வர்த்தகம், விளம்பரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நம்முடைய கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ, இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனாலோ, ஒரு வித பதற்றம் நம்மைத் தொத்திக் கொள்கிறது.
இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவல் அல்ல. பல ஆய்வு நிறுவனங்கள் எடுத்த கணிப்புகளின் அடிப்படையில் எடுத்த முடிவுகளே.
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், மக்களிடம் இன்னமும் தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டப்படும் விளம்பரங்களின் ஆதிக்கமே அதிகமாயுள்ளன.
இருந்தாலும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போது டிஜிட்டல் மீடியா வழி விளம்பரம் ரூ.1,000 கோடி அளவில் இருந்து வருகிறது. இது நடப்பு 2011 ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,600 கோடி வரையில் உயரும் வாய்ப்பு உள்ளது.
இன்டர்நெட் விளம்பரத்தினைப் பொறுத்தவரை நான்கு விதமாக கிடைக்கிறது. டிஸ்பிளே விளம்பரம், சோஷியல் நெட்வொர்க் மீடியா விளம்பரம், தேடுதல் சாதன விளம்பரம் மற்றும் மொபைல் விளம்பரம் என நான்கு பிரிவுகளாக இதனைப் பார்க்கலாம்.
தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து, அதன் பயன்பாடு அதிக மக்களைச் சென்றடைவதால், மொபைல் வழி விளம்பரம் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது 30% வளர்ச்சியினைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ ப்ராஸ்பெக்ட் என்னும் நிறுவனம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் இறுதியில், இணைய தேடல்களை மேற்கொள்பவர்கள் குறித்த்டு கீழ்க்காணும் தகவல்கள் கிடைத்துள்ளன. இன்டர்நெட் பார்ப்பவர்களில், 82% பேர், நாளொன்றுக்கு மூன்று முறை இணையத்தில் தேடலை மேற்கொள்கின்றனர்.
இது மற்ற ஆசிய பசிபிக் நாடுகளில் 77.4% ஆக உள்ளது. 92% பேர் நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு முறை தேடல் சாதனம் பயன்படுத்துகின்றனர். சென்ற 2010 ஆம் ஆண்டில் தேடல் பயன்படுத்துவது 93.6% பேருக்கு ஒரு முக்கிய பணியாக இருந்துள்ளது.
மொபைல் பயன்படுத்து பவர்களில் தேடலை மேற்கொள்பவர்கள் 90% ஆவார்கள். இவர்களில் 67% பேர் இதனை மிக முக்கியமாக மேற்கொள் கின்றனர். இணையத்தில் தேடுகையில், 89.4% பேர் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துவதனையே அதிகம் விரும்புகின்றனர். அடுத்தபடியாக, யாஹூ தேடல் சாதனத்தினை 7.5% பேரும், பிங் சாதனத்தினை 2.4% பேரும் பயன்படுத்துகின்றனர்.
சோஷியல் நெட்வொர்க் தளங்களை, மற்ற நாடுகளைப் போலவே,இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைப்பு, இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 67% பேர் சோஷியல் நெட்வொர்க் தளங்களைப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அதிக அளவில் மக்கள் பார்க்கும் முதல் 20 தளங்களில், 7 தளங்கள் சமுதாய இணைய தளங்களாக உள்ளன. இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது தொடர்ந்து உயர்ந்து வருவதால், இணைய விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன.
கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான விளம்பரங்கள் 78.4%, கல்வி நிலையங்கள் குறித்து 71.8%, பொழுது போக்கு 65.5% என்ற அளவில் உள்ளன. தாங்கள் வாங்கிட விரும்பும் பொருட்களை, ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதற்காக 80% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தேடல் மூலமாகக் கண்டறிந்த தளங்கள் வழியாகப் பொருட்கள் வாங்குவதையே பெரும்பாலானவர்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். இணைய வழி வர்த்தகத்தில் மக்கள் அதிகம் நம்பிக்கை வைப்பது நிறுவனங்கள் பெற்ற பெயர் அடிப்படையில் தான். இந்த வகையில் மக்களின் வர்த்தக அடிப்படையை இணையம் மாற்றியுள்ளது.