Monday, January 17, 2011

ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டங்களை பார்வையிடும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்


ஈரான் தமது அணுநிகழ்ச்சித் திட்டத்திற்கான ஆதரவினைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதன் ஒரு கட்டமாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டங்களைப் பார்வையிடுவதற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணத்தின் சமிக்ஞையாகவே தாம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
ஆனால், தற்பொழுது ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரிகள் குழுவில் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் அழைப்பை நிராகரித்திருந்தன.
தமது யுரேனியம் செறிவூட்டல் திட்டமானது திறம்பட நடைபெறுவதாக ஈரான் கூறியுள்ளது.ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் சர்வதேச தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கா கூறியதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஈரான் இவ்வாறு கூறியுள்ளது.
இந்நிலையில், அல்ஜீரியா, கியூபா, எகிப்து, ஓமான், சிரியா, வெனிசூலா, அரபு லீக் தூதுவர்கள் ஈரானின் சில அணுவுலைகளை பார்வையிட்டுள்ளனர்.
எந்தவொருநாடும் தமது அணுவுலைகளை மற்றயவர்களுக்கு காண்பிப்பதில்லை. அத்துடன்,ஈரானின் அணுவுலைகள் அமைதிக் தேவைக்கானவை என்பதை நிரூபிக்கும் சமிக்ஞையாக இது உள்ளதென ஈரான் அணு சக்தி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேசத்தின் தடைகள் ஒருபோதும் எமது அணுத்திட்டத்தினைப் பாதிக்கப்போவதில்லை எனவும் ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் சலேஹி தெரிவித்துள்ளார்.
எமது செயற்பாடுகள் குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் மிகவும் வலுவாக நடைபெறுகின்றது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உற்பத்திஅதிகரித்து வருகிறது எனவும் சலேஹி தெரிவித்தார்.
ஈரானின் சர்ச்சைக்குரிய அணுநிகழ்ச்சித் திட்டம் குறித்த ஐ.நா. பேச்சுக்கள் நடைபெறவுள்ள நிலையில் ஈரான் இராஜதந்திரிகள் குழுவைத் தமது அணுத்திட்டங்களைப் பார்வையிட அனுமதித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF