Thursday, April 14, 2011

இன்றைய செய்திகள்.

ஐ.பி.எல் விளையாடும் இலங்கை வீரர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு!
இந்தியா ஐ.பி.எ போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை அணி வீரர்களைஉடனடியாக நாடுதிரும்புமாறு இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு 63 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளதால்.இதற்கான ஆயத்த பயிற்சிகளில் இலங்கை அணி வீரர்கள் பங்குபெற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், இதனால் உடனடியாக ஐ.பி.எல் விளையாடிவரும் இலங்கை வீரர்களை நாடுதிரும்புமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவித்துள்ளார்.
டெக்கான் சார்ஜஸ் அணிக்கு குமார் சங்ககார மற்றும் கொச்சி அணிக்கு மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் கேப்டனாக செயற்பட்டு வருவதுடன், டில்ஷான், மாலிங்க, முரளிதரன் மேலும் பல இலங்கை கிர்க்கெட் வீரர்கள் ஐ.பி.எல் இல் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.மே 11ம் திகதி இங்கிலாந்துடனான போட்டி ஆரம்பமாகவுள்ளதால், மே 5ம் திகதிக்குள் அனைத்து வீரர்களும் இலங்கையில் இருக்க வேண்டுமென, சிறீலங்கா கிரிக்கெட் சேர்மென் டி.எஸ்.டி.சில்வாவும் தெரிவித்துள்ளார்.

இவ் அறிவிப்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும் பிரச்சினை இல்லை. முதலில் இலங்கை அணியை வளப்படுத்த கவனமெடுங்கள். பிறகு ஏனைய பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றுவது பற்றி பார்க்கலாம் என சிறிலங்கா கிரிக்கெட் சபை செயலாளர் நிசானந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த உலக கோப்பை போட்டிகளின் போது இறுதிப்போட்டியை காண இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளை இந்திய அரசு சரிவர கவனிக்கவில்லை என முன்னதாக இலங்கை அரசு சார்பில் அதிருப்தி எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண போட்டிகளால் இலங்கைக்கு 250 கோடி ரூபா கடன் சுமை.
உலகக் கிண்ண போட்டிகளின் அரங்குகளுக்கான செலவு அதிகரித்ததால், தான் 250 கோடி ரூபா கடனில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
'உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக இரு அரங்குகளை புதிதாக நிர்மாணிக்கவும் மற்றொரு அரங்கை புனரமைக்கவும் பெருந்தொகை பணத்தை நாம் செலவு செய்தோம். உலகக் கிண்ணப் போட்டிகளால் எமக்கு 250 கோடி ரூபா (சுமார் 22.6 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது' என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
'மேற்படி 3 அரங்களுக்காக சுமார் 500 கோடி ரூபாவை நாம் செலவிட்டோம். எதிர்வரும் சுற்றுப் போட்டிகளுக்கான வருமானத்துடன் புதிய அரங்குகளை நிர்மாணிப்பதற்கு ஐ.சி.சி. எம்மை நிர்பந்தித்தது' என அவர் கூறினார்.அதேவேளை, 'நாம் தீவிரமான பணப்பிரச்சினையில் இருக்கவில்லை. புதிய அரங்குகளுக்கு அதிக செலவாகியது. இதை இவ்விளையாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கான முதலீடாக நோக்க வேண்டும்' என அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட், இலங்கை வங்கியிடமிருந்து 21.5 மில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளதாகவும் ஐ.சி.சியிடமிருந்து 3.5 மில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி இவ்வருடம் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது. அடுத்த வருடம் டுவென்ரி 20 உலக சம்பியன்ஷிப் போட்டிகளையும் இலங்கை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து நடவடிக்கை- அமெரிக்கா
பாகிஸ்தானில் இயங்கி வருகின்ற லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்த, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, ஏ.என்.ஐ இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.அமெரிக்க பசுபிக் பிராந்திய பாதுகாப்பு தலைவர் அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் இதனை தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளில் லஸ்கர் ஈ தொய்பா அமைப்பின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த அந்த நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா அறிக்கை மஹிந்தவிடம் ஒப்படைப்பு - பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படமாட்டாது
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த எட்டு மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவானது தற்போது அதன் இறுதி அறிக்கையை தயாரித்து முடித்து சற்றுமுன்னர் சமர்ப்பித்துள்ளது.
இதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். மூவர் அடங்கிய இந்த நிபுணர்கள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்றைய தினம் பான் கீ மூனிடம் இதை ஒப்படைத்துள்ளது.
குறித்த நிபுணர் குழு இலங்கைக்கு செல்லாத போதும் பொதுவான விடயங்களைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொது செயலாளரின் பிரதிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே நிபுணர் குழுவை பொதுச் செயலாளர் சந்தித்துள்ளார் என பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை பான் கீ மூன், மிக அவதானமாக நோக்கியதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் நாட்களில் ஆராய்வார் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.எவ்வாறெனினும் இதன் ஒரு பிரதியை அவர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார், இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
நிபுணர்கள் குழு, கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில், இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி தருஸ்மன், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.அத்துடன் இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்கதான சமாதான சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதற்கு முன் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய - பசிபிக் வலயப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரீபி மேற்குறித்தவாறான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவானது இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தயாரித்துள்ள விசாரணை அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு இலங்கை மக்களுக்கும் உள்ளதால் அதனைப் பகிரங்கப்படுத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கை மூலம் மேலும்  கேட்டுக் கொண்டுள்ளார்.

தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 350 பேர் அமெரிக்க விமானங்களில் பயணம் செய்ய தடை!

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந் நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2009-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று நைஜீரியாவில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு வந்த விமானத்தை குண்டு வைத்து தகர்க்க அல்-கொய்தா தீவிரவாதி முயற்சி செய்தான். 

இதை தொடர்ந்து அமெரிக்க விமானங்களில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டது. அமெரிக்காவுக்கு புறப்பட்டு வரும் மற்ற நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்பவர்கள், ஹமாஸ், லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெறுபவர்கள் போன்றவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். 

பயணிகள் குறித்த விவரங்களை கடுமையான விசாரணையின் மூலம் தெரிந்த பிறகே அவர்களை விமானத்தில் ஏற அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். இதை மீறி பயணம் செய்தாலும், சந்தேகத்திற்குரிய நபர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிப்பதில்லை. இதற்கான சட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது. 

இச்சட்டத்தின் படி மேற்கண்ட கடுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட 350 பேர் அமெரிக்க விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப் படவில்லை. தீவிரவாத குழுக்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முபாரக் குடும்பம் கூண்டோடு தடுப்புக்காவலில் : இராணுவ அரசு அதிரடி

எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து பதவிவிலக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடையஇரு மகன்களையும் 15 நாள் தடுப்புக்காவலில் வைத்து, இலஞ்ச ஊழல் தொடரான விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவ அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பில், குற்றப்பிரிவினர் பேஸ்புக் இணையத்தளத்தில் இன்று (புதன் கிழமை) அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய புதல்வர்கள் காமல், ஆலா ஆகிய இருவரையும் எதிர்வரும் 15ம் நாட்களுக்கு, குற்றப்பிரிவினர் விசாரணை நடத்துவர் எனவும், குற்றப்பிரிவின் ஜெனரலும் இதில் கலந்துகொள்கிறார் எனவும் இவ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியமை, பாரிய லஞ்ச ஊழல் மோசடி செய்தமை என்பது தொடர்பில் இவ்விசாரணைகள் நடத்தப்படுகின்றன.இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், முபாரக்கின் இரு மகன்களான காமல், மற்றும் ஆலா ஆகியோர்கள், போலீஸ் வானில் வந்த காவற்துறை அதிகாரிகளினால் திடீர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அங்கியிருந்த 2000 ற்கு மேற்பட்ட அவர்களுடைய ஆதரவாளர்கள், போலீஸ் வாகனத்தின் மீது தண்ணீர் போத்தல்கள், கற்கள் என்பவற்றை வீசி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். உங்கள் மீதான எந்தவொரு விசாரணையும் 15 நாட்களுக்கு தான் என மேஜர் ஜெனரல் மொஹ்மட் எல் கதிப், முபாரக்கின் புதல்வர்களிடம் கூறி அவர்களை அழைத்து சென்றார்.இதேவேளை விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் முபாரக்கிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எகிப்திய புரட்சியை ஒடுக்குவதற்காக, முபாரக்கின் கட்டளைக்கு ஏற்ப, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் சுமார் 800 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யபப்ட்டது தொடர்பில் அவர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.
அமெரிக்கா மீது போர் நடத்தப் போவதாக "லஷ்கர்" அமைப்பு அறிவிப்பு 
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தோய்பா அமெரிக்கா மீது புனிதப் போர் நடத்தவிருப்பதாக அமெரிக்க ராணுவ கமொண்டர் ஒருவர் தெரிவித்தார்.மேலும் இத்திட்டத்தை ஐரோப்பா மற்றும் இதர கண்டங்களுக்கும் விரிவுபடுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக லஷ்கர் அமைப்பை அமெரிக்கப் படைகளின் தலைவரான அட்மிரல் ராபர்ட் வில்லியர்ட் விமர்சித்தார்.
இத்துடன் ஐரோப்பா, பரந்துபட்ட ஆசியா பசிபிக், கனடா மற்றும் வாஷிங்டனிலும் லஷ்கர் அமைப்பு தோன்றி உள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகத் தெரிவித்தார்.
காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படைகளை கொரில்லா போர் மூலம் வீழ்த்துவதற்காக 20 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பினரால் லஷ்கர் இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்தது.லஷ்கர் அமைப்பினர் 2008ம் ஆண்டு மும்பையில் நடத்திய கொடூர தாக்குதலில் அமெரிக்கர்கள், வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
லிபிய பிரச்சனை: தீர்வுக்குழு கத்தாரில் இன்று கூடுகிறது
லிபியாவில் நிலவும் உள்நாட்டு போராட்டத்திற்கு தீர்வு காண முயற்சிக்கும் சர்வதேச பிரதிநிதிக் குழு கத்தாரில் இன்று கூடுகிறது.லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக கடாபி சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக புரட்சி போராட்டம் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
லிபிய பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பும் சர்வதேச பிரதிநிதிக் குழு கத்தாரில் கூடுகிறது. இந்தக்குழு லிபியா புரட்சி போராட்டத் தலைவர்களை சந்தித்து பேசுகிறது. லிபியாவில் நேட்டோ படைகள் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அயல்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கு நேட்டோ ஜெனரல் கூறுகையில்,"லிபியாவில் தங்களது துருப்புகள் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றனர்" என கூறினார். லிபியாவில் புரட்சியாளர்கள் வசம் இருந்த மிஸ்ரட்டா நகரில் மனித உரிமை மீறல் கடுமையாக உள்ளது. அங்கு கடாபி துருப்புகள் புதிய தாக்குதல்களை தொடர்ந்துள்ளன.
மிஸ்ரட்டா நகரில் உணவுத் தட்டுப்பாடு காணப்படுகிறது. மருந்துப்பொருட்களும் போதிய அளவு இல்லை. இதனால் அங்கு வசிப்பவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மனித உரிமை மீறப்படுகிறது என மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ளது.
ஜப்பானில் சுனாமி தாக்கி 4வாரங்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட வயோதிபர்.
ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி பேரலை தாக்கி 4 வாரங்கள் ஆகியது.பின், சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட அனர்த்த வலயத்திலுள்ள வீடொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து 75 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குனியோ ஷிகா என்ற விவசாயியே இவ்வாறு தனது இடிந்த பண்ணை வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது பண்ணை வீடானது புகுஷிமா அணுசக்தி நிலையத்தை சுற்றிவர மக்களை வெளியேறப் பணிக்கப்பட்ட 20 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 11 ஆம் திகதி சுனாமி தாக்கியதையடுத்து சரிந்து விழுந்த மரங்கள், இறந்த பன்றிகள், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் சூழ்ந்து காணப்பட்ட இடிந்த வீட்டுக்குள் வெளியேற முடியாத நிலையில் குனியோ ஷிகா சிக்கிக் கொண்டார்.
மின்சாரமோ குடிநீரோ அற்ற நிலையில் வீட்டில் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்த உணவுகளை உண்டும் மென்பானங்களை அருந்தியும் அவர் உயிர் வாழ்ந்துள்ளார். அத்துடன் மிகலங்களால் இயக்கப்பட்ட வானொலி மூலம் அவர் ஒலிபரப்புகளை செவிமடுத்து வந்துள்ளார்.
சுனாமி அனர்த்தத்தின் போது அவரது மனைவி காணாமல் போயுள்ளார். புகுஷிமா அணுசக்தி நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதாக எச்சரிக்கப்பட்டதையடுத்து குனியோ ஷிகாவின் வீட்டின் அருகில் குடியிருந்து சுனாமி அனர்த்தத்தில் உயிர் தப்பிய அயலவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்ததால் வீட்டில் தன்னந்தனியாக சிக்கியிருந்த குனியா ஷிகாவின் நிலையை எவரும் அறிய முடியாது போனது.
“சுனாமி எமது வீட்டை தாக்கிய போது எனது மனைவி இங்கே இருந்தார். அதன் பின் அவரைக் காணவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது என எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறினார். சுனாமியையடுத்து இருளிலேயே பொழுதை அவர் கழித்துள்ளார். தன்னால் நடக்க முடியாததால் சேதமடைந்த வீட்டிலிருந்து வெளியேற முடியாது சிரமப்பட்டதாக தெரிவித்த குனியோ ஷிகா, தான் இருப்பது எவருக்குமே தெரியாமல் உயிரிழந்து விட நேரிடுமோ என அஞ்சியதாக கூறினார்.
இந்நிலையில் அவரை மினாமி ஸோமா நகரிலுள்ள அவரது இடிந்த வீட்டிலிருந்து பொலிஸார் வெளியேற்ற முயன்ற போது, அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். “”எனக்கு வயதாகிவிட்டது. தான் இங்கிருந்து சென்றால் யார் என்னைக் கவனித்துக் கொள்வார்கள்” என தெரிவித்து முரண்டு பிடித்த அவரை பொலிஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றி அகதிகள் முகாமொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஊழல் விசாரணையில் முபாரக் மகன்கள் கைது.
ஊழல் மற்றும் வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.முபாரக்கின் மகன்கள் அலா மற்றும் கமால் விசாரணைக்காக முதலில் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.ஹோஸ்னி முபாரக்கிற்கு பின்னர் எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக இளைய மகன் கமால் பொறுப்பேற்பார் என கூறப்பட்டு வந்தது. ஹோஸ்னி முபாரக்கிடமும் விசாரணை நடந்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முபாரக் மகன்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் வேனில் கொண்டு செல்லும் போது 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் வாகனம் மீது கல்வீசினர். இவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தை தெற்கு சினாய் மாகாண பாதுகாப்பு தலைவர் ஜெனரல் முகமது எல் காதிப் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த மக்களிடம் அறிவித்தார்.
முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சியின் போது நடந்த கொலைகள் குறித்து மகன்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கைது ஆன விவரம் அரசு தொலைக்காட்சியிலும் தெரிவிக்கப்பட்டது.
பி.பி.சியின் உலகச்சேவை பாதுகாக்கப்பட வேண்டும்: பிரிட்டன்
செலவின ரத்து நடவடிக்கையில் இருந்து உலக புகழ்பெற்ற பி.பி.சி ஒலிபரப்பு சேவை பாதுகாக்கப்பட வேண்டும் என அயல்துறை விவகார தேர்வு கமிட்டி கூறியுள்ளது.பி.பி.சி ஒலிபரப்பு சேவை கடந்த 79 ஆண்டுகளாக உலக அளவில் தனது சேவையை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது. உலகின் மிகப்பெரும் சர்வதேச ஒலிபரப்பு நிறுவனமாக பி.பி.சி திகழ்கிறது.
அயல் விவகார தேர்வு கமிட்டி தலைவர் ரிச்சர்டு ஒட்டாவே கூறுகையில்,"பிரிட்டனின் புகழை உலகம் முழுவதும் பி.பி.சி கொண்டு செல்கிறது. பி.பி.சியின் செய்திச் சேவை நம்பகத்தன்மை வாய்ந்த்தாகவும், போற்றக்கூடியதாகவும் உள்ளது" என்றார்.
பி.பி.சி உலக சேவையில் ஒரு ஆண்டிற்கான 237 மில்லியன் பவுண்ட் பட்ஜெட்டில் 16 சதவீதத்தை அரசு ரத்து செய்துள்ளது. 2014ம் ஆண்டு முதல் உரிமம் மூலம் நிதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய செலவின ரத்து நடவடிக்கை அவசியமானது. முந்திய தொழிலாளர் அரசு ஏற்படுத்திய நிதிப்பற்றாக்குறைய சரி செய்ய இந்த செலவின ரத்து நடவடிக்கை அவசியம் என கூட்டணி கட்சிகள் கூறுகின்றன.
செலவின ரத்து நடவடிக்கையால் பி.பி.சி அயல் மொழிச் சேவையான போர்ச்சுக்கல், கரீபியன் இங்கிலீஷ், மாசிடோனியன், செர்பியன் மற்றும் அல்பேனியா சேவைகளை நிறுத்துகிறது. இதனால் 3 கோடி நேயர்கள் பி.பி.சி சேவை இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.உலக அளவில் பி.பி.சிக்கு 18 கோடி நேயர்கள் உள்ளனர். இதில் ஆறில் ஒருபங்கு நேயர்கள் இந்த செலவின ரத்து நடவடிக்கையால் பாதிக்கப்படுகின்றனர். பி.பி.சியில் 240 ஊழியர்கள் உள்ளனர். இதில் 650 பேர் வேலை இழக்கிறார்கள்.
ஐவரிகோஸ்ட்டில் பிரான்ஸ் படையெடுப்பு: காக்போ ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
சிறப்பு துருப்புகளை முறைகேடாக பயன்படுத்தி ஜவரிகோஸ்ட்டை பிரான்ஸ் கைப்பற்றி உள்ளது என லாரண்ட் காக்போ செய்தித் தொடர்பாளர் குற்றம் சாற்றியுள்ளார்.
காக்போ ஆதரவாளர்களின் இந்த குற்றச்சாட்டை பிரான்ஸ் நிராகரித்தது. முன்னாள் காலனி ஆதிக்கப் பகுதியான ஐவரிகோஸ்ட்டிற்கு 40 கோடி டொலர் உதவியை அளித்துள்ளதாக பாரிஸ் கூறியுள்ளது.ஐவரிகோஸ்ட்டில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அலசானே குவாட்டாரா அதிகாரப் பூர்வமாக வெற்றி பெற்றார். இருப்பினும் ஜனாதிபதி பதவியில் இருந்த லாரண்ட் காக்போ பதவி விலக மறுத்து வந்தார்.
இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் ஐ.நா துருப்புகள் ஐவரிகோஸ்ட்டில் முகாமிட்டு காக்போவை சிறை பிடித்தனர். பின்னர் ஜனாதிபதியான அலசானே கோல்ப் ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.காக்போவின் செய்தித் தொடர்பாளர் அலய்ன் தவுசியன்ட் பாரிசில் உள்ளார். பிரான்ஸ் சிறப்புத் துருப்புகளால் காக்போ கைது செய்யப்பட்ட விவரத்தை அவர் தெரிவித்தார்.
"ஐவரிகோஸ்ட்டில் நிலைமை சீராக வேண்டும் என்றே அங்கு சென்றோம். ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி இல்லத்திற்குள் ஒரு வீரர் கூட நுழையவில்லை" என பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலன் எம்.பிக்களிடம் கூறினார்.
ஐவரிகோஸ்டில் நடந்த கலவரம் முடிவுக்கு வந்துவிட்டது.
ஐவரிகோஸ்ட் அதிபர் லாரன் பேக்போ எதிர்த் தரப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பின், மக்களிடையே உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் அலசான் வட்டாரா நாடு அமைதிக்கு திரும்பும்படி கேட்டுக் கொண்டார்.
இதனால் கடந்த நான்கு மாதங்களாக அந்நாட்டில் இழுபறியில் இருந்த உள்நாட்டு விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அலசான் வட்டாரா வெற்றி பெற்றார்.ஆனால் அதிபராக இருந்த லாரன் பேக்போ பதவி விலக மறுத்து விட்டார். இதனால் பேக்போ மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. நான்கு மாதங்களாக பிரச்னை இழுபறியில் இருந்து கொண்டிருந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் வட்டாராவின் படைகள் தலைநகர் அபிட்ஜானுக்குள் நுழைந்தன.
பேக்போ ஆதரவுப் படைகளுக்கும், வட்டாரா படைகளுக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. பேக்போ படைகள் ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதால், ஐ.நாவும் அதற்கு ஆதரவாக பிரான்சும் போரில் குதித்தன. தற்காப்புக்காக தான் மோதல் நடக்கிறது என்று ஐ.நா சமாதானம் கூறியது.
நேற்று முன்தினம் பேக்போவின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த வட்டாரா படைகள், பேக்போ, அவரது மனைவி, மகன் மிக்கேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரை அதிரடியாக கைது செய்தன. இக்காட்சிகள் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
பேக்போ கைதானதை அமெரிக்கா மற்றும் ஐ.நா வரவேற்றுள்ளன. தொடர்ந்து நேற்று தனக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஒன்றில் மக்களிடையே உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் வட்டாரா தனது ஆதரவாளர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், நாட்டில் அமைதி மீண்டும் மலர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.பேக்போ மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நேரிய வழியில் விரைவில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். எனினும் அபிட்ஜானில் நேற்றும் துப்பாக்கிச் சத்தம் கேட்டபடி இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஐவரி கோஸ்ட் விவகாரம் முடிந்து விட்டது போலத் தோன்றினாலும் இன்னும் சில நாட்களில் வட்டாராவும், அவரது ஆதரவுப் படைகளும் நடந்து கொள்வதைப் பொருத்து தான் அங்கு உள்நாட்டுப் போர் மூளுமா அல்லது தவிர்க்கப்படுமா என்று சொல்ல முடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பேக்போ ஆதரவாளர்கள் மீது வட்டாரா ஆதரவாளர்கள் பழிக்குப் பழி தாக்குதல் நடத்தாமல் இருந்தால் அந்நாட்டில் மீண்டும் அமைதி திரும்பும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக நடந்த இருதரப்பு மோதல்களில் இதுவரை 1,000 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்றும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறி இருக்கக் கூடும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.
லிபியா மீது தாக்குதல்: நேட்டோ படைகள் இடையே பிளவு
லிபியா மீது அமெரிக்க நேச நாடுகளின் அமைப்பான "நேட்டோ படைகள்" எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பிரான்ஸ் குறை கூறியிருக்கிறது. 
இதனால் லிபியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் மேற்கத்திய நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலன் ஜூப் நேட்டோ நடவடிக்கைகள் குறித்து இவ்வாறு கூறியதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆலன் ஜூப் தெரிவித்திருப்பதாவது: நேட்டோ தனது பங்களிப்பை கடமையை முழுமையாகச் செய்ய வேண்டும். லிபியா தாக்குதலுக்கு நேட்டோ தலைமை தாங்க விரும்பியது. ஆனால் இப்போது அது எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என அவர் கூறினார்.
கடாபி தொடர்ந்து தனது ராணுவ பலத்தைக் காட்டி வருகிறார். பீரங்கிகளைக் கொண்டு கிழக்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களைக் கடுமையாகத் தாக்கி வருகிறார். நேட்டோ படைகளின் விமானப்படைத் தாக்குதலையும் மீறி கடாபியின் படைகள் கிளர்ச்சியாளர்களை அடக்கி வருகின்றன.
இந்நிலையில் லிபியா மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் அந்நாடு பிளவுபட்டு விடக்கூடாது என முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் முசா குசா கூறியுள்ளார். லிபியாவில் கிளர்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே இவர் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார்.
லிபியாவில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து அமைதி திரும்ப வேண்டுமானால் அந்நாடு பிளவுபடாமல் ஒற்றுமையுடன் இருப்பது மிக அவசியம். உள்நாட்டுப் போர் நடக்குமானால் பலத்த உயிரிழப்புகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
செர்னோபில் போல அணுக்கசிவு: மிகவும் மோசமான நிலையில் ஜப்பான்
ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக் கதிர்வீச்சின் அளவை உலகில் உச்சபட்ச அளவான "7 " என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இது செர்னோபிளில் நடந்த அணு உலை விபத்தோடு சமமான அளவாகும். இந்நிலையில் புகுஷிமா அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் 11ம் திகதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின் உலைகளில் தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படத் துவங்கியது.
கடந்த ஒரு மாத காலமாக அந்த உலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஜப்பான் அரசு போராடியும் பயன் எதுவும் கிட்டவில்லை. உலைகளில் ஏற்பட்டுள்ள வெப்பத்தைக் குறைக்கும் முயற்சி கூட இன்னும் வெற்றி பெறவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உலைகளில் வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஹைட்ரஜன் வாயு உருவாகி அதனால் வெடிவிபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் மேலும் நடக்காமல் இருக்க உலைகளுக்குள் நைட்ரஜன் வாயு செலுத்தும் முயற்சி இடையில் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து உலைகளில் உள்ள கதிர்வீச்சு கலந்த நீரை கடலில் கொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் அந்தப் பணியும் நிறுத்தப்பட்டது. இதனால் இன்னும் 10 ஆண்டுகளில் உலைகளை ஒன்றன் பின் ஒன்றாக மூடி விடும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நான்கு அணு உலைகளிலும் ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி பிரதிநிதிகள் நடத்திய ஆய்வில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான அளவில் கதிர்வீச்சு வெளியாகி வருவது கண்டறியப்பட்டது.
அளவு அதிகரிப்பு: ஏற்கனவே கதிர்வீச்சு விபத்து பற்றிய அளவு 4ல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலவரம் மிகவும் மோசமான கதியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.இதனால் அணுக் கதிர்வீச்சுப் பேரிடர் சம்பவத்தை உச்சபட்ச அளவான 7 ஆக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. கடந்த 1986ல் முந்தைய ரஷ்யாவும் தற்போது உக்ரைன் நாட்டில் செர்னோபிள் என்ற இடத்தில் இருந்த அணு உலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்திற்கு மட்டும் தான் 7ம் அளவு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜப்பானிலும் இந்த 7ம் அளவு பிறப்பிக்கட்டிருப்பதால் அது உலகின் மிகப் பெரும் அணுக் கதிர்வீச்சுப் பேரிடர் விபத்து என்பதும், அதனால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதும் திட்டவட்டமாகிவிட்டது. ஆனால் பிரதமர் நவோட்டோ கான் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் கதிர்வீச்சின் அளவு குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கதிர்வீச்சால் இதுவரை யாரும் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய 21 ஊழியர்கள் மட்டும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சரவை தலைமைச் செயலர் யுகினோ எடானோ கூறியுள்ளார்.
எகிப்து மாஜி அதிபர் முபாரக்கிற்கு திடீர் மாரடைப்பு: ஜேர்மனிக்கு கொண்டு செல்ல அரசு மறுப்பு
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் இருதய நோயால் அவதிப்பட்டு வருகிறார்.எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த முபாரக் எதிர்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக பதவி விலகினார்.இந்நிலையில் முபாரக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது இரு மகன்களான ஆலா மற்றும் கமல் ஆகியோர் தற்காலிக அரசிடம் தங்களது தந்தையை ஜேர்மனி நாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டனர்.
இதற்கு அனுமதி தர இடைக்கால அரசு மறுத்துவிட்டது. இதனையடுத்து எகிப்து அதிபர் கெய்ரோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அதிபரின் மனைவி மற்றும் மகன்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF