கைரேகையை ஆராய்வதற்காக புதிதாக ஆய்வு தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்ட் ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரையிலும் தடயப்பொருள்களில் காணப்படும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தே விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
இந்த நிலையில் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் விரலில் ஒட்டிக் கொள்ளும் பொருட்களின் நுண்ணிய துகள்களை கொண்டு அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி உடலில் சுரக்கும் திரவங்கள் தொடும் பொருள் மீது ஒட்டிக்கொள்வதாக கூறப்படுகிறது.
எனவே ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் புதிய ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.