ஏனைய நேரங்களில் வரும் மாரடைப்பை விட காலை நேர மாரடைப்பு ஆபத்தானது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.காலை ஆறு மணி முதல் மதியம் வரையிலான மாரடைப்பு, ஒரு நாளின் ஏனைய நேரங்களில் ஏற்படும் மாரடைப்பை விட இருதயத் தசைகளை ஐந்து மடங்கு அதிகம் பாதிப்படையச் செய்கின்றது.இதற்கு மிக முக்கிய காரணம் ஒருவர் காலையில் கண் விழித்ததும் ஏற்படுகின்ற உடலின் இரத்த ஓட்டம், ஹோர்மோன் மட்டம் என்பனவற்றின் செயற்பாட்டுகள் அதிகரிப்பதே என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பெரும்பாலும் மாரடைப்புக்கள் ஏனைய நேரங்களை விட காலை நேரத்தில் தான் அதிகம் ஏற்படவும் செய்கின்றன. இவை தான் பெரும் ஆபத்தானவை என்றும் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் உள்ள தேசிய இருதய நோய் ஆராய்ச்சிப் பிரிவின் விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவிலேயே இது தெரியவந்துள்ளது.
2003க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 811 நோயாளிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இருதயத்துக்கான இரத்த ஓட்டத்தில் நீண்டகாலம் நீடித்த தடை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டவர்களே இந்த நோயாளிகள். இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட காலநேரம் மற்றும் அந்த மார்பு வலி இருதயத் தசைகளில் ஏற்படுத்திய தாக்கம் என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
காலை ஆறு மணிக்கும், நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்படும் மாரடைப்பு வலி 21 சதவீதம் அதிக தாக்கம் கொண்டது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுள் அதிகமானவர்களுக்கு இந்த காலப்பகுதியில்தான் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.காலைவேளையில் ஏற்படும் மாரடைப்பு மோசமாக இருப்பதன் காரணம் இயற்கையாக இந்த நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களே என்று டொக்டர்கள் நம்புகின்றனர்.