Sunday, April 17, 2011

இன்றைய செய்திகள்.

ஜப்பான் அணு கழிவை கடலில் கொட்டியதால் இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி; கடல் தண்ணீரை எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி 8.9 ரிக்டர் அளவுக்கு கடலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஜப்பானின் வடகிழக்கு பகுதியை அடியோடு நாசம் செய்தது. சுனாமி அரக்கன் தாக்கியதில் புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 அணுமின் நிலையங்கள் சிதைந்து போயின. அங்கு மிகவும் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த 4 அணு உலைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் இருந்து மின்னல் வேகத்தில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அணுக்கதிர் வீச்சு காரணமாக அப்பகுதிகளை சுற்றி வசித்த லட்சக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

ஜப்பானில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சு கொரியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் பரவியது. அணுக்கதிர் வீச்சு தாக்கிய மீன் உள்ளிட்ட பொருட்களை உண்ண பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன.

இந்த நிலையில் சில அணு கழிவுகளை ஜப்பான் கடலில் கொட்டியது. இதனால் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மீன்களை அணுக்கதிர் தாக்கி இருக்குமோ என்ற பீதி பரவியது. இதையடுத்து இலங்கை அரசு கிழக்கு கடல் பகுதியில் அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து அணுசக்தி விஞ்ஞானிகள் அங்குள்ள கிழக்கு மாகாணம் முதல் தென்மாகாணம் வரையான பல்வேறு பகுதிகளில் கடல்நீர் மாதிரி எடுக்கப்பட்டன. கடற்படையினர் இலங்கை கடலோர பகுதிகளுக்கு சென்று கடல்நீர் மாதிரி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இலங்கை கடல் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் கடல் மாதிரிகளை சேகரித்தனர்.

இந்த கடல்நீரை இலங்கை அணுசக்தி விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து அதில் அணுக்கதிர் உள்ளனவா? என்பது பற்றி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்பரிசோதனைக்குப் பிறகுதான் மீன்களை அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பதற்கு விடை தெரியும். அணு உலைகளால் மனித உயிருக்கு பேராபத்து இருப்பதால் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் அணு உலைகளை அமைக்க கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மஹிந்தவுக்கு எதிராகப் பயன்படுத்த பொன்சேகாவுக்கு வந்திறங்கிய இராணுவ உபகரணங்கள் மாயம்!



சைப்பிரஸ் நாட்டில் இருந்து ஜோர்டான் விமானத்தில் மஹிந்தவுக்கு எதிரான இராணுவ தயார்படுத்தலுக்கு சரத்பொன்சேகா கொள்வனவு செய்த இராணுவ உபகரணங்கள் மர்மமான முறையில் மறைக்கபட்டுள்ளதாக தெரியவருகிறது.சைப்பிரஸ் நாட்டில் உள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று மஹிந்தவுக்கு எதிராக பயன்படுத்த பொன்சேகாவுக்கு இராணுவ தளபாடங்களை வளங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாடுதிரும்புவோம் : குமார் சங்ககார அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் சபையின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாடுதிரும்புவோம் என டெக்கான் அணியின் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை வீரர்கள் மே 5ம் திகதிக்குள் நாடுதிரும்ப வேண்டும். தேசிய அணியின் போட்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபை அதிரடியாக கட்டளையிட்டது.
இங்கிலாந்துடனான ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சிகள் மேற்கொள்ளும் வகையிலேயே இந்த அழைப்பினை விடுத்திருந்தது.டெக்கான் அணியின் கேப்டனாக சங்ககார, கொச்சி அணியின் கேப்டனான மெஹல ஜெயவர்த்தன, பந்துவீச்சாளர்கள் முரளிதரன், மாலிங்க என இலங்கையின் பல முக்கியமான வீரர்கள் ஐ.பி.எல் போட்டியில் விளையாடிவருகின்றனர்.

ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட வீரர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர். இந்நிலையில், மே 5ம் திகதிக்குள் இவர்கள் நாடுதிரும்ப வேண்டுமெனில், ஐ.பி.எல் இன் இறுதிக்கட்ட விறுவிறுப்பான போட்டிகளில் விளையாடமுடியாமல் போய்விடும். இவர்களுடைய இழப்பினை பூர்த்தி செய்வதும் கடினமாகும்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சங்ககார, இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தரவை ஏற்று, நாடுதிரும்புவோம். ஆனால் அது மே 5ம் திகதிக்கு முன்னரா, பிற்பாடா என்பது இன்னமும் தீர்மானமாகவில்லை.இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் இணைந்து கலந்தாலோசித்து என்ன முடிவெடுத்தாலும் அதனை வரவேற்போம் என தெரிவித்துள்ளார். மே 28ம் திகதி வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓபாமா, சோனியா காந்தி, ஆகியோரைவிடச் சிறந்த தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ - டைம்ஸ் சஞ்சிகை கணிப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமா,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, ஆகியோரைப் பின் தள்ளி,  உலகின் அதிக சக்தி வாய்ந்த பிரபலங்களின்  பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் சிறிலங்கா ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.டைம் சஞ்சிகை நடத்திய இந்தத் தேர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 6 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளார். இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தத் தெரிவில் பெற்றிருப்பது 95வது இடம்.
பயங்கரவாதத்தை இராணுவரீதியாக எதிர்கொண்டு, அதில் வெற்றி கண்ட  தலைவர், மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சியதிகாரத்துக்குத் தெரிவான அரியற்  தலைவர் ,  சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட மேற்கத்தேய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதில் வெற்றி கண்ட  தலைவர் ,  மஹிந்தராஜபக்‌ஷ என டைம்ஸ் சஞ்சிகை இத் தெரிவின் போது, அவரைப் பாராட்டியுள்ளது.
இந்தத் தெரிவில்  முதல் நூறு பேர்களுக்குள் வந்துள் மேலும் சில பிரபலங்கள்;
6 மஹிந்தராஜபக்‌ஷ
11 ஜுலியன் அசாஞ்சே
12 லேடி ககா
15 புகுஷிமா அணு மின்நிலைய ஊழியர்கள்
23 அமீர் கான்
27 மார்க் ஷுபேர்க்
29 அல் ஜசீரா செய்திச் சேவை
30 மிக்கேலா ஒபாமா
35 ஸாரா பாலின்
39 ஆங் சூன் குயி
42 ஹிலாரி கிளின்டன்
46 பாராக் ஒபாமா
63 ராப்பெல் நடால்
74 விளாடிமிர் புடின்
84 பெஞ்சமின் நெட்டான்யாகு
91 சித்தார்த்தா முகர்ஜி
95 சோனியா காந்தி
இம் மாதம் 21ந் திகதி இந்தத் தெரிவின்  அறிவிப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தத் தெரிவுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு தெரிவிப்பதற்கான சந்தர்பம் இப்போதுள்ளது.
இலங்கையை பற்றி அமெரிக்கா கவலைப்படத் தேவையில்லை – ஐ.தே.கட்சி
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா கவலைப்படத் தேவையில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா பல வருடங்களாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.இந்தநிலையில் அந்த நாடு ஏனைய நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை கொள்வதில் அர்த்தமில்லை என்று ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இலங்கை அரசாங்கம் ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் பிரதிதலைவர் கரு ஜெயசூரியவையும் துரோகி என்று பட்டம் சூட்டாமல் இலங்கையின் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ள முயலவேண்டும் என்றும் ஜெயசேகர கேட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை முழுவடிவம் 18ம் திகதி பகிரங்கப்படுத்தப்படும்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை எதிர்வரும் 18ம் திகதி பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கையின் ஒரு பிரதியை இலங்கை அரசாங்கத்துக்கும் வழங்கியிருந்தார். அதன் சில பகுதிகள் இன்றைய த ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.த ஐலண்ட் பத்திரிகை நிர்வாகம் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பது மட்டுமன்றி ஜனாதிபதியின் அரசியல் சாக்கடை வேலைகளை சிரமேற்கொண்டு செயற்படுத்தும் ஒரு பத்திரிகை நிறுவனமுமாகும்.
இதற்கிடையே ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ளமை குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் கடும் அதிருப்தி கொண்டுள்ளார். அதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கைக்கு அளவுக்கதிகமான பிரபலம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த அறிக்கையை எதிர்வரும் 18ம் திகதி பகிரங்கப்படுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் சில பகுதிகள் ஊடகங்களில் வெளிவந்தததையடுத்து அவர் அந்த முடிவுக்கு வந்துள்ளாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை.
வடக்கு, கிழக்கில் புதிதாக தொல்பொருள் முக்கியத்துவமிக்க 85 இடங்கள்: எல்லாவல மேதானந்த தேரர்
யுத்தம் முடிவுற்ற பின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் புதிதாக தொல்பொருள் முக்கியத்துவமிக்க 85 இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் எல்லாவெல மேதானந்த தேரர் அறிவித்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கு முழுமைக்கும் பௌத்த கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை விடுதலைப் புலிகள் அழித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர், எஞ்சியுள்ள சிற்சில தடயங்களைக் கொண்டே தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறு இனம் காணப்பட்டுள்ள பல இடங்கள் இதுவரை எந்தவொரு தொல்பொருளியலாளரும் கண்டுபிடிக்காத, பௌத்த மத தலைவர்கள் கேட்டறியாத இடங்களாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தற்போதைக்கு புதிதாக இனம் காணப்பட்டுள்ள தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பல செயற்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தாயும் அவரின் ஆறு பிள்ளைகளுமே இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர். 

இதில் நான்கு பிள்ளைகள் பெண் பிள்ளைகள் ஆவர். ஒரிஸ்ஸாவின் கிஹோன்ஜிகார் மாவட்ட காடாகொஹான் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் தற்கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பி மிகவும் ஆபத்தான நிலையில் 43 வயதான குடும்பத் தலைவர் உத்தர் மஹேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவர்கள் மாநிலத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடும் வறுமையே தமது முடிவுக்குக் காரணம் என்று உத்தர் மஹேர் வாக்கு மூலமளித்து உள்ளார். ஆனால் இறந்தவர்களின் உடம்பில் கழுத்துப் பகுதியில் காணப்படும் சில அடையாளங்கள் பொலிஸாருக்கு இந்த ஏழு மரணங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் சதாமின் ஆட்சிக்கால மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு.
ஈராக்கின் மேற்கு என்பார் மாகாணத்தில் சதாம் ஹூசைனின் ஆட்சிக் காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என நம்பப்படும் சுமார் 800இற்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் கூடிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவை 1980 முதல் 1988 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஈரான் - ஈராக்கிற்கிடையிலான யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவற்றில் சில எலும்புக்கூடுகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

எலும்புக்கூடுகளின் மண்டை ஓட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டமைக்கான அடையாளங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது சதாம் ஆட்சியின் மிக மோசமான குற்றத்தினையும் மனித உரிமை மீறலையும் காட்டுவதாக அந்நாட்டு மனித உரிமைகளுக்கான அமைச்சர் மொஹமட் சுடானி தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயகம் "ஆப்பிரிக்கா"

உலகில் வாழும் மக்கள் ஆயிரக்கணக்கான மொழிகளை பேசுகின்றனர். தொடக்கத்தில் அவை எந்த மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளி, இந்தி, ஜப்பானிஷ் உள்ளிட்ட 500 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொதுவாக 1 1/2 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றினான் என்ற கருத்து உள்ளது.
அந்த மனிதன் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென தனியான மொழியை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பறிமாற்றிக் கொண்டான். அங்கிருந்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறினான்.
இதை வைத்து பார்க்கும் போது தற்போது உலகில் உள்ள மொழிகளின் தாயகமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் ஒரே மொழியில் இருந்து தான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.
ஈராக்கில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள்.
ஈராக்கில் மேற்கு பகுதி மாகாணத்தில் ஒரே இடத்தில் 800-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இவர்கள் அனைவரும் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆதரவாளர்களாக இருக்கலாம் எனவும் இவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஈராக் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.ஈராக்கின் மேற்கு பகுதியான அன்பார் மாகாணத்தில் அடர்ந்த பாலைவனப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் நேற்று 800-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் முற்றிலும் சிதைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டன.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என மொத்தம் 812- உடல்கள் கண்டெடுக்கபட்டன. இவர்கள் அனைவரும் கடந்த 2006-ம் ஆண்டு ஈராக்கின் அதிபராக இருந்த சதாம் உசேனின் ஆதரவாளர்களாக இருக்கலாம் எனவும் இவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு பாலைப்பகுதியான அங்கு ஒரே இடத்தில் ஆழமான குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து ஈராக்கின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் குதீர்ஹம்தான் கூறுகையில் சதாம் உசேன் ஆதரவாளர்களாக இருந்த தன் காரணமாக இவர்களுக்கு அவரின் எதிர்ப்பாளர்கள் மரண தண்டனை மூலம் கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனறு கூறினார்.
பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஜப்பானிய மக்கள்.
ஜப்பானில் நிலநடுக்கம் சுனாமி ஏற்படுத்திய இடிபாடுகளுக்கு இடையே கண்டெடுக்கப்படும் ரொக்கப் பணத்தை அதிகாரிகளிடம் அந்நாட்டு மக்கள் ஒப்படைத்து வருகின்றனர்.நிலநடுக்கத்தாலும் அதைத் தொடர்ந்த சுனாமியாலும் பாதிக்கப்பட்ட ஜப்பானில் துயரத்துக்குக் குறைவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அது போல அங்குள்ள மக்களின் நேர்மைக்கும் குறைவில்லை.
இயற்கையின் சீற்றத்தால் இவாத்தே மியாகி ஆகிய இரு வடகிழக்கு மாகாணங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள். இங்கு அதிகாரிகளும் சாதாரண மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இடிபாடுகளுக்கு இடையிலும் சுனாமி அலையினால் ஏற்பட்ட பெரும் சகதிக்குக் கீழும் ரொக்கமாக பணம் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கண்டெடுக்கப்படும் பணத்தை உடனுக்குடன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் அங்குள்ள மக்கள். இதுவரை இலட்சக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. சிறுதொகையாக ரொக்கமாக உள்ள பணத்தைத் தவிர சிறு பணப்பெட்டிகள் பெரிய பணப் பெட்டகங்களும் கூட இடிபாடுகளுக்கு இடையே இருப்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு கிடைக்கும் பணத்தை அவற்றின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து அவர்களிடமே திருப்பித் தர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்
கியூபாவின் 50வது வெற்றி விழா கொண்டாட்டம்.
அமெரிக்க ஆதரவுப் படையை வீழ்த்திய கியூபா 50வது ஆண்டு வெற்றி விழாவை நாளை கொண்டாடுகிறது.அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஆதரவு பெற்ற 1400 நபர்கள் பே ஆப் பிக்ஸ் பகுதியில் ஊடுருவி தாக்குதலை துவங்கினர். இந்த தாக்குதல் கியூபா தலைநகர் ஹவானாவுக்கு 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பிளயாலார்கா மற்றும் பிளயாகிரான் பகுதியில் 72 மணி நேரம் நீடித்தது. இறுதியில் கியூபா மகத்தான வெற்றி பெற்றது.
1961ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி நடந்த இந்தப் போர் நிறைவு அடைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50வது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை கியூப மக்கள் கோலாகலமாக வரவேற்றனர்.துருப்புகள் மகத்தான பீரங்கிகளையும், இதர ராணுவ வாகனங்களையும் வீதி வழியாக அணி வகுத்து வருகின்றன. இந்த அணி வகுப்புக்கு முன்பாக குழந்தைகள், இளைஞர்கள், மூத்தோர் முன்னெடுத்து வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
பே ஆப் பிக்ஸ் பகுதியில் அமெரிக்க ஆதரவு ஊடுருவல் நடப்பதற்கு ஒருநாள் முன்பாக கியூபா தலைவர் பிடல்காஸ்ட்ரோ புரட்சி தீர்மானத்தை அறிவித்த வீதி பகுதி தற்போது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கரிப்பு பணிக்கு கட்டுமான கலைஞர்களும், பெயிண்டர்களும் கூடுதல் நேரம் பணியாற்றினர்.
நேட்டோ படைகளின் குண்டு மழைக்கு மத்தியில் கடாபி திரிப்போலியில் பொதுமக்கள் மத்தியில் நடமாட்டம்.
நேட்டோ குண்டு மழைக்கு மத்தியில் கடந்த 14ம் திகதி லிபியத் தலைவர் கடாபி திறந்த ஜீப் ஒன்றில் ஏறி எந்த வித அச்சமுமின்றி பகிரங்கமாக திரிப்போலியை வலம் வந்துள்ளார்.அதன் போது அவரது ஆதரவாளர்கள் அவரை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். மேற்கூரையற்ற ஜீப்பில் ஏறி நின்று கொண்டு அவர் பொதுமக்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டு வீதிவலம் வந்த போது அவரது பாதுகாவலர்களில் இரண்டொருவரே அவருடன் கூட வந்திருந்தனர்.
ஆயினும் அவருக்கு ஆதரவான பொதுமக்களால் அவர் பயணித்த ஜீப் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. "எனது மக்களின் மத்தியில் நிற்பதற்கு நான் ஒருபோதும் அச்சப்பட மாட்டேன். அதே போன்று நான் ஒரு போதும் மேற்கத்தேய எதிரிகளுக்கு அச்சப்படப் போவதுமில்லை. எனது மக்கள் என்றைக்கும் என் மீது அன்பு கொண்டவர்கள். நானும் எனது மக்கள் மீது அன்பு கொண்டவன்" என்றும் அவர் தனது வீதியுலாவின் போது பொதுமக்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன் போது பொதுமக்கள் இறைவன், கடாபி மற்றும் லிபியாவைத் தவிர தமக்கு வேறெதுவும் தேவையில்லையென்று பொதுமக்களும் உரத்த குரலில் சப்தமிட்டுள்ளனர்.கடாபி பயணித்த வீதிகளில் அதற்கு சில வினாடிகள் முன்பாகவே நேட்டோ படையினரின் குண்டு வீச்சுகள் இடம்பெற்றிருந்தது. ஆரம்பத்தில் அதனை மறுத்த நேட்டோ படையினர் பின்பு அதனை ஏற்றுக் கொண்டனர்.
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த தென்கொரிய நிறுவனங்கள்.
தென்கொரியாவின் இரண்டு முன்னணி நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன.கூகுள் நிறுவனமானது தென்கொரியாவிற்குள் வர்த்தக ஏகாதிபத்தியமொன்றை உருவாக்க முனைவதாகக் குற்றம் சாட்டியே அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தென்கொரியாவின் முன்னணி தேடுபொறிகளான நேச்சர் மற்றும் டவும் என்பவற்றின் உரிமையாளர்களான என்.எச்.என் கோர்பரேசன் மற்றும் டவுன் கொம்யூனிகேசன்ஸ் ஆகிய நிறுவனங்களே கூகுளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள பிரஸ்தாப நிறுவனங்களாகும்.
ஸ்மார்ட் போன்களில் கூகுள் தேடுபொறியை மட்டும் உள்ளடக்கியிருப்பதன் மூலம் தென்கொரியாவினுள் பிரஸ்தாப நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தமது தேடுபொறியை பிரபலப்படுத்த விடாமல் கூகுள் தடைபோட்டுள்ளதாக அவர்கள் தங்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.இவ்வழக்கு தென்கொரியாவின் வர்த்தக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முறைப்பாட்டு ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முபாரக்கிற்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனை நிச்சயம்: மூத்த நீதிபதி தகவல்
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்(82). இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் உள்ளது. இதற்கிடையே ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, ஊழல் புகார் போன்றவற்றிற்காக முபாரக்கும் அவரது மகன்கள் கமால், அலா ஆகியோர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது முபாரக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக ஷார்ம் எல் ஷேக் நகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முபாரக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையும், அதிக பட்சமாக தூக்குத்தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை மூத்த நீதிபதி ஒருவர் தெரிவித்தார்.
புதிய உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவி சாதனை படைத்தது அமெரிக்கா.
உளவு செயற்கைக்கோளுடன் அமெரிக்க ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கலிபோர்னியாவின் வான்டன்பெர்க் விமானப் படைத்தளத்தில் இருந்து இந்த ராக்கெட் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, அவற்றைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வரும் என்.ஆர்.ஓ உளவு அமைப்பின் ரகசிய செயற்கைக்கோளை இந்த ராக்கெட் சுமந்து சென்றதாக வான்டன்பெர்க் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையே இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இது தள்ளிவைக்கப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டு வியாழக்கிழமை இரவில் விண்ணில் ஏவப்பட்டது.ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பற்றி வேறு எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. செயற்கைக்கோளின் நோக்கம், அதன் விலை பற்றியும் தெரிவிக்கப்படவில்லை.
லிபியா மீதான கூட்டுப்படைத் தாக்குதலில் குழப்பம்.
லிபியாவில் கடாபி ஆட்சியை வீழ்த்துவதற்கு நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக லிபியாவில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா படைகள் தாக்குதல் நடத்துகின்றன.இந்தக் கூட்டுப்படை தாக்குதலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. லிபியாவில் தாக்குதலை தீவிரப்படுத்த பயங்கர ஆயுதங்கள் உள்ளடக்கிய ஏசி 130 ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்த வேண்டுகோளை நிராகரித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஏ10 வார்தாக் என்ற நீண்ட முகம் கொண்ட போர்க்கருவிகளையே பயன்படுத்துகிறார். இந்த நிலையில் பிரான்ஸ் தலைமையிலான தாக்குதலில் ஒரு கூடுதல் விமானம் கூட சேர்ப்பதற்கு நேட்டோ நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
கடாபியை ஆட்சியை விட்டு வெளியேற்றும் வரை தாக்குதலை தொடர வேண்டும் என பிரிட்டனும், பிரான்சும் உறுதியாக உள்ளன. ஆனால் ஸ்பெயினை தொடர்ந்து இத்தாலி தாக்குதல் நடவடிக்கையில் பின்வாங்கி உள்ளது.
லிபியாவில் கூட்டுப்படைத் தாக்குதல் ஸ்தம்பித்து உள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில்,"லிபியா மீதான பிடி இறுகிக் கொண்டிருக்கிறது" என்றார். நேட்டோ படை தாக்குதலில் மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை கொன்று குவிக்கும் தொகுப்புக் குண்டுகளை கடாபி வீசி வருகிறார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF