
ஊடகத்துறையில் விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அபரிமிதமானதாக உள்ளதுடன் பல நவீன மாற்றங்களுக்கும் வித்திட்டுள்ளது. குறிப்பாக நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சிகள் மற்றும் தற்போதைய இணையச் செய்திச் சேவை வரை அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
எனினும் இணையத்தின் அபார வளர்ச்சி காரணமாக மற்றைய ஊடகங்களின் மீதான மக்களின் ஈர்ப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றமை தவிர்க்க முடியாத உண்மையாகும்.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கையடக்கத்தொலைபேசி மற்றும் கணனித் தொழிநுட்பங்களின் வளர்ச்சியை குறிப்பிடலாம். சமீப காலங்களில் அதிவேகமாக வளர்ச்சியடைந்த துறைகளாகவும் இவற்றை அடையாளப்படுத்தலாம். இச்சாதனங்களின் ஊடாக இணையச் செய்திச் சேவைகளை இலகுவாக அடையமுடிகின்றமை இணையச் செய்திச் சேவையின் வெற்றியாக கருதமுடியும். பாவனையாளர்கள் புதுமை மற்றும் மாற்றங்களை விரும்புதல் போன்ற காரணங்கள் இவற்றின் வளர்ச்சியில் பெரிதும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இணையச் செய்திச் சேவையின் ஊடாக எழுத்து, புகைப்படம், காணொளி மற்றும் ஒலி வடிவில் செய்திகளை வழங்கக்கூடியதாக உள்ளது.
ஆனாலும் மற்றைய பிரதான செய்தி ஊடகங்களாக நாம் கருதும் பத்திரிகைகள், தொலைக்காட்சி செய்திச் சேவைகள், வானொலி செய்திச் சேவைகள் ஆகியவற்றின் ஊடாக இவையனைத்தையும் மேற்கொள்ள இயலவில்லை. கையடக்கத்தொலைபேசி, டெப்லட் கணனிகளின் வருகை மற்றும் இணையச் செய்தி சேவைகளின் அடுத்த பரிணாமமாக 'அப்ளிகேஷன்' கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் கணனிகளானது இணையப் பாவனையை வெகுவாக அதிகரித்த சாதனங்களாகும். குறிப்பாக கூகுளின் அண்ட்ரோயிட்டை அடிப்படையாகக் கொண்ட கையடக்கத் தொலைபேசிகள் , டெப்லட்கள் , அப்பிளின் ஐபோன் மற்றும் ஐ பேட் கணனிகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. இவற்றின் வருகைக்கு பின்னரே அப்ளிகேஷன்கள் என்ற பதம் அனைவராலும் அறியப்பட்டது. கையடக்கத்தொலைபேசி, டெப்லட் கணனிகளை உருவாக்கும் நிறுவனங்களும் அப்ளிகேஷன்களை இலவசமாகவோ கட்டணம் செலுத்தியோ தரவிறக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தன.
இது அப்ளிகேஷன் உருவாக்குனர்கள் தங்கள் அப்ளிகேஷன்களை இலகுவாக சந்தைப்படுத்த வாய்ப்பு வழங்கியது. அண்ட்ரோயிட் அப்ளிகேஷன்களுக்கான சந்தை ( Android Market), அப்பிளின் ஐ டியூன்ஸ் ( i tunes) , நொக்கியாவின் 'ஒவி ஸ்டோர்' (ovi store)ஆகியவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பல செய்திச் சேவை நிறுவனங்கள் ஏற்கெனவே தமக்கென தனியான அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளன. மற்றைய நிறுவனங்களும் இவற்றை உருவாக்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றன. அப்ளிகேஷன்களை தொலைக்காட்சிகளில் செயற்படவைக்கும் முயற்சிகளும் தற்போது வெற்றியளித்துள்ளன. செய்திச் சேவை நிறுவனங்கள் மட்டுமன்றி மற்றைய பல நிறுவனங்களும் தமக்கானதொரு தனியான அப்ளிகேஷன்களை உருவாக்கி வருகின்றமையானது. அப்ளிகேஷன்களின் வளர்ச்சிக்கான ஓர் எடுத்துக்காட்டு. பழையன கழிதலும் புதிய புகுதலும் காலத்தின் கட்டாயமாகும். அதன்படி மற்றைய செய்தி ஊடகங்கள் மக்களிடையே தமது இடத்தினை இழந்துவரும் நிலையில் அப்ளிகேஷச்ன்கள் செய்திச் சேவையின் அடுத்த பரிணாமமாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
