Monday, August 1, 2011

இன்றைய செய்திகள்.

பருத்தித்துறைல் வெள்ளை நிற நாகம் பிடிபட்டது.
ஐந்து அடி நீளம் கொண்ட அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு ஒன்று பருத்தித்துறையில் உள்ள ஒருவரின் வீட்டின் கோழிக் கூட்டில் பிடிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை, வியாபாரிமூலை, இராவாலை பகுதியில் சி.இராதாகிருஸ்ணன் என்பவரின் வீட்டிலுள்ள கோழிக்கூட்டில் இந்த வெள்ளைநிற நாகம் பிடிபட்டது.தற்போது இந்தப் பாம்பைப் பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடிய வண்ணம் உள்ளனர்.இது தொடர்பாக வவுனியா வனவிலங்குப் பிரிவுக்கு வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 


இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழ்ச் சமூகத்தின் மீது மேற்கொண்ட யுத்தக் குற்றச்செயல்களுக்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசாங்கத்திடம், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2008 – 2009 காலப்பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அண்மையில் ஐ.நா. அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு கரையோரப் பகுதியான யுத்த வலயத்திலும் யுத்த வலயமற்ற பகுதியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வைத்தியசாலை உட்பட பல பகுதிகளில் ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டது.
அத்துடன், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன், அவர்களுக்கான மனிதநேய உதவிகளையும் வழங்க மறுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு தமிழக சட்டசபையில் கடந்த ஜுன் மாதம் ஜெ.ஜெயலலிதா தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜெ.ஜெயலலிதா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.பி.கள் இது குறித்து விவாதிப்பார்களென கூறினார்.
ஆம் இலங்கைத் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து தமிழக சட்டசபையில் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக விவாதிப்பார்கள் என அவர் கூறினார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறும் நாம் வலியுறுத்துகின்றோம். இது குறித்து எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போலி ஆவணங்களை கொண்டு வாகனங்கள் இறக்குமதி.

இலங்கையில் பலம் பொருந்தியவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாகன இறக்குமதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பி.டி.எல். தர்மபால தெரிவித்துள்ளார்.
மோசடியின் அடிப்படையில் இலங்கைக்கு கடந்த 6 மாதங்களுக்குள் 6 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த வருடத்தில் 23 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
கடந்த வருடத்தில் மாத்திரம் 40 ஆயிர்ம் வாகனங்கள் இலங்கையின் பதிவுசெய்யப்பட்டன.
இவை தொடர்பிலான 18 லட்சம் ஆவணக் கோவைகளை தமது திணைக்களம் உரிய கட்டிட வசதிகள் இல்லாத நிலையில் பாதுகாத்து வைத்துள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
போலியான ஆவணத்தின் கீழ் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் அரசாங்கத்துக்கு கடந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மாத்திரம் 4.3 பில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டதாகவும் ஆணையாளர் கூறினார்.
ரணில் தமது விஜயத்தை இடையில் நிறுத்திவிட்டு நாடு திரும்புகிறார்.

தலைமைத்துவ பிரச்சினையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தமது பிரித்தானிய விஜயத்தை இடையில் முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க, ஆகஸ்ட் 3 ம் திகதியே நாடு திரும்பவிருந்தார். எனினும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக தற்போது நாளைய தினமே அவர் நாடு திரும்பவுள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இதேவேளை கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்த பிரதி தலைவர் கரு ஜெயசூரிய இந்தியா சென்றுள்ளார்.
வாகரையில் ஆதிவாசிகளுடன் ஜனாதிபதி.

உலக ஆதிவாசிகள் தினத்தினை முன்னிட்டு வாகரை, சல்லித்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதிவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் உ.வன்னிலத்தோவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான ஜகத் பாலசூரிய, ரீ.பி.ஏக்கநாயக்க, எஸ்.ஏ.சந்திரசேன, சாலிந்த திஸாநாயக, பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, கிழக்கு முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆதிவாசிகளின் தலைவர் உ.வன்னிலத்தோவிற்கு ஜனாதிபதி விசேட அடையாள அட்டை வழங்கிவைத்ததுடன் ஆதிவாசிகள் சுதந்திரமாக நடமாட்டம் செய்வது தொடர்பாக ஆதிவாசிகளுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும் இடையிலான ஒப்பந்தமும் இடம்பெற்றது. ஆதிவாசிகளின் பொருட்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
நாட்டில் ஐம்பத்தேழு பிரதேசங்களில் இருந்து தலா 50 ஆதிவாசிகள் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டதுடன் அவுஸ்திரலிய நாட்டு ஆதிவாசியொருவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் எப்போது நாடு திரும்புவார் என்ற விடயம் வெளியாகவில்லை.
நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.

அண்மையில் நோர்வேயில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட அன்டர்ஸ் பிஹிரிங் பிரீவிக் என்பவர் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாகும்.1518 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.2083 ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம் என்ற தலைப்பில் அவர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார்.
நான்காம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களின் மூலம் ஐரோப்பாவை வெளிச் சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.இதேவேளை பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பான தமது உதாரணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அதீதமான அமெரிக்க கலாச்சார தாக்கம் ஐரோப்பாவிற்கு ஆரோக்கியமானதல்ல.
ஐரோப்பாவில்  அமெரிக்க படை முகாம்கள் அதிகளவில் காணப்படுகின்றன.ஐரோப்பா, கனடா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
லிபிய அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது நேட்டோ தாக்குதல்.
லிபியாவின் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது நேட்டோ படை நேற்று தாக்குதல் நடத்தியதாக லிபிய அதிகாரிகள் கூறினர்.
இந்தத் தாக்குதல் விடிவதற்கு முன்பாக நடந்தது. இதில் ஒளிபரப்பு துறை ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர் என லிபியா அரசின் ஆங்கில செய்தி சேனல் இயக்குனர் காலித் பசேல்யா கூறினார்.
இந்தத் தாக்குதல் சர்வதேச தீவிரவாதம் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாகவும் இது உள்ளது என அவர் தெரிவித்தார்.
லிபிய தொலைக்காட்சியின் தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்கு நேட்டோ பொறுப்பேற்றது. நேட்டோ தாக்குதலில் லிபிய அரசின் 3 தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோள்கள் செயல் இழந்தன என்று நேட்டோ தெரிவித்தது.
லிபிய பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சர்வதேச பத்திரிக்கையாளர்கள் முன்வர வேண்டும் என பசேல்யா வேண்டுகோள் விடுத்தார். நாங்கள் லிபிய அரசு தொலைக்காட்சி ஊழியர்கள் ராணுவ இலக்கு நபர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ படைகள் தாக்குதலை துவங்கி 5 மாதம் ஆகிறது. இந்த கால கட்டங்களில் கடாபிக்கு ஆதரவாக அரசு தொலைக்காட்சிகள் செய்திகள் ஒளிபரப்பி ஆதரவு தெரிவித்து வந்தன.
லிபிய தொலைக்காட்சிகள் தற்போதைய கடாபி ஆட்சியை ஆதரிக்கின்றன. நேட்டோ தாக்குதலை எதிர்க்கின்றன. நேட்டோ தாக்குதல் நடத்திய போதும் லிபிய அரசு தொலைக்காட்சிகள் தடை இல்லாமல் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது: ஆய்வில் தகவல்.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ஒபாமாவின் பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளதால் 2012 நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
அதில் ஜனநாயக கட்சி சார்பில் இரண்டாவது முறையாக ஒபாமா போட்டியிட உள்ளார். இந்நிலையில் சந்தை ஆய்வு நிறுவனமான தி காலப் ஆர்கனைசேஷன் ஒபாமாவின் செல்வாக்கு பற்றி அமெரிக்காவில் கருத்து கணிப்பு நடத்தியது.
அதன் விவரம் பின்வருமாறு: கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் ஆதரவு இருந்தது. இடையில் சரிந்த போதிலும் கடந்த ஜூன் மாதத்திலும் 50 சதவீதமாக இருந்தது.
மே மாதத்தில் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை மாத நிலவரப்படி 41 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவரது போட்டியாளரைவிட இது அதிகம்தான்.
இவருடைய ஜனநாயக கட்சியில் இவருக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் குடியரசு கட்சியினரில் 13 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் செயல்பாடுகளை பாராட்டி உள்ளனர்.
கட்சி சாராதவர்களில் 34 சதவீதம் பேர் ஒபாமாவின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக கூறியுள்ளனர். 2010 ஆகஸ்ட் முதல் அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என 52 சதவீதம் பேரும், 2009 மார்ச் முதல் சரியில்லை என 75 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
துனிஷிய முன்னாள் அதிபருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
துனிஷிய நாட்டின் முன்னாள் அதிபர் பென் அலி மீதான கடத்தல், ஊழல் மற்றும் சொத்து மோசடி உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து அதிபருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.
துனிஷிய நாட்டில் 23 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர் பென் அலி. இவர் மீது மக்களிடையேயான எதிர்ப்பு அதிகரித்து போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஜனவரி மாதம் நாட்டை விட்டு சவுதி அரேபியாவிற்கு தப்பியோடி அங்கு தலைமறைவானார்.
இந்நிலையில் அதிபர் மீதான போதைப் பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கல், சொத்து மோசடி, ஊழல் உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை துனிஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. பென் அலியை தங்களிடம் ஒப்படைக்குமாறு துனிஷிய நாடு எழுப்பியுள்ள கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துவிட்டது.
பென் அலியின் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்த துனிஷ் நீதிமன்றம் தனது தீ்ர்ப்பில் முன்னாள் அதிபர் பென் அலிக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு 19 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. மேலும் இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை என அமெரிக்க அதிகாரி ஸ்டூவர்ட் பிரஷன் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரி ஈராக்கில் மறுகட்டமைப்பு பணிகளை பார்வையிடும் அதிகாரி ஆவார். ஈராக்கில் ஷியா தீவிரவாதிகளால் நடந்த தாக்குதல் அபாயகரமாக உள்ளது.
இந்த தீவிரவாதிகள் ஈரானில் பயிற்சி பெற்று உள்ளனர் என்ற தனது ஏஜென்சி அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளார்.
ஈராக் - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தப்படி இந்த ஆண்டு இறுதியில் 44 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் நாடு திரும்ப உள்ளனர். இந்த நிலையில் ஷியா தீவிரவாதிகள் குறித்து மறுகட்டமைப்பு ஏஜென்சி எச்சரித்து உள்ளது.
அமெரிக்க துருப்புகள் விலகல் குறித்து கடந்த வாரம் ஈராக் பிரதமர் நுரி அல் மாலிசி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடேனுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈராக்கிய பொதுமக்கள் 248 பேரும் பாதுகாப்பு படையினர் 193 பேரும் உயிரிழந்துள்ளனர்.
100 க்கும் மேற்பட்டவர்கள் பெரும் ஈராக்கிய நகரங்களில் மனித வெடிகுண்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் 15 அமெரிக்க துருப்புகள் மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான ஏஜென்சியின் ஒப்பந்ததாரர் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
கயானா நாட்டில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.
அமெரிக்கா நியூயோர்க்கில் இருந்து கரீபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள ஜெட்டிஜகன் விமான நிலையத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தது.
இதில் 157 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர். நேற்று நள்ளிரவு 1.32 மணியளவில் அந்த விமானம் ஜெட்டிஜகன் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது ஈரப்பதமான தட்பவெட்ப நிலை நிலவியது.
இதனால் நிலை தடுமாறிய விமானம் சுமார் 7,400 அடி நீள ஓடுதளத்தில் குட்டிகரணம் அடித்தபடி சென்றது. இறுதியில் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விமானத்தின் கதவை திறந்தபடி முண்டியடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகளும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் விமானத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை உயிருடன் மீட்டனர்.
இந்த விபத்தில் பிளாடெல்பியாவை சேர்ந்த கீதா ராம்சிங்(41) உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் கால் எலும்பு முறிந்தது. ஆனால் உயிர் சேதம் ஏதுமில்லை.
இந்த விமானம் இரண்டாக பிளந்து நின்ற இடம் ஓடுதளத்தின் இறுதி பகுதியாகும். அதன் அருகே 200 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கு உள்ளது. அதில் விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்று நடக்கவில்லை என்று கயானாவின் அதிபர் பாரத் ஜக்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் கயானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF