Monday, April 4, 2011

இன்றைய செய்திகள்.1


புத்தளம் கடற்பிரதேசத்தில் கரையொதுங்கும் மீன்கள்! கடலின் எண்ணெய்வள ஆய்வின் விளைவு என சந்தேகம்.

புத்தளம் ஆலங்குடா பிரதேசத்தில் திடீரென பெருந்தொகையான மீன்கள் செத்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தொகையான மீன்கள் கரை ஒதுங்குவது அப்பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் கடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எண்ணெய்வள ஆராய்ச்சியின் காரணமாக இந்த மீன்கள் செத்து கரை ஒதுங்குவதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்திய மீனவர்கள் டைனமெற் வெடி வைத்து மீன்களை பிடிப்பதாகவும் அதில் உயிரிழந்த மீன்களே கரை ஒதுங்குவதாகவும் ஒருசாரார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கவில்லை. எனினும் புத்தளம் மாவட்டத்தில் பெருந்தொகையான மீன்கன் கரையொதுங்கிய சம்பவம் இதுவே முதல் தடவையாகும்.
63 ஆயிரம் தடவைக்கு மேல் சுழன்ற முரளியின் கை ஓய்கிறது.
கிரிக்கெட் விளையாட்டின் சுழல்பந்து ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நேற்றைய போட்டியோடு தனது சுழலுக்கு ஓய்வளித்துள்ளார்.1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி பிறந்த இவர், தனது 20ஆவது வயதில் அதாவது 1992ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிற்குள் காலடி வைத்தார்.
இவர் தனது கல்வியை கண்டி கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்தார். பாடசாலைக் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு அணியில் வேகப்பந்து வீச்சாளராகவே விளையாடினார்.ஆயினும் தனது 14 ஆவது வயதில் பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோவால் ஓவ்ப் ஸ்பின்னராக பந்து வீச பயிற்றுவிக்கப்பட்டார். இதனடிப்படையில் 11 பேர் கொண்ட குழுவில் பாடசாலை சார்பாக விளையாடியதுடன் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரராகவே களமிறங்கினார்.
பாடசாலை மட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முரளி, 1990 / 91 களில் நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அவ்வாண்டின்  Bata வின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.இலங்கை  A அணியில் இடம்பிடித்த இவர் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.இதில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கூட முரளி வீழ்த்தவில்லை.
இதன் பின்னர் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதனால் 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடனான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.சிறப்பாக செயற்பட்டு வந்த முரளிக்கு பல சோதனைகள் அடுத்தடுத்து காத்திருந்தன.
முரளியின் கிரிக்கெட் வரலாற்றில்  Boxing Day  என கருதப்படும் நாள் 1995 ம் ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி. அன்றைய தினம்தான் முரளிதரன் பந்து வீசிய போது நடுவராக கடமையாற்றிய டெரல் ஹெயார் அவர் பந்தை எறிகிறார்  Chuck Ball  என்று கூறி குற்றம்சாட்டினார்.
அதன் பின் 10 நாட்கள் கழித்து 1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் திகதி அன்று மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியின்போது முரளிதரன் தனது முதலாவது ஓவரை வீசிய போது 3 முறை Chuck Ball  என்று நோபோல் வழங்கப்பட்டது. அன்று நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன்.
முரளியின் பந்துவீச்சு Chuck Ball  எனக் கருதக் காரணம், ஓவ்ப் ஸ்பின் முறையிலேயே பந்துவீசும் முரளிதரன் லெக் ஸ்பின் முறையிலும் பந்து வீசுவதினால் ஏற்பட்ட தடுமாற்றமே.எவ்வாறாயினும் இப்போட்டியின் போது துணை நடுவராக செயலாற்றிய டொனி மெக்கியுலின் அமைதியாகவே இருந்துவிட்டார்.
1996 ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக முரளி உயிரியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதனடிப்படையில் அவர் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்து வீசுகிறார் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கமைய அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
1998 1999 காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடியது. இப்போட்டியின் போது நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன். முரளி பந்து வீசிய வேளையில் அவர் முறையற்ற விதத்தில் பந்து வீசும் பாணி அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
அப்போது இலங்கை அணியின் தலைவராகக் கடமையாற்றிய அர்ஜுன ரணதுங்க நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நின்றுவிடவில்லை, இந்தப்போட்டியை இத்தோடு நிறுத்திவிடுகிறோம் என்று கூறிய அர்ஜுன அணியை பெவிலியன் நோக்கி அழைத்துச் சென்றார்.அப்போது குறுக்கிட்ட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் போட்டியை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு போட்டி மீண்டும் ஆரம்பமானது.
இந்தச் சம்பவத்தை அடுத்து அர்ஜுன ரணதுங்கவுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. நடுவராக செயலாற்றிய ரொஸ் எமர்சனும் சுகயீன விடுமுறை என்று காரணம் காட்டி போட்டித் தொடலிருந்து விலகிக் கொண்டார்.முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 500 வது விக்கெட்டை 2004 ம் ஆண்டு மார்ச் 16 ம் திகதி கண்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது வீழ்த்தியிருந்தார்.
இப்போட்டித் தொடரில் “துஸ்ரா' முறையில் பந்து வீசியிருந்தமை தொடர்பாக போட்டி நடுவராகக் கடமையாற்றிய கிறிஸ் பிரோட் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்திருந்தார்.அதனால் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கமைய மருத்துவ தீர்வுகள் முரளிதரனுக்கு சாதகமாக அமைய, “துஸ்ரா' பந்து வீச்சினை வீசுவதற்கு முடியும் என ஐசிசி யினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2006 ம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் முரளி.இதனடிப்படையில் “தூஸ்ரா' பந்து வீசப்படும் வேளையில் 12.2 பாகையில் கை மடங்கும் போது சராசரியாக மணிக்கு 86 கிலோ மீற்றர் வேகத்திலும் ஓவ் பிரேக் பந்து வீச்சின் போது 12.9 பாகையில் கை மடங்கும் அதேவேளை மணிக்கு 99.45 கிலோ மீற்றர் வேகத்திலும் பந்து வீசுகிறார் என்பது அறியப்பட்டது.
இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியினால் சிறப்பாக செயற்பட்ட முரளி பல அரிய சாதனைகளையும் நிலைநாட்டி விட்டுதான் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைகள்
1. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (800)
2. ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (534)
3. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (1,334) 
4. டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பெறுமதிகளை அதிக தடவைகள் கொண்டவர் (67)
5. 10 விக்கெட் பெறுமதிகள் அதிக தடவைகள் கொண்டவர் (22)
6. 10 விக்கெட் பெறுமதியான அனைத்து அணிகளுக்கு எதிராகவும் பெற்ற ஒரு வீரர்.  
7. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்டுகளை பெற்றவர்.
8. டெஸ்ட் போட்டிகளில்  விரைவாக  400 விக்கெட்டுகளை பெற்றவர்.
9. டெஸ்ட்போட்டிகளில் விரைவாக 450  விக்கெட்டுகளை பெற்றவர்.
10. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 500 விக்கெட்டுகளை பெற்றவர்.
11. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 550 விக்கெட்டுகளை பெற்றவர்.
12. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 600 விக்கெட்டுகளை பெற்றவர்.
13. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 650 விக்கெட்டுகளை பெற்றவர்.
14. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 700  விக்கெட்டுகளை  பெற்றவர்.
15. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 750  விக்கெட்டுகளை பெற்றவர்.
 16. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் பெறுமதியைத் தொடர்ந்து 4 தடவை புரிந்த ஒரே வீரர்.
17. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராக 50  விக்கெட்டுகளுக்கு அதிகமாக பெற்ற ஒரே வீரர்.
18. இங்கிலாந்தின் jim laker  உடன் 9 விக்கெட் பெறுமதியான இரு தடவைகள் வீழ்த்தியுள்ளார்.
19. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர்.

உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து விலகுகிறேன்! மலிங்க அதிரடி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தான் இனிமேல் உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருக்கின்றார். இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அத்தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு, 

எனது அணிக்கு என்னாலான சேவைகளை வழங்குவேன். அடுத்த உலகக் கிண்ண போட்டி இடம்பெறும் ஆண்டான 2015 ஆம் ஆண்டு தான் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார். தான் கடந்த பல வாரங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஓய்வு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த உலகக் கிண்ணப்போட்டிக்கு இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் வந்து விளையாட வேண்டும் என கேட்டுள்ளார். தற்போது நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டியில் மொத்தமாக 13 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான இறுதியாட்டத்திலும் சேவாக், சச்சின் ரெண்டுல்கர் ஆகியோரை தனது அபார பந்து வீச்சின் மூலம் இலகுவாக வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இந்த மாதம் கடும் வெப்பம் நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்.
இலங்கை இந்த மாதம் முழுவதும் பகல், இரவு நேரங்களில் வெப்ப காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன் நாளை முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதே இதற்கான காரணம் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவநிலை மாற்றம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் முன்கூட்டிய காலநிலை தற்போது அதிக வெப்பமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 2001 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரையான காலப்பகுதி வெப்பம் மிகுந்த தசாப்தம் என சர்வதேச காலநிலை ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையி, வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேற்று மாகாணங்களில் இந்த வருடத்தில் உயர்வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தற்போதுள்ள வெப்பநிலையை விட 5 முதல் 10 பாகைகளால் இந்த வருடத்தி;ல் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு.
சகல அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெறவேண்டும். இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடம் உத்தரவு விடுத்துள்ளார்.
குறைந்தபட்சம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் கட்டாயம் இடம்பெறச் செய்யவேண்டும். ஏனெனில் சில தனியார் நிறுவனங்களில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் தொங்கவிட்டிருப்பதை நான் கண்ணுற்றேன். அது தவறு. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொழும்பு நகரின் சில இடங்களில் பிழையாக பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.
சில பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் மாத்திரமே காணப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கடலில் கலந்த கதிர்வீச்சு: தடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள்.
ஜப்பான் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட அணுக்கசிவு அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகின் இதரப் பகுதிகளுக்கும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
அணு உலையின் கான்கிரீட் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு பசிபிக் கடலில் கலக்கிறது. இதனால் கடல் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் கதிர்வீச்சை தடுக்க அணு உலை ஊழியர்கள் போராடி வருகிறார்கள்.
ஜப்பானில் கடந்த மாரச் 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலையும் ஏற்பட்டது. இந்த இரு இயற்கை பேரிடரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தோ அல்லது மாயமாகியோ உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
சுனாமி பாதித்த பகுதிகளில் ஜப்பான் மற்றும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் துருப்புகள் 3 வது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1986 ம் ஆண்டு உக்ரேனில் உள்ள செர்னோபில் அணு மின் நிலையத்தில் மோசமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை போன்று தற்போது ஜப்பான் அணு மின் நிலையத்தில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது.
கடல் உணவுகளில் கதிர்வீச்சு தாக்கம் இல்லை. ஏனெனில் 20 கி.மீ தொலைவிற்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணு மின் கசிவு ஏற்பட்ட பிராந்தியத்ததில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் கதிர்வீச்சுகளான சீசியம் மற்றும் அயோடின் கலந்து இருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்தது. 
நடுவானில் பறந்த போது விமானத்தில் விழுந்த ஓட்டை: விபத்தில் இருந்து தப்பியது
நடுவானில் பறந்த போது அமெரிக்க விமானத்தில் ஓட்டை விழுந்தது. இதைத் தொடர்ந்து தரை இறக்கியதால் 118 பயணிகள் தப்பினர்.
அமெரிக்காவில் அரி சோனாவில் உள்ள போனிஸ் என்ற இடத்தில் இருந்து நேற்று 812 ரக உள் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று கலிபோர்னியாவில் உள்ள சாகிராமெண்டோ நகருக்கு புறப்பட்டு சென்றது.

அதில் 118 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட 40 நிமிடத்தில் விமானத்தின் உள்பகுதியில் திடீரென காற்றழுத்தம் குறைந்தது. இதனால் விமானம் பறப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே விமானிகள் குழப்பம் அடைந்தனர். இதற்கிடையே விமானிகள் அறையின் கூரைப் பகுதியில் ஓட்டை இருப்பதை பயணிகள் சிலர் பார்த்து விட்டனர்.
உடனே இதுகுறித்து விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானம் யுமா என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 118 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
அதே நேரத்தில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் விமான பயணிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஐவரிகோஸ்டில் கலவரம்: 800 பேர் பலி.
ஆப்பிரிக்கா ஐவரிகோஸ்ட் நாட்டில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் அலாஸ்சான் குவாட்டாரா வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அவரது தேர்தல் செல்லாது என கூறி குவாக்போ அதிபர் பதவி விலக மறுத்து விட்டார். ஆனால் ஐ.நா சபை குவாட்டராவை அதிபராக அங்கீகரித்து உள்ளது.
இந்நிலையில் குவாட்டரா மற்றும் குவாக்போவின் ஆதரவாளர்கள் இடையே ஆங்காங்கே மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக மாறியுள்ளது. அதில் இதுவரை சுமார் 800 பேர் பலியாகி உள்ளனர்.

வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறுகின்றன. எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேராமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதற்கிடையே தேர்தலில் தோல்வி அடைந்த குவாக்போ உடனடியாக பதவி விலக ஆப்பிரிக்க யூனியன் வலியுறுத்தியுள்ளது. இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

கலவரம் காரணமாக அங்கு கொள்ளை சம்பவங்களும் பெருமளவில் நடைபெறுகிறது. எனவே அவர்கள் அனைவரும் பிரான்ஸ் ராணுவத்தினரால் மீட்கப்பட்டு அவர்களின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்ந்து பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கு ஒபாமா கண்டனம்.
அமெரிக்காவில் கடந்த மாதம் குரான் நூல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமையன்று வன்முறை வெடித்தது.
ஐ.நா மையம் உள்ள மஸார் எ ஷரீப் பகுதியில் நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் ஐ.நா ஊழியர்கள் ஆவார்கள். மத போதகன் ஒருவன் குரான் நூலை எரித்தான்.
புனித நூலை எரிப்பது என்பது சகிப்புத் தன்மை இல்லாத நடவடிக்கை. அதே நேரத்தில் அப்பாவி மக்களை கொல்வது அதற்கு தீர்வாக இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று நடந்த இரண்டாம் நாள் எதிர்ப்பு போராட்டத்தில் ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான காந்த காரில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். கடந்த மார்ச் மாதம் 20 ம் திகதியன்று ப்ளோரிடாவில் உள்ள டோவ் வேர்ல்டு சமூக மையத்தில் மதபோதகன் வெய்ன் சாப் புனித நூல் குரானை எரித்தான்.
அமெரிக்காவில் 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதியன்று உலக வர்த்தக மையக்கட்டிடம்  தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதல் நினைவு நாள் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட போது மத போதகன் டெரிஜோன்ஸ் குரான் நூலை எரிக்க முயன்று விமர்சனத்திற்கு உள்ளானான். அவனது முன்னிலையில் தற்போது மதபோதகன் வெய்ன் சாப் குரானை எரித்தான்.
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்
இந்தோனேஷியாவின் தென்‌மேற்கு பகுதியிலிருந்து 300 கி.மீ தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து இந்தோனேஷியாவின் வானிலை ஆய்வு ‌மையம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த‌ோனேஷியாவின் சிலாகேப் மாகாணத்தில் நள்ளிரவு 3 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. எனினும் உயிர்தேசம் ஏதும் ஏற்படவில்லை.இதே ‌போனறு மத்திய ஜாவா பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜப்பானில் இரண்டாவது அணு உலையை மூட தீவிர முயற்சி.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளியிட்டு வரும் இரண்டாம் உலையில் ஏற்பட்டுள்ள பிளவை கான்கிரீட் கலவை கொண்டு மூடும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அணுமின் நிலையத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தின் இரண்டாம் உலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த நீர் கடலில் கலந்ததாக செய்திகள் வெளியாயின. இரண்டாம் உலையில் நீர் கசியக் காரணமான பிளவை சரி செய்வதற்காக அதில் கான்கிரீட் கலவையைக் கொட்டி மூடும் முயற்சியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 11 ம் திகதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட "டெப்கோ" ஊழியர் இருவரின் உடல்கள் கடந்த மார்ச் 30 ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று நிர்வாகம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பின் டெப்கோவின் ஊழியர்கள் பலியாகியுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கதிர்வீச்சு கலந்த நீர் தொடர்ந்து கடலில் கலந்து கொண்டிருப்பதாக ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது. டாய் இச்சி அணுமின் நிலையம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகக் கூடும் என்று ஏஜன்சி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 45 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள சுபி புனிதத்தலத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 41 பேர் இறந்தனர். 115 பேர் காயமடைந்தனர்.பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சுபி அமைப்பினரின் புனிதத்தலத்தின் பிரதான நுழைவாயிலான சக்தி சர்வார் தர்பாரில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற பொலிசார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே ஆலயத்தின் உள் பகுதியில் மேலும் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.இதில் 41 பேர் இறந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF