Wednesday, August 10, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் ஊடுருவல்!- இலங்கை மீண்டும் வலியுறுத்து.

இலங்கையி;ன் வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் ஊடுருவல் இடம்பெற்றதாக இலங்கையின் விமானப்படையினர் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். 
ஏற்கனவே கடந்த வாரம் அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறின என்ற குற்றச்சாட்டை இலஙகை விமானப்படையினர் சுமத்தியிருந்தனர்.
எனினும் அதனை அமெரிக்காவின் இலங்கை தூதரகம் மறுத்ததுடன், அவ்வாறான ஊடுருவலில் அமெரிக்க விமானங்கள் ஈடுபடவில்லை என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.
அமெரிக்க ரொனால்ட றீகன் விமானந்தாங்கி கப்பலில் இருந்து எந்த ஒரு விமானங்களும் இலங்கையின் வான்பரப்பில் ஊடுருவவில்லை என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் தமது ரடார்கள் இலங்கையின் வான்பரப்பில் வானூர்திகள் ஊடுவியதை தெளிவாக அவதானித்ததாக இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் அன்றூ விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் ஊடுருயவிமை குறித்து இன்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளது.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
இலங்கை உள்விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாக தலையீடு செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை எனவும், அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை சுவிற்ஸர்லாந்திற்கான இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறைமையுடைய நாடு என்ற ரீதியில் இவ்வாறான கோரிக்கைகள் சட்டவிரோதமானது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் விசாரணைகள் தொடர்பாக பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தலைவராக கரு ஜெயசூரிய'வை நியமிக்குமாறு ஐ.தே.க.வின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தல்.

கட்சியின் சம்மேளனக் கூட்டத்தினை உடனடியாக கூட்டி கரு ஜயசூரிய'வை தலைவராக நியமிக்குமாறு கொண்டு வரப்பட்ட பிரேரணையினால் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் பிற்பகல் 1.15 மணிவரை காரசாரமான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. சம்மேளனத்தை உடனடியாகக் கூட்டி கரு ஜயசூரிய'வை தலைவராக நியமிக்க வேண்டுமென கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ எம்.பி. பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.
கட்சிக்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சி கண்டுள்ளதோடு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கட்சிமீது நம்பிக்கையை இழந்துள்ளனர். அத்தோடு பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்விகளையும் சந்தித்துள்ளோம். இவ்வாறான நிலையில் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியமானதாகும்.
எனவே உடனடியாக சம்மேளனத்தைக் கூட்டி கரு ஜயசூரிய'வை தலைவராக நியமிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ எம்.பி. இங்கு வலியுறுத்தியுள்ளார். இதற்கான பிரேரணையினையும் அவர் முன்மொழிந்தார். இந்த பிரேரணையை ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வழிமொழிந்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பிலான பிரேரணையினை முன்வைக்க முடியாது. அவ்வாறானதோர் பிரேரணையை கட்சியின் செயற் குழுக்கூட்டத்திலேயே முன்வைக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் செயற்குழு மீது எமக்கு நம்பிக்கையில்லை. அக்குழுவில் பக்கச்சார்பானவர்களே அங்கம் வகிக்கின்றனர். எனவே தான் செயற்குழுவிற்கு எதிராகவும், தேசிய அமைப்பாளர் பதவி நியமனம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என இங்கு கருத்துத் தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது குறுக்கிட்ட மத்தும பண்டார எம்.பி. இந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக தங்களது பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எம்.பி.க்களான ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து வெளியே சென்ற இவர்கள் மூவரையும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மீண்டும் உள்ளே அழைத்து வந்துள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட 34 எம்.பி.க்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் சஜித் பிரேமதாஸ எம்.பி.யின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. எதிர்க்கட்சித் தலைவராக தாங்கள் பதவி வகித்துக் கொண்டு கட்சித் தலைவர் பதவியை கரு ஜயசூரியவிற்கு வழங்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எம்.பி.க்களான கபீர் ஹாசிம், மத்தும பண்டார, உட்பட பலரும் இங்கு தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரோசி சேனாநாயக்க எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், கட்சி பாய பின்னடைவைக் கண்டுள்ளது. மக்கள் ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது. இது தொடர இடமளிக்க முடியாது. எனவே தலைவராக கரு ஜயசூரிய'வை நியமித்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
தடுப்புக் காவலிலுள்ள கே.பி. இராணுவப் பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் எவ்வாறு முல்லைத்தீவு செல்ல முடியும்? - ஐ,தே.க.

அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி)  எவ்வாறு விமானப்படை ஹெலிகொப்டரில் இராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
அத்துடன், வெள்ளைக் கொடி வழக்கிற்கு முன்பதாக கே.பி.யை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்தபோதே ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது நாட்டை அழிக்கவும் படையினரையும் மக்களையும் கொலை செய்வதற்கும் சர்வதேச நாடுகளில் நிதி சேகரித்து விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய கே.பி. இன்று அரச விருந்தினராக பாதுகாக்கப்பட்டு வருகின்றார்.
பாராளுமன்றத்தில் பலமுறை கே.பி. தொடர்பாக நாம் கேள்வி எழுப்பினோம். கே.பி. அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் சர்வதேச நாடுகளிலுள்ள புலிகளின் கப்பல்கள், பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் உட்பட சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்ளப் போவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரையில் இவை பெற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா  என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. அத்தோடு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. வழக்கு தாக்கல் செய்யப்படவும் இல்லை.
வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்கு முன்பதாக கே.பி. க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாட்டை அழித்த கே.பி. விமானப்படை ஹெலிகொப்டரில் இராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்.
அரச தடுப்புக் காவலில் இருப்பதாக கூறப்படும் கே.பி. அரச விருந்தினராக பாதுகாக்கப்படுகிறார். விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அரசாங்கம் சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்க முன்வருவதில்லை.
திறமையற்ற தூதுவர்கள் வெளிநாட்டுக்கான இலங்கைத் தூதுவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வெளிநாட்டமைச்சருமே நியமிப்பார்கள்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் வெளிநாட்டிலுள்ள எமது தூதுவர்கள் திறமையாக இயங்குவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் பின்னணியில் உள்ளவர்களை நியமித்தால் இந்த நிலைமை தான் உருவாகும். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான இராஜதந்திர அணுகுமுறைகளும் தெரியாது. இந்த நிலைமைக்கு தூதுவர்களை நியமித்தவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
சனல் 4 முரண்பாடு சனல் 4 ஒளிபரப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்படுமென பாராளுமன்றத்தில் வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். ஆனால் வெளியில் போய் சனல் 4 க்கு எதிராக வழக்கு தொடர முடியாதென்று சொல்கிறார். இவ்வாறு முரண்பாடான கருத்துக்களை அரசாங்கம் வெளியிடுகின்றது.
நாட்டின் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இது தொடருமானால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றார். 
இலங்கை கடலில் எதிர்ப்பார்க்காத அளவில் அலைகள் கொந்தளிப்பு.

இலங்கையின் எதிர்பார்க்காத அளவில் கடல் அலைகள் கொந்தளிப்புடன் கரைக்கு வந்து மோதுவதன் காரணமாக பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சீனா உட்பட்ட ஆசிய பசுபிக் நாடுகளில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டின் ஒரு பாதிப்பாகவே இந்த கடும் கடல் அலைகள் கொந்தளித்து கரையுடன் மோதுவதாக காலநிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இலங்கையின் தென்மேற்கு பகுதி கடற்கரைகளில் கடல்குளியல்களில் ஈடுபடவேண்டாம் என்று காலநிலை மையம் எச்சரிக்கையுடன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வன்னியில் போர்க் குற்றம் நிகழ்ந்தமை கோத்தபாயவுக்கும் தெரியும்! அனைத்துலக விசாரணை தேவை என்கிறது அமெரிக்கா.

வன்னிப் போரின் போது போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்பது இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத் தெரியும் என்ற சாரப்படக் கருத்துத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
போரின் போது இடம்பெற்றதாக எழுப்பப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசுகூட விசாரணை நடத்தி வருகின்றது என்பது அவருக்கும் (கோத்தபாய) தெரியும்.
எனினும் அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்றே நம்பப்படுகிறது. அதுதான் எல்லோருடைய விருப்பமும்கூட என்று தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்றன அனைத்துலக விசாரணை கோருவது நியாயமற்ற செயல் என்று இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய தெரிவித்த கருத்துக் குறித்துக் கேட்டபோதே அமெரிக்கப் பேச்சாளர் இதனைக் கூறினார்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக்கூறும் செயல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம்.
விசாரணைகளுக்கும் பொறுப்புக் கூறுதலுக்குமான சாதகமான நகர்வாக ஐ.நா. நிபுணர் குழுவை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம் என்றும் ரோனர் தெரிவித்தார்.
லண்டன் கலவரத்தில் இலங்கையர் பாதிக்கப்படுகிறார்களா - அவதானிக்கிறாராம் கோத்தபாய.

கடந்த வியாழக்கிழமை ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை பிரித்தானியப் பொலிஸார் சுட்டதையடுத்து அங்கு  மூண்ட கலவரம் இன்றுவரை தொடர்ந்தவண்ணம் உள்ளது.
லண்டனில் உள்ள இலங்கையர்கள் இக்கலவரங்களில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்களா என்பது தொடர்பில் மிகவும் அவதானமாக கண்காணித்து வருவதாக லண்டனில் உள்ள இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
லண்டன் கலவரங்கள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்களையும் அவர்களுடைய சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்ய அஞ்சத் தேவையில்லை! - இந்திய உயர்ஸ்தானிகராலயம்.

இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு இலங்கையர்கள் அஞ்சத் தேவையில்லை எனவும், இலங்கையர்கள் மற்றும் இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் யாத்திரைகள், சுற்றுலாக்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவிற்கு செல்லும் இலங்கையர்கள் அச்சமின்றி செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வருத்தம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை யாத்திரிகர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க வேண்டாம் என உத்தரவிடவில்லை என தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சென்னை ஹோட்டல்களில் இலங்கையர்களை தங்க வைக்க வேண்டாம் என பொலிஸார் கோரவில்லை என மேலதிக பொலிஸ் ஆணையாளர் நம்பிராஜ் காந்தன் தெரிவித்துள்ள போதிலும் பொலிஸார் உத்தரவு பிறப்பித்ததாக எக்மோர் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைச் சுற்றுலாப் பயணிகளினால் தமிழகத்திற்கு கனிசமானளவு வருமானம் கிட்டுவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளினால் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் எனவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் - கமரோன்.

பிரிட்டனில் நடந்துள்ள வன்செயல்களை அடுத்து சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
நடந்தவை அனைத்தும் முற்றிலும் குற்றச் செயல்கள், அவை தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் கடுமையான பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றம் மீண்டும் வியாழக்கிழமை கூட்டப்பட்டு நிலைமை ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லண்டன் வீதிகளில் நான்காவது இரவாகவும் வன்முறைகள் தொடராதிருக்க சுமார் 16 ஆயிரம் பொலிசார் கடமையில் இருப்பார்கள்.
சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவதாக காண்பிக்க கமரோன் விரும்புவதாகவும், ஆனால் இராணுவத்தை அழைத்தல் மற்றும் நீரை பீய்ச்சி அடித்து கலவரத்தை அடக்குதல் போன்ற நடவடிக்கை போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு லண்டனில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறைகள் நேற்று இரவு தலைநகரின் பிற இடங்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
கடை, அங்காடிகள் சூறையாடப்பட்டனகடைகள் குறிவைத்து திருடப்பட்டன. கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
காவல் துறையினரும், தீ அணைப்புத் துறையினரும் நிலமையை சமாளிக்கும் அளவுக்கு ஆளணி பலம் இன்றி இருந்தனர்.
சில இடங்களில் இதனால் தங்கு தடையின்றி திருடுவது நடைபெற்றது. லண்டனின் சில பகுதிகள் நேற்று இரவு மிகவும் அச்ச மூட்டும் பகுதிகளாக காட்சியளித்தாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வன்முறை தொடர்பாக நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்தவர்களை தடுத்து வைக்க இடமின்றி லண்டன் காவல் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.
பேர்மிங்ஹாம், லிவர் பூல் மற்றும் பிரிஸ்டல் ஆகிய லண்டனுக்கு வெளியே உள்ள பிரதேசங்களிலும் கடைகளும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
தெற்கு லண்டனில் நேற்றுத் திங்களன்று நடந்த வன்செயல்களின் போது சுடப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணமாக இது கூறப்படுகிறது.
அதேவேளை, கடந்த வாரம், ஆயுதந்தாங்கிய பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மார்க் டகனின் மரணம் குறித்தும் ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணமே டோட்டனம்ஹாமில் முதலில் வன்செயல் ஆரம்பிக்க காரணமானது.
மார்பில் துளைத்த ஒற்றை துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் அவர் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குற்றச்செயல்கள் தொடர்பில் 563 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாரிய முற்றுகைக்காக இலங்கையை அமெரிக்கா வேவு பார்க்கின்றது!- தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.

பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா இலங்கையை வேவு பார்க்கின்றது. எனவே, அரசாங்கம் படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அது மட்டுமன்றி, உள்ளூர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாளவேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெவித்துள்ளது.
அமெரிக்காவின் பத்து போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் அத்துமீறி ஊடுருவியது தற்செயலாக இடம்பெற்ற செயலாக கருத முடியாது. தற்போது அவ்வாறான சம்பவம் நடைபெறவில்லை யென்றும் அமெரிக்கா கூறி வருகின்றது.
இதிலிருந்து உள்நோக்கமும் நாட்டிற்கு எதிரான முற்றுகையும் வெளிப்பட்டுள்ளது என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,
யுத்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் மிகவும் தீவிரமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கா இலங்கை விடயத்தில் மிகவும் தீவிரமாகவே செயற்படுகின்றது.
அது மட்டுமன்றி அனுமதியின்றி ஏனைய நாடுகளில் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துதல், சிறு நாடுகளை ஆக்கிரமித்தல் என்று பல்வேறு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா அண்மைக்காலமாக தீவிரமாக செயற்படுகின்றது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்திய விஜயத்தின் போதும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார். தற்போது ஆசிய பசுபிக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள அமெரிக்க 7 ஆவது விஷேட கூட்டுப்படையின் 10 போர் விமானங்கள் இலங்கை வான்பரப்பில் ஊடுருவிச் சென்றுள்ளன.
இந்த ஊடுருவல் முதல் தடவையாக இடம்பெற்றதாக கூறமுடியாது. ஏனெனில் தற்போது வெளிப்படுகின்ற தகவல்களைப் பார்த்தால் பல தடவைகள் மிகவும் மர்மமான முறையில் அமெரிக்க விமானங்கள் வேவுபார்த்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உஷார் நிலையில் இருக்க வேண்டும். இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும். அமெரிக்காவினால் எப்போதும் ஆபத்து வரலாம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
சீனாவில் முதல் போர் விமான கப்பல்: முதன் முறையாக கடலில் சோதனை.
சீனாவின் முதல் போர் விமானக் கப்பல் தனது துவக்க சோதனையை துவங்கி உள்ளது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்தது.
பழைய சோசியத் கப்பலே தனது முதல் போர் விமானக் கப்பலாக இருக்கும் என சீனா சமீபத்தில் உறுதிப்படுத்தியது. சீனா கடல் பகுதியில் ஆயுதங்களை குவித்து வருவது அருகாமை நாடுகளுக்கு கவலையை அளித்துள்ளன.
போர் விமானக் கப்பல் முதல் சோதனை ஓட்டம் மிக நீண்டதாக இருக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துறைமுக நகரமான தாலியான் பகுதியில் உள்ள கப்பல் தளத்திற்கு போர் விமானக் கப்பல் திரும்பியதும் அதனை மீண்டும் சீரமைப்பது மற்றும் சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த போர் விமானக் கப்பல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என பெய்ஜிங் கடந்த மாதம் பதட்டத்தை தணிக்கும் வகையில் கருத்து வெளியிட்டது.
300 மீற்றர் நீளம் கொண்ட கப்பல் பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது என ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த போர் விமானக் கப்பலுக்கு "வார்யாக்" என்பது பெயராகும்.
இந்தப் போர்க் கப்பல் முதலில் சோவியத் கடற்படைக்காக உருவாக்கப்பட்டது. சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு உடைந்ததால் இந்தக் கப்பல் கட்டும் பணியில் தடை ஏற்பட்டது.
எதிர்ப்புகளுக்கு பணிய மாட்டேன்: சிரிய அதிபர்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவ வன்முறைகளை சிரியா மேற்கொண்டு வருகிறது.
இந்த ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த நிர்பந்தம் தீவிரமான போதும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பணிய மாட்டேன் என அசாத் எச்சரிக்கை விடுத்தார்.
சிரியா தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி அந்த நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் துருக்கி அமைச்சர் அகமது தாவூதோகுளு நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அசாத் பேசுகையில்,"எதிர்ப்புகளுக்கு பணிய மாட்டேன்" என திட்டவட்டமாக தெரிவித்தார். நேற்றைய ராணுவ தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து சிரியாவில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 5 மாதத்தில் இதுவரை 1700 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
பல ஆயிரம் பேரை சிரியா அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதற்கிடையே அசாத் அரசு மீது புதிய தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நிதி மற்றும் வர்த்தக கட்டமைப்பு துறைகளில் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் பலியான விமானிகளின் கடைசி நிமிட பேச்சுவார்த்தை வெளியீடு.
ஏர் பிரான்ஸ் விமானம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 228 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விமான விபத்தில் 5 பிரிட்டன் மற்றும் 3 இளம் அயர்லாந்து மருத்துவர்கள் இருந்தனர். விமானம் கடலில் மூழ்கும் போது இரு விமானிகள் இப்போது நாம் என்ன செய்வது என கலவரத்துடன் பேசிய வார்த்தைகள் பதிவாகி உள்ளன.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு விமானம் வந்த போது விபத்துக்கு உள்ளானது.
விமானம் கடலில் நொறுங்கும் தருணத்தில் விமானிகள் டேவிட் ரொபர்ட்(37), பியரே வெட்ரிக்(32) ஆகியோர் மரணப் பீதியில் பேசிய கடைசி வார்த்தைகள் கறுப்புப் பெட்டியில் பதிவாகி உள்ளன.
விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென வீசிய பலத்த காற்றில் விமானம் தள்ளாடிய போது நீ என்ன நினைக்கிறாய்? இப்போது நாம் என்ன செய்வது என ரொபர்ட் அச்சத்துடன் கேள்வி எழுப்பினார்.
என்னால் விமானத்தைக் கட்டுப்படுத்தி முடியவில்லை என பலமுறை பொனின் பதில் அளித்தார். 2 நிமிட நேரத்தில் 6 முறை எச்சரிக்கை தரப்பட்டது.
இந்த விமானத்தின் கப்டனான 58 வயது பார்க் துபோய்ஸ் வழக்கமான ஓய்வு நேரத்தில் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானது. துபோய்ஸ் 11 ஆயிரம் மணி நேரம் விமானம் செலுத்தி அனுபவம் பெற்றவர். ரொபர்ட்ஸ் 6500 மணி நேரம் விமானத்தை இயக்கியவர்கள் ஆவார்கள்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் கடும் நிலநடுக்கம்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான்: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று 5.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்று காலை 5.53 மணியளவில் குவெட்டாவுக்கு தென்மேற்கே 330 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜனவரியில் பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
2005 அக்டோபரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா: சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனானில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 10,474 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பிரிட்டன் கலவரம்: தனது குடிமக்களுக்கு ஜேர்மனி எச்சரிக்கை.
லண்டனிலும் இதர நகரங்களிலும் கடந்த நான்கு நாட்களாக வன்முறை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரிட்டனுக்கு பயணம் செய்யும் தனது குடிமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்லும் இடத்தில் பிரச்சனை ஏற்பட்டால் ஜேர்மனி மக்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
லண்டனில் தொடர்ந்து மூன்று நாள் இரவு தீ வைப்பு, வன்முறைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஜேர்மனி இவ்வாறு எச்சரித்து உள்ளது.
நேற்று இரவு பிரிட்டனின் பிரிஸ்டல், பிர்மிங்ஹாம், லிவர்பூல் நகரங்களில் வன்முறை பரவியது என ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் வன்முறையைத் தொடர்ந்து 450 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் குடியேறியவர்களுக்கு இதய நோய் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்.
கனடாவில் குடியேறி 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயம் அதிகம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நாட்டிற்கு சமீபத்தில் குடியேறியவர்களை காட்டிலும் பல வருடங்களாக இங்கு இருப்பவர்களுக்கு இதய நோய் அபாயம் இருப்பது தெரியவந்தது.
கனடா இதயம் மருத்துவம் சார்ந்த இதழில் மருத்துவ சோதனை ஆய்வு அறிவியல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை கனடா கொம்யூனிட்டி சுகாதார ஆய்வு புள்ளி விவரப்படி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வு கனடா ஒண்டோரியோவில் குடியேறியவர்களை முன்னிறுத்தி செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் 2½ லட்சம் பேர் கனடாவிற்கு குடியேறி வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஒண்டோரியாவில் குடியேறுகிறார்கள்.
ஒண்டோரியாவில் நீண்ட காலத்திற்கு முன்னர் குடியேறியவர்களுக்கு தற்போது வந்துள்ளவர்களை காட்டிலும் இதய நோய் அபாயம் அதிகம் உள்ளது என மரியா சியு தெரிவித்தார்.
1 லட்சத்து 63 ஆயிரத்து 797 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 653 வெள்ளை இனத்தவர்கள், 3364 தெற்கு ஆசியர்கள், 3038 சீனர்கள், 2742 கறுப்பினத்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதய நோய் அபாயத்தை தவிர்க்க முறையான உணவுப் பழக்கத்தை புரிந்து கொள்ள வேண்டி உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்ட சரக்கு விமானம் மாயம்.
ரஷியாவில் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்ட சரக்கு விமானம் சில நிமிடங்களில் மாயமானது.
ரஷியாவின் சூட்கோட்கா பகுதிக்கு 11 விமான ஊழியர்களுடன் ஏஎன்-12 ஜெட் விமானம் காம்ஸ்மோல்ஸ்க் என்ற இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.
இது ஆவிஸ்-ஆமூர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அவசரமாக தரையிறங்க அனுமதி கோரி மாகடன் விமான நிலையத்துக்கு அதன் விமானி தகவல் கொடுத்தார்.
விமானம் தரையிறங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கவிருந்த நேரத்தில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ரேடார் திரையில் விமானத்தின் நடமாட்டம் மறைந்தது. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மாயமான சரக்கு விமானத்தை தேடிவருகின்றனர். அடிக்கடி விபத்துக்குள்ளாகும் பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும் ஏஎன்-24, டியூ-134 ரக இரண்டு என்ஜின்கள் கொண்ட ஜெட் விமானங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் புழக்கத்திலிருந்து விலக்கி கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் டிமெட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு திறன் உள்ளது: ஒபாமா.
கடனை திருப்பி செலுத்தும் திறன் வலுவாக உள்ளது, நாட்டின் பொருளாதார நிலையும் வலுவாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நிதி நிலை குறித்து ஸ்டாண்டர்ட்&பூர் தரச்சான்று நிறுவனம் கடந்த வாரம் தனது மதிப்பீட்டை வெளியிட்டது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செய்தி நிறுவனங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க நிதி நிலை குறித்து எந்த நிறுவனம் தகுதிச் சான்றிதழ் அளித்தாலும், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான முதலீட்டைக் கொண்ட நாடு அமெரிக்கா தான்.
அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டைத்தான் பாதுகாப்பான முதலீடாக இன்னமும் பலர் கருதுகின்றனர். இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். அதை எப்படி தீர்ப்பது என்பது நமக்குத் தெரியும் என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கடன் வரம்பை அதிகரிப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் நிலவி வந்த இழுபறி நிலை காரணமாக அமெரிக்காவின் கடனை திருப்பிச் செலுத்தும் நிலையை அந்த சான்றளிப்பு நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறையவில்லை.
இதனால் அமெரிக்க நிதி நிலையில் பிரச்னை இல்லை என்று கூற முடியாது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தரச்சான்று நிறுவனம் கூற வேண்டியதில்லை என்றார்.
அமெரிக்க நிதிப் பற்றாக்குறை நடப்பாண்டில் 160 லட்சம் கோடி டொலராக இருக்கும். இதைக் குறைக்க செல்வந்தரகளுக்குக் கூடுதல் வரி விதிப்பதன் மூலம் இதை நீண்ட காலஅடிப்படையில் குறைத்து விட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அதிரடி மாற்றங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆனால் வரி உயர்வுக்கு பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய நிலைக்கு திட்டமிடாதது மற்றும் அரசின் கொள்கைகளோ காரணமல்ல. முடிவுகள் எடுப்பதில் காணப்பட்ட உறுதியற்ற நிலை தான் இதற்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார் ஒபாமா.
விலைவாசி உயர்வால் சீனப் பொருளாதாரம் பாதிக்கப்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை.
சீனாவில் கடந்த மாதம் கடுமையாக விலைவாசி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்றாண்டுகளுக்குப் பின் மிக அதிகளவில் விலைவாசி உயர்ந்துள்ளதால் சீனப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தேசிய புள்ளியியல் துறை நேற்று அந்நாட்டின் கடந்த மாத விலைவாசி உயர்வு பற்றிய விலைவாசிக் குறியீட்டு எண் விவரங்களை வெளியிட்டது. அதன்படி கடந்த ஜூலையில் மட்டும் விலைவாசி உயர்வு 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2008 ஜூனில் விலைவாசி 7.1 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு ஜூனில் அதுவே 6.4 சதவீதமாக இருந்தது. இந்த புள்ளிவிவரம் எரியும் தீயில் எண்ணெய் விட்ட கதையாக ஏற்கனவே கொந்தளிப்பில் உள்ள சீன சமூகத்தில் மேலும் கலவரத்தை உண்டு பண்ணலாம் என அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கடன் விவகாரத்தால் உலகப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்த விலைவாசி உயர்வு சீனப் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த மாதம் மட்டும் சீனாவில் உணவுப் பொருட்கள் விலை 14. 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவின் நடுத்தர குறைந்த வருமானம் பெறுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்த கடந்தாண்டு அக்டோபர் முதல் இதுவரை ஐந்து முறை அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஏற்றியும் கூட எவ்விதப் பலனும் கிட்டவில்லை.
கடந்த 12 மாதங்களில் வங்கிகளின் கையிருப்பையும் பல முறை அதிகரித்தது சீன அரசு. தற்போதைய உலகப் பொருளாதார சிக்கலில் சீனா தனது நிதிக் கொள்கையைத் தளர்த்தி உள்நாட்டு நுகர்வை அதிகப்படுத்தினால் தான் விலைவாசி உயர்வை ஓரளவேனும் சமாளிக்க முடியும்.
விலைவாசி உயர்வு, உலகப் பொருளாதாரப் பிரச்னை இரண்டையும் சமாளிக்க வேண்டிய சூழலில் சீன அதிகாரிகள் உள்ளனர். எனினும் இந்த விலைவாசி உயர்வு தற்காலிகமானது தான். இனி அது கொஞ்சம் கொஞ்மாக இறங்கத் துவங்கிவிடும் எனவும் சில நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
லண்டனில் தொடரும் கலவரம்: பிரதமர் அவசர ஆலோசனை.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கலவரம், கொள்ளை மூன்றாவது நாளான நேற்று நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது.
இதையடுத்து இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உடனடியாக நாடு திரும்பினார். பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியை சேர்ந்த மார்க் டக்கன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொலிசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதையடுத்து டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், ஏ.டி.எம் இயந்திரங்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன.
டோட்டன்ஹேம் பகுதி முழுவதும் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் டோட்டன்ஹேமில் ஏற்பட்ட கலவரம் படிப்படியாக லண்டனின் பிறபகுதிகளுக்கும் பரவியது. பார்க்கும் இடங்களில் எல்லாம் வணிக வளாகங்கள், ஹொட்டல்கள், ஏ.டி.எம் இயந்திரங்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்ததுடன் அடித்து நொறுக்கினர்.

சாலைகளில் சென்ற வாகனங்கள் குறிப்பாக பொலிஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் முகமூடி அணிந்த நபர்கள் கும்பல் கும்பலாக கடைகளில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

ஹாக்னே என்ற இடத்தில் 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கும் பொலிசார் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கலவரத்தின் மூன்றாவது நாளான நேற்று லண்டன் நகரை தொடர்ந்து பிரிட்டனின் இதர வணிக நகரங்களான பர்மிங்காம், பிரிஸ்டல், லிவர்பூல் மற்றும் நாட்டிங்காம் போன்ற நகரங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது.
இதனிடையே பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு நேற்று நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக பாராளுமன்ற அவசர கூட்டத்தை(கோப்ரா) கூட்டி பிரதமர் கமரூன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரையிலும் 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டன் தெருக்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டத்தின் கடுமையை கலவரக்காரர்கள் உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொலிசார் முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டியுள்ளது" என்றார்.


கடன் பத்திரங்களை வாங்கியதால் நெருக்கடியிலிருந்து மீண்ட ஐரோப்பிய பங்குச்சந்தை.
ஐரோப்பிய மத்திய வங்கி ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளின் கடன் பத்திரங்களை நேற்று வாங்கத் துவங்கியதால் ஐரோப்பிய பங்குச் சந்தையின் தடுமாற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் உலகளாவிய நிலையில் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக ஜி 7 மற்றும் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
அமெரிக்க கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பாவில் யூரோ பயன்படுத்தும் நாடுகள் ஒருங்கிணைந்து நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களில் ஜி 7 மற்றும் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள், அந்நாடுகளின் மத்திய வங்கி கவர்னர்கள் ஆகியோர் கைத்தொலைபேசியில் "கான்ப்ரன்ஸ் கோல்" மூலம் பேசினர்.
அவர்களின் அவசரக் கூட்டத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை, அதன் விளைவான பங்குச் சந்தைகளின் தடுமாற்றம் ஆகியவை விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன.
முடிவில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் விடுத்த கூட்டறிக்கையில்,"உலகின் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் ஜி 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் விடுத்த கூட்டறிக்கையில்,"இப்பிரச்னையை அனைத்து விதங்களிலும் சமாளிக்க உறுதி பூண்டுள்ளோம். அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள சீர்திருத்தங்களால் விரைவில் அந்நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறையும் என நம்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் நேற்று முன்தினம் ஐரோப்பிய மத்திய வங்கி தான் கூறியதைப் போல கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் கடன் பத்திரங்களை வாங்கத் துவங்கியது.
இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் இறுதியில் நிகழ்ந்த தடுமாற்றம் இந்த வாரமும் தொடராமல் தடுக்கப்பட்டது. ஜி 7 நாடுகளின் கூட்டறிக்கை மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் முயற்சி ஆகியவற்றை சர்வதேச நிதியமைப்பு(ஐ.எம்.எப்) வரவேற்றுள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோ: உண்மை தன்மை குறித்து நைஜீரியா ஆய்வு.
அல்கொய்தா தீவிரவாதிகள் கடத்திச் சென்ற பிணைய நபர்கள் குறித்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து நைஜீரியா பாதுகாப்புச் சேவை ஆய்வு செய்தது.
அல்கொய்தா வீடியோ ஒலிநாடாவில் பிரிட்டன் நபரும், அவரது இத்தாலி நண்பரும் உள்ளனர் என நைஜீரியா வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பிணைய நபர்கள் குறித்து ஒரு நிமிட வீடியோ ஒலிநாடா உள்ளது. கடந்த மே மாதம் வடக்கு நைஜீரியாவில் அவர்கள் கடத்தப்பட்டனர். அந்த நபர்களின் கண்கள் மூடப்பட்டு இருந்தன.
அவர்கள் அருகே டர்பனால் முகத்தை மறைத்தபடி 3 ஆயுதம் ஏந்திய நபர்கள் நிற்கிறார்கள். இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பாதுகாப்பு முகமையை கேட்டு உள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தீவிரவாதம் என்பது எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடயமல்ல. அது மிக பயங்கரமான பாதுகாப்பு விவகாரம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அலுவலகம் அல்கொய்தா வீடியோ ஒலிநாடா ஆதார உண்மையை விரைவாக உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.


ரஷ்யாவில் விமான விபத்து: 15 பேர் படுகாயம்.
ரஷியாவில் பயணிகள் விமானம் ஒன்று பிலாகோ வெஷ் சென்ஸ்க் விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கியது.
அப்போது காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஓடு தளத்தில் இறங்கிய விமானம் தாறு மாறாக சறுக்கி 200 மீற்றர் தூரம் ஓடி விபத்துக்குள்ளாது.
அதில் விமானத்தின் இறக்கைகள் உடைந்தன. அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலிபான் தீவிரவாதிகளின் கைவிரலை வெட்டி எடுத்த ராணுவ வீரர்.
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டி எடுத்ததாக இங்கிலாந்து ராணுவ வீரர் மீது புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் லஷ்கர், தலிபான் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்க, இங்கிலாந்து படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.
இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கொல்லப்பட்ட தலிபான் தீவிரவாதியின் விரல்களை இங்கிலாந்து ராணுவ வீரர்கள் வெட்டி எடுத்துள்ளனர். அதை நினைவு சின்னமாக வைத்துக் கொள்வதற்கு வெட்டி எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"இது மிகப் பெரிய புகார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
ஆப்கனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: இந்த சம்பவத்தில் ஒரே ஒரு ராணுவ வீரர்தான் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர் ஆப்கன் பொலிசாருடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட இப்போதுதான் முதன்முதலாக வந்துள்ளார். அந்த மன அழுத்தம் காரணமாக அவர் அப்படி செய்திருக்கலாம் என்கின்றனர்.
சிரிய அரசுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்: துருக்கி அரசு கடும் கண்டனம்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் அரசின் ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பீரங்கி தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்து இறக்கின்றனர். இந்தத் தாக்குதலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அகமத் தாவூதோகுனா சிரியா விரைகிறார்.
போராட்டக்காரர்கள் மீது சிரியா ராணுவம் வன்முறைத் தாக்குதல் நடத்துகிறது. இதனால் என் பொறுமை மீறி விட்டது என துருக்கி பிரதமர் ரெசப் தாயிப் எர்டோகன் எச்சரித்து இருந்தார்.
சவுதி அரேபியா, குவைத், பக்ரைன் ஆகிய நாடுகள் சிரியாவின் டமாஸ்கசிற்கான தூதர்களை திரும்ப அழைத்தன. இந்நிலையில் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தாவூதோகுனா சிரியா செல்கிறார்.
நேற்று சிரியாவின் கிழக்கு நகரமான டெய்ர் அல்-சோர் பகுதியில் சிரிய ராணுவ பீரங்கிகள் தாக்குதலை தொடர்ந்தன. ஞாயிற்றுக்கிழமை சிரியா ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்.
தாக்குதல் தீவிரமாகி உள்ள நிலையில் முன்னாள் ராணுவ தலைவர் ஜெனரல் தாவூத் ரஜ்காவை புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜனாதிபதி அவாத் நியமனம் செய்துள்ளார்.
ஜெனரல் அலி ஹபிப்புக்கு பதிலாக ஜெனரல் தாவூத் அமைச்சராகிறார். சிரியாவில் அயல்நாட்டு பத்திரிக்கைகள் செல்ல கட்டுப்பாடு உள்ளன. மார்ச் மாதம் மத்தியில் சிரியாவில் போராட்டம் வெடித்தது. இதுவரை 1700 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
துருவ பனிக்கட்டிகள் மூலம் ஆப்ரிக்க மக்களின் பஞ்சத்தை போக்கலாம்: நிபுணர்கள் தகவல்.
ஹார்ன் ஆப்ரிக்காவில் கடுமையான வறட்சி உள்ளது. இந்த வறட்சியை போக்குவதற்கு துருவப்பகுதியில் உள்ள ராட்சதப் பனிக்கட்டிகளை கொண்டு வர முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
5 லட்சம் மக்களுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தரும் வகையிலான பனிக்கட்டியை இழுத்து வர முடியும். இந்தப் பனிக்கட்டி வருவதால் உலக வெப்பமயமாவதை தடுக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
துருவப் பகுதியில் உள்ள பனிக்கட்டியை கொண்டு வரும் திட்டத்தை 1970ஆம் ஆண்டு பொறியியல் பட்டதாரி ஜார்ஜஸ் மோகின் அறிமுகப்படுத்தினார். அவரது கருத்தை துவக்கத்தில் சவுதி இளவரசர் ஏற்றார்.
அந்த இமாலய பனிக்கட்டியை இழுத்து வருவது அதிக செலவினம் கொண்டது என நிபுணர்கள் எச்சரித்தனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜார்ஜஸ் கூறிய கருத்தை தற்போது புதிய கணணி  தொழில்நுட்பம் சாத்தியமாக்கி உள்ளது.
86 வயது ஜார்ஜசை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் டாசல்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் அந்த திட்டம் குறித்து விவாதித்தது. பிரான்ஸ் கணணி வடிவமைப்புபடி  70 லட்சம் டன் பனிக்கட்டியை உருகாமல் 5 மாதத்திற்கு ஒற்றை இழுவை படகு மூலம் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிக்கட்டி பல ஆயிரம் மைல் வரும் போது 525 அடி ஆழ பனிக்கட்டியில் 38 சதவீதம் மட்டும் உருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருவப்பகுதிகளில் 40 ஆயிரம் பனிக்கட்டிகள் உள்ளன. உலகின் 70 சதவீத தூய நீர் அங்கு உள்ளது. இந்த பனிக்கட்டி 3 கோடி டன் எடை கொண்டது. ராட்சத பனிக்கட்டி உருகாத வகையில் அதனை மூடி கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முஸ்லிம்கள் வீதிகளில் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளை தடுக்க பிரான்ஸ் முடிவு.
தலைநகர் பாரிஸ் மற்றும் அருகாமை பகுதிகளில் முஸ்லிம்கள் வீதிகளில் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இதனை தடுப்பதற்கு பிரான்ஸ் அரசு பயன்படுத்தப்படாத கட்டிடங்களை பிரார்த்தனைக்கு தர ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முடிவை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிஸிடே குயின்ட் தெரிவித்தார். அரசு ஒதுக்கும் கட்டிடங்களை முஸ்லிம் தலைவர்கள் பார்த்து அதற்கு ஒப்புக் கொண்டனர்.
வீதிகளில் பிரார்த்தனை செய்வது என்பது ஏற்க முடியாத ஒன்று. பிரான்சின் மதச்சார்பின்மை கொள்கைக்கு இது முரணானது என அமைச்சர் தெரிவித்தார். வீதிகளில் நடக்கும் பிரார்த்தனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்ளுர் மசூதிகளில் போதிய இடம் இல்லாத நிலையில் முஸ்லிம்கள் பாரிசின் 18வது அரோன்டிஸ் மென்ட்டில் 2 வீதிகளில் பிரார்த்தனை நடத்தினர். முஸ்லிம்கள் பிரார்த்தனைக்கு ஒதுக்கப்படும் கட்டிடங்கள் செப்டம்பர் 16ஆம் திகதி முதல் தயார் நிலையில் இருக்கும்.
பெரு பிரான்சின் 2வது நகரமான மார் செய்லேவிலும் வீதிகளில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அங்கும் வீதி பிரார்த்தனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பஞ்சத்தில் தவிக்கும் ஆப்ரிக்க மக்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க ஜேர்மனி முடிவு.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கிழக்கு ஆப்ரிக்கா பஞ்சத்தில் பரிதவிக்கிறது.
பயிர் விளைச்சல் இல்லாமல் கருகி பட்டினியால் உயிருக்கு போராடும் ஹார்ன் ஆப்ரிக்க மக்களுக்கு உதவ ஜேர்மனி நிவாரண உதவியை மேலும் அதிகரித்துள்ளது.
மூன்று பெரும் ஜேர்மனி நிவாரண முகமைகள் கடந்த சில வாரங்களில் 6 கோடியே 40 லட்சம் யூரோக்களை நன்கொடையாக சேகரித்து ஆப்ரிக்க மக்களின் துயரத்தைப் போக்க அளித்து உள்ளன.
அகிடோன் டெயுட்ஸ் வேண்ட் ஹஜப்ட் என்ற நிவாரண முகமை கூட்டணி மட்டும் 1 கோடி யூரோ நன்கொடையை சேகரித்து அளித்து உள்ளது. இதனை இந்த முகமையின் இயக்குனர் பீட்டர் முகே தெரிவித்தார்.
ஆப்ரிக்க பிராந்தியத்திற்கு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதில் ஜேர்மனி அரசு உறுதி கொண்டுள்ளது. இதுவரை 3 கோடியே 30 லட்சம் யூரோ அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் 3 கோடி யூரோவை கூடுதல் உதவியாக அளிக்க ஐரோப்பிய கொமிஷன் நடவடிக்கை எடுக்கிறது. இதற்கும் ஜேர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நிவாரண உதவிகள், உணவு, தண்ணீர் வாங்குவதற்கு செலவிடப்படுகிறது. சோமாலிய நாட்டின் பரிதாப நிலையால் சர்வதேச நிவாரண நிதிகள் குவிகின்றன.
லிபிய நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை: கனடா ஜெனரல் தகவல்.
லிபியாவில் நேட்டோ தலைமையிலான படைகளின் நடவடிக்கையில் ஐந்து மாதமாக முன்னேற்றம் இல்லை.
இத்தகவலை கனடா மேஜர் ஜெனரல் ஜோதைன் வான்ஸ் அயல் விவகாரம் தொடர்பாக கனடா பொதுச்சபை எம்.பி.க்களிடம் தெரிவித்தார்.
லிபியாவில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் கனடா துருப்பினரும் உள்ளனர். பொதுச்சபையில் கோடைக்கால சிறப்பு அமர்வின் போது லிபியா நடவடிக்கை மதிப்பீடு குறித்து மேஜர்  ஜெனரல் விளக்கினார்.
நேட்டோவுடன் கனடா போர் விமானங்கள் அரசு மற்றும் ராணுவ இலக்குகளை நோக்கி குண்டுகளை வீசி வருகின்றன. போராட்டக்காரர்களும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கர்னல் கடாபியை நீக்குவதற்கு போராடுகிறார்கள்.
கடாபியின ஆதாரங்களை கைப்பற்றுவதில் போராட்டக்காரர்கள் தீவிரம் காட்டி உள்ளனர். மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்களாகவும் அவர்கள் உருவெடுத்து வருகிறார்கள் என வான்ஸ் தெரிவித்தார்.
போராட்டக்காரர்களுக்கும் கடாபி ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலைமை முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. சில தருணத்தில் அவர்கள் முன்னேறுகிறார்கள் என்றும் கனடா மேஜர் ஜெனரல் தெரிவித்தார்.
ஏஏஏ நிலையிலிருந்து ஒருபோதும் அமெரிக்கா சரிவடையாது: ஒபாமா.
அமெரிக்கா எப்போதுமே "ஏஏஏ" நாடு தான் என்று அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீடு பாதுகாக்கப்பட வேண்டியது தான் என்றாலும், அது நிதிப்பற்றாக்குறையின் காரணமாகவே சரிவடைந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் தீர்க்கப்பட கூடியது தான் என்றாலும், அதற்கு அரசியல் ரிதீயான ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் கூறினார்.
"எஸ் அண்டு பி" நிறுவனம் அமெரிக்கா "ஏஏஏ" என்ற நிலையிலிருந்து "ஏஏ+" நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா எப்போதுமே "ஏஏஏ" நாடு தான்.
இங்கிலாந்து கப்பற்படையில் முதன் முதலாக பெண் கமாண்டர் நியமனம்.
இங்கிலாந்து ராணுவத்தின் 500 ஆண்டுகால கப்பற்படை வரலாற்றில் முதன் மு‌தலாக பெண் அதிகாரி ஒருவர் லெப்டினட் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் வலிமைமிக்க படைப்பிரிவுகளில் கப்பல்படைதான் சிறந்தது. கப்பற்படை வாயிலாகவே பிரிட்டிசார் தங்களது காலனி ஆதிக்கத்தினை உலகம் முழுவதும் நிறுவினர்.
உலகிலேயே மிகவும் பழமையானதும் கூட, சுமார் 500 ஆண்டுகள் பழமையானது இங்கிலாந்து கப்பற்படை. இப்படையின் எச்.எம்.எஸ் போர்லாண்ட் பிரிவில் 185 ஆண் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தலைமை ஏற்று வழிநடத்தும் லெப்டின்ட் கமாண்டராக சாராவெஸ்ட்(39) என்ற பெண் வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் கப்பல்படையில் சிறிய ரக போர்க்கப்பல்கள், மீன்பிடிகப்பல்களில் தான் பெண்கள் இருந்து வந்தனர். ஆனால் லெப்டினட் கமாண்டர் பதவிக்கு இதுவரை எந்த பெண்களும் வரவில்லை.
ஆகையால் ஆண்களுக்கு நிகராக கடும் உழைப்பிற்கு பின்னர் தான் சாரா வெஸ்ட் தேர்வானார். இங்கிலாந்தின் லிங்கோ‌னோஷெயர் மாகாணத்தைச் சேர்ந்த சாராவெஸ்ட் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
1995ம் ஆண்டு ஹெர்போர்ட்ஷெயர் பல்கலைகழகத்தில் கணிதம் படித்தார். இது குறித்து கப்பற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"எச்.எம்.எஸ்.போர்லாண்ட் பிரிவில் சாரா வெஸ்ட் அடுத்த ஆண்டு(2012) ஏப்ரல் மாதம் முதல் லெப்டினட் காமாண்டராக பதவியேற்பார். அதுவரை அவருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்" என்றார்.
லெப்டினட் கமாண்டராக பொறுப்பேற்றால் போரின் போது சுமார் 5 ஆயிரம் டன் எடையும், 133 மீற்றர் நீளம் ‌ கொண்ட போர் கப்பலை இயக்கி கடலிலிருந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துவது, நீர்முழ்கி கப்பல்களை இயக்க உத்தரவிடுவது போன்ற பயிற்சிகளை மேற்‌கொள்வார். இவருக்கு 4.05 இன்ஞ்ச் கொண்ட துப்பாக்கி தற்காப்பிற்காக கொடுக்கப்படும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF