Wednesday, April 6, 2011

இன்றைய செய்திகள்.


இன்டர்போல் போன்று சார்க்போல் என்ற தெற்காசிய பிராந்திய பொலிஸ் அமைப்பை உருவாக்கும் திட்டம்!

‘சார்க்போல்’ என்ற பெயரில் தெற்காசிய பிராந்திய பொலிஸ் அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுவருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற தெற்காசிய பொலிஸ் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றச்செயல்களை முறியடிப்பதில தெற்காசிய பிராந்திய நாடுகள் கூட்டிணைந்து செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். 

‘சார்க்போல்’ என்ற பிராந்திய அமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேபோன்று இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பு காணப்படுகிறது. இதில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கின்றது. மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான பொலிஸ் வலையமைப்பு ஈரோபோல் என அழைக்கப்படுகிறது.
இலங்கையர்களுக்கு சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் வாய்ப்பு.

இலங்கையர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் வாய்ப்பேற்படவுள்ளது என்று இலங்கை வானியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் நிலை உச்சத்தை அடையலாம் என்று இலங்கை வானியலாளர்கள் சங்கத்தின் தலைவர் காவன் ரணசிங்க தெரிவிக்கின்றார்.
வானம் தெளிவாக இருக்கும் நிலையில் கிழக்கு வானில் மாலை ஏழு மணியளவில் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.இரவு நேரத்தில் நம் தலைக்கு மேலாகத் தென்படும் சனிக்கிரகம் அதிகாலை நான்கு மணியளவில் மேற்கு வானில் தென்படத் தொடங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்
உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 05 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
இதன்போது ஏப்ரல் 03ம் திகதிக்கும் 10ம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும் ஏப்ரல் 06 ம் திகதிக்கும் 10ம் திகதிக்கும் இடையில் சீனாவிலும் ஏப்ரல் 10ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன் ஜப்பானில் ஏப்ரல் 16ம் திகதிக்கும் 20ம் திகதிக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங்கையிலும் அதன் பாதிப்பு உணரப்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.ஏற்கெனவே 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.
2011ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை அணி வீரர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று இடம் பெற்றுள்ளது.இதன்போது இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலக கிண்ணத்தை வெற்றி கொள்ளாவிட்டாலும் இறுதி போட்டிக்கு முகங் கொடுத்தமையானது பாரிய ஒரு வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்தவொரு கௌரவம் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்கு கொண்ட இலங்கை அணி வீரர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பாக ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுகின்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு விஷேட நினைவு சின்னமும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள்.
இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.முஹமட் ஹாரிப் (47), பர்மாஹான் அலி (37) என்ற இச் சகோதரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சஹிரா பர்வீன(24) என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் சடலத்தை தோண்டி எடுத்த இவர்கள் கால்களை வெட்டி கறி சமைத்து உண்டுள்ளனர்.அப்பெண்ணின் கல்லறைக்கு சென்றிருந்த உறவினர்கள் சடலம் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கையில், பல வருடங்களாக நரமாமிசம் மற்றும் நாய்களை இவர்கள் உண்டு வருவதாக தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் மனைவியர் இவர்களை விட்டுச் சென்றுவிட்டதால் ஏற்பட்ட மன விரக்தியாலேயே இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.

நேட்டோ இராணுவம் ஐவரிகோஸ்டில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி லோரண்ட் கபகோவின் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து நேற்றைய தினம் ஐக்கிய நாடுள் மற்றும் பிரான்சியப் படைகள் தாக்குதல் தொடுத்துள்ளன.

பிரான்சின் ஹெலிகொப்டர்கள் அப்பிரதேசங்களில் தாழ்வாகப் பறந்து குண்டுகளை வீசியதாக பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன் போது ஜனாதிபதியின் மாளிகையும் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளது. கபகோவின் படைகள் அந்நாட்டு சிவிலியன்களை இலக்கு வைத்துத் தாக்குதல் மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவே தாம் தாக்குதல்களை மேற்கொண்டதாக நேட்டோ படைகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அலஸ் சென் அவுட்டாரா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் ஐவரிகோஸ்டின் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, சர்வதேசப் படைகள் அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றன.இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்களின் போது இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்.
பிராந்திய நாடுகளின் விடயங்களில் ஈரான் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
அதன் எதிரொலியாக குவைத் மற்றும் பஹ்ரெய்ன் விவகாரங்களில் ஈரான் அழையா விருந்தாளியாகத் தலையை நுழைப்பதாக வளைகுடா நாடுகள் கடந்த ஞாயிறு குற்றம் சாட்டியிருந்தன.ஆயினும் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நிஜாத், வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பிடிக்குள் அகப்பட்டுள்ளதாக பதிலுக்கு குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் ஈரான் மீதான தாக்குதலொன்றுக்கு தேவையில்லாத குற்றச்சாட்டுகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வளைகுடா நாடுகள் மத்தியில் நட்புறவுப் பாலமொன்றை உருவாக்குவது அன்றி ஏனைய நாடுகளின் உள்ளக விடயங்களில் தலையிடும் நோக்கம் ஈரானுக்கு இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மக்களின் எதிர்ப்புணர்வுடன் வளைகுடா நாடுகளில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
அமெரிக்க வீரருக்கு புகலிடம் தர ஜேர்மனி மறுப்பு.
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் வீரர் ஆண்ட்ரே ஷெப்பர்டுக்கு புகலிடம் தர ஜேர்மனி மறுத்துள்ளது.
ஈராக் போர் முறைகேடானது என தனது நாட்டு துருப்பில் இணைந்து பணியாற்ற மறுப்பு தெரிவித்த குற்றச்சாற்று அவர் மீது உள்ளது. இந்தக் காரணங்களுக்காக ஜேர்மனி புகலிடம் தர மறுத்துள்ளது என ஜேர்மனி குடியேற்றம் மற்றும் அகதிகள் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
33 வயது ஷெப்பர்டு ஓஹியோவின் கிளவ் லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2007ம் ஆண்டு தெற்கு ஜேர்மனி மையத்தில் இருந்து வெளியேறினார். 19 மாதங்கள் கழித்து புகலிடம் கோரி அவர் ஜேர்மனியில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை ஜேர்மனி ஏற்கவில்லை.
கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2005ம் ஆண்டு பெப்ரவரி வரை ஷெப்பர்டு ஈராக் போரில் ஈடுபட்டார். இதையடுத்து மீண்டும் ஈராக்கில் பணியாற்ற அழைத்த போது அந்த வீரர் அங்கு செல்ல மறுத்தார். ஈராக் போர் சட்ட விரோதமானது என்றார்.
இதையடுத்து ஜேர்மனியில் புகலிடம் கோரினார். ஜேர்மனியில் புகலிடம் கோரிய முதல் அமெரிக்க வீரர் ஷெப்பர்டு வோர். அவர் ஜேர்மனியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். எனவே அவர் இந்த நாட்டில் குடியிருப்பதற்கான உரிமை உள்ளது. ஷெப்பர்டு மீண்டும் அமெரிக்கா செல்வது என்ற கேள்விக்கே இடம் இல்லை என அவரது வழக்கறிஞர் ரின்ஹார்டு மார்க்ஸ் கூறினார்.
மகனை வைத்து பின்லேடனை பிடிக்க திட்டம்.
தனது தந்தை ஒசாமா பின்லேடனை பிடிக்க மாஜி அமெரிக்க அதிபர் புஷ் போட்ட மாஸ்டர் பிளான் குறித்து அவரது மகன் ஒமர் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தகர்த்தப்பட்டது. இதற்கு அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது.
பின்லேடனை பிடிக்க அப்போதைய அதிபராக இருந்த ஜியார்ஜ் புஷ் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்க மாஜி அதிபரான புஷ் தனது பதவி காலத்தின் கடைசி நாளில் பின்லேடனை பிடிக்கும் முயற்சியாக அவரது மகன் ஒமரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஸ்‌பானீஸ் தினசரி பத்திரிகையான லா வாங்கூராடிய எனும் பத்திரிகைக்கு பின்லேடனின் நான்காவது மகன் ஒமர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு கத்தார் தலைநகர் டோக்கோ வந்திருந்த அமெரிக்க மாஜி அதிபர் புஷ் என்னை வெள்ள‌ை மாளிகைக்கு அழைத்து பின்லேடனை பிடித்து தர உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதற்காக எந்த நிபந்தனையும் தாம் விதிக்க மாட்டேன் என்றார்.
புஷ்ஷின் இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை. பின்லேடன் ஒரு பயங்கரவாதி தான். அவரது கொள்கை எனக்கு பிடிக்கவில்லை. இன்று வரை நான் அவரிடம் எந்த தொடர்பு வைத்துக் கொண்டதி‌ல்லை.எப்படியாயினும் அவர் என்னுடைய தந்தை. ஆகவே எனது தந்தையை பிடிக்க உதவ மாட்டேன் என்று கூறினேன். இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வெள்ள‌ை மாளிகை நிர்வாகம் ஒமர் இந்த அறிக்கைக்கு கருத்து கூற மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் முஷாரப்பை நாடு கடத்துவோம்: காமரூன்
பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் முஷராப்பை நாடு கடத்தி அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்போம் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் கூறினார்.ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். அங்கு பிரதமர் யுசுப் ராஸா கிலானியை சந்தித்து பேசினார்.
பின்னர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியாதவது: பயங்கரவாதத்தினை ஒழித்து கட்டுவதில் இரு நாடுகளும‌ே கடும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான், இங்கிலாந்தின் நெருங்கிய நட்பு நாடு.
பாகிஸ்தான் மக்களின் கல்வித்துறைக்கு ரூ.650 மில்லியன் பவுண்ட் நிதி வழங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. அடுத்த 4 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும். இதன் மூலம் 4 மில்லியன் குழந்தைகள் கல்வியறிவு பெறுவர்.முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ‌கொலையில் முஷராப்பிற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் உள்ள முஷாரப்பை கைது செய்ய பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தினால், அவரை நாடு கடத்தி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஜவரிகோஸ்ட்: ஜனாதிபதி பதவியில் இருந்து காக்போ விலக தயார்
ஜவரிகோஸ்ட் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய போதும் தற்போதைய ஜனாதிபதி சாக்போ பதவி விலக மறுத்து வருவதால் போராட்டம் ஏற்பட்டுள்ளது.
லாரண்ட் காக்போ ஆதரவாளர்களுக்கும், ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரப் பூர்வமாக வெற்றி பெற்ற குவாட்டரோ ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அலசானே குவாட்டரோவுக்கு ஆதரவாக ஐ.நா உள்ளது.சர்வதேச நாடுகள் குறுக்கீட்டைத் தொடர்ந்து காக்போ தற்போது பதவியில் இருந்து விலக அவரது 2 தளபதிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ்பிலன் கூறினார்.
இந்த தகவலை ஜ.நா அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். ஜவரிகோஸ்ட்டில் இரு தரப்பு இடையே நடந்து வரும் மோதல் முடிவடையும் நிலையில் உள்ளது என பிரான்ஸ் அயல்துறை அமைச்சர் அலய்ன் ஜீபே தெரிவித்தார்.காக்போவின் கூட்டுப்படை தலைவர் தமது படைகள் மோதலை நிறுத்தி விட்டதாகவும், நாட்டில் ஐ.நா படையுடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
காக்போ மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பு நிபந்தனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஜவரிகோஸ்ட்டில் உள்ள ஜனாதிபதி அரண்மனைக்கு அருகே அபிட்ஜனின் சில பகுதிகளில் சிறப்பு துருப்புகள் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
கடாபி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும்: லிபிய அரசு
கர்னல் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என லிபிய அரசு கூறுகிறது. புதிய ஈராக் அல்லது சோமாலியா போன்று உருவாகாமல் தடுப்பதற்கு கடாபி பதவியில் நீடிக்க வேண்டும் என அரசு கூறியது.
லியியாவில் கடந்த 15ம் திகதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கர்னல் கடாபியை ஆட்சியில் இருந்து அகற்ற கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலால் கடாபி ராணுவம் பலவீனம் அடைந்து வருகிறது.இந்நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் கொண்டுவர கடாபியின் இரு மகன்களும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். லிபியா இன்னொரு புதிய ஈராக் ஆகவும், புதிய சோமாலியா ஆகாமலும் இருக்க கடாபி ஆட்சியில் நீடிக்க வேண்டும் என லிபிய அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
கடாபி ராணுவம் போராட்டக்காரர்களை தான் குறிவைக்கிறது. பொதுமக்களை தாக்க வேண்டும் என்பது துருப்பினரின் இலக்கு அல்ல என்று அவர் கூறினார். இதற்கிடையே லிபியத்தலைவர் கர்னல் கடாபி தலைநர் திரிபோலியில் பொதுமக்கள் முன்பாக தோன்றினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிஸ்ரட்டா நகரில் இருந்து தப்பி ஓடி வந்தவர்கள் கூறுகையில்,"அப்பாவி பொது மக்களை ராணுவம் கொடுமைப்படுத்துகிறது" என்றனர்.
அமெரிக்க விமானம் தரையில் விழுந்தது: 32 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தொடர்ந்து கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே ஐ.நா சபை அங்கு அமைதி படையை அனுப்பியுள்ளது.
அதில் 19 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் கலவரக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று ஐ.நா சபையின் அமைதிப் படை வீரர்கள், ஊழியர்கள் உள்பட 33 பேர் ஒரு விமானத்தில் கிசன்கனியில் இருந்து கின்ஷாசா நகருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விமானம் கின்ஷாசா விமான நிலையத்தில் தரை இறங்கியது.
அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இதனால் விமானம் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அமைதிப்படை வீரர்கள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 32 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
ஒருவர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கு மாறுபட்ட தட்பவெப்பநிலையும் மற்றும் அதிக அளவில் காற்று வீசியதும் தான் காரணம் என கூறப்படுகிறது.இந்த தகவலை ஐ.நா சபையின் அமைதிப்படை தலைமை அதிகாரி ஆலியன் வீராய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே விமான விபத்தில் பலியான வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதர் சூசன்ரைசும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்
உலகம் வெப்பமாகி விட்டதால் வழக்கத்தை விட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன. அவை கடந்த 350 ஆண்டுகளை விட தற்போது கூடுதலாக உருகி வருகிறது.தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன.
இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும்.அதே போன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப்பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும்.
அதே நேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கதிர்வீச்சு கலந்த நீர் கடலில் கொட்டப்பட்டது: பசிபிக் கடலில் மாசு ஏற்படும் அபாயம்
ஜப்பானில் கடந்த மாதம் 11ம் திகதி நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது. இதனால் புகுஷிமாவில் உள்ள அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு வெளியேறியது. அது பால், குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் பரவியது.எனவே கதிர்வீச்சு பரவுவதை தடுக்க குளிர்ந்த சுத்தமான நல்ல தண்ணீரை வெடித்து சிதறிய அணு உலைகள் மீது நிபுணர்கள் ஊற்றி வருகின்றனர். தற்போது அந்த நீர் பெருமளவில் பெருகி புகுஷிமா அணு உலையில் தேங்கி கிடக்கிறது.
அந்த தண்ணீரிலும் கதிர்வீச்சு பரவியுள்ளது. வழக்கத்தை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாக அதில் கதிர்வீச்சு உள்ளது. இருந்தும் அணு உலையில் இருந்து அந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தலா 4800 டன் எடையுள்ள கதிர்வீச்சு பாதித்த தண்ணீர் புகுஷிமா அணு உலை அருகே உள்ள பசிபிக் கடலின் ஆழமான பகுதியில் கொட்டப்பட்டது. 5 வது மற்றும் 6 வது அணு உலையில் தேங்கி கிடக்கும் 1500 டன் தண்ணீரும் கடலில் கொட்டப்பட உள்ளது.
இந்த தகவலை டோக்கியோ மின்வாரிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கதிர்வீச்சு பாதித்த நீரை கொட்டியதால் பசிபிக் கடலில் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. அதில் வாழும் மீன்கள் மற்றும் ஆழ்கடல் உயிரினங்களுக்கும் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும்.
அது தவிர கடலோர பகுதியில் வாழும் மக்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவர். எனவே அப்பகுதி மக்கள் இதை பொறுத்துக் கொண்டு தங்களை மன்னிக்க வேண்டும் என டோக்கியோ மின்வாரிய என்ஜினியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலேரியாவை ஒழிக்கும் சிலந்திகள்.
பாகிஸ்தானில் மிகவும் பலத்த அடை மழை காரணமாக கடந்த வருடம் சிந்து நதி உடைப்பெடுத்தது. இதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 80 வருட காலத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டு இருந்த பெரிய வெள்ள அனர்த்தம் இது. பாகிஸ்தானிய மொத்த சனத் தொகையில் 08 சதவீதத்தினர் வரை பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள அனர்த்தத்தில் இருந்து தப்பிக் கொள்ள தீர்மானித்தன சிந்து நதியை அண்டிய இடங்களில் வசிக்கின்ற சிலந்திகள்.இத்தீர்மானத்துக்கு அமைய மில்லியன் கணக்கான சிலந்திகள் இங்குள்ள மரங்களில் வசிக்க தொடங்கி விட்டன.இதனால் இங்குள்ள மரங்கள் தோறும் மிகப் பிரமாண்டமான சிலந்தி வலைகளைக் காண முடிகின்றது.

என்றும் இல்லாத புதுமை என்று சிந்து மாகாண மக்கள் அதிசயிக்கின்றனர்.இதே நேரம் இப்பிரமாண்டமான சிலந்தி வலைகளில் சிக்கி நுளம்புகள் பெருமளவில் சிக்கி இறந்து விடுகின்றன.இதனால் சிந்து மாகாணத்தில் மலேரியா நோயின் தாக்கம் பெரிதும் குறைந்து உள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF