Monday, January 24, 2011

ரஷியாவில் 12 வயது சிறுவனுக்காக பள்ளியில் படிக்கும் ரோபோ


ரஷிய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவன் ஸ்டீபன் சுபின் (12). இவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். திடீரென அவன் “லுகேமியா” (ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவினால் ஏற்படும் விசித் திர நோய்) நோயினால் பாதிக்கப்பட்டான். எனவே அவன் பள்ளிக்கு சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவனது படிப்பு பாதிக்காத வகையில் புதிய வகை ஏற்பாடு செய்யப்பட்டது.

அதாவது, அவனுக்கு பதிலாக ஒரு “ரோபா” (எந்திரமனிதன்) பள்ளிக்கு சென்று பாடம் படிக்கிறது. வகுப்பில் இருந்த படியே அந்த “ரோபோ” பாடங்களை கவனித்து தனது “மொமரியில்” பதிவு செய்து கொள்கிறது. அவற்றை சிறுவன் ஸ்டீபன் வீட்டில் இருந்தபடியே இன்டர் நெட் மூலம் படித்து வருகிறான். ரோபோவுக்கும், ஸ்டீபன் வீட்டில் உள்ள இண்டர் நெட்டுக்கும் இடையே “ரிமோட் கண்ட்ரோல்” இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவை கடந்த 2008-ம் ஆண்டு மாஸ்கோ நிறுவனம் வடிவமைத்தது. அதில் ஒரு வெப் கேமரா, ஒரு மைக்ரோ போன் மற்றும் லவ்டு ஸ்பீக்கர் மற்றும் ரோபோ கிரகித்த செய்திகளை ஒளிபரப்பும் வசதி போன்றவை உள்ளன. பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட அதன் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம். வகுப்பறையில் இந்த “ரோபோ” மற்ற சிறுவர்களை போன்று நடந்து கொள்கிறது.

ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து அவற்றை வீட்டில் இருக்கும் ஸ்டீபனுக்கு அனுப்புகிறது. வகுப்பு நடைபெறும் போது ரோபோவில் உள்ள திரையின் வாயிலாக பாடங்களின் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் ஸ்டீபன் கேட்டு தெரிந்து கொள்கிறான்.

இந்த தகவலை ஆசிரியர் அல்லா ஜீவக் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் கணிதம், ரஷியன், வரலாறு, புவியியல், ஆங்கிலம், பிரெஞ்ச், உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் இந்த “ரோபோ” படித்து அதை ஸ்டீபனுக்கு வழங்குகிறது என்றும் கூறினான்.

இதற்கிடையே இந்த “ரோபோ” தனது நண்பன் என்றும் அது தனக்கு சிறந்த முறையில் உதவிபுரிகிறது என்றும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் இருந்தபடியே “ரோபோ”வை அதிவேகமாகவும், வேகம் குறைக்கவும் இயக்க முடியும். அதன் தலையை வலது புறமும், இடது புறமும் திருப்பி பாடத்தை கவனிக்க செய்ய முடிகிறது. இதன் மூலம் நானே வகுப்பறையில் இருந்து பாடம் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சிறுவன் ஸ்டீபன் தெரிவித்தான்.

இந்த “ரோபோ”பை இன்டர்நெட் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இயக்க முடியும்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF