Saturday, April 2, 2011

இன்றைய செய்திகள்.

தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து சிங்கள சகோதரர்களுடனான சகவாழ்வை உறுதிப்படுத்துவதே எனது நோக்கம்!- மனோ கணேசன்


இலங்கையின் தலைநகரத்திலே தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் தனித்துவங்களை உறுதிப்படுத்தி சிங்கள சகோதரர்களுடனான சமத்துவ சகவாழ்வையும், ஐக்கியத்தையும் உறுதிப்படுத்துவதே தமது நோக்கமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய தலைநகரமான கொழும்பு மாநகரத்தின் அரசியல் நடைமுறை, மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு ஆகிய தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பிராந்தியங்களில் நிலவும் யதார்த்தங்களிலிருந்து மாறுபட்டதாகும். இதை ஜனநாயக மக்கள் முன்னணி மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றது.
இதை மறந்துவிட்டு பொறுப்பற்ற ரீதியில் அரசியல் முன்னெடுப்புகளை கொழும்பிலே நாங்கள் செய்வதில்லை. எங்களது மக்களுக்கு துன்பம் நிகழ்கின்றபோதெல்லாம் கொழும்பிலே நாங்கள்தான் உரிமை போராட்டங்களை முன்னெடுத்து தேசிய, சர்வதேசிய கவனங்களை எங்கள் பக்கம் திருப்பினோம்.
அதேவேளையில் சகோதர இனத்தவர்களுடன் ஐக்கியமாக வாழ்கின்ற அனைத்து முயற்சிகளையும் நாம் எடுத்தும் வந்துள்ளோம். ஆகவே எங்களது இந்த இரட்டை நோக்கு கொள்கைக்கு முரண்படாத விதத்தில் எதிர்வரும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலை ஜனநாயக மக்கள் முன்னணி எதிர்கொள்ளும்.
கொழும்பு தேசிய தலைநகரம் என்ற காரணத்தினாலேயே, கொழும்பு மாநகரசபைத் தேர்தல் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதை நாம் தெளிவாக தெரிந்து வைத்துள்ளோம். நமது மக்களின் வாக்குகளை கடந்த காலங்களைப்போல எந்தவொரு பெரும்பான்மை கட்சிக்கும் நிபந்தனையில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழங்குவதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம்.எதிர்வரும் தேர்தலில் எமது முன்னணியின் சின்னமான ஏணி சின்னத்திலே போட்டியிட வேண்டும் என்ற கருத்து நமது கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் பொதுவான இணக்கப்பாட்டுடன் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் நேர்மையான கொள்கைகளை முன்னெடுக்கும் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் களமிறங்க வேண்டும் என விரும்புகின்றோம்.இது தொடர்பில் தற்சமயம் எனக்கும், இடதுசாரி முன்னணி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவிற்கும் இடையிலான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனும், சில பொதுப்பிரமுகர்களும் முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றார்கள்.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் இதுபற்றி அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் முஸ்லிம் சகோதரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
முற்போக்கு சிந்தனை கொண்ட பௌத்த மத குருமார்களின் அணி ஒன்றும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. முதன்மை வேட்பாளராக நான் போட்டியிடுவது பற்றி எமது கட்சியின் அரசியற்குழு தான் உரிய முடிவை உரிய நேரத்தில் எடுக்கவேண்டும்.
இந்நிலையில் தமிழ் மக்களை மாத்திரம் அணிதிரட்டி நமது கட்சி கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் நமது கட்சி தனித் தமிழ் அணியாக களமிறங்கப் போகின்றது என்ற கருத்து முழுவதும் சரியானது அல்ல.கொழும்பில் நிகழும் அரசியல் யதார்த்தங்களை கருத்தில் கொண்டே எமது முடிவுகள் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து பொறுப்புடன் எடுக்கப்படும். 

இலங்கை வெற்றி பெற திருப்பதியானிடம் வேண்டுதல் வைத்த மஹிந்தர்!

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என வேண்டுதல் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று திருப்பதியில் உள்ள வெங்கடாசலப்பெருமாள் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவுடன் சிறந்த நட்பு பேணப்பட வேண்டும் என்பதுடன் இலங்கையில் சமாதானமும் செழிப்பும் ஏற்பட வேண்டும் என வெங்கடாசலப்பெருமாள் ஆலயத்தில் வேண்டியதாக ஆலய தரிசனத்தின்பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணி வெற்றி பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவை பேணுவதற்கு என்னால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தமிழ் மக்களை குடியேற்றுவதில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகிறது என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

வெங்கடாசலப்பெருமாள் ஆலய நிறைவேற்று அதிகாரி ஐ.வை.ஆர்.கிருஷ்ணா ராவோ, திருமலைக்கான இணைந்த நிறைவேற்று அதிகாரி கே.பாஸ்கர் மற்றும் பிரதி நிறைவேற்று அதிகாரி லக்ஷ்மிகாந்தம் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆலயத்தில் வரவேற்பளித்தனர்.

மும்பை விமானநிலையத்தில் வரி செலுத்தப்படாததால் பறிமுதல் செய்யப்பட்ட உலகக் கிண்ணம்.
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்திற்கு வரி செலுத்த கோரி சுங்க உத்தியோகஸ்தர்கள் அக்கிண்ணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது:
கொழும்பில் நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து அரையிறுதிப் போட்டியின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இக் கிண்ணத்தை ஐ.சி.சி. அதிகாரிகள் கடந்த வியாழனன்று கொழும்பிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் தங்கம், மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட 130,000 டொலர் பெறுமதியான இக் கிண்ணத்திற்கு சுமார் 50,000 டொலர் வரி செலுத்த வேண்டும் என மும்பை விமான நிலையத்தில் இந்திய சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.வரி அறவிடப்படுவதை தவிர்க்க வேண்டுமானால் தமக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்' என ஐ.சி.சி. அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
ஆனால். உலகக் கிண்ண இறுதிப்போட்டி முடிவடையும்வரை சம்பியன் கிண்ணத்தை வைத்துக்கொள்ளுமாறும் அதன்பின் தாம் அதை துபாய்க்கு எடுத்துச் செல்வதாகவும் ஐ.சி.சி.அதிகாரிகள் கூறியபோது சுங்க உத்தியோகஸ்தர்கள் குழப்பமடைந்தனராம்.ஒரே மாதிரியான இரு சம்பியன் கிண்ணங்களை ஐ.சி.சி தயாரித்துள்ளது. அவற்றில் ஒன்று ஏற்கெனவே மும்பை வாங்கடே அரங்கில் உள்ளது. அதுவே வெற்றி பெறும் அணிக்கு பரிசாக வழங்கப்படும் என்பதை மேற்படி சுங்க உத்தியோகஸ்தர்கள் அறிந்திருக்கவில்லை.
லிபியக் கிளர்ச்சியில் அல்கைதாவின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லிபியக் கிளர்ச்சியாளர்கள் மத்தியில் அல்கைதா உறுப்பினர்களும் இருப்பதை கிளர்ச்சித் தலைவர் அப்துல் ஹக்கீம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் கடந்த 24 ம் திகதி அவர் இத்தாலியின் யோலே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தான் தற்கொலைக் குண்டுதாரிகளை வரவழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதனை நேட்டோ படையணிகளின் பிரதானி அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டோரியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அமெரிக்க புலனாய்வுத்துறை மூலம் அது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பி்ட்டுள்ளார்.
இது தவிரவும் 2008 ம் ஆண்டு திரிப்போலியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தூதரகம் ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பியிருந்த இரகசியத் தகவல் குறிப்பில் லிபியாவில் அல்கைதா இயக்கம் படுவேகத்தில் வளர்ச்சியடைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தது.
ராணுவத்தை ஒடுக்கினால் போர் நிறுத்தப்படும்: புரட்சியாளர்கள் அறிவிப்பு
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது பிடியில் பெங்காசி, மிஸ்ரதா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.ஏற்கனவே அவர்கள் வசம் இருந்த பிரகா, ரானுப் நகரங்கள் மீண்டும் கடாபி ராணுவத்தின் பிடியில் சிக்கியது. புரட்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதில் கூட்டுபடைகளும் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இருந்தும் மிஸ்ரதாவை மீண்டும் தங்கள் வசமாக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே லிபியாவுக்கான ஐ.நா சபை தூதர் அல் சாதிப் அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பெங்காசியில் உள்ள புரட்சியாளர்களின் இடைக்கால கண்காணிப்பு கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து இடைக்கால கண்காணிப்பு கவுன்சில் தலைவர் அப்துல் ஜலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: லிபியாவில் உள்ள நகரங்களிலும் அவற்றின் புறநகர் பகுதிகளிலும் நிறுத்தியுள்ள ராணுவத்தை கடாபி அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். கோரிக்கைகளுக்காக நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் போர் நிறுத்தம் செய்ய நாங்கள் தயார். அதற்கு முன்னதாக கடாபி அதிபர் பதவி விலக வேண்டும். மக்கள் விடுதலை தான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.
ஆப்கானில் ஐ.நா பணியாளர்கள் 20 பேர் படுகொலை.
ஆப்கானிஸ்தானில் சேவையில் ஈடுபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் 20 பணியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.வட ஆப்கான் நகரான மஷார் ஹீ சரீப் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பணியாளர்களில் ஐவர் நேபாளிகள் எனவும் மற்றையவர்கள் நோர்வே சுவீடன், ரஸ்யா, ரோமானியா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் உள்ள தேவாலயமொன்றில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் முகமாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை மேற்கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.இச்சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் இருவரின் தலைகளை வெட்டியும் மற்றையவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும் கொலை செய்துள்ளனர்.
கடாபி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: லிபிய அமைச்சர்
லிபிய அதிபர் கர்னல் கடாபி மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார் என அவருடன் நெருக்கமாக இருந்து பிரிட்டனுக்கு தப்பி வந்த முசா தெரிவித்தார்.லிபியாவில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ம் திகதி முதல் கர்னல் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க லிபிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அங்கு பொது மக்களை பாதுகாக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் விமானம் பறக்கத் தடை விதித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா துருப்புகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.கடாபியின் சர்வாதிகார நடவடிக்கையை பிடிக்காமல் அவருடன் பல காலம் நெருக்கமாக இருந்த முசா பிரிட்டனுக்கு தப்பி வந்துள்ளார். கடாபி அமைச்சரவையில் முசா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.
கடாபிக்கு மிக நெருக்கமாக உள்ளவர்கள் அவரை விலகத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும் கடாபி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.முசாவை பாரிஸ் நீதிமன்றத்தில் நிறுத்த பிரெஞ்சு நீதிபதிகள் விரும்புகின்றனர். 1989 ம் ஆண்டு சஜாரா பாலைவனத்தில் ஜெட் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெடிகுண்டு குற்றச்சாற்று தொடர்பாக முசாவை நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம்.
ஜேர்மனியில் மேற்கு ஈபிள் பிராந்தியத்தில் லாபெல்ட் அருகே நேற்று அமெரிக்க போர் விமானம் நொறுங்கி விழுந்தது.
விபத்தில் சிக்கிய விமான ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் அருகாமையில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்துக்குள்ளான விமானம் மெதுவாக நகரக்கூடிய ஏ-10 தண்டர் போல்ட் விமானம் ஆகும். உதவி விமானமாக பயன்படுத்தப்படும் இந்த போர் விமானத்தில் ஏவுகணைகள் ஏதும் இல்லை என பொலிஸ் தொடர்பாளர் தெரிவித்தார்.ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள வனப் பன்றிக்கு நீண்ட முகமும், முரட்டுத் தனமான பள்ளங்களும் காணப்படும். அதே போன்ற வடிவமைப்புடன் இந்த தண்டர்போல்ட் போர் விமான வடிவமைப்பு உள்ளது.
இந்த விமானத்திற்கு வார்தாக் என்ற பெயரும் உண்டு. ஆப்பிரிக்க வனபன்றி என தமிழில் கூறலாம். விமானம் விபத்துக்கு உள்ளான போது அதில் உள்ள பெரும் குழல் துப்பாக்கியில் 1100 ரவுண்ட் புல்லட்டுகள் இருந்தன.
லாபெல்ட் கிராமத்திற்கு 300 மீற்றர் தொலைவில் அமெரிக்கப் போர் விமானம் நொறுங்கிக் கிடந்தது. அங்கு தீயணைப்புத் துறையினரும், பொலிசாரும் விரைந்தார்கள்.500 பேர் கொண்ட அந்த கிராமப் பகுதியைச் சார்ந்த மேயர் கார்ல் ஜோசப் ஜங் கூறுகையில்,"மிக குறுகிய வித்தியாசத்தில் பெரும் சேதத்தை தவிர்த்துள்ளோம்" என்றார். யு.எஸ் போர் விமானத்தளம் ஸ்பான்டக்லம் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பயிற்சி விமானம் எதிர்பாராமல் விழுந்துள்ளது.
ஏமனில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்: பிரான்ஸ்
ஏமன் நாட்டில் அமைதியான அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அதே நேரத்தில் ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவை எதிர்த்து பல ஆயிரம் போராட்டக்காரர்கள் சானா நகரிலும், இதர முக்கிய நகரங்களிலும் எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.ஏமன் நாட்டில் கடந்த 2 மாதமாக ஆட்சியாளர்களுக்கு எதிராக தீவிரமான போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். புரட்சியாளர்களின் எதிர்ப்பை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள ஏமன் நிர்வாகம் உரிய மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அயல்துறை அமைச்சக பெர்னார்டு வாலரே கூறுகையில்,"அந்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுவதைத் தவிர வேறு நிலைக்கான வாய்ப்பு இல்லை" என்றார்.கடந்த பெப்ரவரி மாதம் முதல் அப்துல்லா சலே எதிர்ப்பாளர்கள் சானா பல்கலைகழகத்திற்கு அருகே முகாமிட்டுள்ளனர். அங்கு பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி அப்துல்லா சலே தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,"எனது மக்களுக்காக என்னைத் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக எனது ரத்தம் உள்பட அனைத்தையும் இழக்கத் தயாராக உள்ளேன்" என்று முழங்கினார்.ஏமன் நாட்டின் தெற்குப் பகுதியில் சலேவுக்கு எதிராக பெருந்திரளாக மக்கள் கூடி இருந்தனர். செங்கடலின் ஹொடிடா பகுதியில் மோதல் வெடித்தது. சலேவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து அமெரிக்க அச்சம் கொண்டுள்ளது.
தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நோட்டோ படையினர்.
ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படையினருக்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனத்துக்கு பாதுகாவலர்களாக பணியாற்றிய 3 பேரை தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.மேலும் இருவரை கடத்திச் சென்றுள்ளனர். ஆப்கனிஸ்தானில் சுமார் 1.5 லட்சம் நேட்டோ படையினர் அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் படையினருக்குத் தேவையான பொருள்கள் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பழங்குடிப் பகுதியின் வழியாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்தப் பகுதி வழியாகச் செல்லும் நேட்டோ வாகனங்கள் மீது தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி தகர்த்து வந்தனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த யாரும் நேட்டோ படையினருக்கு பொருள்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்களுக்கு ஓட்டுநர்களாக பணியாற்றக் கூடாது என்று அச்சுறுத்தியும் வந்தனர்.
இந்நிலையில் லந்தி கோத்தல் பகுதியில் உள்ள நேட்டோ வாகன நிலையத்தில் பாதுகாவலர்களாக இருந்த 3 பேரை பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை கொன்றுவிட்டனர். மேலும் 2 பாதுகாவலர்களை கடத்திச் சென்றுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையினருக்கு கொண்டு செல்லப்படும் பொருள்களில் 70 சதவீதம் பாகிஸ்தான் வழியாகத் தான் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள்.
அவசர நிலை பிரகடனத்தை விலக்கிக் கொள்ளாததைக் கண்டித்து சிரிய அதிபர் ஆஸாத்திற்கு எதிராக பேரணி நடத்துமாறு சிரியா கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.தாங்கள் வசிக்கும் ஊர்களில் உள்ள சதுக்கங்களில் கூடி அதிபருக்கு எதிராக போராட வேண்டும் என பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு "சிரியா புரட்சி 2011" எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 15 ம் திகதி தாரா நகரில் அதிபருக்கு எதிரான புரட்சியை பெயரிடப்படாத இயக்கம் தொடங்கியது. தற்போது கடற்கரை நகரமான லடாக்கியா வரை கிளர்ச்சி பரவியுள்ளது.11 ஆண்டுகாலமாக அதிபர் பதவி வசிக்கும் ஆஸாத்திற்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகாலமாக அவசர நிலை பிரகடனம் அமுலில் இருக்கும் சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்த மூன்று வாரங்களாக புரட்சியாளர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டமே: ஓமர் பின் லேடன்
9/11 உலக வர்த்தக மையத்தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டங்களில் ஒன்று என்பதாக ஒசாமா பின் லேடனின் மகன் ஒமர் பின் லேடன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிசினஸ் டுடே நாளிதழின் ஏப்ரல் மாத இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.உலகின் முதற்தர அச்சுறுத்தல் மிக்க நபரான ஒசாமா பின் லேடன் தனக்குப் பின் அல்குவைதா இயக்கத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஒமர் பின் லேடனின் பெயரைப் பரிந்துரைத்துள்ளதன் பின்புலத்தில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது.
தன்னுடைய தகப்பனுடான தொடர்புகள், அவருடைய செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் குறித்த தன்னுடைய நிலைப்பாடுகள் என்பன குறித்தும் அவர் மனம் திறந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.ஒசாமா பின் லேடன் எங்கிருக்கின்றார் என்ற கேள்விக்கு தன்னுடைய தகப்பன் இருக்கும் இடம் குறித்து தனக்குத் தெரியும். ஆனால் அதனை வெளியில் சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய தகப்பனின் மரணம் ஒன்றே அவருடைய செயற்பாடுகளை நிறுத்தும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். உலகம் என்ன தான் பின் லேடனின் பெயரை வெறுத்தாலும், மத்திய கிழக்கு நாடுகளில் அந்தப் பெயருக்கு ஒரு தனி மரியாதை இருப்பதாகவும் ஒமர் பின் லேடன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லிபிய தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா அல்லது சீனா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கலாம்: இத்தாலி
லிபியா மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா அல்லது சீனா அதன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இத்தாலி கருத்து வெளியிட்டுள்ளது.லிபியாவில்  வான்பறப்புத் தடை வலயத்தை அமுல்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு முன்மொழியப்பட்ட பிரேரணைக்கு எதிராக வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று இத்தாலியப் பாதுகாப்பு அமைச்சர் இக்னாசியோ லா ருஸ்ஸா(Ignazio La Russa)  வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த இத்தாலிய ஜனாதிபதி ஜோர்ஜியோ நாபொலிதானோவை கேலியாகவும் விமர்சித்துள்ளார். அத்துடன் ஐரோப்பிய யூனியனும் தாக்குதலுக்கு ஆதரவாக இருந்தாலும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.லிபியத் தாக்குதல் காரணமாக இத்தாலிக்கு தப்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதே இத்தாலியப் பாதுகாப்பு அமைச்சரின் கூற்றுக்கான காரணம் என்று அன்ஸா செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலிய தீவான லம்பெதூஸா தீவில் குவிந்துள்ள அகதிகளைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் தீவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் தற்போது ராஜினாமாச் செய்துள்ளனர்.அத்துடன் அகதிகளின் எண்ணிக்கை சடுதியில் அதிகரித்திருப்பதன் காரணமாக இத்தாலி கடும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
சிரியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: தாக்குதலுக்கான முன் ஆயத்தம்
சிரியாவில் இருக்கும் அமெரிக்கர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.லிபியா மீதான தாக்குதல்களை ஆரம்பிக்க முன்பும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதே போன்றதொரு அறிக்கையின் மூலம் லிபியாவில் இருந்த அமெரிக்கர்களை வெளியேறுமாறு கோரியிருந்தது.
அந்த வகையில் சிரியா மீதும் எதிர்வரும் நாட்களில் அமெரிக்கத் தாக்குதல் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதே நேரம் சிரியாவின் உள்நாட்டுக் கிளர்ச்சி தற்போதைக்கு கடும் தீவிரமடைந்து பெரும் போராக வெடிக்கும் அபாய கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை மேற்கொள்ள பிரிட்டனுக்கு விரையும் லிபிய தூதர்.
லிபியாவில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ம் திகதி முதல் சர்வாதிகார ஆட்சி நடத்தும் கர்னல் மோமர் கடாபிக்கு எதிராக புரட்சிப் போராட்டம் நடைபெறுகிறது.இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் கடாபி ராணுவத்தை ஒடுக்குவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சில் லிபியா வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதித்தது. இந்த தடையை நிறைவேற்ற பிரிட்டன், அமெரிக்கா, கனடா படைகள் லிபியாவில் வான் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் கடாபி அதிகாரம் பலவீனம் அடைந்துள்ளது.
கர்னல் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லம் கடாபியின் உதவியாளர் முகமது இஸ்மாயில் லண்டனுக்கு அவசர பயணம் மேற்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை.
கடந்த புதன்கிழமையன்று கடாபியின் நெருங்கிய உதவியாளரும், லிபிய அயல்துறை அமைச்சருமான மௌஸா கௌஸா வாடகை விமானம் மூலம் துனிஷியாவில் இருந்து லண்டனுக்கு பயணமானார்.இது குறித்து லிபிய அரசு செய்தித் தொடரபாளர் மவுசா இப்ராகிம் கூறுகையில்,"அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று அறிகிறோம்" என்றார்.
கடாபி ஆட்சியில் உள்ள 12 மூத்த அமைச்சர்கள் பதவி விலக தயாராக இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் செய்தித்தொடர்பாளர் முஸ்தபா கெரியானி கூறியதாவது: கடாபி ஆட்சி நொறுங்கி கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான ஓநாயைவிட காயம் அடைந்த ஓநாய் ஆபத்தானது என்றார்.மேலும் பதவி வெறி பிடித்த நாடுகள் லிபியா மீது தாக்குதலை நடத்துகின்றன என்று கர்னல் கடாபி குற்றம் சாற்றினார். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF