுதி சுட்டிக் காட்டப்பட்டுள்ள இடத்தில் ஈர்ப்புச் சக்தி பலவீனமாக உள்ளது.
ஐரோப்பிய செயற்கை கோள் ஆய்வில் பூமியில் உள்ள கடல் பகுதியில் கடல்கள் எவ்வாறு நகர்கின்றன என்றும் அவை சூரிய வெப்பத்தை மீண்டும் எப்படி உலகப் பகுதிகளுக்கு திருப்புகின்றன என்றும் கவனிக்கப்படுகிறது. உலக வானிலை ஆய்வில் இந்தத் தகவல் மிக முக்கியமானது என ஆய்வு விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
ஜப்பானில் இந்த மாதம் 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும், கடந்த ஆண்டு சிலியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்கும் பூமி அடுக்கில் பெரும் பாறைகள் திடீரென நகர்ந்ததே காரணம் என ஜேர்மன் ஜியோ டெடிக் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ஜோகன்னஸ பவுமேன் தெரிவித்தார்.
ஜப்பானில் மிகப் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அதற்கான சமிஞ்ஞைகள் செயற்கைகோளில் சிறிய அளவிலேயே இருந்தன. இகு குறித்தும் ஆய்வு செய்வதாக பவுமேன் தெரிவித்தார். ஜரோப்பாவின் கோஸ் செயற்கை கோள் இதர அறிவியல் செயற்கை கோளைக் காட்டிலும் தாழ்வாகவே பறந்து பூமியின் விவரங்களைச் சேகரித்து வருகிறது.
கோஸ் என்பது ஈர்ப்பு தளம் மற்றும் கடல் சுழற்சி கண்டுபிடிப்பு என்பதன் சுருக்கமாகும். இந்த கோஸ் செயற்கைகோள் கடந்த 2009 ம் ஆண்டு ஏவப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோஸ் ஒரு அறிவியல் நவீனமாகவே இருந்தது. இந்த செயற்கைகோளானது 2014 ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என ஆய்வுக் குழு தெரிவித்தது.
புகுஷிமா அணு உலை: மண்ணில் புதைக்க ஜப்பான் அதிரடி முடிவு.
ஜப்பானில் கடந்த மார்ச் 11 ம் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 27652 பேர் பலியானார்கள்.
மேலும் அவற்றின் தாக்குதலால் புகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையத்தில் 4 அணு உலைகள் வெடித்து சிதறின. அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.அந்த கதிர்வீச்சு மக்களை தாக்கியது. மேலும் குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெடித்து சிதறிய அணு உலைகளை குளிர்வித்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து அணு உலைகளின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தியும் சுத்தமான தண்ணீரை ஊற்றி குளிர்வித்தும் வருகின்றனர். இருந்தும் கதிர்வீச்சு பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜப்பானில் வெளியேறிய கதிர்வீச்சு தென் கொரியா, சீனா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு காற்றில் பரவி வருகிறது.
எனவே கதிர்வீச்சை முற்றிலும் தடுக்க ஜப்பான் அரசு அதிரடி முடிவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி புகுஷிமாவின் அணு உலைகளை சிமெண்ட் கான்கிரீட் மூலம் மூடி அதை அப்படியே மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐப்பான் பிரதமர் நேட்டோ கான் இதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த முடிவை அணுவியல் நிபுணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அதை மூடுவதற்கான தொழில் நுட்ப சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையே உலக அளவில் அணு கொள்கைகளை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான கூட்டத்தை பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி நடத்துகிறார். அக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
தாய்லாந்து மற்றும் நமீபிய பெருவெள்ளம் காரணமாக மில்லியன் கணக்கில் மக்கள் பாதிப்பு.
தாய்லாந்தின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக மில்லியன் கணக்கிலான மக்கள் தற்போதைக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அதன் காரணமாக பல பகுதிகளிலும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரமும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தின் இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் நேற்று வரை பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 21 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் ஜனாதிபதி ஹிபிகெபுனி பொனம்பா அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார். அங்கும் தற்போதைக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லெனினின் உடலைப் புதைக்குமாறு கிரெம்ளின் மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.
கம்யூனிச ரஷ்யாவின் தந்தை லெனினின் உடலைப் புதைத்து விடுமாறு கிரெம்ளின் மனித உரிமை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.அவரது உடல் தற்போதைக்கு ரஷ்யாவின் கிரெம்ளின் நகரில் இருக்கும் செஞ்சதுக்கத்தில் பதப்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.
ரஷ்யா செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாக லெனினின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள செஞ்சதுக்கம் திகழ்கின்றது. ஆயினும் அவ்வாறு லெனினின் உடல் பதப்படுத்தப்பட்டு அதனைப் பாதுகாப்பதற்காக பெருமளவு பணம் செலவிடப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து தற்போது கடும் எதிர்ப்பலைகள் எழுகின்றன.
அதன் ஒரு கட்டமாகவே மனித உரிமை அமைப்புகள் அதனைப் புதைக்குமாறு கோரி போர்க்கொடி தூக்கியுள்ளன. அத்துடன் தங்கள் கோரிக்கையை எழுத்து வடிவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் மெட்வடோவ் இடம் கையளிக்கவும் செய்துள்ளன.
ஆயினும் மனித உரிமை அமைப்புகளின் போர்க்கொடிக்கு எதிராக ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. ரஷ்யாவில் இன்றைக்கு கம்யூனிசம் செல்வாக்கிழந்திருந்தாலும் அகன்ற ரஷ்யாவின் ஸ்தாபகர் என்ற வகையிலாவது லெனின் மதிக்கப்பட வேண்டும் என்பதுடன், அவரது சடலத்தைப் புதைத்துவிடுமாறு அழுத்தம் கொடுப்பது கூட ஒருவகை மனித உரிமை மீறல் தான் என்று அக்கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.
11 ஆண்டுகளாக பொலிஸாரால் தேடிய பயங்கர தீவிரவாதி கைது.
சர்வதேச பயங்கர தீவிரவாதி உமர்பாடக்(41). கடந்த 1999 ம் ஆண்டு இந்தோனேஷியாவில் பாலி என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.அதில் 202 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு நடைபெற மூளையாக செயல்பட்டவன். இவனை கைது செய்ய கடந்த 11 ஆண்டுகளாக இந்தோனேஷியா பொலிசார் அவனை தேடி வருகின்றனர்.
இந் நிலையில் அவன் பாகிஸ்தானில் பிடிபட்டான். அந்நாட்டின் உளவுத்துறை(ஐ.எஸ்.ஐ) அவனை கைது செய்துள்ளது. தற்போது அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் அவனுக்கு உள்ள தொடர்பு குறித்து தகவல்கள் பெறப்படுவதாக ஐ.எஸ்.ஐ உளவு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவன் ஒரு சர்வதேச பயங்கர தீவிரவாதி இந்தோனேஷியா மட்டுமின்றி அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் குண்டு வைத்தவன்.
இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.4 1/2 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கிடையே அவனை தங்களிடம் ஒப்படைக்கும் படி பாகிஸ்தானிடம் இந்தோனேஷியா கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் அவனிடம் நடத்திய விசாரணை குறித்த தகவல்களை அறிய பொலிஸ் அதிகாரிகள் குழுவை இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
உமர்பாடக்குக்கு அல் கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. இவன் தெற்காசியாவில் இயங்கும் ஜெமா இஸ்லாமிய இயக்கத்துடன் சேர்ந்து பல குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி இருக்கிறான்.வெடிகுண்டுகளை தயாரிப்பதில் இவன் மிகவும் திறமை படைத்தவன். மேலும் அவற்றை தயாரிப்பது குறித்த மற்ற தீவிரவாதிகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தான்.
ஒபாமா முகமூடி அணிந்து வங்கியில் திருட்டு.
ஒபாமா முக மூடி அணிந்து வங்கிகளில் கொள்ளையடிக்கும் நபரை ஆஸ்திரியா பொலிசார் கைது செய்தனர்.
மேல் ஆஸ்திரியாவின் பார்னாச் பகுதியில் ஆயுதம் தாங்கி கொள்ளையடித்தப் பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். பார்னாச் வங்கியின் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடிக் கொள்ளையன் காரில் தப்பிச் சென்றான்.ஒபாமா முகமூடிக் கொள்ளையன் அவுஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் 6 கொள்ளைகள் நடத்தி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. அந்த நபர் இறுதியாக வியாழக்கிழமையன்று வங்கி கொள்ளையில் ஈடுபட்டான். அதையடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் கைது செய்யப்பட்டான்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர் 2008 ம் ஆண்டு வரை வயதான நபர் தோற்றம் கொண்ட முகமூடியை அணிந்து கொள்ளையடித்தான். 2009 ம் ஆண்டு முதல் ஒபாமா முகமூடியை தனது கொள்ளை நடவடிக்கைக்கு பயன்படுத்தினான்.
வங்கிக் கொள்ளை நபர் வுட் பகுதி அருகே பிடிபட்டான். அந்த நபரை பிடிக்கும் போது முகமூடி ஆயுதம் மற்றும் திருடப்பட்ட பணம் ஆகியவை இருந்தன என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மார்கஸ் மிட்லோனர் தெரிவித்தார். பிடிபட்ட வங்கிக் கொள்ளையன் ஜேர்மனியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டாத வடகொரியா: அதிபர் லீ
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வடகொரியா ஆர்வம் காட்டவில்லை என்று தென்கொரிய அதிபர் லீ யங் பாக் கூறியிருப்பது சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சியோலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கடந்தாண்டில் எல்லை அருகே தங்கள் நாட்டினர் படுகொலை செய்யப்பட்டனர்.அதற்கு மன்னிப்பு மட்டும் கேட்டுக்கொண்ட வடகொரியா இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் வடகொரியா ஆர்வம் காட்டாததையே இது காட்டுகிறது.
தங்கள் நாட்டினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளிலேயே வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
படைவீரர்களின் குடும்பங்களுக்குள் நடக்கும் வன்முறைகள்.
அண்மைய சில ஆண்டுகளாக கனேடியப் படையினரின் குடும்பங்கள் மத்தியில் குடும்ப வன்முறைகள் பெரிதும் அதிகரித்திருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.ஆப்கானிஸ்தானிலிருந்து கடுமையான மன அழுத்தங்களுடனும் உளவியல் தாக்கங்களுடனும் அதிக படையினர் ஊர் திரும்புவது தான் இதற்குப் பிரதான காரணம்.
கனடாவின் பல பகுதிகளிலுமுள்ள இராணுவக் குடியிருப்புகளில் இதுபோன்ற பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும், ஒன்ராரியோப் பகுதியிலுள்ளதொரு படைக் குடியிருப்பில் தான் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.ஆப்கானிஸ்தானிலிருந்து பணி முடித்துத் திரும்பிய கனேடியப் படையினரின் பல குடும்பங்கள் குறிப்பிட்ட இந்தப் படைக் குடியிருப்பிலேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற குடும்ப வன்முறைகளின் போக்குத் தொடர்பாக கனேடிய இராணுவப் புலனாய்வு அணி ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்திருந்த போதும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது அந்த அறிக்கை கனேடிய ஊடகமொன்றுக்குக் கிடைத்திருக்கிறது.
ஆப்கானின் கந்தகாரிலிருந்து தங்களது பணி முடித்து ஊர் திரும்பும் படையினர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதோடு போர் தந்த வடுக்களினால் அதிகம் நொந்துபோயிருக்கிறார்கள் என்றும் தங்களது குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும் போக்கே காணப்படுகிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
ஆப்கானிலிருந்து திரும்பும் படையினருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பொருத்தமான உளவளத்துணைப் பயிற்சிகளை வழங்குவதுதான் சரியானதொரு தீர்வாக அமையும் என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் படையினரையும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களையும் சரியாக இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமான மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் அன துறைசார் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.ஆப்கானிஸ்தானில் பணி முடித்துத் திரும்பும் கனேடியப் படையினரில் அரைப் பங்கிற்கும் அதிகமானவர்கள் இதுபோன்ற மன அழுத்தங்களுக்கும் மன உழைச்சலுக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நான் ஆப்கானிலிருந்து திரும்பியது முதல் ஏதோவொன்றை இழந்ததைப் போல உணர்கிறேன். ஈடுசெய்யமுடியாத ஒன்றை நான் பறிகொடுத்துவிட்டேனோ என்ற எண்ணம் என்னுள் எழுகிறது. வேலைவாய்ப்பு, வாழ்வு என அனைத்தையும் நான் இழந்ததாக உணர்கிறேன் என ஆப்பானில் பணியாற்றிய கனேடியப் படைவீரர் ஒருவர் கூறுகிறார்.
கனடா ஆப்கானில் தனது பணியினை முடிவுக்குக் கொண்டுவரவிருக்கும் இந்த நிலையில் அங்கிருந்து திரும்பும் கனேடியப் படையினரின் உள நலனைக் கவனிக்கும் வகையிலான பரந்துபட்ட செயல்திட்டங்களை முன்னெடுக்கத் தவறுமிடத்து இதுபோன்ற பிரச்சினைகள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கே வழிசெய்யும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகள் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை படைத்தவர்கள்: ஆய்வில் தகவல்
எது சரி, எது தவறு என்பதெல்லாம் பெரியவர்களுக்குத்தான் தெரியும். குழந்தைகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஒரு விளையாட்டில் எவ்வாறு நியாயமாக நடக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வை ஒரு சர்வதேச ஆய்வுக் குழு மேற்கொண்டது. இதில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு முயற்சியில் வெற்றி பெற்றால் சில பரிசுப் பொருட்களைப் பெறுமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பரிசுப் பொருட்களை எல்லாவற்றையும் ஒரே குழந்தை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளிடம் இது மாதிரியான ஆய்வை மேற்கொண்ட போது அவற்றிடையே ஒற்றுமையின்மை வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளும் அதே மாதிரி செயல்படுகிறார்களா? என்று நாங்கள் பார்த்தோம் என ஆய்வாளர்களில் ஒருவரான ஹார்வர்ட் பல்கலைக்கழகதைச் சேர்ந்த பெலிக்ஸ் வார்ன்கென கூறுகிறார்.
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு கயிறைப் பிடித்து இழுத்தால் இனிப்பு, ஸ்டிகர் போன்ற பரிசுப் பொருட்கள் கிட்டும். ஒரு குழந்தை மட்டும் தனியாகக் கயிறை இழுக்க முடியாது.
எனவே ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று குழந்தைகளும் சேர்ந்து கயிறை இழுத்தார்கள். சிறு சண்டை, சச்சரவும் இன்றி கிடைத்த பொருட்களை நியாயமாகப் பகிர்ந்து கொண்டார்கள். அந்தக் குழந்தைகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம் என்கிறார் ஆய்வாளர் வார்ன்கென்.
சுனாமி எதிரொலி: எலக்ட்ரானிக் பொருள்களின் விலை உயர்வு
ஜப்பானில் கடந்த 11 ம் திகதி ஏற்பட்ட சுனாமி காரணமாக எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள், வீடியோ கேமராக்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர விற்பனையாளர் பிலிப்பி டாவின் தெரிவித்துள்ளார்.
வீடியோ கேம்ஸ் சாதனங்கள், வீடியோ கேமராக்கள் மற்றும் ஸ்டில் கேமராக்கள், டிவி தயாரிப்பு என ஜப்பான் நிறுவனங்கள் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றன.
மேலும் மேற்கண்டவைகளுக்கு தேவையான செமிகண்டக்டர் பாகங்கள் உற்பத்தி செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள் வரும் மே மாதத்தில் மீண்டும் செயல்பட துவங்கும். முழு உற்பத்தியை அடைய ஆண்டு இறுதியாகி விடும் என்பதால் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து அதன் விலை உயரும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
லிபியாவின் தாக்குதலுக்கு சி.ஐ.ஏ தான் காரணம்.
லிபிய நாட்டில் அதிபர் கடாபியைப் பதவியிலிருந்து அகற்றுவது என்ற முடிவை அமெரிக்காவில் யார் எடுத்தார்களோ, அந்தப் பணியில் முன்னணியில் இருப்பது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ தான் என்கிறது "நியூயார்க் டைம்ஸ்" நாளேடு.
கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜனநாயகவாதிகளுக்கு உதவும் நடுநிலையாளர்களைப் போல சி.ஐ.ஏ ஏஜெண்டுகள் அவர்களை அணுகினார்கள். அவர்களுடைய போராட்டத்துக்கு எல்லாவித ஆதரவும் தருவதாக உறுதி அளித்தார்கள்.
பணம், ஆயுதம் போன்றவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்ததுடன் சில சிறிய உதவிகளையும் உடனுக்குடன் அளித்தார்கள். இதனால் ஜனநாயக ஆதரவாளர்கள் பலரும் அவர்கள் சி.ஐ.ஏ ஏஜெண்டுகள் என்ற சந்தேகமே ஏற்படாமல் நாட்டு அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்கள்.சி.ஐ.ஏ ஏஜெண்டுகள் தங்களுடைய அமைப்பு மூலம் திரட்டிய தகவல்களுடன் அரசு எதிர்ப்பாளர்கள் கூறிய தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து லிபிய அரசின் நடவடிக்கைகளைத் துல்லியமாகக் கணித்தார்கள்.
அத்துடன் லிபிய ராணுவத்தின் படைபலம், படைகள் இருக்கும் இடம், படைகளின் நடமாட்டம், அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, லிபிய ராணுவத்திடம் உள்ள ஏவுகணைகள், மிகப்பெரிய ஆயுதங்கள், ஆயுதக் கிடங்கு, ரகசியத் தகவல் மையங்கள், கேந்திர ராணுவ மையங்கள், தகவல் தொடர்பு கட்டமைப்பு, லிபிய ராணுவத்துக்கு உதவிகள் வரக்கூடிய வழிகள் ஆகிய அனைத்தையும் அறிந்து அமெரிக்க ராணுவத்துக்குத் தகவல் தந்தனர்.
கடாபியின் கவச வாகனப் படைகளும் டேங்குகளும் எங்கு, எத்தனை எண்ணிக்கையில் இருக்கின்றன, அடுத்து எங்கே செல்கின்றன என்று தகவல் திரட்டி அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைப்பிரிவுக்குத் தெரிவித்தனர். அவர்கள் டாங்குகளைத் தங்களுக்குச் சாதகமான இடத்தில் குண்டுவீசி கொத்துகொத்தாக அழித்தனர்.
அத்துடன் லிபிய தரைப்படையின் பீரங்கி படைப்பிரிவு, ஏவுகணைகளை ஏவ உதவும் தளங்கள் ஆகியவற்றையும் நோட்டோ தாக்கி அழிக்க சி.ஐ.ஏ தகவல்கள் உதவின. லிபியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கிய ஜனநாயக ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களையும் உதவிகளையும் அளிக்க ரகசிய ஆணையொன்றில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.
அதில் குறிப்பிடப்பட்ட வகையில் பணமும் பிற உதவிகளும் தரப்பட்டன. ஆனால் ஆயுதங்களைத் தரத்தான் அமெரிக்க ராணுவத் தலைமையகம் தயங்குகிறது. கடாபியை எதிர்க்கிறார்கள் என்பதற்காகவே ஆயுதங்களைக் கொடுத்து விட்டால் நாளை அவர்கள் அமெரிக்காவையும் எதிர்க்கத் தொடங்கினால் என்னாவது, ஆயுதங்களை அவர்கள் வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு இந்த எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்பது புரியாததால் இப்போதைக்கு ஆயுதங்களைத் தராமலேயே காலத்தைக் கடத்துகின்றனர்.
லிபியாவில் பாலைவனம் மிகப்பரந்த சமவெளியாகக் காட்சி தருகிறது. அத்துடன் மப்பும் மந்தாரமுமான மேகக் கூட்டமோ, பனி மூட்டமோ இல்லை. எனவே அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்களும் ஆள் இல்லாத ஏவுகணை வீச்சு விமானங்களும் எளிதாகப் பறந்துவரவும் லிபிய ராணுவ இலக்குகளைக் குறி பிசகாது தாக்கவும் முடிகிறது.
அத்துடன் அமெரிக்காவின் உளவு செயற்கைக் கோள்களும், ஆள் இல்லாமலேயே பறந்து இலக்கைத் தாக்கக்கூடிய டுரோன் ரக விமானங்களும் லிபியாவை அங்குலம் அங்குலமாக படம் பிடித்துக் காட்டிக்கொண்டே இருக்கின்றன.எனவே அமெரிக்காவின் கழுகுக் கண்களிலிருந்து லிபியா தப்பவே முடியாது என்று தோன்றுகிறது. லிபியாவை நேட்டோ தாக்கினாலும் அதன் கண்ணாகவும், கரங்களாகவும் செயல்படுவது சி.ஐ.ஏ தான் என்று தெரிகிறது.