Wednesday, April 13, 2011

இன்றைய செய்திகள்.


ஜனாதிபதி மகிந்தர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்?

இலங்கை ஜனாதிபதி மகிந்தர் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிவிக்கப்படுகிறது. 

இதே வேளை ஜ.நா சபையின் அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில் இவ்வறிக்கையால் இராஜதந்திர ரீதியாக இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் இவ்வறிக்கை அமைந்தால் ஜனாதிபதி மகிந்தரின் அமெரிக்க பயணம் இடம்பெறாமல் போகலாம் என இராஜதந்திரி வட்டாரங்கள் தெரிக்கின்றன.
ஆடையகத்துக்கு இன்று திடீர் விஜயம் செய்தார் மஹிந்தர்! 
தமிழ் - சிங்கள புத்தாண்டை எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடுகின்றமைக்கு நாட்டு மக்கள் எவ்விதம் தயாராகின்றனர்? என்பதை நேரில் காண்கின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கொழும்பு - பம்ம்பலப்பிட்டியில் அமைந்து இருக்கும் வுஸ் ஒப் பஸன் (House of fassion) ஆடையகத்துக்கு இன்று திடீர் விஜயம் செய்தார்.
உடுப்புக்கள் வாங்க வந்திருந்த மக்களின் சுகங்களை விசாரித்தார். இவரின் விஜயம் தங்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாக அங்குள்ள மக்கள் கூறினர்.

இலங்கையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிர் தப்பினார்.
ஓடும் ரயிலில் மோதிய பெண்ணொருவர் உயிர் தப்பிய அரிதான சம்பவமொன்று இதல்கஸ்ஹின்ன பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது.எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த விபத்தின் காட்சிகள் கெமராவிலும் பதிவாகின.சுதேச வைத்திய அமைச்சு ஊடகப் பிரிவின் பிரபாத் அபெசிறி பதிவு செய்த காட்சிகளே இவை 

பிரபாத் சில நாட்களுக்கு முன்னர் சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவுடன் அபிவிருத்தி செயற்திட்டமொன்று தொடர்பில் ஒளிப்பதிவு செய்வதற்காக இதல்கஸ்ஹின்ன பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.இதன்போது ஓர் நாள் மாலை 6.10 மணியளவில் கொழும்பில் இருந்து பயணித்த உடரட்ட மெனிக்கே இதல்கஸ்ஹின்ன பிரதேசத்தை அண்மித்தது

இந்தக் காட்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த வேளையில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவமொன்று அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.லெவகலவத்தையைச் சேர்ந்த 18 வயதான யுவதியே இந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்நோக்கினார்.


யாழ். பல்கலை மாணவர்கள் மஹிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாத நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு தொகை மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசினர். 


இம்மாணவர்கள் தென்னிலங்கைக்கு முதல் தடவையாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்து இருந்தனர்.இவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டு அறிந்து கொண்டார்.




மேலதிக மரபணுவுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
இரண்டு வயதான இந்தச் சிறுவன் தான் உலகில் முதன் முதலாக மரபணுவில் மேலதிக அங்கத்துடன் பிறந்த மனிதனாகும்.

பிறேவ்அல்பி என்ற இவன் பிறப்பிலேயே விழிப்புலன் அற்றவனாகப் பிறந்தான். இதற்கான காரணத்தை வைத்தியர்கள் தேடிப் பார்த்தபோது தான் இவனது மரபணு மேலதிக அங்கத்துடன் இருப்பது தெரியவந்தது. உலகில் இதற்கு முன் வேறு யாருக்கும் இவ்வகையான மரபணு இருந்தததாக எவ்வித மருத்துவச் சான்றுகளும் இல்லை. இவனது மரபணுவில் ஏழாவது குரோமஸோமில் ஒரு மேலதிக கரம் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை பெயர் இல்லை. 



எப்படி அழைப்பது என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் டாக்டர்கள் குழம்பிப் போயுள்ளனர். இப்போது இவனால் பார்க்க முடிகின்றது. இந்த மரபணு காரணமாக எற்பட்ட ஒரு குடல் சம்பந்தமான பிரச்சினைக்கு விரைவில் அவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.




ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரச திட்டத்தை ஏற்க கிளர்ச்சியாளர்கள் மறுப்பு.

ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஆதரவு நேட்டோ படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தியது.
கடாபியை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆயுத உதவியும் அளித்து வருகிறது. எனவே இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்பிரிக்க ஒன்றியம் ஒரு சமரச திட்டத்தை தயாரித்துள்ளது.அந்த திட்டம் குறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் ஜுமா தலைமையில் ஆப்பிரிக்காவில் உள்ள 12 நாடுகளின் அதிபர்கள் லிபியா சென்று கடாபியுடன் பேச்சு நடத்தினர். பேச்சின் முடிவில் போர் நிறுத்தம் செய்யவும், சமரச திட்டத்துக்கும் கடாபி ஒப்புக் கொண்டார். இத்தகவலை தென்ஆப்பிரிக்க அதிபர் ஜுமா தெரிவித்தார்.
கடாபியை தொடர்ந்து சமரச திட்டத்துடன் கடாபியின் எதிர்ப்பு குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தூதுக்குழு பெங்காசி நகருக்கு சென்றது. அக்குழு கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் எந்த விதமான சுமூக முடிவும் ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து ஆப்பிரிக்க யூனியனின் சமரச திட்டத்தை ஏற்க முடியாது என கிளர்ச்சியாளர்கள் குழு மறுத்து விட்டது. கடாபியும், அவரது மகன்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் மக்களின் தலையாய கோரிக்கை. இது குறித்து சமரச திட்டத்தில் எதுவும் இல்லை.எனவே அத்திட்டத்தை எங்களால் ஏற்க இயலாது. அதை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் தியாகிகளின் ரத்தத்தின் மீது எங்களால் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள் குழு தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் நிருபர்களிடம் கூறியதாவது: ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரச திட்டத்தில் கடாபியின் ராணுவம் போர் நிறுத்தம் செய்வது ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆனால் கடாபி பதவி விலகுவதுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் போராடும் மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.
எங்களின் வெற்றிக்காக இறுதி வரை போராடி உயிரை விட நாங்கள் தயார். கடவுள் எங்கள் பக்கம் உள்ளார். இறுதியில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். இவ்வாறு முஸ்தபா அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

பிரான்ஸில் பர்தா, நிகாப் அணிய தடைச்சட்டம் அமுலுக்கு வருகிறது : எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன.

பிரான்ஸில் இஸ்லாமியர்கள் பர்தா மற்றும் நிகாப் அணியத் தடைவிதிக்கப்படுவதற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை.மற்றும் இன்று திங்கட்கிழமை, அமைதியான முறையில் கண்டன பேரணி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கண்களை மட்டும் காட்சிப்படுத்திக்கொண்டு, முகம், உடல் என்பவற்றை முழுவதுமாக மூடியபடி ஆடை அணிந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்துகொண்டனர்.தலையை மாத்திரம், போர்த்தியபடி ஆடையணிந்து வருவதற்கு தடைவிதிக்கப்படவில்லை. என கூறியுள்ள் பிரான்ஸ் பிரதமர் ன்ஸுவாஸ் பிலியொன், பர்தா (முகத்தையும் மூடியபடி) அணிவதற்கே  இன்று முதல் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இத்தடை தொடர்ந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தடையை மீறுபவர்களுக்கு 150 யூரோ தடை விதிக்கப்படும் எனவும், பர்தா அல்லது நிகாப் அணியுமாறு யாரும் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு 30,000 யூரோ தண்டனைப்பணம் அறவிடப்படுவதுடன், இரண்டு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என பிரான்ஸின் இப்புதிய சட்டம் கூறுகிறது.82% வீதமான பிரான்ஸ் மக்கள் இத்தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 17% வீதமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்தே இவ் ஆர்ப்பாட்ட ஊர்லவமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதன் சென்ற 50வது ஆண்டு: ரஷ்யா கொண்டாட்டம்
விண்வெளிக்கு முதன் முதலாக மனிதன் சென்று வந்ததன் 50ம் ஆண்டு ரஷ்யாவில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.ரஷ்யாவைச் சேர்ந்த யூரிகாகரின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சோயூஸ் விண்கலம் மூலம் கடந்த 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி ‌சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார்.
இதன் 50ம் ஆண்டு விழாவையொட்டி மாஸ்கோவில் வண்ணமயமான வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது.இதுகுறித்து அதிபர் டிமெட்ரிமித்வதேவ் கூறுகையில்,"ஆண்டு தோறும் ஏப்ரல் 12ம் திகதியினை நிலவில் மனிதன் சென்றதன் சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும்" என ஐ.நாவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்கள் விமானத்தில் செல்ல தடை.
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந் திகதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2009ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று நைஜீரியாவில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு வந்த விமானத்தை குண்டு வைத்து தகர்க்க அல்கொய்தா தீவிரவாதி முயற்சி செய்தான்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க விமானங்களில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டது. அமெரிக்காவுக்கு புறப்பட்டு வரும் மற்ற நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்பவர்கள், ஹமாஸ், லஸ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெறுபவர்கள் போன்றவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
பயணிகள் குறித்த விவரங்களை கடுமையான விசாரணையின் மூலம் தெரிந்த பிறகே அவர்களை விமானத்தில் ஏற அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். இதை மீறி பயணம் செய்தாலும், சந்தேகத்திற்குரிய நபர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிப்பதில்லை. இதற்கான சட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் படி மேற்கண்ட கடுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட 350 பேர் அமெரிக்க விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தீவிரவாத குழுக்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் போர் நிறுத்தம்: அமெரிக்கா விருப்பம்
லிபியாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.போர் நிறுத்தத்தைக் காண விரும்புகிறோம் என்பதை தெளிவாகக் கூறிவிட்டோம். லிபிய படைகள் பலவந்தமாக புகுந்துள்ள நகரங்களில் இருந்து வெளியேற வேண்டும் என கிளிண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடாபி படைகளால் சீர்குலைக்கப்பட்ட நகரங்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் இதர வசதிகளை மீண்டும் அளிக்க வேண்டும். மேலும் லிபிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறோம். அதில் சமரசத்துக்கே இடமில்லை என ஹிலாரி கூறினார்.
கடாபி பதவியிலிருந்தும், லிபியாவில் இருந்தும் வெளியேற வேண்டும். அங்கு மக்களின் விருப்பத்துக்கேற்றவாறு மாற்றம் நிகழ வேண்டியது அவசியம் என ஹிலாரி குறிப்பிட்டார். 
ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம்.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 என்ற ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்க பாதிப்பு குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.ஏற்கனவே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்தில் கூடுதலாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை.
புகுஷிமா பிரதேசத்தில் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.நேற்றும் இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.1 எனப் பதிவாகியிருந்தது.
சிரியாவின் தாக்குதலுக்கு ஜேர்மனி கண்டனம்.
சிரியா நாட்டில் அமைதியான முறையில் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு சிரியாவின் தெற்கு நகரப்பகுதியில் ராணுவத் துருப்புகள் தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் தாரா நகரில் 26 பேர் கொல்லப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஜேர்மனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏங்கலா மார்கல் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார். சிரியா அரசும், ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தும் அமைதியான எதிர்ப்பு போராட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் ஏங்கலா மார்கெல் அறிக்கை குறித்து அரசு செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் செய்பெட் கூறுகையில்,"சிரியா அரசு நீதி முன்பாக நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக அரசு தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
சிரியாவில் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த மார்ச் 15ம் திகதி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. ஆசாத் கடந்த 2000ம் ஆண்டு முதல் சிரியாவின் ஜனாதிபதி பதவியில் இருந்து வருகிறார். சிரியாவில் மாற்றம் வரவேண்டும் என போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் மொத்தம் 28 பேர் கொல்லப்பட்டனர். இதில் 26 பேர் நாட்டின் தெற்கு நகரமான தாரா நகரில் கொல்லப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை அரசுத்துருப்புகள் கடலோர நகரான பனியாசில் தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயம் அடைந்தனர்.
லிபிய நாடு புதிய சோமாலியாவாக உருவெடுக்கும் நிலையுள்ளது: முசா குசா எச்சரிக்கை
போராட்டம் வெடித்துள்ள லிபியா புதிய சோமாலியா நாடாக உருவெடுக்கும் என அதிபர் கடாபியை விட்டு விலகிய முன்னாள் அயல்துறை அமைச்சர் முசா குசா எச்சரித்துள்ளார்.
லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் 15ம் திகதி முதல் புரட்சி போராட்டம் நடந்து வருகிறது. இதனால் கடாபி ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர்.இந்த நிலையில் ஐ.நா துருப்புகள் லிபியாவில் முகாமிட்டு கடாபி ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துகின்றன. பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக ஐ.நா துருப்புகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
கடாபியின் சர்வாதிகாரத்தில் அயல்துறை அமைச்சராக இருந்த முசா குசா பதவியை விட்டு விலகினார். அவர் லண்டனுக்கு தப்பி வந்துள்ளார். லிபியாவில் உள்நாட்டுப் போர் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் புதிய சோமாலியா நாடாக லிபியா உருவெடுக்கும் என முசா குசா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
லிபியாவை உடைக்கக் கூடாது. ஒன்றுபட்ட லிபியாவையே விரும்புகிறோம். ஒற்றுமை காணப்பட்டால் தான் லிபியாவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 1988ம் ஆண்டு லாக்கர்பி பகுதியில் விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலின் போது லிபிய புலனாய்வுத் துறை அதிகாரியாக முசா குசா இருந்தார்.அவர் லிபிய அரசை விட்டு தற்போது விலகி உள்ளதால் கடாபி ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. ஜனநாயக ரீதியில் பேச்சு வார்த்தை மூலம் லிபியா பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காதலியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த காதலன்.
பிரித்தானிய.
தன்னை விட்டு பிரிந்து சென்ற காதலி மீது ஆத்திரம் அடைந்த கொடூரக் கொலைக்காரர் மைக்கேல் கெல்லி கோடாரியால் காதலியின் தலையில் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த தாக்குதலை தடுக்க முயன்ற மகன் மார்ட்டினும் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையாளி சம்பவத்தன்று காதலி சல்லி கால்ஸ் வீட்டிற்குள் புகுந்து தலையில் 14 முறை வெட்டினார்.இதில் சல்லி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். சல்லியின் மகன் மார்ட்டின் கோடாரியுடன் வந்த மைக்கேல் கெல்லியுடன் மோதிய போது அவருக்கு 22 வெட்டுகள் தலையில் விழுந்தன.
இதில் மார்ட்டினும் உயிரிழந்தார். அவரது கடுமையான போராட்டத்தால் 2 சகோதரிகள் உயிர் தப்பி ஓட முடிந்தது. குற்றவாளி கெல்லி நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 30 ஆண்டுகள் வரை தண்டனை நீடிக்கும் நிலை உள்ளது.கொலை செய்ய வந்த போது மைக்கேல் கெல்லி கொடூர முகத்துடன் கூடிய முகமூடியை அணிந்து வந்தார். தன்னை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என அவர் இந்த முகமூடியை அணிந்து வந்தார்.
மைக்கேல் கெல்லியிடம் இருந்து கொலை அச்சுறுத்தல் வந்த போது சல்லி தனது படுக்கை தலையணையில் ஒரு கத்தியுடனேயே படுத்து தூங்கி வந்தார். சல்லி வீட்டில் கொடூரக் கொலை செய்து மைக்கேல் வெளியேறிய நிலையில் பிடிபட்டார். மைக்கேல் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சல்லியின் மகள்கள் அச்சத்தின் பீதியில் உறைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பயிற்சியில் கனடிய படைவீரர்கள் உயிரிழக்கும் அபாயம்.
canadian forces, operation anaconda, canadian military in action, helicopter  korea war
ஆப்கானிஸ்தானில் கனடா துருப்புகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்த துருப்புகளில் உள்ளவர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு பயிற்சி உதவி அளிக்க ஆப்கானிஸ்தானில் முகாமிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி நடவடிக்கை மிக குறைந்த வெற்றியையே தரும். ஆனால் கனடா துருப்பினருக்கு பெரும் உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கடந்த நவம்பர் மாதம் கூறுகையில்,"2014ம் ஆண்டு வரை கனடா துருப்புகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு பயிற்சி அளிக்கும்" என அறிவித்தார்.
இந்த பயிற்சி காலம் குறித்து பாலிசி ஆல்டர் னேடிவ்ஸ் மற்றும் ரிடியூ இன்ஸ்டியூட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பயிற்சியின் போது கனடா வீரர்களுக்கு உயிரிழப்போ அல்லது தீவிரக் காயமோ ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளது.
ஆய்வாளர்கள் மைக்கேல் பயர்ஸ் மற்றும் ஸ்டீபன் வெப் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி அபாயகரமானதாக உள்ளது. தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை தாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் பொலிஸ் படைப்பிரிவில் ஊடுருவி இது போன்ற தாக்குதலை நடத்தி வருகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் ஊடுருவி தலிபான்கள் தாக்குதல் நடத்திய பல்வேறு நிகழ்வுகளும் இந்த ஆய்வாளர்களின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் இடையே போதிய அனுபவம் இல்லாததாலும், கல்வி அனுபவம் இல்லாததாலும் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கை கவலைக்குரியதாக உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
உலகில் மக்களை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு முதலிடம்.
ஐ.நாவுக்கான உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் உலகின் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மிகப்பெரிய 50 சுற்றுலா தளம் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் கடந்த 20010-11ன்படி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதில் 78.95 மில்லின் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இது 60.88 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
மூன்றாம் இடத்தில் ஆசிய நாடான சீனா 52.02 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. சீனாவிற்கு ஸ்பெயின் நிதி உதவி செய்து வந்ததன் காரணமாக சீனாவில் சுற்றுலா பயணிகளின் வருகை 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும் இந்தியா மிகவும் பின் தங்கி 41வது இடத்தில் உள்ளது. மேலும் ஐ.நாவின் அறிக்கையின்படி முதல் 10 ஆசிய நாடுகளில் மலேஷியா முதலிடம் வகிக்கிறது. இந்நாடு கடந்த 2010-11ம் ஆண்டு 24.06 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. 
புகுஷிமாவில் கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்
கடந்த மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை போன்றே நேற்றும் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பல சேதமடைந்தன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்நிலையில் புகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு அபாயம் பல மடங்கு அதிகரித்துள்ளது. கதிர்வீச்சு அபாயத்தை அளவிடும் சர்வதேச அளவுகோலில் 7 புள்ளிகளாக புகுஷிமா கதிர்வீச்சு பதிவாகியுள்ளது. இது மிகவும் கொடூர விளைவுகளை ஏற்படுத்தும் என அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்தடுத்த நிலநடுக்கம், அபாயகரமான கதிர்வீச்சு, சுனாமி எச்சரிக்கை என தொடரும் சீற்றங்களால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
லோரன்ட் பக்போ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி லோரன்ட் பக்போ இன்று கிளர்ச்சிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐவரி கோஸ்டில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலின் போது எதிர்க்கட்சி வேட்பாளர் அவுட்டேரா வெற்றி பெற்றிருந்த போதும் பக்போ பதவி விலக மறுத்திருந்தார். ஆயினும் சர்வதேச சமூகம் அவுடேராவையே ஜனாதிபதியாக அங்கீகரித்திருந்தது.
அத்துடன் பக்போ பதவி விலக வேண்டுமென ஐ.நா. ஆதரவுடன் அவுட்டேராவின் படைகள் போராட்டம் நடாத்தி வந்தன. பக்போவின் படையினருக்கும் அவர்களுக்கும் மத்தியில் கடும் மோதல்கள் நடைபெற்றிருந்தன. அவ்வாறான நிலையிலேயே அபிட்ஜான் நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து பக்போ கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவா் பிரெஞ்சுப் படைகளாலேயே கைது செய்யப்பட்டு அவுடேராவின் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் அவர் அவுட்டேராவின் படைகளாலேயே கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சுத் தூதுவர் அறிவித்துள்ளார். பக்போ இழைத்துள்ள குற்றங்களுக்காக அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. தூதுவர் அறிவித்துள்ளார்.
போதை மருந்து கடத்தியவருக்கு தூக்குத் தண்டனை.
ஈரானில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த கைதிக்கு சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.ஈரானில் கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கரீம்காஹ் என்பவர் போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக டெஹரான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இவர் டெஹரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் சிறைக்குள் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரானில் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கி இதுவரை 93 பேர் பல்வேறு குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். எனினும் அதிகபட்சமாக கடந்த 2009ம் ஆண்டு 179 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையம் ஈரானின் இத்தகைய தண்டனை குறித்து கவலை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் சர்வதேச மனித உரிமை மீறல் சட்டங்களை மீறி கடந்த 3 ஆண்டுகளில் 388 பேருக்கு தூக்க தண்டனை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் மரண தண்டனை வழங்குவதில் தற்போது சீனா தான் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF