Friday, January 14, 2011

பிரேசில் நாட்டில் வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி 260 பேர் பலி


பிரேசில் நாட்டில் சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ரியோடி ஜெனீரோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதில் டெரசோ போலில் நகரத்தின் அருகே உள்ள ஆறு உடைந்து நகர பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. 

டெரசோ போலில் மற்றும் டெட்ரோபோலில் ஆகிய நகரங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கும் வெள்ளம் புகுந்தது. இதில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இரு நகரங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் 260 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. அவர்களில் பலரை வெள்ளம் அடித்து சென்று விட்டது. 

பலர் நிலச்சரிவில் சிக்கி புதைந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 800 பேர் கொண்ட மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். கடற்படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். 

வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிபர் தில்மா ரூசப் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால் ரியோடி ஜெனீரோ பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது
.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF