Monday, April 18, 2011

இன்றைய செய்திகள்.

ஐ.நா. சபை எங்களைப் பாதுகாக்கத் தவறினால் ரஷ்யா, சீனாவின் பக்கம் சாய்ந்து விடுவோம்: மிரட்டுகின்றார் கோத்தாபய


தனது உறுப்பு நாடான இலங்கையைப் பாதுகாக்க ஐ.நா. சபை தவறும் பட்சத்தில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளிடம் அடைக்கலம் கோர வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஒரு சில நாடுகளின் மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் தனது அங்கத்துவ நாடொன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட முனைப்பு காட்டினால், சீனா, ர'ஷ்யா போன்ற நாடுகளிடம் பாதுகாப்பு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை மறைமுக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு சில நாடுகளினால் தமக்குத் தேவையான முறையில் பலாத்காரமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. தனது அங்கத்துவ நாடொன்று என்ற வகையில் இலங்கைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஐக்கிய நாடுகளின் கடமையாகும்.
தவிரவும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு புரிந்துகொள்ளத் தவறியுள்ளது. விமானப்படை, கடற்படை மற்றும் தரைப் படைகளைக் கொண்டமைந்ததாக வலுவான படைக்கட்டமைப்பை  தமிழீழ விடுதலைப் புலிகள; கொண்டிருந்தனர்.
ஆனால் அவையெல்லாம் கவனத்திற்கொள்ளப்படாமல் சில மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தவறான தகவல் மூலங்களைக் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த வலயத்திற்குள் நேரடி அனுபவத்தைக் கொண்டிருந்த உலக உணவுத் திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற முன்னணி தொண்டு நிறுவனங்களின் கருத்துக்களுக்கு நிபுணர் குழு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளது.
இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள், பொதுமக்கள்,  அரசாங்க சொத்துக்களை இல்லாதொழிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏராளம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இராணுவத்தினருடனான இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதுடன்,  பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என களத் தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுவோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் சிறிதளவேனும் உண்மையில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
 இலங்கை வீரர்களை மீள்திரும்புமாறு கோருவது நியாயமற்றது – முரளிதரன்
இந்தியன் பிரிமியர் லீக்கில் விளையாடும் இலங்கை கிரிக்கட் அணி வீரர்களை இடையிலேயே நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட் கோரியிருப்பதை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கண்டித்துள்ளார்.இந்த வீரர்களை எதிர்வரும் மே 20 ஆம் திகதியே நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை கேட்டிருந்தது.
எனினும் தற்போது உடனடியாக அவர்களை நாடு திரும்பக்கோருவது நியாயமானதல்ல என்றும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் இந்த அறிவிப்பு இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கிரிக்கட் விளையாட்டு புரிந்துணர்வை பாதிக்கும் என்றும், இதன்காரணமாக இந்திய கிரிக்கட்டிடம் இருந்து இலங்கை கிரிக்கட் பல அம்சங்களை இழக்கவேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் பின்னர் இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்கள் கிடைக்கவேண்டியுள்ளது. இந்தியாவே இலங்கை வீரர்களுக்கு பணம் உழைக்கக்கூடிய வழியை கொண்டிருக்கிறது. அதாவது நிதி என்ற அடிப்படையில் இந்தியாவிலேயே இலங்கை தங்கியுள்ளது.எனவே இந்த விடயத்தை ஸ்ரீலங்கா கிரிக்கட் கவனமாக அணுகவேண்டும் என்றும் முரளிதரன் கோரியுள்ளார்.

நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ள மஹிந்தர்!

உலகெங்குமுள்ள செல்வாக்கு மிக்க 100 பேரை தெரிவு செய்வதற்கு உலகின் பிரபலமான டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மஹிந்தர் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், மதத்தலைவர்கள் போன்றவர்கள் மத்தியில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களைத் தெரிவு செய்வதற்காகவே இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. டைம்ஸின் இலட்சக்கணக்கான வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 

அந்த வரிசையில் மஹிந்த ராஜபக்ஸ 1,46,212 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேநேரம் 46 இடத்தில் இருந்த பராக் ஒபாமா அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை 95 ஆவது இடத்தில் இருந்த சோனியா காந்தி 100 ஆவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டு உள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தையே கட்டுப்படுத்தியது! போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை: அஸ்கிரிய மகாநாயக்க தேரர்.
பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களைப் படுகொலை செய்தபோது அதற்கு எதிரான நடவடிக்கைகளை குற்றமாகாது என்று அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததாக எவர் குற்றம் சாட்டினாலும், அதில்  உண்மையில்லை. பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களைப் படுகொலை செய்யும்போது எந்தவொரு அரசாங்கமும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக வெளியாகியுள்ள ஐ.நா. அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உடுகம புத்தரக்கித தேரர் மேற்கண்டவாறு கருத்து  வெளியிட்டுள்ளார்.அத்துடன் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை மனிதாபிமான அடிப்படையிலேயே அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் முன்னெடுத்திருந்தனர். அதன் போது தமிழ் சிவிலியன்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் அடித்துக் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசபடைகளால் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை - முரளிதரன்
இறுதிபோரில் சிறிலங்கா அரசபடைகளால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று சிறிலங்காவின் பிரதியமைச்சர் முரளிதரன் விநாயகமூர்த்தி  தெரிவித்துள்ளார்.'போரின் இறுதிக்கட்டத்தில் தப்பிச் சென்ற பொதுமக்களை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனவும் புலிகளிடம் இருந்த பாதுகாப்பாக பொதுமக்களை மீட்டது சிறிலங்கா இராணுவம் எனவும் சிறிலங்கா அரசபடைகளால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.


பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போரை நடத்தும் கொள்கை அரசாங்கத்தினால் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது விடுதலைப்புலிகளால் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆதலால் தான் இறுதிப்போரின் போது ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தும் காயப்பட்டும் உள்ளனர்.மேலும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சிறிலங்காவின் உள் விவகாரங்களில் அதிகமாகத் தலையிடுகிறார் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.  சிறிலங்கா ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்'  முரளிதரன் கூறியுள்ளார்.

மின்சார நாற்காலி தண்டனையை தந்தால் கூட சந்தோசமாக ஏற்பேன்! மஹிந்தர் உறுதி

நாட்டுக்காக மின்சார நாற்காலி தண்டனையை தந்தால் கூட சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட போது மஹிந்தர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு, 
கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததனை தாங்கிக்கொள்ள முடியாத சில தரப்பினர் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். 


இவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு பதிலளிப்பதற்கு தாம் தயார். புத்தாண்டு காலத்தில் மக்கள் தமது வேலைகளை சுதந்திரமான முறையில் மேற்கொண்டதனை அவதானித்தேன். எதிர்வரும் மே தினத்தன்று இலங்கையில் காணப்படும் சுதந்திரத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. குறுகிய அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு சில தரப்பினர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.
முன்னோர் அறிவுரைக்கு முக்கியத்துவம் தராத ஜப்பான்.
இன்றைய யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியை நாம் பெருமளவில் நம்பினாலும் முன்னோர் அறிவுரைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.இல்லையெனில் நமக்கு பேரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஜப்பான்.
உலகில் முதியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான். இங்கு சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் நாட்டின் வடகிழக்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக மாறியுள்ளனர்.
நாட்டின் வடகிழக்கில் உள்ளது மியாகோ நகரம். இதை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக சுனாமி தாக்குதல் ஏற்படுவது வழக்கம். இது குறித்து எதிர்கால மக்களை எச்சரிக்கும் நோக்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்குள்ள அனேயாசி கடற்கரையில் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி நடக்காதது எவ்வளவு பெரிய தவறு என அப்பகுதி மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு உயரங்களில், வடிவங்களில் இருக்கும் இந்த கல்வெட்டுகளில் "இங்கு சுனாமி பாதிப்பு உண்டு, நிலநடுக்கம் வந்தால் சுனாமியும் வரும். எச்சரிக்கையாக இரு" என்றும், "உயர்ந்த பகுதியில் வசிப்பதே அமைதியான வாழ்வுக்கு உகந்தது கல்வெட்டு அமைந்துள்ள இடத்தை தாண்டி குடியிருப்பை ஏற்படுத்தினால் பேராபத்து நேரிடும்" என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதுபோல் எந்தெந்த பகுதியில் சுனாமி தாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எந்த பகுதியில் வசித்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடவில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் யூது கிம்யூரா கூறுகையில், "இந்த கல்வெட்டுகள் பற்றி நாங்கள் பாடங்களில் படித்துள்ளோம். இவை 600 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பகுதி சிறுவர்கள் அனைவருக்கும் இது பற்றி தெரியும்" என்றான்.
அதே பகுதியில் வசிக்கும் ஐசாமு என்பவர் கூறும்போது, "கடந்த 1896ம் ஆண்டு பெரும் சுனாமி தாக்கியதை தொடர்ந்து எங்கள் முன்னோர் மேட்டுப் பகுதியில் குடியேறினர். நாங்களும் அவர்கள் வழியையே பின்பற்றுகிறோம். என்றாலும் கல்வெட்டில் கூறியுள்ளதையும் மீறி இங்குள்ள சிகெய் கடற்பகுதியில் ஏராளமான பள்ளி மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் நிறுவப்பட்டன. அனைத்தும் தற்போது தரைமட்டமாகி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தான் மிச்சம். கல்வெட்டு வாசகங்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மீண்டும் புதுப்புது கட்டடங்கள் இப்பகுதியில் நிறுவப்படும்" என்றார்.
50 ஆயிரம் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க ஜப்பான் நிறுவனத்திற்கு உத்தரவு.
புகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு,"டெப்கோ" நிறுவனம் தற்காலிக இழப்பீடை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.புகுஷிமா டாய் இச்சி அணு மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அணு உலைகளில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சால், 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியேறுவது தெரிந்த உடன் 30 கி.மீ சுற்றளவில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற ஜப்பான் அரசு உத்தரவிட்டது.
ஆனால் வெளியேற இயலாதவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல் கதவுகள் ஆகியவற்றை மூடி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அணு மின் நிலையத்தைச் சுற்றி 30 கி.மீ பரப்பளவில் இருந்த பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ஐந்தரை லட்சம் ரூபாயை அணு மின் நிலையத்தை இயக்கி வரும் "டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி" தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டெப்கோ தலைவர் மசாடாகா ஷிமிஷு கூறுகையில்,"ஆட் குறைப்பு மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் பணத்தில் இழப்பீடு வழங்கப்படும். இழப்பீடு வழங்குவதில் பின்வாங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் மீது லிபிய படைகளின் திடீர் தாக்குதல்.
லிபியாவின் கிழக்கு நகரமான அஜ்தபியாவில் முகாமிட்டுள்ள புரட்சியாளர்கள் மீது கடாபி ஆதரவு படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து புரட்சியாளர்கள் பெங்காஸி நோக்கி பின் வாங்கிச் சென்றனர். நவீன ஆயுதங்களுடன் கூடிய தங்கள் வாகனங்களை அவர்கள் பாதுகாப்பாக பெங்காஸிக்கு ஓட்டிச் சென்றனர்.
கடந்த சில வாரங்களாக தாக்குதல் எதுவும் இல்லாத நிலையில் அஜ்தபியா நகரில் கடாபி படையினர் இன்று திடீரென தாக்குதல் நடத்தியதால் புரட்சியாளர்கள் சற்று திணறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் பெங்காஸி நகரத்தை கடாபி படையினரால் நெருங்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அன்னிய ஊடுருவலைத் தடுக்க அமெரிக்கா - தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சி
அன்னிய ஊடுருவலைத் தடுப்பது தொடர்பாக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.இத்தகைய பயிற்சியை இரு நாட்டு ராணுவ வீரர்களும் மே மாதம் தென் கொரியாவில் உள்ள பேயங்கியோங் தீவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மஞ்சள் கடல் பகுதியில் இந்தத் தீவு அமைந்துள்ளது. இது மிகவும் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. வட கொரியா உருவாக்கி வரும் ஹோவர்கிராப்ட் தளத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை தென் கொரியா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
கூட்டு ராணுவ பயிற்றி மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தென் கொரிய அதிபர் மியுங்-பாக்-குடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளின் சிறப்பு ராணுவப் பிரிவினர் இணைந்து இந்த ராணுவ பயிற்சியில் ஈடுபடுவர் என்று தெரிகிறது. வட கொரியா அமைத்து வரும் ஹோவர்கிராப்ட் தளத்தின் கட்டுமானப் பணிகள் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோம்போ என்னுமிடத்தில் கட்டப்படும் இந்த ஹோவர்கிராப்ட் தளத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் தான் தென் கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள உள்ள பேயங்கியோங் தீவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவின் தளத்திலிருந்து 30 நிமிடத்தில் இந்தத் தீவை அடைந்து விட முடியும். இந்தத் தளத்தில் 70 ஹோவர்கிராப்ட்களை நிறுத்த முடியும்.
கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்காவின் ஹெலிகொப்டரும் பங்கேற்கும் என்று தெரிகிறது. சுமார் 3000 தென் கொரிய கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்களும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக விமானம் தாங்கிக் கப்பல்கள் ஏற்கெனவே இந்தத் தீவை நோக்கிச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டு ராணுவப் பயிற்சியை இரு நாட்டு ராணுவமும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன. ஆனால் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டதால் இதைக் கைவிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் கொரிய கடற்படைக் கப்பல் மீது வட கொரியா தாக்குதல் நடத்தியது. இதில் அந்தக் கப்பல் மூழ்கியதில் 46 கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர். இதிலிருந்தே இரு நாடுகளிடையிலான பனிப் போர் நடந்துவருகிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார் ஹிலாரி கிளிண்டன்.
சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இன்று ஜப்பான் வந்தார்.தலைநகர் டோக்யோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையில் ஜப்பான் மன்னரையும், அவரது மனைவியையும் ஹிலாரி சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் நோடோ கானை அவர் சந்தித்துப் பேசினார்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் மீண்டும் பொருளாதார ரீதியாக உலகின் பலம் பொருந்திய நாடாக ஏற்றம் பெறும் என்று அந்நாட்டு பிரதமரை சந்தித்த போது அவரிடம் ஹிலாரி தெரிவித்தார்.இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் நோடோ கான்,"நெருக்கடியான சூழ்நிலையில் அமெரிக்கா வழங்கிய உதவிகளை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்" என்றார். ஜப்பானின் புனரமைப்பு பணிகளுக்கு அமெரிக்கா மேலும் பல உதவிகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
பணக்காரர்களுக்கு வரிச்சலுகை கிடையாது: ஒபாமாவின் அதிரடி முடிவு
பணக்காரர்களும் வரிச்சலுகைகள் பெறுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா சலுகைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக பிள் கிளிண்டன் இருந்த போது ஆண்டுக்கு 2.5 லட்சம் டொலருக்கு கீழ் வருமானம் பெறுவோரை நடுத்தர வருவாய் பிரிவினராக அறிவித்தார். அவர்களுக்கு வரிச்சலுகைகளை அளித்தார்.அதன் பிறகு வந்த அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சியில் வருமான வரிச்சலுகைகள் பெறுவதற்கான உச்சவரம்பை அதிகரித்தது. அதனால் பணக்காரர்களும் வரிச்சலுகையை அனுபவித்தனர். இதனால் அரசின் வருவாய் குறைந்தது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பணக்காரர்களுக்கு வருமான வரிச்சலுகைகளை ரத்து செய்ய ஒபாமா முடிவு செய்துள்ளார்.இதுபற்றி அவர் கூறியதாவது: ஆண்டுக்கு 2.5 லட்சம் டொலருக்கு கீழ் வருமானம் சம்பாதிக்கும் அமெரிக்கர்களுக்கு வரிச்சலுகைகள் தொடரப்படாது. கிளிண்டன் ஆட்சியில் இருந்த போது இருந்த உச்ச வரம்பு மீண்டும் பின்பற்றப்படும். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
சிரியாவில் 48 ஆண்டுகளாக இருந்த அவசரநிலை பிரகடனம் நீக்கம் .
சிரியாவில் பாஷார் அல் ஆசாத் கடந்த 11 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவமும், பொலிசும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இருந்தும் போராட்டம் குறையவில்லை.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது வாலிபரின் இறுதி ஊர்வலம் பனியாஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்ற பொது மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.இந்த நிலையில் அதிபர் பாஷார் அல் ஆசாத் நேற்று அரசு தொலைக்காட்சியில் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: ஏற்கனவே கலைக்கப்பட்ட மந்திரி சபைக்கு பதிலாக புதிதாக அமைக்கப்படும் மந்திரி சபை வருகிற வியாழக்கிழமை அறிவிக்கப்படும்.மேலும் சிரியாவில் அமலில் இருக்கும் அவசர கூட்டம் அடுத்த வாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக புதிய சட்டம் இயற்றப்படும். அவசர சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் நாட்டில் பெரும் நாசசெயல்கள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் கடந்த 48 ஆண்டுகளாக அவசர சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின் படி எந்த அறிவிப்பும் இன்றி யாரையும் எப்போதும் கைது செய்ய முடியும். இதனால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.எனவே அச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பது போராட்டம் நடத்தும் முக்கிய கோரிக்கையாகும். தற்போது போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அதிபர் ஆசாத் பணிந்து அவசர சட்டத்தை ரத்து செய்துள்ளார்.

துக்கத்தில் தனது விரலை வெட்டி சமைத்து சாப்பிட்ட மனிதர்.

நியூசிலாந்தை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.அன்று சமையல் அறையில் தானே உணவை சமைத்தார். சமையலுக்கு தேவையான காய்கறிகளை கத்தியால் நறுக்கினார். அப்போது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவர் தனது கைவிரல் ஒன்றை வெட்டி காய்கறிகள் போன்று துண்டாக்கினார்.அதை காய்கறிகளுடன் சேர்த்து அடுப்பில் வேக வைத்து சாப்பிட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை எரிக்மோனாஸ் டீரியோவில் உள்ள கிரைக்பிரின் என்ற மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் மேலும் தனது 2 விரல்களை வெட்டி சமைத்து சாப்பிட திட்டமிட்டிருந்ததாக கூறினார். நல்ல வேளையாக அதற்கு முன்னதாகவே சிகிச்சை பெற்றதால் அந்த விரல்கள் தப்பின.இந்த தகவலை மனநல நிபுணர் கிரைக்பிரின்ஸ் தனது மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதில் உலகிலேயே முதன் முறையாக தனது உடல் உறுப்பை சாப்பிட்ட நரமாமிச மனிதர் இவர் தான் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பயங்கர சூறாவளியுடன் கூடிய மழை: 22 பேர் பலி
அமெரிக்காவில் தென் பகுதியில் உள்ள கரோலினாவில் உள்ள கடலில் பயங்கர புயல் கிளம்பியது. பின்னர் அது வலுவடைந்து வாஷிங்டன் நகரை தாக்கியது.கடுமையான சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பலத்த காற்று வீசியதால் வீடுகளின் கூரைகள் பறந்தன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ரோடுகளில் மரங்கள் சாய்ந்தன.மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கடும் சூறைக்காற்று வீசியதால் ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாஷிங்டனை தொடர்ந்து விர்ஜினீயா, மேரிலேண்டு மாகாணத்தையும் புயல் கடுமையாக தாக்கியது. அலபாமா, ஆர்கன்சாஸ், ஒகலாமா, மிஸ்சிசிப்பி ஆகிய இடங்களில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.புயல் மழையில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த புயல் மழை 3 நாட்கள் நீடித்தது. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது. எனவே மீட்பு பணி தொடங்கி உள்ளது.
சர்வதேச அளவில் கொலைகளை புரிந்த முக்கிய குற்றவாளி மெக்சிகோவில் கைது.
145 பேர் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வில் தொடர்புடைய முக்கிய நபரை கைது செய்துள்ளதாக மெக்சிகோ கடற்படை தெரிவித்தது.ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெரும் குழி நாட்டின் வடக்கு மாநிலமான தமுலிபாஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பயங்கர கொலையில் ஓமர் மாநாட்டின் எஸ்ட்ரடா முக்கிய குற்றவாளி என அறியப்பட்டார். ஓமர் மார்ட்டின் எஸ்ட்ரடா சான் பெர்னான்டோவில் உள்ள ஜெடாஸ் போதை மருந்து கும்பலின் தலைவர் ஆவார்.
சான் பெர்னான்டோ பகுதியில் தான் 145 பேர் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த இடம் கண்டறியப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபர்களில் பெரும்பாலானவர்கள் பேருந்தில் இருந்து கடத்தப்பட்டவர்கள் ஆவார்கள். கொலை குற்றவாளியாக கருதப்படும் எஸ்ட்ரடாவை கைது செய்ய உதவுபவர்களுக்கு 735 ஆயிரம் பவுண்ட் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதே பகுதியில் கடந்த ஆண்டு 72 மத்திய மற்றும் தென் அமெரிக்க நபர்களின் உடல்கள் கிடந்தன. இந்த படுகொலைகளிலும் எஸ்ட்ரடா குற்றம் சாட்டப்பட்டிருந்தார். கடந்த 2006ம் ஆண்டு முதல் போதை மருந்து தொடர்பான வன்முறை மோதலில் 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என மெக்சிகோ அரசு தெரிவித்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர்.
ஜப்பானில் 28 பேருக்கு கதிர்வீச்சு பாதிப்பு.
ஜப்பானின் புகுஷிமா டாய் இச்சி அணு மின் நிலையத்தில் கதிர் வீச்சு கசிந்த நாட்களில் 300 பேர் பணியில் இருந்தனர்.இவர்களில் 28 பேர் மட்டும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு அளவு 250 மில்லி சீவர்ட்.
ஆனால் 100 மில்லி சீவர்ட் அளவு தான் கதிர்வீச்சால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி கூறியுள்ளது. இதனிடையே நேற்று ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.நேற்று காலை 11.19 மணி அளவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கில் இபாரகி என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 79 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானது. பொருட்சேதமோ, உயிர் சேதமோ இருந்ததாக தகவல் இல்லை.
பிரிட்டன் அணு நீர் மூழ்கி கப்பல்களின் ரகசியம் அம்பலம்.
Submarine
பிரிட்டனில் அணு நீர் மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்கள் இணையதளத்தில் வெளியானது. இந்த தகவல் கசிவு பிரிட்டன் பாதுகாப்பு படைத் தலைவர்களை நெருக்கடி நிலைக்கு ஆளாக்கி உள்ளது.இதனால் அந்த தகவலில் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை தங்களது அணு நீர் மூழ்கி கப்பல்களை பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் விவரமும் எதிர்பாராத விதமாக வெளியாகி உள்ளது.
இந்த தகவல் டெய்லி ஸ்டார் சண்டே நாளிதழில் வெளியான நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உஷார் ஆகி உள்ளது. ட்ரைடண்ட் கப்பலுக்கு மாற்றாக புதிய அணு நீர் மூழ்கி கப்பல்களை கடற்படைப்பிரிவில் சேர்ப்பது தொடர்பாக ராணுவ அணி பாதுகாப்பு முறைமை தலைவர் ஆண்ட்ரூ மெக்பர்லேன் தெரிவித்த மதிப்பீடு விவர ரகசியங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன.
நாடாளுமன்ற இணையதளத்தில் எதிர்பாராத விதமாக வெளியான ரகசியத் தகவல் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். ராணுவத்தில் பணியாற்றி வரும் டோரி கட்சி எம்.பி பாட்ரிக் மெர்சர் கூறுகையில்,"இணையதளத்தில் வெளியாகி உள்ள தகவல்கள் பிரிட்டன் எதிரிகளுக்கு மிகுந்த ஆர்வத்தை தரும். இந்த தகவல் பிரிட்டனுக்கு பெரும் சேதத்தையும் தரலாம்" என்றார்.தற்போதுள்ள பிரிட்டன் நீர்மூழ்கி கப்பல் திறன் குறித்த நிபுணர் கருத்து வெளியானதால் பிரிட்டன் பாதுகாப்புத் துறை கவலையடைந்துள்ளது.
சீனக்கலைஞர் அய்வெய்யை விடுதலை செய்யக்கோரி ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்.
கைது செய்யப்பட்டுள்ள சீனக்கலைஞர் அய்வெய்யை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு வலியுறுத்தி உள்ளது.ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் சனிக்கிழமை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு ஆர்வலர்கள் திரண்டு சீனக்கலைஞர் அய்வெய்யை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.
இவரை விடுதலை செய்யக் கோரி ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்க்கெல் தனிப்பட்ட முறையில் சீன அரசிடம் வேண்டுகோள் விடுத்தார் என்கிற சர்ச்சைக்குரிய தகவல் வெளியானது. இந்த நிலையில் சீனக்கலைஞர் அய்வெய்யை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கோரியுள்ளது.
ஏங்கலா மார்க்கெல் சீன அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததாக டெர்ஸ்பைகல் செய்திப் பத்திரிக்கையில் தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து ஜேர்மனி அதிபரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"அய்வெய் கைது குறித்து ஜேர்மனி அதிபரின் நிலை தெளிவாகவும், உறுதிப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது" என்றார்.
சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பினர் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பெர்லின் கலை அகாடமி தலைவர் கிளாஸ் ஸ்டாக்கும் கலந்து கொண்டார். அய்வெய் விடுதலை குறித்து இந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி அரசியல் தலைவர்களையும், கலை அமைப்பு தலைவர்களையும் சந்தித்து பேசுவோம் என்று கூறினார்.
அய்வெய் கைது அரசியல் விவகாரமாக உருவெடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். அய்வெய் சீன மனித உரிமை அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பொருளாதார குற்றங்களுக்காக இந்த ஏப்ரல் மாதம் 3ம் திகதி பெய்ஜிங்கில் கைது செய்யப்பட்டார்.
லிபியா தாக்குதல்: நேட்டோ படைக்கு எதிர்ப்பு.
நேட்டோ அமைப்பில் 28 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் 14 நாடுகள் மட்டுமே லிபிய தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இதில் 6 நாடுகள் மட்டுமே லிபியாவின் தரை இலக்குப் பகுதியை தாக்கி வருகின்றன.லிபியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் கடாபியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நேட்டோ கூட்டுப் படைகள் தாக்குதலில் இறங்கி உள்ளன. இந்த தாக்குதலில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் முன்னணி வகிக்கின்றன.லிபியா தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்கா நிலைப்பாடு ஒரு மாதிரியாக உள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் நிலைப்பாடு வேறுபட்டு உள்ளது.
லிபியா மீதான நடவடிக்கை குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் கூறுகையில்,"லிபியா பிரச்சனைக்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது. அந்தப் பிராந்தியத்தில் இருந்து தீர்வு எழ வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்கா கூட்டமைப்பு மூலம் தீர்வு காண வேண்டும். வெளியே இருந்து தீர்வு வருவதை காட்டிலும் ஆப்பிரிக்க பகுதியிலேயே முடிவு காணப்பட வேண்டும்" என்றார்.
லிபியாவில் நேட்டோ ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அங்கு வேடிக்கை புல்லட் எதுவும் இல்லை என்றார். ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஐ.நா அங்கீகாரம் அளித்திருக்கவில்லை என்றும் ரஷ்ய அமைச்சர் கூறினார்.
150 ஆண்டுகள் இல்லாத அளவில் மனிடோபாவில் வெள்ளம் தீவிரம்.
இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள நீர் எதிர்பார்க்காத வகையில் மிக தீவிரமாகி உள்ளது என மனிடோபா அதிகாரிகள் தெரிவித்தனர்.மாகாணத்தில் 20 பகுதிகள் தற்போது அவசர நிலை பிரிவில் உள்ளன. ரெம் மற்றும் அசினி ஆறுகளில் ஒடும் தண்ணீரின் அளவு இன்று மேலும் ஒரு அடி அதிகரிக்கலாம் என கூறினர்.
வின்னிபெக் பகுதியில் உள்ள அதிகாரிகள் கூறுகையில்,"ஆற்றில் தண்ணீரின் அளவு 20 அடி அளவை எட்டும் என்றும், நாளை தண்ணீர் அளவு குறையும் என்றும், பனிக்கட்டி தடைகளை அகற்றிய பின்னர் ஆற்றில் தண்ணீர் அளவு குறையும்" என தெரிவித்தனர்.
ஆற்றில் அதிகரித்து வரும் தண்ணீரால் வின்னிபெக்கில் வெள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர நிர்வாகிகள் பெருகி வரும் நீரின் திடீர் மாற்றத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.மனிடோபாவின் அவசர நிலை நடவடிக்கை அமைச்சர் ஸ்டீவ் ஆஷ்டன் கூறுகையில்,"ஆண்டுகள் காணாத வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ளது. ரெட் நதியின் தண்ணீர் மட்டும் அதிகரித்த நிலையிலேயே உள்ளது" என்றார்.
வெள்ளம் காரணமாக தெற்கு மனிடோபா பகுதியில் உள்ள சமூகத்தினர் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். 800 மாகாண நெடுஞ்சாலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ரோடுகள் தண்ணீரால் மூடப்பட்டுள்ளன. சில நகரங்களை தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சி அளிக்கின்றது.
வேற்று கிரக விண்கலப் பெண்ணின் "மியாவ்" மொழி
வேற்று கிரக விண்கலம் ஒன்றில் இருந்து ஒரு பெண் பூனையின் குரலை போல "மியாவ்" என்று பேசியதை தான் கேட்டதாக ரஷ்யாவின் சைபீரியா பகுதியை சேர்ந்த வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் பனி பிரதேசமான சைபீரியா அருகே உள்ள நகரம் யாகுட்ஸ்க். இங்குள்ள விமான நிலைய கட்டுப்பாட்டறையில் ஒரு போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணியில் இருந்த போது கண்காணிப்பு திரையில் வேற்று கிரக விண்கலம் ஒன்று திடீரென தோன்றியதை பார்த்தார்.
அந்த விண்கலம் 6,000 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் பறந்து வந்தது. கடல் மட்டத்தில் இருந்து 64 ஆயிரத்து 895 அடி உயரத்தில் காணப்பட்டது. வேற்று கிரக விண்கலம் திடீரென ஊடுருவியதால் அந்த நேரத்தில் மற்ற விமானங்களுடன் தொடர்பு கொள்வதில் தடை ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த விண்கலத்துடன் தொடர்பு கொண்டு பேச வான்வெளி கட்டுப்பாட்டாளர் முயற்சி செய்தார். அப்போது அந்த விண்கலத்தில் இருந்து ஒரு பெண் பேசினார். அப்பெண் பேசியது ஒரு பூனையின் மொழி போல் இருந்தது. பின் திடீரென அந்த விண்கலம் தன் திசையை மாற்றி கொண்டு கண்காணிப்பு திரையில் இருந்து மறைந்து விட்டது.இது குறித்து வான்வெளி கட்டுப்பாட்டாளர் கூறுகையில்,"விண்கலத்தில் இருந்து வந்த சப்தம் பெண்ணின் குரல் போல் இருந்தது. அந்த சப்தம் பூனையின் "மியாவ்" என்பதை போல தொடர்ந்து வந்து கொண்டிருந்தது" என்றார்.
பொதுவாக விமானம் பறக்கும் போது வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாடு எச்சரிக்கை கருவியின் திரையில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் எண் தெரியும்.ஆனால் வேற்று கிரக விண்கலம் பறந்த அந்த நேரத்தில் வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டு எச்சரிக்கை கருவி திரையில் "00000" என்ற எண்ணே தொடர்ந்து வந்ததாக அவர் கூறினார்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய 99வது ஆண்டு தினம் அனுசரிப்பு.
இங்கிலாந்துக்கு சொந்தமான பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவத்தின் 99ம் ஆண்டு நினைவு தினம் அமெரிக்க கடற்படை சார்பில் அனுசரிக்கப்பட்டது.டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சர்வதேச கடல் ரோந்துப் படையினர் தெற்கு அட்லான்டிக் கடலின் நியூபவுண்ட்லாந்து பகுதியில் மலர் வளையங்களை நீரில் இறக்கினர்.
டைட்டானிக் மூழ்கிய சம்பவத்தையடுத்து கடலில் உள்ள பனிப்பாறைகளை கண்காணிக்கும் வகையில் சர்வதேச கடற்பகுதியில் லண்டனை சேர்ந்த படைப்பிரிவினர் ரோந்து நடவடிக்கைகளை இப்போதும் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 1912ம் வருடம் ஏப்ரல் 15ம் திகதி லண்டனிலிருந்து புறப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. இதில் அந்தக் கப்பலில் பயணம் செய்த 1522 பேர் இறந்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF