Saturday, January 1, 2011

ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்



ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அதன் வடபகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். சர்க்கரை ஏற்றுமதி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. பசிபிக் கடல் பிராந்தியத்தில் "லா நினா' என்ற பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இது பசிபிக் பகுதியில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பிற்கான "எல்நினோ' மாற்றத்திற்கு எதிரிடையானது. சில ஆண்டுகள் இடைவெளியில் ஏற்படும் இப்பாதிப்பால், ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. உலகில் அதிகளவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஆஸ்தி ரேலியாவும் ஒன்று. இந்த கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டன.

மேலும், சர்க்கரை ஏற்றுமதி தொழிற்சாலைகளும் செயல்பட முடியவில்லை. வடமாகாணமான குயின்ஸ்லேண்ட், வெள்ளத்தில் மிதப்பதால் அங்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், வெள்ள நீரோடு பாம்புகள், முதலைகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் ஜூலியா கில்லார்ட் நேற்று பார்வையிட்டார். அதேநேரம், தெற்கு மாகாணங்களான விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கடும் வெயில் வாட்டுகிறது.

வெப்பநிலை 104 டிகிரி யையும் தாண்டிவிட்டதால், ஆங்காங்கே காட்டுத்தீ பரவி வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக எந்நேரமும் பேரழிவை உண்டு பண்ணும் காட்டுத் தீ ஏற்படலாம் என்பதால், சுற்றுலாப் பயணிகள், தெற்கு மாகாணங்களை விட்டு வெளியேறும்படி அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF