ஜப்பானிய தூதரக வாகனம் இராணுவ ட்ரக்குடன் மோதியது; சாரதி பலி, ஐவர் காயம்.
கொழும்பு - கண்டி வீதியில் வரக்காபொலையில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஜப்பானிய தூதரக வாகனமொன்றின் சாரதி உயிரிழந்துடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
ஜெனீவாவில் இலங்கையை சிக்கவைக்க அமெரிக்கா முயற்சி! இலங்கை அச்சம் - சண்டே டைம்ஸ்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரின் போது அமெரிக்கா, இலங்கையை சிக்கவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. சண்டே ரைம்ஸ் செய்தித்தாள் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க 10 போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறி பிரவேசம்! இலங்கை கண்டனம்.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.
எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில்.
மன்னார் கடற்படுக்கையில் நேற்று எண்ணெய் ஆய்வினை ஆரம்பித்திருப்பதாகவும், இங்கு எண்ணெய் அகழ்வு சாத்தியப்படுமானால் எண்ணெய் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி விரைவாக குணமடைய ஜனாதிபதி வாழ்த்து.
அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் குணமடைந்துவரும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி விரைவாக குணமடைய வாழ்த்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சேரி மக்களை வெளியேற்றும் அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்!- ரணில் ஆவேசம்.
பொன்சேகாவை விடுவிக்கக் கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் நாளை ஆர்ப்பாட்டம்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு எதிரில் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒசாமாவை கொன்ற அமெரிக்க வீரர்கள் 20 பேர் பலி: ஒபாமா அதிர்ச்சி.
ஆப்கனில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை அழித்து மீண்டும் அமைதியை கொண்டுவர நேட்டோ படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் சிறையில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 3 பொலிசார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கன் ஹிலா நகரில் மத்திய சிறை உள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேர் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
சோமாலியா தலைநகர் மொகாதிஷீவில் இருந்து அல்சகாபாப் தீவிரவாதிகள் வெளியேறினர்.
சவுதி அரேபியாவின் இளவரசர் நயீப்பின் அப்துல் அசிஷ். இவர் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார். ஜெட்டாவில் உள்ள அரண்மனையில் இவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
வடக்கு லண்டனில் உள்ள டாட்டன் ஹாமில் 3 பொலிஸ் கார்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பேருந்து மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் சலே அரண்மனையில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக சவுதி அரேபியா சென்றார்.
இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்ள விரும்பும் முதல் நபராக இளவரசர் ஹாரி உள்ளார்.
இஸ்ரேலில் விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் அதிருப்தி அடைந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.
பிரான்சின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே(55) தற்போது சர்வதேச நிதியத்தின் தலைவராக உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ரமலான் நோன்பு நாளில் பகலில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் 3 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெருகவும், பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி பெருகவும், உற்பத்தி நடவடிக்கைகள் முழுவேகம் பெறவும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அரசுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்றார் அதிபர் ஒபாமா.
பாகிஸ்தானில் பள்ளிக் கட்டடத்தை தலிபான் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து தகர்த்தனர்.
வளைகுடா நாடான யு.ஏ.ஐ நாட்டின் அபுதாபியில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது.
ஆசியாவின் மிகவும் நீளமான தந்தம் கொண்ட யானை மிலிங்கோடா ராஜா(70) நேற்று உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இலங்கையில் இறந்தது.
ஜேர்மனி விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஊழியர்கள் இந்த வாரம் ஒருநாள் வேலைநாள் நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக எச்சரித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏராளமான அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் தீவிரமாக இயங்கி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிதிப் பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இந்த நிதித் தட்டுப்பாடு கனடாவை பாதிக்கலாம் என நிதித்துறை அமைச்சர் ஜிம் பிளாகர்தி எச்சரித்து உள்ளார்.
ஜப்பானிய தூதரகத்துக்குச் சொந்தமான வாகனமொன்று இராணுவ ட்ரக் ஒன்றுடன் மோதியதால் இரு வாகனங்களும் கால்வாயொன்றில வீழ்ந்தன.
இவ்விபத்தில் ஜப்பானிய தூதரக வாகனத்தின் சாரதி உயிரிழந்ததுடன் ஜப்பனிய பிரஜைகள் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையின்; மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் நல்லிணக்கக் குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் விவாதிக்க விரும்புவதாக இலஙகை அரசாங்கத்துக்கு அமெரிக்கா இராஜதந்திர தகவல் அனுப்பியிருந்தது.
ஆனால் இலங்கை அரசு அதற்கு இன்னமும் எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
இந்த விவாதம் நடத்தப்பட்டால், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, சனல் 4 வெளியிட்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் உள்ளிட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து உறுப்பு நாடுகள் கலந்துரையாடும் நிலை ஏற்படும் என்று இலங்கை அரசாங்கம் அஞ்சுகிறது.
எனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முந்திய கூட்டத் தொடர்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரை பொறுத்திருக்குமாறு, இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறிவந்தனர்.
இந்தநிலையில் தமது அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகவுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகவுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் திங்கள் 20 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரை இலங்கையின் பதிலுக்காக அமெரிக்கா காத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னமும் ஆறு வாரங்களில் ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர மாதம் 20ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 வது கூட்டத்தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவது குறித்து இலங்கை அரசாங்கம் அதற்குள் பதிலளிக்க வேண்டும்.
அவ்வாறு இலங்கை அரசாங்கம் பதிலளிக்காது போனால், அமெரிக்கா தலைமையிலான அணி அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான வேறொரு தீர்மானத்தை கொண்டு வரவுள்ளன.
ஜெனிவாவிலும், வாசிங்டனிலும் உள்ள் இலங்கையின் இராஜதந்திரிகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுவதாகவும், பொருளாதாரத் தடை மற்றும் பயணத் தடைகளை கொண்டு வருவதை உள்ளடக்கியதாகவும் அந்தத் தீர்மானம் அமையலாம் என்றும் இலங்கை இராஜதந்திரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்
எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 வது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விருப்பம் வெளியிடாது என்று சண்டே டைம்ஸ் எதிர்வுகூறியுள்ளது.
இந்த சம்பவம், இலங்கையின் உயர்ந்த மலைப்பகுதியான பீதுருதாலகலவில் உள்ள ரடார் கருவியினால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் தமது உத்தியோகபூர்வ ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளது.
சர்வதேச வான்பரப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் வான்பரப்பில் பிரவேசிக்கும் முன்னர், அந்த நாட்டின் அனுமதி பெறப்படவேண்டும். எனினும் அதனை குறித்த அமெரிக்க ஜெட் விமானங்கள் மேற்கொள்ளவில்லை.
இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏழாவது படைப்பிரிவின் விமானங்கள் என்று நம்பப்படுகின்றன.
இந்தநிலையில் என்ன காரணங்களுக்காக குறித்த விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்தன என்பதை ஆராய்வதாக இலங்கை உள்ளுர் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடுருவல் இடம்பெற்ற போது தமது அதிகாரிகள் விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் இருந்து அகன்று செல்லுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஊடுருவல், இலங்கையின் வான்பரப்பின் 200 மைல்கள் மற்றும் 380 வான்பரப்பு கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுளளது. எனினும் இந்த சம்பவம் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இரண்டாம் இணைப்பு
தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின.
ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்துப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று இலங்கையை அமெரிக்கா வற்புறுத்திவரும் நிலையில், அதன் போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.
எனினும் இலங்கையில் எண்ணெய் அகழ்வு சாத்தியமானால், மத்திய கிழக்கைப் போன்று சில மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை இலங்கை சந்திக்க நேரிடலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாக கூறப்படும் மன்னார் கடற்படுக்கையில், மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் துளையிடுவதற்கு கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
எண்ணெய் தோண்டும் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், வணிக ரீதியான எண்ணெய் உற்பத்தி 2014 இல் ஆரம்பிக்க முடியும் என்று கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
"நீங்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து, ஷிரந்தியும் நானும் மிக கவலையடைந்தோம். எனினும் இப்போது நீங்கள் குணடைந்து வருவதாக அறிந்து ஆறுதல் அடைந்தோம். இது விரைவானதாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.
இந்திய மக்களின் நாளாந்த வாழ்வில் உங்கள் சுறுசுறுப்பும் செயற்பாட்டு பங்களிப்பும் உங்கள்கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் பலமாகும். இந்த பாத்திரத்தை எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வகிப்பீர்கள் என நான் நம்புகிறேன்" எனவும் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரை அண்டியுள்ள சேரி மக்களை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்க ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் கொழும்பில் வாழ்ந்து வரும் குறைந்த வருமானமுடைய சேரி மக்களை வெளியேற்றும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது இருப்பிடங்கள் பறிபோகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறைந்த வருமானமுடைய மக்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
போரின் போது பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட அப்பாவி பொதுமக்களின் இருப்பிடம் மற்றும் வாக்களிக்கும் உரிமைகள் பறிக்கப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
எமக்கு எதிராக போராட்டத்தை நடத்திய குமரன் பத்மநாதனுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
சேரிகளில் வாழும் மக்களுக்காக சர்வதேச ரீதியில் குரல் எழுப்புவதற்கு ஒருபோதும் தயங்கப் போவதில்லை.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் அப்பாவி பொதுமக்களை விரட்ட அனுமதிக்க முடியாது, அதற்கு பதிலாக அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு ஒன்றரை வருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு போராட்டம் நாளை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படும் வரை போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது என ஜனநாயக தேசிய சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை அழித்து மீண்டும் அமைதியை கொண்டுவர நேட்டோ படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வார்டாக் பகுதியில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் கூடியிருப்பதாக கூட்டுப் படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் விரைந்து சந்தேகத்துக்கு இடமான வீட்டை நோட்டமிட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் திடீரென ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில் அமெரிக்க வீரர்கள் 31 பேர், ஆப்கன் கமாண்டோக்கள் 7 பேர் பலியாயினர்.
இவர்களில் 20 பேர் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற குழுவில் இருந்தவர்கள். இத்தகவல் அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்க வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செய்து வரும் அதீத தியாகத்தையே இந்த சம்பவம் மீண்டும் நமக்கு நினைவுப்படுத்துகிறது.
தாக்குதலில் பலியான அமெரிக்க, ஆப்கன் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதேபோல் ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாயும் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆப்கனில் கடந்த 2001 முதல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப் படைகள் ஈடுபட்டுள்ளன.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தாக்குதலில் 38 பேர் ஒரே நேரத்தில் நேரத்தில் பலியானது இதுவே முதல்முறையாகும்.
ஆப்கன் சிறையில் வன்முறை: 6 பேரை கொன்றுவிட்டு 20 கைதிகள் தப்பியோட்டம்.ஆப்கானிஸ்தான் சிறையில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 3 பொலிசார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கன் ஹிலா நகரில் மத்திய சிறை உள்ளது.
இங்கு அல்கொய்தா தீவிரவாதிகள் உட்பட 1,200 பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைதிகள் சிலர் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றி சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்தனர். அவர்களை பொலிசார் தடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இதற்கிடையில் கைதிகளுக்கு இடையிலும் மோதல் வெடித்தது. பதற்றமான நிலையில் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
இதில் 3 பொலிசார், 3 கைதிகள் என 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் அதிநவீன ஆயுதங்களுடன் 20க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.
அவர்கள் பொலிஸ் உடையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாக்தாத்தில் இருந்து ஏராளமான ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
இப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று அதிகாரிகள் கூறினர். தப்பியோடிய கைதிகளை பிடிக்க பொலிசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு அடிபணிந்த சிரிய அரசு: தேர்தல் நடத்த அதிபர் ஒப்புதல்.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேர் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹமா நகரில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் சுட்டதில் 24 பேர் உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் ராணுவத்தை முற்றுகையிட்டனர். இதனால் ராணுவம் திக்குமுக்காடிய நிலையில் உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்கள் சுட்டு கொல்லப்படுவதற்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதை தொடர்ந்து சிரியா அரசு பணிந்தது. அரசியல் சட்டம் மறுசீரமைப்பு செய்யவும், பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தவும் அதிபர் பஷார் அல் ஆசாத் ஒப்புக்கொண்டுள்ளார்.
சோமாலிய தலைநகரில் இருந்து அல்சகாபாப் தீவிரவாதிகள் வெளியேற்றம்.சோமாலியா தலைநகர் மொகாதிஷீவில் இருந்து அல்சகாபாப் தீவிரவாதிகள் வெளியேறினர்.
அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இந்த தீவிரவாதிகள் சோமாலியாவின் தெற்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இவர்கள் அரசு மற்றும் ஆப்ரிக்க ஒன்றிய பகுதிகளில் கடுமையாக மோதி வந்தனர். இந்த தீவிரவாதிகள் தங்கள் யுக்திகளை மாற்றிக் கொண்டு தலைநகரில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து சோமாலியா ஜனாதிபதி ஷேக் ஷெரீப் அகமது கூறுகையில்,"அல்சகாபாப் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் சோமாலியாவுக்கு பிரச்சனையாக உள்ளனர். மொகாதிஷீ நகரில் அவர்கள் தோற்று திரும்பி விட்டனர். தீவிரவாதிகள் வெளியேறிய இடத்தில் மக்கள் உடனடியாக கூட வேண்டாம்" என்றார்.
ஏழை மக்களின் உயிரை பாதுகாக்கவே மொகாதிஷீவில் இருந்து வெளியேறி உள்ளோம். போர் முடிவடைந்ததாக கருதக்கூடாது என அல்சகாபாப் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷேக் அலி முகமது ராகே கூறினார்.
நிதி பிரச்சனை மற்றும் வறட்சி காரணங்களால் தீவிரவாதிகள் வெளியேறி உள்ளனர் என்ற பொதுவான கருத்து உள்ளது. மொகாதிஷீ உள்பட 5 சோமாலியா நகரங்கள் வறட்சியில் இருப்பதாக ஐ.நா கடந்த ஜுன் மாதம் அறிவித்தது.
ஹார்ன் ஆப்ரிக்க பகுதியில் 120 லட்சம் மக்கள் பட்டினியால் உயிருக்கு போராடுகிறார்கள். பயிர் உற்பத்தி முற்றிலும் பாதித்து உள்ளது.
சவுதி அரேபிய இளவரசின் அரண்மனைக்குள் புகுந்த மர்ம நபர் சுட்டுக் கொலை.சவுதி அரேபியாவின் இளவரசர் நயீப்பின் அப்துல் அசிஷ். இவர் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார். ஜெட்டாவில் உள்ள அரண்மனையில் இவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவரது அரண்மனைக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்களும் சுட்டனர்.
இதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவன் கொல்லப்பட்டான். அவனுடன் வந்த மற்றொருவன் கைது செய்யப்பட்டான்.
அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர். எனவே பிடிபட்டவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பொலிஸ் வன்முறையை கண்டித்து லண்டனில் கலவரம்: கார்கள் குண்டு வைத்து தகர்ப்பு.வடக்கு லண்டனில் உள்ள டாட்டன் ஹாமில் 3 பொலிஸ் கார்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பேருந்து மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
இந்த வன்முறைத் தாக்குதலில் 8 பொலிசார் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இதில் ஒரு பொலிசாருக்கு தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.
வியாழக்கிழமையன்று 29 வயது இளைஞர் மார்க் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்த இளைஞரின் மரணத்தைத் தொடர்ந்து டாட்டன் ஹாமில் பதட்டம் நிலவுகிறது.
நெடுஞ்சாலையில் உள்ள பொலிஸ் நிலையம் முன்பாக 300 மக்கள் குவிந்து நீதி வேண்டும் என குரல் எழுப்பினர். அப்போது நடந்த வன்முறைத் தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்தனர். 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்தது.
பிரிட்டன் நேரப்படி நேற்று இரவு 10:20 மணிக்கு 2 ரோந்து கார்கள் எரிக்கப்பட்டன. அப்போது அதிகாரிகள் யாரும் காரில் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் ஆத்திரத்தில் கடைகளை உடைத்தனர்.
ஹைரோடு மற்றம் ப்ரூக் ஸ்டீறிட் இடையே உள்ள சந்திப்பில் அடுக்குமாடி பஸ் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. வன்முறையில் தீப்பிடித்து எரிந்த கடைகளை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடினர். இளைஞர்கள் 3வது பொலிஸ் ரோந்து காரையும் எரித்தனர்.
விரைவில் நாடு திரும்பும் ஏமன் அதிபர்: மக்கள் கவலை.கடந்த ஜூன் மாதம் சலே அரண்மனையில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக சவுதி அரேபியா சென்றார்.
அரபு நாடுகளில் மிக ஏழ்மையான ஏமனில் அரசியல் பிரச்சனையால் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. கடந்த 6 மாதமாக ஏமனில் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் முடக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஏமனில் போராட்டம் அதிகரித்து வருவதும், தீவிரவாதிகள் பெருகி வருவதும் அருகாமையில் உள்ள சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கவலையை தந்துள்ளன.
குண்டுக் காயத்தில் குணமடைந்துள்ள ஜனாதிபதி அலி அப்துல்லா சலே சில நாட்களில் நாடு திரும்புகிறார் என ஏமன் அதிபர் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
குண்டு தாக்குதலில் ஏமன் பிரதமர் அல் முகமது மெகாவரும் காயம் அடைந்து இருந்தார். அவரும் முழுக்குணம் அடைந்து விட்டார்.
ஏமனில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சலே பதவி விலக வேண்டும் என்று அரபு கூட்டமைப்பு குழு கூறியது. அமெரிக்காவும் அதே கருத்தை வலியுறுத்தியது. சலே தனது அதிகாரத்தை விட்டு கொடுக்க மறுப்பதால் மோதல் நீடித்து வருகிறது.
நாசா விண்வெளி பயணம்: இளவரசர் ஹாரி முயற்சி.இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்ள விரும்பும் முதல் நபராக இளவரசர் ஹாரி உள்ளார்.
26 வயது ஹாரி விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர் என நண்பர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவின் விண்வெளித் திட்ட பயணத்தில் கௌரவ உறுப்பினராக இடம் பெற முடியும் என ஹாரி நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் பயணம் அடுத்த ஆண்டு முடிவடையும் போது விண்வெளிக் குழுவில் இடம் பெறலாம் என்பது ஹாரியின் நம்பிக்கை ஆகும். நாசா குழுவில் சேருவதற்கு முன்பாக ஹாரி அதிநவீன ஜெட் என்ஜினில் 1000 மணி நேரம் பயிற்சி எடுத்தவராக இருக்க வேண்டும்.
இளவரசர் ஹாரி நிலம் மற்றும் கடல் கண்காணிப்பு, கடலியல் படிப்புகளை படித்து உள்ளார். இதில் பகுதி உளவு விண்வெளி ஆய்வு படிப்புகள் உள்ளன. டெக்சாசில் உள்ள ஹீஸ்டனில் இருக்கும் நாசா பயிற்சி மையத்தில் புவி ஈர்ப்பு சக்தி குறைந்த ஸ்கூபா நீர் பயிற்சியை ஹாரி மேற்கொள்ள வேண்டும்.
இதைத் தவிர அதிக புவி ஈர்ப்பு சக்தி கொண்ட ராட்சத கைரோ ஸ்கோப்பிலும், அழுத்தம் நிறைந்த கலத்திலும் அவர் பல மணி நேரம் இருக்க வேண்டும். விண்வெளிப் பயணம் இளவரசர் ஹாரியின் கனவு என அரசக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
விலைவாசி அதிகரிப்பு: இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம்.இஸ்ரேலில் விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் அதிருப்தி அடைந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.
தலைநகர் டெல் அவிவில் பல ஆயிரம் மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தினர். ஜெருசலேத்தில் 30 ஆயிரம் பேர் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
வீட்டு குடியிருப்பு, உணவு, விலைவாசி குறைய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் போட்டனர். நாடு முழுவதும் இரண்டரை லட்சம் மக்கள் விலைவாசி உயர்வை கண்டித்து கொந்தளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலிய மக்கள் மூன்றாவது சனிக்கிழமையாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் மூன்று லட்சம் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தங்களது வருமானத்தில் வீட்டு வாடகை, குழந்தைகள் கவனிப்பு மேற்கொள்ள முடியவில்லை என கூறினர். விலைவாசி உயர்வு கவலை அளிப்பதாக உள்ளது என மக்கள் கூறினர்.
இஸ்ரேலில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 4.5 சதவீதம் உள்ளது. இதே காலகட்டத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 11 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது.
இஸ்ரேல் வளர்ச்சி சமச்சீரற்ற நிலையில் உள்ளது. அலுவலக முறைகேடு நீதி இல்லாத நிலைமை நிலவுகிறது என போராட்டக்காரர்கள் ஆவேசம் அடைந்தனர்.
லாகர்டேவின் ஐ.எம்.எப் பதவிக்கு ஆபத்து: நிபுணர்கள் தகவல்.பிரான்சின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே(55) தற்போது சர்வதேச நிதியத்தின் தலைவராக உள்ளார்.
சர்வதேச நிதியத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற முதல் பெண் கிறிஸ்டியானே லாகர்டே என்ற பெருமை உண்டு. கடந்த 2008ஆம் ஆண்டு லாகர்டே பிரான்சின் நிதியமைச்சராக இருந்த போது அத்து மீறி அரசு நிதியை தொழிலதிபர் தாபேவுக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தாபே பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் நண்பர் ஆவார். அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு உள்ள கிறிஸ்டியானே லாகர்டே மீது விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இந்த விசாரணையால் லாகர்டேவின் பதவிக்கு பாதிப்பு வராது என சட்டத்தரணிகள் கூறி உள்ளனர்.
மீடியா அதிபர் பெர்னார்டு தாபேவுக்கும் முன்னாள் அரசு வங்கியான கிரடிட் லயோனிஸ் இடையே பிரச்சனை இருந்தது. 2008ஆம் ஆண்டு பிரான்ஸ் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே 28 கோடியே 50 லட்சம் யூரோ அளிக்க உத்தரவிட்டார்.
ஆலோசகர்களின் எதிர்ப்பு ஏற்பட்ட போதும் தாபேவுக்கு இந்த அரசு நிதியை அளிக்க லாகர்டே கூறினார். லாகர்டேவின் வழக்கை குடியரசு நீதிக்கான கோர்ட் விசாரணை செய்கிறது. லாகர்டே மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பாக்கி்ஸ்தானில் நோன்பு நேரத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது.பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ரமலான் நோன்பு நாளில் பகலில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் 3 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும்.
புனித ரமலான் மாதத்தில் அனைவரும் பகலில் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து இரவில் மட்டுமே உண்ண வேண்டும், 5 வேளை தொழுகை செய்ய வேண்டும், இறைச் சிந்தனையைத் தவிர வேறு கேளிக்கைகளிலோ இதர விஷயங்களிலோ மனதைச் செலுத்தக் கூடாது என்பது நியதி.
பாகிஸ்தானை முஸ்லிம் நாடாக அரசியல் சட்டப்படியே அறிவித்திருப்பதால் அங்கே மதச் சடங்குகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. அத்துடன், ஸியா உல் ஹக் என்பவர் பாகிஸ்தானின் பதவி வகித்தபோது நோன்புக் காலங்களில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவசரச் சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது.
அதன்படி நோன்பு காலத்தில் யாரும் பொது இடத்தில் மற்றவர்களின் நோன்பைக் குலைக்கும் வகையில் சாப்பிடுவது, குடிப்பது, புகைபிடிப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு 3 நாள்களுக்குச் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
திரையரங்குகள், நாடக அரங்குகள் ஆகியவை சூரியன் மறைந்தது முதல் 3 மணி நேரத்துக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவசரச் சட்டம் கூறுகிறது. எனவே பாகிஸ்தான் அரசும் பஞ்சாப் மாகாண அரசும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளது.
அமெரிக்கர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: ஒபாமா வேண்டுகோள்.அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெருகவும், பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி பெருகவும், உற்பத்தி நடவடிக்கைகள் முழுவேகம் பெறவும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அரசுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்றார் அதிபர் ஒபாமா.
நாட்டு மக்களிடையே நிகழ்த்தும் வாராந்திர உரையின் போது இந்த வேண்டுகோளை அவர் வலியுறுத்தினார். நம் நாட்டுப் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும் அமெரிக்கர்கள் வேலையில்லா திண்டாட்டத்திலிருந்து விடுபட்டு பழையபடி வேலைக்குத் திரும்பவும் இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
வளர்ச்சியைத் தூண்டவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் நாடாளுமன்றத்தால் நடவடிக்கைகளை எடுக்க முடியும். தொழிலாளர்களுக்கும் நடுத்தர வகுப்பினருக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் வரிகளைக் குறைக்க முடியும். புதிய தொழில்களும் வர்த்தகங்களும் பெருக அதிகாரவர்க்கத்தின் சிவப்பு நாடா வடிவிலான முட்டுக்கட்டைகளை நீக்க முடியும்.
ஆயிரக்கணக்கான பேர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரவல்ல வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியும். நாட்டின் அடித்தளக் கட்டமைப்பை புதுப்பிக்கவும் லட்சக்கணக்கான கட்டுமானத்துறை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தரவும் நாடாளுமன்றம் நினைத்தால் முடியும்.
குறுகிய காலத்தில் நம்முடைய நோக்கம் வேலைவாய்ப்பையும் உற்பத்தியையும் பெருக்குவதாகத்தான் இருக்க முடியும். இதைத்தான் மக்களும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக அனைவருக்குமே கொந்தளிப்பான ஆண்டு.
அரபு நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கச்சா பெட்ரோலிய எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை பலமடங்கு உயர்ந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியை ஒருவாறாகச் சமாளித்தோம்.
ஜப்பானிய நாட்டில் மிகப்பெரிய ஆழிப் பேரலை காரணமாக அந்த நாட்டின் பொருளாதாரமே நிலை குலைந்ததால் நம் நாட்டுத் தொழில், வர்த்தகத்துக்குத் தேவைப்பட்ட பொருள்களை ஜப்பானிலிருந்து பெற முடியாமல் ஏற்பட்ட நெருக்கடியையும் ஒருவாறாகச் சமாளித்தோம்.
ஐரோப்பிய நாடுகள் கடன் சுமையாலும் செலாவணி மதிப்புக் குறைவாலும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியதாலும் பாதிக்கப்பட்டதால் அதன் விளைவுகளையும் நாம் அனுபவித்தோம்.
நம் நாட்டு பட்ஜெட் குறித்து அனைத்து தரப்பினரும் இப்போது கடுமையாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் ஏன் ஊதாரித்தனமாக இத்தனை கோடி டொலர்களைச் செலவழிக்க வேண்டும், சிக்கனமாக இருந்தால் போதாதா என்று பலர் கேட்கின்றனர்.
வேலை வாய்ப்பும் உற்பத்தியும் பெருக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அதிகம் செலவிட வேண்டும் என்கின்றனர் பலர். செலவையெல்லாம் அரசு குறைத்துக் கொண்டு பற்றாக்குறை பட்ஜெட்டை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்கின்றனர் சிலர்.
வரிச் சலுகை வேண்டும் என்போர் பலர், வரிகளை உயர்த்தி அதில் கிடைக்கும் தொகையை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்பார் பலர். இப்படி இந்த விவாதம் நீண்டுகொண்டே வருகிறது.
இந்த நாட்டில் மீண்டும் உற்பத்தி பெருக வேண்டும், மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும், இந்த நாட்டின் மீதும் அரசின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அரசின் செலவு, வருவாய்க்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்கும் அதே வேளையில் அது மட்டுமே அரசின் கடமையல்ல என்பதையும் வலியுறுத்த விழைகிறேன்.
நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் செலவு செய்யப் பணம் வேண்டும். அதற்கு வேலைவாய்ப்பும் இருக்க வேண்டும், வரிச் சலுகைகளும் அவசியம். ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் செலவு செய்யப் பணம் கிடைத்தால் அது மீண்டும் பொருளாதார வளர்ச்சிக்கே உறுதுணையாக இருக்கும்.
ஜனநாயக, குடியரசு கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருங்கிச் செயல்பட வேண்டும். மக்கள் நம்மிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நாடு நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது நாம் ஒற்றுமையாக இருந்து செயல்படுவது அவசியம் என்றார் ஒபாமா.
பாகிஸ்தானில் பள்ளிக்கட்டடம் குண்டு வைத்து தகர்ப்பு.பாகிஸ்தானில் பள்ளிக் கட்டடத்தை தலிபான் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து தகர்த்தனர்.
இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வட மேற்குப் பகுதியில் பழங்குயிடின மக்கள் வசிக்கும் ஹைபர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளிக்கட்டடம் ஒன்றின் முன்பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் வெடி குண்டுகளை மறைத்துவைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு அக் குண்டுகள் வெடித்துச் சிதறியதில் பள்ளிக் கட்டடம் அடியோடு இடிந்து விழுந்தது.
இரவு நேரமாதலால் பள்ளிகளில் குழந்தைகள் இல்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமில்லாததால் இச்சம்பவத்தால் உயிரிழப்பு ஏதும் இல்லை என உள்ளூர் அரசு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதி முழுவதிலும் பொலிசார் தீவிர சோதனை நடத்தினர். இந்தநாசவேலையில் ஈடுபட்டோரை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் இதுவரை ஹைபர் பகுதியில் 55 அரசு பள்ளி கட்டடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு அக்டோரில் நடைபெறுகிறது.வளைகுடா நாடான யு.ஏ.ஐ நாட்டின் அபுதாபியில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது.
அரேபிய பயங்கரவாத எதிர்ப்பு-2011 எனும் பெயரில் அபுதாபியின் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு வரும் அக்டோபர் மாதம் 31-ம் திகதியிலிருந்து நவம்பர் 2-ம் திகதி வரை மூன்று நாட்கள் நடைக்கிறது.
இதில் பயங்கரவாதத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் பயங்கரவாதத்தினை ஒழித்து கட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.
இம்மாநாட்டில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள், பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் சர்வதேச பயங்கரவாதிகளின் சதி திட்டங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், தாக்குதல்களை முயறிடிப்பது குறித்த யுக்தி குறித்தும், உள்நாட்டு சர்வதேச குற்றவாளிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் இயக்குனர் கிறிஸ்டோபர் ஹட்சன் கூறினார்.
ஆசியாவின் மிகப் பெரிய தந்தம் கொண்ட யானை மரணம்.ஆசியாவின் மிகவும் நீளமான தந்தம் கொண்ட யானை மிலிங்கோடா ராஜா(70) நேற்று உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இலங்கையில் இறந்தது.
இறந்த இந்த யானைக்கு கண்டி நகரில் புத்த தேவாயத்தினர் இறுதி சடங்குகள் செய்தனர். இலங்கையி்ன் கண்டி நகரில் அபுஹாமி மிலிங்கோடா என்பவர் வளர்த்துவரும் யானை ஒன்று ஆசிய கண்டத்திலேயே மிகவும் நீண்ட தந்தம் கொண்டயானை என கூறப்படுகிறது.
மிலிங்கோடா ராஜா என்ற பெயருள்ள 70 வயது யானை கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பல்வேறு திருவிழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தது. இந்த யானையின் இரு தந்தங்களும் சுமார் 5.05 அடி நீளம் கொண்டவை. ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் இது போன்ற நீண்ட தந்தம் உள்ள யானைகள் இதுவரை இல்லை என கூறப்படுகிறது.
மிலிங்கோடா ராஜா கடந்த 18 மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பலனின்றி கடந்த 3-ம் திகதி இறந்ததாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி நரில் உள்ள ஒரு புத்தமடத்தில் மடத்தின் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் யானைக்கு இறுதிசடங்குகள் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து யானையினை வளர்த்து வந்த அபுஹாமி மிலிங்கோடா கூறுகையில்,"இலங்கையில் வடமேற்கு பகுதியில் கடந்த 1945-ம் ஆண்டு வனப்பகுதியில் இந்த யானை பிடிக்கப்பட்டு வளர்த்து வந்தோம். குடும்பத்தில் ஒருவராக இருந்தது மறைந்து விட்டதே" என கண்ணீருடன் தெரிவித்தார்.
ஜேர்மன் விமானப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த எச்சரிக்கை.ஜேர்மனி விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஊழியர்கள் இந்த வாரம் ஒருநாள் வேலைநாள் நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக எச்சரித்து உள்ளனர்.
வேலைநிறுத்தம் செய்வதற்கு ஜேர்மனி நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும் ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்புக்கு தயாராகி உள்ளனர். அவர்களது கோரிக்கையில் நியாயம் இல்லை என ஜேர்மனி போக்குவரத்து துறை அமைச்சர் பீட்டர் ராம்ஸ்யர் கூறினார்.
ஜேர்மனி விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஊழியர்களின் சங்கமான ஜி.டி.எப் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜேர்மனி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் டி.எப்.எஸ் நிறுவனத்துடன் பிரச்சனை உள்ளது.
அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை திருப்தி அளிக்காததால் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என எச்சரித்தது.
அமைச்சர் ராம்ஸ்யர் நேற்று ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அந்த பேச்சு வார்த்தையில் உரிய தீர்வு இல்லாத நிலையில் அமைச்சர் எரிச்சல் அடைந்தார்.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு ஊழியர்களின் பணி முக்கியமானது. இதனை யாரும் மறுக்கவில்லை. அவர்களுக்கு வருடாந்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் யூரோ சம்பளம் தரப்படுகிறது.
வாரத்திற்கு 25 மணி நேரம் பணி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு 40 -50 விடுமுறை தினங்களும் அளிக்கப்படுகின்றன என அமைச்சர் ராம்ஸ்யர் கூறினார்.
2600 விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு ஊழியர்கள் 6.5 சதவீத சம்பள உயர்வு கோருகின்றனர்.
பூனைகளால் அவதியுறும் அமெரிக்க வீரர்கள்.ஆப்கானிஸ்தானில் ஏராளமான அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் தீவிரமாக இயங்கி வருகிறது.
தலிபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. இந்த தூதரக வளாகத்தை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட பூனைகள் சுற்றி வருகின்றன.
இந்த பூனைகளின் சத்தம் மற்றும் சண்டையால் தூதரக அதிகாரிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பூனைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து தூதரக பணியாளர்களை கடிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
எனவே இவற்றை ஒழிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. குடும்பத்தையெல்லாம் விட்டு தனியாக வசிக்கும் எங்களுக்கு இந்த பூனைகளால் தான் பொழுதுபோகிறது என ஒரு தரப்பினர் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்ப்பு தெரிவித்ததால் பூனை ஒழிப்பு நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டு பூனையால் கடிபட்டவர்களுக்கு தேவையான மருந்துகள் சப்ளை செய்யப்பட்டன.
உலக நிதி நெருக்கடி கனடாவை பாதிக்கும்: நிதித்துறை அமைச்சர் எச்சரிக்கை.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிதிப் பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இந்த நிதித் தட்டுப்பாடு கனடாவை பாதிக்கலாம் என நிதித்துறை அமைச்சர் ஜிம் பிளாகர்தி எச்சரித்து உள்ளார்.
உலக அளவில் கனடா பொருளாதாரம் வலுவானதாகவே உள்ளது. இருப்பினும் இது குறித்து கனடா நிதியமைச்சர் ஜிம் பிளாகர்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கனடா ஒரு தீவு அல்ல. நாம் அமெரிக்க பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறோம்.
உலக பொருளாதார மீட்சி நிலை உடையக் கூடிய நிலையிலேயே உள்ளது. நமது உற்பத்தியில் 3ல் ஒரு பகுதி ஏற்றுமதி அளவிலேயே உள்ளது. உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இதன் தாக்கம் கனடாவிலும் ஏற்படலாம் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக கனடா பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. நமது பட்ஜெட்டும், உலக அளவில் வலிமைமிக்கதாகவே உள்ளது என்றும் பிளாகர்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடன் தர நிர்ணய ஏஜென்சியான ஸ்டாண்டர்டு அண்ட் பவர் அமைப்பு அமெரிக்காவின் கடன் நிலையை 3ஏ என்ற நிலையில் இருந்து ஏஏ பிளஸ் என மோசமான நிலையில் பட்டியலிட்டது.
1917 ஆம் ஆண்டு உலக நிதி தரப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. தற்போது மிக மோசமான கடன் தரவரிசையை அமெரிக்கா முதல் முறையாக பெற்றுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நிதிப் பிரச்சனை குறித்து ஜி-7 மற்றும் ஜி-20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் விரைவில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.