Thursday, April 21, 2011

இன்றைய செய்திகள்.


ஐ.பி.ல் விவகாரம்; இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்த இலங்கை! முறுகல் தீவிரம்

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களை திருப்பி அழைக்கும் விடயத்தில் இலங்கை இந்திய கிரிக்கெட் சபைகளுக்கிடையில் முறுகல் நிலை நீடிக்கின்றது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் பொருட்டு மே மாதம் 5 ஆம் திகதிக்கு முன் நாடு திரும்புமாறு இலங்கை தனது கிரிக்கெட் வீரர்களைக் கேட்டுள்ளது. 

குறைந்த பட்சம் மே மாதம் 15 ஆம் திகதி வரையாவது அவர்களை ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு இந்திய அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்த வேண்டுகோளை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரு தரப்பு அதிகாரிகளும் இது பற்றி விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக் கிரிக்கெட்டின் நலன் தான் தனது முக்கிய குறிக்கோள் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தமது முடிவு குறித்து இந்தியாவுக்கு உரிய முறையில் எடுத்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மே மாதம் 10ம் திகதி தொடங்கவுள்ளது.
ராஜீவ் காந்தியையும் பிரேமதாசவையும் படுகொலை செய்யுமாறு விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்காவும் பிரிட்டனுமே: அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

ராஜீவ் காந்தி மற்றும் ஜனாதிபதி பிரேமதாச ஆகியோரைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தான் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார்.அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்கா  உள்ளிட்ட சில நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கவும் முயற்சித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.அத்துடன் வடக்கில் தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இராணுவத் தாக்குதல்கள் அன்றி அந்த மக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தியமையே ஆகும்.
அதே நேரம் யுத்த காலத்தில் சிற்சிறு தவறுகளை மேற்கொண்ட இராணுவத்தினரை அரசாங்கம் உடனுக்குடன் தண்டித்திருக்கின்றது. இராணுவத்தின் கட்டுக்கோப்பு குலையாத வகையில் அவர்கள் செயற்பட மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக அவர்கள் தவறு செய்யவே அஞ்சினர்.அவ்வாறான நிலையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்ற பிதற்றல்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா நிபுணர்குழு தனது எல்லைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாம் என்கிறார் ரஷ்ய தூதுவர்.

ஜநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது துரதிஷ்டவசமாக தனது எல்லைகளை மீறி செயற்பட்டுள்ளது. இதனை நியூயோர்க்கிலுள்ள எமது ஐ. நா. பிரதிநிதியும் உறுதிப்படுத்தியுள்ளாரெனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலடிமிர் பி. மிக்கைலொவ் தெரிவித்துள்ளார் 

பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று கொழும்பிலுள்ள இலங்கைக்கான ரஷ்ய தூதுவரைச் சந்தித்துள்ளார்.இச்சந்திப்பினை அடுத்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே 
இலங்கைக்கான ரஷ்ய தூதவர் இவ்வாறு தெரிவித்தார்.ஐநாவின் அறிக்கை தொடர்பாகவும் நாட்டின் இன்றைய நிலை தொடர்பாகவும் அவசர மந்திராலோசனை நடத்துவதற்காகவே இச்சந்திப்பு இடம்பெற்றதாக அறியமுடிகிறது.

இலங்கை தொடர்பான விடயம் ஜநா பாதுகாப்புக் கவுன்சில் வரை செல்லுமாயின் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக இலங்கை கவனம் செலுத்தும் இவ்வேளையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பினை அடுத்தக் கருத்துத் தெரிவித்த ரஷ்ய தூதுவர், ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர்கள் குழு இலங்கை தொடர்பாக சமர்ப்பித்துள்ள அறிக்கை ஐ.நாவின் அறிக்கையல்ல. நாம் ஐ.நா அறிக்கை பற்றிப் பேசவில்லை. இந்த அறிக்கை ஐ.நாவின் எந்தவொரு அமைப்பினாலோ அல்லது அவற்றின் வேண்டுகோளின் பேரிலோ தயாரிக்கப்படவில்லை. 

ஐ. நா. தகவல்களை கொண்டு பார்க்கையில் இந்த நிபுணர் குழுவானது மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து ஆராய்ந்து அதன் செயலாளர் நாயத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டதேயொழிய அவை எவ்வாறு இடம்பெற்றன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கல்ல.

இருப்பினும் தலைமைப் பதவி வகிப்பவர் எனும் வகையில் ஐ. நா. செயலாளர் நாயகம், இவ்விவகாரம் குறித்து பாதுகாப்புச் சபையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கருத்து கேட்டிருக்க வேண்டும். அதனைத் தவிர இத்தீர்மானமானது இறைமையுடைய நாட்டினதும் இலங்கைக்கான ஐ.நா. தூதுவரினதும் நிலைப்பாட்டினையும் மீறி எடுக்கப்பட்டதாம்.

நிபுணர் குழு தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு கடந்த வருடம் ஜூன் 24 ஆம் திகதி ஊடக அறிக்கையொன்றினூடாக வெளியிட்டிருந்ததுஇதேவேளை நிபுணர் குழுவானது துரதிஷ்டவசமாக தனது எல்லைகளை மீறி செயற்பட்டுள்ளது. இதனை நியூயோர்க்கிலுள்ள எமது ஐ. நா. பிரதிநிதியும் உறுதிப்படுத்தியுள்ளாரெனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலடிமிர் பி. மிக்கைலொவ் மேலும் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையின் மூலம் இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கப்பட முடியாது : கோமின் தயாசிறி

நிபுணர் குழு அறிக்கையின் மூலம் இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கப்பட முடியாது என சிரேஸ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை ஒரு தலைப்பட்சமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இலங்கை நீதிமன்றத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்துடனோ அல்லது பாதுகாப்புப் படையினருடனோ பேச்சுவார்த்தை நடாத்தாது பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் இலங்கைப் படையினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை எனவும் நியாயமான முறையில் போர் நடைபெற்றதாகவும் தெரிவிப்பது மிகவும் சுலபமானது என அவர் தெரிவித்துள்ளார்.இதற்காக நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா காரியாலயத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது : வெளிவிவகார அமைச்சு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் காரியாலயத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெறக் கூடுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான போராட்டங்களின் போது தமது பணியாளர்களது பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி இருந்தன.
இதன்படி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் காரியாலயத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.காரியாலத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மேலதிகமாக காவல்துறையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தரின் முடியுடன் நாடு திரும்பிய மஹிந்தர்!

பங்களாதேஷிற்கான 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடு திரும்பியுள்ளார். பங்களாதேஷ் பௌத்த மத பீடத்திலிருந்து புத்த பெருமானின் முடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பங்களாதேஷில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தபெருமானின் முடி இன்று 6 மணியளவில் கங்காராம விஹாரையில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பங்களாதேஷின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், இரு தரப்பு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரிடம் பணம் பெற்றே அறிக்கை சமர்ப்பித்துள்ளதாம் நிபுணர் குழு! சொல்கிறார் விமல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்றுக் கொண்டே நிபுணர்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கொஸ்பாவை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.


ஜநா செயலாளர் நாயகம் பான்கீ முன் நியமித்த நிபுணர்குழுவின் உறுப்பினர்கள் மூவரும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலி ஆதரவு தமிழர்களிடம் பெருந்தொகையான பணத்தினை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளனர்.அதனைப் பெற்றுக் கொண்டே அரசுக்கெதிராக குற்றம்சுமத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது எனத் தெரிவித்தார். இதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளது எனவும் தெரிவித்தார்.
பயங்கர விபத்தில் இருந்து உயிர் தப்பினார் மிச்செல் ஒபாமா.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பிரின்ஸ் ஜார்ஜ் கவுன்டி பகுதியில் உள்ளது ஆண்ட்ரூஸ் விமானப்படை தளம். இந்த தளமானது தலைநகர் வாஷிங்டனில் இருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது.
அதிபர் மற்றும் குடும்பத்தார் வெளியூர் செல்ல விமானம் ஏறுவதும், வந்திறங்குவதும் இங்கு தான். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல், துணை அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் ஆகியோர் நியூயார்க்கில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.விழாவை முடித்துக்கொண்டு போயிங் 737 விமானத்தில் மிச்செல் நேற்று முன்தினம் திரும்பிக் கொண்டிருந்தார். விமானம் தரையிறங்க ஆண்ட்ரூஸ் விமான தள தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் முதலில் அனுமதி அளித்தனர்.
வேறொரு சரக்கு விமானம் ஒன்றும் தரையிறங்க தயாராவதை பிறகு கவனித்தனர். விபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இரு விமானங்களும் அருகருகே பறந்தன. உடனே திசை திருப்பி பாதுகாப்பான தூரத்துக்கு விலகிச் செல்லுமாறு மிச்செல் விமானத்தை ஓட்டியவருக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த சூழ்நிலையில் தரையிறக்குவது ஆபத்து என்று கருதப்பட்டதால் விமானத்தை மீண்டும் மேலே எழுப்ப அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மீண்டும் உயரே எழும்பிய விமானம் இன்னொரு முறை வட்டமடித்த பிறகு பத்திரமாக தரையிறங்கியது.தரை கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
நைஜீரியாவில் நடக்கும் கலவரம்: வெற்றியின் எதிரொலி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், அதிபர் குட்லக் ஜோனாதன் 57 சதவீதம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் சர்வாதிகாரி முகமது புகார் 31 சத வீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளி வரத் தொடங்கியது முதல் அதிபர் ஜோனாதனின் ஆதரவாளர்கள் பல இடங்களில் களியாட்டங்கள் மற்றும் கொணட்டாட்டங்களில் ஈடுபட்டனர். இது புகாரின் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து குதுனா, கத்சினா, ஷம்பாரா மாகாணங்களில் வன்முறை சம்பவங்களும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது. 

பின்னர் இக்கலவரம் 14 மாகாணங்களுக்கும் பரவியது. அக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அதுபற்றி தகவல் வெளியாகவில்லை. 360 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தென்குதுனா மாகாணத்தை சேர்ந்தவர்கள். இத்தகவலை செஞ்சிலுவை சங்க பேரிடர் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உமர் அப்துல் மரிகா தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே கலவரத்தில் ஈடுபடும் மக்களை அமைதி வழியில் திரும்பும்படி அதிபர் குட்லக் ஜோனா தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோன்று தேர்தலில் தோல்வி அடைந்த முகமது புகாரியும் நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி கோரியுள்ளார்.

கூகுள் நிறைவேற்றுப் பணிப்பாளரின் மலைக்க வைக்கும் சம்பளம்!

கூகுள் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்து இம்மாதம் நான்காம் திகதி பதவி விலகிய எரிக் ஸ்க்மிட் அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் என்ற புதிய பதவியின் மூலம் வருடாந்தம் 1.25 மில்லியன் டொலர்களை சம்பளமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டில் இவருக்கு 6 மில்லியன் டொலர்களை போனஸ் கொடுப்பனவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூகுள் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தை மற்றும் நாணயமாற்று ஆணைக்குழுவுக்குத் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் இந்தியா செல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது: பராக் ஒபாமா
குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா கூறியதாவது: அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை தனது குடிமக்களுக்குக் கிடைக்க வழி ஏற்படுத்தித் தரப் போவதாகக் கூறினார். வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் அவர் இவ்விதம் கூறியவுடன் அதை பலத்த கரகோஷத்துடன் மக்கள் வரவேற்றனர்.
அமெரிக்காவில் மருத்துவ கட்டணங்கள் உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டதற்கு ஒபாமா இவ்விதம் பதில் அளித்தார். குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும் போது மக்கள் வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது.
இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். உள்நாட்டிலேயே உயர்தர சிகிச்சை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.மருத்துவ கவனிப்பு என்பது ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இது எவ்விதம் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படும். இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும், அனைத்து டொக்டர்களும் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றன.
இருப்பினும் மருத்துவ செலவு அதிகரிப்பது குறித்து கவனத்தில் கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகளின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு உரிய மருந்துகளை வாங்கியுள்ளீர்கள் என்பதை உணரலாம்.ஆனால் கனடா மற்றும் மெக்ஸிகோவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும் என்றார்.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம்.வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒபாமா.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF