கிளிநொச்சியில் நெடுஞ்சாலை அமைக்கும் சீன நிறுவனத்தின் மேற்பார்வையாளர் விபத்தில் மரணம்.
கிளிநொச்சி மாவட்டம் கொக்காவில் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலை அமைக்கும் சீன நிறுவனத்தில் கடமையாற்றிய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் கடமை நேரத்தின்போது லொறி மோதியதில் மரணமடைந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராமநாதன் விஜயராஜ் (35 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு வேலைத்தள விபத்தில் உயிரிழந்தவராவார்.
மேற்படி நபர் கேற்ரிக் பகுதி 2 (Gatic - section 2) என்ற சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஏ9 நெடுஞ்சாலை அமைக்கும் வேலைத்திட்டத்தில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றுகின்றார்.
சம்பவ தினம் காலை 11 மணியளவில் (03.08.2011) கொக்காவில் என்ற இடத்தில் உட்காந்துகொண்டு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதே கம்பனிக்கு கிறவல் கொண்டுவந்த லொறி பின்புறமாக வந்து அவர்மீது ஏறியதில் படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி பின் உயிரிழந்துள்ளார்.
சீன நாட்டுக் கம்பனிகள் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது தங்களது லாபமே நோக்காகக் கொண்டு செயற்படுவதால் விபத்துக்கள் அதிகளவாக ஏற்படுவதும் அதனால் ஊழியர்கள் இறப்பதும் தற்போது சாதாரண விடயமாகி விட்டது.
கடந்த வருடம் மட்டக்களப்பில் உள்ள சீன கம்பனியில் ஏற்பட்ட வெடி விபத்தினால் பல ஊழியர்கள் உயிரிழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை - இந்திய உறவில் பிளவினை ஏற்படுத்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் சதி முயற்சி.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இருப்பினும், இலங்கைக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலேயே உறவு நீடிப்பதால் தமிழகத்தின் கருத்துக்களை நாம் ஒருபோதும் பொருட்படுத்தப்போவதில்லை என்றும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், 'இந்தியாவுக்கான புனித யாத்திரை செல்லும் இலங்கையர்கள், பல்வேறு பகிடிவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இந்திய மத்திய அரசுக்கு அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்.
இலங்கை எப்போதும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே தொடர்புகளைப் பேணி நல்லுறவை வளர்த்து வருகின்றது. இதனால் இந்தியாவின் ஒரு மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை' என்றார்.
தாக்கப்பட்ட ஊடகவியலாளரை இளநீருடன் சென்று வைத்தியசாலையில் பார்வையிடவே முடியும்!- கெஹலிய.
ஊடகவியலாளர் தாக்கப்படுவது குறித்து தன்னால் ஏதும் செய்யமுடியாது எனவும், வேண்டுமானால் தாக்கப்பட்டவர்களை இளநீருடன் சென்று வைத்தியசாலையில் பார்வையிடத்தான் முடியும் எனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது,
ஊடகவியலாளர் ஒருவர், உதயன் பத்தரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து, சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்த நிலையிலும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என தொடுத்த வினாவுக்கு பதிலளிக்கையிலேயே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இதுகுறித்து தன்னால் பொலிஸாருக்கு எந்த பணிப்புரையும் வழங்கமுடியாது எனவும், தான் பாதுகாப்பு அமைச்சர் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான வழக்குகளுக்கு எதிராக சாட்சியமளிக்க எவரும் முன்வருவதில்லை எனவும் அவ்வாறான நிலையில் தாக்குதல் குறித்த வழக்கினை தொடர முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு வழங்கினால் அரசாங்கம் வீடு செல்ல நேரும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை அரசியல் தீர்வாக வழங்கினால் அரசாங்கத்திற்கு வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை தேசிய அரசியலில் இருந்து நீக்குவதற்கான பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
பிரிவினைவாத சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைந்து விடக் கூடாது. இன்று அரசாங்கத்திற்குள் தமிழீழ கொள்கைதாரிகள் ஊடுருவியுள்ளார்கள் என்றும் அந்த இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அதிகாரப் பகிர்விற்கு எதிராகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்ய வலியுறுத்தியும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.
இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அவ் இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,
யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் பிறந்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க பல உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. குறிப்பாக அரசியல் தீர்வு என்ற பெயரில் வடக்கிற்கு சுயநிர்ணய ஆட்சியை வழங்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பாரிய சந்தேகங்கள் தோன்றியுள்ளன. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வை தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக முன் வைக்கக் கூடாது. இதற்கு ஒரு போதும் அனுமதி வழங்க இந்த நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.
அவ்வாறு பிடிவாதமாக அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் செயற்பாட்டால் ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். எனவே அரசாங்க பிரிவினைவாத சக்திகளின் தேவைகளுக்கு இடமளிக்காது நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.
கோத்தபாயவை பிரதமராக்க மகிந்த தீர்மானம்! அமைச்சவை மாற்றத்தின் போது நடவடிக்கை.
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து பிரபல பௌத்த பிக்கு சிலரிடமும் தனிப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டறிந்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்மானம் குறித்து திவயின ஊடகவியலாளர் சிலரிடமும் ஜனாதிபதி கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.
ஜனாதிபதி கருத்து கேட்ட அனைவரும். இந்தத் தீர்மானம் மிகச் சரியானது எனவும் இதனை நிச்சயம் செய்ய வேண்டும் எனக் கருத்துரைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
யுத்த வெற்றிக்காகவும், அதன்பின்னர் சர;வதேச ரீதியாக இலங்கை மீது சுமத்தப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை சமாளிப்பதற்காகவும் கோத்தபாய ராஜபக்ச பெருமளவில் பாடுபட்டுள்ளதாக மேற்குறித்த தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர் .
கோத்தபாய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படவுள்ளமை குறித்து அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது,
ஜனாதிபதியின் சுகவீனமும், குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருசில தரப்பினரால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும் இந்தத் தீர்மானத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் சமாளிப்பதற்காக கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதுகுறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை அமைச்சரவை மாற்றத்தை ஒத்திவைத்துள்ளதாகவும் குறித்த அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள பசில் ராஜபக்சவை அந்தப் பதவிக்கு நியமித்தால் பிள்ளைகளுடன் தான் நாட்டைவிட்டு வெளியேறுவதாக தனது மனைவி கண்டிப்பாக தெரிவித்துவிட்டார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் அண்மையில் கலந்துரையாடிய போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார் .
நாங்கள் பேரணிகளை நடத்திய போது பசில் ராஜபக்ச எங்கிருந்தார் என்று கேள்வியெழுப்பும் சிரந்தி ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே சகோதரர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து ஒட்டிக்கொண்டதை அடிக்கொருமுறை அவர் ஞாபகப்படுத்துவதாகவும் அவரது வாதத்தில் நியாயம் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மேர்வின் சில்வாவிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவும், பசில் ராஜபக்சவின் பாரியார் புஷ்பா ராஜபக்சவும் நெருங்கிய உறவினர்கள் என்பதனால், புஷ்பா ராஜபக்சவிற்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களையும், செய்திகளையும் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடாக அனுப்புவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழமையாக்கிக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் - ரணில்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தையும், ஊழல் மோசடிகளையும் இல்லாதொழிக்க வேண்டும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் அனைத்து தரப்பினருக்கும் தாமே தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சின் ஒற்றுமையை கட்டிக்காப்பதற்கு ஒழுக்கம் மிகவும் முதன்மையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிட்டன் வீசாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்த இருவர் கொழும்பில் கைது.
பிரித்தானியா வீசாவுக்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த இரு வாரங்களுக்குள் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விண்ணப்பதாரிகள் இருவரும் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதுவராலயம் குறிப்பிட்டது.
போலி ஆவணங்களுடன் சமர்ப்பித்த இவர்களின் வீசாவிற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், இவர்கள் இருவரும் பிரித்தானியா செல்வதற்கு 10 வருட காலத் தடையும் விதிக்கப்பட்டது.
பிரிட்டன் வீசா பெறுவதற்கு போலி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டாம் என பிரித்தானிய தூதுவராலயம் அறிவுறுத்தல் விடுத்திருந்த போதிலும், கடந்த அண்மைக் காலங்களில் இவ்வாறான போலி ஆவணங்களுடன் பிரிட்டன் வீசா பெற விண்ணப்பித்தவர்கள் பெருமளவானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரித்தானிய குடிவரவு சட்டத்திற்கினங்க இவ்வாறான செயற்பாடுகளை மன்னிக்க முடியாது எனவும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் பிரித்தானிய எல்லை முகவரகத்தின் நுழைவு அனுமதி முகாமையாளர் கிளேர் முன்ரே தெரிவித்தார்.
அமெரிக்க படைகள் இந்தாண்டு இறுதி வரை ஈராக்கில் தங்க அனுமதி.
ஈராக்கில், தற்போதுள்ள அமெரிக்கப் படைகள், இந்தாண்டு இறுதி வரை தங்கியிருந்து, ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு அந்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஈராக்கில், போர் முடிந்த பின் எட்டு ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தங்கியுள்ளன. இது, அந்நாட்டின் அரசியல் தலைவர்களிடையே கருத்து முரண்பாடுகளை எழுப்பியது.
இந்நிலையில், 2008 ல் மேற்கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, 2011 இறுதி முதல் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக ஈராக்கில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவதை அடுத்து, அமெரிக்கா தன் 10 ஆயிரம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தங்கி, ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிப்பர் என தானாக முன்வந்து தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, ஈராக் தலைவர்களிடையே மீண்டும் கருத்து முரண்பாடுகளை எழுப்பியது.
நேற்று முன்தினம், அரசு மற்றும் அரசியல் தலைவர்களிடையே நடந்த ஐந்து மணி நேர பேச்சில், இந்தாண்டின் இறுதி வரையில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தங்கியிருக்க அனுமதி வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இம்முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்த ஈராக் வெளியுறவு அமைச்சர் ஹோஷ்யார் ஜெபாரி, அமெரிக்கப் படைகள் இங்கு இன்னும் நீண்ட நாள் தங்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. எனினும், இந்தாண்டின் இறுதியில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஈராக்கின் முடிவை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் 7,500 பயங்கரவாத இணையதளங்கள்: உள்துறை அமைச்சர் ரஷீத் நுர்காலியேவ்.
ரஷ்யாவில் 10 விதமான மத பயங்கரவாத குழுக்களும், 7,500 பயங்கரவாத இணையதளங்களும் செயல்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஷீத் நுர்காலியேவ் கவலை தெரிவித்துள்ளார். இவற்றில் பயங்கரவாதக் குழுக்கள், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடுவதாகவும், வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதான கிளவ்லேண்ட் பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்.
முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ள கிளவ்லேண்ட் பொலிஸ் தலைவர் கான்ஸ்டபிளும், அவரது உதவியாளரும் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர். தலைமை கான்ஸ்டபிள் சீன் பிரைஸ் அவரது உதவியாளர் டெரக் போனார்டு மற்றும் முன்னாள் படைப்பிரிவு ரொலிசட்டா கரோலின் லெவ்லின் ஆகியோர், ஊழல் முறைகேடு தொடர்பாக நேற்று விசாரணை செய்யப்பட்டனர்.
2 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நடவடிக்கையால் கிளவ் லேண்ட் பொலிஸ் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. ஓபிசர் சீன் பிரைசிடம், மனி பொலிஸ் புகார் கொமிஷன் பிரத்யேக விசாரணை நடத்துகிறது.
பிரைஸ், போனார்டு மற்றும் லெவ்லின் சமீபத்தில் 2 லட்சத்து 13 ஆயிரம் 379 பவுண்ட் தொகையை லஞ்சமாக பெற்றனர். பொது ஓபிஸ் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஊழல் செய்த அந்த அதிகாரிகள் மீது நார்த் யோர்ச் ஷயர் பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது.
இந்த ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர்களது சொத்துக்கள் உள்ள இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. கிளவ் லேண்ட் பொலிஸ் நிர்வாகத்தில் தற்போது மற்றும் முன்னாள் பணிகளில் இருந்தவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.
சீனாவில் ரேபிஸ் நோய் பரவும் அபாயம்: வீடுகளில் நாய் வளர்க்க தடை.
சீனாவின் ஜியான்மென் மாகாணத்தில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் பரவி வருகிறது.
இதையடுத்து நாய்கள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 26 ம் திகதிக்குள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பிடிபடும் நாய்கள் கொல்லப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஜியான்மென் மாகாணத்தில், சமீபக்காலமாக ரேபிஸ் தாக்கிய நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த 3 ஆண்டுகளில் நாய்கள் கடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நாய்க்கடியால் காயமுற்று அவதிக்குள்ளாகினர். இதையடுத்து நாய்களின் வளர்ப்பிற்கு சீன அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் இயற்றியுள்ளது.
இதன்படி, வரும் 10 ம் திகதியில் இருந்து 26 ம் திகதிக்குள் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றை அகற்ற வேண்டும். அதன்பின் நடத்தும் தேடலில் சிக்கும் நாய்கள் கொல்லப்படும். இந்த வகையில் சுமார் 30 ஆயிரம் நாய்களை கொன்று குவிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் மேலும் கூறுகையில், நாய்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. நகரில் இருந்து அதிக அளவிலான நாய்களை அகற்றுவதன் மூலம், தகுந்த வாழிடத்தை உருவாக்க முடியும். நாய்களை வளர்ப்பவர்கள் எங்களுடன் இந்த காரியத்தில் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம்.
விதிக்கப்பட்ட கெடு நாட்களை கடந்த நிலையில் நாய்கள் வளர்த்தால், உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றனர். நாய்களை வளர்க்க விதிக்கப்பட்ட கட்டுபாடுகளால் நாய் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீனாவில் ஆண்டுதோறும் 2,400 க்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் இறப்பதாக, அந்நாட்டு சுகாதாரத் துறைத் தெரிவித்துள்ளது.
சுவீடன் நாட்டில் சமையலறையில் அணு உலை அமைத்த வாலிபர் கைது.
வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை வாங்கி வீட்டிலேயே அணு உலையை அமைத்த சுவீடன் நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சுவீடனின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான ஏஞ்சல் ஹோல்ம் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹேண்டில் (31). ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் இவர் கடந்த 6 மாதமாக தனது வீட்டின் சமையல் அறையில் அணு உலையை உருவாக்கி வந்துள்ளார். இதற்காக சில வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு தனிமங்களை வரவழைத்துள்ளார்.
மேலும் தனது வீட்டின் மின்சார அலார்ம் கருவியில் இருந்த அமெரிசியம்-241 என்ற கதிர்வீச்சு கொண்ட தனிமத்தையும் பிரித்தெடுத்துள்ளார். இந்த கதிர்வீச்சு கொண்ட தனிமங்களின் உதவியோடு அணு உலையை உருவாக்கி வந்துள்ளார். ஆனால், திடீரென இவருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதாவது, வீட்டிலேயே அணு உலையை அமைப்பது சட்டப்படி சரியா என்பதே அந்த சந்தேகம்.
இது குறித்து விளக்கம் கேட்டு சுவீடனின் அணு ஆராய்ச்சி ஆணையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அணு விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினர் அணுக் கதிர்வீச்சைக் கண்டறியும் கருவிகளுடன் இவரது வீட்டை முற்றுகையிட்டனர். சோதனையில் இவரது வீட்டின் சமையல் அறையில் கதிர்வீச்சு கொண்ட அமெரிசியம்-241 இருந்தது தெரியவந்தது.
கதிர்வீச்சை கண்டறியும் கருவியும் இவரது வீட்டில் இருந்தது. இவற்றைக் கைப்பற்றிய ராணுவத்தினர், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த தனிமம் தவிர வேறு என்னென்ன கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் வீட்டில் இருந்தன என்ற தகவலை சுவீடன் அரசு வெளியிடவில்லை. ஆனால், இவரது வீட்டிலிருந்து பெரிய அளவில் கதிர்வீச்சு ஏதும் வெளியாகவில்லை என்று மட்டும் அரசு தெரிவித்துள்ளது.
மின்சார அலார்ம்களில் அமெரிசியம்-241 என்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிர்வீச்சு கொண்ட தனிமம் இருப்பது சாதாரணம் தான். ஆனால், இதை தனியே பிரித்தெடுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த தனிமத்தை நுகர்ந்தாலோ அல்லது அதை தெரியாமல் உண்டாலோ பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், எந்தெந்த நாடுகளில் இருந்து கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை வாங்கினார் என்ற விசாரணையும், அதை இவருக்கு அனுப்பியவர்கள் குறித்த விசாரணையும் தொடங்கியுள்ளது. இந்த விசாரணைகளில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யும் களமிறங்கியுள்ளது.
தான் செயது வரும் ஆராய்ச்சி குறித்த விவரங்கள், படங்கள் சிலவற்றையும் ஹேண்டில் கடந்த சில மாதங்களாகவே இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.
நேட்டோ படைத் தாக்குதலில் கடாபியின் 7 வது மகன் உள்பட 32 பேர் பலி.
நேட்டோ படைத் தாக்குதலில் லிபிய இராணுவப் படைத் தளபதிகளில் ஒருவரான கடாபியின் 7வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகினர் என்று போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருப்பவர் கடாபி. அவரைப் பதவி விலக வலியுறுத்தி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடாபி பதவி விலகும்படி அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் 7 வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர். ஜிலிடானில் உள்ள கடாபியின் நம்பிக்கைக்கு பாத்திரமான படைகள் மீது நேட்டோ படை தாக்குதல் நடத்தியது என்று போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்த எதுவும் தெரிவிக்க முடியாது. நாங்கள் வானில் இருந்து தான் தாக்குதல் நடத்தினோம். தரையில் எங்கள் படையில்லை. ஆனால் தாக்குதல் குறித்து கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரிபோலி அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் காமிஸ் கடாபி இறந்துவிட்டதை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது. கடாபியின் 7 வது மகன் காமிஸ் லிபியா ராணுவத்தின் 32 வது பிரிகேடின் தலைவராக இருந்தார்.
போராளிகள் வசம் உள்ள மிஸ்ராடா மற்றும் திரிபோலிக்கு இடையேயுள்ள ஜிலிடானில் இந்த படை போராடி வந்தது. காமிஸின் மரணம் இந்தப் படைக்கு பேரிழப்பாகும். கடந்த ஏப்ரல் 11 ம் திகதி நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் இன்னொரு மகன் சைப் அல் அராப் மற்றும் 3 பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 38 வது நாளாக வெப்ப காற்று அபாயம்.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் கடுமையான வெப்பக் காற்று வீசியது. இந்த வெப்பக்காற்று கலிபோர்னியா முதல் வடக்கு கரோலினா வரை தாக்கியது.
டேக்சாஸ் பகுதிகளில் 100 பாரன் ஹீட்(38 டிகிரி செல்சியஸ்) வெப்ப காற்று தாக்கியது. 38 வது நாளாக அமெரிக்க மக்கள் கடும் வெப்ப துயருக்கு ஆளாகி உள்ளனர்.
தெற்கு பகுதியில் 15 மாநிலங்களுக்கு வெப்ப காற்று அபாய எச்சரிக்கையை தேசிய வானிலை மையம் விடுத்துள்ளது. கடும் வெயில் காரணமாக மிசவுரி மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன.
வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க டெக்சாசில் கடந்த 3 நாட்களாக மின்சார உபயோகம் கடுமையாக அதிகரித்தது. இந்த வாரம் முழுவதும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அர்கனாசழல் உள்ள லிட்டில் ராக் பகுதியில் 114 பாரனடஹீட் வெப்பம் புதன்கிழமை பதிவானது. டல்லாசில் 109 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடந்த 60 ஆண்டு வரலாற்றில் மிக அதிகபட்ச சாதனையாக இந்த வெப்பம் பதிவாகி உள்ளது.
சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை: ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்.
நியூயார்கின் சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவது குறித்து, ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டுனீஷியா, எகிப்தை அடுத்து, சிரியாவில் கடந்த மார்ச் 15ம் திகதி முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் துவங்கின. இப்போராட்டங்களில் இதுவரை, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 3,000 பேரை காணவில்லை. 12 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் அந்நாட்டின் பல நகரங்களில் அதிபருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் துவக்கினர். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக அங்கு ராணுவ பீரங்கிகள் குவிக்கப்பட்டன. கண்மூடித்தனமாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 140 பேர் பலியாகியுள்ளனர்.
ஐ.நா., கண்டனம்: ஐ.நா., பாதுகாப்பு சபையின் இந்த மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஐ.நா வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி சிரியாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தைப் படித்தார். சிரியாவில் வன்முறை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் மீதும் பொது மக்கள் மீதும், நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
வன்முறைக்கு உரியவர்கள் இழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து, சிரிய அரசு மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டும். சிரியாவில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால், அங்கு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை என, ஐ.நா., கண்டன தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல் திருட்டு: சீனா மீது கணணி பாதுகாப்பு நிறுவனம் குற்றசாட்டு.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசுகள் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் என மொத்தம் 72 அமைப்புகளின் இணையதளங்களுக்குள் புகுந்து, ரகசிய தகவல்களைத் திருடிய சம்பவங்களின் பின்னணியில் சீனா உள்ளதாக கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.
இது மிகப் பெரிய அறிவுத் திருட்டு என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய, அமெரிக்க ராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணையதளங்களில், இணையத் திருடர்கள் புகுந்து சர்வசாதாரணமாக ரகசிய தகவல்களைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதில், அமெரிக்காவின் வெளியுறவு சி.பி.ஐ., மற்றும் பென்டகன் ஆகியவற்றின் இணையதளங்களில் அடிக்கடி திருடப்பட்டன. இவை தவிர சில வங்கிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் இணையதளங்களில் இருந்தும் ரகசிய தகவல்கள் திருடப்பட்டன.
இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, இதன் பின்புலத்தில் ஒரு நாடு இருப்பதாக மட்டும் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல கணணி பாதுகாப்பு நிறுவனமான "மெக் அபீ" இணையதளத் திருட்டுகள் குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 2006 முதல் இதுபோன்ற இணையதளத் திருட்டுகளில் ஈடுபட்டுள்ள நாடு, சீனாவாக இருக்கலாம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, இதன் பின்புலத்தில் ஒரு நாடு இருப்பதாக மட்டும் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல கணணி பாதுகாப்பு நிறுவனமான "மெக் அபீ" இணையதளத் திருட்டுகள் குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 2006 முதல் இதுபோன்ற இணையதளத் திருட்டுகளில் ஈடுபட்டுள்ள நாடு, சீனாவாக இருக்கலாம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
"மெக் அபீ" வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த இணையதளத் திருட்டுகள் 2006ன் நடுவில் துவங்குகின்றன. கிடைத்துள்ள ஆதாரங்களின்படி பார்த்தால், அதற்கும் முன்பே அது துவக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு சில திருட்டுகள் 28 மாதங்களுக்கு முன்னும், சில திருட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பும் கூட நடந்திருக்கின்றன.
சில "வைரஸ்" உள்ள மெயில்கள் இந்த இணையதளங்களுக்கு வரும். தெரியாமல் அவற்றை திறந்து விட்டால் போதும், அதில் இருந்து வைரஸ் கணணிக்குள் புகுந்து மறுபக்கம் உள்ளவர்கள் தகவல்களைத் திருட வழிவகுத்துக் கொடுத்து விடும்.
"மெக் அபீ" யின் துணைத் தலைவர் டிமிட்ரி அல்பெரோவிட்ச் கூறுகையில்,"இந்தத் திருட்டுகள் மூலம் ராணுவம், தொழில்துறை, தனியார் நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்கள், உயர் அதிகாரிகளுக்கு இடையிலான ரகசிய பேச்சுவார்த்தைகள் போன்ற தகவல்கள் திருடுபோயுள்ளன. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறைதான் மிகப் பெரிய அறிவுத் திருட்டு நடந்துள்ளதுஎன்றார்.
இணையதளத் திருட்டுகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஜிம் லீவிஸ்,"மெக் அபீ' சுட்டிக் காட்டும் மிகச் சிறந்த நிபுணர்களில் ஒருவர். இதுகுறித்து லீவிஸ் கூறுகையில்,"பாதிக்கப்பட்டோர் வரிசையில் தைவான் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இரண்டும் இடம் பெற்றிருப்பதால், சீனா தான் இந்தத் திருட்டுகளை நடத்தியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது என்றார். அமெரிக்காவின் ராணுவ ஒப்பந்ததாரர்கள் சிலரின் இணையதள விவரங்கள் திருடு போனது குறித்து 2009ல் "மெக் அபீ" ஆய்வு செய்த போது, இந்த விவரங்கள் கிடைத்ததாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு "ஆபரஷேன் ஷேடி ஆர்.ஏ.டி." என "மெக் அபீ" பெயரிட்டுள்ளது.
சீனாவின் இணையதளத் திருட்டால் பாதிக்கப்பட்டோர் அரசுகள் : இந்தியா, அமெரிக்கா, அமெரிக்காவின் நெவேடா பகுதி அரசின் ஆயுள் காப்பீட்டுக் கூட்டமைப்பு, கனடா, தென்கொரியா, தைவான் மற்றும் வியட்நாம்.
சர்வதேச அமைப்புகள் : ஐ.நா., தென் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு (ஏஷியான்), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக போதை மருந்து எதிர்ப்பு ஏஜன்சி. ஒப்பந்ததாரர்கள் : அமெரிக்காவின் 12 ராணுவ ஒப்பந்ததாரர்கள், பிரிட்டனின் 1 ராணுவ ஒப்பந்ததாரர்.
தனியார் நிறுவனங்கள் : கட்டுமானம், உருக்கு, எரிசக்தி, சூரிய சக்தி, தொழில்நுட்பம், செயற்கைக் கோள் தொடர்பு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பல தனியார் நிறுவனங்கள். இவையும் தவிர பல சிந்தனையாளர்கள், நிபுணர்கள்.
மத்திய அரசின் 117 துறைகளில் திருட்டு இந்தாண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், மத்திய அரசின் 117 துறைகளின் இணையதளங்களில் திருட்டுகள் நடந்துள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் சச்சின் பைலட் நேற்று பார்லிமென்ட்டில் தெரிவித்தார்.
எங்கிருந்து தாக்குதல் நடந்தது, எதற்காக நடந்தது என்பவற்றை அறிவதற்காக, தாக்குதல் நடத்திய இணையதளத்தின் முகவரியைத் தரும்படி, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹைதி தீவை, எமிலி புயல் தாக்கியது.
எமிலி புயல் ஹைதி மற்றும் டொமினிக் குடியரசு தீவுகளை தாக்கிய புயலின் தாக்கம் இந்த இருநாடுகளிலும் காணப்பட்டது. புயல் காரணமாக ஹைதியின் தெற்கு கடலோரப் பகுதியில் கனமழை கொட்டியது.
கடந்த ஆண்டு ஹைதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ளனர்.
அவர்கள் இந்த புயல் பாதிப்பில் இருந்து தப்பினர். இருப்பினும் ஹைதி அரசு நிர்வாகத்தினர் தலைநகர் போர்ட் - ஆ – பிரின்ஸ் பகுதியைச் சுற்றி உள்ள முகாம்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.
முகாம்கள் மலைப்பகுதிக்கு அருகாமையில் உள்ளதால் இந்த எச்சரிக்கை தரப்பட்டது. ஹைதியில் புயல் நெருங்கிய போது அரசுக் கட்டிடங்கள் மூடப்பட்டன. விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
ஹைதியில் 15-30 செ.மீ மழை கொட்டும் என்றும், சில பிராந்தியங்களில் 50 செ.மீ வரை மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்தது. வெள்ள அபாயம் காரணமாக டொமினிக் குடியரசு தீவில் 5 ஆயிரம் மக்கள் வெள்ள அபாய இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கியூபா, பகாமஸ் பகுதிகளில் புயல் எச்சரிக்கை நீக்கப்பட்டது.
நோர்வே தாக்குதலுக்கு ஆயதம் உதவியது யார்: பிரவிக் பதில் தர மறுப்பு.
நோர்வேயில் கொடூரத் தாக்குதல் நடத்தி 77 பேர் உயிர் இழக்க காரணமாக இருந்த ஆண்டர்ஸ் பெகிரிங் பிரவிக் (32) தனக்கு உதவிய நபர்கள் குறித்து பதில் கூற மறுத்தார்.
10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்திய போதும் அவர் பதில் ஏதும் தராமல் மௌனம் சாதித்தார். நோர்வேயில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி கொடூரத் தாக்குதல் நடத்திய பிரவிக்கிற்கு சிவ நபர்கள் உதவி இருக்கலாம் என சந்கேகிக்கப்படுகிறது.
அவர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக 20 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர் தாக்குதலுக்கான ஆயுதங்களை வாங்கி உள்ளார். பயங்கர கொலைகள் செய்ததை ஒப்புக் கொண்ட பிரவிக் தான் குற்றவாளி அல்ல என்றும் கூறி வருகிறார்.
8 பேர் மரணம் அடைய காரணமாக ஓஸ்லோ கார் குண்டு வெடிப்புக்கு தான் காரணம் என்பதை அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். அதே போன்று நோர்வேயில் ஆட்சி செய்யும் தொழிலாளர் கட்சி நடத்திய இளைஞர் முகாமில் சரமாரியாக பிரவிக் சுட்டதில் 69 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் எத்தனை பேர் காயம் அடைந்தார்கள் என்றும், இதனால் நோர்வே மற்றும் அயல்நாடுகளில் எப்படி இருக்கிறது என பிரவிக் கேட்டதாக வழக்கறிஞர் லிபே ஸ்டேட் கூறினார்.
நைஜீரியாவில் இங்கிலாந்து என்ஜினீயரை கடத்திய தீவிரவாதிகள்: வீடியோ வெளியீடு.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிர்னின் கைப்பி நகரில் இத்தாலியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் உள்ளது. இங்கு இங்கிலாந்து மற்றும் இத்தாலியைச் சேர்ந்த என்ஜினீயர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 12-ம் திகதி அல் கொய்தா தீவிரவாதிகள் சிலர் பிர்னின் கைப்பி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இங்கிலாந்து மற்றும் இத்தாலியைச் சேர்ந்த என்ஜினீயர்கள் 2 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
அவர்களை மீட்கும் நட வடிக்கையில் 2 நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அவர்களது வீடியோ காட்சிகளை ஐவரிகோஸ்ட் நாட்டின் தலைநகர் அமித்ஜான் நகரில் உள்ள ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அல் கொய்தா தீவிரவாதிகள் அனுப்பி வைத்தனர்.
அதில் பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட 2 என்ஜினீயர்களின் கண்கள் கருப்பு துணியாலும், கைகள் முதுகுபுறம் வைத்து கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களின் பின்புறம் தீவிரவாதிகள் 3 பேர் முகத்தை துணியால் மறைத்தபடி கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.
மேலும் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட என்ஜினீயர்கள் தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களை மீட்டு காப்பாற்றும்படி தங்கள் நாட்டு அரசுகளுக்கு கோரிக்கை விடுத்ததும் வெளியிடப்பட்டது. ஆனால் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையே அந்த வீடியோ காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. கடத்தப்பட்டது தங்கள் நாட்டைச் சேர்ந்தவரா என்று உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் இத்தாலி தங்கள் நாட்டைச் சேர்ந்த என்ஜினீயர் கடத்தப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. அவரது பெயர் பிராஸ்கோ லமாலினரா என அறிவித்துள்ளது. அவரை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது
கிறிஸ்டியானேவிடம் விசாரணை நடத்த பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவு.
பிரான்சில், 2008 ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த சர்வதேச நிதியத் தலைவர் (ஐ.எம்.எப்.) கிறிஸ்டியானே லாகர்டே, அரசு நிதியர் முறைகேடு செய்தார் என்றக் குற்றச்சாட்டு உள்ளது.
அவர் தன்னிச்சையாக 28 கோடியே 50 லட்சம் யுரோவை தொழிலதிபர் பெர்னார்டு தாபேவுக்கு அளிக்க உத்தரவிட்டார் என கூறப்பட்டு உள்ளது. தன் மீது எந்தக் குற்றமும் இல்லை. அரசு நிதியை முறைகேடு செய்யவும் இல்லை என கிறிஸ்டியானா கூறி உள்ளார்.
முன்னாள் அரசு வங்கியான கிரடிட் லயோனய்சுக்கும், தொழிலதிபர் தாபேவுக்கும் இடையே இருந்த பிரச்சினையின் போது, அரசு நிதியை அளிக்க கிறிஸ்டியானே உத்தரவிட்டார். பெர்னார்டு தாபே, ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் நண்பர் ஆவார். 2007 ம் ஆண்டு தேர்தலின் போது சர்கோசியை ஆதரித்தார்.
பெர்னார்டு தாபே முன்னாள், இடது சாரி அமைச்சர் ஆவார். பிரான்சின் ஆளும் கட்சியின் தங்க மங்கை என கருதப்படும், கிறிஸ்டியானே மீது இந்த முறைகேடு குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பிரெஞ்சு நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவிட்டது.
கிறிஸ்டியானே கடந்த ஜூலை மாதம் சர்வதேச நிதியத் தலைவராக பொறுப்பு ஏற்றார். பதவி ஏற்ற ஒரு காலத்திற்குள் அவர் மீது விசாரணை நடைபெறுவது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு லண்டனில் பொலிஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்.
வடக்கு லண்டனில் பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம் அடைந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி காயம் அடைந்தார் என ஸ்காட்லாந்து யார்டு தெரிவித்தது.
பிரிட்டனில் நேற்று மாலை 06:15 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த தனி பொலிஸ் புகார் கொமிஷன் அழைக்கப்பட்டது. டாட்டன் ஹாம் பெர்ரி லேன் பகுதியில் பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த நபர் பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்டாரா என்பதை மெட்ரோ பொலிடன் பொலிஸ் உறுதிப்படுத்தவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் பொலிஸ் அதிகாரி ஹொஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஸ்காட்லாந்து யார்டு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சம்பவ இடத்தில் 4 துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியை பொலிசார் மூடியதால் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் குழப்பம் நிலவியது. என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என்பது புரியவில்லை. மக்கள் பதட்டத்துடன் இருந்தனர். வீட்டு பொருட்கள் வாங்க வந்தவர்கள் வீடு திரும்ப முடியாமல் பல மணி நேரம் அவதிப்பட்டனர்.
கனடா சுற்றுச்சூழல் ஊழியர்கள் 700 பேர் நீக்கம்.
கனடா சுற்றுச்சூழல்துறையில் வரவிருக்கும் மாதங்களில் 700 பணி இடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் 700 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையால் வானிலை ஆய்வு மற்றும் இதரச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வானிலை ஆய்வாளர்கள் வேதியியல் நிபுணர்கள் உயிரியல் நிபுணர்கள் மற்றும் இதர விஞ்ஞானிகளுக்கு, கனடா சுற்றுச்சூழல் சார்பில் கடிதம் அனுப்பபடுகிறது.
இதன் மூலம், இந்த ஊழியர்கள் பணி நீக்கப்படலாம் அல்லது கூடுதல் எண்ணிக்கையில் உள்ள நபர்கள் என்ற பட்டியலில் இடம் பெறலாம். கனடா சுற்றுச் சூழல் துறையில் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை குறித்து கனடா பொதுச்சேவை புரபசனல் இன்ஸ்டிடியூட் தலைவர் காரி கோர்பட் கூறுகையில், தங்கள் அமைப்பை சேர்ந்த 200 நபர்கள் சுற்றுச்சூழல் நடவடிக்கையால் பணி இழக்கின்றனர். இது வேதனை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
புரபசனல் இன்ஸ்டியூட் அமைப்பில் 57 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கனடா பெடரல் நிர்வாகத்தில் 67 அரசு துறைகள் ஏஜென்சிகள் உள்ளன.
இந்தத் துறைகளின் பட்ஜெட்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சேமிப்பது தொடர்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நிதி செலவீனம் குறைப்பு நடவடிக்கை கனடா சுற்றுச்சூழல் துறையிலும், ஆட் குறைப்பு நடக்கிறது.