Monday, April 11, 2011

இன்றைய செய்திகள்.


இலங்கையின் நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.


இலங்கையில் இனிமேல் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.இன்று நள்ளிரவு தொடக்கம் எந்தவொரு விடயத்தின் போதும் இலங்கை நேரம் பற்றிக் குறிப்பிடுகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ நேரமாக பிரஸ்தாப நியம நேரத்தையே காண்பிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதுடன், வர்த்தமானி அறிவித்தலுக்கான அங்கீகாரத்தை உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ வழங்கியுள்ளார்.
மேலும் இலங்கையின் நியம  நேரம் குறித்த இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முகவரி www.sltime.org என்பதாகும்.

புத்தளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்திய அதிசய மீன்!

புத்தளம் மாவட்டத்தின் தொட்டுவாவ கடலில் அதிசய மீன் ஒன்று பிடிபட்டு இருக்கின்றது. இம்மீனுக்கு வால், பூக்கள், பற்கள் போன்ற உறுப்புக்கள் கிடையாது. எடை 20 கிலோ. இரண்டு அடி நீளம். 1.6 அடி அகலம். சுனில் லிவேரா என்கிற மீனவர் இதை பிடித்து இருந்தார்.

மஹிந்தரின் புத்தாண்டுப் பரிசு!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மஹிந்த அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் ஓய்வு பெற்று இருக்கும் தனியார் துறையினரும் ஓய்வூதியத்தை பெற முடியும் என்று தொழில் துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்து உள்ளார்.

இந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருகின்றமைக்கு தேவையான சட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இத்திட்டம் சம்பந்தப்பட்ட சட்டமூலம் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது.இந்த ஓய்வூதியத் திட்டத்துக்காக திறைசேரி ஒரு பில்லியன் ரூபாயை ஒதுக்க உள்ளது.

அத்துடன் இந்த ஓய்வூதிய திட்டத்துக்காக வேலை வழங்குனரிடம் இருந்து 2 சதவீதமும், ஊழியரிடம் இருந்து 2 சதவீதமும் பணம் அறவிடப்படும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தது பத்தாண்டுகள் வேலை பார்த்த ஊழியர்களே இந்த ஓய்வூதியத்தை பெற அருகதை உடையவர்கள் ஆவர்.

அரசியல்வாதிகளின் கல்வித் தகைமை என்ன? போக்குவரத்து அமைச்சர் கேள்வி

கழிவறைகளை சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த தொழிலில் ஈடுபடுவதற்கு அடிப்படைத் தகுதியாக கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை தகைமையாக்கப்பட்டுள்ள போது ஒருவர் அரசியல்வாதியாவற்கு எந்தத் தகுதியும் குறிப்பிடப்படவில்லை என இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் 53 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட்டிருந்தால் இன்று நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களில் பலர் அங்கு வந்திருக்க நியதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தொழிலாளருக்கான கல்வித் தகைமை தரம் 8 ஆக இருந்ததோடு தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகளுக்கான தகுதி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வருகிற புதன்கிழமை (13-ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூரிலும், துணை-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வட சென்னையிலும், அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வட சென்னையிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷி்வந்தியத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

 பிரான்சில் பர்தாவுக்கு தடை: தாக்குதல் நடத்தப் போவதாக ஒசாமா அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து முகத்தை மூடியபடி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.முகத்தை முழுவதுமாக மூடியபடி சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் பொலிருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.
இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இத்தகைய தடை கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் மொத்தம் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 2,000 பெண்கள் மட்டுமே பர்தா அணிந்து செல்வதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரபு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் சில பகுதிகளில் மட்டும் முகத்தை மூடியபடி பர்தா அணியும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் சர்கோசி விதித்துள்ள இந்த புதிய சட்டத்துக்கு சில முஸ்லிம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாக சில சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வரையறுக்கப்படாததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்கள் முகத்தை மூடிச் சென்றாலும் அபராதம் விதிக்க வேண்டுமா என்ற குழப்பமும் உள்ளது.
இருப்பினும் இந்த முடிவை வரவேற்போரும் பிரான்ஸில் உள்ளனர். இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுவதுமாக மூடிச் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய சட்டத்தின்படி முகத்தைக் காட்ட மறுக்கும் பெண்களை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. அங்கு அவரை அடையாளம் கண்ட பிறகு அபராதம் விதிக்கப்படும். பர்தாவால் முகத்தை மூடிச் செல்லும் பெண்களுக்கு 216 டொலர் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர் விழிப்புணர்வு வகுப்புக்கு அனுப்பப்படுவார்.
வேண்டும் என்றே வலுக்கட்டாயமாக முகத்தை மறைத்துச் செல்வோர், மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போர், வன்முறையில் ஈடுபடுவோர் என தெரிந்தால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இத்தகையோருக்கு 30 ஆயிரம் யூரோவும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
இத்தகைய தடைக்கு அல்கொய்தாஅமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இஸ்லாத்துடன் பிரான்ஸ் மோதுகிறது. எனவே பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப் போட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி இன்று தனது ஒரு மாத இடைவெளியில் மீண்டும் கோரத்தாண்டவத்தை வெளிக்காட்டியுள்ளது.இன்றைய பயங்கர நிலநடுக்கம் 7. 1 ரிக்டர் அளவாகி பதிவாகியிருக்கிறது. இதனால் ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் தாக்கிய இந்த நிலநடுக்கத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி தாக்கும் பட்சத்தில் 50 செ.மீற்றர் உயரம் வரை கடலில் அலையின் சீற்றம் இருக்கும் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி நடந்த அதே நாளில் இன்று 11ம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஜப்பான் மீண்டும் வளர்ச்சி பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த நிலநடுக்கம், சுனாமியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.உலகம் முழுவதும் இருந்து நிவாரணப்பொருட்கள் இன்னும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது.
நைட்ரேட் கலந்த போலி பால் குடித்த 3 குழந்தைகள் மரணம்.
நைட்ரேட் தாக்கம் உள்ள பால் குடித்த மூன்று குழந்தைகள் சீனாவின் வடமேற்கு கான்சு மாகாணத்தில் உயிரிழந்தன.
36 குழந்தைகளின் உடல் நலம் தீவிரமாக பாதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்துள்ளதாக பிங்லியாங் உள்ளூர் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட நபர்கள் குழந்தைகள் குடிக்கும் பாலில் நைட்ரேட் கலந்தது தொடர்பான நோக்கம் குறித்தோ, அந்த நபர்களின் அடையாளங்கள் பற்றியோ அரசு தெரிவிக்கவில்லை. இறைச்சியை தூய்மைப்படுத்த நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் பாலில் சேர்ப்பதற்கான தேவை இல்லை என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் சீன நாளிதழில் தெரிவித்தார். நைட்ரேட் கலந்த கலப்பட பாலை குடித்து 3 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் பாதிக்கப்பட்ட 17 குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றன.
அந்த குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன உணவுத்துறை சமீப நச்சுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பால்துறை மிகப்பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. இருப்பினும் இத்துறையில் உள்ள சில நிறுவனங்கள் அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரும் கவலையை அளித்துள்ளன.இந்த ஆண்டு துவக்கத்தில் சில நிறுவனங்கள் பால்பொருட்களில் தோல் புரதத்தை சேர்ப்பது தெரியவந்தது. சோதனைகளை ஏமாற்றுவதற்காக அந்த நிறுவனங்கள் தோல் புரதத்தை பயன்படுத்தின. இது தொடர்பாக சீன தர நிர்ணயத்துறை பொதுமக்களை எச்சரித்திருந்தது.
கடந்த 2008ம் ஆண்டில் ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் பாலில் மேலமைன் கலந்து இருந்ததால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலை இரசாயனப் பொருளான மேலமைன் என்ற பொருளை தரம் குறைந்த அல்லது நீர்த்துப் போன பாலில் புரத அளவை அதிகரித்துக் காட்ட தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
லிபியாவில் அமைதித் திட்டம்: கடாபி அரசு ஒப்புதல்
ஆப்பிரிக்க கூட்டமைப்பு அமைதித் திட்டத்திற்கு லிபியாவின் கடாபி அரசு ஒப்புக் கொண்டுள்ளது என தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜாகப் சுமா கூறினார்.இந்த நிலையில் லிபியா போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: லிபிய ஜனாதிபதி கடாபி அல்லது அவரது மகன்களை பொறுப்பில் வைக்கும் கோரிக்கையை எங்களால் ஏற்க முடியாது.
லிபியாவில் கடந்த பெப்பிரவரி மாதம் 15ம் திகதி முதல் கடாபிக்கு எதிராக புரட்சி போராட்டம் வெடித்துள்ளது. இதனால் கடாபி ஆதரவுத் துருப்புகளுக்கும், புரட்சி போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக ஐ.நா துருப்புகளும் லிபியாவில் உள்ளன.
லிபியாவில் அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜாகப் சுமா மற்றும் இதர 3 ஆப்பிரிக்கத் தலைவர்கள், லிபியத் தலைவர் கடாபியை தலைநகர் திரிபோலியில் சந்தித்தனர். ஆப்பிரிக்க கூட்டமைப்பு குழு போராட்டக்காரர்களின் மையப் பகுதியான பெங்காசிக்கும் செல்லவுள்ளது.
இதற்கிடையே அஜ்டபியா நகரில் லிபிய ராணுவத் துருப்புகள் போராட்டக்காரர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. நோட்டோ துருப்பு விமானங்கள் ஞாயிறன்று மட்டும் 25 அரசு பீரங்கிகளை தகர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்புகள் இடையே உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஆப்பிரிக்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
அகதிகளின் வருகையை தடுக்க ஜேர்மனியில் எல்லை சோதனை தீவிரம்.
துனிஷிய போராட்டத்தால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகிறார்கள். புலம்பெயர்ந்து வரும் நபர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க இத்தாலி முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையால் துனிஷிய மக்கள் இதர ஜரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஜேர்மனியின் எல்லைப் பகுதியில் தீவிரச் சோதனை மேற்கொள்ள வேண்டும் என பழமைவாத கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
பவேரியன் உள்துறை அமைச்சர் ஜோசிம் ஹெர்மாலும், பழமைவாத உள்துறை கொள்கை செய்தித் தொடர்பாளர் ஹான்ஸ் பீட்டரும் ஜேர்மனியின் எல்லைப் பகுதியில் சோதனையை தீவிரப்படுத்தும் கருத்துகளை தெரிவித்து உள்ளனர். இருவரும் கிறிஸ்டியன் சோசியல் யூனியன் கட்சியை சார்ந்தவர்கள் ஆவார்கள்.இத்தாலி நாட்டிற்கு பல ஆயிரம் அகதிகள் புலம்பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக துனிஷிய நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை தீவிரமாகியுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்கா தேசத்தில் மோதல்கள் கடுமையாகி இருப்பதால் அகதிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தாலிக்கு வரும் அகதிகள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் வருவதால் ரோம், ஐரோப்பிய உறுப்பினர் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அகதிகள் வருகை குறித்து ஜேர்மனி இரு வித நிலைப்பாட்டை காட்டி உள்ளது.
ஜனாதிபதி வீட்டின் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய பிரான்ஸ்.
ஜனாதிபதி பதவியை விட்டு விலக மறுக்கும் லாரண்ட் காக்போ வீடு மீது பிரான்ஸ் மற்றும் ஐ.நா துருப்புகள் தாக்குதல் நடத்தின.
பிரான்ஸ் ஹெலிகாப்டரில் இருந்து காக்போ வீடு மீது ராக்கெட் வீசியது. ஜவரிகோஸ்ட்டில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காக்போ துருப்புகளுக்கு பதிலடி தரும் வகையில் சர்வதேசப் படைகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன.ஜவரிகோஸ்ட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அலசானே குவாட்டாரா அதிகாரப் பூர்வமாக வெற்றி பெற்றார். இருப்பினும் தற்போதைய ஜனாதிபதி லாரண்ட் காக்போ பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். இதனால் காக்போ ராணுவத் துருப்புகளுக்கும், அலசானே ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நீடித்து வருகிறது.
இதனால் ஜவரிகோஸ்டில் உள்நாட்டு நிலைமை மோசமடைந்து உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் பிரான்ஸ்-ஐ.நா துருப்புகள் களம் இறங்கி உள்ளன. காக்போவின் கொடூரத் தாக்குதலுக்கு முடிவு கட்டும் வகையில் பிரான்சின் 6 ஹெலிகாப்டர்களும், ஐ.நாவின் இரு ஹெலிகாப்டர்களும் காக்போ வீடு மீது தாக்குதலை நடத்தின.
ஜவரிகோஸ்ட் பொது மக்களின் மீது பயங்கர ஆயுதங்களை காக்போ பயன்படுத்துவதைக் கண்டித்த ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் ஐ.நா துருப்புத் தாக்குதலுக்கு அங்கீகாரம் அளித்தார். ராக்கெட் வீச்சு தாக்குதலின் போது காக்போ வீட்டிற்குள் இருந்தாரா என்பது தெரியவில்லை.
புலம்பெயர்ந்தவர்களுக்கு சிநேகமான நாடு கனடா தான்.
வோப்ஸ் சஞ்சிகையால் உலகில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மிகவும் நட்பு நாடாகக் கனடாவும், சிநேகமற்ற நாடுகளாக நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகியனவும் மதிப்பிடப்பட்டுள்ளன.அமெரிக்காவானது கனடா, பேர்முடா மற்றும் தென்னாபிரிக்காவுக்குப் பின்னர் நான்காவது இடத்தில் இருப்பதாக எச்.எஸ்.பி.சி வங்கியின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வு தெரிவித்திருப்பதாக இந்த அமெரிக்க சஞ்சிகை குறிப்பிடுகிறது.
அந்த நாடுகளின் உள்நாட்டு மக்களுடன் நட்பாகி, மொழியைக் கற்று புதிய கலாசாரத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இந்த நாடுகள் மிகவும் இலகுவாகவுள்ளன. இந்தியா எந்த இடத்திலிருக்கிறது என வோப்ஸ் சஞ்சிகை தெரிவிக்கவில்லை.ஆனால் இந்தியாவில் நாளாந்த வாழ்க்கை சவால் நிறைந்தது என எச்.எஸ்.பி.சி ஆய்வுக்குப் பதிலளித்த தனது குடும்பத்துடன் டெல்லியில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜை ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடா இரண்டாவது தடவையாகவும் மிகவும் வரவேற்புக்குரிய நாடாகத் தெரிவாகியுள்ளது. ஆய்வில் பங்கு பற்றியவர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டோர் தமக்கு கனேடிய உள்ளூர் வாசிகள் நண்பர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.புலம்பெயர்ந்தவர்களுக்கு சிநேகபூர்வமான முதல் பத்து நாடுகளாக கனடா, பேர்முடா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், மலேசியா மற்றும் ஜேர்மனி ஆகியன பட்டியலிடப்பட்டுள்ளன.
ஊழல் வழக்கில் எகிப்து மாஜி அதிபருக்கு நீதிமன்றம் சம்மன்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாஜி எகிப்து அதிபர் மற்றும் அவரது இரு மகன்களுக்கும், எகிப்து நாட்டின் அட்டர்ஜெனரல் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலக கோரி பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 18 நாட்கள் போராட்டத்திற்கு பின் கடந்த பெப்பிரவரி 11ம் திகதி பதவி விலகினார் முபாரக். தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் இவரது ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எகிப்து கோர்ட்டில் வழக்‌கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து எகிப்து நாட்டு அட்டர்னி ஜெனரல் அப்துர் மெஹூட் முகமது கூறுகையில், அதிபர் முபாரக் தனது ஆட்சியின் ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அரசின் பொது நி‌தியினையும் வாரி சுருட்டி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளார். தற்போது பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினாலும் அவரை விடுவதாக இல்லை. எனவே அவர் மீது அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எ‌னவே முபாரக் அவரது மகன்கள் ஆலா, கமால் ஆகி‌ய மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விசார‌ணக்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.இது குறித்து மாஜி முபாரக் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என் மீதாக குற்றச்சாட்டு பொய்யானவை, எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் களங்கத்தை ஏற்படுத்தவே இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
சிரியாவில் இறுதி ஊர்வலத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு: 28 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷார் ஆஷாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த வெள்ளிக்கிழமை தேரா நகரில் நடந்த மக்கள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. அதில் 37 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் லடாதியா நகரில் நேற்று நடந்தது. இது ஆட்சியாளர்களின் முக்கிய நகரமாகும். இந்த ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. எனவே ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டது.
இதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: மனித உரிமைகளை மீறும் செயலில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினர் சுட்டதில் 28 பேர் இறந்து விட்டனர்.அவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நாட்டில் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைக் கூட தெரிவிக்கக் கூடாதா என்றார் அவர்.
உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது: சீனா கடும் கண்டனம்
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைக்குப் பதிலளிக்கும் முகமாகவே சீனா பிரஸ்தாப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில் சீனாவில் மனித உரிமைகள் நிலவரம் திருப்திகரமானதாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சீன வெளிநாட்டமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது.அத்துடன் அமெரிக்காவில் மனித உரிமைகள் பேணப்படுவதாக கூறுவதை விட மிகப் பெரிய நகைச்சுவை வேறெதுவும் இருக்க முடியாது என்றும் சீன வெளிநாட்டமைச்சு எள்ளி நகையாடியுள்ளது.
அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை சீனா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று வலியுறுத்தியுள்ள சீன வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய், ஆயினும் அவ்விடயம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக மனித உரிமைகள் விடயத்தை முன்னால் தூக்கிப் பிடித்துக் கொண்டு சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையீட்டை மேற்கொள்ளும் முயற்சிகளை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் மேலு்ம் குறிப்பிட்டுள்ளார்.
முஷாரப்பை கைது செய்ய வேண்டும்: பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம்
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பைக் கைது செய்யுமாறு பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றமொன்று அந்நாட்டு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவரைக் கைது செய்ய அரசாங்கத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தற்போதைக்கு மூன்று வருடங்களுக்கு முன் அந்நாட்டில் இடம்பெற்ற தோ்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தற்கொலைத் தாக்குதல் ஒன்றின் மூலமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது படுகொலைக்காக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முஷாரப் தற்போது லண்டனில் தங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் நீதிமன்ற உத்தரவு குறித்து பிரிட்டன் அரசாங்கம் இதுவரை எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.அத்துடன் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இருநாடுகளும் இதுவரை கைச்சாத்திடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அளிக்க மறுத்ததால் நாடு திரும்பும் முடிவை கைவிட்ட முஷாரப்.
பாகிஸ்தான் ராணுவம் தனது கோரிக்கைகளை நிராகரித்து விட்டதால், தாய்நாட்டுக்குத் திரும்பும் திட்டத்தை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கைவிட்டு விட்டார்.தாரிக் இ தலிபான் மற்றும் அல்குவைதா போன்ற பயங்கரவாதிகளால் பலூசிஸ்தான் தலைவர் அக்பர் புக்தி கொலை செய்யப்பட்டதால், பலூசிஸ்தான் பயங்கரவாதிகளாலும் முஷாரப்பின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் அந்நாட்டு ராணுவம் எந்நேரமும் அவரை கைது செய்யும் என்பதால் தான் பாகிஸ்தானுக்குத் திரும்பும் பட்சத்தில் தன்னை கைது செய்யக்கூடாது என்றும், பயங்கரவாதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முஷாரப் பாகிஸ்தான் ராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஆனால் ராணுவம் அதை நிராகரித்துவிட்டது. அதனால் பாகிஸ்தான் திரும்பும் தனது முடிவை முஷாரப் கைவிட்டு விட்டதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"அவரது உயிருக்கு அதிகளவில் ஆபத்து காத்திருக்கிறது. அதனால் தான் அவர் பாகிஸ்தான் செல்வதற்குப் பயப்படுகிறார்" என்று அவர் கூறினார்.
ஒபாமா தேசிய ஆலோசகர் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப் பயணம்.
பக்ரைன், ஏமன் ஆகிய நாடுகளில் இன்னமும் அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.இது குறித்து விவாதிப்பதற்காகவும், வளைகுடா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிப்பதற்காகவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சவூதி அரேபியா மற்றும் யு.ஏ.ஈ. ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.
இது குறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பக்ரைன், ஏமன் ஆகிய நாடுகளில் அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்துள்ளது.
அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை நிலவி வருவதால் நிரந்தர அரசியல் தீர்வு எட்டவும், இது குறித்து பிராந்திய ஒத்துழைப்பினை நல்கவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய ஆலோசகர் டாம்டூனிலான் சவூதி அரேபியா மற்றும் யு.ஏ.ஈ. ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.
இந்நாட்டு தலைவர்களை அவர் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கவுள்ளார். மேலும் அதிபர் ஒபாமாவின் தூதராகவும் இவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF