Saturday, April 23, 2011

இன்றைய செய்திகள்.

மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைம்ஸ் சஞ்சிகையின், உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார்.இன்று காலை வரையில் முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காலை டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரிய குழாமால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வாக்கெடுப்பின் அடிப்படையில் அவர் இன்று காலை வரையில் நான்காம் இடத்தில் இருந்தார்.

எனினும் இந்த வாக்களிப்புகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாகவும், இதற்காக ஜனாதிபதியின் ஊடக செயலகத்தில் பிரத்தியேகமாக குழு ஒன்று அமைக்கப்பட்டு, மோசடி வாக்குகள் பிரயோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்த நிலையில் இன்றைய தினம், டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழாமினால், அவரது பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் செயற்பாடுகளினாலேயே டைம்ஸ் சஞ்சிகை வாக்கெடுப்பில் நான் அவமானப்பட நோ்ந்தது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஒரு சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாகவே டைம்ஸ் சஞ்சிகை வாக்கெடுப்பில் நான் அவமானப்பட நோ்ந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று குற்றம் சாட்டியுள்ளார்.ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத்துடன் டைம்ஸ் சஞ்சிகையில் தன்  பெயர் இடம்பெறாமை குறித்து இன்று காலை உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
டைம்ஸ் சஞ்சிகை வாக்கெடுப்பில் தனது பெயரை உள்ளடக்க வைத்து, அதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் கௌரவத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதியை நம்ப வைத்த அதிகாரியொருவரும், அவரது நண்பரான வர்த்தகர் ஒருவரும் அந்த நடவடிக்கைகளுக்கென கோடிக்கணக்கில் ஜனாதிபதியிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்.
அதன் பின்பு அவர்கள் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் இருந்தும் தமது நடவடிக்கைகளுக்கான ஆதரவைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அதன் மூலமாக ஜனாதிபதியின் பெயரை டைம்ஸ் சஞ்சிகையின்  வாக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற வைத்து மேலுமொரு தொகையையும் அரசாங்கத்திடம் இருந்து கறந்து கொண்டிருந்தனர்.
டைம்ஸ் சஞ்சிகையின் வாசகர்களின் வாக்குகள் மூலமாக மட்டுமே உலகின் செல்வாக்குமிக்க நபர்களின் வரிசை பட்டியலிடப்படும் என்று நம்பியிருந்த ஜனாதிபதியும் அவரது புகழ்பாடும் ஊடகங்களும் பட்டியலில் நான்காம் இடத்தை ஜனாதிபதி பெற்றுக் கொண்டிருந்தமை குறித்து பெருமெடுப்பிலான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.
ஆயினும் டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவின் இறுதி முடிவின் பிரகாரமே உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்பான பட்டியல் வெளியான நிலையில் முன்னைய மாயைகள் கலைந்து போனதன் காரணமாக அதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார்.
பான் கீ மூனின் அறிக்கை திருத்தம் இன்றி வெளியிடப்படும் - ஐ.நா.சபை
இலங்கை தொடர்பில் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை, திருத்தங்கள் ஏதும் இன்றி முழுமையாக வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் நியூயோர்க் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.எனினும், இந்த கோரிக்கைய நிராகரித்த ஐக்கிய நாடுகள் சபை, எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்படும் எனவும், இந்த அறிக்கை தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்திருப்பதாக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

கசிந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அடிப்படையில், இலங்கையில் யுத்த குற்றம் தொடர்பிலான விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் 2009ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் உயிரிழந்தமையையும் உறுதிப்படுத்தியுள்ளது.எனினும் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நாடளாவியரீதியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை நிராகரித்து, ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையை செய்யும் என, பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
எந்த சவாலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு இருக்கின்றது: நாமல் ராஜபக்ஷ
எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.நாட்டின் அபிவிருத்தி விடயங்களிலாகட்டும், ஏனைய விடயங்களிலாகட்டும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து வரும் எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்ச்சூழல் முடிவுற்ற பின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முதலாவது வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரஸ்தாப வைபவம் நேற்று நடைபெற்றது.யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வடக்குப் பிரதேசங்கள் பல துறைகளிலும் பாரிய பின்னடைவைக் கண்டிருந்தன. இங்குள்ளவர்களுக்குத் தமது பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் வழியிருக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தப் பிரதேசத்தை மீட்டெடுத்த பின் சயனைட் வில்லைகளுக்குப் பதில் பாடசாலைப் புத்தகங்களை ஏந்தும் வாய்ப்பு இங்குள்ள குழந்தைகளுக்கு கிட்டியுள்ளது.அத்துடன் இன்றைய அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் மூலமாக வடக்கு மக்கள் சுதந்திரமான, நிம்மதியான சூழலில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதில் அனுப்ப ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதில் அனுப்பி வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விரிவான பதிலை அளிப்பதற்கு இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கை தொடர்பில் நட்பு நாடுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் பதில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ள அதேவேளை,
இராஜதந்திர ரீதியில் விளக்கமளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வடக்கு, கிழக்கிற்கு புதிதாக நீதிமன்றங்கள்! தமிழ் தெரிந்தவர்களே நீதிபதிகள்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக நீதிமன்றங்களை உருவாக்கப்பட்டு அங்கு தமிழ் தெரிந்த நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.கடந்த கால யுத்த சூழல் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதித்துறையின் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அத்துடன் அப்பிரதேசங்களில் செயற்பட்ட பல நீதிமன்றங்கள் மூடப்பட்டிருந்தன.தற்போது நாட்டின்  அனைத்து பிரதேசங்களிலும் அமைதியான சூழல் நிலவும் சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதித்துறையின் செயற்பாடுகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன் ஒரு முயற்சியாக நேற்று அவர் வவுனியாவுக்கான சுற்றுப் பயணமொன்றையும் மேற்கொண்டிருந்தார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக நீதிமன்றங்களை ஸ்தாபிப்பது குறித்தும், அதற்கு தமிழ் தெரிந்தவர்களையே நீதிபதிகளாக நியமிப்பது குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.பிரஸ்தாப விடயம் குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.
புகுஷிமா பகுதிக்குள் மக்கள் நுழைய தடை: மீறினால் அபராதம் விதிக்கப்படும்
ஜப்பானில் கடந்த மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா பகுதி பலத்த சேதமடைந்தது.அங்குள்ள அணு மின் நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்த 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பள்ளிகள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அணு உலைகளில் உள்ள கதிர்வீச்சு நீரை வெளியேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. அணு மின் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என கூறப்படுகிறது.
அணு மின் நிலையத்தை சுற்றி 20 கி.மீ தூரத்துக்கு மக்கள் நுழைய ஜப்பான் அரசு நேற்று முதல் தடை விதித்துள்ளது. மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவர் அல்லது 1 லட்சம் யென் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் முகாம்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தேவையான பொருட்களை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். நிவாரண பணிகளை பிரதமர் நேட்டோ கான் துரிதமாக எடுக்கவில்லை என மக்கள் மிகக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்.
எல்லா வகையிலும் நிம்மதியான வாழ்க்கை அமைந்துள்ளதாக அதிக மக்கள் கருதும் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.காலப் என்ற ஆய்வு நிறுவனம் 2010 குளோபல் வெல்பீயிங் என்ற பெயரில் 124 நாடுகளில் விரிவான ஆய்வு நடத்தியது. அதில் அன்றாட வாழ்க்கையில் திருப்தி, திணறல், அவதி என்ற 3 பிரிவுகளில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 124 நாடுகளில் ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் தங்கள் தினசரி வாழ்க்கை அடிப்படையில் 0 முதல் 10 வரை மதிப்பெண் தர கேட்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 7 அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் அளித்தவர்கள் அதிகம் கொண்ட நாடு பட்டியலில் முன்னிலை பெற்றது. 6 முதல் 4 வரை மதிப்பெண் அளித்தவர்கள் திணறல் மற்றும் 4க்கு குறைவாக கூறியவர்கள் அவதி ஆகிய பட்டியலில் இருப்பதாக கருதப்பட்டது.
மக்களின் நலம் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் டென்மார்க் முதலிடம் பிடித்தது. அந்நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக கூறினர்.69 சதவீதத்துடன் சுவீடன், கனடா இரண்டாவது இடம்பெற்றன. அவுஸ்திரேலியா 66 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, வெனிசுலா(64), இஸ்ரேல், நியூசிலாந்து(63), நெதர்லாந்து, அயர்லாந்து(62), பனாமா(61), அமெரிக்கா(59) என அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.
புத்தக பார்சலில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு: 6 பேர் கைது
இந்தோனேசியாவில் புத்தக பார்சலில் வெடிகுண்டுகள் அனுப்பி வைத்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தோனேசியாவில் கடந்த மாதம் வெடி குண்டுகளை புத்தக பார்சல்களுக்குள் மர்ம நபர்கள் சிலர் அனுப்பி வைத்தனர். இந்த வெடி குண்டு பார்சல்கள் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக இந்தோனேசிய பொலிசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கிழக்கு ஜகார்த்தா நகரில் சந்தேகத்துக்கு இடமான ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கும், புத்தகத்துக்குள் வெடி குண்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான செர்போங் என்ற இடத்தில் மர்ம பார்சல் ஒன்று நேற்று கிடந்தது. இதை சோதனையிட்ட போது அதில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்: கிளர்ச்சியாளர்கள் கொண்டாட்டம்
ராணுவ வீரர்கள் சரண் அடைந்ததை தொடர்ந்து லிபியாவில் எல்லை பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கி வருகிறது. ஏற்கனவே இவர்கள் வசம் பெங்காசி, மிஸ்ரட்டா, பிரகா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.
இந்நிலையில் அவர்கள் துனிசியாவின் எல்லை பகுதியையும் நேற்று கைப்பற்றினர். லிபியாவின் வாஷின் பகுதி துனிசியா எல்லையில் உள்ளது. நேற்று அங்கு கிளர்ச்சியாளர்களுக்கும், கடாபியின் ஆதரவு ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையை தாக்கு பிடிக்க முடியாத 102 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு துனிசியா ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இதை தொடர்ந்து வாஷின் பகுதி கிளர்ச்சியாளர்களின் வசமானது.இதற்கிடையே கிளர்ச்சியாளர்கள் தங்களின் பிடியில் உள்ள மிஸ்ரட்டா நகரை தக்க வைத்து கொள்ள கடாபி ராணுவத்துடன் கடுமையாக போராடி வருகின்றனர்.
அணுசக்தி விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: பான் கி மூன்
அணு சக்தியை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என உலக நாடுகளுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக புகுஷிமா டச்சி அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பரவியது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் செர்னோபிள் அணு மின் உற்பத்தி நிலைய மறுநிர்மாண பணிகளை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் புதனன்று பார்வையிட்டார். முன்னதாக செவ்வாயன்று கீவ் நகரில் அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.அதில் பான் கி மூன் கூறியதாவது: கடந்த 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி செர்னோபிளில் அணு விபத்து ஏற்பட்டு பேராபத்து ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புகுஷிமா டச்சி அணு மின் நிலையமும் விபத்தில் சிக்கி உள்ளது.
உலகம் முழுவதும் அணு மின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விடயத்தில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
செர்னோபிளில் உலக நாடுகள் உதவியுடன் அணு மின் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று கீவ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் உலக நாடுகள் சார்பில் ரூ.3600 கோடி நிதி வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டில் இந்த ஆலை செயல்படத் தொடங்கும் என உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்த இந்தியாவின் உதவியை நாடும் எகிப்து.
வட ஆப்பிரிக்க நாடான எகிப்தில் 40 ஆண்டுகாலம் அதிபராக இருந்த முபாரக் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார்.இதையடுத்து அங்கு அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தலை எப்படி நடத்தலாம் என எகிப்து அரசு இந்திய தேர்தல் கமிஷனிடம் ஆலோசனை கேட்டது. தேர்தலை நடத்த தங்களுக்கு உதவும் படியும் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தலைமையில் 5 பேர் குழு எகிப்து சென்றுள்ளது. அவர்கள் எகிப்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். பின்னர் குரேஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது: எகிப்து நாட்டில் நடக்கும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு உதவுவதில் பெருமை அடைகிறோம். தேர்தலை நடத்த இந்திய ஓட்டு எந்திரத்தை கேட்டு இருக்கிறார்கள். அதை வாடகை அடிப்படையில் வழங்க தயாராக இருக்கிறோம்.
ஆனால் போதிய நேரம் இல்லாமல் இருக்கிறது. ஓட்டு எந்திரம் ஜனநாயகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் ஓட்டு எந்திரம் பயன்படுத்தியது தேர்தல் வரலாற்று புரட்சியாகும். இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே பண்டைய காலத்தில் இருந்தே நெருங்கிய உறவு உள்ளது. அது இப்போதும் தொடர்கிறது.எங்களுக்கு உள்ள தேர்தல் அனுபவங்களை வைத்து எகிப்துக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வோம். ஆனால் தேர்தலை நாங்கள் மேற்பார்வையிட மாட்டோம். இவ்வாறு குரேஷி கூறினார்.
நைஜீரியாவில் கலவரம்: பலி எண்ணிக்கை 200ஆக உயர்ந்தது
நைஜீரிய அதிபர் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் சிக்கி இதுவரை 200 பேர் பலியானதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் குட்லக் ஜொனாதன் பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ சர்வாதிகாரி முகமுது புஹாரி தோல்வி அடைந்தார்.
இதையடுத்து ஜொனாதன் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால் தான் ஜொனாதன் வெற்றி பெற்றதாக கூறி, புஹாரி ஆதரவாளர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
அவ்வாறாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
லிபியாவில் ஆளில்லா ஆயுத விமானங்கள் பயன்படுத்த ஒபாமா ஒப்புதல்.
லிபியாவில் அதிக சத்தம் எழுப்பாத அமெரிக்க ஆயுத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் கூறினார்.லிபியாவில் கடந்த பெப்பிரவரி 15ம் திகதி முதல் கடாபி ராணுவத்தினருக்கும், புரட்சி போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள்.லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை கொல்வதைத் தடுக்க அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் கூட்டுப்படைகள் போராட்டக்காரர்களுக்கு உதவியாக அங்கு உள்ளன.
இருப்பினும் இந்தக் கூட்டுப்படைகள் நேரிடையாக போரில் ஈடுபடவில்லை. லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை மட்டும் முறியடித்து வருகின்றன. இந்த நிலையில் அதிக சத்தம் எழுப்பாத ஆள் இல்லாத ஆயுத விமானங்களை லிபியாவில் அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதற்கு ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் தெரிவித்தார்.
ஆள் இல்லாத ஆயுத விமானங்களை ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் தாக்கப்படுகிறார்கள்.சமீப நாட்களாக கடாபி ராணுவத்தை எதிர்த்து போரிடுவதில் போராட்டக்காரர்களுக்கு சிறிய முன்னேற்றமே உள்ளது. இந்த நிலையில் ஆள் இல்லாத ஆயுத விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

மனிதனோடு நெருங்கிப் பழகும் திமிங்கிலங்கள்! குவியும் சுற்றுலாப் பயணிகள்

பொதுவாக திமிங்கிலங்கள் ஆபத்தானவை. ஆனால் பசுபிக் கடல் பிராந்தியத்தில் காணப்படும் இந்த சாம்பல்நிற திமிங்கிலங்கள் மனிதர்களோடு மிகவும் நட்பாகப் பழகுகின்றன. கடலில் உல்லாசப் பயணிகளை இவை முத்தமிடவும் செய்கின்றன. இந்த இராட்சத வகை திமிங்கிலங்கள் உல்லாசப் பயணிகளின் படகுகளைக் கண்டால் அவற்றை நெருங்கி வந்து மனிதர்களோடு அன்புடன் பழகுகின்றன.

மனிதர்களோடு தேடிவந்து நெருங்கிப் பழகும் இந்த இராட்சத திமிங்கிலம் சுமார் 40 தொன் எடை கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நீளம் சுமார் 40 அடிகள். இதன் உடல் முகம் என எல்லாப் பகுதிகளையும் எந்த அச்சமும் இன்றி மனிதர்கள் தொட்டுப் பார்க்கலாம். தடவியும் கொடுக்கலாம். மெக்ஸிகோவின் மேற்குக் கரையை அண்டிய பகுதியில் தான் இந்த அதிசயம் நடக்கின்றது. 

இந்த சாம்பல் நிறத் திமிங்கிலங்களோடு விளையாட தற்போது உலகம் முழுவதும் இருந்து உல்லாசப் பயணிகள் குடும்பத்தோடு இந்தப் பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். மெக்ஸிகோவின் சென் இக்னாஸியோ குடாப் பகுதியிலேயே இவை காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்தப் பகுதிக்கு இனப் பெருக்கத்துக்காக புலம் பெயரும் உயிரினம் என்று கூறப்படுகின்றது.உலகில் மனிதனோடு மிகவும் நெருங்கி நட்புறவு கொள்ளும் ஒரே வகை திமிங்கிலம் இதுதான்.

தாய்ப்பாலிலும் பரவிய கதிர்வீச்சு! அதிர்ச்சியில் ஜப்பானியப் பெண்கள்.

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புகுஷிமா அணுஉலைகள் வெடித்தன. இதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சு உணவு பொருட்கள், குடிநீர், பால் போன்றவற்றில் பரவியது. 


இதைத் தொடர்ந்து அந்த அணு உலைகளை சுற்றி 20 கி.மீட்டர் சுற்றளவில் குடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். உணவு பொருட்களில் ஊடுருவி பரவி இருந்த அணு கதிர்வீச்சு தற்போது தாய்ப்பாலிலும் பரவி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள சிட்டிசன் மிரூட் என்ற அமைப்பு தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை கதிர்வீச்சு எந்த அளவில் பாதித்துள்ளது என கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். 


அப்போது 4 தாய்மார்களை கதிர்வீச்சு தாக்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தைகளுக்கு புகட்டும் தாய்ப்பாலிலும் கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அது மிக குறைந்த அளவில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த அறிக்கை ஜப்பான் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சுகாதாரதுறை அமைச்சகம் விரிவான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் நேட்டோ கானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே குழந்தைகளுக்கு பாலூட்டும் எத்தனை தாய்மார்களை கதிர்வீச்சு பாதித்துள்ளது என்பதை கண்டறிய அரசு விரிவான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சிட்டிசன் அமைப்பின் தலைவர் கிகுகோ முராகமி கேட்டுக்கொண்டுள்ளார். 


குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்களை கதிர்வீச்சு பாதித்து இருப்பதால் கர்ப்பிணி பெண்களும் பீதி அடைந்துள்ளனர். தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளை கதிர்வீச்சு தாக்கியுள்ளதா? என்பதை கண்டறிய மிகவும் பதட்டத்துடன் உள்ளனர். அணுஉலைகள் வெடித்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அப்பகுதியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேற அனுமதிக்கப்படவில்லை. 


மேலும், அப்பகுதியில் நுழைய பிரதமர் நேட்டோ கான் தடை விதித்துள்ளார். இதற்கிடையே வெளியேறியவர்கள் தங்களது வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்து செல்ல பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.கதிர்வீச்சு தாக்காத கவச உடைகளை அணிந்து தங்கள் பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் பலி.
வங்கதேசத்தில் 150 பேருடன் சென்ற படகு ஒன்று மற்றொரு படகுடன் மோதிய விபத்தில் 27 பேர் பலியாயினர்.மேலும் பலர் தண்ணீரில் மூழ்கினர். வங்கதேசத்தின் கிழக்குப்பகுதியான பஹாரீப் நகரிலிருந்து ஜமல்காஞ்ச் நோக்கி மெக்னா நதியில் சுமார் 150 பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தது.
அப்போது பழுதடைந்த படகு ஒன்றின் மீது பயணிகளுடன் சென்ற படகு மோதியதில் படகு தலைகுப்புற கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பயணம் செய்த அனைவரும் நதியில் மூழ்கினர்.இது குறித்து பிரம்மான்பாரியா மாவட்ட பொலிஸ் அதிகாரி கூறுகையில்,"மீட்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார். அளவுக்கு அதிமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இன்று உலக புத்தக தினம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் திகதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.புத்தகங்கள் படிப்பதை அதிகரித்தல், புதிய புத்தகங்கள் வெளியாக உதவுதல், பதிப்புரிமை பெறுதல் போன்ற செயல்களை ஊக்குவிக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள், 1616, ஏப்ரல் 23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில் ஏப்ரல் 23ம் திகதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.இதன்படி 1995ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இத்தினத்தை உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்டாடுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் திகதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF