Thursday, April 7, 2011

இன்றைய செய்திகள்.

இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம்- மஹிந்த ராஜபக்ச


இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்ச. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.அவர் பேசுகையில்,கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள்.
எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்ச. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திடீர் இராஜினாமா!

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு உறுப்புனர்கள் அனைவரும் இன்று தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். தெரிவுக்குழுவின் தலைவர் முன்னாள் துடுப்பாட்ட வீ ரர் அரவிந்த டி சில்வா தலைமையிலான குழுவே இன்று தனது இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்தது. 

2010 மே 26ல் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் ரன்ஜித் பெர்ணான்டோ, அமல் சில்வா, அஸ்வர் அலி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இதேவேளை கிரிக்கெட் அணியின் உப தலைவர் மஹேல ஜயவர்தனவும் தனது உப தலைவர் பதவியை இன்று ராஜினாமாச் செயதுள்ளார். இன்று காலை மஹேல தனது இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளார்.

மருத்துவத் தாதிக்கு அன்புப் பரிசாக தங்கக் கடிகாரங்களை வழங்கிய கடாபி!

தனக்கு பணிவிடைகள் செய்யும் மருத்துவத் தாதிக்கு தங்க கடிகாரங்களை கடாபி பரிசாக வழங்கியுள்ளார். லிபியாவின் அதிபராக கடாபி இருந்து வருகிறார். அவரது 42 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்வாதிகாரி கடாபி குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த நர்சு நக்சானா பாலின்ஸ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் செய்தி வெளியானது. இதை அந்த நர்சு மறுத்துள்ளார். 

ரஷிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கடாபி தனக்கு தந்தை போன்றவர் என்றும், அவரது உடல் நலனை கவனித்துக் கொள்ளும் 5 நர்சுகளில் தானும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். தனது சேவையை பாராட்டி வருடத்துக்கு ஒரு தங்க கடிகாரத்தை அவர் பரிசளித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

எனக்கு, கடாபிக்கும் உள்ள தொடர்பு தந்தை-மகள் போன்றது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, லிபியாவில் போராட்டக்காரர்களின் பலம் குறைந்து வருகிறது.அவர்களிடம் தற்போது பெங்காசி நகரம் மட்டுமே உள்ளது. அஜ்தாபி, ராஸ் லனுப் போன்ற நகரங்கள் மீண்டும் ராணுவ வசம் வந்துள்ளன. எண்ணை வளம் மிக்க நகரமாக பிரகாவும் நேற்று கடாபியின் ராணுவம் வசமானது. 

இதை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயார் என லிபியா அரசு அறிவித்துள்ளது. அதற்கும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, போராட்டக்காரர்களின் கோரிக்கைபடி கடாபி பதவி விலக மாட்டார். வேண்டுமென்றால் அரசியல் அமைப்பு சட்டத்தில் மறு சீரமைப்பு குறித்து விவாதிக்கலாம், தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும். அதே நேரத்தில் போராட்டத்தை வழி நடத்தி செல்பவர்களின் தலைமையை ஏற்க முடியாது. ஏனெனில் நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம், இத்தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப் ராகிம் தெரிவித்துள்ளார்.
சூடானில் ஐ.நா அமைதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு சூடான் பிராந்தியமான டார்பரில், ஐ.நா அமைதி நடவடிக்கையாளர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடந்தது.இந்த மோதலில் பிடிபட்ட ஐ.நா அமைதித் தூதர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கடத்தல்காரர்கள் ஐ.நா வாகனத்தையும் அதில் இருந்த 3 பேரையும் கடத்திச் சென்றனர். இதில் இருவரை பின்னர் விடுவித்தனர். ஒரு ஐ.நா அமைதித் தூதர் கொல்லப்பட்டார் என ஐ.நா தெரிவித்தது.
டார்பரில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஆயுதம் தாங்கிய குழுவினருக்கும் சூடான் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் உயிர் பிழைக்க வேண்டும் என டிசம்பர் மாதம் முதல் 70 ஆயிரம் புதிய நபர்கள் டார்பர் முகாம்களுக்கு வந்துள்ளனர்.
வார இறுதியில் ஆயுதம் தாங்கிய 7 நபர்கள் மேற்கு டார்பர் முகாம்களுக்கு வந்து துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர். கடந்த 2003ம் ஆண்டு முதல் அரபு ஆதிக்கம் உள்ள கார்டோம் பகுதியில் டார்பரில் 3 லட்சம் மக்கள் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டனர் என ஐ.நா கூறுகிறது. ஆனால் சூடான் அரசு தரப்பில் 10 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்! அசத்திய விஞ்ஞானிகள்.

மனித முலைப்பாலை சுரக்கக்கூடிய வகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மனித மரபணுத் தன்மையோடு தாய்ப்பாலுக்கு ஒத்த சக்தி கொண்ட பாலை சுரக்கக் கூடிய 300 பசுக்கள் உருவாக்கப்பட்டு அவை பாலையும் தர ஆரம்பித்துள்ளன. 

சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் நிங் லீ தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழுவே சீனாவின் விவசாயப் பல்கலைக் கழகத்தில் இந்தப் பசுக்களை உருவாக்கியுள்ளனர். இன்னும் பத்தாண்டுகளில் சுப்பர்மார்க்கட்டுக்களில் பொதி செய்யப்பட்ட முறையில் இந்த தாய்ப்பால் பசுப்பாலைப் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பசுப் பாலானது தாய்ப்பால் கொண்டிருக்கும் அனைத்துப் போஷாக்குகளையும் அதே அளவாகக் கொண்டிருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தாய்ப்பால் வழங்க முடியாத அதே நேரம் பால் மாக்களையும் பாவிக்க விரும்பாத தாய்மாருக்கு இது ஒரு சிறந்த மாற்றீடாக அமையும் என்றும், பாரம்பரியமான பால்மா சூத்திரத்துக்கு இனி அவசியம் இருக்காது என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு பிரிட்னைச் சேர்ந்த தாய்ப்பால் ஊக்குவிப்பு பிரசாரகர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலும்,பசுப்பாலும் ஒன்றாக முடியாது.தாய்ப்பால் பிள்ளையின் அடிப்படை வளர்ச்சிக்கு மட்டுமன்றி அதன் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி வலுவடையவும் இன்றியமையாததாகும். 

தாய்ப்பாலை விட பசுப்பால் கனமானது, இலகுவில் ஜீரணம் ஆகாது. குழந்தைகளின் அடிப்படை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு மற்றும் காபோஹைதரேட் என்பன அதில் குறைவாகவே உள்ளன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குளோனிங் முறையைப் பயன்படுத்தி மனித மரபணுக்களை பசுக்களுக்குள் செலுத்தி அவற்றின் மரபணுவில் மாற்றங்களைச் செய்தே இந்த பசுத் தாய்ப்பாலை உருவாக்க முடிந்துள்ளதாக பேராசிரியர் லீ விளக்கமளித்துள்ளார்.

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை.

அலுவலகத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் உழைக்க வேண்டுமானால் இடையில் சிறிது ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும். 

தொடர்ந்து 11 மணிநேரம் வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்றில் இரண்டு மடங்கு அதிகமானதாகும். இதய நோய்க் கோளாறுகளுக்காக சிகிச்சைப் பெற வருபவர்களிடம் அவர்கள் மது அருந்துகின்றனரா, புகைப் பிடிக்கின்றனரா என்றெல்லாம் கேட்பது போல் அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தொழில் புரிகின்றனர் என்றும் கேட்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவொன்று நடத்தியுள்ள ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அரசாங்க ஊழியர்களாகப் பணிபுரியும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

அவர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கொண்டு அவர்களின் இதயத் தொழிற்பாட்டின் நிலை பற்றி மதிப்பீடுகள் செய்யப்பட்டன. சாதாரணமாக ஒன்பது மணி முதல் ஐந்து மணி வரை தொழில் செய்பவர்களிலும் பார்க்க ஒரு நாளைக்கு 11 மணிநேரம் தொழில் புரிபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் 67 வீதம் அதிகமாகவே உள்ளது. 

புகைத்தல் மற்றும் மது அருந்தல் காரணமாக இதயக்கோளாறை எதிர் கொண்டுள்ளவர்களுக்கு வேலை நேரத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மேலதிக ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம், என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் மிகா கிவிமகி தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2.6 மில்லியன் பேர் உள்ளனர். பிரிட்டனில் ஆகக் கூடுதலான மரணங்களுக்குக் காரணமான நோயும் இதுவே.மாரடைப்பு உட்பட இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வருடாந்தம் 101000 பேர் பலியாகின்றனர்.

தினசரி மூன்று வாழைப்பழங்களை உண்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்! ஆய்வாளர்களின் வியத்தகு முடிவு.

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர். 

இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன் மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 வீதம் தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். 

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக் கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்கு முந்திய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்க வாதத்தை தடுக்கக் கூடியவை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். தினசரி உணவில் 1600 மில்லிகிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதயநோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லிகிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது.
எகிப்து மாஜி அதிபரின் சொத்துகளை முடக்க ராணுவ கவுன்சில் ஆய்வு.
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கையகப்படுத்த ஆளும் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட கவுன்சில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
எகிப்தின் அதிபராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த அதிபர் ஹ‌ோஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி மக்கள் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர். 17 நாட்கள் நடந்த போராட்டத்தின் விளைவாக அதிபர் முபாரக் பதவி விலகினார்.இதைத் தொடர்ந்து ராணுவம் தற்காலிக ஆட்சியினை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிபரின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை கையகப்படுத்த ராணுவம் "தலைமை கவுன்சில்" ஒன்றினை நியமித்துள்ளது.
இந்த கவுன்சில் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் குவித்துள்ள சொத்து விவரங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து வருகிறது. இற்கிடையே தற்காலிக பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஈஸாம் ஷெரீப் நாட்டில் ஊழலை ஒழித்து கட்டுவது தான் எனது முதல் வேலை என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் முதல் நடவடிக்கையாக அதிபர் முபாரக்கின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் விரைவில் பிரதமரிடம் தாக்கல் செய்யப்படும் என ஜிங்கூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது: 250 பேர் மாயம்
வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி நோக்கி படகு மூலம் இடம் பெயர்ந்து வந்து கொண்டிருந்த போது, நடுகடலில் படகு முழ்கியதில் 250க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்‌கள் தெரிவிக்கின்றன.
வடஆப்பிரிக்காவில் ஏற்பட்ட அரசியல் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் அகதிகளாக இத்தாலி நாட்டில் குடியேற இடம் பெயர்ந்து கப்பல் மூலம் வந்து கொண்டிருந்தனர்.இவர்கள் வந்த கப்பல் லம்பிடியூஸா தீவு அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் அறிந்த இத்தாலிய கட‌லோர காவல்படை, காவல்துறை, ரோந்து படையினர் காணாமல் போன கப்பலினை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய கதிர்வீச்சு நீர் கடலில் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானிய அணு உலைகளிலிருந்து கடலுக்கு கசிந்து கொண்டிருந்த கதிர்வீச்சு நீரை தடுத்து நிறுத்துவதில் ஜப்பானிய அணு சக்தி முகவராண்மை அமைப்பான டெப்கோ வெற்றி கண்டுள்ளது.
அதன் மூலம் பசுபிக் கடலில் அணுக்கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. நீர்க்கண்ணாடி என்ற பெயரில் அழைக்கப்படும் சோடியம் சிலிக்கட்டை பயன்படுத்தியே அணு உலைக்கழிவு நீர் கடலுக்குக் கசிவதை தடுத்து நிறுத்தியதாக டெப்கோ அறிவித்துள்ளது.
ஆறாவது எதிர்ச்சுழற்சி இயந்திரத்தில் 20 சென்டிமீற்றர் அளவிலான வெடிப்பொன்று காணப்பட்டதாகவும் அதனை சோடியம் சிலிக்கட்டைப் பயன்படுத்தி மூடிவிட்டதாகவும் டெப்கோ அறிவித்துள்ளது. பிரஸ்தாப வெடிப்பின் மூலமே அணுக்கழிவு நீர் கடலில் கலக்க வழியேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் உதவியைக் கோரும் ஜப்பான்.
2011 மார்ச் மாதம் 11ம் திகதி நடைபெற்ற புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் ஜப்பானிய அரசாங்கம் ரஷ்யாவின் உதவியைக் கோரியுள்ளது.
அணுக்கதிர்வீச்சை வடிகட்டக் கூடியதான கதிர்வீச்சுத் தடுப்புப் படுகையொன்றையேனும் தமக்கு வழங்குமாறு ஜப்பானிய அரசாங்கம் ரஷ்யாவைக் கோரியுள்ளது.அதன் மூலம் புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில் கலந்திருக்கும் அணுக்கழிவுகளை வடிகட்டிக்கொள்ள முடியும் என்று ஜப்பான் எதிர்பார்க்கின்றது.
புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த அதன் ஊழியர்கள் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக உயிரைப் பணயமாக வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் இதுவரை அவர்களின் முயற்சியில் கொஞ்சமேனும் முன்னேற்றம் காணவில்லை. அவ்வாறான நிலையில் கடைசி முயற்சியாகவே அணு உலைக் கழிவு நீரை கடலில் கலக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதனை வடிகட்டிக் கடலில் தடுப்பதாயின் அணுக்கதிர் வீச்சுத் தடுப்புப் படுகையொன்று பயன்படுத்தப்பட வேண்டும். அதனைத் தான் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக் கொள்ள ஜப்பான் தீர்மானித்துள்ளது.
பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை.
பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.பிரான்சின் இந்த சர்ச்சைக்குரிய சட்டம் இம் மாதம் 11 ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. பிரான்சின் புதியச் சட்டத்தால் அந்த நாட்டில் உள்ள 2 ஆயிரம் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதற்கான தடை உத்தரவு அறிக்கையில் உள்துறை அமைச்சர் கிளாடே குயன்ட் கடந்த வாரம் கையெழுத்திட்டார். இந்த உத்தரவை மீறி முகத்தை மூடும் ஆடைகளை அணியும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் பெண்கள் பொலிஸ் நிலையத்தில் 4 மணி நேரம் வைக்கப்படலாம் அல்லது 150 யூரோ அபராதம் விதிக்கப்படலாம் என அரசு அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடைகள், சினிமா அரங்குகள் மற்றும் பிரார்த்தனை இடங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணியக் கூடாது.
உத்தரவை மீறி குறிப்பிட்ட முஸ்லீம் பெண்களை பர்தா அணிய வலியுறுத்துபவர்கள் மீது சிறைத் தண்டனை உள்ள கிரிமினல் தண்டனை விதிக்கப்படும். ஒரு நபரின் அடையாளத்தை மறைக்கும் பர்தா அணியக்கூடாது. முஸ்லீம் பெண்களை மட்டும் இலக்காக வைத்து இந்த சட்டம் வரவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF