Thursday, April 28, 2011

இன்றைய செய்திகள்.


ரைம்ஸின் செல்வாக்கானோர் பட்டியலில் மளமளவென முன்னேறிய மஹிந்தரின் தில்லு முல்லு அம்பலம்!

உலகின் செல்வாக்குமிக்க 100 பேரை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரைம்ஸ் பத்திரிகை இணையத்தள வாக்கெடுப்பு நடத்துவது குறிப்பிடத்தக்கது. 'மேன் ஆஃப் தி இயர்’ ஆக தெரிவு செய்யப்படுபவர்களின் படங்கள் ரைம்ஸ் பத்திரிகையின் அட்டையில் பிரசுரிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் இந்த முன்னணிப் பத்திரிகையில் தமது படம் வெளியாவதை புகழாக நினைப்பர்.

ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய இணைய வாக்கெடுப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் இடம்பெற்றுள்ளதாகவும், 2 இலட்சத்து 3 ஆயிரத்து 117 வாக்குகளைப் பெற்று 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூவ இணையத்தளத்தில் ஆர்ப்பாட்டமாக செய்திகளை வெளியிட்டன. பயங்கரவாதத்துக்கு எதிராக ராஜபக்ஸ எடுத்த நடவடிக்கைகளுக்கும், ஜனநாயகம் செழிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம் இது என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுருந்தது. 

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 40 ஆவது இடத்திலும், காங்கிரஸ் தலைவர் சோனியா 100 ஆவது இடத்திலும் பின்தங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி பெருமையடித்தன. ஆனால் ஏப்ரல் 21 ஆம் திகதி இணையத்தள வாக்கெடுப்பு முடிவுற்றுள்ளதாகவும் அறிவித்து, அதற்கு அடுத்தநாள் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் இருந்து மகிந்த ராஜபக்ஸ நீக்கப்பட்டுள்ளதாகவும் ரைம்ஸ் சஞ்சிகை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எனினும் இதற்கான காரணத்தை ரைம்ஸ் சஞ்சிகை அறிவிக்கவில்லை. 

ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய போட்டியிலிருந்து மகிந்த ராஜபக்ஸ நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரைம்ஸ் சஞ்சிகை தெளிவுபடுத்தவேண்டும் என்று இது வேண்டும் என்றே நீக்கப்பட்டதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ஸவின் பெயர் இடம்பெற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரைம்ஸ் பத்திரிகைக்கு பல்வேறு கண்டனங்கள் குவிந்தன. 

இணையத்தள வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ஸ எவ்வாறு முன்னேறினார் என்பதில் பலரும் சந்தேகம் வெளியிட்டனர். இதனால் ரைம்ஸ் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் தமது தொழில்நுட்பக் குழுவிடம் இவ்விடயம் குறித்து ஆராயும்படி பணிப்புரை விடுத்தது. அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில் தான், இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைக் கையில் வைத்துக் கொண்டு ராஜபக்ஸ நடத்திய தில்லுமுல்லு அம்பலமாகி வெளிச்சமாகியது. ராஜபக்ஸவின் கைத்தடிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவருக்கு ஆதரவாகக் கள்ள வாக்குப் போட்டுள்ளனர். 

இலங்கையில் இராணுவத்தின் தொழில்நுட்பத் துறையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் இந்தப் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ராஜபக்ஸவுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் அவ்வளவும் கொத்துக் கொத்தாக விழுந்து இருப்பதைக் கண்டுபிடித்த ரைம்ஸ் தொழில்நுட்பக் குழு இது திட்டமிட்ட சதி என்று ஆதாரபூர்வமாக தேர்வுக் குழுவிடம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்தே ராஜபக்ஸவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழு அறிக்கை! ஆராய்கிறதாம் இந்தியா

ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான ஆலோசனை குழுவின் அறிக்கையை இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதன்படி முழுமையாக அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு வெளியிடப்படும் என இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது எனினும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்த இந்தியா தயாராகவுள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இது தொடர்பாக தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்களை பாதுகாப்புச் செயலாளர் பறித்துக் கொண்டுள்ளார்.

பொலிசாரின் இடமாற்றம் தொடர்பான பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பறித்துக் கொண்டுள்ளார்.இதுவரை காலமும் கீழ்மட்ட சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தொடக்கம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரையான அனைத்துப் பொலிஸாரினதும் இடமாற்ற உத்தரவுகள் பொலிஸ் மா அதிபர் மூலமே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால் பாதுகாப்புச் செயலாளர் விடுத்துள்ள புதிய சுற்றறிக்கையொன்றின் பிரகாரம் இனிவரும் காலங்களில் உப பொலிஸ் பரிசோதகர் (சப் இன்ஸ்பெக்டர்) தரத்துக்கு மேலான பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த விடயங்கள் நேரடியாக பாதுகாப்புச் செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.அதன் மூலம் தனக்குப் பிடிக்காத ஒரே காரணத்துக்காக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவை  செல்லாக்காசாக்கும் நடவடிக்கையை பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமெரிக்கா வரவேற்கின்றது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.மோசமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்களில் தவறிழைத்தவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூடாது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சூஸன் ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள், நீதி, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகிய செயற்பாடுகளை மேம்படுத்தும் விடயத்தில் நிபுணர் குழு அறிக்கை பெறுமதியான பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன் காரணமாக அதில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.அதே நேரம் போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் தப்பித்துக் கொள்ளாத வகையிலும், நடைபெற்றுள்ள போர்க்குற்றங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும் வகையிலும் சர்வதேச ரீதியான விசாரணையொன்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்துகின்றோம் என்றும் சூஸன் ரைஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று பாதுகாப்புக்கவுன்சிலில் உரையாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டம் இம்முறை மூடிய கதவுகளுக்குள் நடைபெற்றதன் காரணமாக பிரஸ்தாப கூட்டத்தில் நிபுணர் குழு அறிக்கை குறித்த விவகாரம் கலந்துரையாடப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.ஆயினும் பாதுகாப்புக் கவுன்சிலில் உரையாற்றி விட்டு வெளியே வந்த பான் கீ மூன் செய்தியாளர்களிடம் பேசும் போது,  வெளிப்படைத் தன்மை பேணல்  மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்களைக் கருத்திற் கொண்டே நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது.
அதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு அதனை தெளிவான முறையில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.அத்துடன் இலங்கையில் இருந்து பிரஸ்தாப அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீண்ட கால சமாதானம் மற்றும் நல்லிணக்கம், அபிவிருத்தி என்பவற்றை உட்பொருளாகக் கொண்ட நல்லதொரு பதில் கிடைக்கும் வரை காத்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் தடையாக இருக்கக் கூடாது: ஹ்யூமன் ரைட்ஸ் வொட்ச் வேண்டுகோள்.
நிபுணர் குழு அடிப்படையிலான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் தடையாக இருக்கக் கூடாது என்று ஹ்யூமன் ரைட்ஸ் வொட்ச்  வேண்டுகோள் விடுத்துள்ளது.அவ்வாறு எதிர்ப்புத் தெ ரிவிப்பதானது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தடையாக  அமைந்து விடும் என்பதாக உலகின் முன்னணி மனித உரிமைகள் கண்காணிப்பகமான ஹ்யூமன் ரைட்ஸ் வொட்ச் சுட்டிக்காட்டியுள்ளது.எனவே நிபுணர் குழு சிபார்சு செய்துள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த சீனாவும், ரஷ்யாவும் தமது ஆதரவை வெளிப்படுத்த  வேண்டும்.
மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், மனித உரிமைக்கவுன்சில் மட்டுமன்றி பொதுச்சபையின் அங்கத்தவர்களாக உள்ள அனைத்து நாடுகளும் நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க  வேண்டும் என்றும் ஹ்யூமன் ரைட்ஸ் வொட்ச் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆயினும் பிரஸ்தாப வேண்டுகோள் குறித்து இதுவரை சீனாவோ ரஷ்யாவோ எதுவித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணங்கிப் போவதற்காக இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்க முடியாது: அமைச்சர் நிமல் சிரிபால
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணங்கிப் போவதற்காக  இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்க அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையுடன் எதிர்காலத்திலும் இணக்கப்பாட்டுடன் நடந்து கொள்ளும். ஆனால் அதற்காக அரசாங்கம் அநியாயமான முறையில் அடங்கிப் பணிந்து போக த் தயாராக இல்லை.
முக்கியமாக பயங்கரவாதத்துக்கு எதிராகப் பெற்ற வெற்றியையோ, அதனைப் பெற்றுத் தந்த இராணுவ வீரர்களையோ ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கத் தயாராக இல்லை.கலந்துரையாடல்கள் மற்றும் நல்லுறவின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையுடனான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈக்குவடோரில் எரிமலை வெடிக்கும் அபாயம்: அச்சத்தில் மக்கள்
ஈக்குவடோரின் உள்ள துங்குராகுவா எரிமலை புகையையும், சாம்பலையும் வெளிப்படுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த எரிமலையிலிருந்து வெளிப்படும் புகை 7 கிலோ மீற்றர் உயரம் வரை பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறும், அப்பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை மூடுமாறும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துங்குராகுவா எரிமலை கடந்த 12 ஆண்டுகளாக காலத்துக்குக் காலம் வெடிப்பது வழக்கமாகும். இவ்வருடத்தில் வெடிப்பது இதுவே முதல் முறையாகும்.இது குறித்து ஈக்குவடோரின் பௌதீகவியல் மையம்,"விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தது.
ஆப்கன் சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் 71 பேர் பிடிபட்டனர்.
ஆப்கானிஸ்தானின் தென்பகுதி பிரதான நகரமான கந்தஹாரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர்.ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படைகளை எதிர்த்துப் போராடி வரும் தலிபான் அமைப்பின் பிறப்பிடமாக கருதப்படும் இடமே கந்தஹார் நகராகும்.இங்குள்ள பிரதான சிறைச்சாலைக்குள் இருந்து சுமார் ஆயிரம் அடிகள் நீளமான சுரங்கத்தைத் தோண்டி அதன் வழியாகவே 500க்கும் மேற்பட்டவர்கள் தப்பிச் சென்றனர்.
இவர்களுள் பெரும்பாலானவர்கள் தலிபான் அமைப்பின் போராளிகள். சிறைச்சாலையில் இருந்து தப்புவதற்கான இந்தத் திட்டத்தை தீட்டி அதைச் செயற்படுத்தியது தாங்களே என்று அல்குவைதா அமைப்பு உரிமை கோரியுள்ளது.இது மிகவும் பாதுகாப்புடன் கூடிய ஒரு சிறைச்சாலையாகும். சிறைக்கு வெளியே ஒரு வீட்டில் இருந்து சுரங்கத்தைத் தோண்ட ஆரம்பித்து அதை சிறைக்குள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக சுரங்கம் தோண்டப்பட்டு வந்ததாக தலிபான்கள் கூறியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுரங்கப் பணிகள் பூர்த்தியாகி உள்ளன. ஞாயிறு இரவு முதல் திங்கள் கிழமை அதிகாலை வரைக் கைதிகள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு தப்பியவர்களுள் சிலர் தலிபான்களின் கமாண்டர்கள் ஆவார்கள்.இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் இன்று 71 பேர் பிடிபட்டனர். மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து மீதமுள்ள கைதிகளைத் தேடும் பணியை ஆப்கானிஸ்தான் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பிரிட்டனுக்கு வர விரும்பும் துனிஷிய மக்கள்.
துனிஷியாவில் உள்நாட்டு போரால் பரிதவிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரிட்டன் வர விரும்புகின்றனர். பிரிட்டன் தான் தங்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.பல்லாயிரக்கணக்கான துனிஷிய மக்கள் தங்குவதற்கு தற்காலிக விசாவை இத்தாலி அளித்துள்ளது. இந்த விசா மூலம் துனிஷிய மக்கள் ஐரோப்பா நாடுகளை சென்றடைய முடியும். இத்தாலி நடவடிக்கைக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரான்ஸ்-இத்தாலி குடியேற்ற பிரச்சனை சர்வதேச வர்த்தகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் பகுதிக்கு அருகே உள்ளனர். ஏறக்குறைய ஆயிரம் வடக்கு ஆப்பிரிக்க மக்களுக்கு காரேடு நோர்டை பகுதிகளில் தற்காலிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரிட்டனுக்கு விரைவு ரயிலில் செல்ல விரும்புகின்றனர்.ரயிலில் 2 மணி நேரத்தில் அவர்கள் பிரிட்டன் செல்ல முடியும். பிரான்சில் அதிகாரிகள் தங்களை கொடுமைப்படுத்துவதாக இடம் பெயர்ந்த மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். வடக்கு ஆப்பிரிக்க பகுதி மக்கள் 25 ஆயிரம் பேர் கடல் வழியாக இத்தாலிக்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் தருவதை பிரான்ஸ் எதிர்க்கிறது. செனகன் ஒப்பந்தத்தை இத்தாலி தவறாக பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. செனகன் எல்லைப்பகுதி வழியாக 25 ஐரோப்பிய நாடுகளுக்கு பயண ஆவணங்கள் மூலம் பயணிக்க முடியும்.பிரான்சில் நெருக்கடி ஏற்படுவதால் அங்கு தற்காலிகமாக இருக்கும் புலம் பெயர்ந்த மக்கள் பிரிட்டனுக்கு முறைகேடாக இடம் பெற ஒரு நபருக்கு ஆயிரம் பவுண்ட் அளித்து பயணிக்க முயற்சிக்கின்றனர்.
விலைவாசி அதிகரித்தால் 6.4 கோடி பேர் வறுமையில் வாடும் நிலை ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
ஆசிய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் மேலும் 6.4 கோடி பேர் ஏழையாவார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஆசிய நாடுகள் சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டு வந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
மேலும் கச்சா எண்ணெய் விலையும் வேகமாக உயர்ந்து கடந்த 31 மாதங்களுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சி தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் உணவுப் பொருள் விலை சராசரியாக 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலை சராசரியாக 30 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடுகளில் நிலவும் 10 சதவீத விலைவாசி உயர்வு தொடர்ந்து நீடித்தால் மொத்தம் உள்ள 330 கோடி பேரில் 2 சதவீதம் பேர் அதாவது 6.4 கோடி பேர் ஏழையாவார்கள். அதாவது ஒரு நாளைக்கு ரூ.60க்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள் ஏழை என மதிப்பிடப்படுகின்றனர். இதுதவிர பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் வரை குறையும்.
உலகம் முழுவதிலும் 7 கோடியே 70 லட்சம் நிறுவனங்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் 59 நாடுகளைச் சேர்ந்த 7 கோடியே 70 லட்சம் நிறுவனங்களின் கணக்குத் தகவல்கள் குற்றவாளிகளால் களவாடப்பட்டுள்ளன.ப்ளே ஸ்டேஷனில் ஓன்லைன் விளையாட்டுப் பொருட்கள், மென்பொருள், திரைப்படம், இசை தரவிறக்க நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர் தனது கடனட்டை மற்றும் தனது தனித் தகவல்களை அளிக்க வேண்டும். இந்த தகவல்கள் தான் தற்போது கணணி திருடர்களால் களவாடப்படுகின்றன.பிரிட்டனில் மட்டும் 30 லட்சம் பிரிட்டிஷ் விளையாட்டு வாடிக்கையாளர்களின் கணக்குகள் திருடப்பட்டுள்ளன. ப்ளே ஸ்டேஷன் விளையாட்டு பொருட்களின் பெயர்கள், முகவரிகள், பிறந்த நாள் விவரம் மற்றும் பாதுகாப்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
ப்ளே ஸ்டேஷன் தகவல் திருட்டு குறித்து செவ்வாய்கிழமை சோனி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது. மிக விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளது. தகவல் திருட்டு எந்த திகதியில் நடந்துள்ளது என்ற விவரத்தை சோனி நிறுவனத்தால் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை.தகவல் திருட்டு காரணமாக ப்ளே ஸ்டேஷன் இணையதளச் சேவை முடங்கியது. சோனியின் இசைச் சேவையும் பாதித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
லிபியாவில் மனித உரிமை மீறல்: ஐ.நா குழு ஆய்வு
லிபியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கடாபியின் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகிறது.இந்த தாக்குதலில் பல ஆயிரம் மக்கள், குழந்தைகள், பெண்கள் கடுமையாக குண்டடிப்பட்டுள்ளனர். லிபியாவில் மனித உரிமை மீறல் தீவிரவமாக உள்ளது.லிபிய ராணுவத்தின் மனித உரிமை மீறலை ஆய்வு செய்ய ஐ.நா குழு லிபிய தலைநகர் திரிபோலிக்கு வருகிறது. இந்த ஆய்வுக் குழுவை ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் நியமித்து உள்ளது. ஆய்வுக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என லிபிய அரசு கூறியுள்ளது.
ஐ.நாவின் 3 விசாரணையாளர்கள் லிபியாவில் நடக்கும் மனித உரிமை மீறலை யார் செய்திருந்தாலும் ஆய்வு செய்து அறிக்கை தரப்போவதாக தெரிவித்து உள்ளனர். லிபியாவில் நடக்கும் சித்ரவதை, மாயமாகி போனவர்கள், போராட்டக்காரர்களை கொலை செய்தல் ஆகியவை குறித்தும் ஐ.நா குழு விசாரணை செய்கிறது.
கடந்த பெப்பிரவரி மாதம் ஐ.நா மனித உரிமை ஆணையர் நாவிப்பிள்ளை கூறுகையில்,"மனித இனத்திற்கு எதிரான குற்ற நிகழ்வுகள் லிபியாவில் நடந்து கொண்டிருக்கின்றன" என்றார். போராட்டக்காரர்கள் வசம் உள்ள மிஸ்ரட்டா பகுதியை கைப்பற்ற கடாபி படைகள் அங்கு சமீபத்தில் குண்டுகளை வீசி இருந்தன.மிஸ்ரட்டாவில் உணவு வசதி, தண்ணீர் வசதி எதுவுமே இல்லை. மிஸ்ரட்டாவில் தொடர் குண்டு மழை பொழிவதால் மக்கள் உணவு, மருந்து வாங்கக் கூட வீட்டை விட்ட வெளியே வர முடியாத நிலை உள்ளது.
கராச்சி குண்டு வெடிப்பில் குவாண்டமோ சிறையில் உள்ள கைதிக்கு தொடர்பு: விக்கிலீக்ஸ் தகவல்
அமெரிக்க ராணுவ ரகசியங்களை அசாங்கோவின் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2002ம் ஆண்டு கராச்சிக் குண்டு வெடிப்புக்கு குவாண்டமோ சிறையில் உள்ள அல்கொய்தா தீவிரவாதி தான் காரணம் என அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கராச்சி குண்டு வெடிப்பில் 11 பிரெஞ்ச் நீர்மூழ்கி கப்பல் என்ஜினியர்கள் மரணம் அடைந்தனர். 2 பாகிஸ்தானியர்களும் இறந்தார்கள். குண்டு வெடிப்பில் இறந்த பிரெஞ்சு நபர்களின் குடும்பத்தினர்கள் பிரெஞ்சு ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
அவர்கள் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக் மீது வழக்கு போடப்போவதாகவும் எச்சரித்தனர். அல்ஜீரியாவைச் சேர்ந்த அடில் ஹாடி அல்-ஜசி பின் ஹாமிலி அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு கடத்தல் மற்றும் குண்டு வெடிப்பு பயங்கரங்களுக்கு உதவியாக இருந்தார்.தற்போது இந்த நபர் கியூபா அருகே உள்ள குவாண்டமோ பயங்கரச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கராச்சிக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய அல்கொய்தா குறித்த தகவல்களை பிரிட்டனின் கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
குண்டுக்கு மாற்றாக பீரங்கியில் வைத்து சுடப்பட்ட வாலிபர் மரணம்.
ஐரோப்பிய நாடுகளில் கோடை விடுமுறையின் போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம். இது போன்ற சாகச நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின் கென்ட் நகரில் நடந்தது.இதில் ராட்சத பீரங்கியில் குண்டுக்கு பதிலாக ஒரு வாலிபரை உட்கார வைத்து சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பங்கேற்றார். அவர் ஏணியில் ஏறி 7.5 டன் எடையுள்ள பீரங்கியில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் பீரங்கியின் பின்புறம் தீ வைக்கப்பட்டது.
அப்போது பீரங்கி டமார் என்ற சத்தத்துடன் வெடித்தது. இதை தொடர்ந்து குண்டுக்கு பதிலாக பீரங்கியின் வாய் பகுதியில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தூக்கி எறியப்பட்டார். இதுபோன்ற சாகச நிகழ்ச்சி நடைபெறும் போது அதில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு வலை கட்டப்பட்டிருக்கும்.
அதுபோன்று இந்த நிகழ்ச்சியிலும் வலை கட்டப்பட்டிருந்தது. ஆனால் பீரங்கியால் சுட்ட போது அந்த வாலிபர் வலையில் விழாமல் கீழே தூக்கி வீசப்பட்டார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டொக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் நிகழ்ச்சி பார்க்க வந்திருந்த பொதுமக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் எழுச்சி பெற இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
கடந்த மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகள் ஜப்பானை புரட்டிப் போட்டது.இதில் பல நகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இந்நகரங்களை மீட்டுருவாக்கம் செய்வது குறித்து அரசுக்கு ஆலோசனை அளிக்க "மீட்டுருவாக்க வடிவமைப்புக் கவுன்சில்" அமைக்கப்பட்டது.
மேலும் அங்கு சிறிய அளவில் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளது. இதனால் அங்கு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் சிக்கி 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களை தேடும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புனரமைப்புப் பணிகள் குறித்து அக்கவுன்சிலைச் சேர்ந்த ஜுன் லியோ கூறியதாவது: தற்காலிக வீடுகள், சாலை வசதிகள் இவற்றுக்கே முதல் மூன்றாண்டுகள் போய்விடும். நகரங்களையும், சிறு நகரங்களையும் மீட்டுருவாக்கம் செய்வதற்கு மேலும் நான்காண்டுகள் தேவைப்படும். அதற்கு மேலும் கூட அவகாசம் தேவைப்படக் கூடும். இவ்வாறு லியோ தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF